Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
நிகழ்வு

கவிதை நூல்களுக்கு ஏலாதி இலக்கிய விருது

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் - கவிஞர் இளங்கோ(கனடா)

2007 - 08களில் வெளிவந்த சிறந்த கவிதை நூல்களுக்கான இலக்கியப் போட்டியின் அறிவிப்பைத் தொடர்ந்து 84 கவிதை நூல்கள் இப்போட்டிக்கு வரப் பெற்றன. இரண்டு அடுக்குத் தேர்வின் அடிப்படையில் தமிழச்சி தங்கபாண்டியனின் வனப்பேச்சி கவிதை நூல் மற்றும் புலம் பெயர்ந்து கனடாவில் வசிக்கும் ஈழத்து இளம் படைப்பாளியான இளங்கோவின் நாடற்றவனின் குறிப்புகள் கவிதை நூல் ஏலாதி இலக்கிய விருதுக்காய் தேர்வு செய்யப்பட்டன.

ஆகஸ்ட்15 தக்கலையில் நடைபெற்ற ஏலாதி இலக்கிய விருது விழாவிற்கு கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் தலைமை தாங்கினார். அறிமுக உரையை கவிஞர் நட.சிவகுமார் நிகழ்த்தினார்.

குமரிமாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இளம் கவிஞர்களாக தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்ட கவிதைப் பயிலரங்கத்தை பணித்திரு.பி.எஸ்.அருள் தொடங்கி வைத்தார். ஏலாதி இலக்கிய விருது பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன் கலந்து கொண்டு தன்னுடைய கவிதைப் பகிர்வை வெளிப்படுத்தினார்.

''கோட்பாடுகளுக்குள் கவிதையை தேடாமல் வாழ்க்கை அனுபவங்களுக்குள் கவிதையை கண்டுபிடிக்கவேண்டும்” என்றார். உதிரத்தின் நிணத்துடனும், வியர்வையின் கசகசப்புடனும், உழுத மண்ணின் பிரசவிப்பு மூச்சுடனும், நான் பிறந்த கிராமத்தின் சகதியுடனும், வெக்கையுடனும் என் எழுத்து ஞாபகங்களாக விரிகிறது என்றார். அலாவுதீனின் பூதத்தை சின்ன குப்பிக்குள் அடைக்கும் மாயவித்தையாகவும் கவிதை உருமாறும் என்றார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் ஏலாதி இலக்கிய விருதுக்கான ரூபாய் இரண்டாயிரத்துக்கான நன்கொடையையும் நினைவுப் பரிசினையும் கவிஞர் ஹெச்.ஜி. ரசூல், ஜி.எஸ்.தயாளன் ஆகியோர் வழங்கினர்.

குமாரசெல்வா, ஆர்.பிரேம்குமார், செல்சேவிஸ், சிவசங்கர், ஹாமீம் முஸ்தபா, ஆன்டெனிராஜாசிங், தர்மசிங் சிவராமன், விஜயகுமார், ஜே.ஆர்.வி.எட்வர்டு, சிறப்புவிருந்தினர் கே.ஏ.குணசேகரன் உள்ளிட்டவர்கள் கவிதை உரையாடலில் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி கைலாசமூர்த்தி குழுவினரின் கிராமிய இசை, நிகழ்ச்சிக்கு அழகூட்டியது. தவில் நாயன கலைஞர்களுக்கு அரங்குக்கு வெளியே விளம்பரம் எதுவுமின்றி கவிஞர் தமிழச்சி நிதி உதவிகள் வழங்கினார்.

விருது பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன் விருதுநகர் மல்லாங்கிணறு கிராமத்தைச் சார்ந்தவர். சென்னை ராணிமேரி கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளரான தமிழச்சி இலங்கை புலம்பெயர் தமிழர்களின் படைப்பிலக்கிய வெளிப்பாடுகள் குறித்த முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டுள்ளார். இவரின் முதல் கவிதை தொகுப்பு எஞ்சோட்டுப் பெண். ஏலாதி விருது பெற்ற வனப்பேச்சி கவிதை தொகுப்பை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இதுபோல் ஏலாதி விருதுக்கு தேர்வுசெய்யப்பட்ட ஈழத்துப் படைப்பாளியான நாடற்றவனின் குறிப்புகள் நூலாசிரியர் இளங்கோ யாழ்பாணம் அம்பனையில் பிறந்தவர். போர் மூர்க்கமாய் எழுந்தபோது உள்நாட்டிலேயே அகதியாக அலைந்து கனடாவுக்குப் புலம் பெயர்ந்தவர். போர்க்கால அவலங்களும் புலம்பெயர் வாழ்வின் அலைக்கழிதல்களும் இவரது நாடற்றவனின் குறிப்புகள் கவிதை நூலில் மெளன சாட்சியாய் பதிவாகி உள்ளன. இத் தொகுப்பை அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

கவிஞர் இளங்கோ கனடாவிலிருந்து அனுப்பியிருந்த மின்னஞ்சல் உரை மிகவும் உருக்கமாகவும் உணர்ச்சிப்பூர்வமானதாகவும் இருந்தது. ஏலாதி இலக்கிய விருது விழாவில் வாசிக்கப்பட்ட அதன் ஒரு பகுதியை இங்கு தருகிறோம்

'சிறுவயதிலேயே உயிருக்காய் தப்பியோடி அகதி வாழ்க்கை பழக்கமாயிற்று விட்டது. பதினொரு வயதுக்குப் பிறகு முற்றாக நான் வாழ்ந்த ஊருக்கு போக முடியாத அளவுக்கு போர் மிக உக்கிரமாயிருந்தது.

இன்றைய காலகட்டத்தில் போர் நான் ஈழத்தில் வாழ்ந்த காலகட்டத்தைவிட இன்னும் பலமடங்கு உக்கிரமாய் பல நூற்றுக்கணக்கானவர்களை பலி கொண்டும், இடம் பெயரவும் செய்து கொண்டிருக்கும்போது எனக்காய் விதிக்கப்பட்ட அகதி வாழ்க்கையில் நான் 'ஆசீர்வதிக்கப்பட்டவன்’ என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் ஆகக் குறைந்தது உயிருக்காவது உத்திரவாதமளிக்கும் ஒரு நாட்டிலாவது வாழ்ந்து கொண்டிருக்க முடிகிறது. எரிகணை வீச்சினதோ, விமானத்தாக்குதலினதோ அச்சமில்லாது, விரும்புகின்றபோது அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்க முடிகின்றது.

ஒரு புதியவனுக்கு அவன் யாரென்று அவனது பின்புலங்கள் அறியாது அவனது படைப்பை மட்டுமே முன்னிறுத்தி வழங்கப்படும் ஒரு விருது என்ற வகையில் ஏலாதி இலக்கிய விருதை மனமுவந்து ஏற்றுக் கொள்கின்றேன்.

இறுதியில் நான் சிறுவயதில் அகதியாய் அலைந்ததைவிட மிகக் கொடுமையான சூழ்நிலைக்குள் இன்று ஈழத்திலும் உலகெங்கிலும் சிறார்கள் அகதிகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அகதிகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அச்சிறார்களுக்கு இவ்விருதை சமர்ப்பிக்கிறேன். இன்னும் இவ்விருதுடன் வழங்கும் நன்கொடையை தமிழகத்திலுள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் ஏதாவதொன்றுக்கு வழங்குமாறு என் சார்பில் இதைப் பெற்றுக் கொள்ளும் சாதிக்கிடம் கேட்டுக் கொள்கிறேன்'

ஏலாதி விருது வழங்கும் விழாவை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தக்கலை ஏற்பாடு செய்திருந்தது.

-தொகுப்பு; ஹெச்.ஜி.ரசூல், நட.சிவகுமார்

செய்தி: ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com