Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

24 வது புகலிட தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2005

Tamil Women's forum

புகலிடப் பெண்கள் சந்திப்பின் 24 வது தொடர் அக்டோபர் 15,16ம் திகதிகளில் நடைபெற்றது. இச் சந்திப்பானது ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் தலைமையில் லண்டனில் நடைபெற்றது. இச் சந்திப்புக்கு இலங்கை, இந்தியா, கனடா, சுவிஸ், ஜேர்மன், பிரான்ஸ், லண்டன், கொலண்ட் ஆகிய நாடுகளிலிருந்து 45க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து சிறப்பித்திருந்தனர். எழுத்தாளர்கள், நாடக குறும்பட தயாரிப்பாளர்கள், ஓவியத்துறையைச் சாந்தவர்கள், கவிஞர்கள் உள்ளடங்கலாக ஆர்வலர்கள் சிலரும் கலந்து கொண்டனர். விசேடமாக இலங்கையிலிருந்து ஓவியையும் எழுத்தாளரும் தென்கிழக்காசிய பெண்கள் அமைப்பின் இலங்கைக்கான தலைமைப் பதவியை வகிப்பவருமான கமலா வாசுகி மற்றும் தினக்குரல் பத்திரிகையின் பெண்கள் பகுதி பதில் ஆசிரியரும் ஊடகவியலாளருமான தேவகெளரியும் இச் சந்திப்பில் கலந்து சிறப்பித்திருந்தனர். இதேபோல் இந்தியாவிலிருந்து அறியப்பட்ட கவிஞரும் பாரதி இலக்கிய சங்கத்தின் செயலாளருமான திலகபாமாவும் இச் சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.

புரிந்துணர்வுக்கான சுயஅறிமுகத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. முதல் நிகழ்ச்சியாக திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் கருத்துரை வழங்கும்போது இச் சந்திப்பில் கலந்து கொள்வது தனக்கு மகிழ்ச்சி தருகிறது என்றும் இப்படியான சந்திப்புக்கள் பெண்களிடையே நடைபெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதுடன் இலங்கை, மற்றும் புலம்பெயர் பத்திரிகைகளில் எவ்வளவோ அவதூறுகளை எழுதுகிறார்கள் என்றும் தான் பெண் என்ற ரீதியில் இப்படியான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் பத்திரிகைகளில் தன்னைப் பற்றி அவதூறாக தாக்கப்படுகின்றேன் என்றும் கூறினார். இப்படியான பத்திரிகைகள் யாரையோ திருப்பதிப்படுத்துவதற்காக இவற்றை செய்கின்றன. அது தனக்கு கவலை அளிப்பதாகவும் தனது கருத்துரையில் குறிப்பிட்டார்.

இவரை அடுத்து சுனாமித் தாக்குதலும் அதனாலேற்பட்ட பாதிப்புக்களும் என்பது பற்றி ஜெஷீமா பஷீர் பேசுகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி ஏற்பட்ட பின்னர், தான் அங்கு சென்றிருந்ததாகவும் அங்கு தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒன்றிணைந்து பணியாற்றியதாகவும் இந்த மூவின மக்களிடையே இருந்த பிரிவினைகள் மறக்கப்பட்டு ஒரு தாய் பிள்ளைகள் போல் அவர்கள் அங்கு சேவையாற்றியதைப் பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருந்ததாகவும், சாறி போன்ற நீள உடைகள், நீளத் தலைமயிர் போன்றன அவர்கள் தமது உயிரை பாதுகாத்துக் கொள்ளும் முயற்சிக்கு பாதகமாகவே அமைந்தன என்றும் கூறினார். ஆனால் இப்பொழுது மீண்டும் பிரிவினைகள், வீட்டு வன்முறைகள் உட்பட வெளிநாட்டு அமைப்புகளின் தலையீட்டினால் cash for work என்ற கோசங்களுக்கூடாக மனித உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது குறைந்துபோயுள்ளது என்றும் குறிப்பிட்டார். அவரது உரையைத் தொடர்ந்து சுனாமியின் தாக்கம் பற்றிய கருத்துகள் மேலும் கலந்துரையாடப்பட்டன.

அடுத்த நிகழ்ச்சியாக தென்கிழக்காசியப் பெண்களின் பிரச்சினைகள் பற்றி ஓவியை வாசுகி உரையாற்றும் போது தென்கிழக்காசியப் பெண்கள் கடும் உழைப்பாளிகள் என்றும் இவர்கள் பாரம்பரியமாக வயல் வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்றும் சுகாதாரம், தொழில்வாய்ப்பு, பொருளாதாரம் மறுக்கப்பட்ட நிலையில் உள்ளார்கள் என்றும் கூறினார். 60 விதமான பெண்கள் குடும்ப வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள் என்றும் அத்துடன் சாதி, பெண் சிசுக்கொலை, பெண்களை பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்தல் போன்றவைகள் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் அதிகரித்துக் காணப்படும் வேளையில் உலகமயமாதலினால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்களே என்று பல உதாரணங்களுடன் விளக்கி கூறினார். We want peace in south asia not pieces என்று பெண்கள் அங்கு கோசமிடுவதையும் கூறினார். நீண்ட நேரமாக நடைபெற்ற இக் கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

வாசுகியின் நிகழ்ச்சியினைத் தொடர்ந்து பெண்களின் உள உடல் நலம் பற்றி டாக்டர் கீதா சுப்பிரமணியம் தனது உரையில் அநேக பெண்கள் சமூகக் கட்டுப்பாட்டுக்குள்ளேயே தமது வாழ்க்கை விதிமுறைகளை அமைத்துக் கொள்கிறார்கள் என்றும் இக் கட்டுப்பாடுகளும் சிந்தனைகளும் பெண்களின் உடற் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிப்பதாய் அமைகிறது என்றும் சமூகக் கோட்பாடுகளின் நிமித்தம் குறிப்பிட்ட காலகட்டங்களில் ஏற்படும் உடல் மாற்றங்களின் போது சந்தேகத்திற்குள்ளாகும் பெண்கள் பலவித குழப்பங்களிற்கு உள்ளாகிறார்கள் என்றும் கூறினார்.

இதனையடுத்து பெண்களின் புதிய படைப்புக்கள் பற்றி நான் சிறு அறிமுகமொன்றைச் செய்தேன். அனாரின் ஓவியம் வரையாத தூரிகை, சூரியா பெண்கள் அமைப்பினரால் வெளியிடப்படுகின்ற பெண் சஞ்சிகை, செய்திமடல்கள், பெண்கள் நலன் சுகாதாரக் கையேடு, சிறகுகள் விரிப்போம் சிறுகதைத் தொகுப்பு, சிவகாமியின் ஆனந்தாயி, விடுதலையின் நிறம், நிருபாவின் சுணைக்கிது போன்ற நூல்களினை அறிமுகம் செய்தேன்.

அடுத்த நிகழ்ச்சியாக ஆசிய மருத்துவத் துறையின் முதற் பெண் என்ற கருத்தில் மீனா நித்தியானந்தன் உரையாற்றினார். உலகெங்கும் இருக்கும் பாலியல் தொழில் இந்தியாவிலும் இருந்திருக்கிறது, பெயர் மட்டும் உயர்வு நவிற்சி அணியில் ~தேவதாசி முறை என்று சொல்லிக் கொள்ளப்பட்டது என்றார். இத் தேவதாசி முறை ஆரம்ப காலத்தில் கலாச்சாரம், பண்பாடு, இவற்றையெல்லாம் மீறி குறிப்பிட்ட மதம் குறிப்பிட்ட ஜாதி சார்ந்ததாகவே இருந்திருக்கிறது. பணக்கார சமூகம், மற்றும் நகர காலச்சாரத்தில் கூட இவை ஒரு முக்கிய இடம் பெற்றிருந்தது. இந்த தேவதாசி முறையை ஒழிப்பதற்கு டாக்டர் முத்துலக்சுமி பெரும் பாடுபட்டார் எனக் கூறப்படுகிறது. இவரைப் பற்றிய நூல் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது என்றும் அதன் தமிழாக்கம் விரைவில் வெளிவரவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

Penkal santhippu malar இந் நிகழ்ச்சியைத் தொடர்ந்து ~பெண்கள் சந்திப்பு மலர்-2005~ வெளியீடு இடம்பெற்றது. 190 பக்கங்களில் வெளிவந்துள்ள இம் மலரைப் பற்றிய ஓர் அறிமுகத்தை மலர்க்குழுவின் சார்பில் உமா செய்தார். இந்த (9 வது) பெண்கள் சந்திப்பு மலரில் பல புதிய பெண் எழுத்தாளர்கள் எழுதியுள்ளார்கள் என்றும் பெண்கள் சந்திப்பு மலர் பெண்களுக்கு ஓர் எழுதுகளமாக இருந்து வருகின்றது எனவும் குறிப்பிட்டார் பொருளாதாரப் பிரச்சினை மற்றும் கால நெருக்கடிகள் இருந்தும் அதையும் மீறி இச் சந்திப்புக்களை நடத்துவதோடு மட்டுமல்ல, பெண்கள் சந்திப்பு மலரையும் கொண்டு வருவதில் கடுமையாக உழைப்பதையும் பாராட்டியே ஆகவேண்டும் என்றார். இதுவரை வெளிவந்த பெண்கள் சந்திப்புமலரிலும் பார்க்க இம் முறை பல புதிய பெண்கள் எழுதியுள்ளார்கள் என்றும் இந்த 9 வது பெண்கள் சந்திப்பு மலருக்கு ஆக்கங்களைத் தந்துதவிய பெண்களுக்கு நன்றிகூறி முதல் பிரதியை மல்லிகா வழங்க அதை ஓவியை வாசுகி; பெற்றுக்கொண்டார்.

இலக்கியத்தில் பெண்கள் என்ற கருத்தில் திலகபாமா தனது கருத்தை தெரிவிக்கும் போது ஆண்டாள், ஒளவை ஆகியோர் போன்றே சித்தர்களின் பாடல்களும் பெண்களைப் பற்றிப் பேசுகின்றன என்றார். அத்துடன் இவற்றையெல்லாம் நாம் பார்க்கத் தவறும் அதே வேளை பெண் மொழி பற்றிப் பேசுகிறோம். பெண்களின் உடல்மொழி பற்றிப் பேசுகிறோம். பெண்கள் பார்க்க படிக்க பல விடயங்கள் உள்ளன என்றார். அத்துடன் பால்வினைத் தொழிலை சட்டமாக்குவது பற்றிய சர்ச்சையும் எழும்பியுள்ளதாகவும் அதைவிட இன்று முக்கியமான விடயங்கள் பல உள்ளன என்றும் தனது கருத்தை முன்வைத்தார். இந்தியாவில் பல இலக்கியர்கள் இவைகளை கண்டுகொள்வதில்லை என்றும் கூறினார். திலகபாமாவின் இலக்கியத்தில் பெண்கள் என்ற கருத்தின்கீழ் பல விவாதங்கள் நடைபெற்றன. அத்துடன் ஆரோக்கியமான கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

அடுத்த நிகழ்ச்சியாக கவிஞர் நவாஜோதியின் கவிதைத் தொகுப்பான ‘எனக்கு மட்டும் உதித்த சூரியன்’ என்ற தொகுப்பை நந்தினி கீரன் அறிமுகம் செய்து வைக்கும் போது இக் கவிதைத் தொகுப்பானது நவாஜோதியின் முதல் தொகுப்பு என்றும் இவரது கவிதைகள் உணர்வுரீதியாகவும் பெண்களின் பிரச்சினைகளை கூறுபவையாகவும் புலம்பெயர்ந்த அவலங்களை சொல்வதாகவும் கூறினார். இத் தொகுப்பினை பலர் வாசிக்காததினால் இத் தொகுப்புக்கு கருத்துக்கள் குறைவாகவே பரிமாறப்பட்டன. ஆனாலும் இன்று புலம்பெயர் இலக்கியத் துறையில் நவாஜோதியின் கவிதைகளும் பேசப்படுபவையாக உள்ளன என்பதும் வானொலியினூடாக நிகழ்ச்சித் தயாரிப்பாளராக அறிவிப்பாளராக நன்கு அறியப்பட்டவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

15.10.2005 கடைசி நிகழ்ச்சியாக அரசியல் வன்முறைகளும் பெண்களும் என்ற தலைப்பின் கீழ் உரையாற்றிய நிர்மலா பேசுகையில் நிக்கரகுவா, கியூபா போன்ற நாடுகளில் பெண்கள் போராடினார்கள். அதன் காரணங்கள் வேறாக இருந்தன. வேலையின்மை, வறுமை, பாதுகாப்பின்மை ஆகியவை ஆண்கள் குடும்பத்தை விட்டுச் செல்ல காரணமாயின. கணவர்களையும் தந்தைகளையும் இழந்த குடும்பங்களின் பொறுப்பு பெண்களின் மீது விழுந்தது. எத்தகைய வேலையும் செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் வீட்டு வேலைகள், சந்தையில் உணவுப் பொருட்களை விற்பது, பால்வினைத் தொழிலில் ஈடுபடுவது என பெண்களின் உழைப்பு வருவாய்க்கு வழியானது. இதுதவிர சம்பளம் பெற்று வேலைகளில் ஈடுபட்ட பெண்கள் 1977 இல் மொத்த சனத்தொகையில் 28.7 வீதம். இது லத்தீன் அமெரிக்காவிலேயே அதிகபட்சம். தேசிய பொருளாதாரத்தில் அதிகமான பங்கு வகித்த காரணத்தினாலேயே பெண்கள் புரட்சியில் பங்கேற்றதும் இயல்பாகிப் போயிற்று. ஆனால் சுற்றிலும் இருந்த உலகம் வேறு நிர்ப்பந்தங்களை உருவாக்கியது. வரலாறு பெண்களை தெளிவான நிலைப்பாட்டுடன் சமூக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்தது. ஆனால் இலங்கையில் நிலைமை வேறு விதமானது. ஆரம்பத்தில் இலங்கையில் இனப்படுகொலைகளுக்கு எதிராகவே இப் பங்கேற்பு நிகழ்ந்தது. ஆனாலும் விடுதலைப்புலிகள் அமைப்பிலேயே பெண்களுக்கான இராணுவப் பயிற்சி மிகவும் காத்திரமாக வழங்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு சமூகப் பிரக்ஞையோ அல்லது பெண்ணியச் சிந்தனைகளோ ஊட்டப்படவில்லை. பெண்கள் துணிவாக போராடினார்கள். அதில் பல பெண்கள் தம் உயிரை இழந்தார்கள். ஆண்களுக்கு சரிசமமாக பெண்கள் ஆயுதம் தூக்கினார்கள். ஆனால் இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளனவே ஒழிய குறையவில்லை என்று பல உதாரணங்களுடன் தனது கருத்தை முன்வைத்தார்.

அடுத்த நாள் 16.10.2005

முதல் நிகழ்வாக பெண்களும் நாடகமேடையும் என்னும் தலைப்பில் றஜீதா சாம்பிரதீபன் பேசுகையில் தமிழ் நாடக அரங்கில் பெண் நோக்கப்படும் முறைமையையும் அரங்கினுடாக வெளிக்கிளம்பும் தன்மையையும் விபரித்தார். ஒரு நிகழ்கலையாக நாடகத்தின் உள்ளுடன், வடிவம் என்பது வாழ்வின் மகிழ்ச்சியையும் வலிகளையும் பரிமாறிக் கொள்வதாகவும் வெளிப்படுத்துவதாகவும் இருக்கவேண்டும் எனவும் அதேநேரம் படைப்பின் தரம், கலைத்திறமை என்பன தேவையெனவும், கலைஞர்களின் வெளிப்பாடு பார்வையாளர்களை தன்னகத்தே கொண்டிருக்கவேண்டும் எனவும் கூறினார். இலங்கையில் மட்டக்களப்பு சூர்யா பெண்கள் அமைப்பினரால் நடாத்தப்படும் நாடகங்கள் வீதி நாடகம், அரங்கியல் நாடகம் என வடிவங்கள் கொண்டுள்ளதாகவும் மெனகுரு ஜெய்சங்கர், ஜெயரஞ்சனி ஆகியோர் இன்று நாடகத்துறையில் பேசப்படுபவர்களாக உள்ளனர் என்றும் கூறினார். நாடகத்துறையில் பலருக்கு பரிச்சயமின்னையினால் ஒருசிலரே கருத்துக்கள் பரிமாறிக்கொண்டனர். இங்கு கூத்து பற்றியும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இலங்கையிலிருந்து கலந்து கொண்ட ஊடகவியலாளர் தேவகெளரி பேசுகையில் ‘இலங்கையில் பெண்கள் பிரச்சினைகளும் ஊடகங்களும் கருத்துவாக்கமும்’ என்ற தலைப்பின் கீழ் பேசினார். அனேகமான ஊடகங்கள் ஆண்களை மையமாக வைத்தே தகவல்களை வெளியிட்டு வருகின்றன என்றும் ஊடகங்களுக்கான வாடிக்கையாளர்கள் கூடுதலாக ஆண்கள் என்பதால் அவர்களின் கருத்தாக்கமே முதன்மையாக இருக்கின்றது என்றும் பத்திரிகைகளில் பெண்களுக்கு ஒரு பக்கம் ஒதுக்கப்படுவதோடு அதன் கடமை முடிந்துவிடுவதாகவும் சொன்னார். இப் பக்கத்தில் பெண்களுக்கான விடயங்கள் குடும்பத் தளத்தில் இருந்து கட்டமைக்கப்பட்டிருக்கும் அல்லது சமையல் குறிப்புகள், அழகுபடுத்தல் முறைகள்;, குழந்தை வளர்ப்பு போன்றவைகளே வருகின்றன எனவும் அதையும் மீறி பெண்கள் புதிய சிந்தனைகளை எழுதினால் எழுதும் பெண்கள் மீது அவதூறுகளையும் விமர்சனம் என்ற போர்வையில் ஆணாதிக்கக் கருத்துக்களையும் அள்ளி வீசத் தயங்குவதில்லை என்றும் குறிப்பிட்டார். தொடர்பு ஊடகங்களில் பல பெண்கள் ஊடகவியாளர்ராக வேலை செய்கின்றார்கள், ஆனால் அங்கு முடிவெடுக்கும் தகுதியைப் பெற்ற பெண்கள் இலங்கையில் இன்னும் இல்லை என்றே கூறவேண்டும் என பல தரவுகளுடன் தனது கருத்தை வைத்தார்.

கனடாவில் இருந்து கலந்து கொண்ட நாடக குறும்படத் தயாரிப்பாளரும் சிறுகதையாசிரியருமான சுமதி ரூபனின் ஓரங்க (தனிநடிப்பு) நாடகம் கூட்டத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. உணர்வு பூர்வமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் எல்லோரையும் தனது நிகழ்த்தலுக்குள் இழுத்து வைத்திருந்தார். இவரது ஆளுமை பலராலும் பாராட்டப்பட்டது. கனடாவில் நடாத்தப்பட்ட குறும்படவிழாவில் சிறந்த கதையாசிரியர் விருது சுமதி ரூபனுக்கு கிடைத்திருப்பதை இங்கு குறித்துக் கொள்வது பொருத்தமானது.

அத்துடன் ஓவியர் அருந்ததி, ஒவியர் வாசுகி ஆகியோரின் ஓவியங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டதுமன்றி ஓவியங்கள் பற்றிய சிறு அறிமுகத்தையும் அவர்கள் செய்தார்கள். அருந்ததி தனது ஓவியங்கள் பற்றிக் கூறும்போது பெண்கள் மகளாய், மனைவியாய், தாயாய், சகோதரியாய், தோழியாய் பரிணமிக்கும் பாhத்திரங்களை -பெண்ணை அழகுப் பொம்மையாய் ஓவியத்தில் காட்டுவதை விட- அவளின் இயக்கத்தை ஓவியத்தில் கொண்டு வருவதை தனது கருத்துருவாக கைக்கொண்டுள்ளேன் எனக் கூறினார்.

வாசுகி தனது ஓவியம் பற்றி கூறுகையில் போர்ச்சூழல் தந்த அனுபவங்களையே ஓவியமாக தீட்டிக் கொண்டிருந்த எனக்கு சமூகத்தில் பெண்கள் நிலைபற்றியும் குறிப்பாக வன்முறைக்குட்பட்ட பெண்களுடன் வேலை செய்யக் கிடைத்த போது ஓவியத்தின் இன்னொரு பரிமாணத்தை நோக்கி நான் நகரவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டேன், அவைதான் என்னுள் ஓவியங்களாக பரிணமித்தன என்றார். எனது ஓவியங்கள் எல்லாம் துயரங்களையும் ஆத்திரங்களையுமே வெளிப்படுத்துபவையாக உள்ளன என்றார். குறிப்பாக கிரிசாந்தியின் மீதான பாலியல் வன்முறை உயிரழிப்பு என்பவற்றின் தாக்கத்திலிருந்து பிறந்த ஓவியம் ஏற்படுத்திய தாக்கம் கூடுதலானது என்றும் குறிப்பிட்டார்.

ஓவ்வொரு நிகழ்ச்சிகளின் முடிவிலும் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. அதில் பெண்களது பிரச்சினைகள் பெண்கள் செய்ய வேண்டியவைகள் பற்றிப் பேசப்பட்டன. பெண்களுக்கு தனியான சந்திப்புக்கள் மனம்விட்டுப் பேசுவதற்கான உளவியல் சந்தர்ப்பத்தை வழங்கும் எனவும், பெண்கள் அப்போதுதான் ஆண்நோக்கின் இடையீடற்ற கருத்துக்களில் சுதந்திரமாக வளரமுடியும் என்றும், எதிர்ப்புக்களை எதிர்கொள்வதற்கு பக்குவம் வரும் என்றும் கருத்துக்கள் விரித்துக் கூறப்பட்டன.

பெண்கள் சந்திப்பானது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது எனவும் பங்கு பற்றியோரால் கூறப்பட்டது. இவ்வாறாக சிறப்பாக நடாத்தி முடிக்கப்பட்ட பெண்கள் சந்திப்பின் அடுத்த தொடர் 2006 ஜேர்மன் ஸ்ருட்காட் நகரில் நடாத்துவதெனவும் முடிவாகியது.

இச் சந்திப்பில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

யோகேஸ்வரி முத்தையா (13) என்ற சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் தங்கராஜா கணேசலிங்கத்திற்கு எதிரான தீர்மானங்கள் உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் அரசியல் வன்முறைகளால் இடம்பெயர்ந்திருக்கும் பெண்கள், குழந்தைகள் பற்றி கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவை மற்றும் அரசியல் தஞ்சம் கோருவோரின் உரிமைகள் பற்றிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

தொகுப்பு
றஞ்சி (சுவிஸ்) [email protected]


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com