Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

நொய்டா குற்றமும் சங்க கால தண்டனைகளும்
வேணு சீனிவாசன்

உத்திரப்பிரதேச மாநிலத்தில் நொய்டாவில் ஒரு வீட்டில் இருந்து 30க்கும் அதிகமான சிறுவர் மற்றும் சிறுமிகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்தக் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த எலும்புக்கூடுகள் மொனிந்தர் சிங் என்பவரது வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. மொனிந்தர் சிங், அவரது உதவியாளர் சுரேந்தர் கோகிலி என்பவரையும் போலிசார் கைது செய்துள்ளனர்.வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் உத்திரப்பிரதேச போலீசார் குற்றவாளிகளுக்கு சாதகமாகச் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விசாரணையில் சிபிஐ வக்கீல் கூறுகையில் வீட்டின் கழிவுநீர்க் கால்வாயில் இருந்து 30 க்கும் அதிகமான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர் சிறுமியர்களின் எலும்புக்கூடுகள் தான் என்றும், இவர்கள் அனைவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தடவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் நடந்த சம்பவங்கள் எதிலும்; மொனிந்தருக்குத் தொடர்பு இல்லை. அவரது உதவியாளர் சுரேந்தர் தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று தெரிவித்துள்ளனர். இதனால் நிதாரி கிராம மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.

எங்களின் குழந்தைகளை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்றவர்களை விடுதலை செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. மொனிந்தருக்குத் தெரியாமல் சுரேந்தரால் எதுவும் செய்திருக்க முடியாது. படுகொலைகளில் இரண்டு பேருக்குமே சமபங்கு உண்டு. அவர்கள் இருவருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் அப்போது தான் எங்களுக்கு நிம்மதி. இப்படிப்பட்ட கொடியவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட்டால் தான் எதிர்காலத்தில் இது போன்ற குற்றங்கள் நடக்காமல் தடு;க்க முடியும் என்று அவர்கள் ஆவேசமாகக் கூறினர். இந்தச் செய்திகள் அனைத்துமே பத்திரிக்கைகளில் வெளியானவை.

வெளியே சொல்லக்கூசும் கொலைபாதகச் செயலை செய்தவர்கள் இவர்கள் என்று தெரியவந்த போதிலும் உடனடியாக தீர்ப்போ தண்டனையோ இக்காலத்தில் தரமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனால் நமது முன்னோர்கள் சங்க காலத்தில் திருட்டு, நம்பிக்கை துரோகம் போன்ற குற்றங்களுக்கே நியாயமான தீர்ப்புக்களை வழங்கி நீதிநெறியை தழைக்கச் செய்துள்ளனர். அகநானூற்றில் ஒரு காட்சியைப் பார்ப்போம்.

சுண்ணாம்புக்குளியல்

ஒருவன் ஒரு பெண்ணுடன் நீண்ட காலம் பழகி உள்ளான். அவளுடன் தோப்பு துரவு என்று சுற்றினான். அவள் தினைப்புனத்தை காவல் செய்தபோது அவளுடன் யாருக்கும் தெரியாமல் பழகினான். இருவரும் இதயம் மாறிப்புகுந்தனர். அவள் திருமணம் செய்து கொள்ள வேண்டினாள். இதுவரையில் அவளை உயிருக்கு உயிராக நேசித்த அவன் திருமணம் செய்து கொள்ளச் சொன்னதும் வெறுக்க ஆரம்பித்தான். அந்தப் பெண் கலங்கினாள். இந்த விஷயத்தை ஆதிமுதல் அந்தம் வரையில் அறிந்தவள் அந்தப் பெண்ணின் தோழி. அவள் தலைவியின் பெண்மை ஒருவனால் களவாடப்பட்டதை ஊர்மக்களிடம் தெரிவித்தாள்.

ஊர்மக்கள் இருவரையும் அழைத்து விசாரித்தனர். பெண் அவமானத்தினால் தலைகுனிந்து நின்றாள். அந்த வாலிபனோ இந்தப் பெண்ணை நான் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுத்து விட்டான். காதலித்த பெண்ணை கைவிட்ட அந்த வாலிபனை ஊர்சபை என்ன செய்தது தெரியுமா? மரக்களையில் கட்டிவைத்து, சுண்ணாம்பு நீரைக்கொண்டு அபிஷேகம் செய்து தண்டனை அளித்தது. இதனை அகம் 256 ஆம் பாடல் தெரிவிக்கிறது.

ஒருவனின் மாடு அயலான் வயலில் மேய்ந்து விட்டது. வயலுக்குச் சொந்தக்காரன் ஊர்சபையில் வழக்கு தொடுத்தான். அயலான் வயலில் தன் மாடு மேய்வதை கண்கொண்டு காணாத அவன் கண்ணைப் பிடுங்கி எறிய வேண்டும் என்று ஊர்சபை தீர்ப்பளித்தது. இதனை அகநானூற்றின் 262 ஆம் பாடல் தெரிவிக்கிறது. இது போன்ற செய்திகள் இலக்கியத்தில் மட்டும் அல்லாமல் கல்வெட்டுக்களிலும் காணப்படுகின்றன.

மூன்று கல்வெட்டுக்கள்

திருக்கோட்டியூர் மாதவன் கோவிலில் பணியாற்றிய ஐந்து பேர்களுள் ஒருவர் வாமனபட்டர். இவர் ஒரு நாள் தனது பணியை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பும் நேரத்தில் சத்தியநாவன் என்பவன் சில அடியாட்களைக் கொண்டு வாமனபட்டரை கொலை செய்து விட்டான். உடனே அனைவரும் அருகில் உள்ள பன்றித் திட்டுக்குச சென்று தலைமறைவாகி விட்டனர்.

மூலப்பரிஷத்து என்னும் ஊர்ச்சபை இந்த வழக்கை விசாரித்தது. ஆட்களை வைத்து வாமனபட்டரை கொலை செய்த சத்தியநாவனின் வீடு, நிலம், சொத்து மற்றும் பணியாட்கள் ஆகிய எல்லாவற்றையும் கையகப்படுத்தி கோவிலுக்கு ஊர்மக்கள் காணிக்கையாக்கினர். இந்தக் கொலையில் மறைமுகமாகத் தொடர்பு கொண்டவன் தேவன்நாயன் என்பது தெரியவந்தது. ஆகவே அவனுடைய சொத்துக்களும் பறிக்கப்பட்டு கோவிலுக்கு உடைமையாக்கப்பட்டது.

இதில் நாம் ஆச்சரியப்பட வேண்டிய மற்றொரு விஷயம் என்ன தெரியுமா ? இந்த தீர்ப்பு அத்தனையும் கொலை நடந்த பத்து நாட்களுக்குள் வழங்கப்பட்டது தான். சில நாட்களில் வாமனபட்டரின் ஆட்கள் சத்தியநாவனை திட்டமிட்டு கொலை செய்து விட்டனர். உடனே ஊர்ச்சபையினர் தேவன்நாயனின் உரிமைப் பொருட்களை அவன் குடும்பத்தாரிடம் திருப்பி கொடுத்து விட்டனர். காரணம் இந்த கொலையி;ல் அவன் தொடர்பு உடையவன் அல்ல என்ற உண்மை தெரியவந்தது. இந்த தீர்ப்பும் கொலை நடந்த இருபது நாட்களுக்குள் வழங்கப்பட்டது.

இதற்குப் பிறகு சத்தியநாவன் மகனான சேர்மலைப்பெருமாள் என்பவர் ஊர்ச்சபையைக் கூட்டினார். தந்தையின் செயலுக்கும் தனக்கும் எந்தவிதமாக தொடர்பும் இல்லை. உடமைகளைப் பறித்துக் கொண்டதால் வருமானத்திற்கு வழி இன்றி தங்கள் குடும்பம் வறுமையில் வாடுகின்றது. பெண்களும், குழந்தைகளும் பட்டினி கிடக்கின்றனர். ஆகவே ஊர்ச்சபை கருணை கொண்டு சொத்துக்களை திரும்ப அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் தந்தை செய்த தவறுக்கு தண்டனையாக அதாவது நஷ்டஈடாக கோவிலுக்கு எண்ணூறு பணம் கொடுப்பதாக விண்ணப்பித்துக் கொண்டார்.

அவரது வார்த்தையில் உண்மை இருப்பதை உணர்ந்த ஊர்ச்சபை வீர கேரள மலைராயன் சந்தி என்ற அறக்கட்டளையை ஏற்படுத்தி இதை அவர் தொடர்ந்து நடத்திவர வேண்டும் என்ற நிபந்தனையோடு, சொத்துக்களை அவரிடமே திரும்ப அளித்தது. பாண்டிய நாட்டில் கி.பி 13 ஆம் நூற்றாண்டில் நடந்த இந்த கொலைவழக்கில் ஊர்ச்சபையினர் வழங்கிய நீதியைக் குறித்து முகவை மாவட்டம் சௌமிய நாராயணப் பெருமாள் கோவிலில் உள்ள மூன்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

சங்க காலத்தை விட்டு நிகழ்காலத்திற்கு வருவோம். நொய்டா குற்றவாளிக்கு சங்க காலமாக இருந்தால் எப்படிப்பட்ட தண்டனை இதற்குள் கிடைத்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். இன்று அறிவியல், தடயவியல், காவல்துறை, என்று எல்லாத் துறைகளும் மிக மிக முன்னேறிய நிலையில் இலட்சக்கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. தீர்ப்புக்களில் ஏராளமான குளறுபடிகள். தவறு செய்தவன் எப்படியோ தப்பிவிடும் அபாயமும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காத அவலமும் நடக்கின்றது.

உணவு உண்பதில் அவசரம், வேலைக்குச் செல்வதில் அவசரம், பேசுவதில் அவசரம் என்று எல்லாவற்றிலும் அவசரமாக நேரம் சிறிதும் இல்லாமல், வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் நாம் வழக்கு விசாரணை மற்றும் நீதி வழங்குவதில் மட்டும் நத்தையின் வேகத்திற்குக்கூட செல்ல முடியாமல் தோற்றுப் போய்விட்டோம். நெஞ்சு பொறுக்குதில்லையே என்று கதறத் தோன்றுகிறது. சங்க காலத்தைப்போல உடனுக்குடன் வழக்குகளை விசாரித்து நீதிவழங்கும் அந்த நாளும் வந்திடாதோ என்று மனம் ஏங்கித் தவிக்கிறது.

- வேணு சீனிவாசன் ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com