Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

9. ஆய்வளார்கள் காட்டும் பாரதி
வாலாசா வல்லவன்


...முந்தைய பகுதி: ஆர்.எஸ்.எஸ்.தோற்றத்துக்கு அடித்தளம் அமைத்த பாரதி

பாரதியார்- தமிழ் மொழிக் காவலர், விடுதலை வீரர், பொதுவுடைமைவாதி, முற்போக்குவாதி என்றெல்லாம் ஆய்வாளர்கள் பலர் ஆராய்ந்து தம் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். இவ்வாய்வாளர்களின் கருத்துகள் சரிதானா? இல்லையா? என்பதைப் பற்றி இங்கு ஆராய்வோம்.

பாரதியைப் பற்றி நூல்கள் எழுதிய ஆய்வாளர்களைப் பொதுவாக நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. பாரதியை முழுக்கப் பொதுவுடமைவாதியாகக் காட்டும் சி.பி.ஐ., சி.பி.அய்.(எம்)கட்சிகளைச் சார்ந்தவர்கள்
.
2. பாரதியைத் தமிழ்மொழிக் காவலராக,தமிழ்மொழி,பண்பாடு, கலை வளர்ச்சிக்காகப் பாடுபட்டவராகக் காட்டும் ம.பொ.சி.போன்றவர்கள்.

3. பாரதியை ஆரியச் சார்பானவர் எனக் காட்டுபவர்கள்.

4. பாரதி புரட்சியாளர் இல்லை என்றாலும் அவர் ஒரு பிற்போக்குவாதி அல்ல எனக் காட்ட முனைபவர்கள் எனப் பிரிக்கலாம்.

பொதுவுடைமைவாதிகள் பாரதியைப் பற்றிக் கூறும் கருத்துகளைப் பார்க்கலாம்.

முதலில் ப.ஜீவா அவர்கள் பாரதியைப் பற்றிக் கூறும் கருத்துகளை எடுத்துக் கொள்வோம். தோழர் ஜீவா அவர்கள் 1935 முதலே பாரதியை மேடைகளில் புகழ்ந்து பேச ஆரம்பித்தார். ஆன்மீகவாதியான பாரதியைப் பொருள் முதல்வாதியாக ஜீவானந்தம் எடுத்துரைத்து விளக்கிய பொழுது சில இடர்ப்பாடுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது (1) என்று பெ.சு.மணி குறிப்பிடுகிறார். பாரதியார் சோவியத்தில் ஜார் வீழ்ச்சி குறித்து எழுதிய பாடலான,

மாகாளி பராசக்தி கடைக்கண் வைத்தாளங்கே
ஆகாவென்றெழுந்ததுபார் யுகப் புரட்சி

என்ற பாடலை மேற்கோள் காட்டி, பாரதி அக்டோபர் புரட்சியை ஆதரித்ததாகக் கூறுகிறார். அது உண்மை இல்லை என்பதைப் ‘பொதுவுடைமைப் பற்றிப் பாரதி’ என்ற கட்டுரையில் சுட்டிக் காட்டியுள்ளேன்.

“சென்ற நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் போகப் போக வெற்றி மேல் வெற்றி சூடிவரும் உலகளாவிய ஜனநாயக- சமதர்ம இயக்கத்தின் முக்கியமான அம்சங்கள் மூன்று. 1) அடிமை நாட்டு மக்கள் விடுதலை, 2) பாட்டாளி மக்கள் விடுதலை, 3) பெண் மக்கள் விடுதலை. இந்த அம்சங்கள் நெஞ்சை அள்ளும் விதத்தில் முழுப்பொலிவோடு, எதிரொலிப்பதைப் பாரதி பாடல்களில் பரவலாகக் காணலாம்.” (2)
என்கிறார் ஜீவா.

பாரதி இதை எந்தக் கட்டத்தில் பாடினார் என்பதுதான் நம்முடைய கேள்வி. தொடக்கக் காலத்தை மட்டுமே சுட்டிக் காட்டுவது எப்படி ஆய்வாகும்? ‘பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே’ என்ற பாடலைப் பாடிக்காட்டி, பாரதி சாதியைத் தூள் தூள் ஆக்குவதாக ஜீவா கூறுகிறார். (3)

பாரதி இப்பாடலை அந்த எண்ணத்தில் பாடவில்லை என்பதைப் பாரதியின் பாரதியின் பார்ப்பன இன உண்ர்வு என்ற கட்டுரையில் சுட்டிக் காட்டியுள்ளேன். பாரதி, “வர்க்கப் போரைப் போற்றினான், வம்பர் வாழ்வைத் தூற்றினான்” (4) என ஜீவா கூறுவது வெறும் வேடிக்கையாக உள்ளது. பாரதி எப்போது வர்க்கப் போரைப் போற்றிப் பாடினார்? பாரதி வர்க்கப் போரைக் கடுமையாகத் தாக்கி ‘செல்வம்’ என்ற கட்டுரையில் எழுதியுள்ளாரே.

பாரதி கம்பனை ஒரு மானுடன் என்று கூறிவிட்டாராம். இதனால் ஜீவாவின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லாமல் போய்விட்டது. இது எத்தனை மெய்? ‘கம்பன் ஒரு மானுடன்; அவன் காவியம் மானிட மகா காவியம்’ (5) என்கிறார் ஜீவா. மதவாதியின் மானுடப் பற்று என்பதுதான் உண்மையானது. கம்பனை ஒரு மானுடன் என ஜீவா கூறுவது சற்றும் பொருத்தமற்றது. கம்பன் காவியத்தில் சோசலித்தைக் காண்கிறார் ஜீவா.

இவரைப் போன்றவர்கள் பிற்காலத்தில் தோன்றுவார்கள் என்பதைக் கருத்தில் கொண்டுதான் மார்க்சிய ஆசான் எங்கெல்ஸ், ‘கற்பனாவாத சோசலிசமும்,விஞ்ஞான சோசலிசமும்’ என்ற நூலை எழுதினார் போலும். “ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் விஞ்ஞானபூர்வமான நாஸ்திகனே”6 என்கிறார் ஜீவா. இதைத்தான் மார்க்சியத்தின் அடிப்படைச் சித்தாந்தமும் கூறுகிறது. ஆனால் பாரதி போன்றவர்களுக்கு விதிவிலக்கு கொடுக்கிறார் ஜீவா.

ஜனசக்தி பொன்விழா மலரில், ‘நான் ஒரு நாஸ்திகன்’ என்ற தலைப்பில் ஜீவா கட்டுரை எழுதியுள்ளார். அக்கட்டுரையில் பாரதியைப் பற்றி எழுதும் போது ஜீவா கூறுவதாவது: “நான் ஒரு நாஸ்திகனான கம்யூனிஸ்ட். அப்படியானால் ஆஸ்திக உணர்ச்சியுள்ள கம்யுனிஸ்டுகளும் இருக்கிறார்களா? இருக்கக் கூடாது என்றில்லை. ஒரு மதத்திலும் நம்பிக்கையில்லாத நாஸ்திகர்களுக்கு மட்டும்தான் தொழிலாளர்களின் அரசியல் கட்சியாகிய கம்யுனிஸ்ட் கட்சியில் இடமுண்டு என்று கட்சியின் திட்டமோ, கட்சியின் ஸ்தாபன விதிகளோ திட்டவட்டமாக கூறவில்லை. நேர்மாறாக, தொலிழாளர் கட்சி, மத நம்பிக்கைகளைப் பலாத்காரமாக எதிர்ப்பது தவறு என்று மார்க்சிய அறிஞர்கள் கூறியுள்ளனர்” (7) என ஜீவா கூறுகிறார். இது மார்க்சியத்திற்கு எதிரான கண்ணோட்டமாகும். இப்படி இருந்தால் பொதுவுடைமைக் கட்சி எப்படி உருப்படும்?

பெரியாரை ஒரு சாதி ஒழிப்பு வீரராக ஜீவா ஒப்புக்கொள்ள மறுக்கிறார். இது குறித்து அவர் கூறுவதாவது: ஆனானப்பட்ட கௌதம புத்தன் ஜாதியை ஒழிக்க முயன்றான். முடியவில்லை. ஆழ்வார்களும் நாயன்மார்களும் முயன்றார்கள்; முடியவில்லை. “நான் ஜாதியை ஒழித்து விடுவேனென்று ஈ.வெ.ரா.கத்தியைக் கையில் எடுக்கிறார். நாலுபேர் கையில் கத்தி எடுத்துக் கொண்டு அல்லது தடிகளைத் தூக்கிக் கொண்டு, சமுதாயத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வேரோடிப் படர்ந்து கிடக்கும் ஜாதீயப் பிரதிபலிப்புகளை இதோ ஒழித்துக் கட்டிவிடுகிறேன் என்று கிளம்பினால் அவர்களுடைய குருட்டு ஆவேசத்தைக் கண்டு நாம் பரிதாபப்படத்தான் முடியும். மற்றபடி சில்லரை பலாத்காரத்தால் ஜாதி ஒழிப்பில் ஒரு சிறு துரும்பைக் கூட அசைத்து விட முடியுமென்று ஒரு பைத்தியக்காரனும் நினைக்க மாட்டான்”(8)

இந்த 20ஆம் நூற்றாண்டில் பெரியார் ஒரு பெரிய பட்டாளத்தையெ வத்துக் கொண்டு சாதி ஒழிப்பிற்காகப் பல கிளர்ச்சிகளை நடத்தியவர். அதற்காக அரசியல் சட்டத்தையே எரித்து பல ஆயிரம் பேரை சிறைக்கு அனுப்பியவர். பெரியாரைப் போல இந்த நூற்றாண்டில் சாதி ஒழிப்பிற்காகக் கடுமையாகப் போராடியவர்கள் எவருமில்லை. பாரதியார் சாதி ஒழிப்பிற்காக எந்த போராட்டத்தை நடத்தினார், நாலுவரிப் பாட்டைத் தவிர! சாதி ஒழிப்பிற்காக நேரடிப் போராட்டம் நடத்திய பெரியாரை குருட்டுப் பைத்தியக்காரன் என்கிறார்; நாலு வரிப்பாட்டை எழுதிய பாரதியைச் சாதி ஒழிப்பு வீரன் என்கிறார் ஜீவா. இது ஜீவாவிற்குச் சுயமரியாதை இயக்கத்தின் மீதும், பெரியாரின் மீதும் இருந்த காழ்ப்பைக் காட்டுகிறதே தவிர நடுநிலை ஆய்வாக அமையவில்லை.

பொதுவுடைமைக் கட்சியைச் சேர்த்த பி.இராமமூர்த்தி பாரதியை மாபெரும் புரட்சி வீரர் என்கிறார். “செந்தமிழ் நாடெனும் போதிலே” என்ற பாட்டைச் சுட்டிக் காட்டிக் தமிழ் உணர்வாளர் என்கிறார். இதே பாடலைப் பாரதிதாசன் பாடினால் பிரிவினைவாதி, தேசத்துரோகி என்பார். மேலும் அவர் பாரதி குறித்துக் கூறுவதாவது: “1919க்குப் பிறகு சென்னையில் சுதேசமித்திரனில் பணியாற்றிய காலத்து, நீ திருவல்லிக்கேணி கடற்கரையில் செய்த கர்ஜனைகள் இன்னும் என் காதில் ஒலிக்கின்றன” (9) என்று கூறுகிறார்.

பாரதி 1918 நவம்பரில் ஆங்கில ஆட்சிக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்ட பிறகு அரசியல் கூட்டங்களில் பேசியதே இல்லை. ஆனால் பி.இராமமூர்த்தி 1919க்குப் பிறகும் பாரதி கர்ஜித்த கர்ஜனை தன் காதுகளில் இன்றும் ஒலிப்பதாகக் கூறுவது பொய்யே தவிர உண்மை இல்லை. எம்.ஆர்.வெங்கட்ராமன் என்பவர், ‘தீக்கதிர்’ பாரதி நூற்றாண்டு சிறப்பு மலரில் பாரதி சில நினைவுகள் என்ற கட்டுரையில் எழுதுவதாவது:

“ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்தவுடன் நடந்த ஒரு சம்பவத்தைத் துரைசாமி அய்யர் அடிக்கடிக் குறிப்பிடுவார். அச்சம்பவத்தைப் பற்றி அவர் கூறும்போது, மாலை சுமார் ஏழு மணி இருக்கும். மண்ணடி ராமசாமித் தெருவில் உள்ள தன் வீட்டில் துரைசாமி அய்யர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். தீடிரென்று பாரதியார் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் கையில் ஒரு கத்தி, கண்களில் கனல் பறக்கிறது. பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்று ஆவேசத்துடன் பேச்சு, துரைசாமி அய்யரைச் சாப்பிடவில்லை. அவரைக் கையும் பிடியுமாக அப்படியே இழுத்துக் கொண்டு கடற்கரையை நோக்கி செயிண்ட் ஜார்ஜ் கோட்டை வாயிலை அடைந்தார். அங்குள்ள வெள்ளைக்கார சிப்பாய்களை சண்டைக்கு இழுக்க வேண்டுமென்பது பாரதியாரின் நோக்கம். வேடிக்கை பார்க்கச் சில சிறுவர்கள் மட்டும் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். விளைவு என்ன ஆனாலும் சரி என்று கிளம்பிவிட்டார் பாரதியார். அவரைச் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்தனர்” (10) என்கிறார். ஜாலியன் வாலபாக் படுகொலை நடந்தது 13.4.1919 இல், அந்நேரத்தில், பாரதி ஆங்கில அரசின் விருப்பப்படி கடயத்தில் வசித்து வந்தார். “அவர் ஜாலியன்வாலாபாக் படுகொலையைக் கண்டித்து எதையும் எழுதவில்லை என்று ஆய்வாளர் கோ.கேசவனும் கூறியுள்ளார்.”11

பாரதியைப் பற்றி அளவுக்கு மீறிப் பார்ப்பனர்கள் பல பொய் கதைகளைக் கட்டி உண்மைச் சம்பவம் போலவும், தாங்கள் நேரில் பார்த்தது போலவும் எழுதி அவரை உயர்த்திக் கூறியுள்ளனர். உண்மையில் ரௌலட் சட்டத்தையும் ஜாலியன் வாலாபாக் படுகொலையையும் வன்மையாகக் கண்டித்தவர் விடுதலை வீரர் வ.உ.சி.யே. அன்னிபெசண்ட் அம்மையார் ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஆதரித்தார். அந்த அம்மையாரின் ஹோம்ரூல் இயக்கம் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக இருக்கவே திலகரும், பாரதியும் அன்னிபெசண்டை ஆதரித்தனர். ஆனால் வ.உ.சி. மட்டும் தான் அன்னிபெசண்ட் ஆங்கிலேயரின் கையாள் என்பதைப் புரிந்து கொண்டு அவரை மிகக் கடுமையாகத் தாக்கி எழுதியுள்ளார்.(12)

அன்னிபெசண்ட் பஞ்சாப் படுகொலையை ஆதரித்தார் என்பதற்குப் பின்வரும் சான்றும் உள்ளது: 1923 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்குத் தலைவர் ஈ.வெ.ரா காரியக் கமிட்டிக் கூட்டத்தில் சத்யமுர்த்தி அய்யர், நீதிக்கட்சித் தலைவர் பி. தியாகராய செட்டியாரை ‘டயர்’ என்றும், பனகல் அரசரை ‘இராட்சசன்’ என்றும் வருணித்தார். இதனைப் பொÚ측Áø ±Š.‏ இáÁநாதன் எழுந்து, “ஒத்துழையாமையைச் சட்ட விரோதம் என்று கூறிக் காந்தியைக் கைது செய்யச் சொன்ன சீனிவாச அய்யங்காரும், பஞ்சாப் அட்டூழியத்தை ஆதரித்து, செங்கல்லால் அடித்தவர்களை இரும்பு குண்டாலடித்தார்கள் வெள்ளையர்கள். இதிலென்ன தவறு? என்று கூறிய பெசண்டு அம்மையும், டயரும், ராட்சசியும் அல்லவா? என்று பதிலடி கொடுத்தார்.” (13) எஸ்.இராமநாதன்.

மற்றுமொரு பொதுவுடைமையாளார் பி. பரமேசுவரன் கூறுவதாவது: “பாரதி சொல்லிலும் செயலிலும் சாதி வேற்றுமையை வெறுத்தவன். பூணூல் அணிய உரிமையற்றவர்கள் என்று விலக்கப்பட்ட, தாழ்த்தப்பட்டவனுக்கு அதை அணிவித்தான். பூணூலின் புனிதத் தன்மைக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினான் என்கிறார். ஆனால் பாரதி எல்லோரையும் இந்துமதத்துக்கு இழுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் பூணூல் அணிவித்துள்ளார். இக்கருத்தைக் கவனத்தில் கொள்ள மறுத்த பரமேசுவரன் அவரைப் புரட்சியாளராகக் காட்டுகிறார். மேலும் இவர் பாரதியைப் பெண் விடுதலையாளராகவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு வீரராகவும் காண்கிறார். பாரதி அக்டோபர் புரட்சியை வரவேற்றதாகவும் குறிப்பிட்டு பாரதியை, “பரலோகத்திற்குப் பாதை காட்டியவரல்ல; இம்மண்ணுலகிலேயே புது வாழ்வைக் காணத் துடிக்கும் மக்களின் கவிஞர்” என்று கூறுகிறார். (14)

பொதுவாகப் பாரதியைப் புகழ்ந்து எழுதும் அனைவருமே பாரதியின் தொடக்கக் காலமான 1906 முதல் 1908 வரை உள்ள காலத்தில் எழுதிய பகுதியை மட்டுமே கண்டு ,அவர் வாழ்நாள் முழுதும் அதே நிலைப்பாட்டில் வாழ்ந்தவர் எனக் காட்டுகின்றனர். பாரதியின் அரசியல் வரலாற்றின் தொடக்கத்தையே மீண்டும் மீண்டும் கூறி அவரின் பிற்கால நிலைப்பாடுகளைக் கண்டு கொள்ளாமல் மறைத்து விடுவது நேரிய ஆய்வு முறையன்று. பொதுவுடைமைக் கட்சியினர் அனைவரும் மற்றுமுள்ள முற்போக்காளர்களும் திட்டமிட்டே இதைச் செய்கின்றனர்.

இந்தியப் பொதுவுடமைக் கட்சியினர்களை விட ஒருபடி மேலே போய்விட்டார் பேராசிரியர் ந. பிச்சமுத்து. “அரசு பற்றிப் பாரதியார் கூறும் உண்மைகள் வியாசரின் கருத்துகளா அல்லது பாரதியின் கருத்துகளா என்பது மகாபாரதத்தோடு ஒப்பு நோக்கி எடுக்க வேண்டிய முடிவு என்றாலும், பாரதியார் அரசு பற்றிக் கூறும் கருத்துக்கள் மேதை லெனின் அவர்கள் அரசும், புரட்சியும் என்னும் நூலில் கூறும் கருத்துகளோடு ஒத்திருப்பது மனங்கொளத்தக்கது... அரசு பற்றிய லெனினிய கொள்கையைத் தமிழ் மண்ணில் அறிமுகப்படுத்திய முதல் கவிஞர் பாரதி” (15) என்று கூறுகிறார். இது எவ்வளவு பெரிய பொய் ? உண்மையில் பரதியாருக்கு மார்க்சீயத்தின் அடிப்படைகள் எதுவுமே தெரியாது என்று குறிப்பிட்டு செ.கணேசலிங்கன் கூறியுள்ளதாவது:

“பாரதி அக்டோபர் புரட்சியைப் பாடவில்லை. 1917இல் பிப்ரவரியில் நடைபெற்ற புரட்சியைத்தான் பாடினார். அவர் ஒரு பொருள் முதல்வாதியல்ல“ என்று மங்களா என்பவர் பாரதியின் கருத்துகளை ஆய்வு செய்து கூறியுள்ளார். (17) இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைச் சார்ந்த தொ.மு.சி.ரகுநாதன் “பாரதி அக்டோபர் புரட்சியைப் பாடவில்லை என்று கூறுபவர்கள் அந்தக் கொள்கை மேல் வெறுப்பால் அவ்வாறு கூறுகிறார்கள்” (18) என்கிறார். பாரதியைப் புரட்சிக்காரராகக் காட்டுவதற்காக இவர் ‘பாரதி காலமும் கருத்தும்’ என்ற தலைப்பில் 550 பக்கங்கள் கொண்ட நூல் ஒன்றை எழுதியுள்ளார். இதில் பாரதியின் தொடக்க காலமான 1906 முதல் 1911 வரை அவர் எழுதியவை மட்டுமே உள்ளன. பாரதியின் கடைசிப் பத்தாண்டுகள் என்ன ஆனது என்றே தெரியவில்லை. இவர் லெனின் கொள்கையை விட, பாரதியின் கொள்கைகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

பாரதியைத் தமிழ் வளர்ச்சிக்காக அயாரது பாடுபட்டவர் எனப் பலர் எழுதியுள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ம.பொ.சி.ஆவார். பாரதி தன் தம்பிக்கு எழுதிய கடிதத்தை மேற்கோள் காட்டிப் பாரதியைத் தமிழ் இனக் காவலராக உயர்த்திப் பிடிக்கிறார் ம.பொ.சி. பாரதி தம் தம்பி சி.விசுவநாதனுக்கு 3.8.1918 இல் கடிதம் எழுதினார். அதில், “எனக்கு இனிமேல் இங்கிலீஷில் காயிதம் எழுதாதே. நீ எழுதும் தமிழ் எவ்வளவு கொச்சையாக இருந்தபோதிலும் அதைப் படிக்க நான் ஆவலுறுவேன். கொச்சைத் தமிழ் கூட எழுத முடியாவிட்டால் சமஸ்கிருதத்திலே காயிதம் எழுது” (19) என்று எழுதியுள்ளார். இதை எப்படிப் பாரதியின் தமிழ்ப் பற்று என்று சொல்ல முடியும்? அவர் தம்பியைத் தமிழில் மட்டும்தானே எழுதச்சொல்லியிருக்க வேண்டும்; இல்லையென்றால் சமஸ்கிருதத்தில் எழுது என்று ஏன் கூற வேண்டும்? இது பாரதிக்கு ஆங்கிலத்தின் மேல் இருந்த வெறுப்பைக் காட்டுகிறதே அன்றி ம.பொ.சி.கூறுவது போல் தமிழ்ப்பற்று அன்று என்பது தெரியவில்லையா?

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணோம்

என்ற பாரதியின் பாடலைப் பலர் மேற்கோள் காட்டிப் பாரதியின் தமிழ்ப்பற்றைப் போற்றியுள்ளனர்.டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் இப்பாடல் வரிகளை மேற்கோள் காட்டிப் பாரதியின் தமிழ் உணர்வைப் புகழ்கிறார். (20)

உண்மையில் இப்படலைப் பாரதி மனப்பூர்வமாக எழுதினாரா என்று இன்று வரை யாரும் ஆய்வு செய்யவில்லை. இப்பாடலைப் பாரதி 1915 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தமிழ்ச்சங்கத்தின் பரிசுப் போட்டிக்காக நண்பர்களின் வற்புறுத்தலினால் எழுதினார் என்பதைப் ‘பாரதியின் உயிர் மூச்சு தமிழா? ஆரியமா?’ என்ற முதல் கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளேன். அதேபோலப் பாரதியின்,

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே

என்ற பாரதியின் பாடலையும் பலர் சுட்டிக்காட்டிப் பாரதியின் தமிழ் உணர்வைப் போற்றுகின்றனர். இப்பாடலும் மதுரைத் தமிழ்சங்கம் பரிசுப் போட்டிக்காக நண்பர்களின் வற்புறுத்துதலினால் எழுதப்பட்டது என்பதுதான் உண்மை. பாரதியைப் பெண் விடுதலையாளராகப் பெரும்பாலோர் காண்கின்றனர், அவர்கள் பாரதியின் பெண் விடுதலைக்கும் இப்பாடலை மேற்கோளாகக் காட்டுகின்றனர். தி.ச. ராஜீ குறிப்பிடுவதாவது:

மாட்டையடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்; அதை
வெட்டி விட்டோமென்று கும்மியடி (21)

என்ற பாடலைச் சுட்டிக் காட்டிப் பாரதியைப் பெண் விடுதலையாளராகக் காட்டுகிறார். பாரதி தொடக்கக் காலத்தில் சிறந்த பெண் விடுதலையாளராக இருந்தார் என்பதை இப்பாடல் வரிகளால் நாம் அறிகிறோம். ஆனால் பாரதி பிற்காலத்தில் தீவிர மதவாதியாய் மாறிய பின்பு அவருடைய பெண் விடுதலைக் கோட்பாடு போய்விட்டது என்பதே உண்மை. பாரதியே தன் கருத்தைப் பின்னாளில் மாற்றிக் கொண்ட பின்பு நாம் அவர் தொடக்கத்தில் கூறியதையே திரும்பத் திரும்பக் கூறுவது ஆய்வுக்கு அழகல்ல!

20.10.1906 இந்தியா இதழில் பாரதி எழுதும்போது, பம்பாயிலிருந்து ‘ஹிந்தி சுயராஜ்’ என்னும் இதழின் ஆசிரியர் டாணாவாலா எழுதிய கட்டுரை இராஜதுரோகம் உடையதென்றும், ஆங்கில அரசு அவரைத் தண்டித்தது அவர்கள் கடமை என்றும் கூறி எழுதியதாவது: “தைரியம் வேண்டும், பயமில்லாமை வேண்டும்” என்று 3 பக்கம் பிரசங்கம் செய்த பத்திராதிபர், தாம் எழுதியதை ‘ஆமாம் நான் எழுதினதே நியாயமென்று எனக்குப் புலப்பட்டது; அதன் பேரில் எழுதினேன்’ என்று கோர்ட்டார் முன்பு கூறத் தைரியமில்லாமல், ஏதோ வெற்று முகாந்திரங்கள் கூறி மழுப்பிவிட்ட விஷயம் வேடிக்கையாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. தாம் செய்ததை ஒத்துக்கொள்ளாத இவர் வியாசத்தை தைரியத்துடன் எழுதும்படி யார் கேட்டுக் கொண்டார்களோ அறியமாட்டோம்” என்று கூறியுள்ளார்.

இந்தியா இதழின் வெளியீட்டாளராகப் பதிவு பெற்றிருந்த சீனிவாசன் ஐந்து ஆண்டுக் கடுங்காவல் விதிக்கப்பட்டதைப் பற்றிப் புதுச்சேரிக்குச் சென்றபின் பாரதி அங்கிருந்து வெளியிட்ட இந்தியா இதழில் ‘இந்தியா கேஸ்’ என்ற ஆசிரியவுரையில்: “ஏதோ பிறர் ஏமாற்றுதலுக்குப்பட்டுப் பிசகி நடந்து விட்டாரென்றும் அவர் செய்தது குற்றம் என்று தீர்ப்பாகி விடும் பசஷத்தில் அதற்காக அனுதாபப்பட்டு மன்னிப்புக் கேட்டிருக்கிறார் என்றும்... சீனிவாசனின் வழக்கறிஞர் கூறியதைக் குறிப்பிட்டு, ‘நாம் எது செய்யினும் தேசத்துரோகம் செய்யோம். தேசத்துரோகிக்கு என்றும் மீளாத நரகமே பிராப்தம்’; ராஜத்துரோகக் கேசிலகப்பட்டுக் கொள்ளும் ஒவ்வொரு பத்திராதிபரும் சொல்ல வேண்டியதும் அதுவே” என்று கூறியுள்ளார். சீனிவாசனைச் சிக்க வைத்துவிட்டுப் புதுச்சேரி சென்ற பாரதி ஆய்வாளர் முனைவர் ப.இறையரசன் கட்டிக் காட்டியுள்ளார். (22)

தம்மை நம்பிய ஒருவரை ஆபத்தில் சிக்க வைத்து விட்டுத்தாம் தூரப் போய்விட்டமை பாரதியாரின் சரித்திரத்தில் ஒரு பெரிய களங்கமேயாகும் என்று எஸ்.ஜி. இராமநுஜலு நாயுடு கூறுயுள்ளார். (23) பாரதியார் எப்போதும் தான் மட்டும் அகப்பட்டுக்கொள்ளக்கூடாது, சிறைக்குப் போகக்கூடாது என்று சந்து பொந்து வழிகளைக் கண்டுபிடித்து ஒளிந்து கொள்கிறார். மற்றவர்கள் இவ்வாறு செய்யும் பொழுது கண்டித்து எழுதுவது எந்த வகையிலும் புரட்சியாளனுக்கு உள்ள குணமாக மாட்டாது.

பாரதி ஒரு மதவாதி என்றாலும் அவர் சர்வ சமயத்தையும் சமமாகக் கருதினார் எனப் பலர் எழுதுகின்றனர்.முன்னாள் நீதிபதி மு.மு.இஸ்மாயில் அவர்கள் பாரதியின் பாடல் ஒன்றைச் சுட்டிக்காட்டி, அவரைச் சர்வ மதத்திற்கும் பொதுவானவராகப் படம் பிடித்துக் காட்டுகிறார். அப்பாடல் வருமாறு:

தீயினைக் கும்பிடும் பார்ப்பார் - நித்தம்
திக்கை வணங்கும் துருக்கர்
கோயிற் சிலுவை முன்னே-நின்று
கும்பிடும் யேசு மதத்தார்
யாரும் பணிந்திடும் தெய்வம் -பொருள்
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று - இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம் (24)

இந்தப் பாடலுக்குப் பிறகு பாரதி தன் கருத்தை மாற்றிக் கொண்டு இசுலாமியர்களையும் கிறித்தவர்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார் என்பதை ‘மதங்களைப் பற்றிப் பாரதியின் பார்வை’ என்ற என் கட்டுரையில் சுட்டிக் காட்டியுள்ளேன். பாரதியார் ஒரு வேதாந்தி. அவர் இயற்கையைப் பற்றி எழுதினால் கூட அதில் வேதாந்தப் பொருள் இருக்கும் எனக் கூறும் டாக்டர் மின்னூர் சீனிவாசன் பாரதியின் குயில் பாட்டுக்கு விளக்கம் எழுதி அதில் வேதாந்தக் கருத்துகள் மிளிர்வதைச் சுட்டிக் காட்டுகிறார்:

நீரைப் படைத்து நிலத்தைத் திரட்டி வைத்தாய்
நீரைப் பழைய நெருப்பிற் குளிர்வித்தாய்
காற்றை முன்னே ஊதினாய்
காணரிய வானவெளி தோற்றுவித்தாய்,
நின்றன் தொழில் வலிமை யாரறிவர்?

என வரும் வருணனையில் (1) ரிக்வேதக் கருத்தும் சாண்டோக்ய உபநிடதக் கருத்தும் மிளிர்வதைக் காணலாம். ரிக்வேதம் பத்தாவது மண்டலம் 1929 ஆம் சூக்தத்தைப் பயின்றால் மேற்காணும் வருணனை மேலும் துலங்கும் (25) என்கிறார் மின்னுர் சீனிவாசன்.

பாரதியை மிகவும் துல்லியமாக ஆய்வு செய்த கோ.கேசவன் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பாரதிக்கு அக்கறை இருந்ததாகக் கண்டு கூறுவதாவது: “பறையருக்கு நியாயம் செலுத்த வேண்டியது நம்முடைய முதற்கடமை. அவர்களுக்கு முதலாவது வேண்டியது சோறு. அவர்களையெல்லாம் ஒன்று திரட்டு. உடனே விபுதி நாமத்தைப் பூசு.... அவர்களையெல்லாம் ஒன்று சேர்த்து ஹிந்து தர்மத்தை நிலைக்கச் செய்யுங்கள். நம்முடைய பலத்தைச் சிதற விடாதேயுங்கள். மடாதிபதிகளே! நாட்டுக்கோட்டை செட்டியார்களே! இந்த விஷயத்தில் பணத்தை வாரிச் செலவிடுங்கள்” என்று பாரதி கூறியௌள்ளதைச் சுட்டிக் காட்டி,பாரதியை மனிதநேயப் பற்றாளரகக் காட்டுகிறார் கேசவன்.உண்மையில் பாரதி மனிதநேயத்தோடு இதைக் கூறவில்லை. “ பறையர்களுக்கு இதைச் செய்யவில்லை என்றால் அவர்கள் முகமதியர்களாகவும், கிறித்துவர்களாகவும் மாறி நமக்கு எதிரிகளாகி விடுவார்கள் என்று ஆர்.எஸ்.எஸ். பானியில் கூறியுள்ளார்.”27 ஆனால் கோ.கெசவன் பாரதியை ஓர் ஆர்.எஸ்.எஸ். முன்னோடியாகக் காட்ட விரும்பாமல்,பாரதியின் கருத்தை மாற்றி அவரை மனிதநேயப்பற்றாளராகக் காட்டுகிறார்.

பாரதி பறையர்களைத் தாழ்வாகக் கருதுவதை நியாயப்படுத்தி எழுதி உள்ளதை கோ.கேசவன் அவர்களே ‘ பாரதியாரும் சொசலிச கருத்துகளும்’ என்ற நூலில் சுட்டிக்காட்டியுள்ளார் அவை வருமாறு: “ ஹிந்துக்கள் புராதன கால முதலாகவே கோ மாமிசத்தை வர்ஜனம் செய்யாதிருப்பதைக் கண்டு ஜாதிப் பொதுமை அப்பகுதியைத் தாழ்வாகக் கருதுகிறது. இது முற்றிலும் நியாயம்” 28 எனக் கூறித் தாழ்த்தப்பட்டவர்களை ஒதுக்கி வைத்ததை நியாயபடுத்தும் பாரதியை ஒரு மனித நேயப் பற்றாளராக எவ்வாறு காண முடியும்?.

பாரதி இந்திய தேசிய இனங்களின் விடுதலையை ஆதரிப்பதாகக் கோ.கேசவன் கூறுவதாவது:

இந்தியப் பகுதிகளை மொழிவாரியாகப் பிரித்து அவற்றை இணைக்கும் போக்கை ‘மாதாவின் துவஜம்’ என்ற பாடலில் காண்கிறோம்.சென்னை மாகாணத்தில் உள்ள கன்னடர், தெலுங்கர், மலையாளர், தமிழர் ஆகிய தேசிய இனங்களைப் பிரித்து அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தாயின் மணிக்கொடியை வணங்குவதாகப் பாடுகின்றார்.தேசிய இனமொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படுதலையும் ஆதரிக்கின்றார்.ஆனால் இந்தியாவின் அரசியல் விடுதலைக்குப் பிறகே இதைச் செய்ய்ய வேண்டும் என்கிறார்.29

ஆனால், உண்மையில் பாரதி அப்படிக் கூறவில்லை.தெலுங்கர் தனி மாநிலமாகப் பிரிய வேண்டும் என்று 1917இல் தீர்மானம் நிறைவேற்றியபோது பாரதி கூறியதாவது:

“ஆந்திராரைத் தானிப்பிரிவாக ருஜீப்படுத்துவதைக் காட்டிலும் அஸேது ஹிமாசல பர்யந்தம் உள்ள இந்துக்களெல்லாம் ஒன்று என்ற மூலமந்திரத்தை நிலைநாட்டுவதே அவசியமென்று என் புத்திக்குத் தோன்றுகிறது. ஹ்ந்துக்களெல்லாம் ஒரே கூட்டம். வேதத்தை நம்புவோரெல்லாம் ஸஹோதரர்.பாரத பூமியின் மக்களெல்லாம் ஒரே தாய் வயிற்றுக் குழந்தைகள்.நமக்குள் மதபேதம், ஜாதிபேதம், குலபேதம், பாஷாபேதம் ஒன்றுமே கிடையாது. இந்தக்கொள்ளைதான் இந்தக் காலத்துக்கு உத்தமமானது.ஹிந்து மதத்தை உண்மையாக நம்புவோரெல்லாம் ஒரே ஆத்மா, ஒரே உயிர், ஒரே உடம்பு, ஒரே ரத்தம், ஒரே குடல், ஒன்று”30 என்று கூறுகிறார்.

இப்படிப்பட்ட அகண்ட பாரதக் கொள்கை உடைய ஆர்.எஸ்.எஸ். முன்னோடி மூளை கொண்ட பார்ப்பன பாரதி, தேசிய இனங்களின் விடுதலையை ஆதரித்தார் எனக் கோ, கேசவன் கூறுவது விந்தையாக உள்ளது.

பாரதியின் வாழ்வில் சமயம் வகித்த செல்வாக்கு கருதுதற்குரியது. ஓரு குறிப்பிட்ட காலத்துக்குப்பின் இவரது படைப்புகளில் சமயப்படைப்புகளே அதிகம் இருந்தன. சமயத்தையே தேசியமாகவும் பிற்காலத்தில் ஏற்றுக் கொண்டார் என வேறு ஓர் இடத்தில் கோ.கேசவன் கூறியுள்ளார்.31

“ பாரதி காலத்தில் ஏகாதிபத்தியத்தின் ஆட்சியும் சுரண்டலும் நேரடியாக இருந்து இப்பொழுது அவற்றின் வடிவங்கள் மாறியுள்ளன.

இந்நிலையில் இத்தகைய கோட்பாடுகளின் தேவை பல்கிப் பெருகி உள்ளது. இதை நிறைவேற்ற பாரதி ஓரளவேனும் உதவக் கூடிய நிலையில் உள்ளார்”32 என்று கோ.கெசவனும் கூறுவது மிகவும் வியப்பாக உள்ளது. பாரதி அகண்ட பாரதம் காவிக்கொடி தூக்கிக் கொண்டவர். அவரை கோ.கேசவன் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கைக்குத் துணைக்கு அழைப்பது வேடிக்கையாக உள்ளது. திராவிடர் இயக்கத்தை மிகக் கடுமையாக எதிர்ப்பதில் பாரதியும்,கோ.கேசவனும் தோழர்கள் ஆகிவிட்டனர். எனவே பாரதி எத்தனை முறை மன்னிப்புக்கடிதம் எழுதினாலும் கோ.கெசவன் மிகவும் எளிமையாக அது அவருடைய வாழ்வில் ஏற்பட்ட ஒரு ஊனம் என்ற அளவோடு நிறுத்திவிடுகிறார். இதை எல்லாம் விட ஆர்.எஸ்.எஸ். எண்ணம் கொண்ட பாரதியை அந்தக் கோணத்தில் காட்டாமல் ஓர் ஏகாதிபத்திய எதிர்ப்பு வீரராகவும், மனித நேயப் பற்றாளராகவும், தேசிய இனங்களின் விடுதலைக்குப் பாடுபடவராகவும் பாரதியைக் காட்டுவது கோ.கேசவனின் நேர்மையான ஆய்வு முறையைக் காட்டவில்லை.


பாதகம் செய்பவரைக் கண்டால் -நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா 33

என்ற பாரதியின் வரிகளைச் சுட்டிக்காட்டி, முனைவர் து.மூர்த்தி, பாரதியை வீர உணர்வுள்ளவராகக் காட்டுகிறார். ஆனால் பாரதி இந்தப் பாப்பாப் பாட்டை எப்போது பாடினார்? வெள்ளையருக்குப் பயந்து மாறுவேடத்தில் புதுவை சென்றபின் அங்கிருந்துதான் பாடினார். பாரதி எந்தக் காலக்கட்டத்திலும் தைரியத்துடனும் துணீச்சலுடன் இருக்கவில்லை.அதற்கு மாறாக ஆங்கிலேயருக்கு அஞ்சி அஞ்சியே அவர் புதுவை சென்றபின்,ஆங்கில அரசுக்கு ஆண்டுதோறும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொண்டிருப்பாரா?

“பாரதி எவ்வளவு செதுக்கினாலும் காலனிய எதிர்ப்பாளன் என்ற நிலையில் இருந்து அவரை இறக்கிவிட முடியாது”34 என்கிறார் து.மூர்த்தி. நாம் அவரை இறக்க வேண்டிய அவசியமே இல்லை அவரே அந்நிலையில் இருந்து 1910க்குப் பின் தாமாகவே இறங்கிவிட்டார்.

1915க்குப் பின் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது அவரிடம் துளியும் இல்லை என்பதே உண்மை. மொத்தத்தில் பாரதியின் தொடக்க காலத்தை மட்டுமே சுட்டிக்காட்டுவது எந்த வகையிலும் நேர்மையான அய்வாகாது.

“சாதிகள் இல்லையடி பாப்பா” என்ற பாரதியே, இன்றைய பாரதி என்கிறார் து.முர்த்தி. அந்தப் பாரதி என்றோ மறைந்து விட்டார் நீதிக்கட்சி தொடங்கியவுடன் பாரதியின் பார்ப்பன சுயரூபம் முழுமையாக வெளிப்பட்டு விட்டது. ‘கடல்மேல் வருணாசிரமப் பாலம்’ என்றகட்டுரையில் பாரதி “குலத்தளவே ஆகுமாம் குணம்” என்பதோடு “அம்பட்டன் பிள்ளை தானாகவே சிரைக்கக் கற்றுக் கொள்ளுகிறது. சாதி இப்போது இருக்கும் நிலையில் அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை” என்கிறார். அப்படிப்பட்ட பாரதியை எப்படிச் சாதி எதிர்ப்பாளர் எனக்காட்ட முடியும்?

“பாரதியைப் பார்ப்பான் என்றவொரு காரணத்திற்காக மட்டம் தட்டிய மூடர்கள்,எங்கே இனி தான் உடைப்பட்டுச் சாக நேருமோ, என அஞ்சி, ஒதுங்கிவிட்டனர்”35 எனத் து.மூர்த்தி கூறுவது விந்தையாக உள்ளது.

பாரதி பார்ப்பனக் குலத்தில் பிறந்ததால் மட்டும் நாம் அவ்வாறு கூறவில்லை. பாரதியின் அரசியல் நிலைப்பாடுகள் அனைத்திலும் தன் சாதிக்குச் சாதகமாகவே அவர் செயல்பட்டுள்ளார் என்பதால்தான் நாம் அவரைக் கண்டிக்க வேண்டியுள்ளது.

சுயமரியாதை இயக்கத்தை ஆய்வு செய்த பேராசிரியர் மங்கள முருகேசன் ஆகாவென்று எழுந்ததுபார் யுகப்புரட்சி என்ற பாரதியின் பாடல்களால் பெரியார் ஈர்க்கப்பட்டு அதனால் அவர் ரசியா சென்றார்36 என்று கூறுவது பொருத்தமாக இல்லை. குடியரசு ஏட்டின் தொடக்க காலத்தில் பாரதியின் பாட்டை மேல் அட்டையில் வெளியிட்டு வந்த பெரியார் 8.11.1925 முதல் குடியரசு ஏடு முதல் மூன்றே மாதத்தில் பாரதியின் பாடல் வரிகளைப் பெரியார் நீக்கிவிட்டார். அதன் பிறகு பாரதியைப் பற்றி எங்கும் அவர் எழுதவில்லை. அப்படியிருக்க 1931 ஆம் ஆண்டில், பாரதியின் பாடல்களால் அவர் ஈர்க்கப்பட்டு, இரசியா சென்றார் என்பதை எப்படி ஏற்க இயலும்? பெரியாரே 1929 முதல் பொதுவுடைமைக் கருத்துகளைக் குடி அரசு ஏட்டில் எழுதி வந்தார், அதனால் சோவியத்தை நேரில் பார்க்க விரும்பி அவர் சென்றார் என்பதே உண்மை.

திராவிடர் இயக்கம் பற்றி வரலாற்று ஆய்வு நூலை எழுதியுள்ள் முரசொலிமாறன் அவர்கள் பாரதியார் 1915 இல் அன்னிபெசண்டின் ‘நியூஇந்தியா’ பத்திரிக்கையில் எழுதிய ஒரு கடிதத்தைக் கொண்டு அவரை பார்ப்பன எதிர்ப்பாளர் என்று எழுதியுள்ளார். 37 தென்னிந்தியர் நல உரிமை சங்கம் தொன்றிய பிறகு அன்னி பெசண்டின் ஹோம்ரூல் இயக்கம் தென்னாட்டுப் பார்ப்பனர்களூக்கு அடைக்கல இடமாக இருந்தது என எழுதி உள்ளார். இந்த அடைக்கலத்தில் பாரதியும் ஒருவர் என்பதை ஏனோ எழுதாமல் விட்டு விட்டார்! குறைந்த பட்சம் திராவிட இயக்க வரலார்ரு நூலில் பாரதியைப் பார்ப்பன எதிர்ப்பாளர் என்பதைச்சுட்டிக் காட்டாமலாவது இருந்திருக்கலாம்.

பாரதியைப் பற்றி, நான் அறிந்தவரையில், இன்றுவரை ஏறக்குறைய 525 நூல்கள் வெளீவந்துள்ளன. இதில் 500க்கும் மேற்பட்ட நூல்கள் பாரதியை வானாளாவப் புகழ்ந்து கூறுபவையாக உள்ளன. இவை, பெரும்பாலும் பாரதி ஏகாதிபத்திய எதிர்ப்பு வீரர், பெண் விடுதலை வீரர், சாதிமறுப்பு வீரர், தமிழ் இனத்திற்காகப் பாடுபட்டவர் என்ற கோணத்திலேயே எழுதப்பட்டுள்ளன.

பாரதி 1906 முதல் 1910 வரையிலேதான் அவர் பெண் விடுதலையாளராக இருந்தார்.

அவர் ஆங்கிலத்தை மிகக் கடுமையாக வெறுத்தார்.அதற்குக் காரணம் பார்ப்பனக் கலாசாரத்தை ஆங்கிலம் அழித்து விட்டது என்பதால்தான்.இதனால் தான் அவர் தமிழில் எழுதினார் தமிழின் மீதூ அவருக்கு உண்மையான பற்று இல்லை என்பதை அவருடைய எழுத்துகளில் காணலாம.

பாரதியார் வள்ளலாரைப் பற்றி ஒரு வரி கூட எழுதவில்லை. ஆனால் இராஜாராம் மோகன்ராயைப் பற்றி எழுதி உள்ளார். வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி எழுதவில்லை. ஆனால் ஜான்சிராணி லட்சுமிபாயைப் பற்றி எழுதியுள்ளார்; தமிழுக்கு ஆக்கம் சேர்த்த கால்டுவெல்லைப் பற்றியோ, ஜி.யூ.போப்பைப் பற்றியோ, மனொன்மணீயம் சுந்தரனாரைப் பற்றியோ பாரதியார் எழுதவில்லை, ஆனால் ஆரியமொழி உயர்ந்த மொழி என்று கூறிய மாக்ஸ்முல்லரைப் பற்றி எழுதயுள்ளார்; ஆனால் வேத ரிஷிகளின் பாடலுக்கு உரை எழுதி உள்ளார்.

ஜி.யூ.போப் திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கில மொழியாக்கம் செய்து உலகத்தின் பல மூலைகளில் தமிழின் பெருமையைச் சேர்த்தார். ஆனால் பாரதியாரின் ஆங்கில மொழி பெயர்ப்பு Agni and other poems . பாரதி ஆரிய வேதங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகம் முழுவதும் பரவச் செய்தார். பாரதியார் தமிழ் இலக்கியங்களைப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறீயுள்ளார். (பார்க்க ; சுத்தானந்த பாரதியின் கவிக்குயில் பாரதியார், பக். 73,74) எல்லாம் புதிது புதிதாகச் செய்வோம் எனக் கூறிய பாரதியார் 1914 முதல் அரவிந்தரின் ஆரியா பத்திரிக்கையில் ஆரியர்களின் வேதங்களின் பெருமைகளைப் பற்றியே தொடராக எழுதி வந்துள்ளார். ஆரியம் கலவாத தனித் தன்மையுடைய தமிழ் ஜாதி; அது ஆரிய ஜாதி என்ற குடும்பத்திலே தலைக் குழந்தை என்றெழுது” என்றுதான் எழுதியுள்ளார். ( இனம் என்பதைக் குறிக்க பாரதியார் ஜாதி என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். பார்க்க: பாரதியின் கடிதங்கள், ப.158, வானாதி பதிப்பகம்).

பாரதியார் ஆரியச் சார்பானவர் என்பதைப் பாவலரேறு பெருஞ்சித்தரனார் அவர்கள் ‘ஆரியப் பார்ப்பனர்களின் அளவிறந்த கொட்டங்கள்’ என்ற தமது நூலில் சுட்டிக் காட்டியுள்ளார். அன்றில் ஆசிரியர் சி.வெற்றிவேந்தன் அவர்கள் தமது ‘பாரதியின் மறுபக்கம்’ என்ற நூலில் பாரதியின் பாடல்களில் உள்ள ஆரியச் சார்பைச் சுட்டிக் காட்டியுள்ளார். தோழர் வெற்றிமணிஅவர்கள் ‘பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே’ என்ற நூலில் பாரதியின் ஆரியச் சார்பைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

இவர்கள் மூவருமே பாரதியின் கவிதையில் உள்ள ஆரியச் சார்புகளை மட்டுமே சுட்டிக் காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான நூலாசிரியர்கள் பாரதியின் கவிதைகளை மட்டுமே படித்துவிட்டு பாரதியைப் பெரிய புரட்சியாளராகப் படம் பிடித்துக் காட்டுகின்றனர்.

கு.வெ.கி. ஆசான், ‘பாரதியார், பாரதிதாசன், பெரியார்’ என்ற நூலில் பாரதியின் ஆரியச் சார்பினைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாரதியின் தமிழ் உணர்வு என்பது ஆங்கில - கிறித்துவ கலாசாரத்திற்கு எதிரான இந்து மதக்காப்பு என்ற தன்மையில் ஆனது . பாரதி கூறுவார் நல்ல தமிழில் படிப்பவன் நல்ல இந்துவாக இருப்பான்;

ஆங்கிலக் கல்வி படிப்பவன். இந்து மதப்பற்று இல்லாதவனாக ஆகிவிடுவான் என்பார். ஆனால் பாரதிதாசனுடைய தமிழ்ப்பற்று என்பது இன ரீதியிலானது. நல்ல தமிழ் படிப்பவன் நல்ல தமிழனாக இருப்பான் என்பார்.

பாரதியின் தமிழ் உணர்வு மதரீதியிலானது. பாரதிதாசனின் தமிழ் உணர்வு இனரீதியிலானது. பாரதி தொடக்கத்தில் முற்போக்காக இருந்து பிறகு மெல்ல மெல்ல இந்துத்துவ உணர்வில் மூழ்கி அதரித்துக் கொண்டே சென்றார். ஆனால் பாரதிதாசன் தொடக்கத்தில் ஆத்திகராக இருந்து சுயமரியாதைக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு முழு நாத்திகராக மாறினார்.

ஆக பாரதியின் பரிணாம வளர்ச்சி என்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை நோக்கியே தமிழரை அழைத்துச் செல்கிறது. பாரதிதாசனின் பரிணாம வளர்ச்சி என்பது தமிழனின் விடுதலையை நோக்கித் தமிழரை அழைத்துச் செல்கிறது.

பாரதியின் முழுப் படைப்புகளாகிய கவிதை,கட்டுரை,கதை முதலியவற்றை ஒருசேரப் படித்து அவரைப் படம் பிடித்துக் காட்ட வேண்டும்.இதுவே உண்மையான ஆய்வு.

அடிக்குறிப்பு

1. பாரதி புகழ் பரப்பிய முன்னோடிகள்,பெ.சு.மணி, மணிவாசகர், பதிப்பகம்,ப.165
2. பாரதியைப் பற்றி ஜீவா,நி.செ.பு,நி.ப.44
3. மேற்படி நூல், ப.130
4. பாரதிவழி, ஜீவா,நி.செ.பு,நி.,ப.36
5. மேற்படி நூல், ப.70
6. ஜீவா என்றொரு மானுடன்,பொன்னீலன்,நி.செ.பு,நி.,1992 ப.168
7. ஜனசக்தி பொன்விழா மல்ர்,ஜீவா,1987,ப.234
8. ஜீவா என்றொரு மானுடன்,பொன்னீலன்,நி.செ.பு,நி.,1992 ப169
9. தீக்கதிர் பாரதி நூற்றண்டு சிறப்பு மலர் .பி.இராமமூர்த்தி, ப.11
10. தீக்கதிர் பாரதி நூற்றண்டு சிறப்பு மலர் ,எம்.ஆர்.வெங்கட்ராமன்,ப.13,14
11. பாரதியும் அரசியலும்,கோ.கேசவன்,ப.187
12. வ.உ.சிதம்பரம் பிள்ளை,என்.சம்பத்-பெ.சு.மணி,பப்ளிகேஷன் டிவிஷன்,தில்லி,ப.208
13. விடுதலை நாளேடு, 2.5.1968.ப.2
14. தீக்கதிர் பாரதி நூற்றண்டு சிறப்பு மலர் .பி.ஆர்.பரசுவரன், ப39,40,149
15. பாஞ்சாலி சபதம் ஒரு சமுக வரலாற்றுப் பார்வை,பேரா.டாக்டர் ந.பிச்சமுத்து,
16. பாரதியும் ஆங்கிலமும்,ம.பொ.சி.,இன்பநிலையம்,சென்னை-1961,ப.44
17. பல்கலை நோக்கில் பாரதி,பூரம் பப்ளீகேஷன்,சென்னை.ப.7
18. பாரதி ஒரு வாழ்நெறி, தி.ச.ராஜீ,பூம்புகார் பிரசுரம்,சென்னை,1983,ப.86
19. இதழாளர் பாரதி,முனைவர் ப.இறையரசன்,நி.செ.பு.நி.,1995,ப.252
20. மேற்படி நூல், ப253
21.தமிழகம் தந்த மகாகவி, உயர்நீதிபதி மு.மு.இஸ்மாயில்,புவனேசு
பதிப்பகம்,1989,ப.228.
22. பாரதியின் குயில் பாட்டு விளக்கம், டாக்டர் மின்னூர் சீனிவாசன்,
சென்னை, 1985, ப.52.
23. பாரதியும் அரசியலும், கோ.கேசவன், அலைகள் வெளியீட்டகம், சென்னை, 1991, ப.
24. பாரதியார் கட்டுரைகள், ப.335
25. சோசலிசக் கருத்துளும் பாரதியாரும், கோ.கேசவன்,
ரசனா புக் அவுஸ், சென்னை, 1977, ப. 125
26. பாரதியும் அரசியலும்,கோ.கேசவன், ப.182
27. மேற்படி நூல், ப.
28. பாரதியின் தத்துவ இயல் கோட்படுகள், து.மூர்த்தி, புலமை,
டிசம்பர் 1994, ப. 39.
29. மேற்படி நூல், ப. 41
30. மேற்படி நூல், ப. 39
31. சுயமரியாதை இயக்கம், ந.மங்கள்மருகேசன், ப.320
32.திராவிட இயக்கம் வரலாறு தொகுதி 1, முரசொலி மாறன், ப.151, 152
*******
(வாலாசா வல்லவன் எழுதிய ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார்’ நூலின் ஒன்பதாம் அத்தியாயம்)

வெளியீடு: தமிழ்க் குடியரசு பதிப்பகம்
14/12, மியான் முதல் தெரு,
சேப்பாக்கம், சென்னை - 600 005
பேசி: 9444321902
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com