Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteratureArticle
கட்டுரை

உத்தபுரத்தில் உண்மை அறியும் குழு

மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்தில் (பேரையூர் தாலுகா) 18 ஆண்டு காலமாக இருந்த தீண்டாமைச் சுவர் மே 6-ந் தேதியே இடிக்கப்பட்டபோதும் தொடர்ந்து அங்கு பிரச்சினை இருந்து விடுவதையும், கடந்த அக்.1-ந்தேதி ‘பிள்ளைமார்’ மற்றும் ‘குடும்பமார்’(தலித்கள்) ஆகிய இருதரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை ஒட்டி போலீஸ் தாக்குதல் நடைபெற்றுள்ளது என்பதையும் அறிந்த பல்வேறு மனித உரிமை அமைப்புகளையும் சேர்ந்த நாங்கள் உண்மையை அறிந்து வெளிப்படுத்துவது என முடிவு செய்தோம்.

Uthapuram Wall மதுரை வழக்குரைஞர் ரஜினி அவர்கள் தலைமையில் பூர்வாங்க ஆய்வு செய்வதற்கென எம் குழுவின் ஒரு பகுதி சென்ற அக்.14 அன்று உத்தபுரம் சென்றது. 144 தடை உத்தரவைக் காட்டி நாங்கள் உள்ளே நுழைய விடாமல் தடுக்கப்பட்டோம். தடை உத்தரவு திருவிழாவிற்குத்தானே என நாங்கள் கேட்டபோதும் காவல்துறை அனுமதி அளிக்க மறுத்தது. எனவே பெண்கள் ஐக்கியப் பேரவை அமைப்பைச் சேர்ந்த பேச்சியம்மாள் உத்தபுரம் செல்ல அனுமதி கோரி உயர்நீதி மன்றத்தை அணுகினார். அக்.20 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் நீதியரசர் ராஜசூர்யா அவர்கள் அடுத்த ஒரு வாரத்திற்குள் ஏழு பேர் கொண்ட எம் குழு அங்கு சென்றுவர தடை செய்யக்கூடாது என உத்தரவிட்டார்.

காமரா, வீடியோ முதலிய கருவிகளைப் பயன்படுத்துவதையும் தடுக்கக்கூடாது எனவும் ஆணையிட்டார். இதன்படி சென்ற அக்.25 அன்று மதியம் 12 மணி சுமாருக்கு எம் குழு உத்தபுரத்தை அடைந்தது. குழுவிருந்தோர்: அ.மார்க்ஸ், ரஜினி, கு.பழனிச்சாமி (மனித உரிமை மக்கள் கழகம் - பி.யூ.எச்.ஆர்), வெரோனிகா, பேச்சியம்மாள் (பெண்கள் ஐக்கியப் பேரவை), கோ.சுகுமாரன் (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி), ம.இளங்கோ (பெரியார் திராவிடர் கழகம், புதுச்சேரி), கே.கேசவன் (குடியுரிமை பாதுகாப்பு நடுவம்).

நாங்கள் அங்கு சென்றபோது மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மோகன், மதுரை கிழக்குத் தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட அமைப்பாளர் கே.சுவாமிநாதன். ஜனநாயக மாதர் சங்க புற நகர் மாவட்டச் செயலாளர் பொன்னுத்தாய், எழுத்தாளர் சு.வெங்கடேசன் மற்றும் பலர் அடங்கிய குழு பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பணியை செய்து கொண்டிருந்தனர்.

தொடர்ந்து இப்பிரச்சினையைக் கையிலெடுத்துப் போராடிக் கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் இத்தலைவர்களிடம் விரிவாகப் பேசிச் செய்திகளைத் தொகுத்து கொண்டோம். உத்தபுரத்தில் பிறந்து தற்போது தேனி பகுதியில் சமூகத் தொண்டாற்றும் வேலுமணி மற்றும் தலித் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களான மு.பஞ்சவர்ணம்(25), தர்மராஜ்(40), நாகம்மாள்(45), நா.பஞ்சவர்ணம்(35), பார்வதி(25), பவுன்தாயி(40), வெள்ளையம்மாள்(60) எனப் பலரையும் சந்தித்து அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துக் கொண்டோம், சேதமடைந்த வீடுகளையும், பொருட்களையும் படம் எடுத்துக் கொண்டோம்.

பின்னர் பிள்ளைமார் பகுதிக்குச் சென்று பாண்டியன்(32), ராஜா(28), பானுமதி(38) ஆகியோரிடம் பேசினோம். பாண்டியனும் ராஜாவும் விரிவாகத் தம் கோரிக்கைகளை முன்வைத்தனர். உத்தபுரத்தி ல் ‘டூட்டி’யில் இருந்த உசிலம்பட்டி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) சி.பாலசுப்பிரமணியத்திடம் சில தகவல்களைத் தெளிவுபடுத்திக் கொண்டோம். ஐ.ஜி. சஞ்சீவ் குமார் அவர்கள் தான் வெளியூரிலிருப்பதாகவும் கண்காணிப்பாளர் மனோகரனிடம் பேசுமாறும் கூறினார். தொலைபேசியில் கண்காணிப்பாளர் அவர்களையும் தொடர்பு கொண்டு பேசினோம்.

நடந்தவை:

மே 6ந்தேதியே உத்தபுரத்தில் கட்டப்பட்டிருந்த தீண்டாமைச் சுவரில் ஒரு சிறு பகுதி இடிக்கப்பட்டபோதும், அங்கே சில காவலர்கள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டபோதும், இடிக்கப்பட்ட பகுதி வழியே தலித் மக்கள் சுதந்திரமாக சென்று வர இயலவில்லை. குறிப்பாக வாகனங்களை அவ்வழியே செலுத்த இயலவில்லை. வாகனங்கள் வரும்போது வழியில் வேண்டுமென்றே அமர்ந்து பாத்திரங்களைக் கழுவுவது, துணி துவைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு தலித் மக்களின் வாகனப் போக்குவரத்தை பிள்ளைமார்கள் தடுத்துள்ளனர். இதுகுறித்து ஐந்து முறை புகார்கள் செய்யப்பட்டபோதும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகமும் பலத்த விளம்பரங்களுடன் மே 6ல் இடிக்கப்பட்ட சுவரின் வழியே சுமுகமான போக்குவரத்து ஏற்படுவதற்கு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.

எந்த நோக்கத்திற்காக சுவர் இடிக்கப்பட்டதோ அது முழுமையாக நிறைவேறவில்லை. நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத மற்ற பிரச்சினைகளை தீர்க்கும் முயற்சியிலும் மாவட்ட நிர்வாகம் இறங்கவில்லை. எடுத்துக்காட்டாக பிள்ளைமார் பகுதியிலிருந்து சாக்கடை ஒன்று வழிந்தோடி தலித் பகுதியில் தேங்குகிறது. குடிநீரையும் அது மாசுபடுத்துகிறது. இதை தடுத்து நிறுத்தி கழிவுநீரை வேறு வழியில் செலுத்தும் முயற்சியையும் அரசு செய்யவில்லை.

காவல்துறையின் ‘அவுட்போஸ்ட்’ பிள்ளைமார் சங்க உறவின் முறை கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பிரச்சினை உள்ள ஒரு ஊரில் ஆதிக்கசாதியைச் சேர்ந்த உறவின்முறை கட்டிடத்தில் ‘அவுட்போஸ்ட்’ திறப்பது என காவல்துறை எடுத்த முடிவை எங்களால் விளங்கிக் கொள்ளவே இயலவில்லை. தலித் மக்கள் தங்கள் குறைகளை அங்கு எப்படிச் சென்று தயக்கமின்றி பதிவு செய்ய முடியும்?

முத்தாலம்மன் கோவில் பிரச்சினை கடந்த பல ஆண்டுகளாக அங்கு தொடர்ந்து வருகின்ற ஒன்று. பொது இடத்தில் அக்கோவிலும், அரச மரமும் அமைந்துள்ள போதும் அது தமக்குச் சொந்தமென பிள்ளைமார்கள் கூறுகின்றனர். அந்த நிலத்திற்கு பட்டாவும் கோருகின்றனர். பிள்ளைமார் பகுதியையும், தலித் பகுதியையும் பிரிக்கிற சுவர் அமைக்கும் முடிவு எடுக்கப்பட்ட 1989 ஒப்பந்தம் ரொம்பவும் பக்கச்சார்பானது. தலித்களுக்கு எதிரானது. அரச மரத்தைச் சுற்றி திருவிழாக் காலங்களில் தலித் மக்கள் பாரம்பரியமாக செய்து வந்த முளைப்பாறி எடுக்கும் உரிமையும் இந்த ஒப்பந்தத்தில் மறுக்கப்பட்டுள்ளது. அரச மரத்தைச் சுற்றி பிள்ளைமார்கள் சுவர் ஒன்றையும் அமைத்துள்ளனர்.

இந்நிலையில் சென்ற அக்.1 அன்று திருவிழாவைக் காரணம் காட்டி அரச மரத்தைச் சுற்றியிருந்த சுவருக்கு பிள்ளைமார்கள் வெள்ளை அடிக்க முனைந்தபோது, அதை தலித் மக்கள் தடுத்துள்ளனர். இருபக்கமும் மக்கள் திரண்டுள்ளனர். நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதாகவும், உறுதியற்ற தகவல்கள் கூறுகின்றன. இதையொட்டி அன்று டூட்டியில் இருந்த உசிலம்பட்டி காவல்துறை துணை ஆய்வாளர் ஜெகதா என்பவர் தலித் பகுதியில் தாக்குதலைத் தொடங்கியுள்ளார். ‘வாக்கி டாக்கி ’ மூலம் தகவல் தெரிவித்து வெளியிலிருந்து காவலர்கள் வருவிக்கப்பட்டு சுமார் 12 மணி நேரம் திரும்பத் திரும்ப தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜெகதாவும், எஸ்.பி.சி.ஐ.டி பிரிவை சேர்ந்த பூவேந்திரனும் (முன்னாள் அமைச்சர் துரைராஜின் சகோதரர்) தாக்குதல் அனைத்திற்கும் காரணமாக இருந்துள்ளனர். ஆண்கள் அனைவரும் தப்பி ஓட, அங்கிருந்த தலித் பெண்களே எல்லாத் தாக்குதலுக்கும் இலக்காகியுள்ளனர். வீடுகளில் புகுந்து பொருட்கள் நாசப்படுத்தப்பட்டள்ளன. கதவுகள், கண்ணாடி சன்னல்கள், ஃபேன் முதலான சாமான்கள் உடைக்கப்பட்டுள்ளன.

‘‘வாடி அவுசாரி, உத்தபுரத்தை உழுவ போறண்டி, ஓடுங்கடி’’ என்று சொல்லி துணை ஆய்வாளர் ஜெகதா தம்மை அடித்ததாக பெண்கள் பலரும் வாக்குமூலம் அளித்தனர். தன் மீது தண்ணீரை ஊற்றி ஊற்றி அடித்ததாக இன்னொரு பெண் கூறினார். மூன்று நாட்களே ஆன கைக்குழந்தையுடன் கூடிய ஒரு பெண் உட்பட பலரும் காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். மோகன் எம்.பி. தலையிட்டு சிலரை விடுதலை செய்துள்ளார். மூன்று வெள்ளைத்தாளில் ரேகை பதித்துக்கொண்டே தாங்கள் விடுவிக்கப்பட்டதாகப் பெண்கள் கூறினர்.

பிள்ளைமார் பகுதியில் எந்த தாக்குதலையும் போலீஸ் நடத்தவில்லை. காவல்துறையை பிள்ளைமார்களை வெகுவாகப் புகழ்ந்தனர். தமது வீடுகளில் இரண்டும், சிறிய முருகன் கோவில் ஒன்றின் கதவும் தலித்களால் உடைக்கப்பட்டதாகக் கூறினர். தலித் தரப்பிலிருந்து சொற்ப அளவில் சிறு தாக்குதல்கள் நடந்திருக்கலாம். ஆனால் தலித் மக்கள் மத்தியில் போலீஸ் மேற்கொண்ட பெருந்தாக்குதலுடன் ஒப்பிடும்போது இது மிகவும் சொற்பமானது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவில் தங்களுக்கு மட்டுமே சொந்தமெனவும், சுவர் அமைத்துக் கொள்வது தமது உரிமையெனவும், தங்கள் சொந்த நிலத்தில் தாங்கள் சுவர் எழுப்பியுள்ளோமெனவும், 1989 ஒப்பந்தத்தின்படி அரச மரத்திலோ, கோவிலிலோ தலித்களுக்கு உரிமையில்லை எனவும், கட்டப்படவிருக்கும் பஸ் ஷெல்டரை ஊர் பொதுவான அரச மரத்தடியில் கட்டாமல் தங்கள் பகுதியிலுள்ள பஞ்சாயத்துக் கட்டிடத்தின் அருகில் கட்ட வேண்டுமெனவும் பிள்ளைமார்கள் வலியுறுத்தினர். எல்லாவற்றிற்கும் இந்த கம்யூனிஸ்ட்கள்தான் காரணம் எனவும் குற்றம் சாட்டினர்.

உத்தபுரத்தில் ‘டூட்டி’யில் இருந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் சி.பாலசுப்பிரமணியத்திடம் நாங்கள் பேசியபோது தலித் பகுதி மீதான தாக்குதலுக்கு போலீஸ் காரணமல்ல என்றார். சரி யார் காரணம் என்று கேட்டதற்கு, தெரியாது என்றார். தலித் பகுதியிலிருந்துதான் வெடிகுண்டு வீசப்பட்டது என்றார். ஆனால் வெடிகுண்டு வீசப்பட்டதற்காக தடயம் ஏதும் எங்களுக்கு கிடைக்கவில்லை. அன்று மாலை மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் மனோகரனை தொடர்பு கொண்டு பேசியபோது போலீஸ் அவுட்போஸ்டை மாற்ற இருப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

எமது பார்வைகளும், பரிந்துரைகளும்:

1. அக்.1, 2 தேதிகளில் தலித் மக்கள் மீது காவல்துறை மேற்கொண்ட கொடுந்தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. முன்னதாக அளிக்கப்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை மிகவும் வன்மத்துடன் தலித்களுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளது. காவல்துறையின் தலித் விரோதப் போக்கு வெளிப்படையாக உள்ளது.

2. பிள்ளைமார்களில் 24 பேர்கள் மீது பெயர் குறிப்பிட்டும், பெயர் குறிப்பிடாமல் மொத்தம் 150 பேர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யார் மீதும் தீண்டாமை தொடர்பான வன்கொடுமை சட்ட விதிகளைப் பயன்படுத்தவில்லை. மிகச் சாதாரண பிரிவுகளே பயன்படுத்தப்பட்டுள்ளன.

3. தலித்களில் 19 பேர்கள் மீது பெயர் குறிப்பிட்டும், பெயர் குறிப்பிடப்படாமல் மொத்தம் 240 பேர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெடிமருந்து பொருள் சட்டம் உட்பட, கடும் பிரிவின் கீழ் இவ்வழக்குகள் போடப்பட்டுள்ளன.

4. மாவட்ட நிர்வாகம் எள்ளளவும் பொறுப்பற்று செயல்பட்டுள்ளது. சுவர் இடிக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்ற எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. அக்.1,2 தாக்குதலுக்கு பின்னும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல், மருத்துவ உதவி அளித்தல், மின் தொடர்பை சரி செய்தல் என எந்த முயற்சியும் 13-ந் தேதி வரை மேற்கொள்ளப்படவில்லை. சாக்கடைப் பிரச்சினை, பஸ் ஷெல்டர் கட்டுதல் உட்பட எதற்கும் தீர்வு ஏற்படுத்த முனையவில்லை.

5. தலித் விரோதப் போக்குடன் செயல்பட்ட இரு காவல்துறை அதிகாரிகள் மீதும் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

6. அக்.1,2 சம்பவங்கள் தொடர்பாக நீதி விசாரணை வேண்டும்.

7. தற்போது உசிலம்பட்டி பகுதியிலுள்ள காவல்துறையினர் முற்றிலுமாக மாற்றப்பட வேண்டும். 50 விழுக்காட்டினர் தலித்களாக அமைய வேண்டும். உத்தபுரத்தில் ‘டூட்டி’யில் இருப்பவர்களிலும் பாதிப் பேர் தலித்களாக இருக்க வேண்டும்.

8. போலீஸ் ‘அவுட்போஸ்ட்’ உடனடியாக பொது இடத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும்.

9. சாக்கடைக் கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

10. சுவரை முற்றிலுமாகத் தகர்த்து போக்குவரத்துக்கு எவ்வித தடையுமில்லாமல் செய்ய வேண்டும். இது தொடர்பான புகார்களை காவல்துறை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

11. அரச மரத்தைச் சுற்றியுள்ள சுவர் நீக்கப்பட்டு அங்கே பஸ் ஷெல்டர் கட்டப்பட வேண்டும்.

12. முத்தாலம்மன் கோவில் உள்ள இடத்திற்கு பிள்ளைமார்களுக்கு பட்டா அளிக்கக்கூடாது. தவிரவும் பிரச்சினையை தவிர்ப்பதற்காக முத்தாலம்மன் கோவிலை அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.

13. இப்பிரச்சினையை உலகறியச் செய்து தொடர்ந்து நீதிக்காகப் போராடி வரும் மார்க்சிஸ்ட் கட்சியை இக்குழு பாராட்டுகிறது.

(சிவா அப்பார்ட்மெண்ட்ஸ், 4/787, அன்னை வீதி, அண்ணாநகர்,
மதுரை-20. செல்: 94441 20582, 94432 94892, 90471 44854)

01.11.2008


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP