Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

ஈழத் தமிழர்களுக்கு சோப்பு சீப்பு கண்ணாடி வழங்கும் கருணாநிதியும், ஈழத் தமிழர் காதில் பூசுற்றும் ராமதாசும்
தொம்பன்

ஈழத்தில் இனவெறிப் படுகொலை நின்ற பாடில்லை. நாளாந்தம் நூற்றுக்கணக்கான குழந்தைகளும் பெண்களும் கொல்லப்படுகிறார்கள். இந்தியா சார்க் மாநாடுகளின் விதிகளுக்கு உட்பட்டு இலங்கைக்கு தொழில் நுட்ப உதவிகளை வழங்கி ஈழத் தமிழினத்தைக் கொன்று குவித்து வருகிறது. என்ன விலை கொடுத்தேனும் ஈழத் தமிழர்களைக் காப்பேன் என்று கரடி விட்ட கருணாநிதி வழக்கம் போல தன் துரோக நாடகத்தை அரங்கேற்றி இப்போது இலங்கை விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பட்டிற்கே வந்து நிற்கிறார். இலங்கையில் போரை இந்தியா நடத்தவில்லை என்றும் இலங்கைப் பிரச்சனையில் மத்திய அரசின் கொள்கையும் மாநில அரசின் கொள்கையும் ஒன்றுதான் என்றும் சொன்னதன் மூலம் இது வரை தான் கட்டி வைத்திருந்த தமிழ், தமிழர், திராவிடர் என்னும் முகமூடி பலூனை நீண்ட காலத்திற்குப் பிறகு கருணாநிதியே உடைத்திருக்கிறார். இது ஒரு வகையில் நல்லதுதான். இனிமேலாவது நாம் விழிப்புணர்வு பெறவும் புதிய அரசியல் தலைமைக்காக முயற்சிக்கவும் ஒரு தொடக்கமாக அமையும். கருணாநிதி மீதான இந்த அயற்சியிலிருந்து மீள நாம் புதிய தலைமைகளைத் தேடும் சூழலுக்கு (தமிழர்கள்) தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதெல்லாம் நல்ல மாற்றம் தான். ஆனால் கருணாநிதி இங்கே வெளிப்படையாக அம்பலமான அளவுக்கு இதே தமிழின முகமூடிகளைச் சுமந்திருக்கும் ஏனைய தமிழ் லவடாக்கள் அம்பலமாகவில்லையோ என்று தோன்றுகிறது.

தியாகி முத்துக்குமாரின் எழுச்சிகரமான இறுதி நிகழ்வின் போது “வரும் தேர்தலில் காங்கிரஸை வீழ்த்துவது” என்பது பொது வேலைத் திட்டமாக அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது. இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை கூட்டங்களிலேயே வெளிப்படையாக காங்கிரஸை கடுமையாக விமர்சித்தார்கள் பலரும். காங்கிரஸ், திமுக கூட்டணியில் இருக்கும் ராமதாஸ், திருமா இருவரும் இல்லாத காவடி எல்லாம் தூக்கினார்கள்.
Tirumavalavan
சிறுத்தைகளுக்கும் காங்கிரஸ்காரர்களுக்கும் மோதல் வெடித்தது. சத்தியமூர்த்தி பவன் தாக்கப்பட்ட வழக்கில் விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர்கள் பலரும் கைது செய்யப்பட்டார்கள். இத்தாலிய வெள்ளைப் பெண்மணி சோனியாவின் உருவபொம்மையை ராஜீவின் கொடும்பாவியை கொளுத்தியதற்காக விடுதலைச் சிறுத்தைகளின் தொண்டர்கள் 23 பேருக்கு மேலானோரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலும் குண்டர் சட்டத்திலும் சிறையிலடைத்திருக்கிறது கருணாநிதி அரசு. (காங்கிரஸ்காரனை அறிக்கை விடச் சொல்லி அறிக்கை விட்ட பிறகு கைது செய்து விட்டு காங்கிரஸ்காரர்கள் சொல்கிறார்கள் ஆகவே செய்கிறேன் என்பதை எல்லா கைதுகளுக்குமே ஒரு காரணமாகப் பயன்படுத்தியிருக்கிறார் கருணாநிதி)

இந்தக் குத்தாட்டங்கள் காமெடிக் காட்சிகள் ஈழ மக்களை முன் வைத்து தமிழகத்தில் நடந்து கொண்டிருந்தபோது இந்த கோமாளிகளுக்கு புதிய அவலைக் கொடுத்தது தேர்தல் கமிஷன். அதுதான் தேர்தல் அறிவிப்பு. அவ்வளவுதான் ஈழ ஜுரம் முடிவுக்கு வந்து “யார் மனசுல யாரு.. உங்க மனசுலே நானு” என்று கோமாளிக் கூட்டணி பேரத்தில் மூழ்கிவிட்டார்கள். திருமாவளவன் நிலை பரிதாபம்தான். “திமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோமா, இல்லையா என்பதை கருணாநிதிதான் சொல்ல வேண்டும்” என்று தொடர்ந்து கதறினார் திருமா. சந்திப்புகளுக்கான நேரங்களைக் கேட்டு அது கடைசி வரை திருமாவுக்குக் கிடைக்கவே இல்லை.

ஆனால் கருணாநிதி சொன்னார் “இப்போதான் காங்கிரஸோடு கூட்டணி பேசத் தொடங்கியிருக்கிறோம். உங்கள் ஆசை நிறைவேறலாம் நிறைவேறாமலும் போகலாம்” என்றார். அதாவது காங்கிரஸ்காரன் தயவு செய்தால் விடுதலைச் சிறுத்தைகளை கூட்டணியில் இணைப்பேன் அல்லது இடமில்லை என்பதைத்தான் கருணாநிதி தந்திரமாக பத்திரிகையாளர்கள் கேட்டது மாதிரி கேட்டு பதிலைச் சொன்னது மாதிரி சொன்னார் திருமாவிற்கு.

ஆனால் ராமதாஸ் கூட்டணிக்கு வருவாரா? வரமாட்டாரா? அறிவாலயமா? போயஸ்கார்டனா? என்று பேரம் பேசித் திரிந்த போது, கூட்டணியில் திமுக, காங்கிரஸ் கட்சியைத் தவிர வேறு போணியாகாதோ என்று பயந்த கருணாநிதி உடனே “அவர் நீண்ட காலமாக எங்கள் அணியில் உள்ளார். ஏனென்றால் சமத்துவக் கொள்கை, ஜாதி ஒழிப்பு, பொதுவுடைமை கொள்கை இவற்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நாங்களும் ஒரே குறிக்கோள் கொண்டவர்கள். அது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர்கள்” என்றார் கருணாநிதி.

கருணாநிதியின் இந்த அறிக்கையால் குளிர்ந்து போன திருமா சொன்னது “அம்பேத்கார், பெரியார் ஆகிய மகத்தான தலைவர்களின் வழியில் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைநிமிர்வுக்காகவும், ஒட்டுமொத்த தமிழினத்தின் நலன்களுக்காகவும் போராடி வரும் எம்மை அரசியல் அரங்கில் அங்கீகரிக்கும் வகையில் முதல்வரின் அறிவிப்பு பேருவகையளிக்கிறது. சாதி ஒழிப்பு, சமத்துவம், பொதுவுடமை மற்றும் ஈழத் தமிழர் விடுதலை ஆகிய கொள்கைத்தளங்களில் தமிழினத்தின் நலன்களுக்கான களங்களில் திமுகவுடன் உடன்பட்டு ஒன்றுபட்டு விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்றார் திருமா.

அதாவது “ஈழத் தமிழர் விவகாரத்தில் திமுகவுடன் உடன்பட்டு ஒன்றுபட்டு” திருமாவளவன் குரல் கொடுப்பாராம். திருமாவின் உடன்பாட்டை கொள்கை உடன்பாடு என அவரது வார்த்தைகளில் இருந்து நாம் புரிந்து கொண்டால், ‘மத்திய அரசின் கொள்கையும் மாநில அரசின் கொள்கையும் ஈழத் தமிழர் விவகாரத்தில் ஒன்றுதான்’ என்று சொன்ன கருணாநிதியின் கொள்கையோடும் காங்கிரஸின் கொள்கையோடும் திருமா இணைந்து போவதை அவரது வார்த்தைகளில் இருந்தே நாம் அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும்.

நாங்கள் திமுகவோடுதான் கூட்டணியில் உள்ளோம் காங்கிரசோடு அல்ல என்று திருமா சொன்னாலும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிலேயே திருமாவளவன் நீடித்திருக்க வேண்டியதாயிற்று. அப்படி என்றால் . காங்கிரஸை வீழ்த்துவோம் என்கிற பொது வேலைத் திட்டம் பற்றிய திருமாவின் கருத்து என்ன? ஒரே மேடையில் தங்கபாலுவும், கருணாநிதியும், திருமாவும் தோன்றுவார்களா? துரோகத்தின் விளைநிலமாக மாறிப் போன கருணாநிதி இப்போது ஈழத் தமிழர்களுக்காக அனுப்பப் போவதாக சொல்லும் சட்டிப்பானை, சோப்பு, சீப்பு, கண்ணாடி நிவாரணத்தில் திருமாவும் தன்னை இணைத்துக் கொள்வாரோ என்னவோ?

வெறும் கையால் முழம் போடும் ராமதாஸ்

ஈழத்தமிழர்கள் மீதான இனவெறிப் போரை ஆயுதங்கள் கொடுத்து ஊக்குவிக்கும் மத்திய காங்கிரஸ் அரசில் தன் மகன் அன்புமணி உட்பட சிலருக்கு மந்திரிப் பதவிகள் வாங்கிக் கொடுத்து அதிகாரத்தைப் பகிர்ந்திருக்கும் ராமதாஸ் ஈழத் தமிழர் தொடர்பாக பேசிய பேச்சுக்களை வரிசையாகப் பார்த்தாலே போதும். ராமதாஸுக்குள் எத்தனை கருணாநிதிகள் ஒளிந்திருக்கிறார்கள் என்பது தெரிந்து விடும்.

1. “தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல் கடிதங்களை தி.மு.க. தலைவர் அனுப்பினால் நாங்களும் அதனைப் பின்பற்றுவோம்” திமுகவின் ராஜிநாமா நாடகத்தில் ராமதாஸ் பங்கேற்றபோது கூறியது.

2. புதுடில்லியில் காங்கிரஸ் கூட்டாளிகளை சந்தித்த பிறகு, ராமதாஸ் நிருபர்களை சந்தித்தபோது, “இலங்கை தமிழர் பிரச்சினை தி.மு.க-பா.ம.க. இடையே மீண்டும் ஒற்றுமையைக் கொண்டு வருமா?" என்று ஒரு நிருபர் கேட்டார். ராமதாஸ், "இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மட்டுமே ஒற்றுமை" என்று திருவாய் மலர்ந்தார்.

3. “இலங்கை பிரச்சினை தொடர்பாக திருமாவளவன் மற்றும் அரசியல் கட்சிகளுடன் பேசி, அடுத்த கட்ட போராட்டம் தொடர்பாக நல்ல முடிவை எடுப்போம். அடுத்த கட்ட போராட்டம் என்பது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் நடக்க வேண்டும். இந்த போராட்டத்தால் தமிழகமே செயலிழக்க வேண்டும். பேருந்து, தொடருந்து எதுவும் ஓடக்கூடாது. மருந்து, பால் விநியோகம் மட்டுமே நடக்க வேண்டும். இந்த போராட்டம் உலகையே உலுக்க வேண்டும். இதைப் பார்த்துவிட்டு, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்.”

அதே மேடையில் “தமிழன் என்றால், மத்திய அரசு கிள்ளுக்கீரையாக நினைக்கிறது. விடுதலைச் சிறுத்தைகளும், பாட்டாளி மக்கள் கட்சியும் இல்லை என்றால், தமிழ்நாட்டில் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் சமாதி கட்டி இருப்பார்கள். இந்த கருத்துக்கு மறுப்பு யாராவது தெரிவித்தால், அவர்கள் சென்னையில் மேடை போட்டு சொல்லட்டும். அதில் நானும், திருமாவளவனும் பேசுவோம்.” இவையெல்லாம் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த திருமாவின் உண்ணாவிரதத்தை பழச்சாறு கொடுத்து முடித்து வைத்த ராமதாஸ் அதே உண்ணாவிரத மேடையில் பேசியது.

4 “இலங்கைப் பிரச்சினையில் அரசியல் தீர்வு காண எவ்வளவு முயன்றும் மத்திய அரசு எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. மனிதச்சங்கிலிப் போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம், கையெழுத்து இயக்கம், பிரதமருடன் சந்திப்பு என்று பல்வேறு கட்டப் போராட்டம் நடத்தியும் மத்திய அரசு தமிழக மக்களை மதிக்கவில்லை. இதன் காரணமாக நாங்கள் சுயமரியாதையை இழந்து இருக்கிறோம். வெட்கத்தால் தலைகுனிகிறோம். தமிழர்களையும். தமிழக அரசையும் ஓட்டு மொத்தமாக இந்திய அரசு அவமானப்படுத்தி விட்டது. காங்கிரசுடன் கூட்டணி இனியும் நீடிக்க வேண்டுமா என்று எல்லோரும் கேட்கிறார்கள். இது குறித்து நாங்கள் ஒரு மாதத்தில் பொதுக்குழுவை கூட்டி முடிவு செய்வோம். இலங்கையில் நடப்பது இன அழிப்புப் போர் என்பதை உலக நாடுகள் ஒப்புக் கொண்டு உள்ளன. ஆனால் இந்தியா மட்டும் தயக்கம் காட்டி வருகிறது.” சென்னையில் நடந்த விழா ஒன்றில் ராமதாஸ் பேசியது.

5. “இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறார்களாம். இதன் மூலம் தமிழகம் முழுவதும் விளக்கக் கூட்டம், பேரணி, மனித சங்கிலி, மாநாடு, அறப்போராட்டம் இதையெல்லாம் நடத்தி இலங்கை அரசுக்கும், மத்திய அரசுக்கும் எட்டுமாறு எழுச்சிப் பயணத்தை தொடங்கப் போகிறார்களாம். இதன் மூலம் உலகில் உள்ள ஒவ்வொரு தமிழரின் காதிலும் பூ சுற்றியுள்ளனர். இந்த முடிவின் மூலம் இலங்கைத் தமிழர்களைக் காப்பதில் திமுக 50 ஆண்டுகளுக்குப் பின்னோக்கி சென்றுள்ளது. போர்நிறுத்தம் இல்லாமல் எப்படி பேச்சுவார்த்தை தொடங்க முடியும், அமைதி ஏற்படும், அதிகார பகிர்வு ஏற்படும்? இது ராஜபக்ச கட்சியின் தீர்மானம் போல் உள்ளது. இவையெல்லாம் கருணாநிதிக்கே வெளிச்சம். மொத்தத்தில் அன்றாடம் செத்து மடியும் இலங்கைத் தமிழர்களை திமுகவும், ஆளும் திமுக அரசும் கைவிட்டுவிட்டன. தமிழர்கள் நிர்க்கதியாக விடப்பட்டுள்ளனர். ராஜபக்ச அரசுக்கும், திமுக அரசுக்கும் கொள்கை அளவில் எந்த வேறுபாடும் இல்லையென வெளிப்படையாகவே கருணாநிதி அறிவித்துள்ளார்.” பத்திரிகையாளர் சந்திப்பின் போது.

6. ‘‘இங்கு பேசுவோர் எந்த அரசியல் கட்சிகளையோ தலைவர்களையோ விமர்சிக்கக் கூடாது” இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை கலந்தாலோசனைக் கூட்டத்தில் ராமதாஸ் (இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பலர் திமுகவையும் காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்தபோது ராமதாஸ் கேட்டுக் கொண்டது)

Anbumani and Sonia புலிகள் போராளிகள் அவர்கள் தாயக விடுதலைக்காக போராடுகிறவர்கள். அவர்களை எவனாலும் வெல்ல முடியாது என்றெல்லாம் சொல்லி விட்டு, ‘புலிகளை யாரென்றே எங்களுக்குத் தெரியாது எந்தக் குழுவையும் நாங்கள் ஆதரிக்கவில்லை’ என்றெல்லாம் திருவாய் மலர்ந்ததை நாம் இங்கு எடுத்து கையாளவில்லை.

நண்பர்களே மேலே ராமதாஸ் சொன்னக் கருத்துக்களை இன்றைய அரசியல் சூழலோடு ஒப்பிட்டுப் பாருங்கள். அவர் சொன்னதில் ஏதாவது ஒன்றுகூட நடந்ததா? தமிழகத்தை ஸ்தம்பிக்கச் செய்வோம் என்றாரே அப்படி எதுவும் நடந்ததா? இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை பொது வேலை நிறுத்ததிற்கு அழைப்பு விடுத்தபோது அதை ஒடுக்க கருணாநிதி அரசு பல வழிகளைக் கையாண்டது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக இருந்த போது ராமதாஸ் சொன்னார். “யாரும் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்தாலே போதும் போராட்டம் வெற்றி பெறும்”. இப்படி போராடியதால்தான் ஈழத் தமிழருக்கு ஆதரவான எழுச்சி தமிழகத்தில் காயடிக்கப்பட்டது. இன்றைக்கு வரை ராமதாஸ் மகன் அன்புமணி ஈழத் தமிழர் விவகாரம் குறித்து எதிர்த்தோ ஆதரித்தோ ஏதாவது ஒரு கருத்தாவது சொல்லியிருப்பாரா? (இதைக் கேட்டால் அன்புமணியின் பசுமைத் தாயகம்தான் ஈழத் தமிழர் விவகாரத்தை ஐநா அமைப்புக்கு கொண்டு சென்றது என்று கூட செல்வார்கள். அன்புமணியாலோ, பசுமைத் தாயகம் என்கிற தன்னார்வக் குழுவாலோ அப்படி ஏதும் ஐநாவில் விவாதங்கள் நடந்ததாகத் தெரியவில்லை)

மேலே கண்ட ராமதாசின் இம்மாதிரியான வெற்றுச் சவடால்களோடுதான் இன்றைக்கு கூட்டணிக்காக ராமதாஸ் நடத்துகிற பேரங்களையும் நாம் பார்க்க வேண்டும். சோனியா காந்தியைப் பார்த்து போர் நிறுத்தம் கோரப் போவதாக டில்லிக்குச் சென்று, டில்லியிலேயே ராமதாஸ் இருந்தபோதுதான், வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இப்படி ராமதாஸின் மூக்கை அறுத்தார். “இலங்கைத் தமிழர்களின் நலன்களை விடுதலைப் புலிகள் சேதப்படுத்தி விட்டனர். இன்றைய நிலைக்கு அவர்கள்தான் காரணம். அவர்கள் உடனடியாக ஆயுதங்களைக் கைவிட்டு விட்டு, தாங்கள் பிடித்து வைத்துள்ள அப்பாவித் தமிழர்களை விடுவிக்க வேண்டும்.”

தமிழகத்தில் ஈழத் தமிழர் விவகாரம் காங்கிரஸ் கட்சிக்கு சவக்குழியாக மாறுகிறது என்பதை அறிந்த ப்ரணாப் தூத்துக்குடியில் பேசியபோது “புலிகளின் போர் நிறுத்தக் கோரிகையை இலங்கை அரசாங்கம் ஏற்று போர் நிறுத்தம் செய்ய வேண்டும்” என்று சொன்னபோது கருணாநிதி உச்சி குளிர்ந்து போனார். அதே அளவு குதூகாலத்தை ராமதாசும் அடைந்தார். “தற்போது இந்தியா கொஞ்சம், கொஞ்சம் தயக்கத்தை கைவிட்டு போர் நிறுத்தம் பற்றி பேசத் தொடங்கி உள்ளது. இது வரவேற்கத்தக்க மாற்றம் ஆகும். இந்த மாற்றம் பேச்சளவில் நின்றுவிடாமல் செயல் அளவில் இருக்க வேண்டும்” என்று கருத்து சொன்னார்.

இவர்கள் அனைவருமே இன்று ஈழத்தில் போர் நிறுத்தப்பட்டது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். கருணாநிதி காங்கிரஸ் கட்சியின் கொள்கையோடு ஈழ விவகாரத்தில் உடன்பட்டுப் போகிறார். ராமதாஸோ ஈழ விவகாரத்தில் கருணாநிதியைத் திட்டி காங்கிரஸ் குறித்து விமர்சனமே வைக்காமல் காலத்தைத் தள்ளி விட்டார். திமுக காலைவாரிவிட்டது உண்மைதான். ஏன் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ராமதாசுக்கு கிடையாதா? கடைசி வரை தன் மகனின் பதவியைக் காப்பாற்றிக் கொண்டதோடு, அதே காங்கிரஸோடு மீண்டும் கூட்டணி அமைத்திருப்பதில் இருந்து ராமதாஸுக்குள் பத்து கருணாநிதிகள் ஒழிந்திருப்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

‘பத்து நாட்கள் தமிழகத்தை ஸ்தம்பிக்கச் செய்வோம். தடாலடி தண்டால்கள் எடுப்போம். நாங்கள் வித்தியாசமான கட்சி’ என்றெல்லாம் பேசும் ராமதாஸ் ஈழத் தமிழகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. மாறாக எழுந்து விட்ட பெருநெருப்பில் குதித்து எல்லா நாடகங்களையும் அரங்கேற்றி பாதகம் ஏதும் இல்லாமல் காய் நகர்த்தி இலங்கைத் தமிழர் பேரவையையும் அதன் போராட்டங்களையும் காயடித்து, இயல்பாக எழுந்த ஈழத் தமிழர் ஆதரவு அலையை வீணடித்து அதை வெற்றுச் சடங்காக மாற்றி இன்றைக்கு எல்லாவற்றையும் கைவிட்டு விட்டு கூடுதல் சீட்டுக்காக அதிமுக, திமுகவிடம் பேரம் பேசிக் கொண்டிருக்கிற ராமதாஸ்தான் இந்தத் தலைமுறையில் நான் பார்த்த மிகப் பெரும் துரோகி. இந்தப் போராட்டங்கள் வீணடிக்கப்பட்டதற்கும் அவரே பொறுப்பாளி. இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையை ஏதோ பாட்டாளி மக்கள் கட்சி மேடையைப் போல் மாற்றி விட்டார்.

அடுத்த பிரதமராக வருவதற்கே தகுதியுள்ளவர் என்று புளகாங்கிதப்படும் அன்புமணி மட்டும் என்ன செய்தார்? சமீபத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி உறுப்பினர் மருந்துகளின் கையிருப்பு குறைந்திருப்பது தொடர்பாக எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த இலங்கை சுகாதார அமைச்சர் நிமல் சிறீபால டி சில்வா, “இலங்கையில் போரில் காயமடைந்த இராணுவ வீரர்களுக்கு அறுவைச் சிகிச்சைக்குப் பின் பயன்படுத்தப்படும் முக்கியமான மருந்தை இந்தியா அனுப்புகிறது. ‘பெதாடைன்' என்கிற அந்த மருந்தை இந்தியா அனுப்ப ஒப்புக் கொண்டுள்ளது. இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் இந்தியா மருந்து அனுப்பும்” என்றும் தெரிவித்தார்.

போரால் காயமடைந்த சிங்கள வீரர்களுக்கு மருந்துகள் அனுப்புவது ராமதாசின் மகன் அன்புமணிக்குத் தெரியாமல் நடந்திருக்கும் என்றால் இவ்விதமான ஒரு அமைச்சர் எதிர்காலத்தில் பிரதமராக வந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். இந்தக் கூத்துக்களைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து மருத்துவக் குழு ஒன்றை அனுப்புவதாக நாடகம் ஆடி இந்திய ராணுவ விமானத்தில் ராணுவ மருத்துவ அதிகாரிகளோடு ஒரு மருத்துவக் குழு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தக் குழு புல்மோட்டையில் ஒரு மருத்துவமனையை நிறுவி இலங்கை சுகாதார அமைச்சகத்தோடு சேர்ந்து மருத்துவ சேவை செய்கிறார்கள். சிகிச்சை போரால் காயமடையும் அனைவருக்கும் என்றால் ராணுவத்தினருக்கும் சேர்த்துதானே! (இதெல்லாம் யார் செய்தது? அன்புமணிக்கு இதெல்லாம் தெரியாதா?) ஆனால் மருத்துவக் குழு என்ற போர்வையில் இந்திய ராணுவத்தினரும் உளவு நிறுவனமும் இலங்கைக்குள் ஊடுறுவி இருப்பதாக ஜனதா விமுக்தி பெரமுனா பாராளுமன்றத்திலே வெளிப்படையாகவே குற்றம் சுமத்துகிறது.

இது வெறுமனே மருத்துவ குழு என்றால் ஏன் அதை இலங்கை தாதிமார்ச் சங்கம் எதிர்க்கிறது? இலங்கை மருத்துவர் சங்கம் ஏன் இந்தக் குழுவின் வருகையை எதிர்க்கிறது? இந்திய இராணுவக் குழுவால் அமைக்கப்பட்டுள்ள புல்மோட்டை மருத்துவமனை குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் ஜே,வி.பியின் அனுரகுமார திசநாயக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இலங்கை அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா “இந்தியாவின் ஒத்துழைப்பு மட்டும் கிடைக்காது போயிருந்தால் இந்தப் போரில் இந்தளவுக்கு எங்களுக்கு வெற்றி கிடைத்திருக்காது. சர்வதேச நாடுகள் பலவும் எங்களுக்கு அழுத்தம் கொடுத்தபோது, இந்தியா பெரும் சக்தியாக இருந்து இந்தப் போருக்கு ஆதரவு வழங்கியது.” என்றார். மேலும், இந்த மருத்துவமனை அமைவது குறித்து இந்தியாவும் இலங்கையும் சில பேச்சுக்களை நடத்தியது என்றும், அந்தப் பேச்சுக்களின் அடிப்படையிலேயே ராணுவ மருத்துவமனை அமைய இலங்கை அனுமதித்தது எனவும், 45 படுக்கைகளைக் கொண்ட ஒரு மருத்துவமனை அமைவதால் ஒரு நஷ்டமும் ஏற்படப் போவதில்லை எனவும், அதனால் ஏற்படும் லாபமே அதிகம் என்றும் ஜே.வி.பி உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர்.

கேபினெட் அந்தஸ்துள்ள அன்புமணி ராமதாசின் ஒப்புதல் இல்லாமலா இந்த ராணுவ மருத்துவமனை இலங்கையில் அமைக்கப்பட்டது? அந்த மருத்துவமனையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி என்று சொல்லி விட்டு அங்கு சிங்கள ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவது அன்புமணி ராமதாசின் ஒப்புதலோடுதானா, இல்லையா? மிகத் தந்திரமாக ராமதாஸ் அவர்கள் கட்சிக்காரர்களுடனோ கருணாநிதியிடமோ அரசியல் நடத்தலாம், ஆனால் எல்லோரையும் முட்டாள்கள் என நினைக்கக் கூடாது. பொறுப்பானவர்களாக இருந்தால் நேர்மையாக இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

நீண்ட வியாக்கியானாங்களை நாம் செய்தாயிற்று. ‘இப்போ கடந்த முறையை விட இரண்டு சீட் யார் அதிகம் தருவார்களோ அவர்களுடன் கூட்டு. அப்போ ஈழம்? போர் நிறுத்தம்? வெங்காயம் அதெல்லாம் தேர்தலுக்கு அப்புறம் பாக்கலாம். அதான் இந்தியா போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்துகிறதே’ என்றெல்லாம் இந்திய பார்ப்பனச் சக்திகளுக்கு வக்காலத்து வாங்கும் ராமதாசின் யோக்கியத்தனம் இரண்டே இரண்டு நாடாளுமன்ற சீட்டிலேயே தங்கியிருக்கிறது. எப்படி வேண்டுமானாலும் பேசலாம் கடைசியில் ஒட்டு வாங்கி ஜெயித்து விட்டு மகனை அமைச்சராக்கி, எல்லா நாடகங்களையும் அரங்கேற்றலாம் என்கிற காங்கிரஸ், திமுக, ராமதாஸ் கூட்டணிக்கு மக்கள் சாவு மணி அடிக்க வேண்டும். இல்லை என்றால் ஈழத்திலே வீசப்பட்ட குண்டு தமிழகத்தில் வீசப்பட அதிக நேரம் ஆகாது. இவர்களால் ஈழத் தமிழனை மட்டுமல்ல இந்தியத் தமிழனையும் காப்பாற்ற முடியாது.

நண்பர்களே! ஈழத் தமிழர் மீதான சிங்கள இனவெறிப் போரை முட்டுக் கொடுத்து நடத்திய காங்கிரஸை வீழ்த்துவதுதான் நம் அனைவரின் விருப்பமாக இருக்கிறது. போருக்கு துணைபோகும் காங்கிரஸ்காரனை யாரெல்லாம் தங்கள் முதுகில் சுமந்து வருகிறார்களோ (திமுக, பாமக அல்லது வேறு யாரானாலும்) அவர்களும் ஏதோ ஒரு வகையில் இந்தப் படுகொலைகளில் கை நனைக்கிறார்கள். இந்தத் தேர்தலில் அவர்களுக்கும் சேர்த்தே முடிவு கட்ட வேண்டும் என்பதுதான் நமது திட்டமாக இருக்க வேண்டும்.

- தொம்பன் [email protected]


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com