Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும்!
கரு.திருவரசு


காலத்தை வென்ற கவிதை வரிகளில் முதலாவதாகத் தமிழ் உணர்வு, தமிழ்ப் போராட்டம், தமிழ் உயர்வு பற்றிப் பேசுவோர், எழுதுவோரில் பலர் பாவேந்தர் பாரதிதாசன் பெயரில் வழங்கிவரும் “சாகும்போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும்! என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்!” என உணர்வைத் தட்டி எழுப்பும் கவிதை வரிகளை எடுத்துக் கொள்வோம்.

வேகமாகப் பரவி, விதம் விதமாய் மாறியும் உலவிவரும் இந்தத் தமிழ் உணர்ச்சிக் கவிதை வரிகள் காலத்தை வென்று எழுந்து வந்திருப்பதுபோல, அந்த வரிகளைக் கொண்ட முழுக்கவிதையும் என்றும் காலத்தைவென்று நிற்கும் கவிதையே. அந்தக் கவிதை முழுவதையும் நீங்கள் பார்த்தாலும் படித்தாலும் என் கருத்துக்கு உடன்படுவீர்கள்.

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன்
சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்

எனும் இரு வரிகள்தாம் முதலில் எனக்குத் தெரிய வந்தன. இவை பாவேந்தரின் கவிதை வரிகளல்ல என்பது உறுதியானபோது, அவை ஈழத்துக் கவிஞர் ஒருவர் கவிதையின் வரிகள் என்ற செய்தி தெரிய வந்தது. மற்ற விவரங்கள் அறியக் கிடைக்கவில்லை.

இணையத்தில் அகத்தியர் குழுமத்தில் ஒருநாள் (12.04.2002) இந்தச் “சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும்” என்ற கவிதை வரிகளின் செய்தி எப்படியோ எழுந்தது. அதன் தொடர்பில் திரு.இரா.முருகன் எனும் அன்பர் எழுதினார்:

“என் ஆசிரியர் கவிஞர் மீரா (சிவகங்கை மீ.ராசேந்திரன் – தமிழ்ப் பேராசிரியர்) பல ஆண்டுகளுக்கு முன் எழுதிய கவிதையின் வரிகள் நினைவு வருகின்றன.

சாவதென்றால் நான் சாவேன் உன்
சன்னிதானத்திலே
போவதென்றால் நான் போவேன் உன்
பூவிமானத்திலே

மறுநாள் லாசேஞ்சல்ஸ் இராம் எழுதினார்:

நேற்றிரவு நடிக நண்பர் சுமனை ஒரு விருந்தில் சந்தித்து அளவளாவிக் கொண்டிருந்தேன். உடன் இலங்கைத் தமிழன்பர் வந்து சேர்ந்து கொண்டார். அவரிடம் “சேரனின் மரணத்துள் வாழ்வோம்” பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில் அவர் திடீரென்று ஓர் உணர்ச்சிகரமான கவிதையைச் சொல்லவும் நான் அசந்துபோய் அதுபற்றிக் கேட்க, அதை எழுதியவர் மாவிட்டபுரம் சச்சிதானந்தம் என்று தெரிந்து கொண்டேன். அந்தக் கவிதை இதோ:

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல்
சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்
பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும்
பைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும்
ஓடையிலே என்சாம்பல் ஓடும்போதும்
ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்

இந்த அளவில் அந்தக் கவிதையைப் பாடியவர் “ஈழத்தைச் சேர்ந்த மாவிட்டபுரம் சச்சிதானந்தம்” என்ற விவரம் மட்டுமே தெரிந்தது. முழுக் கவிதையும் தெரியவில்லை, மேல் விவரங்களும் அறிய முடியவில்லை.

எழுத்திலும் பேச்சிலும் மிகுதியாக மேற்கோள் காட்டப்பட்ட வா¢ “சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும் என்றன் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்” என்பது.

இந்த வா¢யின் கனற்கொதிப்பைப் பார்த்த பலர் இதை எழுதியவர் பாரதிதாசன் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் இதை எழுதியவர் ஈழத்துக் கவிஞர் பண்டிதர் க. சச்சிதானந்தன் அவர்கள். இவர் யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள பருத்தித்துறைப் பகுதியில் பிறந்தவர். மகாவித்துவான் நவநீத கிருட்டிண பாரதியிடம் முறையாகத் தமிழ் கற்றவர். ஆங்கிலம் சமற்கிருத மொழிகளிலும் புலமை பெற்றவர். இலண்டனில் படித்து பி.ஏ. ஆனர்சு பட்டமும், குழந்தைகள் உளவியலில் முனைவர் பட்டமும் பெற்றவர். பள்ளி ஆசி¡¢யராக, கல்லூ¡¢ வி¡¢வுரையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவருடைய “ஆனந்தத் தேன்” என்ற கவிதைத் தொகுதி 1954இல் வெளிவந்துள்ளது. இவருடைய யாழ்ப்பாணக் காவியம் போன்ற பல கவிதைகள் அச்சேறாமால் இருக்கின்றன. இவர் கவிதைகள் மட்டுமன்றி அன்னபூரணி என்ற புதினத்தையும் உரைநடையில் பழைய அரசியல் தலைவர் வன்னிய சிங்கத்தின் வரலாற்றையும் எழுதியுள்ளார். அதிர்ச்சி தரும் செய்தி, இவர் இப்பொழுது மனநிலை தி¡¢ந்து வவுனியாவில் அலைந்து கொண்டிருக்கிறார் என்பது. இவருடைய புகழ் பெற்ற அந்த வா¢யைக் கொண்டிருக்கும் முழுக் கவிதையும் இங்கே தரப்பட்டிருக்கிறது.

பொன்னின் குவையெனக்கு வேண்டியதில்லை - என்னைப்
போற்றும் புகழெனக்கு வேண்டியதில்லை
மன்னன் முடியெனக்கு வேண்டியதில்லை - அந்த
மாரன் அழகெனக்கு வேண்டியதில்லை.

கன்னித் தமிழெனக்கு வேணுமேயடா - உயிர்க்
கம்பன் கவியெனக்கு வேணுமேயடா
தின்னத் தமிழெனக்கு வேணுமேயடா - தின்று
செத்துக் கிடக்கத் தமிழ் வேணுமேயடா.

உண்ண உணவெனக்கு வேண்டியதில்லை - ஒரு
உற்றார் உறவினரும் வேண்டியதில்லை
மண்ணில் ஒரு பிடியும் வேண்டியதில்லை - இள
மாதர் இதழமுதும் வேண்டியதில்லை.

பாட்டில் ஒருவா¢யைத் தின்றுகளிப்பேன் - உயிர்
பாயும் இடங்களிலே என்னை மறப்பேன்
காட்டில் இலக்குவனைக் கண்டு மகிழ்வேன் - அங்குக்
காயும் கிழங்குகளும் தின்று மகிழ்வேன்.

மாட மிதிலைநகர் வீதிவருவேன் - இள
மாதர் குறுநகையில் காதலுறுவேன்
பாடியவர் அணைக்கக் கூடி மகிழ்வேன் - இளம்
பச்சைக் கிளிகளுடன் பேசிமகிழ்வேன்.

கங்கை நதிக்கரையில் மூழ்கியெழுவேன் - பின்பு
காணும் மதுரைநகர்க் கோடி வருவேன்
சங்கப் புலவர்களைக் கண்டு மகிழ்வேன் - அவர்
தம்மைத் தலைவணங்கி மீண்டு வருவேன்.

செம்பொற் சிலம்புடைத்த செய்தியறிந்து - அங்குச்
சென்று கசிந்தழுது நொந்து விழுவேன்
அம்பொன் உலகமிர்து கண்டனேயடா - என்ன
ஆனந்தம் ஆனந்தம் கண்டனேயடா.

கால்கள் குதித்துநட மாடுதேயடா - கவிக்
கள்ளைக் குடித்தவெறி ஏறுதேயடா
நூல்கள் கனித்தமிழில் அள்ளிடவேண்டும் - அதை
நோக்கித் தமிழ்ப் பசியும் ஆறிடவேண்டும்.

தேவர்க் கரசுநிலை வேண்டியதில்லை - அவர்
தின்னும் சுவையமுது வேண்டியதில்லை
சாவில் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன்
சாம்பல் தமிழ்மணந்து வேகவேண்டும்

ஈழம் பருத்தித்துறைக் கவிஞர் முனைவர் க.சச்சிதானந்தன் அவர்களின் “ஆனந்தத் தேன்” கவிதைத் தொகுதியைக் காணவேண்டும், அதில் இந்தக் கவிதை இடம்பெற்றிருக்கிறதா என்பதைக் காணவேண்டும் என்னும் ஆவல் அதிகமாகிவிட்டது. காரணம், அவருடைய அந்தக் கவிதையே ஏன் பல வேறுபாடுகளுடன் தரப்படுகின்றன?

கடந்த 15.05.2005 அன்று “தும்பை” எனும் சிற்றிதழில் வந்ததாக இணையத்தில் அவருடயை அந்தக் கவிதை மீண்டும் வெளிவந்துள்ளது. அதைப் படித்தபோது அந்தக் கவிதையின் முழுமையான சரியான வடிவத்தைக் காணவேண்டும் என்ற ஆவல் மேலும் மேலோங்குகின்றது. முதன்முதலில் இணையத்தில் எனக்குக் கிடைத்த கவிதையில் இருந்த

பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும்
பைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும்
ஓடையிலே என்சாம்பல் ஓடும்போதும்
ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்

எனும் ஒரு கண்ணி பின்னர் இருமுறை எனக்குக் கிடைத்த முழுக்கவிதையிலும் ஏன் இல்லை?

எது எப்படியானாலும்,

“சாவில் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன்
சாம்பல் தமிழ்மணந்து வேகவேண்டும்”

என்னும் காலத்தைவென்ற கவிதை வரிகளைப் பாடியவர் ஈழம் பருத்தித்துறைக் கவிஞர் முனைவர் க.சச்சிதானந்தன்.

- கரு.திருவரசு ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com