Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

சர்வதேச சமூகமும் தமிழீழப் போராட்டமும்

திருமகள் (தமிழீழம்)

உலக வரலாற்றில் சர்வதேச சமூகம் என்பது எப்போதும் அந்தந்த வேளைகளில் சர்வதேச வல்லரசுகளாக இருக்கும் சக்திகளின் நலன் கருதியே குரல்கொடுத்தும், காய் நகர்த்தியும் வந்திருக்கிறது. இதனை நாம் வரலாற்றின் பக்கங்களில் தாராளமாகப் பார்க்கலாம்.

அது இரண்டாம் உலகப்போரின் ஆரம்ப நாட்கள். 1941 ஜீன் 22 அதிகாலை 4 மணிக்கு இட்லர் சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்தார். செய்துகொண்ட நட்புறவு உடன்படிக்கையினை மீறி செர்மனியர் தொடங்கிய துரோகத்தனமான தாக்குதலுக்கு எதிராகச் சோவியத்தின் செஞ்சேனை தற்காப்பு நிலையெடுத்துப் போராடிக்கொண்டிருந்தது. ரஷ்ய மக்கள் வீரம் செறிந்த தற்காப்புப் போரினை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

கடும்சமர் தொடங்கி ஒரு மாதகாலத்திற்குள்ளாக மாஸ்கோவிலிருந்து சோவியத் தலைவர் ஸ்டாலின் அப்போதைய பிரித்தானிய தலைமை அமைச்சரான சர்ச்சிலுக்கு ஒரு அவசரச் செய்தியை அனுப்பினார். 1941 சூலை 18ம் நாள் அனுப்பப்பட்ட இந்தச் செய்தியானது ஐரோப்பாவில் செர்மனிக்கு மேற்குப்புறமாக ஒரு யுத்த முனையைப் பிரிட்டனும் ஏனைய மேற்குலக நாடுகளும் திறக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.

ஆனால் பிரித்தானிய மற்றும் அமெரிக்க அதிகார வர்க்கம் இதனைச் செய்ய முன்வரவில்லை. அதாவது அந்தக்காலத்துச் சர்வதேச சமூகத்தினர் ரஷ்யாவிற்கு ஆதரவளித்து, இட்லரை ஒடுக்க உடனடியாக முன்வரவில்லை. இதற்கான காரணம் என்ன என்று நாங்கள் வரலாற்றுப் பக்கங்களில் தேடினால், அதற்கான விடையினை அளிக்கிறார், யுத்தத் தயாரிப்பு நடந்தவேளையில் ஐரோப்பாவில் பயணம்செய்த அமெரிக்க அரசாங்கச் செயலாளரின் துணைவர் சாம்னெர் வேல்லஸ். 1944ல் இவர் எழுதி வெளியிட்ட தீர்மானங்களின் நோரம்நி என்ற நூலில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.

"யுத்தத்திற்கு முந்தைய அந்த ஆண்டுகளில் அமெரிக்கா உட்பட மேலைத்தேய நாடுகளில் இருந்த பாரிய நிதி மற்றும் வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகள் சோவியத் ஒன்றியத்திற்க்கும் இட்லரின் செர்மனிக்கும் இடையிலான யுத்தம் தமது சொந்த நலன்களுக்கு அனுகூலமானது என்று நம்பினார்கள். ரஷ்யா நிச்சயமாகத் தோல்வியடையும் என்றும் இதன் மூலம் கம்யூனிசம் ஒழித்துக் கட்டப்படும் என்றும் இந்த யுத்தத்தின் பின்விளைவாகப் பல ஆண்டுகளுக்குப் பலவீனமாக இருக்கப்போகும் செர்மனி உலகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தவல்ல நாடாக இருக்காது என்றும் அவர்கள் கருதியிருந்தார்கள்.''

அதாவது பிரித்தானிய மற்றும் அமெரிக்கக் கொள்கைகளுக்குச் சவாலாக எழுந்த சோவியத் ஒன்றியம் என்ற கம்யூனிச நாட்டினை அதனது அப்பாவி மக்களை இட்லரின் படை துவம்சம் செய்யவேண்டும் என்பதையே அப்போதைய சர்வதேச சமூகம் உள்ளுர நாடி நின்றது.

இன்னொரு வகையில் இதனைக் கூறுவதானால், நாசிகளின் சித்திரவதைக் கூடங்களில் வதையுண்ட யூதர்களின் அவலங்களோ அன்றி இட்லரின் ஆக்கிரமிப்பில் சிக்குண்டு சின்னாபின்னப்பட்டுக்கொண்டிருந்த நாடுகளது அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களோ இந்தச் சர்வதேச சமூகத்தின் கண்களில் தென்படவில்லை. தத்தமது சொந்த நலன்களே பிரித்தானிய அரசிற்கும் அமெரிக்க அரசிற்கும் முக்கியமாக விளங்கின. யுத்தத்தின் முதல் ஆண்டுகளிலேயே ஐரோப்பாவில் செர்மனிக்கெதிரான இரண்டாவது போர்முனை திறக்கப்பட்டிருந்தால் அது பெருமளவிற்கு ஆள் பொருட்சேதங்களைத் தவிர்த்து இட்லரின் படைகளை இலகுவாக முறியடிக்க உதவியிருக்கும். ஆனால் 1941 ஆம் ஆண்டிலோ, 1942 இலோ அல்லது சோவியத் யுத்த அரங்கில் செர்மனி பலம்குன்றிவந்த 1943 இலோ இந்தப் போர்முனை திறக்கப்பட்டிருக்கவில்லை.

மாறாக, தன்னந்தனியாக சோவியத் ஒன்றியத்தின் மக்களும் அதன் செஞ்சேனையும் பாரிய முறியடிப்புச் சமரை முன்னெடுத்து யுத்தமானது அதன் இறுதிக் கட்டத்தில் நுழைந்த வேளையில்தான் தமது எதிர்பார்ப்புக்கு மாறாக சோவியத் நாடு ஒரு சர்வதேச வல்லரசாகத் தோற்றம்பெற்று "முறியடிக்க முடியாத படை' எனப் பெயர்பெற்ற செர்மனியப் படைகளைத் துரத்தியவாறு ஐரோப்பாவினுள் முன்னேறுவது கண்டபின்பே இரண்டாவது போர்முனை திறக்கப்பட்டது.

1944 ஆம் ஆண்டு சூன் மாதம் 06ம் தேதி அவசர அவசரமாகப் பிரித்தானிய மற்றும் அமெரிக்கத் துருப்புகள் வடக்கு பிரான்சின் நார்மண்டியில் தரையிறக்கப்பட்டன. வெளிப்படையாகச் சொல்வதானால் இந்தத் தரையிறக்கம் இட்லருக்கு எதிரானதோ அல்லது வதைபட்ட யூதர்கள் மற்றும் முன்னேறும் ரஷ்யர்களுக்கு ஆதரவானதோ அல்ல. சோவியத் ஒன்றியம் தன்னந்தனியே வெற்றிபெற்றால் சர்வதேச அரங்கில் தமது முக்கியத்துவம் அடிபட்டுப்போய்விடும் என்ற சுயநலனின் அடிப்படையில் அமெரிக்கபிரித்தானிய அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை இது.

அது அப்படியாக, இன்னொரு சரித்திரப் பக்கத்தைப் புரட்டினால் அங்கே பாலஸ்தீன விடுதலை இயக்கமும் இஸ்ரேல் அரசும் நார்வேயின் அனுசரணையில் ஒரு உடன்பாட்டிற்கு வந்தன. சர்வதேச சமூகத்தின் வாக்குறுதியை நம்பிப் பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அரபாத் அவர்கள் தமது போராட்டத்தைக் கைவிட்டார்.

சர்வதேச சமூகம் அதைத்தான் எதிர்பார்த்தது. அரபாத் போராட்டத்தைக் கைவிட்டார். அவரைச் சர்வதேச சமூகம் கைவிட்டது. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரமலாவிலுள்ள தலைமையகத்தில் இஸ்ரேலியப் படைகளின் முற்றுகைக்குள் அரபாத் சிறைப்பட்டு வீட்டுக்காவலில் கிடந்தபோது அனுசரணைப் பணிசெய்த நார்வேயோ அல்லது அன்புகனிய உறவாடிய அமெரிக்காவோ அவரை எட்டியும் பார்க்கவில்லை.

தம்மைச் சூழ உள்ள முற்றுகை இறுக்கப்படுவதாகவும், உலகம் தம்மீதான அக்கறையைக் கைவிடுவதாகவும் அரபாத் உணர்ந்தார். அதாவது எல்லோராலும் தாம் மறக்கப்பட்டவராக மாறுவதாக அவர் கருதினார்.அரபாத்தின் இந்தப் பதட்டம் குறித்து எவராவது விமர்சிக்கத் தொடங்கினால் அவர் கடும்கோபமடைந்தார். அவ்வாறான தருணங்களில் முழு உடலும் கோபத்தால் கிடுகிடுக்க "அன்ன ம்மாஅகுர்'' ("நான் பிழையான வழியில் செல்கிறேன்') எனக் கூச்சலிடுவார். இறுதியில் இந்த மனஅழுத்தமே அவரது உயிருக்கு உலையாகிப்போனது என்று சில மருத்துவர்கள் இப்போது சொல்கிறார்கள்.

இப்படித்தான் உலகின் ஒரு முன்னோடி விடுதலைப் போராளி சர்வதேச சமூகம் என்ற நயவஞ்சகக் கும்பலால் உயிரோடு அணுஅணுவாகச் சாகடிக்கப்பட்டார். சர்வதேச சமூகம் என்று சொல்லப்படுகிற உலக வல்லாதிக்க அரசுகளுக்கு மக்கள் எழுச்சி என்பது கசப்பு மாத்திரை. அது அவர்களது நலன்களுக்கு ஆப்பு வைக்கும் கூரிய கோடாரி முனை. அதனால்தான் உலகில் எங்கெல்லாம் மக்கள் எழுச்சி இடம்பெறுகிறதோ அங்கெல்லாம் சாம, தான, பேத , தண்டம் முதலான நானாவித உத்திகளோடு இந்தச் சர்வதேச சமூகம் அழையா விருந்தாளியாக வந்து குந்தி அப்போராட்டங்களை முனை மழுங்க வைத்துவிடும்.

பாலஸ்தீன விடுதலை இயக்கம் உலகிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்கியதால் அதனை அமுக்குவதன் மூலம் ஏனைய விடுதலைப் போராட்ட அமைப்புகளுக்கு உளச்சோர்வைக் கொடுத்து அவற்றின் போராட்ட உத்வேகத்தை முனைமழுங்கச் செய்வதே சர்வதேச சமூகத்தின் உத்தியாக இருந்தது.

இப்போது எமது விடுதலைப் போராட்டம்“ உலக விடுதலை இயக்கங்களுக்கு முன்னோடியாக இருப்பதுதான் இங்கே சர்வதேச சமூகத்தின் வருகைக்குக் காரணமேயன்றி தமிழர்களுக்கு உரிமை பெற்றுத்தருவதற்கென அவர்கள் இங்கே வரவில்லை. அவர்களுக்குத் தமிழர்களது உரிமை குறித்துக் கவலை இருந்திருக்குமானால் சிரான் கட்டமைப்பை சிங்கள அரசு செயலறச்செய்தபோது அதற்கெதிராக அழுத்தம் கொடுத்து அந்தக் கட்டமைப்பை ஏற்படுத்தியிருக்கவேண்டும்.

இலங்கையின் கடந்த 2004 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் பெருமளவான தமிழர்கள் வாக்களிக்கும் உரிமை சிங்கள அரச படைகளால் தடுக்கப்பட்டபோது தட்டிக்கேட்டிருக்கவேண்டும். இது சனநாயகமீறல் என்று சுட்டிக்காட்டியிருக்கவேண்டும்

ஆகக் குறைந்தது ஆழிப்பேரலைப் பொதுக்கட்டமைப்பையாவது தங்களது செல்வாக்கைப் பிரயோகித்துச் செயற்படவைத்திருக்கவேண்டும். எல்லாவற்றையும் விட்டுவிடுவோம். இப்போதாவது சிங்கள அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து போர்நிறுத்த ஒப்பந்த விதிகளில் ஒப்புக்கொண்டவாறு ஒட்டுப்படைகளைக் களைந்து பலவருடங்களாக ஏதிலி வாழ்வு வாழும் எம் மக்களின் மீள்குடியேற்றத்தைச் சர்வதேசம் செயற்படுத்தினால் மீண்டும் போர் மூளாதே. தமிழர் நலனில் உண்மையான அக்கறை இருந்தால் எங்கே அதை முதலில் செய்யட்டும் இந்தச் சர்வதேசம்.

ஆனால் சர்வதேச சமூகம் மேற்சொன்னதில் எதைத்தான் செய்தது?

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (21122005) ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டுக் கொள்கைவகுப்பிற்குப் பொறுப்பான ஜாவியர் சொலானா தெரிவித்திருப்பவை சர்வதேச சமூகத்தின் தற்போதைய நிலைப்பாட்டை எமக்கு விளக்குகிறது.

அவர் என்ன சொல்கிறார் என்றால் "பாலஸ்தீனத்திலே எதிர்வரும் 2006 சனவரி 25ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலிலே ஹமாஸ் போராளிக் குழு வெற்றிபெறுமாக இருந்தால் பாலஸ்தீனர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்க ஒப்புக்கொண்ட பலமில்லியன் டாலர் உதவியானது கிடைக்காமல் போகலாம்''!

அதாவது அவர் இதைச் செய்தியாகச் சொல்லவில்லை. ஒரு எச்சரிக்கையாகப் பாலஸ்தீன மக்களைப்பார்த்து "நீங்கள் ஹமாஸை ஆதரித்தால் உங்களுக்கு எங்களது உதவி கிடையாது'' என்று மிரட்டுகிறார். இதிலே என்ன வேடிக்கை என்றால், இலங்கையிலே நடந்த தேர்தலைத் தமிழ்மக்களும் அவர்களது அரசியல் தலைமைத்துவமும் புறக்கணித்ததைச் சனநாயகப் படுகொலை என்று சொல்லிச் சொல்லி நீலிக்கண்ணீரை இன்றுவரை ஓயாது சிந்திக்கொண்டிருக்கும் அதே ஐரோப்பிய ஒன்றியம் "பாலஸ்தீன மக்கள் சனநாயக முறையில் ஹமாஸைத் தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யக்கூடாது' என்று பகிரங்கமாக மிரட்டல் விடுகிறது.

தமிழர் தாயகத்தில் தேர்தலை மக்கள் தாமாகப் புறக்கணித்துத் தமது உணர்வுகளை வெளிப்படுத்தியது சனநாயக மீறலாகவும், பாலஸ்தீன மக்கள் சனநாயக வழியில் தமது தலைமைத்துவத்தினைத் தெரிவுசெய்வதில் குறுக்கிடவேண்டியது தனது தலையாய கடமையாகவும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் தெரிகிறது.

இங்கே தான் நாம் அவதானமாக உற்றுநோக்கவேண்டிய சர்வதேச சமூகத்தின் உள்ளக்கிடக்கை அல்லது கொள்கைத் திட்டம் மறைந்து கிடக்கிறது. அந்தக் கொள்கைத்திட்டம் என்னவெனில் "மக்கள் எழுச்சியானது ஒடுக்கப்படவேண்டும். விடுதலை இயக்கங்கள் நசுக்கப்படவேண்டும'' என்பதுதான்.

பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் இடத்தை இப்போது ஹமாஸ் நிரப்பிவருகிறது. பாலஸ்தீன மக்கள் தற்போது ஹமாஸின் பின்னே அணிதிரளுகிறார்கள்“. பாலஸ்தீனம் இன்னொரு எழுச்சிக்குத் தயாராகிறது. அதைத் தடுப்பதுதான் சர்வதேச சமூகத்தின் தற்போதைய நோக்கம். "ஹமாஸிற்கு வாக்களிக்கக்கூடாது' என்று அங்கே பாலஸ்தீன மக்களை மிரட்டுவதன் உள்நோக்கம் இதுதான். அதேவேளை தமிழர் தாயகத்தில் தேர்தல் புறக்கணிப்பின் மூலம் மக்கள் எழுச்சியும் தமது அரசியல் தலைமையின் மீதான பற்றும் வெளிப்படுத்தப்பட்டது. இதனை ஆதரித்தால் மக்கள் எழுச்சி உத்வேகமடைந்து தமிழர்களது தலைமைத்துவம் பலம்பெற்று உலகின் முன்னுதாரணமான தேசத்தை அமைத்துவிடும். இது சர்வதேச சமூகத்தின் நலனுக்கு நல்லதல்ல. அதனால்தான் "தேர்தல் புறக்கணிப்பு என்பது சனநாயகப் படுகொலை' என்று இங்கே எமக்குப் பாடம் சொல்லித் தருகிறது சர்வதேச சமூகம்.

நாம் இப்போது மிகவும் முக்கியமான ஒரு வரலாற்றுத் தருணத்திலே நிற்கிறோம். இந்தத் திருப்புமுனையில் எமக்கு இரண்டே இரண்டு தெரிவுகள்தான் உள்ளன. ஒன்று சர்வதேச சமூகத்தின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடப்பது. இரண்டாவது எமது தலைவிதியை நாமே தீர்மானிப்பது.

எமக்கு முன்னே வழிகாட்டியாக வரலாறு நிற்கிறது. சர்வதேச சமூகத்தை நம்பி இறுதியில் அவலமாக அழிந்து போன யாசர் அரபாத்தும், தமது சொந்தப் பலத்தில் "எல்லாம் போர்முனைக்கே எல்லாம் வெற்றிக்காகவே'' என்ற எழுச்சி உணர்வுடன் செயற்பட்டு வென்ற சோவியத் நாட்டு மக்களின் வீரம் செறிந்த வரலாறும் எமது பாதை எதுவாக இருக்கவேண்டும் என்பதை எமக்குச் சொல்லித்தருகின்றன.

எவ்வாறு சோவியத் மக்களின் வெற்றிபெற்றபோது சர்வதேச சமூகம் அவர்கள் பக்கம் சாய்ந்ததோ அப்படியே எமது தேசத்தை நாமாக வென்றெடுக்கும்போது சர்வதேச சமூகம் எம்மை நாடிவரும். ஆகவே அன்பிற்குரியவர்களே, சர்வதேச சமூகம் என்ற மாய மானின் மிரட்டல்களுக்கு அஞ்சாது எமது இலக்கினை அடைய ஆணையிட்டு முன்னேறுவோம்.

வயல் எங்களுடையது. குருதி நீர் சொரிந்து விடுதலைப் பயிர் வளர்த்தவரும் நாங்கள்தான் அறுவடைசெய்ய மட்டும் என்ன அடுத்தவனைக் கேட்பது?

ஆற்றலுள்ள வல்லவர்கள் அரிவாள் ஏந்தட்டும். தாயகத்தில் உள்ள ஒவ்வொரு வீடும் சூடடிக்கத் தயாராகட்டும்.

"எல்லாம் போர்முனைக்கே எல்லாம் வெற்றிக்காகவே''.

(நன்றி: தென்செய்தி இதழ்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com