Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

பால் ஊற்றியவரைக் கொத்தும் பாசிசப் பாம்பு
பழ. நெடுமாறன்


பா.ஜ.க. தலைமைப் பதவியில் இருந்து அத்வானியை விரட்டியடிக்க சங்கப்பரிவாரம் வரிந்து கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ்.சின் செல்லப்பிள்ளையாக இருந்த அத்வானி மீது திடீர் கோபம் என்ன? அவர் மீது கீழ்க்கண்ட இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. .

1. முஸ்லீம்கள் தனித் தேசிய இனம் என்று கூறி, பாகிஸ்தான் பிரிவதற்குக் காரணமாக இருந்த ஜின்னாவை சமயச் சார்பற்றவர் எனக் கூறியது மன்னிக்க முடியாததாகும்.

2. ஆப்கானிஸ்தானம் முதல் பர்மா வரையிலும் நேபாளம் முதல் இலங்கை வரையிலும் உள்ளடக்கிய அகண்ட பாரதம் அமைக்கும் ஆர்.எஸ்.எஸ். கனவுத் திட்டத்திற்கு எதிராக அத்வானி “இந்தியா பாகிஸ்தான் பிரிவினை முடிந்து போன ஒன்று எனக் கூறியது கொள்கைத் தடத்திலிருந்து அவர் விலகி விட்டார் என்பதையே காட்டுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.”

இந்த இரு குற்றச்சாட்டுகளைக் கூறுவதற்குப் பல நாட்களுக்கு முன்பாகவே ஆர்.எஸ்.எஸ். தலைவரான சுதர்சன் ""வாஜ்பாய், அத்வானி போன்ற வயதான தலைவர்கள் பதவி விலகி இளைஞர்களுக்கு வழி விடவேண்டும்'' எனக் கூறியிருந்தார். இதற்குச் செவி சாய்க்க இருவரும் மறுத்துவிட்ட காரணத்தினால் அடுத்த கணையை எய்த வேளை நோக்கிச் சங்கப்பரிவாரம் காத்திருந்தது.

தீவிர இந்துத்வா பாதையில் சென்றால் மட்டுமே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என ஆர்.எஸ்.எஸ். தலைமை கருதுகிறது.
மேலும் அத்வானி பாகிஸ்தானில் உள்ள சிந்தி இனத்தைச் சேர்ந்தவர். அகதியாக இந்தியா ஓடி வந்தவர். இந்தியாவில் சிந்தி இனத்தவர் மிகமிகக் குறைவு. எனவே அத்வானிக்கு என்று இந்தியாவின் எந்த மாநிலத்திலும் மக்கள் ஆதரவுத்தளம் கிடையாது. வாஜ்பாய்க்காவது இந்தி பேசும் மாநிலங்களில் உயர்சாதி இந்து ஆதரவுத்தளம் இருந்தது. அத்வானிக்கு அதுவும் இல்லை. எனவே எதிர்வரும் தேர்தலில் அவரை முன்னிறுத்தி வெற்றிபெற முடியாது என்பதை உணர்ந்த ஆர்.எஸ்.எஸ். அவரை அகற்ற விரும்பியது.

இந்தச் சூழலில் பாகிஸ்தானில் அத்வானி பேசிய பேச்சுக்கள் எதிர்பாராத வாய்ப்பாக கிடைத்தன. அதைப் பயன்படுத்தி அத்வானிக்கு எதிரான கணைகள் ஏவப்பட்டன.

பா.ஜ.க.வை அடக்கி ஆள ஆர்.எஸ்.எஸ். தலைமை முற்படுவது முதல் முறையல்ல. பா.ஜ.க.வின் முந்திய அவதாரமான ஜனசங்கத்தையும் ஆர்.எஸ்.எஸ். ஆட்டிப் படைத்தது. ஜனசங்கத்தின் நிறுவனத் தலைவரான சியாம பிரசாத் முகர்ஜி தங்களுக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தொண்டர்கள் உறுதுணையாக இருப்பர் என எதிர்பார்த்தார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் அவ்வாறு செய்ய அனுமதிக்கவில்லை.

பண்டைய மன்னர்களுக்கு இராசகுருக்கள் ஆலோசகர்களாக இருந்தது போல இருக்க கோல்வால்கர் விரும்பினார். நேரடி அரசியலில் ஈடுபடாமல் அரசியலை ஆட்டிப் படைக்கவே அவர் திட்டமிட்டார். இதைக் கண்ட எஸ்.பி.முகர்ஜி எரிச்சலடைந்தார்.

1952ஆம் ஆண்டு ஆகஸ்டில் கூட்டமொன்றில் பேசுகையில் ""கூட்டுப்புழு நிலையிலிருந்து சுயம் சேவகர்கள் வெளிவரவேண்டும்'' எனக் கூறினார். இதைக்கண்டு ஆத்திரமடைந்தது ஆர்.எஸ்.எஸ். தலைமை. ஆனால் எஸ்.பி.முகர்ஜி மக்களால் மதிக்கப்பட்ட தலைவராக இருந்ததால் அவரை அகற்ற முடியவில்லை. எதிர்பாராதவிதமாக சில மாதங்களில் எஸ்.பி.முகர்ஜி காஷ்மீர் சிறையில் திடீரெனக் காலமானார்.
அவரைத் தொடர்ந்து தலைமைப் பதவி ஏற்ற என்.சி.சர்மா கட்சி நடவடிக்கைகளில் ஆர்.எஸ்.எஸ். குறுக்கீடு அதிகமாகிவிட்டது எனக் கூறி சில மாதங்களிலேயே விலகினார்.

தொடக்க காலத்திலிருந்து கட்சியின் தத்துவ ஆசிரியராகவும் பின்னர் தலைவராகவும் விளங்கிய பால்ராஜ் மதோக் ஆர்.எஸ்.எஸ். தலையீடு இன்றி தன்னிச்சையாக இயங்கத் தொடங்கியபோது அவரை பதவி விலக்க ஆர்.எஸ்.எஸ். தலைமை திட்டமிட்டது. அதற்கு அத்வானி பயன்படுத்தப் பட்டார். இதன் விளைவாக 1972ஆம் ஆண்டில் பால்ராஜ் மதோக் பதவி விலகினார்.

ஆர்.எஸ்.எஸ். தலைமையின் கட்டுப்பாட்டுக்குள் வராதவர்களை விரட்டியடிக்க ஆர்.எஸ்.எஸ். தலைமை ஒரு போதும் தயங்கியதில்லை.
இதைப் போல இப்போது அத்வானியை விரட்டியடிக்க முற்படுகிறது.

பா.ஜ.க. ஒரு போதும் சுதந்திரமாக இயங்க முடியாது. அவ்வாறு இயங்க முயன்றவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள் அல்லது படுகொலை செய்யப்படுவார்கள். ஜனசங்கத் தலைவராக இருந்த தீனதயாள் உபாத்தியாயா இவ்விதம் படுகொலை செய்யப்பட்ட ஒருவராவார். இன்றுவரை கொலையாளிகள் யார் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பச்சை பாசிஸ்டு இயக்கமாகும். நேரடியாக அரசியலில் ஈடுபடாமல் துணை அமைப்புகளின் பின்னிருந்து ஆட்டிப் படைக்கும் சூத்ரதாரியாக அது திகழ்ந்து வருகிறது.

இராமர் இரதப் பயணம் மூலம் நாடெங்கும் மதக் கலவரங்களை நடத்த அத்வானியை ஆர்.எஸ்.எஸ். பயன்படுத்தியது.
பிரதமராகப் பதவியேற்ற வாஜ்பாயைக் கட்டுப்படுத்த அத்வானியைத் துணைப் பிரதமராக்கியது.
தங்கு தடையில்லாமல் சிறுபான்மை மக்களை வேட்டையாட அத்வானியின் அதிகார நிழல் சங்கப்பரிவாரத்திற்குக் கிடைத்தது. குசராத் கலவரங்களின் சூத்ரதாரியான மோடி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தபோது அத்வானியைக் கொண்டு மோடியைக் காப்பாற்றியது. இப்படியெல்லாம் ஆர்.எஸ்.எஸ். தலைமை எள் என்பதற்கு முன் எண்ணெய்யாகச் செயல்பட்ட அத்வானியை ஒழித்துக்கட்ட முயற்சி நடைபெறுகிறது.

பாசிசப் பாம்பு பால் ஊற்றியவரையே விரட்டி விரட்டிக் கொத்துகிறது.

தென்செய்தியில் வெளியான கட்டுரை 
நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com