Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

ஈழத் தமிழர் பிரச்சனையும் காங்கிரஸ் கட்சியின் திடீர் அக்கறையும்
தாரகா


p_chidambaram ஆளும் சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி, திடீரென்று ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பில் தமது நிலைப்பாட்டை விளக்கிச் சொல்லும் முயற்சியில் இறங்கியிருக்கின்றது. இந்த திடீர் முடிவின் பின்புலம் என்னவாக இருக்க முடியும்? அது வேறு ஒன்றுமல்ல, விரைவில் ஒரு தேர்தல் வரவிருப்பதும் குறிப்பாக தமிழகத்தில் காங்கிரஸின் செல்வாக்கு படிப்படியாக மங்கிக் கொண்டு செல்வதுமே இந்த திடீர் அக்கறைக்கான காரணம். சில தினங்களுக்கு முன்னர் பேசிய ஆளும் காங்கிரஸ் அரசின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று ஈழத்தில் நடைபெறும் அனைத்து இன்னல்களுக்கும் விடுதலைப்புலிகளே காரணம் என்றும் குறிப்பாக புலிகளின் தலைவர் பிரபாகரனின் சர்வாதிகார விருப்பமும், தான் மட்டுமே இருக்க வேண்டுமென்ற எதேச்சாதிகார போக்குமே இவ்வளவிற்கும் காரணம் என்று குறிப்பிட்டிருக்கின்றார். காங்கிரஸைப் பொருத்தவரையில் ஈழத் தமிழர் விடயத்தில் வக்காலத்து வாங்குவதற்கு சிதம்பரத்தை விட்டால் வேறு பொருத்தமான நபர் கிடைக்கமாட்டார். இதனால்தான் சிதம்பரத்தை காங்கிரஸ் சந்தர்ப்பம் பார்த்து களமிறக்கியிருக்கின்றது.

சிதம்பரம் தன்னை அறியாமலேயே ஒரு உண்மையை இங்கு வெளிப்படுத்தியிருக்கின்றார். இன்று மிகப் பெரும் மனித அவலத்தை விளைவித்திருக்கும் போரின் பின்னால் இந்தியா இருக்கின்றது என்பதை அவரது பேச்சு வெள்ளிடைமலையாக்கியுள்ளது. அதாவது அனைத்து பிரச்சனைக்கும் புலிகளே காரணம் என்று விடுதலைப்புலிகளை குற்றம் சாட்டியிருக்கும் சிதம்பரம் இங்கு குறிப்பிட்டிருக்கும் கருத்தொன்று மிக முக்கியமானது. அதாவது புலிகள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை காலில் போட்டு மிதித்த போதும் தாம் அமைதியாகவே இருந்ததாகவும் 1991இல் ஸ்ரீபெரும்புத்தூரில் இடம்பெற்ற அந்த சம்பவத்திற்குப் பின்னாலேயே புலிகளை ஈழத் தமிழர்களின் பிரதிநிதியாக கருத முடியாது என்ற நிலைக்கு தமது கட்சி வந்ததாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு வந்தால் இலங்கை அரசை பேச்சுவார்த்தையைத் தொடருமாறு தம்மால் வற்புறுத்த முடியும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். (மூலம் -பி.பிசி வானொலி- 16,02,2009)

ஆனால் இதற்கு முன்னர் கருத்து தெரிவித்திருந்த சிதம்பரம் இலங்கை விவகாரம் ஒரு உள்நாட்டுப் பிரச்சனை என்றும் அதில் ஓரளவிற்குமேல் தம்மால் தலையிட முடியாதென்றும் குறிப்பிட்டிருந்தார். இப்பொழுது எப்படி தலையிடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது? இங்கு உட்பொதிந்து கிடக்கும் உண்மை என்னவென்றால் காங்கிரஸ் எப்போது விடுதலைப்புலிகளை ஈழத் தமிழர்களின் பிரதிநிதியாகக் கருத முடியாது என்று தீர்மானித்ததோ அன்றிலிருந்தே ஈழப் போராட்ட அரங்கிலிருந்து புலிகளை அகற்ற வேண்டுமென்ற நோக்கில் செயலாற்றி வருகின்றது என்பதுதான் அது. இதற்காக பல்வேறு நாசகார வேலைகளை இந்திய வெளியக புலனாய்வு அமைப்பான றோவுடன் இணைந்து காங்கிரஸ் நடைமுறைப்படுத்தி வந்திருக்கிறது. நோர்வேயின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து மகிந்தவின் அதீத தமிழர் விரோத அரசியலை, புலிகளை அகற்றுவதற்கான அரசியல் இடைவெளியாக காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டது.

ஆனால் இதில் காங்கிரஸ் கணிக்காத, குறிப்பாக பாப்பனிய அதிகாரிகளால் வழிநடத்தப்படும் றோ கணிக்காத ஒரு விடயம் நடந்திருக்கிறது அதாவது ராஜீவ் விடயத்தை வைத்து தொடர்ந்தும் தமிழக மக்களை தமது பொய்ப் பிரச்சாரங்களில் அமுக்கிவைக்க முடியுமென்ற அவர்களது கணிப்பு தமிழக மக்களின் அர்ப்பணிப்பு மிக்க எழுச்சியாலும் இடையறாத போராட்டகளினாலும் தவிடு பொடியாவிட்டது. இந்தளவு தூரம் தமிழக மக்கள் எழுச்சியடைவார்கள் என்று றோ கணிக்கவில்லை. இதனால்தான் தற்போது ஆற்றுப்படுத்தல் வேலைகளில் காங்கிரஸ் இறங்கியிருக்கிறது.

இன்று இந்தியாவின் இலங்கை தொடர்பான கொள்கைகள் அனைத்தும் அதிகாரிகள் மட்டத்திலேயே மேற்கொள்ளப்படுகின்றது. சமீபத்தில் இது பற்றி கருத்துத் தெரிவித்திருந்த ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர், இந்தியாவின் கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய தலைவர்கள் தற்போது இந்தியாவில் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். காங்கிரஸின் தான்தோன்றித்தனமான அணுகுமுறைகளைப் பார்க்கும்போது அது முற்றிலும் சரியானதொரு கணிப்பாகவே இருக்கிறது. இன்று இலங்கை தொடர்பான அனைத்து முடிவுகளும் குறிப்பான சில றோவின் அதிகார பிரிவினராலேயே மேற்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக நாராயணன் வகை அதிகாரிகளால். இதில் முக்கியமாக இரண்டு நோக்கங்கள் இருக்கின்றன. றோவின் வரலாற்றிலேயே பெருத்த அவமானத்தை சந்தித்த ஈழத் தமிழர் விவகாரத்தை காங்கிரஸின் ஆசியோடு மீண்டும் கையாண்டு தோல்வியை சரி செய்து கொள்வது. இரண்டு அன்று அடைய முடியாமல் போன புலிகளை அழித்து அல்லது எதிர்வினையாற்ற முடியாதளவிற்கு முடக்கி, தாம் தீர்வு என்று நினைக்கும் ஒன்றைத் திணிப்பது.

அன்று Intelligent Bureau (IB) என்னும் புலனாய்வு பணியகத்தின் தலைவராக இருந்தவர்தான் இந்த நாராயாணன். அன்று உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்தவர்தான் இந்த சிதம்பரம். இதில் நாராயணின் கணிப்பு தமிழக மக்கள் இளிச்சவாயர்கள். அவர்களால் பெரிதாக எதனையும் செய்ய முடியாது. அப்படி மீறிப் போனாலும் ஆட்சியைப் பிடுங்கிவிடுவோம் என்று கருணாநிதியை, மிரட்டினால் தாங்கள் செய்ய வேண்டியதை கருணாநிதியே செய்துவிடுவார். ஆனால் தற்போது தமிழகத்தில் தன்னிச்சையாக எழுச்சியடைந்திருக்கும் மாணவர் போராட்டங்கள், வழங்கறிஞர்கள் போராட்டங்கள் போன்றவைகள் அவர்கள் கணிக்காத ஒன்றுதான். புரட்சிகர எண்ணங்கள் மக்களுக்குள் சருகாக கிடக்கின்றன. தேவை சிறு தீப்பொறி மட்டுமே என்ற உண்மையை ஆக்கிரமிப்பு சக்திகள் ஒருபோதும் விளங்கிக் கொள்வதில்லை. அவர்களது பலவீனம் எதுவோ அதுவே நமது பலம்.

- தாரகா ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com