Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

வார்த்தைகளுடன் வாழ்தல்:
தமிழ்நதி

சிறுவயதிலிருந்து நாம் எத்தனை ஆயிரம் வார்த்தைகளோடு பரிச்சயம் கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்கும்போது அதிசயமாக இருக்கிறது. அவையெல்லாம் நாளாந்த வாழ்வில் பிரயோகிக்கப்படாமல் மனதின் ஆழத்தில் வாழ்ந்து கொண்டுதானிருக்கும். வாசிப்பவர்களின் மனம் என்பது ஏறக்குறைய ஒரு அகராதி போல. அல்லது சொற்களின் கிடங்கு எனலாம். யவனிகா ஸ்ரீராமின் வார்த்தைகளில் சொல்வதானால் மனமொரு ‘சொற்கள் உறங்கும் நூலகம்’ என்றுகூடத் தோன்றுகிறது. சொற்களின் உறக்கத்தைக் கலைத்துப் பேசவைக்கிற உத்தி கைவரப் பெற்றவர்களே எழுத்தாளர்களாகக் கவனிக்கப்படுகிறார்கள்.

அண்மையில், அ.முத்துலிங்கம் அவர்களின் ‘வியத்தலும் இலமே’ என்ற நேர்காணல் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது. உலகின் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நேர்காணல்கள் உள்ளடக்கப்பட்ட தொகுப்பு அது. அதில் இரண்டிற்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தாம் விரும்பி ‘வாசிப்பது’ அகராதியையே என்று குறிப்பிட்டிருந்தார்கள். புதிய வார்த்தைகளோடு அறிமுகம் செய்துகொள்கிறவனால் (இந்த ‘ன்’ விகுதியை விலக்குவதெப்படி? வாசகர்களுக்கு அதுவே பழகிப்போனதால் அந்த லயத்தைத் திசைமாற்றி குறுக்கீடு செய்ய விரும்பாது ‘ன்’ இலேயே தொடர்ந்து இந்த ‘ள்’ ஆனவள் எழுதிக் கொண்டு போகிறேன்.) தேய்ந்த வழக்காறுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு புதியதோர் உலகத்தைத் தரிசிக்கவும், தான் கண்டுணர்ந்த பேரொளியை வாசகர்களின் மனங்களில் ஒரு சிறு சுடராகவேனும் ஏற்றவும் முடிகிறது.

‘எழுதிய மறுகணம் அந்தப் படைப்பு இறந்துவிடுகிறது’ என்பது எத்தனை உண்மை. உள்ளுக்குள் ஊடாடிக் கொண்டிருக்கும்வரைதான் அதற்கு உயிர் இருக்கும். அதை இறக்கிவைத்தவுடன் எழுதியவனைப் பொறுத்தளவில் அந்த உன்னதம் அழிந்துபோகிறது. நேசத்திற்குரிய குழந்தையைப்போல எண்ணத்தைச் சுமந்துகொண்டிருக்கும்வரை அதனோடு எவ்வளவு பேசிக்கொண்டிருந்தோம். சரி, தவறு என விவாதித்துக் கொண்டிருந்தோம். படைப்பாக இறக்கிவைத்தவுடன் நேற்றின் துயர் போல அதுவும் கரைந்து போய்விடுகிறது. அந்த வெற்றிடத்தை வேறொன்று இட்டு நிரப்புகிறது.

தெளிந்த சிந்தனையுடைய எவராலும் தங்கள் எழுத்தை ‘நன்றாயிருக்கிறது’ என்று கட்டித் தழுவிக்கொள்ள முடியாது என்றே தோன்றுகிறது. எழுதியவனுக்கே பிடிக்காமற் போய்விடும் எழுத்தை மற்றவர்கள் கொண்டாடும்போது ‘ஏமாற்றுகிறோமே…’ என்றொரு உறுத்தல் எழுதலே இயல்பு. ஒவ்வொரு எழுத்தாளனுமே ஒரு படைப்பை அதன் முழு உருவத்தோடும் வீச்சோடும் இறக்கிவைக்க முடியாமற் போகும் அயர்ச்சியோடும் ஆற்றாமையோடும்தான் இந்த வாழ்விலிருந்து விடைபெற்றுக் கொள்கிறான் என்று தோன்றுகிறது.

‘அது தன்னையே எழுதிக்கொண்டது. நான் அதற்கொரு கருவியாக இருந்தேன்’ என்று சொல்வது மிகைப்படுத்தலல்ல. ஒப்பனை வார்த்தையுமல்ல. நாற்காலியை நோக்கித் தன்னை இழுத்துச் சென்று அதில் பொருத்திக்கொள்வதுதான்; எழுதுபவர்களுக்குக் கடினமானதெனத் தோன்றுகிறது. பேனாவால் எழுதுவதோ தட்டச்சுவதோ எதுவானாலும் உட்கார்ந்து கையை வைத்த சில நிமிடங்களுக்கு ‘விளையாடப் போகிறேன்’ என்று அடம்பிடிக்கும் குழந்தையைப் போல எழுத்து சிணுங்கிக் கொண்டிருக்கும். பிறகு நடப்பதுதான் விந்தை! பிறகு வேறொரு உலகம்... வேறு மனிதர்கள்.. வேறு இசை...

அந்த மாயக்குழலோசையைத் தொடர்ந்து நாமறியாத வீதிகளில் நடந்துகொண்டிருப்போம். என்றோ நாம் சந்தித்த மனிதர்களுடன் பேசத் தொடங்குகிறோம். அவர்கள் பேசத் தவறியதைப் பேசத் தூண்டுகிறோம். அல்லது அவர்கள் வழியாக நாம் பேசுகிறோம். எம்முள் புதையுண்டிருக்கும் நகரங்கள் உயிர்க்கின்றன. உறைந்தவை யாவும் சலனமுறத் தொடங்குகின்றன. காட்டின் இருள், கடலின் ஆழம், இரவின் இரகசியம் போல அந்தக் குரல் நமக்கே புரிபடாத வசீகரத்துடன், புதியதொரு மொழியில் பேசுகிறது. அதை மொழிபெயர்த்து ஒரு சிலரால் எழுதிவிட முடிகிறது.

ஒரு தியானத்தைப்போல அதை உணர்ந்துகொண்டிருக்கத்தான் சிலரால் முடிகிறது. என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறதென்று சொல்லவும் முடிவதில்லை. காலம் குறித்த பிரக்ஞை அற்றுப் போகிறது. பூட்டிய கதவுக்கப்பால் ஓருலகம் இயங்கிக் கொண்டிருப்பது மறந்துபோகிறது. இயற்கையை மனிதரால் எப்படி முழுமையாகப் புரிந்துகொள்ள முடிவதில்லையோ எழுத்தும் அத்தன்மையதே.

நதியை வகிர்ந்தொரு படகு போகிறது. போன மறு கணம் சுவடும் இல்லாமல் நீர் கூடிவிடுகிறது. எழுத்துக் கூடிவரும் லயமும் அப்படித்தான். அந்தக் கணத்திலிருந்து நாம் ஒன்றைப் பொறுக்கிக் கொள்கிறோம். கொடுத்துவிட்டு ஒரு துளியும் குறையாத முழுமையுடன் அழகுடன் பொலிவுடன் அது இருந்து கொண்டுதானிருக்கிறது. ‘இந்தக் கருவில் இதை எழுதிக்கொடுங்கள்’ என்று யாராவது கேட்கும்போது, சாத்தியமற்றதெனத் தெரிந்தும் மறுக்கமுடிவதில்லை. ஒரு சட்டையைத் தைப்பதுபோலவோ ஒரு அலமாரியைச் செய்வதுபோலவோ அல்ல எழுதுவது. அது தன்னியல்பானது.

ஒரு பழத்தைச் சாப்பிட்டுவிட்டு அதன் விதையைப் குப்பையில் வீசிவிடுகிறோம். மண்ணுக்குள் அது தன்னைத் தயார்ப்படுத்துகிறது. மழைக்காகக் காத்திருக்கிறது. வீரியமுள்ளது வேளை வரும்போது மண்ணை முட்டி மோதிக்கொண்டு முளைவிடுகிறது. நாமாக முனைந்து எழுதுவதும், கால நிபந்தனைகள் வழங்கி எவரும் எழுதக் கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதுவதும் ‘பிளாஸ்டிக்’காலான செயற்கைத் தாவரம் மாதிரித்தான். அழகிருக்கும். வாசனை இருக்காது. பிறகு உயிரை எங்கேயென்று தேடுவது? சொற்களைத் தேர்ந்து ஒப்பனை செய்து பார்வைக்கு விட்டுவிடலாம். (அல்லது விற்றுவிடலாம்) அதற்கு வணிகனுக்குரிய தந்திரமும் சாதுரியமும் போதுமானது. உண்மை தேவையில்லை.

எழுத்தின் இதயம் எந்த மனிதரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. சகமனிதர்கள் கைவிடும்போது எழுத்துத்தான் தாங்கிக்கொள்கிறது. ‘என்னை அடி, அணைத்துக்கொள், வதைசெய், வசம்செய், புறக்கணி, கொண்டாடு எதுசெய்தும் உன்னைத் துக்கத்திலிருந்து விடுவித்துக்கொள்’ என்று முழுவதுமாகத் தன்னைத் தருகிறது. அதன் தோள்களில் சாய்ந்து கொள்கிறோம். அதன் மடியில் படுத்துக் கொள்கிறோம். ‘என்னைக் கைவிட்டுவிடாதே’என்று கெஞ்சுகிறோம். மெல்லிதயம் கொண்ட அது புன்னகையோடு நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. எல்லாம் எல்லோரும் கைவிட்டுவிட்டபோது கடைசிப் பற்றுக்கோடாக எழுத்தைக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களை உலகம் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று தூற்றுகிறது.

புறவுலகோடு சமரசம் செய்துகொள்ள முடியாதவர்களின் கடைசிப் புகலிடம் புத்தகங்கள் அல்லது மரணம் என்றே தோன்றுகிறது. புத்தகங்களை நேசிப்பவர்களை புத்தகங்களால் மட்டுமே புரிந்துகொள்ளமுடிகிறது. மனிதர்களை நேசிப்பவர்களை மரணம் மட்டுமே புரிந்துகொள்கிறது. ‘எழுத்து சோறு போடாது’ என்று பலரும் சொல்கிறார்கள். அது பெரும்பாலும் உண்மையாகத்தானிருக்கிறது. சோறும் எழுத்தெனும் சொர்க்கமும் அருகருகில் இருப்பது சிலருக்கே வாய்த்திருக்கிறது. அவர்கள் பாக்கியவான்கள்.

வேலை என்ற பெயரில் ஒரு நாற்காலியிடமோ அல்லது ஒரு இயந்திரத்திடமோ கையில் சாட்டையோடு உலவும் எசமானர்களிடமோ குறைந்தபட்சம் கடிகாரத்திடமோ நம்மை விட்டுக்கொடுத்துவிட்ட பாவிகளாகத்தான் பெரும்பாலும் உலவவேண்டியிருக்கிறது. ஒருவனின் படைப்புத்திறனை வேலை விழுங்கிவிடுகிறது. அவனுள் ஓடிக்கொண்டிருக்கும் நதி வற்றிப்போகிறது. அவன் காலத்தால் பின்தள்ளப்பட்டு கவனிக்கப்படாது போகிறான்.

“எந்தப் புத்தகத்தைப் படித்தாலும் பிளேட்டோ சொன்னதுதான் சரி. நமக்குள் இருப்பதுதான் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது. அதை மீறி ஒன்றுமில்லை.”

என்று ‘கண்ணாடியாகும் கண்கள்’இல் நகுலன் சொல்லியிருப்பதுபோல கதைகளைத் தேவதைகள் (எனக்கு இந்தத் தேவதை என்ற சொல் பிடிக்கும்)கொண்டுவந்து நம்மிடையே எறிந்துவிட்டுப்போவதில்லை. அவை எமக்குள் இருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடித்துப் பேச முடிந்தவர்கள் இருக்கிறார்கள். கண்டுபிடிக்கும் முயற்சியில் காணாமற் போனவர்களும் இருக்கிறார்கள். நாம் கண்டுபிடிப்பவர்களா தொலைந்துபோகிறவர்களா என்பதைக் காலம் தீர்மானிக்கும் என்று சொல்லிவிட்டுச் செல்லவே விருப்பம். ஆனால், சந்தர்ப்பங்களும் செல்வாக்கும் காழ்ப்புணர்வும் பக்கச்சார்பும் எழுத்துலகத்தையும் ஆக்கிரமித்திருக்கும் போது அவ்விதம் சொல்லிச் செல்வதில் தயக்கம் இருக்கவே செய்கிறது.

- தமிழ்நதி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com