Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

தி.ஜானகிராமன் - அழியா நினைவுகள்
தாஜ்


படைப்பாளிகள் சிலருடன் எனக்கு கடிதத்தொடர்பு இருந்தது. அவர்கள் கடிதங்களை மிகச் சாதாரண நடையில்தான் எழுதுவார்கள். நாவலில் நாம் ரசிக்கும் நடையை அவர்களது கடிதங்களில் எதிர்பார்க்க முடியாது. அந்த கடிதங்களில் அவர்களின் கையெழுத்தைப் படிப்பதென்பதும் சாதாரணப்பட்டது இல்லை! பெருக்கிய மண் தரையில், கோழி நடந்துச் சென்ற நாழிக்கெல்லாம் அதன் மேல் காக்கையும் குருவியும் தத்திச்செல்ல.... எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்! தி.ஜானகிராமனின் கடிதத்தில் நான் ரசித்த அவரது கையெழுத்தும் அந்த வகைதான்!

T.Janakiraman வாசகனுக்கு ஆசுவாசம் தரமுனையும் ஒரு சிலபடைப்பாளிகள் தமிழ் டைப்ரைட்டருடன் அதனை சாத்தியமாக்குவார்கள். அறிவேன்! மாறாய், சில படைப்பாளிகளின் கடிதங்கள் நமக்கு கிளர்ச்சி தருபவையாகவும் இருக்கும்! கண்களில் ஒற்றிக்கொள்ளவும் தோன்றும்! அச்சுமாதிரியான கையெழுத்தில் அப்படி ஒரு விசேஷம்! அதன் அடர்த்தியும், நுட்பமும் அவர்களின் படைப்பை ஒத்ததாகவே இருக்கும். ஆபிதீன் கடிதங்கள் மாதிரி!

தமிழின் தலைசிறந்த படைப்பாளியும், எங்கள் மாவட்டத்தின் பெருமைக்குரியவர்களில் ஒருவருமான தி.ஜானகிராமன் டில்லியில் இருந்து தனது 'ஆல் இண்டியா ரேடியோ' பணியை முடித்துக் கொண்டு சென்னை வந்து தங்கி, கணையாழியில் கௌரவ ஆசிரியராகவும் பொறுப்பேற்றுக் கொண்ட நாளில் அவருடன் எனக்கு கடிதத் தொடர்பு இருந்தது. நிறைகுடம் ததும்பாது என்பார்கள்.

தி.ஜா.வை சந்தித்தும் இருக்கிறேன்! இன்றைக்கு, அதே கண்கொண்டு 'நான்... நான்' என பரபரக்கும் நம் படைப்பாளிகளின் சுயதம்பட்டங்களை வாசிக்கிறபோது, ஏதோ.... நரகலை மிதித்த நிலை! எத்தனைக் காலமானாலும் சில நியதிகள் மாறுவதில்லை. ஒருவரது சாதனைகளை அடுத்தவர்தான் பேசவேண்டும்! தலைக்கு மேலே அவர்களுக்கு கொம்பே முளைத்திருந்தாலும்!

1980-களில் பஞ்சம் பிழைக்கவேண்டி சௌதி அரேபியா போயிருந்த நான், கிடைத்த ஓய்வில் நம் படைப்பாளிகளின் படைப்புகளை அங்கே வைத்து நிறைய படித்தேன். போதாதென்று, 'தமிழ்ப் பூக்கள்' கையெழுத்துப் பத்திரிகை வேறு! அது கையெழுத்துப் பத்திரிகைதான் என்றாலும், ஜெராக்ஸ் உதவியோடு குமுதம் சைஸிலான நேர்த்தி! நண்பர்களின் ஒத்துழைப்பு அதற்கு அதிகம். இயற்கையாக அதற்கு வாய்த்த இன்னொரு சிறப்பு... 'சௌதியின் முதல் தமிழ்இதழ்!' அந்த வளரும் இலக்கிய ஈடுபாடு கொண்ட தருணத்தில், நான் படித்த நாவல்களில் ஒன்றுதான் தி.ஜானகிராமனின் உயிர்த்தேன்!

ஜானகிராமனின் பிற நாவல்கள் மாதிரியே உயிர்த்தேனும், அன்றைய தஞ்சை மாவட்டத்து பார்ப்பன கிராமங்களின் உள்ளார்ந்த வாழ்க்கை முறைகளையும், அதன் வழுவல்களையும் தீர பேசும் யதார்த்தம்! உயிரோட்டமான ஓர் காதல் முரண் அதன் மையம். அன்பும், மனித நேயமும் நாவலின் நேர்த்தியான பின்னல். நாவல் புத்தகமாக வெளிவருவதற்கு முன், அது ஆனந்த விகடனில் தொடராக முப்பது வாரங்கள் தொடர்ந்திருக்கிறது!

நாவலின் முதல் அத்தியாயத்தில், வயது கூடிய ஒரு சாயபு, கிராமத்திலுள்ள பார்ப்பனத் தெரு ஒன்றில் வேதாந்தப் பாடல்களைப் பாடியபடி வெற்றிலை விற்றுக்கொண்டு வருவார். அவரிடம் வெற்றிலை வாங்கும் பார்ப்பனர்களிடம், ஏகாந்தமாகப் பேசியபடி தனது வேதாந்தக் கருத்துகளை இலவச இணைப்பாக வழங்குவார். எல்லா பார்ப்பனர்களுக்கும் அவரைப் பிடிக்கும். அவரது வேதாந்த மொழிக்கு காதும் கொடுப்பார்கள். அவரை 'வேதாந்தசாயபு' என்று பிரியாகவும் அழைப்பார்கள்! அன்றைய தஞ்சை மாவட்டத்து பார்ப்பனர்கள் தாம்பூலம் பேணுவதில் கெட்டி! ஃபில்டர் காப்பியும், தாம்பூலமும் அவர்களின் உயிர்! இன்றைக்கும் அவர்களுக்கு காப்பி அப்படியேதான்! தாம்பூலம் தெரியாது!

அந்த நாவலின் முதல் அத்தியாயம் பூராவும் வேதாந்த சாயபுவின் வலம்தான்! அவரிடம் வெற்றிலை வாங்கிய உப்லி என்கிற பார்ப்பன வாலிபர், "நாளைக்கு நீ வா! வீட்டிற்கு முக்கிய விருந்தாளிகள் வருகிறார்கள், வெற்றிலைத் தேவைப்படும்!" என்கிறார். வேதாந்தியும் நாளை வருவதாக சொல்லி விட்டு செல்ல, அந்த முதல் அத்தியாயம் முடிகிறது. ஆனால், அதன் பின் தொடர்ந்த இருபத்தி ஒன்பது அத்தியாயத்திலும் அந்த சாயபு வந்தார் இல்லை! அந்த நாவலின் போக்கைக் கணித்தபோது அந்த சாயபு, அந்த நாவலில் தொடர்ந்து வரவேண்டும் என்கிற அவசியம் இல்லைதான். ஆனாலும், அப்படி அவர் வராதுபோனதில் எனக்குள் ஓர் ஏக்கம். ஏதோ நஷ்டப்பட்டுப் போனமாதிரி!

'நான் உங்களது தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்தவன். பிறப்பால் முஸ்லீம், சாயபு அல்லது ராவுத்தன்.... ஏதோ ஒன்று! புஞ்சையில் பாத்தி வெட்டி கொடிகால் கட்டி வெற்றிலைப் பயிர் செய்வதும், அதை விற்பனை செய்வதும் இந்த மாவட்டத்தில் எங்கள் மூதாதையர்களின் குலத்தொழில்களில் ஒன்றென அறிவேன். உங்களது உயிர்த்தேனில் வேதாந்தசாயபு என்கிற ஒரு கதாபாத்திரம், அதன் முதல் அத்தியாயம் முழுக்க வந்து, வெற்றிலை வியாபாரம் செய்து / வேதாந்தம் பேசி / மீண்டும் நாளை வருவதாக கூறிச் செல்ல, பின்னாலான அத்தியாயங்களில் அவர் வந்தார் இல்லை!

அந்த வேதாந்தசாயபு குறித்து இன்னும் கொஞ்சம் எழுதியிருந்தீர்களேயானால், எங்களின் மூத்த சந்ததியினரின் அன்றைய வாழ்வியல் யதார்த்தத்தை உங்கள் வழியாக அறிய முடிந்திருக்கும். வாழ்வில் எதிர் கொண்ட அனுபவத்தை எழுத்தில் அச்சு அசலாக பதிவு செய்பவர் நீங்கள்! அப்படி அந்த வேதாந்த சாயபை பதிவு செய்திருக்கும் பட்சம், தேடுதல் கொண்டவனான எனக்கு அது மிகுந்த பயன்தருவதாக இருந்திருக்கும். அந்த அறிதல் வழியே, மகிழ அல்லது ஆதங்கப்பட எந்த வாய்ப்பும் தராமல் அப்படியே விட்டுவிட்டீர்கள்! இதற்கு நீங்களே காரணமா? அல்லது அன்றைக்கு அந்த நாவலை தொடராக வெளியிட்ட ஆனந்த விகடன் காரணமா?'

இந்த தகவலை மையப்படுத்தி, சௌதியில் இருந்து தி.ஜானகிராமனுக்கு ஓரு கடிதம் எழுதினேன். உடனே பதில் வந்தது. என் கடிதத்திற்குறிய மகிழ்ச்சியை தாராளமாகக் காட்டிவிட்டு, என்னைக் குறித்த அன்பான விசாரிப்பையும் செய்திருந்தார்.

கணையாழிக்கு எழுதச் சொல்லி என்னை உற்சாகப்படுத்தியிருந்தார். என்றாலும், என் கடிதத்தில் நான் வைத்திருந்த கேள்விகளுக்கு பதிலில்லை. வாசித்தால் மூளையின் நரம்புகள் சுளுக்கிக் கொள்ளும்படியான கையெழுத்தில், அடுத்த வாரத்து தினமணி கதிரைப் பாருங்கள் எனவும் எழுதியிருந்தார்.

அன்றைய காலக்கட்டத்தில் சௌதி அரேபியாவுக்கு, ஏதோ ஓரிரண்டைத்தவிர பெரும்பாலான தமிழ் நாளிதழ்கள், வார இதழ்கள் வருவதில்லை! ஏன் அப்படியென்றும் தெரியாது. நல்ல வேளையாக சௌதிக்கு தினமணி கதிர் வந்துக் கொண்டிருந்தது. என்ன.... நடிகைகள் தொப்புளைக்காட்டும் பகுதி/ அவர்கள் ஏதேனும் ஒரு கையை உயர்த்தி அபிநயம் பிடிக்க, இதோ தெறிக்கப் போகிறேனென ஜாக்கொட்டின் தையல் நம்மைப் பரிதவிக்கச் செய்யும் பகுதி / ஜெயராஜின் 'டிசர்ட் போட்ட டீன்ஏஜ்களின்' மார்பில், ஆங்கில வாக்கியங்கள் நெளியும் பகுதியென அதிமுக்கியத்துவங்களில் எல்லாம் கருப்பாய் தார்பூசி.....'சௌதி இஸ்லாமிய சென்சாரின்' கோரச் சிரிப்புடனேயே கிடைக்கும்! அந்தப்படங்கள் இல்லாத தமிழ் வாரப் பத்திரிகைகளை மனிதர்கள் எவராலும் படிக்க முடியாதென்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்! அப்படியும், வேறு வழியில்லாமல் 'ரியால்களை' கொடுத்து தண்டமேயென அந்த இதழ்களை வாங்கி, இடைவெளி தரிசனம் கொள்வோம்!

அந்த வார தினமணி கதிரில் தி.ஜா. கேரக்டர்கள் பற்றிய கட்டுரைத் தொடர் ஒன்றைத் தொடங்கியிருந்தார். 'உப்லியும் வேதாந்த சாயபும்' என்று தலைப்பிலான கட்டுரைதான் முதல் கட்டுரை. மூன்று வாரங்கள் தொடர்ந்தது. அந்தக் கட்டுரை, நான் கடிதம் எழுதியதற்கான பதிலாகவும், கூடுதல் விரிவுரையாகவும் இருந்தது. என் தேடல்களுக்கு அவர் மதிப்பளித்திருந்தாக உணர்ந்தேன். அவர் மீதான மரியாதை கூடியது.

வேதாந்த சாயபு பிறப்பால் ஒரு தலித்! அவர் வளர்ந்த காலத்தில், இப்பொழுது புழங்கும் இந்த அக்ரஹாரத்திற்குள் மட்டுமல்ல, எந்த பார்ப்பனப் பகுதிக்குள்ளும் நுழைய முடியாது. கோவில்களுக்குள் பிரவேசிக்க இயலாது. பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாது. புழுமாதிரி மண்ணில் நெளியலாம்! அனுமதி உண்டு! தீண்டாமையின் உச்சபட்ச வெப்பத்தை பிறப்பின் சாபமாக கொண்டவர்களில் ஒருவர் அவர்!

மனுதர்மம் இரண்டாயிர வருஷப் பழசாகி / பார்ப்பனர்கள் பலர் அதை மேற்கோள் காட்டவும் வெட்கப்பட்டு / பரண்மேல் ஏற்றிய காலம்தான் இந்த வேதாந்த சாயபு என்கிற தலித்தின் காலம். என்றாலும், சில மனுதர்மவாதிகள் பழைய ஆக்ரோஷத்தோடு அன்றைக்கும் தங்களை அடையாளப் படுத்திக்கொள்ள தவறவில்லை. மடங்கள் அமைத்து, 'மதத்தை காபந்து செய்கிறேன்' பேர்வழியாக மனுதர்மத்திற்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

இங்கே பேசப்படுகிற வேதாந்த சாயபு என்கிற நம்ம தலித், அன்றைய காலகட்டத்தில் சமூகத்தால் தீண்டதகாதவராக, ஒடுக்கப்பட்டவராக நடத்தப்பட்டாலும் அவரது அறிவும் அதன் தகிப்பும் அவரிடம் வஞ்சனையில்லாமல் கிளைத்தது. சுயசிந்தனையும், தன் முனைப்பும்கூட, பிறப்பை முன்வைத்து தனக்கு நிகழும் அவலத்திற்கு விடை தேடியவராக, ஒரு கட்டத்தில் அவர் இஸ்லாத்தி ற்கு மதம் மாறுகிறார். அப்படி அவர் மாறியநொடியில், பிறப்பால் படிந்த அத்தனை கசடுகளும் பொலபொலவென உதிர்ந்து விடு கிறது.இப்பொழுது அவர் எந்த அக்ரஹாரத்திற்குள்ளும் போகலாம் வரலாம். யாரும் ஏன் என்று கேட்க முடியாது.

இப்பொழுது அவர் தீண்டதகாதவர் இல்லை! அவர் இஸ்லாம்! இஸ்லாம் ஆனவர்! தலித்திலிருந்து இஸ்லாமானப் பொழுதின், அந்த மந்திர கணத்தின் வியப்பு வேதாந்த சாயபுக்கு எப்பவும் உண்டு! அதன் வெளிப்பாட்டு மொழிதான் அவரின் வேதாந்தாந்தம்!

இன்றைக்கு அவர் வேதாந்தம் பேசுபவராக, வெற்றிலை விற்பவராக பார்ப்பனர்களோடு சகஜம் பாராட்டுகிறார்! அவர்களும் இவரிடம் தீண்டாமை பாராது வெற்றிலை வாங்குகிறார்கள். அவரது வேதாந்தக் கருத்துகளுக்கும் காது கொடுக்கிறார்கள்....... அந்தக் கருத்துக்கள் தங்களை மறைமுகமாக இடித்துரைக்கிறது என்றாலும்! அந்த வேதாந்தி காலத்தை மிகசுலபமாக, லாகுவாக மாற்றிக் காட்டிவிட்டதையும், அதற்கு உயர்ஜாதிக்காரர்கள் இணங்கவேண்டி வந்த நிர்பந்தத்தையும், தி.ஜா. தனது அடியோட்டமான மொழியில் கிண்டலும் கேலியுமாக அந்தக் கட்டுரையைப் பின்னியிருந்தார். ஒரு வகையில் எங்களது மூதாதையர்களின் பாடும் இப்படித் தான் இருந்திருக்கும் என்பதை அவரது இந்தப் பதிவின் வழியே உணரமுடிந்தது! ஏனென்றால், நாங்களும் 'இஸ்லாம் ஆனவர்கள்' தானே!

தலித்தாகப் பிறக்க நேர்ந்த பிறப்பால், தன்மீதும் தன் சமூகத்தார் மீதும் இறுகக் கவிழ்ந்திருக்கும் சமூகத் தடைகளை உந்தித் தள்ள, முடிந்தால் உடைத்தெறிய ஒரு லட்சம் தலித் மக்களோடு, மரியாதைக்குரிய பாபாசாகேப் டாக்டர். அம்பேத்கார் புத்த மதத்திற்கு மாறினதையும், பெரியார் தமிழகத்திலுள்ள தலித் மக்களை இஸ்லாத்திற்கு மாறுமாறு திரும்பத் திரும்ப சிபாரிசு செய்ததையும் இங்கே நினைவுகொள்கிறேன்.

"ரொம்ப எளிது! ஒரு மௌலானாவை வைத்துக்கொண்டு, லாயிலாக இல்லல்லாஹூ முகம்மதுர் ரசூலில் லாஹி என்றால் போதும்! நீங்கள் இஸ்லாம் ஆகிவிடுகின்றீர்கள்! உங்கள்மீது படிந்துள்ள தீண்டாமை இழுக்குகள் அந்த நொடியிலேயே விலகிவிடும்!" என்று தலித்துகளை உந்தித் தள்ளுகிறவராக இருந்தார் பெரியார்!

தி.ஜா, தினமணி கதிரில், 'உப்லியும் வேதாந்த சாயபும்' எழுதியபோது, இதயம் பேசுகிறது மணியன் இருந்தார். ஆனந்த விகடன் ஆசிரியர் பொறுப்பிலிருந்து வெளியாகி இதயம் பேசுகிறது என்கிற வார இதழை நடத்திக் கொண்டிருந்தார். வடக்கே இருந்த இந்துத்துவா அமைப்புகளுக்கு முதன்முதலில் தமிழக ஏஜண்ட்டாக செயல்பட்டவர் இவர்தான். 'உப்லியும் வேதாந்த சாயபும்' வெளிவந்த பிறகு மணியன் தனது இதழில் தி.ஜா.வை காராசாரமாகத் தாக்கி எழுதினார்: "இந்த மனிதர், முந்தையக் காலங்களில் சிறுகதை எழுதுகிறேன், நாவல் எழுதுகிறேன் என்று தனது சொந்த சமூகத்திற்கு செய்த தீங்கெல்லாம் போதாதென்று இப்பவும் அப்படிச் செய்கிறாரே!". என்கிற ஆதங்கத்துடன், மேலும் பல தாக்குதல் கொண்டது அது.

தி.ஜா.வின் மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள் முதலிய நாவல்கள் அவர் சார்ந்த சமூகச் சூழலின் யதார்த்த வெளிப்பாடுகள். என்றலும், அதில் சர்ச்சிக்கப்பட்ட பார்ப்பன இருப்பு சார்ந்த சங்கதிகள் அந்த இனத்தாருக்கு மிகுந்த தலைவலியை தருபவையே! அம்மா வந்தாள் நாவலை அவர் எழுதியபோது அவரது சொந்த ஊரான, மன்னார்குடி பக்கமுள்ள வேதக்குடி (முன்பு தஞ்சை மாவட்டம், இப்பொழுது திருவாரூர் மாவட்டம்!) கிராமவாசிகள் பெரும் கோபம் கொண்டடு, அவரை ஊரைவிட்டு நீக்கி வைத்ததாக (ஃபத்வா) அன்றைக்கு காதுவழி செய்தி புழக்கத்தில் இருந்தது. பின்னர் அது நிஜமெனவும் அறிய வந்தேன். என்னளவில் ஃபத்வா மாதிரியான முட்டாள் தனங்களை ஜீரணிப்பது கஷ்டம்! இன்றைக்கும் அப்படிதான், நேற்றும் அப்படிதான்.

சரியான பார்வையில் ஒரு எழுத்தாளன் என்பவன் இனம், மதம், மொழி, தேசியமெல்லாம் கடந்தவன். நம்ம தேசம் அடுத்த தேசத் தோடு போரிடும் நிலையிலும்கூட, நம் பக்கத்தில் தவறுகண்டால் பேதம் பாராமல் சொல்லக்கூடியவன் அவன். அவனது சுதந்திரம் என்பது வானத்திற்கும் பூமிக்கும் ஆனது! சிலநேரம் விலைபோய்விடுகிற அல்லது அரசியல் சித்துக்குள் சிக்கிக்கொள்கிற எழுத்தாளர்கள் 'இந்த வானமே எல்லை' சுதந்திரத்தை கையில் எடுத்துக் கொள்ள, சிக்கலாகி விடுவதும் உண்டு. தி.ஜா. ஒரு எழுத்தாளனுக்குரிய சரியான சுதந்திரப் பாதையில் நடந்தவர் என்பதில் இரண்டு கருத்திருக்க முடியாது.

தி. ஜா. குறித்த அந்தப் பழைய சங்கதியை நினைவு கூர்ந்துதான் இதயம் பேசுகிறது மணியன் அப்படி கோபப்பட்டு எழுதினார் என்றார்கள். தன்னைத் திட்டுபவர்களுக்கோ, விமர்சிப்பவர்களுக்கோ தி.ஜா. மறுப்பு எழுதும் பழக்கமில்லாதவர். மணியனின் எதிர்வினைக்கும் அப்படித்தான் மௌனம் காத்தார். இதயம் பேசுகிறது மணியன் தனது பத்திரிகையை நடத்திய அழகிற்கு(!) தி.ஜா.வை விரல் சுட்டி குற்றம் சாட்டியதெல்லாம் அதிகம்! அவருக்கு அதற்கான தார்மீக உரிமையெல்லாம் கிடையாது!

தி.ஜா. விடம் நட்பு துளிர்த்த காலக்கட்டத்தில், சௌதியில் இருந்து ஒரு மாத விடுமுறையாக ஊர் வந்திருந்தேன். தி.ஜா.வை பார்க்கும் எண்ணம் இருந்தது. தமிழ்ப்பூக்களுக்காக 'இலக்கியம் என்பது' என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை வேண்டும் என்று, கடித வழியே அவரிடம் வேண்டுகோள் வைத்திருந்தேன். எழுதித் தருகிறேன் என்று எழுதியிருந்தார். அதையும் ஞாபகப்படுத்தியாக வேண்டும்! அவரை சென்னை வந்து சந்திப்பதற்கு கடிதம் எழுதினேன். பதில் எழுதியிருந்தார். 1982, நவம்பர் மாதத்தின் ஒரு நாள் காலை, அவர் குறிப்பிட்டிருந்தப்படி மணி சுத்தமாக சந்திக்க சென்றேன். திருவான்மியூர் பக்கம் மரங்கள் கொண்ட ஒரு பகுதியாக இருந்தது அது! பழைய அடுக்கு மாடிக்கட்டிட முதல் தளத்தின் ஓர் இருப்பில் தி.ஜா.இருந்தார். தேடிக் கண்டுபிடித்ததில் ஏக மகிழ்ச்சி!

இன்முகத்தோடு வரவேற்றார். சகஜமாகப் பேசினார். பேச்சில் அன்பிருந்தது. மனைவியை அறிமுகம் செய்தார். ஏனோ எனக்கு மோக முள்ளின் ஞாபகம் வந்தது. தி.ஜா.தான் அதன் நாயகன் என்று நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்த நாவலின் நாயகி யமுனா கூட வேறு யாருமல்ல! அவரது மனைவிதான்! என்றோரும் உண்டு. இரண்டுபேரையும் ஒரு சேரப் பார்த்தபோது எனக்குள் இலேசான பரவசம். அது குறித்து தி.ஜா.விடம் கேட்கும் துணிவு எழவில்லை! கேட்டிருந்தாலும் நிச்சயம் கோபித்திருக்க மாட்டார். ஆனால், நிச்சயம் சிரித்திருப்பார்.

திருமதி. ஜானகிராமன், இயற்கையால் திருத்தம் கொண்ட எளிமையின் அம்சமாக இருந்தார்! சாயலில் தெய்வீக கலை! தனது சிறுகதைகளிலும், நாவல்களிலும் நாயகிகள் குறித்த வர்ணனையைக் காட்டிலும், நாயகிகளின் தாய்களான நடுவயதைத் தொட்ட அந்த மாமிகளை குறித்த வர்ணணைகள் தி.ஜா.வின் எழுத்தில் பிரமாதப்படும்! அவரது அந்த 'வர்ண' சங்கதிகள் நாவல் வாசிப்பில், நமுட்டுச் சிரிப்பை வலிய கொண்டுவந்து சேர்க்கும். எனக்கும், திருமதி. ஜானகிராமனை அப்படி இரண்டு வரி எழுத ஆசை! ஆனாலும் முடியவில்லை. முடியவும் முடியாது. அந்த வர்ணனைகள் அவர் மட்டுமே பெற்ற வரம்!

சௌதியின் அரேபியர்கள் குறித்து பேச்சு நகர்ந்தது. அவர்களை அறியும் வகையில் உள்ளார்ந்த கேள்விகளை கேட்டார். நானும் அவர்களில் பெரும்பான்மையோரின் தன்மைகளைப் பற்றிச் சொல்லத் தொடங்கினேன். அவர்களது தன்மைகளை ஒவ்வொன்றாக விவரிப்பதைவிட, ஒட்டுமொத்தமாக ஒரு நிலையின் அடியில் குவித்து, சித்திரத்தை எழுப்பிக் காட்டிவிடுவது எளிது. ஒரு பெண்ணின் நிர்வாண நிலையை அமெரிக்க ஆணின் முகத்தில் ஏற்றி வரையப்பட்ட நவீன வரைபடம் ஒன்றை ஓர் அமெரிக்க மெகஸீனில் பார்த்த ஞாபகம்! அதையே கொஞ்சம் மாற்றி, அந்த ஆணின் முகம் இன்றைய நவீன அரேபியரின் முகமாக திருத்தி, பேச்சினூடே தி.ஜா.க்கு வரைந்து காட்டினேன். ரசித்தார்! ரசிப்பதற்கு அடையாளமாக அவரும் அதையொட்டிய பேச்சில் பங்கெடுத்தார்.

தனது மகள் சோஸியாலஜி படித்துவிட்டு, ஹைதராபாத்தில் அதுகுறித்த ஆய்வுகளை செய்வதாக தி.ஜா. சொல்லத் தொடங்கினார். ஹைதராபாத்தில் முஸ்லீம் ஏழைகள் அதிகமாக வாழும் பகுதியில், தனது ஆய்வை மேற்கொண்டபோது நடந்த ஒரு நிகழ்வை தனது மகள் சொன்னதாகச் சொன்னார்.

அந்த காலக்கட்டத்தில், அரபுநாடுகளில் இருந்து ஏகப்பட்ட அரபிகள் ஹைதராபத்தில் உள்ள அந்தப் பகுதிக்கு வந்து, ஏழைப் பெண்களை வயது வித்தியாசம் பாராது சரமாரியாக திருமணம் செய்து, தங்கள் நாட்டிற்கு அழைத்துப் போய் கொண்டிருந்தார்கள் என்பதும், அந்த பெண்களுக்கு வாழ்வின் பாதுகாப்பு குறித்த எந்த ஒரு உத்திரவாதமும் இல்லை என்பதும், அப்படி திருமணம் செய்துக் கொள்ள வருபவர்களுக்கு சௌகரியங்கள் செய்து தரும் திருமண ஏஜண்டுகளும் அந்தப் பகுதியில் இருந்தார்கள் என்பதும் பத்திரிகை வாயிலாக நானும் அறிந்ததே ஆனால் இங்கே தி.ஜா. சொன்ன செய்தி நான் அறியாத ஒன்றுதான். அதன் அதீதம் யாரையும் மலைக்கவும் யோசிக்கவும்கூட வைக்கும்!

ஓர் அரேபியன், தனது தேசத்தில் இருந்து திருமணத்திற்காக அங்கு வந்ததாகவும், அவனுக்கு பெண் தேடித்தர ஏஜண்டுகள் ஒத்துழைத்ததாகவும், அதன்படி ஓர் ஏழை முஸ்லீம் வீட்டிற்கு அவனை அழைத்துச் செல்ல, அந்த வீட்டில் திருமணம் ஆகாத நாலு பெண்பிள்ளைகளும், அவர்களின் பெற்றோர்களும், மேலும் அவர்களின் வசீகர ஏழ்மையும் இருந்ததாம்! அந்த அரபியிடம் தனது நான்கு பெண்பிள்ளைகளையும் வரிசைக் கிரமமாக கொண்டு வந்து நிற்க வைத்துக் காட்டி, யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து தர சம்மதம் என்றிருக்கிறார் அந்த பெண்ணின் தாய்! அந்த நான்கு பெண்களையும் பார்த்த பிறகு அந்த அரபி, ஏஜண்ட் காதில் ஏதோ குசுகுசுக்க அவனுக்கு அதிர்ச்சி! பின்னே இருக்காதா? பார்த்த நான்குப் பெண்களையும் விட்டு விட்டு, அந்தப் பெண்களின் தாயார் சம்மதித்தால் அவரை திருமணம் செய்துக் கொள்ளச் சம்மதம் என்றால் எப்படி?

முதலில் தயங்கிய ஏஜண்ட், அந்த பெண்ணின் தாயாரை அழைத்து மெல்ல அரபியின் அபிப்ராயத்தை வெளிப்படுத்தவும், அந்த தாயார் தன் கணவரை அழைத்துச் சென்று கலந்து பேசிவிட்டு அதற்கு உடன்பட்டாளாம்! அலைக்கழிக்கும் ஏழ்மை, அவர்களை எதற்கும் தயார்படுத்தி விடுகிறது என்றார் தி.ஜா! ஆய்வில் அறிய வந்த இந்த செய்தியை தனது மகள் மிகுந்த ஆச்சரியத்துடன் தன்னிடம் விவரித்ததை, சாதாரணமாகச் சொன்னார். தி.ஜாவை காலம் வழி மறிக்காது இருந்திருந்தால், இந்த நிகழ்சம்பவம் குறித்த ரசனையானதோர் கதை நமக்கு நிச்சயம்.

தபாலில் நான் அனுப்பி வைத்திருந்த என் கையெழுத்து இதழான 'தமிழ்ப் பூக்களை' பாராட்டினார். அவரது பாராட்டுக்கள் என் இதழுக்கும், எனக்கும் அதிகப்படி! என் இதழின் லட்சணமும், அன்றைய என் இலக்கிய அளவும் எனக்கு நன்றாகவே தெரியும்! அந்த சிகரம் என் வளர்ச்சியை விரும்பி அப்படி தட்டிக் கொடுக்கிறதாக மட்டும் புரிந்து கொண்டேன். அம்மா வந்தாள்/ மரப்பசு நாவல்களை அந்த காலக்கட்டத்தில் ரஜினியும், கமலும் புகழ்வார்கள். அது திரைப்படம் ஆகணும், அதில் தாங்கள் நடிக்கணும் என்றும் பேட்டிகளில் குறிப்பிடுவார்கள். அவர்களுக்கு இந்த நாவலின் மையமேனும் புரியுமா? என்று தி.ஜா.விடம் நான் கேட்டேன். தனக்கும் அப்படியொரு சந்தேகம் இருப்பதாகச் சொன்னார்.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற சுவீடிஸ் எழுத்தாளர் பர்லாகர் க்விஸ்ட் எழுதிய 'ட்வார்ப்' என்கிற குறுநாவலை, தி.ஜா. அவர்கள் 'குள்ளன்' என்கிற பெயரில் மொழிமாற்றம் செய்திருந்தார். அந்த நாவல் அவரது மறைவுக்குப் பிறகே வெளிவர, படித்தேன். நான் படித்த மிக சில உன்னதங்களில் இதுவும் ஒன்று! அவர் வாழ்கிற காலத்திலேயே இது வந்திருந்து நானும் படித்திருக்கக் கூடுமென்றால், அவரது பிற நாவல்களை குறித்துப் பேசுவதை எல்லாம் விட்டு 'குள்ளன்' குறித்து மட்டுமே அவரிடம் பேசி மகிழ்ந்திருப்பேன். தி.ஜா.வின் குசும்புகளுக்கு ஏற்ற நாவல் களம் குள்ளன்!

பேச்சு, ஜெயகாந்தன் குறித்து நகர்ந்தது. ஜெயகாந்தனை, 'மிகப் பெரிய மேதை!' என்று சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டிருந்தீர்களே என்றேன். நான் டெல்லியில் இருந்து இங்கு திரும்பிய பொழுது பல பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்க என்னிடம் வந்தார்கள், வந்திருந்த எல்லோருமே ஜெயகாந்தனைக் குறித்து என்னிடம் கேட்டார்கள். அவர் மிகப் பெரிய மேதை என்றேன். நான் அப்படிச் சொன்னதில் பேட்டி எடுக்க வந்தவர்களுக்கு பரமதிருப்தி. அதை கேட்டறிந்த ஜெயகாந்தனுக்கும் சந்தோஷமென அறிந்தேன். அப்படியே ஓர் இதழிழும் எழுதியிருக்கிறார்! அவர் சந்தோஷப்படும் அளவுக்கு என் பதில் அமைந்து போனதில் எனக்கும் சந்தோசம்! என்றார். நான் இலேசாகச் சிரித்தேன். இல்லை நீங்கள் நினைப்பது மாதிரியில்லை அவர் மிக நல்லவர் என்றார். மேலும் சிரிப்பு வந்தது.

கணையாழியில் அவர் ஆசிரியர் பொறுப்பேற்று இருப்பது குறித்து கேட்டேன். அதிகம் விற்பனை ஆகமாட்டேன் என்கிற கவலையும், விற்பனைக்கான முயற்சிகளை மேற்கொண்டால் அதிகமாக விற்பனை ஆகிவிடுமோ என்ற கவலையும் ஏற்படுகிறது என்றார். வாசகர்கள் முன்வந்து சந்தா கட்டினால் அல்லவா நன்றாக இருக்கும் என்று விட்டு வாரத்திற்கு, இரண்டு வார இதழ்களை வாங்கும் வாசகன், மாதத்திற்கு சுமார் நாற்பது ரூபாய் செலவு செய்கிறான். ஆனால், மாதம் ஆறு ரூபாய் கொடுத்து இலக்கியத் தரம் வாய்ந்த கணையாழியை வாங்க மறுக்கிறான் என்றார்.

மன்னிக்கனும் ஏன் அப்படி சொல்கிறீர்கள்? கணையாழி அதிகம் விற்பனையானால் என்ன? என்று அவரது முதல் கவலையைத் தொட்டேன். அதிகம் விற்பனையானால் வாசகர்களின் இழுப்புக்கு பத்திரிகை போகும் அபாயம் உண்டென்றார். இலக்கியச் சிற்றிதழ்களுக்கு இப்படி ஓர் அபாயம் இருக்கிறதென்பதை அன்றைக்குத்தான் அறிய வந்தேன். தமிழ்ப் பூக்களுக்காக தி.ஜா.விடம் நான் கேட்டிருந்த 'இலக்கியம் என்பது?' கட்டுரையை ஞாபகப்படுத்தினேன். நீங்கள் எப்பொழுது திரும்பப் பயணம் புறப்படுகின்றீர்கள் என்றார். இன்னும் பத்து நாட்களில் என்றேன். போகிறபோது வந்து வாங்கிச் சொல்லுங்கள் என்கவும், அப்படியே என்று விடைபெற்றேன்.

சௌதி அரேபியாவுக்கு குறிப்பிட்ட நாளில் மீண்டும் திரும்பியபோது, சென்னை - தி.ஜா. வீட்டிற்குச் சென்று கட்டுரையை வாங்கி செல்ல முடியாத காலப் பஞ்சம்! சௌதிக்குப் போனவுடன், சந்திக்க முடியாதுபோன சூழ்நிலையை விளக்கி தி.ஜா.வுக்கு கடிதம் எழுதணும் என்று நினைத்தேன். தமிழ்ப் பூக்களுக்கு தருவதாகச் சொன்ன கட்டுரையை தபால் வழியாகவே பெற்றுக் கொள்ளலாம் என்று தீர்மானித்தேன். அப்பொழுதெல்லாம் சௌதிக்குப் போக, சென்னையில் இருந்து பம்பாய் புறப்பட்டுப் போய் அங்கிருந்து சௌதிக்குச் செல்லவேண்டும்! அப்படித்தான் அன்றைக்கும் சென்றேன். பம்பாய்க்கு நான் செல்ல இருந்த விமானத்தின் நேரம் மாறிப்போக, எல்லாமும் திருகிக்கொண்டது. கடைசியாக தி.ஜா.வை தவறவிட்டு விட்டதையும் சேர்த்து!

தெஹ்ரான் ஏர்போட்டில் என் வரவுக்காக மூன்று நண்பர்கள் காத்திருந்தார்கள். அந்த மூவருமே இலக்கிய மயக்கமுடையவர்கள்! அல்லது அந்த வகைக் கிறுக்குகள். என்னை மாதிரி! ஏர்போர்ட்டை விட்டு வெளியானதும் அவர்கள் கூறிய முதல் செய்தி "தி.ஜா. மரணித்து விட்டாரே தெரியுமா!? காலை ஆல்இந்தியா ரேடியோவில் கேட்டோம்!" என்றார்கள். மிகுந்த அதிர்ச்சி! நம்பமுடியவில்லை! பத்துநாட்களுக்கு முன் ஒரு குறைப்பாடும் சலனப்படாத விதமாய் பேசிக்கொண்டிருந்தவரின் மரணத்தை அத்தனை எளிதில் ஒப்புக்கொள்ள மனம் முரண்டு பிடித்தது.

இரண்டாண்டுகள் கழித்து மீண்டும் விடுமுறையில் ஊர் வந்தேன். ஒரு மாலைப் பொழுதில் பக்கத்து டவுனுக்குப் போய் வரும்படியான ஒரு சின்னவேலை. ஆனதும், நல்ல டீ குடிக்க கடை தேடி அலைந்தேன். நிஜத்தில் நல்ல டீக்குப் பிறகு, புகைக்க இருக்கும் திருப்திக்கான அலைச்சல் அது! சிறுவயதில் பிரமிப்புடன் மனதில் படிந்த அந்த நகரத்தின், இன்றையச் சிதைவுகள் மனதை நெருடியது. விதவிதமான கலர்ப்பூச்சில் ஏகப்பட்ட புதிய கட்டங்கள்! அந்த நகரத்துச் சிதைவே அங்கிருந்துதான்! அதை ஏனோ வளர்ச்சியாக மனம் ஒப்பவில்லை.

பரப்பரப்பான அந்த கடைவீதியில் இரண்டு வியாபாரக் கடைகளுக்கிடையில், நொறுங்கி விழுந்த நிலையில் ஒரு சிறிய கடையின் கல் குவியல். மீதப் பகுதியாக நிற்கும் சிமெண்ட் பூச்சு இல்லாத சுவரெல்லாம் புல்பூண்டு முளைத்துக்கிடக்க, இடைப்பட்ட அந்தச் மேடுப் பள்ளமான சின்ன விஸ்தீரணத்தில் எளிமையானதோர் பழைய புத்தகக் கடை விரிப்பு! நாலைந்து பேர்கள் அந்தக் குவியலுக்குள் பாலகுமாரனையும், ராஜேஸ்குமாரையும் தேடிக் கைகளில் அடுக்கிக் கொண்டிருந்தார்கள்.

டீக்கடையைத் தேடுவதைவிட்டு, எந்த முன் முடிவும் இல்லாமல் அங்கே நானும் துலாவ ஆரம்பித்தேன். கசங்கிய நிலையில் முந்தைய ஆண்டின் அமுதசுரபி தீபாவளிமலர்! எடுத்துப் புரட்டியபோது, தி.ஜா. குறித்த முதலாண்டு நினைவுக் கட்டுரை இருந்தது. கட்டுரையின் மையத்தில், இரண்டுக்கு மூணு இன்ச் சைஸ்ஸில், கலரில் ஓர் பெட்டிச் செய்தி! தி.ஜா. கடைசியாக எழுதிய எழுத்துப் பற்றிய குறிப்பு அது! 'இலக்கியம் என்பது' என்கிறத் தலைப்பில் தி.ஜா. எழுதிய கட்டுரை ஒன்று முடிவுறாத நிலையில், மரணம் அவரை தழுவிக் கொண்டதாக அந்த குறிப்பு வருந்தியிருந்தது!

- தாஜ் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com