Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteratureArticle
கட்டுரை

ஜெயகாந்தன் / ஒரு நாள் ஒரு பொழுது!
தாஜ்


தி. ஜானகிராமனை சந்தித்து உரையாடிய அதே தினத்தில் ஜெயகாந்தனையும் சந்தித்தேன்! தி.ஜா.வை காலையில் என்றால் ஜே.கே.வை மாலையில்! 1982ம் ஆண்டு, நவம்பர் மாதம்! என் இலக்கிய குளிரின் முன் அனுபவக் காலம்! முன்தைய மாதங்களில் செளதியில் சிற்றிதழ் நடத்தி, அதனூடான சாரலில் நனைந்த 'ஜில்லிப்பு' வேறு! அன்றைய மாலைப்பொழுது ரம்மியமாகவே தெரிந்தது. ஜே.கே. குறிப்பிட்ட அவரது அலுவலக முகவரியை நண்பனின் உதவியோடு கண்டடைந்தேன்.

Jayakandan எனது சிற்றிதழுக்காக, ஓர் நேர்காணல் வேண்டி ஜே.கே.யிடம் அனுமதி பெற்றிருந்தேன். அந்த அனுமதி அத்தனை சீக்கிரம் தகைத்துவிடவில்லை! சௌதியில் இருந்து அது குறித்து கடிதம் எழுதியபோதும், ஊர் வந்திருந்த நாளில் நினைவூட்டித் தபால் எழுதிய போதும், அவரிடமிருந்து ஒரு பதிலும் இல்லை. தி.ஜா.வை சந்திக்க சென்னைக்குப் போன தினத்தில், டெலிபோனில் அவரைப் பிடித்தேன். என் கடிதங்களை ஜே.கே. நினைவு கூர்ந்தார்! வாருங்கள் என்றார்! அன்றைக்கே, மாலைப் பொழுதில் ஒரு நேரத்தையும், தனது அலுவலக முகவரியையும் சொன்னார்!

ஜே.கே.வை இப்படி இலக்கிய கோதாவில் நேர்சந்திப்பது இதுதான் முதல் முறை. என்றாலும், அவரை இதற்கும் முன் சில தடவைகள் பார்த்ததுண்டு. அவரது சில சிறுகதைகளையும், ஓரிரு நாவல்களையும் கல்லூரிக் காலங்களில் படித்ததினாலான பிம்பம் மனதில் தங்கியதைவிட, ஆனந்த விகடனில் எழுதும் தலைசிறந்த எழுத்தாளர்; தலைவர் காமராஜ் பக்கம் நின்று பேசுகிறார் என்கிற பிம்பம்தான் ஓங்கி இருந்தது. அப்பொழுது அவர், காமராஜின் தூதராக தமிழகம் முழுவதும் கூட்டங்கள் பேசிக்கொண்டு இருந்தார். அப்படி ஓர் கூட்டம் பேச சிதம்பரத்திற்கு வந்திருந்தபோது, அண்ணாமலை யூனிவர்சிட்டி கெஸ்ட் ஹவுஸில் அவருக்கு ஒரு பகல் பூராவும் ஜாகை அமர்த்தப்பட்டிருந்தது. நான் என் சக மாணவர்களோடு சென்று, அவரை அங்கு வைத்து சந்தித்து, கொஞ்சம்போல உரையாடியதுண்டு. அந்த உரையாடல் அரசியல் சம்பந்தப்பட்டது. மாணவர்களது பார்வையில் பேசப்பட்ட எங்களது அரசியல் பேச்சை, தூக்கியெறிந்தபடி கணீரென்றுப் பேசினார்.

அண்ணாமலை மாணவர்களில் பெரும்பகுதியினர், அன்றைக்கு காமராஜ் வாழ்க என்கிற ரகம்! கூடவே, உலகத்திலேயே சிவாஜி தான் உயர்ந்த நடிகர் என்றும் சத்தியம் செய்வார்கள்! அதில், என் சத்தியம் உணர்ச்சிக் கொந்தளிப்பானது! அந்த அழகில்தான் இருந்திருக்கும் அன்றைக்கு அவரோடான எங்களது அரசியல் பேச்சும்! அவர் எங்களை தூக்கியெறிந்துப் பேசியது சரியென்று புரிய காலங்கள் ஆனது!

புனைக் கதைகளின் மேல் ஆர்வமும், நல்ல எழுத்தை தேடிப் படிப்பதில் நாட்டமும் கொண்ட என் சமகால 'எழுத்து' விரும்பிகள் மாதிரி, நானும் என் நல்ல எழுத்தின் தேடலை ஜெயகாந்தனில்தான் தொடங்கினேன்! அவரை முட்டமுட்டப் படித்தப் பிறகுதான் (அவரது எல்லா எழுத்துக்களையும் படித்திருக்கிறேன் என்கிற அர்த்தத்தில் அல்ல) பிற படைப்பாளிகள் எல்லாம் பரிச்சயம். ஜே. கே.யை படித்தக் காலத்தில், கா.நா.சு, தி.ஜானகிராமன், எம்.வெங்கட்ராமன், மௌனி, நகுலன், ஜி.நாகராஜன், புதுமைப்பித்தன், சுந்தரராமசாமி, கி.ராஜ நாராயணன், அசோகமித்திரன் என்போர்களில் ஒருவரது பெயரும் கூட அறிந்தவனில்லை நான்!

அன்றைக்கு கைக்கெட்டிய தூரத்திலெல்லாம் ஜெயகாந்தன்தான் கிடைப்பார். தடங்களே இருக்காது. வாசிக்க விரும்பும் ஜே.கே.யின் புத்தகங்கள் சக நண்பர்களிடம் கிடைக்காவிட்டாலும், கட்டாயம் பெண் நண்பர்களிடம் கிடைத்து விடும்! அவர்கள் ஜே.கே.யின் கதைகளையும், நாவல்களையும் சேகரிப்பதில் ஒருவருக்கொருவர் போட்டி கொண்டவர்களாகவும் இருந்தார்கள்! வாரப் பத்திரிகையில் தொடராக வந்த அவரது கதைகள், நாவல்கள் அத்தனையையும் படித்தப்பின் தனியே எடுத்து, தைத்து பைண்ட் செய்யப்பட்ட தொகுப்புகளாக பாதுகாத்தும் வைத்திருப்பார்கள். அன்றைக்கு ஜெயகாந்தனின் கீர்த்தி அப்படியோர் உச்சத்தில் இருந்தது!

அன்றைக்கு, வேலைக்குப் போகிற பெண்களின் கைப்பையில் தயிர்சாதமும் மாங்காவடு ஊறுகாயும் தட்டிப் போனாலும், ஜே.கே.யின் கதைப் புத்தகம் ஒன்று அதில் தட்டாது என்கிற அளவுக்கு நம் படித்த பெண்கள் அவரது கதையோடவே போவார்கள், வருவார்கள்! அவர்களிடம் புத்தகம் வாங்கிப் படிக்க வேண்டியாகிலும் ஜே.கே.யின் கதைகளை, நாவல்களை இரண்டாம் முறை, மூன்றாம் முறையெனப் படித்த அனுபவங்களும் உண்டு!

இந்தப் பெண்களும் சும்மாவேணும் ஜே.கே.யின் புத்தகங்களை படித்து விடவில்லை. அவர்களுக்காக ஜே.கே. தனது கதைகளில் எத்தனை எத்தனை 'லாஜிக்'குகள் பேசி அவர்களின் நவீனப் போக்குகளை, தடையுடைப்புகளை எத்தனை இடங்களில் நியாயப்படுத்தியிருக்கிறார்! 'அக்கினிப் பிரவேசம்' கதையில், அலுவலகம் போகும் சின்ன வயதுப் பெண் ஒருத்தி கற்பு ரீதியான சம்பிரதாயக் கட்டுகளில் இருந்து வழுவிவிட, அவளுக்காக, அல்லது அவளையொத்த சிலருக்காக அவர் செய்திருக்கும் வாதமும், தீர்வும் சாதாரணமானதா என்ன? பெண்களில் எவருக்குத்தான் அது இஷ்டமில்லாது போகும்?

ஜெயகாந்தனின் கதைக்களம் பெரும்பாலும் நகர்ப்புறம் சார்ந்த, பின் தங்கிய பகுதிகள் என்றால் பெரிய தவறென்று ஆகிவிடாது. அந்தப் பகுதிகளில் வாழும் பாவப்பட்ட மக்கள், தங்களது சுயகுணாதிசயங்களோடும் சொந்தப் பிரத்தியோக மொழியோடும் அவரது கதைக்களில் சகஜமாவார்கள். ஜே.கே.யின் கதைவழியாக, அந்த மக்களை வாசிக்கும் வாசகர்கள், திடுமென இன்னொரு உலகத்தின் கதவுகளைத் திறந்துப் பார்க்கும் உணர்வும் கொள்வார்கள்! அந்த மக்கள் பேசும்மொழி, சுயகுணாதிசயங்கள் மட்டுமல்லாது அவர்களது அறநெறிகள் அத்தனையும்கூட அதிர்வலைகள் எழுப்பவல்லது! அவைகள் அத்தனையும், அவர்கள்/ அவர்களுக்காக/ அவர்களாளேயே வகுத்துக் கொண்ட, சுயசாயலோடு இருக்கும்! இந்த வகை மனிதர்களை, திரையில் வியூசுவலாக்குவதென்பதும் கடினம். 'பசி' / 'ஈ' ஆகிய இரண்டு படங்களில் அந்த மக்களை காமிக்க கொஞ்சம்போல் முனைந்திருந்தார்கள். அதில் 'பசி' நாடகத்தனமானது. 'ஈ' மிக நெருக்கத்திலான வியக்க வைத்த முயற்சி.

அவரது கதைகளில்/ நாவல்களில் வரும் மேட்டுக்குடி மக்கள் எப்பவும் சுய தர்க்கப் பேர்வழிகள்! வழிவழியாக தொடரும் கலாச்சாரக் கட்டுக்களை தர்க்கத்தின் வழியே தகர்ப்பதில் அவர்கள் தங்களை நிறுவிக் கொள்வார்கள். அல்லது, பெரிய சுயதர்க்கத்திற்குப் பிறகு, இன்னும் அதிகமாக பழமைகளை பூஜிப்பவர்களாகவும் பரிமாணம் கொள்வார்கள். பொதுவில், பழமைகளை தகர்ப்பவர்களே அவரது கதை மாந்தர்கள் என்று கொள்ளலாம்.

எழுத்தினூடே அவர் தன்னை வாசகனிடம் காமித்துக்கொள்ள யத்தனிக்கும் தோறும், வாசகனைத் துணுக்குறவைக்கும் அதிர்வலைகளை எழுப்பக் கூடியவராகவே இருப்பார்! இந்த பிரயத்தனம் அவரது கதைகள், நாவல்களைக் காட்டிலும் கட்டுரைகளில் பிரமாதப்படும். "மாணவர்களே மாடு மேய்க்கப் போங்கள்!" "பெண்களே திருமணம் செய்துக் கொள்ளாதீர்கள்!" "சமஸ்கிருதம்தான் உன்னதமொழி!" "நீங்கள் முன்னே பிறந்து விட்ட ஒரே காரணத்திற்காக பின்னே பிறக்க இருப்பவர்களை வேண்டாம் என்று சொல்ல உங்களுக்கென்ன நியாயம் இருக்கிறது!" (கர்ப்பத்தடைப் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பாக அவர்) "பார்ப்பனர்கள் தீண்டாமையை கடைப்பிடிப்பவர்களாக இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும், நீங்களும் அவர்களை அதே தீண்டாமையைக் கொண்டு பாருங்கள்!" ('ஜெய ஜெய சங்கர' நாவலில் ஓரிடம்) இப்படி, அதிர்வு தரும் பாங்கில் அவர் எழுதிய எழுத்துக்கள் அனேகம் உண்டு. அவரது மேடைப் பேச்சும் இதே ரகம்தான்! கூடவே, கணீரென்ற வையலும் சாடலும் இழையோட மின்னும்.

அவரது துணிவு அன்றைக்கு எழுத்துலகிலும், அரசியல் மேடையிலும் பிரபலமானது. அந்த துணிவுக்குப் பின்னாலான வாழும் நிஜங்கள் எப்போதும் அவரை நொடிக்க விடாது. தடாலடிக் கருத்துக்களும், சந்தர்ப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளாத நேர்மையும் தான் ஜெயகாந்தன்! என்றாலும், சில நேரங்களில் அவர் தனது கருத்துகளை அபூர்வமாக மாற்றிக் கொண்டிருக்கிறார். இந்திரா காந்தி பிரதமராக பதவி வகித்தபோது இந்தியாவில் தீவிர எமர்ஜன்ஸியை பிரகடனப்படுத்தினார். அன்றைக்கு பெரும்பாலான எழுத்தாளர்கள் அதை எதிர்ப்பவர்களாகவே இருந்தார்கள். சுதந்திரத்தின் வழியே நமக்கு கிட்டிய பேச்சுரிமை, எழுத்துரிமை, வழக்காடும் உரிமையெல்லாம் பறிப்போய்விட்டதாக புழுங்கினார்கள்.

ஆனால், ஜெயகாந்தன், எமர்ஜன்ஸியை வரவேற்றார். இந்திரா காந்தியை ஆதரித்தார். என் பிந்தைய நாட்களில் அவரது எமர்ஜன்ஸி குறித்த கருத்துகளை, காலத்தின் கருத்தாகவும், அவரது அழகியல் முடிவுகளில் ஒன்றாகவும் அதை கணித்து உணர்ந்தேன். "கண்டதைப் பேசுவதற்கும், கண்டதை எழுதுவதற்கும் உங்களுக்கு எதற்கு சுதந்திரம்? அதை அருமருந்தாய் உபயோகிக்கத் தெரிந்தவனுக்குத்தான் அதுதேவை" என்பதாக அவர் தீர எழுதி, தன் சக பேச்சாளர்களையும், எழுத்தாளர்களையும் சாடினதுதான் எத்தனை சரி! எதன் பொருட்டும் இன்றுவரை அவர் இந்தக் கருத்தை மாற்றிக் கொண்டவர் இல்லை!

சமீபத்தில், தனித் தமிழ்வாதிகளை எதிர்த்துப் பேசிய மேடையில், "தமிழ் என்போர் தன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்கள்" என்றார்! இந்தப் பேச்சு மக்கள் மத்தியில் பெரிய சர்ச்சையை கிளப்பியது. என்ன நினைத்தாரோ தெரியவில்லை அப்படி பேசியதற்காக வெளிப்படையான மன்னிப்பும் கேட்டார்! எனக்குத் தெரிந்து அவர் மன்னிப்பென்று கேட்ட ஒரே நிகழ்வு இதுவாகத்தான் இருக்கும். கிட்டத்தட்ட இதே மாதிரி அவர் இறங்கி வந்த அல்லது பிசகிய ஓரிரு நிகழ்வும் உண்டு. கலைஞர் கருணாநிதியை அவர் விமர்சிக்காத விமர்சனங்கள் இல்லை, அத்தனையும் அப்படியே அட்சரம்பிசகாது பதிவுகளில் 'இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்களாக இருக்கிறது. கலைஞர் தனது சொந்த அறக்கட்டளை சார்பாகத் தந்த பொற்கிழியை பெற்றுக்கொண்டு; கூடுதலாக மகனுக்கு' அரசு உத்தியோகமும் கேட்டுப் பெற்றவராக, கலைஞரை காந்தியோடு ஒப்புமைப்படுத்தி புகழ்ந்ததாகத் தகவல்!

அவர் அமெரிக்கா போய் வந்த நேரம், அந்த நாட்டை ‘நிஜமான கம்யூனிஸ்ட் நாடு!"யென அவர் கணித்துக் கூறிய செய்தியைப் படித்ததும் அப்படிதான்! காஞ்சி சங்கராச்சாரி, ஓர் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டபோது, அவருக்கு வக்காலத்து வக்கீல் மாதிரியான அனுசரனைப் பேச்சும்கூட அந்த ரகம்தான்!

ஜே.கே., சில ஆண்டுகளுக்கு முன் தமிழில் தேர்ந்தப் படைப்பாளியாக உருவெடுத்த ஒருவரை தனது இலக்கிய வாரிசாக அறிவித்தார். அந்தப் படைப்பாளியின் படைப்புகளைக் கண்டு அவர் மலைத்திருக்க வாய்ப்பில்லை. அவரே ஒரு இமயம்! ஆனால், அந்தப் படைப்பாளியின் அகம்; புறம் கணித்தவராகவும், அவரது எழுத்தின் அடிநாதம் புரிந்தவராகவும், இன்னும் அவரை சமன் செய்ய வேண்டியதின் அதி அவசியம் உணர்ந்தவராகவுமே, அவர் அப்படியொரு தீர்வை அறிவித்திருக்கக் கூடும் என்று கருதுகிறேன். அதை அவரது அழகியல் தீர்வுகளில் ஆக முக்கியமானதாக பார்த்தேன். ஜெ.கே.யின் மதிநுட்பத்தை திரும்பத் திரும்ப ரசித்தேன். இதற்காகவே அவர் மீதான சின்னச் சின்ன கசடுகளையும் கலைந்தேன்.

ஜெயகாந்தனை அடுத்து, வரிசையாக தமிழின் சிறந்தப் படைப்பாளிகளையெல்லாம் வாசித்த நாளில் அவரிடம் காணாத ஏதேதோ இவர்களிடம் தட்டுப்பட உணர்ந்தேன். வாழ்வியல் நிஜங்கள் இவர்கள் எழுத்தில் அபரிமிதமான ஜாலவித்தை புரிவதுமாதிரி இருந்தது. மனித வாழ்வின் கோலங்கள் எண்ணற்ற சுழிகள் கொண்டது! ஜே.கே. வரையவிட்ட அதன் இன்னும் பல பரிமாணங்களை இவர்கள் பிரமாதப்படுத்தியிருந்ததை உள்வாங்கவும் சிலிர்த்தேன். இவர்களது மொழி, ஜெயகாந்தனது மாதிரியான நேரிடையானது அல்ல! எதையெதையோ சொல்லி எதையெதையோ சொல்லாமல் விடும் மொழி! ஜே.கே.யைப் படித்தபோது அவரது வேகத்திற்கே ஓடியது மாதிரி இவர்களிடம் முடியவில்லை. ஆங்காங்கே இடறியது. சிலநேரம், அவர்களது வார்த்தைகள் மறித்து நிறுத்தியும் விடுகிறது. ஆழ்ந்த யோசிப்புக்குப் பிறகேதான் இங்கே அனுமதி! இவர்களின் பின்னலது சூட்சமம் அப்படி! அது பிடிப்படாதப்போதும், அதன் மீது ஆர்வ இழப்பு ஏற்படுவதில்லை. மாறாய் இன்னும் இன்னுமென்ற ஆர்வம் தொற்றிக் கொள்ளவே செய்தது. அதனால் தான் என்னவோ இன்றுவரை இந்த வகை எழுத்தின் மீதான பரபரப்பும் கவர்ச்சியும் கிளைத்துக் கொண்டே இருக்கிறது.

அன்றையக் காலக்கட்டத்தில் படித்த சில விமர்சனக் கட்டுரைகளில் ஜெயகாந்தனின் பற்றிய உருவம் வேறுமாதிரியானது. கிறுக்கலான கோணத்தின் வினோத சித்திரம். அது, என்னில் தங்கிய ஜெயகாந்தன் அல்ல. அதன்பின் சிலஆண்டுகள் கழித்து வெளிவந்த 'ஜே.ஜே.சில குறிப்புகள்' என்கிற சு.ரா.வின் நாவலில் முல்லைக்கல் என்றொரு கதாப்பாத்திரம் பிரபல்யம். கொஞ்சம் கூடிய இலக்கியப் போலித்தனம் அவனது லட்சணம். அந்த நாவல் குறித்து வந்த விமர்சனங்களில் ஜெயகாந்தன் பேசப்பட்டார். அந்த முல்லைக்கல்தான் ஜெயகாந்தன் என்றார்கள். சூதுவாது அறியாத அன்றைய மனம் அதை நம்பியது. என்றாலும், அந்த நம்பிகை நாள்பட நிலைக்கவில்லை. ஜெயகாந்தன் மீண்டும் என்னில், அவருக்குரிய இருப்பில் அமரவே செய்தார். ஆனால், அன்றைக்கு அவரை அவரது அலுவலகத்தில் வைத்து சந்திக்கச் சென்ற நாளில் முல்லைகல்லாக நம்பிய மனதோடுதான் போனேன்.

ஆழ்வார்பேட்டை ஒரு குடியிருப்பின் முகப்பில் சின்ன கன்னிக் கோவில். அதையொட்டி ஓர் பழைய கட்டிடத் தொகுப்பு. கட்டிட காம்பௌண்ட் வழியே உள்ளே போனேன். மிகவும் எளிமையாகத் தெரிந்த அந்தக் கட்டிடத்தின் முதல்மாடியில், ஒரு கதவிலக்கம் தான் ஜே.கே.யின் அலுவலகமாக இருக்கவேண்டும். அவர் குறிப்பிட்டிருந்த முகவரி அதுதான். மாலைப்பொழுது தாழ்ந்து, இரவின் கூறுகள் கவிழவும், தெரு விளக்கெல்லாம் மினுக்கென பற்றிக் கொண்டிருந்தது. கட்டிடத் தொகுப்பையொட்டி புறத்தே தெரிந்த கல் கட்டுமானப் படிகளின் வழியே, முதல் மாடியின் கால் வைத்தத் திருப்பத்தில் அவரது அலுவலகம் இருந்தது.

ஜே.கே. முன்பே வந்திருந்தார். வாசகர்கள்; நண்பர்கள்; சகப் படைப்பாளிகள் என்று பத்துக்கும் குறையாதவர்கள் அங்கு குழுமி இருந்தனர். பத்துக்கு பதினைந்து அறை அது. உள் சுவற்றில் ஒரு நிலைத் திறப்பு. ஒட்டு அறை மாதிரி. முன்பு இருந்தவர்கள் அதை சமையலுக்கான பிரத்தியோக புழங்கிடமாகப் பயன்படுத்திருக்கலாம். தலைவாசல் நிலையருகே ஒரு பழைய மேஜை, அதற்குப் பொருந்தும் ஒரு நாற்காலி. மேஜையின் வலதுகையில் ஒரு சின்ன இருக்கை. நாற்காலியில் ஜே.கே.! எதிரே தரையில் அவரது சகபாடிகள். அமரச் சொல்ல... வலதுகை இருக்கையில் நான்!

என்னோடு வந்த எனது பார்ப்பன நண்பன் வெளிவராந்தாவிலேயே நின்று விட்டான். கதை கவிதை என்றாலே முகம் சுழிப்பவன். அதெல்லாம் உதவாக்கரைகளின் செயல்பாடுகள் என்பது அவனது தீர்மானமான முடிவு. இந்த சனியனையெல்லாம் விட்டொழி என்று பலமுறை சொல்லிவிட்டான். ஒருதரமாவது அவனது பேச்சை கேட்டிருக்கலாம் என்று இன்றைக்குத் தோன்றுகிறது. இப்பொழுது ஜெயகாந்தனோடு குழுமியிருக்கும் இந்தக் கூட்டம் நிச்சயம் அவனை மிரட்டலாம். எல்லாவற்றையும் எனக்காக சகித்துக் கொள்ளும் மனம் கொண்டவன்தான் அவன்!

நான் ஜெயகாந்தனுக்காக வாங்கிவந்த வெளிநாட்டு சிகரெட் பாக்கெட் சிலவற்றை அவரிடம் கொடுத்தேன். நன்றியோடு அதனைப் பெற்றுக் கொண்டு, மேஜை இழுப்பைத் திறந்து உள்ளே வைத்துச் சாற்றினார். வெளிநாட்டு சிகரெட் பற்றியும், அந்தப் பாக்கெட்டை திறந்து நுகரும் சுகந்தத்தைப் பற்றியும் அவர் எழுதிய கட்டுரையைப் படித்திருக்கிறேன் என்பது மட்டுமல்ல, அதைப் பழக்கத்தில் ஏற்றி, வழக்கப்படுத்திக் கொண்டவன். இந்த நினைவின் தொகுப்பாகத்தான், அவருக்கு இந்த சிகிரெட் தேர்வு. ஒரு பாக்கெட்டை மட்டும் எடுத்துத் திறந்து, அதில் ஒரு சிகரெட்டை எடுத்துக் கொண்டவராக, பிற யாரிடமும் நீட்டாது; என்னிடம் மட்டும் நீட்டினார். என் கை நீளத் துவங்கி, யோசனைக்குப் பின் இழுத்துக் கொள்ள, தவிர்த்தேன். இங்கே பத்துக்கு மேற்பட்ட சகாக்கள் வாளாவிருக்கும்போது, ஜே.கே.யோடு நான் புகைப்பதென்பது சரியாகப் படவில்லை.

அவர் சிகரெட்டை ரசித்துப் புகைத்தார். நான் அந்த ரூமை கண்களால் துழாவினேன். பக்கச் சுவரில், கூடுதலான நீள அகலத்தில் செல்ஃப் அடிக்கப்பட்டு, அதில் புதுமைப்பித்தன் படைப்புகள் முழுமையும் அடுக்கப்பட்டிருந்தது! அதே அளவில், எதிர்புற சுவற்றில் இன்னொரு செஃல்ப். அது பூராவிலும் ஜெயகாந்தன் படைப்புகள்! இப்பொழுது அவரைப் பார்க்கவும் "பேட்டி" என்றேன். "பேட்டி என்று தனியாக ஒன்று வேண்டாம், இங்கே நீங்கள் பார்ப்பவைகள், கேட்பவைகள் கொண்டு கட்டுரையாக எழுதிக் கொள்ளுங்கள். உங்களுக்கென்று கேள்விகள் இருக்குமென்றால், அதை நீங்கள் கேட்கலாம். நிகழும் சம்பாசனைகளின் இடையில் அதற்கு பதில் கிடைக்கும்" என்றார். அவர் மாற்றி அமைத்த இந்த திட்டத்தில் மிகுந்த சுதந்திரத்தை உணர்ந்தேன். கொஞ்ச நஞ்ச இறுக்கமும் இத்துவிட்டது. ஏக சந்தோசம்.

ஒட்டு ரூமிலிருந்து முதிர்ந்த பெரியவர் ஒருவர் வெளிப்பட்டார். வெளுத்த மெலிந்த தேகம். சட்டையில்லை. வேஷ்டி மட்டும்தான். அதைகூட மார்புக்கும் வயிற்றிற்கும் இடையில் தூக்கிச் சொருகியிருந்தார். உடல் பூராவும் பட்டைப் படையாய் திருநீரு. நீண்டு அலையலையாக இறங்கிய வெண்தாடி. அடர்த்தியில்லை. அவரது கையில் ஒரு மண்பானையும், காலி டம்ளர்களும் இருந்தது. அதிலிருந்து டம்ளரில் சாய்த்த பானத்தை முதலில் ஜெயகாந்தனுக்கென்று கொடுத்து விட்டு; தொடர்ந்து எதிரே அமர்ந்திருந்த நண்பர்கள் குழுமத்திற்கும் கொடுத்தார்.

அதன் நெடி காற்றில் தவழ்ந்து வந்தது. அது கள்ளா? அல்லது வேறு லாகிரியா? உறுதி செய்யத் தெரியவில்லை. அதையொட்டிய ஞானத்தின் போதாமை எனக்கு எப்பவும் உண்டு. பெரியவர் என்னிடமும் ஒரு டம்ளரில் சாய்த்து நீட்டினார். ஜே.கே.யுடன் நண்பர்கள் அனுபவிக்கும் அந்த பேரனுபவம் எனக்கும் வேண்டித்தான் இருந்தது. அதுவும் அவருக்குச் சமமாக! பக்கத்தில்! தயாராகத்தான் இருந்தேன். வாழ்வில் இன்னொரு முறை கிட்டக்கூடிய பாக்கியமா அது! ஆனால், அந்தப் பெரியவரிடம் ஜே.கே. தலையசைத்து எனக்கு வேண்டாமென்றார். நிகழவிருந்த உன்னத தருணங்கள் பறிபோனது.

ஜே.கே.யின் அலுவலகக் கட்டிடத் தொகுப்பை ஒட்டி, கடைசியில் குடிசைகள் தொடங்கி நீள்கிறது. அந்த குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஒருவன், நேற்று இரவு குடித்துவிட்டு தனது மனைவியை நையப்புடைத்திருக்கிறான். அந்தக் கொடுத்து வைத்தவனின்(!) மகாத்மியத்தை புகாராக ஜே.கே.யிடம் சொல்ல வந்திருந்தாள் அவனது மனைவி. எழுதிய, பேசிய நேரம்போக இப்படியான பஞ்சாயத்துகளிலும் ஜே.கே. ஆர்வம் காட்டுவாரோ என்னவோ! அவளது கனவனை கூப்பிட்டனுப்ப ஆள்விட்டார். இரண்டாவது மூன்றாவது என்று டம்ளரில் பானம் வட்டச்சுற்று வந்தப்படி இருந்தது. பருகிய நண்பர்கள் இருகிய மௌனத்தில் அவரைப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தார்கள். ஓரிருவர் மட்டும் "ஜே.கே."யென சகஜமாக அழைத்து அவரிடம் ஓரிரு வார்த்தைகள் பேசினர். அங்கே ஜே.கே.மட்டும்தான் தொடர்ந்தும் சப்தமாக பேசியபடி இருந்தார். வெளியே நான் எட்டிப்பார்க்க, பால்கேனி நடையில் என் நண்பன் குறுக்கும் நெடுக்கும் நடை பயின்றுக் கொண்டு இருந்தான்.

அவளது கணவன் அலுவலக நிலைமறைவில் வந்து நின்றான். மறைவில் அவன் நின்றபோதும் என்னால் அவனை உட்கார்ந்த இடத்திலிருந்து பார்க்க முடிந்தது. ஏழ்மை தரித்த சகமனிதனாக இருந்தான். கூலி வேலை செய்பவனாக இருக்கவேண்டும். முகத்தில் இலேசான பயம். மூன்றாவது டம்ளர் பானத்தை இப்பொழுது ஜே.கே. முடித்தார். அவனை இணக்கமாய் பெயர் சொல்லி அழைத்தார். அவரது அழைப்பின் கணீரில் சுருதி தப்பியதாகப் பட்டது. மறைவிலிருந்து நிலையின் மையத்திற்கு நகர்ந்துநின்று எல்லோருக்கும் முகம் காட்டினான்.

ஜே.கே. அவனிடம், குடிப்பது எவ்வளவு பெரிய தப்பு என்கிற ரீதியில் மட்டுமே போதனை செய்தார். மனைவியை அவன் அடித்ததைப் பற்றி எந்தப் பேச்சுமில்லை. ஜே.கே.யின் இந்த அளவுகோளை சரியென்ற கோணத்தில் வியந்தேன். அவன் ஜே.கே.யின் எந்த சொல்லுக்கும் மறுப்பு சொல்லாமல், தலையை மட்டும் ஆட்டியபடி, அத்தனையும் ஒப்புக்கொள்பவனாகவே நின்றான். அவனது மனைவியைப் பார்த்து இனி இப்படி நடக்காதுயென தைரியம் சொல்லி அனுப்பிவிட்டு, அவனிடம் "சரி போ" என்றார்.

இரு கைகளையும் குவித்து ஜே.கே.யை வணங்கியபடி தயக்கமாக நகரத் தொடங்கினான். நகர்ந்தவனை நிற்கச் சொல்லி, பெரியவரிடம் ஜே.கே. கண் ஜாடைக் காட்டினார். அவனுக்கும் ஒரு டம்ளர் ஊற்றிக் கொடுக்கப்பட்டது. மறுப்பேதும் சொல்லாமல் அதை அவன் வாங்கி சுவர் மறைவில் முடித்து, டம்ளரையும் தந்துவிட்டு, மலர்ந்த முகமாய் தெளிவான கும்பிடைச் செலுத்தி விடை பெற்றான். அவன் அப்படி விடைபெறும் பாங்கைக் கண்டு அமர்ந்திருந்த நண்பர்களின் குழு கொல்லென சிரித்தது. ஜே.கே.யும் சிரித்தார். நான் ஆரம்பம் தொட்டே, அந்த நிகழ்ச்சியின் சிரித்த சாட்சியாகத்தான் இருந்தேன்.

ஜே.கே. இப்பொழுது என் பக்கம் திரும்பினார். சௌதியில் சிறிய திருட்டுக் குற்றங்களுக்கெல்லாம், விரல்களை தறித்து விடுவார்களாமே என்று கேட்டார். ஆமாம் என்றேன். சிறிய திருட்டுக்களில் சம்பந்தப்படுபவனை மனிதாபிமானக் கண்ணோட்டத்திலும், பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலைப்பாட்டிலும் பொருத்திக் கணிக்க வேண்டும் என்றார். அதை ஒப்புக்கொண்ட நான், அவர்கள் அவர்களது மத குற்றவியல் சரத்துப்படி தண்டனைகள் வழங்குகிறார்கள் என்றும், அந்தவகைத் தண்டனைகளால் பிற நாடுகளை விட அங்கே குற்றங்கள் குறைவாக இருக்கிறதென்றும் சொன்னேன். மேலும், இந்த வகையான தண்டனைகளை சௌதி அரேபியா தவிர்த்து பிற இஸ்லாமிய நாடுகளில் பெரும்பாலும் இல்லை என்றேன். சௌதி அரேபியா மட்டும்தான் இன்னும் அப்படி முழுமையான சரியத்து சட்டத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இருக்கிறது என்றபோது அவரும் ஒப்புக் கொண்டார்.

ஒரு நாட்டின் ஆட்சியாளர்களுக்கு, தனது மதத்தை எங்கே வைக்கனுமோ அங்கே மட்டுமே வைக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்றவர், எங்கள் நாட்டிலும் மதம் இருக்கிறது! நான் போய் பார்த்த சமாதிகளில் எல்லாம் அதைப் பார்த்தேன்! என்றார். எங்கள் நாடு என்று அவர் சொன்னதை 'சோவியத் யூனியன்' என்றும், நான் போய் பார்த்த சமாதிகளில் எல்லாம் அதைப் பார்த்தேன் என்றதை 'அவர் போய் பார்த்த சமாதிகளில் மதத்தின் அடையாளமான சிலுவைகள் சொருகப்பட்டிருந்த காட்சியையும்' அவர் குறிப்பிடுகிறார் என்று நான் அர்த்தப்படுத்திக் கொண்டேன்.

அவரது அழகு சொட்டும் இந்த வாக்கிய அமைப்பிலும்; அதன் 'சரி'யிலும் சொக்கினேன். ஜே.கே. என்றால் ஜே.கே.தான்! ஞானபீடப் பரிசு, அவருக்கு சும்மா கிடைத்து விடவில்லை! பிற்காலத்தில், பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது மத ஆளுமைகளுக்கு எதிராக எழுந்த சமூக பகிஷ்கரிப்பையொட்டி ஜெயகாந்தன் செய்த பதிவு வலுவானது. குறிப்பிடத்தகுந்தது. மதங்கள் ஒரு கட்டுக்குள் இருக்கவேண்டுமென அன்றைக்கு அவர் பேசியதின் நேர்மையை அந்தத் தருணமே ஒப்புக்கொண்டேன். இடதுசாரி மனோபாவம் கொண்டவர்களுக்கெல்லாம் அன்றைய சோவியத் யூனியன் ஒரு செல்லம். அதை அவர், எங்கள் நாடென குறிப்பிட்டதை அப்படித்தான் யதார்த்தப் பொருள் கொண்டேன். நிஜமும் அதுதானே!

என்னுடைய 'தமிழ்ப்பூக்கள்' சிற்றிதழின் பிரதி ஒன்றை என்னிடமிருந்து பெற்று புரட்டினார். 'அரசியல்வாதிகளிடமிருந்து நாட்டை மீட்பது எப்படி?' என்கிற தலைப்பில் இருந்த கட்டுரையை கொஞ்ச நேரம் பார்வை செய்து விட்டு, 'அரசியல்வாதிகளிடமிருந்து அரசியலை மீட்பது எப்படி?' என்பதாக அந்த தலைப்பு இருந்திருக்க வேண்டுமென்றார். மெளனமாக இருந்த அவரது சகாக்கள் இப்பொழுது, "ஆமாம் அதுதான் சரி" என்றார்கள். ஜே.கே. மீண்டும் தொடர்ந்தார். பண்டிட்நேரு, ஜீவா, காமராஜ் எல்லாம் அரசியல்வாதிகள்தான் என்றார். "ஜே.கே. பிரமாதம்" என்றோர் குரல் அந்தப் பக்கமிருந்து எழுந்தது. நானும் ஒப்புக் கொண்டேன்.

அடுத்து எங்களது பேச்சு, சினிமாவின் பக்கம் நகர்ந்தது. அவரது சிறுகதைகளிலிருந்தும், நாவல்களிலிருந்தும் சில காட்சிகள் உருவப்பட்டு தமிழ்ச் சினிமா வல்லுனர்களால்(!) பயன்படுத்தப்படுவது குறித்து ஜே.கே.யிடம் கேட்டேன். தாராளமாக எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளட்டும். ஆட்சேபனை இல்லை என்றவர், அவர்கள் மீது நான் வழக்குத் தொடுத்தால், என் மீது சோவியத் எழுத்தாளர்கள் பலர் வழக்குத் தொடுப்பதும் நியாயம் என்றார்!

இத்தனை தாராள மனத்தோடும், நேர்மையோடும் தமிழ்ச் சினிமாக்காரர்களைப் பார்த்த ஜே.கே., டைரக்டர் பாலசந்தரை கண்டமேனிக்கு திட்டத் தொடங்கினார். அவரது முகத்தில் ஆவேச கோடுகள் நெளிய, கர்ஜனைக் குரலும் கரகரத்தது. அவரை சாந்தப்படுத்த யாரும் முன்வராத நிலையில், இன்னும் இன்னுமென்று ஏகத்திற்குத் தீட்டித் தீர்த்தார். பாலச்சந்தரை, அவர் சார்ந்த மதத்தின் பெயர் சுட்டி கோபப்பட்டபோது, இந்த ஜெயகாந்தன்தானா 'ஜெய ஜெய சங்கரா' எழுதினாரென சந்தேகமே வந்துவிட்டது. மீண்டும் என்பார்வை வெளியே துழாவியபோது, பால்கனியில் உலாத்தும் என் நண்பன் தலையில் அடித்துக்கொண்டு என்னை உடனே எழுந்துவரச் சொல்வதும் தெரிந்தது.

பாலச்சந்தர் இயக்கி, மகத்தான வெற்றி பெற்ற 'அவள் ஒரு தொடர்கதை'யில் இரண்டு கதாநாயகிகள். அதில் ஒருத்தி ஆங்கில நாவல்கள் படிக்கும் வழக்கம் கொண்டவள். மற்றொருத்தி ஜெயகாந்தனின் நாவல்கள் படிக்கிற ரகம். ஆங்கிலம் படிக்கிற நாயகி, தனது வாழ்வின் பிரச்சனைகளில் மிகத் துல்லியமாக முடிவெடுக்கிறவள். ஜெயகாந்தனைப் படிக்கும் நாயகியோ, வாழ்வை சாதாரணமாக எடுத்துக் கொள்பவளாகவும், விதண்டாவாதம் புரிபவளாகவும், எல்லாவற்றிற்கும் ஒரு நியாயம் கற்பிப்பவளாகவும் தலையெடுத்து தோல்விக் கண்ட பெண்ணாக முடிகிறாள். இது பாலச்சந்தருக்கு வேண்டாத வேலை. அந்தப் படம் வந்த நாளிலேயே இது குறித்த ஜே.கே.யின் கோபம் பத்திரிகைகளில் பேசப்பட்டது. ஜெயகாந்தனைப் படித்தப் பெண்கள் இப்படி சீர்கெடுவார்கள் என்பதற்கும், ஆங்கில நாவல்களைப் படிக்கும் பெண்கள் வாழ்வை சிலாக்கியமாக்கிக் கொள்ளுபவர்கள் என்பதற்கும் என்ன இருக்கிறது உத்திரவாதம்?

எப்பவோ வந்த அந்தத் திரைப்படம் குறித்த பாலச்சந்தரின் மீதானக் கோபம்,ஜே.கே.யிடம் இன்னும் தணியாதிருப்பது வியப்பாக இருந்தது. பேச்சு தொடர்ந்து இயக்குனர் பி.ஆர்.பந்துலுவைப் பார்க்க நகர்ந்தது. சினிமாவைப் பற்றி அவனுக்கு என்ன தெரியும் / சில நேரங்களில் சில மனிதர்கள் எனது 'டிரிட்மெண்ட்'படி இயக்கப்பட்ட படம் / இப்படி அவரதுப் பேச்சு நீண்டு கொண்டே இருந்தது. இரவு ஒன்பதைத் தாண்ட, பருகிய பானம் அவரை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்ல, சபை இப்பொழுது சலசலத்தது. ஒருவர் பின் ஒருவராக விடை பெறத் தொடங்கினார்கள். நானும் எழுந்தேன். ஜே.கே.யும் எழுந்தார். அவர் கீழே இறங்கி, காம்பௌண்டை தாண்டியவுடன், நெருக்கத்தில் அவரிடம் நன்றியையும் வணக்கத்தையும் சொல்லி விட்டுப் புறப்பட கருதினேன். மாடிப்படியில் அவரை முன்னே இறங்கவிட்டு நான் பின் தொடர்ந்தேன். தடாலடியான பேச்சும் சிரிப்புமாக கீழே இறங்கி காம்பௌண்டை தாண்டிய அவர், கட்டிட சுவற்றிற்கும் சுவற்றையொட்டி இருந்த கன்னிக்கோவிலின் பின்புறத்திற்கும் இடையே தெரிந்த கழிவுநீர் பாதையின் அருகே போய், பேண்ட் ஜிப்பைத் திறந்து, எல்லோரிடமும் பேசி சிரித்தப்படி, நின்ற பாட்டிற்கு சிறுநீர் கழித்தார்.

ஒரு சின்னப் பையன், சிறிதுமில்லாத பெரிதுமில்லாத சைக்கிளை கொண்டுவந்து ஜே.கே.அருகில் நிறுத்தினான். பின் இருக்கையில் இரண்டு பக்கமும் கால்களைத் தொங்கப்போட்ட நிலையில் ஏறி அமர்ந்தார். நான் அருகில் போய் நன்றி கூறி விடை பெற்றேன். அமர்க்களமாக சிரித்தபடியே விடை தந்தார். அந்தச் சிறுவன் சைக்கிளை மிதிக்கத் துவங்க வேகம்பிடித்தது. ஜே.கே. தலையைத் திருப்பி எல்லோருக்கும் 'டாட்டா' காண்பித்தபடி, பெரிய சப்தம் கொடுத்தவராக இருளில் போய் மறைந்தார்.

என் நண்பன் பஸ்ஸை எதிர்நேக்கியவனாக தூரத் தெரிந்த ரோட்டின் வளைவில் போய் நின்றான். டி.நகர் போகவேண்டும். நான் அவனிடம் போய் சேர்ந்தபோது, "இந்த மாதிரி இடத்திற்கெல்லாம் இனி என்னை அழைக்காதே, நீயும் போகாதே" என்று அதட்டினான். அவனது கோபம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். அப்படியெல்லாம் இல்லை. முகத்தை மட்டும் தொடர்ந்து இறுக்கமாகவே வைத்துக் கொண்டு வந்தான். ஜே.கே.யை அறிந்தவர்களால்தான் அவரைப் புரிந்துக் கொள்ள முடியும். ஜே.கே.யை இவன் என்றைக்கு அறிவது! நான் என்றைக்குப் புரியவைப்பது! டி.நகர் போகிறவரை, "ஸாரி விசு..." "ஸாரிய்யா.." சுலோகத்தை அப்பப்ப சொல்லி குழையடித்துக் கொண்டே போனேன். பாவம் அவன்! ஜெயகாந்தனின் உலகைக் கண்டு அநியாயத்திற்கு பயந்து விட்டான்.

- தாஜ் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP