Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteratureArticle
கட்டுரை

விடுதலைப் புலிகளுக்கு எதிரான வன்மம் - விடுதலைப் போராட்டத்திற்கு எதிராய்
சூரியதீபன்


“இனி ஈழவிடுதலை சாத்தியமா?” என்ற (ஆனந்த விகடன் 22-07-2009 ஷோபாசக்தி நேர்காணல்) கேள்விக்கு ‘இல்லை’ என வருகிறது ஷோபாசக்தியின் பதில்.

Shoba Sakthi இறந்து போனவர்களுக்கு ‘குழிப்பால்’ விடுதல், இறுதிச் சடங்குகளில் ஒன்று. ‘நாளைக்குப் பால்’ ‘நாளைக்குப்பால்’ - என்று மயானத்தில் அறிவிப்பார் வெட்டியான். இருபதாயிரம் போராளிகளின் கல்லறையிலும் ஒரு லட்சம் மக்களின் புதைகுழிகளிலும், ‘இல்லை’ என்ற பதில் மூலம் குழிப்பால் விடுகிற வேலையை இந்த வெட்டியான் செய்கிறார்.

போராடுகிறவர்களுக்குத் தான் விடுதலை சாத்தியம்.

விடுதலையே
மற்றவர்கள் உன்னிடம்
நம்பிக்கை இழந்தாலும்
என்றென்றைக்கும் நான் மட்டும்
நம்பிக்கை இழக்கப் போவதில்லை

போராட்டத்தின் மீது தொய்விலா நம்பிக்கை வைத்த வால்ட் விட்மன்களுக்கும், நசீம் இமத்துகளுக்கும், ஜீலியஸ் பூசிக்குகளுக்கும், இன்குலாப்புகளுக்கும், புதுவை இரத்தினதுரைக்கும் அது சாத்தியம். நம் மக்களை விடுவிக்க வேண்டும் என்ற விடுதலைக் கோட்பாட்டில் நம்பிக்கையுள்ளவன் அதற்கான வழி முறைகளைக் கண்டறிந்து மீண்டும் எழுந்து தீருவான்: மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுவான். மீண்டும் மீண்டும் எழுதியும், பேசியும், வாழ்ந்தும் தீருவான்.

உலக வரைபடத்தில் செர்பினிய இனப்படுகொலைக்குப் பின் ‘இனி ஒரு போதும் இல்லை’ - என உலகம் உச்சரித்தது. இனி ஒரு போதும் நிகழக்கூடாது என்ற உலகவிருப்பம் அவ்வாறு உறுதியளித்தது. உச்சரித்த நாக்கின் ஈரம் உலருமுன்னே இலங்கை அந்த இடத்துக்கு வந்தது. இனப் படுகொலை நிகழ்த்திய செர்பினிய அதிபர் ஸ்லோபோடன் மிலோசாவிக்கின் கதாநாயக பீடத்தை இலங்கையின் ராசபக்ஷே பிடித்திருந்தான்.

செர்பினியா இனப்படுகொலைக்காக ஸ்லோபோடனை அனைத்துலக நீதிமன்றத்தின் முன் உலக அரசுகள் ஒன்றுபட்டு நிறுத்தின. சொல்ல முடியாத சோகக் கதைகளை இலங்கையில் விதைத்த ராசபக்ஷேயை அதுபோல் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்திப் பார்க்க உலக நாடுகள் தயாராக இல்லை. பயங்கரவாதம் எனும் ஒரு சொல்லைக் காட்டி, ராசபக்ஷேயை ஆதரிக்கத் தயாராயிருக்கின்றன. வன்னிக் காடுகளில் வாழ்வு சிதறடிக்கப்பட்டு அனாதரவாய் விடப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கு நாளும் நாளும் இம்சித்துவரும் இந்த சர்வ உலகத்தின் பதிலென்ன?.

உலகம் போன வழியில் உள்ளுர் அறிவுஜீவிகளான அ.மார்க்ஸ், ஆதவன் தீட்சண்யா, ஷோபாசக்தி - இன்னும் வெளிப்படாத பெயர்களுடன் பலரும் நடந்து கொண்டேயிருக்கிறார்கள். படுகொலைகளை நடத்திய ராசபக்ஷே அரசை - நேரடி நெறியாளனாக நின்று நிகழ்த்திய இந்தியாவை - இராணுவப் பின்புலமாய் நின்ற ஏகாதிபத்திய சீனாவை - இவர்கள் பயங்கரவாதிகள் என்று விமரிசித்ததில்லை - புலிகளின் பயங்கரவாதம் பற்றி கூச்சலிடும் இந்தப் புண்ணியவாளர்களுக்கு இதற்கு மூலமான இலங்கை அரச பயங்கரவாதமோ, உலக அரச பயங்கரவாதமோ அந்த அளவு தெரிவதில்லை. உலக பயங்கரவாதம் என்று வந்தால், கண்களில் வெண்ணை ஏந்திக் கொள்வார்கள். அ.மார்க்ஸ் உரத்துப் பேசாது ‘சைடு’ வாங்குவார். குருவை விட, சிஷ்யன் ஷோபாசக்தி அதிகமாக ஒதுங்குவார். ஆதவன் தீட்சண்யா பதினாறடி பின்னாலே போய் ஆளே தென்படமாட்டார். இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு உறைந்து தேங்கியிருக்கும் துயரம் பற்றி - அதன் மீட்பு பற்றி சில முணு முணுப்புகள், மீதியெல்லாம் எதிர்க் குரல்தவிர இவர்களிடமிருந்து வேறு வெளிப்பட்டதில்லை.

“கடந்த முப்பது வருடங்களில் புலிகள் இயக்கம் ஈழத்தமிழர்களிடையே சனநாயகம், கருத்துரிமை போன்ற விழுமியங்களை ஒட்ட அழித்திருக்கிறது. சிவில் சமூகத்தின் ஒருபகுதியை அது பாஸிசத்தின் ஆதரவாளர்களாக்கியிருக்கிறது. தொழிற்சங்கம், சாதியொழிப்பு இயக்கங்கள், இடதுசாரி அரசியல் அமைப்புகள் போன்ற அத்தனை முற்போக்கு இயக்கங்களையும் புலிகள் இயக்கம் அழித்து அரசியலற்ற ஆயுதக் கலாசாரத்தில் மூழ்கிய புதிய தலைமுறைகளை உருவாக்கிவிட்டிருக்கிறது.” (தீராநதி ஜூலை 2009 பக்கம் 61) என்று சீறிப்பாய்கிற ஷோபாசக்திகள் - வெள்ளை வேன் கடத்தல்கள் _ கருணா, பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி கும்பலால் அடையாளம் காட்டி உயிர் அழித்தல்கள் _ ‘புலிகள் கடலுக்கு; பெண்கள் உங்களுக்கு’ என கோத்தபய ராஜபக்சே முன்னுரைத்த மந்திரம் ராணுவத்தினரால் நடைமுறைப்படுத்தப்படும் காட்சிகள் _ இதற்காகவெல்லாம் இவர்களின் நெற்றிக் கண் திறவுபடவில்லை. புலிகள் என்றால் மட்டும் நெற்றிக்கண் நெருப்புதிர்க்கும்.

II

“யுத்தம் முடிவுக்கு வந்தது குறித்து ஒரு இலங்கைக் குடிமகனாக நான் நிம்மதியடைகிறேன்.” (தீராநதி - ஜூலை 2009 - பக்கம் 63) ஷோபா சக்தி தன்னை இலங்கைக் குடிமகன் என்று ஒப்புக் கொள்கிறார்.

(பிரான்சிலிருந்து சென்னை வந்த சுகன் இலங்கை தேசீயகீதம் இசைக்கிறார். சென்னை லயோலாக் கல்லூரி எதிரில் உள்ள அய்க்கப் அரங்கம் அதிர்ச்சியில் ஆடிப் போனது. லீனாமணிமேகலை ஏற்பாடு செய்த ஈழக் கவிதைகள் குறித்த விமர்சனக் கூட்டத்தில் இது நடந்தது. ஷோபா சக்தி, சுகன் இருவரும் புலிகளின் தோல்வியைக் கொண்டாட பிரான்சிலிருந்து இங்கு வந்திருக்கலாம்.)

நான் என்னை இந்தியக் குடிமகன் என்று ஒரு போதும் சொல்வதில்லை. முதலில் நான் மனிதன். இரண்டாவதாய் நான் தமிழன். பிறகு நான் சர்வதேச மனிதன். இடையிலுள்ள இந்தியன் என்பதை நீ விட்டு விட்டாயே என்கிறார்கள் சிலர். நான் இந்தியன் இல்லை. இந்தியனாக இருப்பவர் எவரும் மனிதனாக இல்லை. நான் தமிழனாக இருப்பதால் மனிதனாக இருக்கிறேன் என்பது இயல்பானது போலவே, இந்தியன் எவரும் மனிதனாக இல்லாததும் இயல்பானது.

இல்லையென்றால் இங்கே இருபது கிலோமீட்டர் தூரத்தில் பல்லாயிரக்கணக்கில் மனித உயிர்கள் கொத்துக் கொத்தாய் கருக்கப்பட்ட போது - கண் கொண்டு காணாமல், காது கொண்டு கேளாமல், கருத்து கொண்டு உணராமல் இருக்க முடியுமா? இருந்தார்கள். தமிழர்களாகக் கூட வேண்டாம்; உலகின் சக மனிதர்களாக பார்க்கவும் தயாராக இல்லை; இப்படி மரணத்தின் மேல் நின்று நர்த்தனமாடுகிற எந்த இந்தியனையும் மனிதன் என்று கூற நா கூசுகிறது.

இந்தியக் குடிமகனாக இருப்பதும், ஷோபா சக்தியின் இலங்கைக் குடிமகனாக இருப்பதும் ஒன்றே. இருவரும் மற்றவர்களின் மரணத்தில் சந்தோஷிக்கிறார்கள்.

“இரு தரப்புகளுமே ஒரு அரசியல தீர்வுக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டன” என்று நடுவராக முதன்மைப் பாத்திரம் ஆடிய நார்வேயின் ‘எரிக் சொல்ஹெய்ம்’ இன்று வரை சொல்கிறாராம். - (தீராநதி ஜூலை 2009 - பக்63)

நல்லது, போர் நிறுத்த ஒப்பந்தத்தை 2006-ல் தன்னிச்சையாக முறித்துக் கொண்ட ராசபக்ஷே நார்வேயை வெளியேற்றியபோது, ‘எரிக் சொல்ஹெய்ம்’ எதிர்த்துக் குரல் எழுப்ப- “வாயை மூடிக் கொண்டு ஒதுங்கியிருங்கள்” என்று தேசியய் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் அரட்டுப் போட்டதும், இந்தியா என்ற பெரிய அண்ணனை பகைத்துக் கொள்ள முடியாமல் எரிக் சொல்ஹெய்ம் ஒதுங்கிக் கொண்டதும் ஷோபா சக்தி மறைத்த உண்மைகள். இவர் இலங்கைக் குடிமகனாக இருப்பதே சரியானது.

இன்னும் புதைகுழிக்கு அனுப்பப்படாமல் மீந்திருக்கும் ஈழத் தமிழர்களின் விமோசனத்துக்கு வழி என்ன? ஷோபா சக்திகளும், அ.மார்க்ஸ_ம் குறிப்பிடுவது போல் உழைக்கும் மக்கள், இனம் கடந்து ஒன்றிணையாமல் வேறெந்த வழியாலும் தமிழ் மக்களுக்கும் இலங்கையின் ஒட்டுமொத்த மக்களுக்கும் விடிவில்லை என்ற வழியா?.

இலங்கையின் வரலாறு நெடுகலும் இதற்கு முன்னும் இப்போதும் எப்போதும் இனி உழைக்கும் மக்களின் ஒற்றுமை சாத்தியமில்லை. வரலாற்று ரீதியாய் உடைந்த மண்பாண்டத்தை ஒரே பாண்டமாக ஆக்க (வரலாற்றுக் காலம் தொட்டு அது உடைந்த மண்பாண்டம்) ஒட்டவைக்க, வனைந்து சேர்க்கும் குயவர் எவரும் இல்லை; வெல்டிங் செய்யவோ, பெவிகால் கொண்டு ஒட்டவோ, நூல் கொண்டு தைக்கவோ ஒற்றையாய் ஆக்க மார்க்சிய வழியில் ஒருவகையும் இல்லை. மார்க்சிய, லெனினியத்துக்கு எதிரான வல்லாதிக்க வழிகள் உண்டு.

“இனம் கடந்து ஒன்றிணைந்த உழைக்கும் மக்களின் அந்தப் பாரம்பரியத்தை மீட்டெடுக்காமல், வேறெந்த வழியாலும் தமிழ் மக்களுக்கும், இலங்கையின் ஒட்டு மொத்த மக்களுக்கும் விடிவு ஏற்படப் போவதில்லை. ஒடுக்கப்படும் சக்திகள் இனவாத அரசியலிலிருந்து மீண்டு வர வேண்டும்” - இது ஷோபா சக்தியின் வாசகம் (தீராநதி ஜூலை 2009 பக்கம் 63)

இனவாத அரசியலின் தோற்றுவாய் ஒடுக்கப்படும் சக்திகளான தமிழர்களிலிருந்து கிளைக்கவில்லை, இனவாத அரசியலின் வேர். “பிறக்கப் போகும் குழந்தை (துட்டகை முனு) தமிழர்களை அழித்து ஒன்றுபட்ட சமஸ்தானத்தை ஆண்டு புத்த சமயத்தை வளர்த்தெடுப்பான்” என்ற மஹாவம்சத்திலிருந்து ஆரம்பிக்கிறது. மஹாவம்சத்தின் பேரினவாதப் போதையில் ஊறிய அநாகரிக தர்மபாலர் முதல், “ஒரு சிங்களவனின் உயிருக்கு ஆயிரம் தமிழர்கள் சமம்” என்று 1958 - மே 26ல் அறிவித்த தல்பவலசீவன் சதேரா என்ற புத்தபிக்குவரை இந்த உளவியல் உச்சம் பெற்றுள்ளது.

மே 15 - 18 களில் முல்லைத்தீவு பகுதியில், குறிப்பாக முள்ளிவாய்க்காலில் 25 ஆயிரம் தமிழர்கள் படுகொலைக்குப் பின் சாதாரண சிங்களர்கள் கருத்துரைத்தார்கள்.

“இந்த சுதந்திர இலங்கை சிங்களவருக்குச் சொந்தமானது. இதில் தமிழர் உரிமை கொண்டாட முடியாது”.

“இலங்கையில் தமிழர் இருப்பது ஆபத்தானது. தமிழர் எல்லோரையும் அவர்களின் தேசமான இந்தியாவுக்கு விரட்ட வேண்டும்”.

Shoba Sakthi தொலைக்காட்சியிலும், பத்திரிகை ஊடகங்களிலும் முழங்கிய சிங்கள வெகு மக்கள் கருத்தாக மட்டுமல்ல “தமிழர்களுக்குப் போவதற்கென்று ஒரு நாடு இருக்கிறது அது போல் இஸ்லாமியர்களுக்கும் இன்னொரு இடம் இருக்கிறது. ஆனால் சிங்களருக்கு இதுதான் நாடு” என்று இனப் படுகொலையை நடத்தி வெற்றி கொண்ட(?) உயர் இராணுவத்தளபதி பொன்சேகா வரை தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற ஒற்றை உளவியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. இனவாத அரசியலால் ஒடுக்கப்படும் சக்திகள் எதிர்வினையாற்றும். முப்பது ஆண்டுகளாய் அறவழியிலும், சற்றேறக்குறைய அதேயளவு ஆண்டுகளாய் ஆயுதப் போராட்ட முறையிலும் தமிழர்கள் எதிர்வினையாற்றினார்கள். தமிழ் எல்லையோரங்களில் சிங்களக் குடியேற்றம் நடந்ததில் - அதன் காரணமாக விடுதலைப் புலிகள் அவர்கள் மேல் எதிர்த்தாக்குதல் செய்தார்கள். மளமளவென விரிவடைந்த சிங்களக் குடியேற்றம் மட்டுப்பட்டதற்கு விடுதலைப் புலிகள் என்ற தடுப்பு அரண் இருந்தது. 30 ஆண்டுகள் நடந்த காந்திய வழிப் போராட்டத்தில் இந்தத் தடுப்பு அரண் உருவாகவில்லை. இனி எந்தத் தடையுமற்று, கிழக்கு போலவே, வடக்கு முழுவதும் சிங்கள வசந்தம் உருவாகும்.

உணர்வால், மொழியால், கலாச்சாரத்தால், நடைமுறைகளால் மஹாவம்சத்திலிருந்து புதிய அரசியல் யாப்பு வரையில் உருவாக்கப்பட்ட சிங்கள - பௌத்த பேரின அரசியலுக்குள்ளிருந்து இடதுசாரி அரசியல் மேலெழுந்து வரவில்லை. உழைக்கும் மக்களை ஒன்றிணைக்கும் இடதுசாரி அரசியலோ, அந்த வகை இயக்கங்களோ வாய்ப்பு அற்றுப் போனது. ஆயுத எழுச்சியில் தோன்றிய இடதுசாரிச் சிந்தனையான ஜே.வி.பி. கேவலமான இனவாத இயக்கமாக மாறியது. ஆட்சியிலிருக்கும் ராசபக்ஷேயின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ரணில் விக்கிரமசிங்கே பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி, புத்த பிக்குகளின் ‘ஜாதிக ஹெல உறுமய’ போன்ற இனவாதக் கட்சிகளே அங்கு கொடிகட்டிப் பறக்கின்றன.

ஒடுக்கப்படும் இனம் இந்த கொடிய சூழலை எப்படி எதிர் கொள்வது?

“ஒடுக்கும் பெருந்தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கம் புரட்சிக்குத் தலைமை தாங்கி முன்னெடுத்துச் செல்லும் பலத்துடன் இயங்கும் போது ஒடுக்கப்படும் தேசிய இனம் ஒன்றிணைந்து போராட முடியும். அம்மாதிரி நிலைமைகளில் மட்டுமே ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் ஒன்றிணைந்த போராட்டத்தை நாம் கோர முடியும். அவ்வாறான பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான இயக்கங்கள் வலிமையாய்த் திரண்டிராத வேளையில் ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலை பக்கமே நாம் நிற்க முடியும்”. - என்று தேசிய இனப் பிரச்னையில் யதார்த்தமான, ஸ்தூலாமான நிலைமைகளை முன்வைத்த லெனினது கருத்தின் சாரம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

இரு இனத்தின் உழைக்கும் மக்களை ஒன்றிணைக்கும் இடதுசாரி அரசியலோ, புரட்சிகர இயக்கங்களோ இல்லாத இன்றைய இலங்கையில் பெருந்தேசிய இனத்தின் வெறித்தனமே எஞ்சியுள்ள யதார்த்த நிலையில ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் ஒன்றிணைவு என்பதும், அவர்களின் விடிவு என்பதும் ஷோபா சக்தியின் ‘உடோப்பியா’ கற்பனைகளுக்கு எல்லை ஏது? லெனினுக்கு எதிர்த்திசையில் நடக்க எல்லா உரியையும் உண்டு - இடதுசாரி என்ற உரிமை கோராமல்.

1983-ஜூலை இனப்படுகொலையில் வெளிக்கடை சிறையில் வங்கொலை செய்யப்பட்ட தோழர். தங்கதுரை நீதிமன்ற உரையில் குறிப்பிட்டார். “விடுதலையை நாங்கள் பெறுவதன் மூலம் எமது லட்சியம் மட்டுமே நிறைவேறுவது அல்ல. சிங்கள மக்களுக்கும் பெரும் நன்மை செய்தவர்களாவோம். காரணம் அதன்பின் இனப் பிரச்னையை பூதாகரமாக்கி, அரசியல் பிழைப்பு நடத்தல் என்பது சிங்களர் மத்தியில் எடுபடாது. அதனால் சிங்கள மக்கள் மொழி தவிர்த்த ஏனைய விசயங்களில அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலைமையைப் பூரணமாக உணரவும், தமக்கு உண்டான அரசியல், பொருளாதாரத் தளைகளிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவும் முன் வருவர்”

தமிழர் விடுலை - சிங்களரை விடுதலை செய்யும் திறவுகோலைத் தன்னிடம் கொண்டுள்ளது. சிங்கள அதிகாரம் என்ற ஒற்றைப் பெருமலையைக் காட்டி, அவர்களை ஏமாற்ற அவர்களும் ஏமாற அம்மக்களை அடிமை நிலையில் வைத்திருப்பதை கண்டு கொள்ள வேண்டும். தமிழின விடுதலையே சிங்கள இனத்தின் விடுதலைக்கு நிபந்தனையாக அமைய முடியும் என்பது ஷோபா சக்திகளின் கற்பனாவாதத்திற்கு ஒத்துப் போகாது. விடுதலைப்புலிகளுக்கு எதிராக, ஷோபா சக்தி, அ.மார்க்ஸ், ஆதவன் தீட்சண்யா, சுகன் போன்றோரிடம் உள்ளிறங்கியிருக்கும் வன்மம், விடுதலைப் போராட்டத்துக்கு எதிரானதாய் உருவெடுத்துள்ளது. கோட்பாடுகளிலிருந்தும், பருண்மையான நிலைமைகளிலிருந்தும் தான் தேசிய இன விடுதலையை தீர்மானிக்க வேண்டுமே தவிர, விடுதலைப் போராளிகளுடன் ஒன்றுபட முடியாத புள்ளியிலிருந்து அல்ல. இந்தப் புள்ளி தான் விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான வெறுப்பாக உருவெடுக்கிறது.

இரு இனங்களின் உழைக்கும் மக்கள் ஒன்றிணைவு போன்ற கோணல் கோட்பாடுகளை சுமந்து நடந்தால், விடுதலைப் புலிகளின் பிழைகள் என்று குற்றம் சுமத்துகிறார்களே, அதனினும் மேலான பிழைகளாக - சொல்லமுடியாத விபரீதவிளைவுகளை உண்டுபண்னுவதாக - ராஜபக்ஷேக்களுக்கு அனுகூலமாகப் போய் முடியும்.

III

இனங்களுக்கிடையே வேற்றுமை நீங்கி, ஒரு மக்களாய், ஒரு தேசமாய் மேலாண்மை சக்திகளை எதிர்த்துப் போரிடும் குணம் பாட்டாளிவர்க்கத்துக்கு மட்டுமே உண்டு. குறிப்பாக, ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் உழைக்கும் மக்களை விட, ஒடுக்கும் தேசிய இனத்தின் உழைக்கும் மக்களுக்குத் தான் அந்தக் கடமை உண்டு என்று மார்க்சிய-லெனினியம் காட்டுகிறது. நாமும் அவவாறே கருதுகிறோம்.

தேசம், தேசியஇனம் என்ற எல்லைகள் அனைத்தும் இற்றுவிடும் காலகட்டம் பிறப்பதை நாம் விரும்புகிறோம். அவை நிலைத்து நிற்பவை என்றோ, நிலைத்து நிற்கவேண்டுமென்றோ நாம் எண்ணவில்லை. ஆனால் ஒன்றின் வினைப்பாடு வரலாற்றிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்னால், அதன் வரலாற்றுப் பாத்திரத்தை அது நிறைவு செய்ய வேண்டும். அவற்றின் வரலாற்றுப் பாத்திரத்தை அங்கீகரித்து அவற்றுக்கு முழுச் சுதந்திரமும் சனநாயகமும் வழங்கப்பட வேண்டும். நிறைவு செய்தபின், அவற்றின் வளர்ச்சிப் போக்கிலேயே அவை ஒன்றோடொன்று இணைவாகி கலந்து இனங்கள் இல்லாமல் போகும்.

தேசிய இனங்களை ஒடுக்குகிற கொள்கை என்பது தேசங்களைப் பிரிக்கின்ற கொள்கை என்றும், மக்களின் மனங்களைத் திட்டமிட்ட வகையில் கெடுக்கின்ற கொள்கை என்றும் லெனின் விளக்கப்படுத்துவார் (பாட்டாளிவர்க்க சர்வதேசியம், லெனின் கட்டுரைகள் - தொகுப்பு நூல்)

இரு இனங்கள் அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பல் தேசிய இனங்கள் ஒன்றாய்க் கலப்பது, தேசிய இன ஒடுக்குமுறையை நடத்தும் வல்லாதிக்கங்களால் அல்ல, மாறாக தேசிய இனங்கள் அனைத்தும் தத்தமது தேசிய விடுதலை என்ற இடை நிலையைக் கடந்த பின்பே ஒன்றிணைவு சாத்தியப்படும்.

“எவ்வாறு ஒடுக்கப்படும் வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்ற இடைநிலைக் கட்டத்தை கடந்த பின்னரே வர்க்கங்களை மனித சமுதாயம் ஒழிக்க முடியுமோ, வர்க்கங்கள் இல்லாமல் ஆகுமோ, அது போல் ஒடுக்கப்படும் எல்லா தேசங்களுக்கும் முழு விடுதலை என்ற அதாவது பிரிந்து போவது என்றால் அதற்குத் தடையேதுமில்லை, சுதந்திரம் உண்டு என்ற இடைநிலைக் காலத்திற்குப் பிறகுதான் தேசங்கள் ஒன்று படுவது இரண்டறக் கலப்பது என்ற நிலையை அடைய முடியும”. (தேசியக்கொள்கையும் பாட்டாளிவர்க்க சர்வதேசிய வாதமும் - சில பிரச்னைகள் - லெனின்)

ஆதிக்க சக்திகளுக்கு அவ்வாறான நீண்டநெடிய சமுதாயக் கண்ணோட்டம் ஒரு நாளும் இருக்க முடியாது. தேசிய இனங்களின் வரலாற்றுக் கடமையை மதிப்பதில்லை; ஒடுக்குகிறார்கள். இலங்கையின் பேரின ஆளும் வர்க்கங்கள், இன்னொரு இனத்தைக் காட்டி, சொந்த இனத்தை மேய்ப்பவர்கள். நிலாவைக் காட்டி மழலைக்குச் சோறூட்டும் நல்லத்தனமான காரியம் அல்ல. நிலாவின் அழகில் அதுவும் குழந்தையின் இயல்பில் அதுவும் இயல்பாக வளருகின்றன. இது பூதம் வருவதாகக் காட்டி சிங்கள இனத்தை பயப்படுத்தி ஏய்க்கும் கயவாளித்தனத்தை பேரின ஆட்சி முன்னிறுத்துகிறது. இதற்கு துணைசெய்ய வெளிநாட்டு ஆதிக்கவாதிகளையும் ஒரு தீவை மொட்டையடிக்க அழைத்துக் கொண்டார்கள்.

தேசிய விடுதலையை வென்றெடுப்பதன் மூலம், வர்க்கப் போராட்ட முன்னெடுப்புக்கான தடை நீக்கம் பெறுகிறது. இந்த முதல் கட்டத்தை கடந்து செல்வதின் வழியே பிற அக முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான வழிகிடைத்துவிடுகிறது. உள் முரண்களே வலிமையான, பிரதான எதிரியாகி விடுமெனின் அப்போது அதைத் தீர்த்து முடிப்பது பிரதான கடமையாகிவிடுகிறது. இலங்கைத் தீவில், ஈழவிடுதலையைச் சென்றடைய இந்த வகை நியாயம் எதுவும் இருக்கவில்லை.

இனஒடுக்கு முறை சாதி பார்த்துக் கொண்டு வரவில்லை, இவன் தாழ்த்தப்பட்டவன், இவன் உயர் சாதி என்று வேறுபாடு பார்த்து ஒடுக்குமுறை நிகழ்த்தியதில்லை தமிழன் என்ற இன அடையாளத்துக்குள் தள்ளித்தான் அத்துமீறல் நடந்தது. இதனை நேரடியாய்த் தெரிந்த பின்னும், அனுபவித்த பின்னும் அதிலிருந்து தம்மை மட்டும் மீட்டுக் கொள்வதற்கு உயர் சாதியினரில், மேல்வர்க்கத்தினரில் ஒரு சிலர் அரசு பதவிகளும் அமைச்சுக்களும் பெற்று சிங்கள ஆதிக்கத்தை நயந்து போன காரணத்தினால் தமிழர் இந்தக் கதிக்கு ஆளானார்கள் என்பது கட்டாயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதுடன், அது பிரிந்து போகும் உரிமையையும் அங்கீகரிப்பதே, பாட்டாளி வர்க்க சர்வதேசியமாகும் என லெனின் தெளிவாக வரையறுத்தார். “தேசிய ஒடுக்குமுறை இருக்கும் நிலையில் தேசியவிடுதலையைப் புற்க்கணிப்பது சோசலிஸ்டுகளின் கண்ணோட்டத்தில் தவறானது” என்று எச்சரித்த லெனின், “பொதுவான வரலாற்று ரீதியான நிலைமைகளையும், அரசு நிலைமைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எந்த நாட்டைச் சேர்ந்த மார்க்சியவாதிகளும் தமது தேசியத் திட்டத்தை வகுக்கும் பேச்சுக்கே இடமில்லை” என்றார்.

இலங்கைத் தீவில் வரலாற்றுக் காலந்தொட்டு இரு தேசங்கள் இருந்து வருகின்றன. ஒன்றுக்கொன்று இணக்கமற்ற இரு தேசங்கள். ஒன்று சிங்கள தேசம்; மற்றொன்று தமிழ்த்தேசம் பிரித்தானிய காலனிய ஆதிக்கம் கால்கொள்ளும் வரை தனித்தனி நாடுகள் - தனித்தனி அரசுகள் - தனித்தனி மொழி, நிலவியல், பண்பாட்டு முறைகள். கல்லுளிமங்கன் போனவழி காடுமேடெல்லாம் தவிடுபொடி என்ற பழமொழிக்கு தத்ரூபமான சாட்சியாக காலனியாதிக்கம் தனது வேட்டைக்கு ஒன்றுபட்ட நாட்டை உண்டாக்குகிறது. பிரிட்டனின் மேலாதிக்கத்தை எதிர்த்து, வீரமிகு எதிர்ப்பும் போரை நடத்தி மடிந்தவர்கள் அப்போதும் தமிழர்களே! எதிர்ப்பபை நசுக்கி அடிமைப்பட்ட ஒற்றைத் தேசத்தை பிரிட்டன் உருவாக்கியது வரலாற்றில் முதல் பிழை. 1948 இல் இலங்கையை விட்டு பிரிட்டன் வெளியேறிய போது, முன்னர் இருந்தது போல் இரு தேசங்களாக அவரவர் கையில் ஒப்படைக்காமல், சிஙகளப்பேரினத்தின் கையில் ஆட்சியை ஒப்படைசெய்தது - பிரிட்டன் விட்ட இரண்டாம் வரலாற்றுப் பிழை.

“நாங்கள் வரலாற்று ரீதியாக மாபெரும் பிழைசெய்து விட்டோம்” என்கிறார் ராகுல் சாய்ஸ் என்ற பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர். “தனித்தனி இரு நாடுகளை இணைத்து ஒரு நாடாக்கியது ஒரு வரலாற்றுப் பிழை. மிகப் பெரிய தவறு. தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் தனி அடையாளத்துடன் தனி எல்லைகளுடன், தனி அரசாட்சியுடன் வாழ்ந்தவர்கள். இங்கிருந்து போன எமது பிரிட்டீஷார், தமது வேட்டைக்காக ஒரே நாடாக்கி, சிங்களர் கையில் தானமளித்து விட்டு வந்தனர். அதற்காக நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம். இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து, தமிழர் மீது நடக்கும் இன அடக்கு முறைகளுக்கெல்லாம் இது தான் காரணம்.”

“2007ல் மட்டும் ரூ700 போடி மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கியதற்கு வெட்கப்படுகிறோம்” என்று குற்ற ஒப்புதல் அளித்தார் ராகுல் சாய்ஸ்.

பேரினவாத அரசாக தன்னைக் கட்டியமைத்தபடி உருவாகி வந்த சிங்கள அரசு தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளைக் கண்டு வெதும்பிப் போனவர் சேர் ஐவர் இன்னிங்ஸ். இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தார். சிங்களத் தலைவர்கள் கேட்டுக் கொண்டபடி, அவர் ஒற்றையாட்சி அரசியல் யாப்பை (சாசனம்) உருவாக்கித் தந்தார். ஓய்வு பெற்று இங்கிலாந்து திரும்பியவர், இலங்கையில் நடைபெற்று வரும் இனஒடுக்கு முறைகளை அறிந்து “இவ்வாறு தமிழர்களுக்கு கொடுமைகள் செய்யப்படும் என்று தெரிந்திருந்தால், இந்த அரசியல் யாப்பை எழுதியிருக்கவே மாட்டேன்” - என்று வருந்தினார்.

தேச உருவாக்கத்தின் வரலாற்று ரீதியான நிலைகளையும் அரசின் நிலைகளையும் கணக்கிலெடுத்துக் கொள் வேண்டும் என லெனின் சொல்வது இது தான். தேச உருவாக்கத்தின் போது, வரலாற்று ரீதியான நிலைகளை, அரசின் நிலைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எந்த நாட்டைச் சேர்ந்த மார்க்சியவாதிகளும் தமது தேசியத்திட்டத்தை வகுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று இடித்துரைப்பதும் இதிலிருந்து தான்.

“சுயநிர்ணய உரிமையை அல்லது பிரிந்து போகும் உரிமையை மறுப்பதானது மேலோங்கி ஆட்சி புரியும் தேசத்தின் விசேட உரிமைகளை நடைமுறையில் ஆதரிப்பதாகவே முடியும்” என்றார் லெனின். ஆக எப்படிப் பார்த்தாலும் இனி தமிழீழவிடுதலை சாத்தியமே இல்லையென்று ஷோபா சக்திகள் சொல்கையில், மேலோங்கி ஆட்சிபுரியும் இலங்கை இனவாத அரசின் கூட்டாளியாய் கைகொடுக்கிற காரியமாக வெளிப்படுகிறது. இனவாத அரசியலிலிருந்து ஒடுக்கப்படும் இனம் மீண்டு வரவேண்டுமென்கிற போதனை அல்லது வேண்டுகோள், ஒடுக்கும் பேரினத்தை நோக்கி வைக்கப்படவில்லை என்பதையும் இதற்குள் ஒளிந்திருக்கும் ஓரவஞ்சகத்தையும் கண்டு கொள்ளமுடியும்.

பாட்டாளி வர்க்க ஒற்றுமையைப் பேணுவதில், சர்வ தேசியத்தைப் பாதுகாப்பதில் ஒடுக்கும் தேசிய இனப் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளையே லெனின் முக்கியமானதாக முதலாவதாக கருதினார். “ஒடுக்கும் நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களை சர்வதேசிய உணர்வில் பயிற்றுவிக்கும் போதே, ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்குப் பிரிந்து போகும் சுதந்திரம் அளிக்க வேண்டும் என்பதை ஆதரித்து அதற்காகப் போராட வேண்டும்” என்கிறார்.

ஒடுக்கப்படும் தமிழ் தேசிய இனத்துக்கு பிரிந்து போகும் சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று ஏற்றுக் கொள்கிற சிங்கள மக்களும் இல்லை. அவ்வாறு பயிற்றுவிக்கிற இயக்கங்களும் இல்லை. ஒடுக்கும் எம்மை நீங்கள் நயந்து வாழவேண்டுமென கட்டளையிடும் இனவாத இயக்கங்களே உள்ளன.

தொடர்ச்சியாய் லெனின் இன்னொன்றையும் முன்னுரைத்தார். “ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த சமூக சனநாயகவாதிகள் அத்தகைய பிரச்சாரத்தைச் செய்யத் தவறினால், அவ்வாறு தவறிய ஒவ்வொருவரையும் ஏகாதிபத்தியவாதி என்றும் கயவர் என்றும் கருதுவது நமது உரிமையும் கடமையும் ஆகும்.” (தேசியக் கொள்கையும் பாட்டாளிவர்க்க சர்வ தேசியவாதமும் - சில பிரச்னைகள்)

ஒடுக்கும் தேசிய இன உழைக்கும் மக்கள், ஒடுக்கப்படும் தேசிய இனத்துக்கு ஆற்ற வேண்டிய கடமைகளையே முதன்மையானதாய் லெனின் வைக்கிற போது - அதன் எதிர்த்திசையில் நின்று ஒடுக்கப்படும் சக்திகள் இனவாத அரசியலிலிருந்து மீண்டு வரவேண்டும் என ஷோபா சக்தி அறிவுரைக்கிறார். “ஆயுதப் போராட்டங்கள் இனி சாத்தியமே இல்லையா, அமைதிவழிப் போராட்டங்களால் இந்த அரசுகளை வழிக்குக் கொண்டு வந்தவிட இயலுமா என்கிற கேள்விகளுக்கு உடனடியாகப் பதிலில்லாத போதும் இன்றைய மாற்றங்களைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் லட்சியவதம் பேசிக் கொண்டிருந்தோமானால் அது மக்களின் அழிவிற்கே இட்டுச் செல்லும்.” (அ.மார்க்ஸ் நீராநதி - ஜூலை 2009)

ஒடுக்கப்படும் தேசிய இனம் விடுதலை பெறவேண்டுமென்று சொல்வதை லட்சியவாதம் எனகிறார் அ.மார்க்ஸ். லெனின் அன்று பேசிய லட்சியவாதத்தை இன்று புறக்கணிப்போம் என்கிற பொருள் இந்த வாசகத்தில் வாழுகிறது. அ.மார்க்ஸ், ஷோபா சக்தி, ஆதவன் தீட்சண்யா, போன்றோரிடமிருந்து வெளிப்படும் இத்தகைய கருத்துக்கள் ஒடுக்கும் இனத்தவரின் கருத்துக்களே என்பதில் துளியும் ஐயம் இல்லை. நீங்களெல்லாம் சிங்களர்களா என்று உடனே கொச்சைப்படுத்த வேண்டியதில்லை. லெனின் காட்டிய வழியிலேயே ஏகாதிபத்தியவாதிகள் என்போம், கயவர் என்போம்.

லண்டன் டைம்ஸ் இதழில் அடுத்தடுத்து இரு செய்திகள் வந்துள்ளன. ராசபக்ஷேயின் நேர்காணலில் வெளிப்பட்டுள்ளன அச் செய்திகள்.

(1) இலங்கையில் தமிழர்களுக்கென தனி மாநிலத்தை ஏற்படுத்தவோ அல்லது அவர்களுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கவோ வாய்ப்புக்கள் இல்லை.

(2) தமிழர் வாழும் வட மாநிலப் பகுதிகளில், சிங்களர் குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்தமுடியாது.

இராணுவக் காலடிகளின் கீழ் - சிங்களரின் நடுவில் தமிழரின் சுதந்திரத்தை முற்றாக உருவி எடுத்தபின் என்ன வாழ்வு மீதி? தமிழனின் மூச்சுச் சுவாசம், மூளைச் சிந்திப்பு எல்லாமும் சிங்களரின் கழுத்துப்பிடியில் இருக்க அவரவருக்கான உரையாடலை நிகழ்த்திக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் உலகநாடுகள். இந்த உலகத்தை வளைத்துப் போட ஈழத்தமிழனுக்கு கரங்கள் போதாது. நிகழ்த்தப்படப்போகும் வாழ்வியல் நெருக்கடியிலிருந்து - எல்லாமும் அற்ற சூனியத்திலிருந்து புறப்படும் ஒரு தமிழன் - எந்த இடத்திற்கு போய்ச் சேருவான்? தமிழன் மட்டுமல்ல, எந்த ஒரு மனிதனும்!

- சூரியதீபன் (jpirakasam@gmail.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
Harigaran
2009-08-02 09:56:00
hari7_@yahoo.com

ஈழப்போருக்கு"பின்னான இலங்கையில்,பெரும்பகுதி உழைக்கும் மக்கள்,இன அடையாளப்படுத்தப்பட்ட அரசியலில்,சிறுபான்மையாகவும் பெரும்பான்மையாகவும் பிளவுபட்டுக்கிடக்கும் இன்றைய சூழலில்,இலங்கையில் சிறுபான்மை இனங்களே கிடையாதென்றும்,"நாம் அனைவரும் இலங்கையர்களே"என்றும், மகிந்தாவிடும் குரலில் மாறிவரும் பொருளாதாரச் சூழலில் இலங்கையை முற்றுகையிடும் அந்நியப் பொருளாதார ஆர்வங்கள் இருக்கக் காணக்கடவது.இவை, இன்றைய ஆசிய மூலதனத்தோடான உறவில் பின்னிப்பிணைந்து இலங்கையிலுள்ள இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தமது இலக்குக்கேற்பச் சொல்லுகின்றன.
 
"புலம்பெயர்வாழிலங்கையர்கள்"சந்திப்பு:
 
அன்று, காலனித்துவக் காலக்கட்டத்தில்-இலங்கையின் சமூக வளர்ச்சிக்காலக் கட்டத்தை மறுத்து, முரண்பாடுகளை மழுங்கடித்த காலனித்துவம்,இலங்கையில் தீடீர் முதலாளித்துவத்தைத் தோற்றுவித்து அதையே அரச முதலாளியமாக விட்டுவைத்துச் சென்றது.அதன் மீள் வருகையில் நவ காலனித்துவம் தொடர்ந்து இருப்புக்குள்ளாகியது.இதுவே,இப்போதும் இலங்கையின் பொருளாதார முரண்பாடுகளால் வளர்வுறும் சமூக வளர்ச்சிப்பாதையில் இனங்கள் உதிர்ந்து"இலங்கையர்கள்"எனும் கோசம் வலுப்பெறுவதற்கு முன்பே சமூக வளர்சியை மறுத்தபடி, அதன் இயல்பான வளர்ச்சிக்குக் குறுக்கே நின்றகொண்டும், திடீர்"இலங்கையர்கள்"எனும் தேசிய இன அடையாளத்தை, முழுமொத்த இலங்கை வாழ் இனக் குழுமத்துக்கும் பொருத்திவைத்துத் தமது நிதியாதாரத்தை இலங்கையில் பெருக்கும் பெரு முயற்சியில் மகிந்தாவினது குரலாக அனைவருக்குமான இலங்கை என்கிறது.இது சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு மிகச் சாதகமான குறுகிய இலாபங்களை வழங்கிக்கொள்வதால் இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களை ஒட்ட மொட்டையடித்து அவ்வினங்களைப் பெரும்பான்மைச் சிங்கள ஆதிக்கத்துள் உள்வாங்கி அழிப்பதற்கு மிக நேர்த்தியான சூழலை உருவாக்குகிறது.
 
உலக ஏகாதிபத்தியங்கள் தமது பொருளாதார மற்றும் புவிகோள அரசியல் ஆதாயங்களுக்காகப் பொது அமைப்புகள் எனும் வடிவில் "அரசுசாரா"அமைப்புகளை உருவாக்கி வைத்து அவற்றை இயக்குவதுபோன்று, இன்றைய இலங்கை புலிகள் அழிப்புக்குப் பின் இலங்கைத் தேசத்தில் சிறுபான்மை இனங்களை ஒட்ட மொட்டையடிக்க இத்தகைய "அரசுசாரா"அமைப்புகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயக்கத் தக்கபடி உள்ளுர் அமைப்புகளைத் தோற்றுகிறது.இது மிகவும் ஆபத்தானவொரு மேற்குலக ஏகாதிபத்தியங்களின் அரசியல் வியூகத்தின் தொடர்ச்சியாக நம்முன் கொணரப்படுகிறது.இங்கே,இலங்கை அரசானது தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை மையப்படுத்தபட்ட இலக்குக்கமைய முன்நகர்த்துவதற்கு இத்தகைய அமைப்புளது ஒத்துழைப்புகளுடாகப் பொதுக் கருத்தை ஏற்படுத்தி, அதையே மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் இவ்வமைப்புகளுடாகச் சொல்கிறது. இன்று, புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் இலங்கை அரசுக்குச் சார்பான அரசியலை முன்தள்ளும்-முன்னெடுக்கும் இக் குழுக்கள், பல்வேறு வடிவங்களில் தமது முகமூடியைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கிறது.இதுள் தலித்துக்களுக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புகளாகவிருந்தாலுஞ்சரி அல்லது வன்னி மக்களுக்கு உதவும் அமைப்புகளாகவிருந்தாலுஞ்சரி இவையாவும் இலங்கை அரசினது இன்றை இனவழிப்பு அரசியல் வியூகத்துக்கு வலுச் சேர்ப்பதற்கான கூறுகளாகவே இனம் காணத்தக்கன.
 
 



"புலம்பெயர் வாழ் இலங்கையரின் ஒன்றுகூடல்" என்பதுகூட ஒரு கோணற்றனமான வாசகம்தாம்.புலம்பெயர் என்பது ஒரு நாடோ அல்லது தேசங்களையோ குறிப்பிட முடியுமா?அதற்குள் வாழவும் முடிகிறது?
 
தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் தேசங்களில் இத்தகைய தலைப்புகளில் நடாத்தும் "இலங்கையர்கள்"என்ன சொல்ல வருகிறார்கள் என்பது மிக அவசியமாக இனங்காணத்தக்கது!
 
இலங்கையைவிட்டுப் புலம்பெயர்ந்து மேற்குலகில் வாழும் இலங்கையர்களுக்குள் பற்பல கூறுகள்,பிளவுகள் இருக்கும்போது"இலங்கையர்கள்"எனும் பொது அடையாளம் அவசியமாக இருக்கிறதென்றால் பிறகெதற்குத்"தலித்துவ அடையாளம்",பிரதேச அடையாளம்,மதஞ்சார்ந்த குழும அடையாளம்?கலாச்சாரத் தேசியம் பேசுபவர்கள் எதற்காக"இலங்கையர்கள்" எனும் அடையாளத்துக்குள் ஒரு இனத்தின் தனித்துவத்தையும்,உரிமையையும் மறைப்பது?தமிழ்த் தேசிய இன அடையாளத்தை மறுபவர்கள் பின்பு தலித்துவ அடையாளத்தை எதற்காகத் தூக்கிப்பிடிப்பது?-மலையகத் தேசியத்தையும்,இஸ்லாமியத் தேசியத்தையும் பற்றிப் பேசுவது?ஒடுக்குமுறைகள் யாவும் ஒடுக்குமுறைகளாகவே இருக்கும்போது அதில் ஒரு கூறை முறைத்துவிட்டு மறுகூறைத் தூக்கிப்பிடித்து எந்தவுரிமையையும் பெற்றுவிட முடியாது.இத்தகைய நடாத்தையானது சிங்கள ஆளும் வர்க்கத்தினது கனவை நிறைவேற்றும் கயமைக்குப் பலியான அரசியல் வாழ்வாகும்.
 
இலங்கையர்களுக்கு இலங்கைத் தேசியம் என்ற அடையாளந்தாம் இருக்கமுடியும்.இதன் அடிப்படையில்தாம் சிங்கள இனவெறி அரசானது தமிழர்கள் என்பதற்காக அனைவரையும் இனவொடுக்குமுறைக்குள் உட்படுத்தியது.அங்கே, தலித்தோ அல்லது பிரதேசப் பிரஜைகளோ முதற்தெரிகளாகவும்-சிறப்பாகவும் பார்க்கப்படவில்லை.எனினும்,இந்தச் செயற்கையான"இலங்கையர்கள்"எனும் அடையாளத்துக்கூடாக இயங்கும் அரசியலை முன்னெடுக்கும் இந்த ஓடுகாலிக் கூட்டங்கள் இலங்கை அரசினது கைக்கூலிகளானவர்கள் என்பதை நாம் புரிந்தாகவேண்டும்.இவர்களுக்கு முகமூடி தயாரித்து,வால்கட்டி இயக்கும் இலங்கையின் இன்றைய தெரிவுக்கு உலக ஏகாதிபத்தியங்களது அதே பிழைப்புவாத அரச தந்திரமே வழிகாட்டுகிறது.உலக நாணய நிதியத்திடம் வட்டிக்குக் கடனைப்பெற்று, இத்தகைய அமைப்புகளையும் வளர்த்து இதன் பக்கத்துணையோடு இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் திசை திருப்பித் தமது அதிகாரத்தைத் தொடர்ந்து பேணும் இலங்கைச் சிங்கள ஆளும்வர்க்கமானது மிகவும் அபாயகரமான அரசியல் சூழ்ச்சியல் சிறுபான்மை இனங்களை வீழ்த்தி வேட்டையாடுகிறது.
   
2


தினமும் வறுமையோடும் வேலைப் பளுவோடும் ஜந்திரமாக வேலைவேண்டிப் பாவிக்கப்படும் ஒரு கருவியாகவே உலகத்தில் உழைக்கும் மனிதரை இன்றைய பொருளாதார அமைப்பு-உலக ஏகாதிபத்தியத் தொழிலகங்கள் உருவாக்கி வைத்து அடிமையாக்கியுள்ளது.இது ஒருவகையில் மறைமுகமான அடிமையுடமைச் சமுதாயமாகவே இருக்கிறது.இந்தச் சமுதாயத்தில் உலக நாணய நிதியம்-உலக வங்கிகள் யாவும் இவ்வடிமைச் சமுதாயத்தைத் தொடர்ந்து இருத்தி வைக்கும் மேற்காணும் தொழிற்கழகங்களது எடுபிடிகளாகவே இருக்கின்றபோது,அரேபிய எண்ணை வயல்களைத் தமது குடும்பச் சொத்தாக்கிய அரேபிய நிலப்பிரபுக்களின் பதுக்கற் பணமோ"எண்ணை டொலர்களாக"இவ் நாணய நிதியத்திடமும்,உலக வங்கியிடம் முடங்கிக்கிடக்க, இதன் ஆதிக்கம் மேற்குலகப் பொருளாதார நலன்களைச் சுற்றிய வியூகமாக விரிகிறது.
 
இலங்கையினது மக்கள்கூட்டம்,இலங்கைப் பாசிச அரச ஜந்திரத்துக்குள் தொடர்ந்து மாட்டப்பட்டிருப்பதற்காக வழங்கப்படும் கடன் நிதிகள் திட்டமிடப்பட்ட இனவழிப்புக்கும் அதுசார்ந்த முரண்பாடுகளுக்கும் பாவிக்கப்படும்போது குடிசார் உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் ஒரு அரசாகவே இலங்கை தொடர்ந்திருக்கும்.இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை வெறும் பயங்கரவாதமாகக் காட்டும் சிங்கள ஆளும் வர்க்கத்து அபாயகரமான அரசியலின் விளைவால்,அவை கொண்டுள்ள பொருளாதார ஆதிக்கமானது இனங்களுக்கிடையிலான முதலாளித்துவ வளர்ச்சியை மட்டுப்படுத்தி இலங்கையை மேலும் உரிமைகளற்ற தேசமாகவே சிறுபான்மை இனங்களுக்கு விட்டுவைக்கும்.இதனால், தமிழ்,முஸ்லீம் மற்றும் மலையகத் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலமானது தத் தமது அரசியல்-பொருளியல் அபிலாசைகளோடு தனித்துவமான தேசிய முன்மொழிவுகளைக் கோரிக் கொண்டே இருக்கப் போகிறது.
 
இந்த முன் மொழிவுகள் இனத்துவ அடையாளத்தை மையப்படுத்திய பேரெழிச்சியாக மாறுந் தறுவாயில் இலங்கையில் பிரிவினை அரசியல் நிலவரம் செறிவேற்றப்படுகிறது.இந்தச் செறிவேற்றலைச் செய்து முடிக்கும் இனவொடுக்குமுறையானது அப்பாவி மக்களை அழித்துத் துவசம் செய்யும்போது அங்கே அவர்களின் அத்துமீறிய வன்முறைகளைக் கோரி நிற்கிறது.இது தனக்கேற்படும் அழிவுகளுக்கான அத்துமீறிய எதிர்ப்புப் போராட்டமாக விரியும்.இந்த எதிர்ப்பு வன்முறையாக விரிந்து ஆயுதத்தை ஏந்தும்போது அங்கே மீளவும் பிரபாகரன்கள் உருவாவது தவிர்க்க முடியாத வினையாகிறது.இதைக் குறித்தான அரசியலை மையப்படுத்துகிற சிங்கள ஆளும்வர்கத்தின் தெரிவானது இலங்கையைப் புரட்சிகரச் சக்திகள் அரசியல்ரீதியாகக் கைப்பற்றதாவொரு சூழலை நோக்கியதாகும்.
 
இலங்கைத் தேசத்தின் பாரிய பின்னடைவாக தமிழ்த் தேசிய இனத்தைக் கணித்திருக்கும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் பொருளாதார அறிவானது அந்நிய சக்திகளிடம் கண்டுண்டு கிடக்கும் தமது இழிநிலையை உதாசீனப்படுத்தப்படுகிறது.இன முரண்பாட்டைத் தொடர்ந்து யுத்தங்களால் கூர்மைப்படுத்தி இனச் சுத்திகரிப்பை மெல்ல செய்த இந்த ஆளும் வர்க்கமானது, இலங்கையின் இறைமையை எப்போதோ அந்நிய எஜமானர்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டது.இதுதாம் இன்றைய அனைத்து முரண்பாட்டையும் சிக்கலுக்குள் மாட்டி மேற்குலக நிதி ஆளுமையுடைய நாடுகளால் தமிழ்பேசும் மக்களுக்கு விடிவு வரும் என்பதாகவும் இன்னொரு பொய்மையை அவிழ்த்துவிட்டுத் தப்பிக்கிறது.
 
தென்கிழக்காசியாவில் பேரளவில் தன்னிறைவானவொரு அரசாக இலங்கை மிளிரக்கூடிய அரிய வாய்ப்புகளை-வளங்களை இலங்கை கொண்டுள்ளது.அதன் சனத்தொகையும் வளமும் இதை மெல்லச் சாத்தியப் படுத்தியிருக்கும்.எனினும் அடாப்பிடியான இனவொடுக்குமுறையைக் கடைப்பிடிக்கும் சிங்கள ஆளும் வர்கத்தை உசுப்பிவிடும் இந்திய-அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசியல் நலன்கள் இலங்கையைப் படுகுழியில் தள்ளி அதன் வலுவான வளர்ச்சியை,தேசியவொருமைப்பாட்டைத் தொடர்ந்து உடைத்தெறிந்து,இனப்படுகொலையைச் சமீபம்வரை நடாத்தியது.இந்த நிலையில்,மேலும் சர்வதேச நாணய நிதியமும் மற்றும் உலக வங்கியும் அதன் எஜமானர்களும் நமது மக்களுக்கும்,அவர்களது விடிவுக்கும் தார்மீக ரீதிய உதவுவதாகக் கருத்துக்கட்டும் சந்தர்ப்பாவதமானது இலங்கைச் சிறுபான்மை இனங்களை ஏமாற்றுஞ் சதி நிறைந்தது.
 
 
இவ்வண்ணமேதாம் இன்றைக்குப் புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் மக்களுக்குள் உருவாக்கப்படும் திடீர் அமைப்புகள்-குழுக்கள் யாவும் இத்தகைய அந்நியச் சக்திகளுக்குச் சோரம்போன இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் கைக்கூலிகள்.இவர்கள் சிங்கள அரசினது பாசிச அரசியலைக் கேள்விக்குட்படுத்தாமல்-இனவழிப்பை இனங் காட்டாமல்-தமிழ்தேசிய இனத்துக்கு எதிராகச் செயற்படுத்தப்படும் திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தாமல், வன்னியில் வதங்கும் மக்களுக்கு உதவுவதற்காவும்,தலித்துக்களின் விடிவுக்காகக் குரல் கொடுப்பதென்பதும் வடிகட்டிய அயோக்கியத்தனத்தின் அரசியலே.
 
 
இத்தகைய குழுக்கள் யாவும்"பொதுவமைப்புகள்-அரசுசாரத் தன்னார்வ அமைப்புகள்"எனும் போர்வையில் இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கத்தினது எடுபிடி அமைப்புகள்-கட்சிகள் என்பது உண்மை.இதை, நாம் இனங்கண்டாக வேண்டும்.இலங்கையில் புரட்சிகரமான அரசியலை முன்னெடுப்பதற்கான முட்டுகட்டைகளில் முதன்மையான தடைக்கற்கள் இத்தகைய கைக்கூலிக் குழுக்கள் என்பதை முதலில் வரையறுக்க வேண்டும்.
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
02.08.09

rajiv rufus
2009-08-02 02:34:00
rajivrufus@gmail.com

It is a wonderful article. Comrade wishes.

திங்கள் சத்யா
2009-08-03 07:50:00
balaphoto7@gmail.com

//நான் என்னை இந்தியக் குடிமகன் என்று ஒரு போதும் சொல்வதில்லை. முதலில் நான் மனிதன். இரண்டாவதாய் நான் தமிழன். பிறகு நான் சர்வதேச மனிதன். இடையிலுள்ள இந்தியன் என்பதை நீ விட்டு விட்டாயே என்கிறார்கள் சிலர். நான் இந்தியன் இல்லை. இந்தியனாக இருப்பவர் எவரும் மனிதனாக இல்லை. நான் தமிழனாக இருப்பதால் மனிதனாக இருக்கிறேன் என்பது இயல்பானது போலவே, இந்தியன் எவரும் மனிதனாக இல்லாததும் இயல்பானது.

இல்லையென்றால் இங்கே இருபது கிலோமீட்டர் தூரத்தில் பல்லாயிரக்கணக்கில் மனித உயிர்கள் கொத்துக் கொத்தாய் கருக்கப்பட்ட போது - கண் கொண்டு காணாமல், காது கொண்டு கேளாமல், கருத்து கொண்டு உணராமல் இருக்க முடியுமா? இருந்தார்கள். தமிழர்களாகக் கூட வேண்டாம்; உலகின் சக மனிதர்களாக பார்க்கவும் தயாராக இல்லை; இப்படி மரணத்தின் மேல் நின்று நர்த்தனமாடுகிற எந்த இந்தியனையும் மனிதன் என்று கூற நா கூசுகிறது.

இந்தியக் குடிமகனாக இருப்பதும், ஷோபா சக்தியின் இலங்கைக் குடிமகனாக இருப்பதும் ஒன்றே. இருவரும் மற்றவர்களின் மரணத்தில் சந்தோஷிக்கிறார்கள்.// என்பவை மிகச் சிறந்த வரிகள்.
இடையிடையே வரும் நீளமான வரிகள், இனையதள வாசகர்களை குழப்பத்தில் ஆழ்த்துவது நிச்சயம். இது செய்தியை கொண்டு சேர்ப்பதில் சிக்கலை ஏற்படுத்தும். மற்றபடி தரமான கட்டுரை.

elagnairu
2009-08-03 10:21:00
gnairu@gmail.com

தமிழில் பேசுங்கள் தமிழில் படியுங்கள் தமிழில் பெயர்சூட்டுங்கள் என்று தமிழில் பேசினாலே நம்மை தமிழ் ஆர்வலர்களாக பார்க்காமல் தீவிரவாதிகளாக..பிரிவினை வாதிகளாக...நாத்திகர்களாக பார்க்கும் மூட சமூகத்தின் ஒரு பகுதியாக...... தமிழ் ஆன்மீகவாதிகளை...தமிழ் நாட்டுப்பற்றாளர்களை...பார்க்க நாதியற்ற சராசரி பாமரன்களாக....சில அறிவு ஜீவிகள் மாறிவருவது வருத்தம்தான்....இவர்கள் வரலாற்றின் தோற்றங்கள்... சுயநல வடிகால்கள்களில் புகழுக்காக களைகளை வளரச்செய்யும் கருங்காலிகள்......பிடுங்கி வீசிவிட்டு பயிர்களை வளர்க்கும் விவசாயி போல் நாம் விடுதலை உணர்வுகளை..உண்மைகளை.. விதைத்து வளர்க்க வேண்டும்....இணையதளங்களிலும்...காகிதங்களிலும் கர்ச்சிக்கும் இவர்களை ஒதுக்கிவிட்டு.... களம் காணும் மறவர்களை உருவாக்குவோம்............ கருத்து..அ.இளஞாயிறு

Sarvachitthan
2009-08-04 05:28:00
sarvachitthan@gmail.com

இன்று பிரான்ஸ்;ஜெர்மனி;கனடா; நோர்வே; இங்கிலாந்தென்று உலகின் பல பாகங்களிகளிலும் சிதறுண்டு கிடந்தாலும், தங்களுக்கென்றொரு அடையாளத்தையும், சுகவாழ்வையும் உருவாக்க ஒருவகையில் இந்த ஈழப் போராட்டமே துணை செய்தது என்பதை ஒப்புக்கொள்ளும் எவரும் இந்தப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் செயல்படமாட்டார்கள்.உண்மையில் இந்தப் போராட்ட்ம் இத்தனை காலம் நீடித்திருக்காவிடில், இப்போது ஈழப்போருக்கு எதிராக ‘வாய்கிழிய’ப்பேசும் இவர்களில் பலர் இன்றும் அந்த நாட்டின் சந்திகளிலும்,தெருக்களிலும் வேலைவாய்ப்புக்காக அலைந்துகொண்டிருப்பார்கள். தாங்கள் இப்போது வாழும் சொகுசு வாழ்க்கைக்காக வேனும் இவர்கள் ஈழத்தை ஆதரிக்கவேண்டிய தார்மீகக் கடமை இருக்கிறது. இதனைச் செய்யாதவர்களைப் பற்றி எழுதுவதால் என்ன பயன் ஏற்படப்போகிறது? இவர்கள் வாழ்வது தமிழால் ; இலங்கையர் என்பதால் அல்ல. இவர்களுக்கு வெளிநாடுகள் அடைக்கலம் அளித்ததற்கு முக்கிய காரணமே இவர்கள் தமிழர்கள் என்பதாலும்,இலங்கையில் சிங்களாரால் துன்புறுத்தப் படுகிறார்கள் என்பதாலுந்தான். இதற்காகவாவது ‘ஈழத்தை’ அவமதிக்கும் செயல்களிலும், எழுதுவதிலும் இருந்து இவர்கள் ஒதுங்கிக் கொள்வது நல்லது மட்டுமல்ல நேர்மையுங் கூட!செய்வார்களா? சூரியதீபனப் போன்றோர் எத்தனை எழுதினலும் இவர்களைப் போன்ற சிலர் இருக்கவே செய்வார்கள்.அது தமிழன் செய்த பாவம்!

venkattan
2009-08-04 10:57:00
venkattan@gmail.com

neengal sollvathai paarthal ivarkal ellam etho manareethiyaka eluthuvathu poola. intha naaikal eppavavathu illangai arasangam saitha kolaikaliyoo IPKF saitha rape and killings pathi pesi irukka?

jothi Narasimman
2009-08-05 06:29:00
thamizhinijothi@gmail.com

சிறந்த கட்டுரை லீனா மணிமேகலை போன்றோர் இதுபோன்ற இழிசெயல்களில் தொடர்ந்து
ஈடுபடுகின்றனர்

sansathis
2009-08-06 08:19:00
sana@hotmail.fr

1 .சுகன் காசிஆனந்தனின் கவிதையும் சுகன் படித்தாரே அதைப் பற்றிக் கதையில்லையே?
2. அரங்கம் அதிரக் காரணம் இந்தியாவில் தமிழில் தேசியகீதமில்லை ஈழத்திலிருக்கிறதே என்ற அதிர்ச்சியாக இருக்கலாம்.
3.உண்மையில் அது அழகிய ஆற்றொழுக்கான கவிதை தான்.தேசியம் பற்றி அறியாத வயதில் கூட ஓசை நயத்துக்காக வகுப்பில் அதைப்பாடுவது ஞாபகம் வருகிறது.
4.கூலிகளாகவே தமிழர் வெளிநாடுகளில் வேலை செய்து முறிகிறார்கள்.போராட்டமெனப் படிப்பைப் பாதியில் விடாமல் படித்திருப்பின் பதவி பவிசு என வாழ்ந்திருக்கக் கூடியவர்கள் பலரும் அகதியாகியும் கூட்டம் கொள்கை என தாகத்தைத் தீர்க்கிறார்கள்.

Guru.Radhakrishnan,Nellikuppam607105
2009-08-07 09:09:00
radhakrishnan.guru9@gmail.com

Tyhe article of Thiru Suriyakanthan(kavignar) on the statement of
is isr.A.Marx.,Shobasakthi,Athavantheekshanya published in tamil journal Theeranadhi really superp and authentic reply to the mentioned so called litrary persons. One day or other these persons eill realised their mistakes GGR--NELLIKUPPAM--607105

மாலன்
2009-08-08 10:14:00
maalan@gmail.com

ஜே.பி,

1.அண்மையில் நாடாளுமன்றத் தேர்தலில், தனி ஈழம், அதை ராணுவ பலத்தைப் பயன்படுத்திப் பெற்றுத் தருவது என்ற நிலைபாட்டை பகிரங்கமாக அறிவித்த கட்சிகளை நிராகரித்து, ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் ரீதியான செயல்பாடுகள் வழியே தமிழர்களுக்கு உரிமைகளப் பெற்றுத் தருவது என்ற நிலை கொண்ட கட்சிகளுக்கு தமிழக மக்கள் வாக்களித்தார்கள். அவர்கள் தமிழர்களா இல்லையா எனத் தெளிவுபடுத்துவது நல்லது. ஏனெனில் உங்கள் வாதப்படி அவர்கள் தமிழர்களாக இருந்தால் மனிதர்களாக இருந்திருப்பார்கள். மனிதர்களாக இருந்திருந்தால் கொத்துக் கொத்தாய் மனித உயிர்கள் கருக்கப்பட்டதைக் கண் கொண்டு பார்த்து, காது கொண்டு கேட்டு, கருத்துக் கொண்டு உணர்ந்து, நீங்கள் வந்திருக்கும் அதே முடிவுக்கு- அதாவது விடுதலைப்புலிகளை ஆதரிப்பதே மீட்ச்க்கு வழி, தனி ஈழமே தீர்வு- என்ற முடிவுக்கு வந்திருப்பார்கள். அந்த முடிவுக்கு அவர்கள் வரவில்லை என்பதை தமிழக மக்கள் அளித்துள்ள தீர்ப்பு காட்டுகிறது. அவர்கள் தமிழர்களா இல்லையா?

2.செர்பினியா இனப்படுகொலைக்காக ஸ்லோபோடனை அனைத்துலக நீதிமன்றத்தின் முன் உலக அரசுகள் ஒன்றுபட்டு நிறுத்தின. சொல்ல முடியாத சோகக் கதைகளை இலங்கையில் விதைத்த ராசபக்ஷேயை அதுபோல் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்திப் பார்க்க உலக நாடுகள் தயாராக இல்லை. சரி அது ஏன் என்ற கேள்விக்கு விடைகண்டாக வேண்டுமா இல்லையா? நீங்கள் சொல்வதுபோல் பயங்கரவாதம் என்ற இலங்கை அரசின் நிலைபாட்டை அவை ஏற்று இந்த முடிவை ஏற்கின்றன என்றே ஒரு வாதத்திற்காக வைத்துக் கொள்வோம். பயங்கரவாதமல்ல, இது விடுதலைப் போர் என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டியதும் போராளிகளின் கடமை அல்லவா? அதில் தவறியது யார்? 80களில் புலம் பெயர்ந்து வந்தவர்களை அகதிகள் என அங்கீகரித்து ஏற்றுக் கொள்ள முன் வந்த நாடுகளின் அரசுகள் 2000ல் விடுதலை இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாகக் காணும் திருப்பம் ஏன் நிகழ்ந்தது?

3 மார்கஸ், ஷோபா சக்தி, மற்றும் பலர் சிங்கள பேரினவாதிகளின் கொடுஞ்செயலைக் கண்டிக்காமல், விடுதலைப் புலிகளை விமர்சிப்பது நடுநிலைமை அற்றது, நியாயமற்றது என்றால், விடுதலைப்புலிகளின் கொடுஞ்செயல்களைக் கண்டிக்காமல், சிங்கள அரசை விமர்சிப்பது மட்டும் எப்படி நடுநிலையானதாகவும், நியாயமானதாகவும் ஆகும்? விமர்சனம் என்று சொல்ல வந்தால் அதை இருதரப்பிற்கும் பொதுவில் வைப்போம்.

சர்வதேச மனிதர்கள் எனத் தங்களை அறிவித்துக் கொள்பவர்கள் எல்லா மனித உயிர்களையும் அவர்கள்தம் உரிமைகளையும் ஒன்று போல் நோக்கவும், நேசிக்கவும் செய்தல் வேண்டும்.தமிழர் உயிர் உயர்ந்தது, சிங்களவர் உயிர், இந்தியர் உயிர், இராக்கியர் உயிர் மலினமானது என்று எண்ணுவது மொழி சார்ந்த தீவிரவாதமாகும். எப்படி மதம் சார்ந்து, ஜாதி சார்ந்து தங்கள் அடையாளப்படுத்திக் கொண்டு செயல்படுவது ஒருவகையான தீவிரவாதமோ அதைப் போன்றதே மொழி சார்ந்த அடையாளங்களை மாத்திரமே முன்னிலைப்படுத்தலும். உலகில் இரு வகையினர்தான் உண்டு. ஒடுக்கப்படுபவர்கள். ஒடுக்குபவர்கள். இந்த வெளிச்சத்தில் பார்த்தால் பல விஷயங்கள் தெளிவாகும்.


viswanathan
2009-08-10 06:39:00
visurakk@gmail.com

Mr. Shoba sakthi and Co have acted like Sri Lankan NGO's. History has witnessed many such. Instead of ignoring them, we make them popular and influential. Their motive is not for up liftment of dalits and minorities, it is for personnel, money and fame.

Viswanathan

NATARAJAN
2009-11-01 09:58:00
DREAMSKNR@YAHOO.COM

are you or any say!! do not cirtise prabha ! i have still MAO aND marx and leniON!

Guru.Radhakrishnan
2009-12-11 09:20:00
radhakrishnan.guru9@gmail.com

Suriya Theepan's article is worth readable and giving full details of quoatin the verses inthe articles of LENIN. The questions raised by kavgnar Suriyatheepan have to be replied by Mr.Shobasakthi groups.,otherwise the readers will think therealityand belief on them.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP