Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

கூவாத கோழிகளும் குடைசாயும் இறையாண்மையும்...!
சுந்தரராஜன்

சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் கோழிகளை வீடுகளில் வளர்த்ததாக மானுடவியலாளர்கள் கூறுகின்றனர். தென்கிழக்கு ஆசியாவில் (இப்போதைய தாய்லாந்து, வியட்நாம்) சிந்து வெளி நாகரிகத்தில் மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்களில் கி.மு. 2500-2100 ஆண்டுகளில் கோழிகள் இருந்ததை சுட்டிக்காட்டும் விதமாக சண்டையிடும் சேவல்களின் உருவம் பொறிக்கப்பட்ட மண்தகடுகள் கிடைத்துள்ளன.

கூவும் அல்லது கூவாத கோழிக்கும், இறையாண்மைக்கும் என்ன தொடர்பு?

chicken_gen பண்டைக்காலத்தில் அரசனின் செங்கோலும், வெண் கொற்றக்குடையுமே இறையாண்மையின் அடையாளமாக கருதப்பட்டது. தற்போது இறையாண்மை என்பது நாட்டின் ஆட்சிப்பொறுப்பில் உள்ள அரசுக்கு தொடர்புடையதாகவும், எதிரி நாடுகளாலோ, பயங்கரவாதிகளாலோ, (சில நேரங்களில்) அரசை விமர்சிப்பவர்களாலோ பாதிக்கப்படும் ஒரு கருத்தாக்கமாகவே நம்மில் பலரும் கருதுகிறோம். அதாவது அரசு அமைப்பினை விமர்சனமின்றி பாதுகாக்கும் ஒரு அம்சமாகவே “இறையாண்மை” நமக்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு நாட்டின் உள்-வெளி விவகாரங்களை தீர்மானிக்கும் அதிகாரமே அரசு அமைப்புகளின் இறையாண்மை என்று அரசியல் மற்றும் சட்ட தத்துவங்கள் கூறுகின்றன. அதாவது ஒரு நாட்டு குடிமக்களின் வாழ்க்கையை பாதிக்கும் எந்த அம்சம் குறித்தும் அந்த நாட்டு மக்களின் விருப்பத்திற்கிணங்க அரசே முடிவெடுக்கும் உரிமையே அந்த அரசின் இறையாண்மை என்று கொள்ளலாம். இந்த இறையாண்மை என்ற கருத்தாக்கம் சாமானிய குடிமக்களுக்கும் உண்டு என்று மனித உரிமை கருத்தியலாளர்கள் கூறுகின்றனர். இப்போது கோழிகளுக்கும், குடிமக்களின் இறையாண்மைக்கும் உள்ள தொடர்பை பார்ப்போம்.

நம்மில் பலரும் நாட்டுக்கோழிகளை வளர்த்திருக்கவோ, அண்டை அயலார்கள் வளர்ப்பதை பார்த்திருக்கவோ கூடும். இந்தக் கோழிகளுக்கு மனித குணங்களில் பல குணங்களும் இருக்கும். குறிப்பாக தாய்க்கோழி, அதன் குஞ்சுகளை பருந்து, நாய், சில நேரங்களில் மனிதர்கள் போன்ற எதிரிகளிடம் இருந்து போராடி பாதுகாக்கும் வீரம் செறிந்த செயலை நாம் எளிதில் மறந்துவிட முடியாது. இந்த கோழிகள் மனிதனை அண்டியே வாழ்ந்தாலும், அவற்றுக்கான உணவினை தானே தேடி உண்ணும் இயல்புடையவை. முட்டையிடுவது முதல், அதை அடைகாத்து குஞ்சு பொரிப்பதுடன் அவற்றை பாதுகாத்து, குஞ்சுகளுக்கு வாழ்வியல் பயிற்சி அளிக்கும் திறன் படைத்தவை நாட்டுக்கோழிகள்.

மனிதர்களுடன் இந்தக்கோழிகள் கொண்டிருந்த உறவை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அதை உணர்ந்தால்தான் புரியும். கோழிகளால் பேசமுடியாது என்பதால் சொற்கள் ரீதியான உறவு சாத்தியமில்லையே தவிர நாய்கள், மாடுகளைப்போல இந்தக் கோழிகளும் மனிதர்களோடு மிகச்சிறந்த உறவைக் கொண்டிருந்தன. குஞ்சுகளோடு தாய்க்கோழி வரும் காட்சியே தாய்மை உணர்வை எளிய மொழியில் விளக்குவதாக இருக்கும். ஒரே தாய்க்கோழியின் குஞ்சுகளாக இருந்தபோதும் பல்வேறு வண்ணங்களில் இருக்கும் கோழிக்குஞ்சுகள் நடமாடும் குறுங்கவிதைகளாய் நமது உள்ளத்தைத் தொடும்.

இந்த கோழிகளில்தான் எத்தனை வகைகள். சாதாரண நாட்டுக்கோழிகள் தவிர கழுத்துப்பகுதியில் இறக்கைகள் இல்லாத “கிராப்” கோழிகள், காலில் கூட இறகுகள் முளைத்த, கருமையான ரத்தமும் சதையும் கொண்ட கருங்கோழிகள், பாம்பை குரலாலேயே விரட்டக்கூடிய கினிக்கோழிகள் என ஏராளமான கோழிகள். ஆனால் இவற்றில் எந்த ஒரு கோழி இனமும் மற்ற கோழி இனங்களை அழித்து விடவில்லை. ஏனெனில் இயற்கையின் படைப்பில் அனைத்து உயிர்வகைகளுக்கும் உரிய இடமுண்டு. இதைத்தான் உயிரினப்பரவல் (Bio Diversity) என்று சொல்கிறோம்.

இந்தக்கோழிகள் நமது உணவுத்தேவையை மட்டும் பூர்த்தி செய்யவில்லை. இவை நமது அன்றாட வாழ்விலும் இடம் பெற்றவை. புலர்காலையில் கூவி நமது நாளை தொடங்கிவைத்ததே சேவல்கள்தான். இதனால்தான் இந்த சேவலை தமிழர்களின் இறைவனாக கருதப்படும் முருகனின் கொடியில் வைத்து அழகு பார்த்தான் தமிழன். மனிதனின் முன்னோடியான விலங்கு உணர்வுகளுக்கு தீனிபோடுவதற்காக சேவல் சண்டை என்ற சர்ச்சைக்குரிய பொழுதுபோக்கு அம்சம் உலகின் பல பகுதிகளிலும் நடைமுறையில் இருந்தது.

சங்க இலக்கியம் முதல் சமீபத்திய திரைப்பட பாடல்கள்வரை கோழிகள் குறித்து எழுதப்பட்டுள்ள இலக்கிய வரிகள் இந்தக்கோழிகள் நமது வாழ்வில் முக்கிய இடம் வகித்ததை உணர்த்தும். உணவு தானியங்களை மேய்வதற்கு வந்த கோழிகளை தனது காதுகளில் இருந்த விலை உயர்ந்த கற்கள் பதித்த தங்கத்தோடுகளை கழற்றிவீசி ஓடச்செய்த மூதாட்டியைப்பற்றி சங்க இலக்கிய பாடல் ஒன்றை படித்திருக்கலாம். இந்தப்பாடல், கோழிகள் மனித வாழ்வில் அனைத்து தளங்களிலும் இடம் பெற்றதையும், அதோடு, தமிழர்கள் தங்க ஆபரணங்களைவிட அதிக முக்கியத்துவத்தை தானியங்களுக்கு கொடுத்ததையும் உணர்த்தும்.

காலைப்பொழுதில் கோழியின் கூவல் சத்தத்தில் மக்கள் விழிப்பதை ஆன்மிகப்பாடல்களும், காதல் காவியங்களும் பதிவு செய்துள்ளன. சேர நாட்டுத்தலைநகர் வஞ்சிநகர மக்களும், சோழ நாட்டுத்தலைநகர் உறையூர் வாழ் மக்களும் சேவல் கூவி எழும்போது, பாண்டிய நாட்டு தலைநகரான மதுரை மக்கள் வேதங்கள் ஓதப்படும் ஒலியில் விழித்தெழுவதாக பெருமை பேசுகிறது கீழ்க்கண்ட பரிபாடல்.

பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த

நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப

ஏம ஆன் துயில் எழிதல் அல்லதை,

வாழிய வஞ்சியும் கோழியும் போலக்

கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே.

பரிபாடல்-திரட்டு 8:7-12

காதல் காவியங்களிலும் கோழிகளுக்கு முக்கிய இடம் கிடைத்துள்ளது. உதாரணத்திற்கு எளிய குறுந்தொகை பாடல் ஒன்றைப் பார்க்கலாம்:

'குக்கூ' என்றது கோழி. அதன் எதிர்

துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம்.

தோள் தோய்க் காதலர்ப் பிரிக்கும்

வாள் போல் வைகறை வந்தன்றால்

- அள்ளூர் நன்முல்லை

அதிகாலையில் கோழியின் குரலைக் கேட்டதும் விழித்துக்கொண்ட தலைவி பொழுது விடிந்துவிட்டதே என்று வருத்தப்படுகிறாள். வைகறைப் பொழுது தன்னையும் தன் கணவனையும் பிரிக்கும் வாள்போல் வருகிறது என்று தனது துயரத்தை காவிய நயத்தோடு தலைவி வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது இந்தப்பாடல்.

இதேபோல சித்தமருத்துவத்தில் முக்கிய இடம் வகிக்கும் பதார்த்த குண சிந்தாமணி என்ற நூலில் கோழிக்கும், கோழி முட்டைக்கும் உள்ள மருத்துவ குணங்கள் விளக்கப்பட்டுள்ளன.

கோழிக்கறி நெருப்பாங் கொள்ளின் மருந்துரம்வால்

கூழைக்கடுப்பு மந்தங் கூரரச மகிழ்ப்பேர்

நீலுற்ற போக நிலக்கிரந்தி பித்தழ ளந்தான்

தூளித்த மெய்யிழைக்குஞ் சொல்.

(கோழிக்கறியானது அதை உட்கொள்வோருக்கு உடல்சூட்டைக் கொடுக்கும். மந்தத்தைப் போக்கும். உடல் இளைக்கச் செய்யும். போகம் விளைவிக்கும்)

வாதபித்தஞ் சேர்ப்பிக்கும் வன்றோடம் புண்போக்குங்

தாதுவை மெத்த தலைப்பிக்கும் – மோது

கபத்தை அடக்குங் கரப்பான் உண்டாக்கும்

விபத்தையுறுங் கோழிமுட்டை எண்.

(கோழி முட்டையை உண்பவர்களுக்கு வயிற்றுப்புண் ஆறும். கபம் கோழையை அகற்றும். கரப்பான் உண்டாக்கும். வாதம், பித்தம் உடலில் அதிகரிக்கும்)

இவ்வாறு சாமானியர்களின் உணவாகவும், மருந்தாகவும் மட்டுமல்லாமல் செல்வமாகவும், வளமாகவும்கூட இந்தக்கோழிகள் பார்க்கப்பட்டன.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமானவை இந்த கோழிகள் மீதான இறையாண்மை. எந்த வகைக்கோழிகளை வளர்ப்பது, எத்தனை அளவில் வளர்ப்பது, என்ன தீவனம் கொடுத்து எங்கே வளர்ப்பது போன்ற அம்சங்களில் முடிவெடுக்கும் உரிமை மக்களிடமே இருந்தது. இதையே இறையாண்மை என்று கூறுகிறோம். கோழிகளை விவசாயிகள் மட்டுமே வளர்க்கவில்லை. எந்தத் தொழில் செய்பவரும், இல்லத்தரசிகளும், சிறுவர்களும்கூட வளர்க்கும் விதத்திலேயே கோழி வளர்ப்பு இருந்தது. வசிக்கும் இடத்திற்கேற்ப கூடு அமைத்து கோழி வளர்க்கும் வசதியும், வாய்ப்பும் இருந்தது. கோழிகளோ, முட்டைகளோ எளிதில் கிடைப்பதாக இருந்தது. பஞ்சாரம் என்ற பெயரில் மூங்கிலால் அல்லது இரும்பு கம்பிகளால் ஆன கூம்பு வடிவக்கூடைகள் கோழிகளை பாதுகாக்க பயன்படுத்தப்பட்டன.

ஆனால் பசுமைப்புரட்சியின் உடன்பிறப்பாக வந்த வெண்மைப்புரட்சியின் விளைவாக வீரிய ரக கால்நடைகள் அறிமுகப் படுத்தப்பட்டன. கூடுதல் பாலுக்காக ஜெர்சி போன்ற உயர் இன(!) பசுக்களோடு, எந்தத்தேவையும் இன்றியே அதிஉயர்(!) இன கோழிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் புறக்கணித்துவிட்டு யாராலும் வாழமுடியாது. ஆனால் அந்த அறிவியலும், தொழில்நுட்பமும் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்; யாருடைய நலன்களுக்காக பயன்பட வேண்டும் என்ற அம்சங்கள் தீவிர பரிசீலனைக்கு உரியவை. அறம் சாரா அறிவியலோ, தொழில்நுட்பமோ மக்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படும்.

அறிவியலின் வளர்ச்சி, உயர்-உயிரி தொழில்நுட்பம் என்ற பெயரில் பிராய்லர் மற்றும் லேயர் என்ற கறிக்கோழிகளும், முட்டைக்கோழிகளும் அறிமுகப் படுத்தப்பட்டன. குஞ்சு பொரித்து 40-50 நாட்களிலேயே இறைச்சிக்கு தயாராகும் பிராய்லர் கோழிகளும், குஞ்சு பொரித்து 6 மாதங்களில் முட்டையிடத் தொடங்கி ஓராண்டுக்குள் சுமார் 250 முட்டைகளை இடும் லேயர் கோழிகளும் பரவலாக விவசாயிகளிடம் திணிக்கப்பட்டன.

தாய்க்கோழியின் அடைகாப்பில் பொரிப்பதற்கு பதிலாக இன்குபேட்டர் எந்திரங்களின் செயற்கை அடைகாப்பில் பொரிக்கும் இந்தக்கோழி குஞ்சுகளுக்கு தாய்க்கோழிகளையே தெரியாது. கோழிக்கான எந்த உணர்வுகளும் இந்த கோழிக்கு இருக்காது. எனவே இந்த குஞ்சுகள் முட்டையிடும் அல்லது கறிக்கோழியாக உருமாறும் உயிருள்ள எந்திரங்களாகவே வளர்கின்றன.

முன்னர் பல்வேறு வண்ணங்களில் இருந்து வந்த கோழிகள் அனைத்தும் ஒரே மாதிரியாக வெள்ளை வண்ணத்திற்கு மாறின. பண்ணைகளுக்கு வரும் பிராய்லர் கோழிகள் முட்டையிடுவதை மறந்திருந்தன. 60 நாட்களுக்கு மேல் உயிருடன் இருந்த கோழிகள், அவை உட்கொள்ளும் உணவை இறைச்சியாக மாற்றாமல் விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தின. மேலும் கொழுப்பு அடைத்து மரணத்தை தழுவின. எனவே இந்தக் கோழிகளை சுமார் 55 நாட்களுக்குள், உரிய விலை கிடைக்காவிட்டாலும் விற்றுத்தீர்த்துவிட வேண்டிய கட்டாய சூழலுக்கு கோழிப் பண்ணையாளர்கள் உள்ளானார்கள்.

லேயர் என்ற முட்டைக்கோழிகளோ, தாம் முட்டையிட சேவல் தேவையில்லை என்ற உயிரியல் உண்மையை உணர்த்தின. ஆனால் அதன் விளைவாக அந்த முட்டைகள் குஞ்சு பொரிக்காது என்ற உண்மையும் தெரியவந்தது. அப்போதுதான் அடுத்த முறையும் கோழிக்கு குஞ்சு பொரிப்பகங்களைத்தான் நம்பி இருக்க வேண்டும் என்ற உண்மை கோழிப் பண்ணை உரிமையாளர்களுக்கு தெரிய வந்தது.

இதைவிட முக்கியமாக இந்தக்கோழிகளுக்கு, பழைய நாட்டுக்கோழிகளைப்போல தீனியைத் தேடும் திறன் கிடையாது. கோழி நிறுவன அதிபர்களும், அரசு அதிகாரிகளும் பரிந்துரை செய்த கோழித்தீவனங்களே இந்தப் பண்ணைக்கோழிகளின் முழுமுதல் உணவானது. இந்த தீவனங்களில் என்னென்ன பொருட்கள் கலந்திருக்கின்றன என்பதுகூட பல பண்ணையாளர்களுக்குத் தெரியாது.

இவை, கோழியின் உருவத்தில் உள்ள ஒரு “ஜந்து”வே தவிர, இவற்றை முழுமையான கோழி என ஏற்கமுடியாது. ஏனெனில் இந்தக்கோழிக்கு பறக்கத்தெரியாது. குஞ்சுகளை காப்பாற்றத்தெரியாது. விடியலில் கூவத்தெரியாது. அதற்கான உணவை தேடிப்பெறத் தெரியாது. குஞ்சு பொரித்த நாளிலிருந்து கூண்டிலோ, மிகக்குறைவான இடவசதி கொண்ட பண்ணைகளிலோ வளர்க்கப்படுவதால் இந்தக் கோழிகளுக்கு நடக்கவும், ஓடவும்கூட தெரியுமா? என்பதே கேள்விக்குறிதான். இந்தக்கோழிகளுக்கு நோய் எதிர்ப்புத்திறன் மிகவும் குறைவு என்பது உலகறிந்த உண்மை. இந்தக்கோழிகளுக்கு வழங்கப்படும் உணவில் என்ன பொருட்கள் கலந்திருக்கின்றன? இந்த உணவைத் தின்று வளரும் கோழிகளையோ, அவை இடும் முட்டைகளையோ உட்கொள்ளும் நமக்கு என்ன பிரசினைகள் வரும்? என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.

இந்நிலையில் கோழிகளை இறைச்சிக்காக சுத்தம் செய்ய வசதியாக சிறகுகளே இல்லாத கோழிகள் மரபணு மாற்றத்தொழில் நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. அடுத்தக்கட்டமாக பறக்கத்தேவையில்லாத கோழிக்கு இறக்கை எதற்கு என்ற நோக்கில் இறக்கை இல்லாமல், கூண்டில் அல்லது கடையில் அடுக்கிவைப்பதற்கு வசதியாக சதுர வடிவிலோ, செவ்வக வடிவிலோகூட கோழிகள் அறிமுகமாகலாம். இந்த புதிய இனங்கள், இவற்றை உட்கொள்ளும் மனிதர்களிடம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று யாருக்கும் தெரியாது.

இதேபோல இந்தக்கோழிகளில் எத்தனைக் கோழிகளை வளர்ப்பது என்று முடிவெடுப்பதிலும் சாமானிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எந்தப்பங்கும் இருப்பதில்லை. அதை குஞ்சுப் பொரிப்பகங்களை நடத்தும் நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. இந்தக்கோழிகளுக்கு என்ன தீவனம் இடுவது, என்ன மருந்துகளை கொடுப்பது என்பதை அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. ஆக நமது கண் எதிரிலேயே நமக்கு அறிமுகமான நாட்டுக்கோழி என்ற நமது பாரம்பரிய கோழி இனங்கள் ஏறக்குறைய அழிந்துவிட்டன. அதற்கு பதிலாக கோழி உருவம் தாங்கிய ஏதோ ஒன்று கோழி என்ற பெயரில் நம்மிடம் திணிக்கப்படுகிறது.

நகர்ப்புறங்களில் வாழும் இளைய தலைமுறைக்கு கோழிகள் முட்டை இடும் என்றோ, இந்த முட்டையிலிருந்துதான் கோழிகள் உருவாகின்றன என்பதோ தெரியாமல் போகலாம். இந்த கோழிகளும், முட்டைகளும் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுவதாக அவர்கள் எண்ணும் வாய்ப்பும் உள்ளது. கோழியின் பிற குணாதிசயங்களோ, உயிர்ச்சூழலோ அடுத்த தலைமுறைக்கு தெரியாமலே போய்விடக்கூடிய வாய்ப்புள்ளது.

பசுமைப்புரட்சியின் உடன்பிறவா சகோதர உறவான வெண்மைப்புரட்சியின் நிலை இதுவென்றால், தற்போது அமல்படுத்தப்படும் “என்றென்றும் பசுமைப்புரட்சி” (Evergreen Revolution) மீதமுள்ள இறையாண்மையையும் பலியாக கேட்கிறது. நேற்று கோழிகளுக்கு ஏற்பட்ட இந்த அவலநிலை இன்று அரிசி முதலான உணவு தானியங்களுக்கும், ஏனைய காய்கறிகளுக்கும் நிகழ்கிறது. இது எவ்வாறெனில் இந்திய வேளாண்மையில் மரபணு மாற்றம் என்ற தொழில்நுட்பம் வெகு விரைவாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது, அது மனித குலத்தில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் குறித்து உரிய பாதுகாப்பு சோதனைகள் இல்லாமலேயே.

மரபணு மாற்றம் என்ற பெயரில் தாவர மரபணுக்களை, விலங்குகளின் மரபணுக்களோடு இணைத்து பல விபரீத சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் வெற்றி அடையும் மரபணுக்கள் அறிவுச்சொத்துரிமை சட்டங்களின்படி காப்புரிமையும் பெற்று வருகின்றன. தற்போதைய இந்திய சட்டப்படி விதைகளுக்கு காப்புரிமை பெற முடியாது என்று கூறப்பட்டாலும், மரபணுவுக்கு பெறப்பட்ட காப்புரிமை மூலமாக விதை மீதான கட்டுப்பாடுகளை பன்னாட்டு நிறுவனங்கள் பெற்று வருகின்றன.

பன்னாட்டு நிறுவனங்களின் உரிமையான மரபணுவை உடைய தானிய வகைகள் பயிரிடப்பட்டால் அப்பகுதியில் உள்ள அனைத்து விளை நிலங்களிலும், மரபணுமாற்ற தாக்கங்கள் காற்று மூலமாக பரவி விடும். அப்போது இயற்கை விவசாயிகள், பன்னாட்டு நிறுவனங்களின் சொத்தான மரபணுக்கூறுகளை தம்முடைய நிலத்தில் பதுக்கி வைத்த குற்றத்திற்காக தண்டனை பெறுவார்கள்.

இந்தப்போக்கு கோழி விவகாரத்தில் நாம் பார்த்ததைப்போல நம் விவசாயிகளின் இறையாண்மையை பலியாக கேட்கும் ஒரு யுக்தியாகும். இதை அனுமதித்தால் நம் நாட்டில் நெல்லை விளைவிப்பதா? அல்லது குதிரைகள் சாப்பிடும் கொள்ளுப் பயிரை விளைவிப்பதா? என்பதை விவசாயிகளோ, அரசோ தீர்மானிக்க முடியாது. அறிவுச் சொத்துரிமை என்ற பெயரில் விதைகளை கட்டுப்படுத்தும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்களே அவற்றை தீர்மானிக்கும்.

மரபணு மாற்று விதைகளை விற்கும் இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள், புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்களுக்கான மருந்துகளையும் தயாரித்து விற்பனை செய்கின்றன. எனவே மரபணு மாற்று தொழில்நுட்பம் என்பது மருந்துகள் விற்பனையை பெருக்கும் நோக்கில், நோயை அதிகரிக்கும் ஒரு விற்பனைத் தந்திரமாகமாகவும் இருக்கக்கூடும்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசினாலோ, இங்குள்ள அரசுகளை தீவிரமாக விமரிசனம் செய்தாலோ இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் இந்திய அரசோ, சட்டப்பூர்வமாகவே அரசின் இறையாண்மையையும், குடிமக்களின் இறையாண்மையையும் தள்ளுபடி விலையில் விற்றுக்கொண்டிருக்கிறது.

இறையாண்மை என்பது அரசு அமைப்புகளுக்கு மட்டுமே சொந்தமானதல்ல; அது சாமானிய குடிமக்களுக்கும் சொந்தமானது என்று நவீன மனித உரிமை தத்துவங்கள் கூறுகின்றன. மக்களின் இறையாண்மையை பாதுகாக்க அரசு தவறும்போது, அதை பாதுகாக்கும் பொறுப்பு மக்களிடமே இருக்கிறது. அந்த இறையாண்மையை எவ்வாறு பாதுகாப்பது என்பதே இப்போது நம்முன் உள்ள கேள்வி. இதற்கான பதிலை அரசியல்வாதிகளிடமும், அறிவியல் அறிஞர்களிடமும் கேட்பதில் பயனில்லை என்பதை உணர்ந்து விட்டோம். நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதே இப்போதைக்கு முக்கியமானது.

- சுந்தரராஜன்([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com