Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

மும்பை பயங்கரவாதம் – தமிழக மழை, வெள்ளம் - பலி – சில கேள்விகள்
சுந்தரராஜன்

Mumbai blast மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பலரையும் பலவிதத்தில் பாதித்துள்ளது. இந்த சம்பவத்தில் தொலைக்காட்சி ஊடகங்களின் அத்துமீறல் குறித்து பரந்த அளவில் விவாதங்கள் நடந்து வருகின்றன.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிப்பொறுப்பில் இல்லாத அரசியல்வாதிகள், “பொடா”வை போன்ற கடுமையான சட்டங்களை மீண்டும் கொண்டுவந்தால்தான் இதுபோன்ற பயங்கரவாதங்களை தடுக்க முடியும் என்று அறுதியிட்டு கூறுகின்றனர்.

தாக்குதல் சம்பவங்களை சினிமா காட்சிகள்போல தொலைக்காட்சி ஊடகங்கள் காட்டி மலினப்படுத்துவதாக எழுதும் அச்சு ஊடகங்கள் அனைத்தும், சினிமா ஸ்டில்களுக்கு சற்றும் குறைவில்லாத புகைப்படங்களை பிரசுரிக்கின்றன. இந்த சம்பவத்தில் உயிரிழந்த எத்தரப்பும் சாராத பொதுமக்கள், அரசுப்படை வீரர்கள், தீவிர/பயங்கரவாதிகள் அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலிகளை செலுத்திவிட்டு வேறு சில விவ(கா)ரங்களை பார்ப்போம்.

*****

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் சார்பில் இயங்கும் முக்கியத்துறைகளில் ஒன்று தேசிய குற்ற ஆவண மையம் (National Crime Record Bureau). தரப்படுத்தலுக்கான சர்வதேச அமைப்பின் ISO 9001 : 2000 சான்றிதழ் பெற்ற அமைப்பு. இந்த அமைப்பு ஆண்டுதோறும் நாட்டில் நடக்கும் குற்றங்களை ஆவணமாக பதிவு செய்து வெளியிடுகிறது. இதில் நாட்டில் நடக்கும் தற்கொலைகளும் அடக்கம். இந்த புள்ளி விவரங்களின்படி கடந்த 2007ம் ஆண்டில் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,22,637.

மகாராஷ்டிராவில் 15,184(12.4%)பேரும், ஆந்திராவில் 14,882(12.1%) பேரும், மேற்கு வங்கத்தில் 14,860 (12.1%) பேரும், தமிழ்நாட்டில் 13,811 (11.3%) பேரும், கர்நாடகத்தில் 12,304 (10%) பேரும் தற்கொலை செய்துள்ளனர். இந்த 5 மாநிலங்களில் மட்டும் 57.9 சதவீத தற்கொலைகள் நடந்துள்ள நிலையில், மீதமுள்ள 23 மாநிலங்களிலும் 42.1 சதவீதம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வறுமை, நோய், குடும்ப பிரசினை போன்ற காரணங்களுக்காகவே அதிகமான தற்கொலைகள் நடந்துள்ளதாக தெரிகிறது.

தற்கொலை செய்து கொண்டவர்களில் 41.9 சதவீதம் பேர் விவசாயம், சிறு வியாபாரம் போன்ற சுயதொழில் செய்தவர்கள். குடும்பத்தலைவிகள் 19.7%-ம், பணியிலிருப்பவர்கள் 11.9%-ம், வேலை வாய்ப்பற்றோர் 6.9%-ம், மாணவர்கள் 5.1%-ம், மற்றவர்கள் 14.5%-ம் தற்கொலை செய்துள்ளனர். தற்கொலை செய்துகொண்டவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் பள்ளியிறுதிக்கு மேல் படிக்காதவர்கள். தற்கொலை செய்து கொண்டவர்களில் சுமார் 65 சதவீதம் பேர் விஷம் அருந்தியோ, தூக்கில் தொங்கியோ தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கடந்த ஆண்டில் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்ட ஒரு லட்சத்து, 22 ஆயிரத்து, 637 பேரில் ஓரிருவர் நமக்கு தெரிந்தவர்களாக இருக்கக்கூடும். ஆனால் அவர்களின் இந்த அகால மரணத்திற்கான காரணம் ஏதோ ஒரு வகையில் சமூக பயங்கரவாதமாக இருப்பதை நாம் உணருவதில்லை. தற்கொலைக்கு தூண்டுவதை குற்றமாக “இந்திய தண்டனைச் சட்டம்” நிர்ணயம் செய்கிறது. ஆனால் இந்த லட்சக்கணக்கான தற்கொலைகளை தூண்டியதற்காக யாரும் தண்டிக்கப்படுவதில்லை.

வறுமையோ, வேலையின்மையோ, நோய்க்கு சிகிச்சை பெற முடியாத நிலையோ பயங்கரவாதமாக நமக்குத் தெரிவதில்லை. ஏனெனில் இவை தனிநபர் சார்ந்த விஷயங்களாக நமக்கு போதிக்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்வுகளாக ஜாதகங்களும். ஜோசியங்களும், தன்னம்பிக்கை புத்தகங்களும் நம்மிடம் திணிக்கப்படுகிறது. இந்த பிரசினைகள் குறித்து விவாதங்களை தொடங்கிய “பொருளியல் அறிஞர் அமார்த்ய சென்”னுக்கு நோபல் பரிசு கொடுத்து அவரை கருத்தரங்குகளில் மட்டுமே பங்கு பெறும் காட்சிப் பொருளாக்கிவிட்டோம். அவரது கொள்கைகள் எந்த பொருளாதார பள்ளியிலும், தொழில் மேலாண்மை பள்ளியிலும் பாடநூலாக இல்லாமல் செய்து விட்டோம். எனவே ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் நமது கவனத்துக்கு வராமலே போய்விடுகிறது.

******

மேற்கூறியவாறு தற்கொலை செய்து கொள்வதற்கும்கூட ஒரு துணிவு தேவைப்படுகிறது. அந்த துணிவு இல்லாத சிலர்கூட மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டிருக்கக்கூடும். அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்குக்கூட பொருளீட்ட முடியாத இளைஞர்கள்தான், மதம்-இனம்-மொழி-அரசியல் ரீதியான அடிப்படைவாத கொள்கையாளர்களின் ஆயுதங்களாக மாறிப்போகின்றனர். இந்த பகடைக்காய்கள்தான் சமூகத்தாலும் வஞ்சிக்கப்பட்டு, மதம்-இனம்-மொழி-அரசியல் ரீதியான அடிப்படைவாத கொள்கையாளர்களாலும் வஞ்சிக்கப்படுகின்றனர்.

*****

Chennai Flood தமிழகத்தில் பெய்துவரும் மழையில்கூட 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாக செய்திகள் வந்துள்ளன. ஆனால் இது நமது கவனத்தை பெரிய அளவில் ஈர்க்கவில்லை. ஏனெனில் இந்த மரணங்களை ஊடகங்கள் பரபரப்பான செய்திகளாக தருவதில்லை (எதிர்க்கட்சி ஊடகங்களைத் தவிர). இத்தகைய வெள்ளம் தமிழ்நாட்டிற்குப் புதிதல்ல, சுனாமியைப்போன்று. ஆனாலும் இந்த வெள்ளம் வரும்போதெல்லாம் பல உயிர்கள் பறிபோகின்றனவே!

இது ஏன் நமக்கு தீவிரவாத தாக்குதல் அளவுக்கு பாதிப்பதில்லை? ஏரி, குளங்களை ஆக்கிரமித்து பேருந்து நிலையங்களும், ரயில் பாதைகளும் அமைக்கும்போது அரசுக்கும் பொறுப்பு இருப்பதில்லை. அதைப் பார்க்கும் கல்வியாளர்களுக்கோ, ஊடகங்களுக்கோ, பொதுமக்களுக்கோ அது அழிவுக்கு வகுக்கும் வழியாக தெரிவதுமில்லை. அந்த இடங்களில் வெள்ளம் தாக்கும்போதுகூட மழையின்மீதுதான் நமக்கு கோபம் வருகிறது. நீர்நிலைகளை பாதுகாக்க தவறியவர்கள்மீது கோபம் வருவதில்லை. ஏனென்றால் இதற்கும் கோபம் வரவேண்டும் என்று யாரும் நமக்கு உணர்த்தவில்லை.

நான்கு நாள் மழைக்குக்கூட தாங்காத சாலையை, ரயில் பாதையை அமைக்கும் அரசு அமைப்புகள் மீது நமக்கு கோபம் வருவதில்லை. ஏனெனில் அவை அனைத்தும் நமது வரிப்பணத்தில்தான் அமைக்கப்படுகிறது என்ற உண்மை நம்மில் பலருக்கும் உறைப்பதில்லை. ஆனால் தீவிரவாத தாக்குதல் குறித்த செய்திகள் வெளியாகும்போது மட்டும் நமது தேசபக்தி பொங்குகிறது. பொடா சட்டத்தை ஆதரிப்பது முதல், மனசாட்சியுள்ள ஒரு சர்வாதிகாரி(!) ஆட்சிக்கு வந்தால்தான் நாடு உருப்படும் என்ற அளவிற்கு பேச ஆரம்பிக்கிறோம். இதற்கான பயிற்சியைத்தான் நமது சமூகமும், கல்விமுறையும், ஊடகங்களும் நமக்கு அளித்துள்ளன.

வறுமை, வேலையின்மை, நோயை உருவாக்கும் சூழல், நோயை தீர்க்கமுடியாத நிலைமை, இவை அனைத்திற்கும் வழிவகுக்கும் ஊழல் ஆகியவை, எப்போது நமக்கு தீவிரவாதமாக/ பயங்கவாதமாக/ வன்முறையாக தெரியும்? ஊழலில் ஈடுபடுவதன்மூலமாக லட்சக்கணக்கான மக்களை தற்கொலை செய்துகொள்ள தூண்டுபவர்களுக்கும், மற்ற வகை அகால மரணங்களை ஏற்படுத்துபவர்களுக்கும் எந்த பொடா சட்டத்தின் மூலம், யார் தண்டனை வழங்குவது?

- சுந்தரராஜன்([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com