Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
இதிகாச இராமனை நந்தியாக்கும் இந்துத்துவா

சுந்தா


தமிழகத்தின் 150 ஆண்டுக்கால கனவாக இருந்த சேது கால்வாய் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் போதே வழக்குமன்ற தடையும் ஏற்பட்டுள்ளது. மாற்று வழி குறித்து அறிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன. எனினும் கால்வாய் அகழ்வுப்பணி துவங்கி பாதி அளவிற்கு மேல் முடிந்துவிட்டதால் கிடப்பில் வைக்கிற முயற்சி வலுப்பெற முடியாது.

India and srilanka சேது கால்வாய் திட்டத்தின் பலன்கள் குறித்து கூறத் தேவை யில்லை. இதன் வரலாற்றுப் பின்னணி குறித்தும் அலசத் தேவையில்லை. போதிய விவரங்கள் இதுகுறித்து வந்துவிட்டன. இராமேஸ்வரம் தொட்டு இலங்கைக்கு இடையிலான திட்டுக்களின் மீது திடீரென்று “ராமன் கட்டிய பாலம்” என்பதனை இணைத்து புனிதம் பற்றி பேசப்படுகின்றன. இந்துக்களின் நம்பிக்கை குறித்து வெறி ஊட்டப்படுகின்றன. அருங்காட்சியகமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று வழக்காடப்படுகின்றன. இப்பின்னணியில்தான், ஒரு வளர்ச்சித் திட்டம் தொடர்பான விஷயத்தில் ஒருசாரார் முன்வைக்கும் நம்பிக்கை தொடர்பான கருத்து ஏன் சிந்தனைத்தளத்தில் எதிர்க்கப் படவேண்டும் என்பதே இக்கட்டுரையின் கவனமாக இருக்கிறது.

இதில் ஒருசாரார் எனக் குறிப்பிடுவது வைதீக பிற்போக்குச் சக்திகளான இந்துத்துவாவாதிகளைத்தான். இவர்களை ஆதரிக்கும் - சந்தர்ப்பவாதச் சாக்கடையில் உழலும் - அரசியல் தலைமையைத்தான். இந்துத்துவா சக்திகள் காலந்தோறும் முயன்று கொண்டிருக்கும் தங்களது பிற்போக்கு பண்பாட்டுத் திணிப்பின் ஒரு பகுதியை அலசிப் பார்க்கவே இக்கட்டுரை கவனம் கொள்கிறது.

பாக் என்கிற ஆங்கிலேய அதிகாரியின் பெயரால் இன்றளவும் அழைக்கப்படுகிறது பாக் நீரிணை. இதன் வழியாக வங்கக் கடலையும், இந்தியப் பெருங்கடலையும் இணைக்கத் தோண்டப்படும் கால்வாய்தான் சேது கால்வாய். இக்கால்வாய் ஆதம்பாலம் வழியாகச் செல்கிறது. மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள ஆதம்பாலம் என்பது இயற்கையாக நிலத்துவிசையாலும், கடல் அலைச் செயல் பாட்டினாலும் உருவான மேடான பகுதி. இதுபோன்ற மேட்டுப் பகுதிகள் உலகில் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன. இப்பகுதியில் உள்ள சுமார் 21 தீவுகளும் ராமேஸ்வரம் தீவும் 1,25,000 வருடங்களுக்கு முன்னால் மேடாக உயர்ந்த பகுதி என்று அறிவியலாளர் கூறுகின்றனர். ராமேஸ்வரத்திற்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையிலுள்ள பகுதி 7000 ஆண்டுகளுக்கு முன்னால் கடல் மட்டத்திற்கு மேலே இருந்த பகுதி என்று இந்திய புவியியல் ஆய்வுக்கழக அறிக்கை கூறுகிறது. அதாவது இலங்கையும் இந்தியத் துணைக்கண்டமும் 7000 ஆண்டுகளுக்கு முன்னால் நிலத்தால் இணைந்திருந்தன.

இந்நிலையில் கட்டுக்கதைகளை வரலாறாக நம்முன் வைக்கும் வைதீகப் பிற்போக்குச் சக்திகள், ராமன் பிறந்த காலம் 17 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் என்கிறார்கள். இராமேஸ்வரத்தீவு உருவானதே 1,25,000 ஆண்டுகளுக்கு முன்புதான் என்றால் எந்த முனையிலிருந்து ராமன் பாலம் கட்டியிருக்க முடியும் என்கிற கேள்வி எழுகிறது. அதுமட்டுமின்றி மானுடவியலாளர்கள் கூறியபடி பார்த்தால் முழுமை பெற்ற மனிதர்களின் தோற்றம் என்பதே சில பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான். அப்படி எனில் 17,50,000 ஆண்டுகளுக்கு முன் ராமன் இருந்திருக்க முடியாது. அதுமட்டுமல்ல ராமன் பிறந்த பூமி எனக் கூறப்படும் அயோத்தி நகரை அகழ்வாய்வு செய்த அறிஞர்கள் இந்நகரில் மனித வாழ்க்கை என்பதே கி.மு. 7ம் நூற்றாண்டுகளில் தான் என்று முடிவு செய்துள்ளனர்.

வைணவ தத்துவத்தைப் பரப்பவே வால்மீகி ஆனவர் ராமாயணத்தை எழுதினார் என்கிற வலுவான கருத்தையும் வரலாற்று ஆய்வாளர்கள் முன்வைத்தனர். அதுமட்டு மில்லாது மிகப் பழமையான புத்த இலக்கியங்களான “பாலி திரிபிடகங்கள்” ராமன் வாழ்ந்த இடங்களைப்பற்றி ஒரு குறிப்பும் தரவில்லை. கி.மு. 5ம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த புத்த சமய எழுச்சி களுக்குப் பின்னால்தான் இன்றுள்ள வடிவத்தில் ராமாயணம் எழுதப் பட்டிருக்க வேண்டும் என்கின்றனர். அதாவது இக்காலம் என்பது கி.மு. 4ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2ம் நூற்றாண்டு வரையாகும் என்கிற முடிவிற்கு வந்துள்ளனர்.

இவற்றையெல்லாம் அடுக்கடுக்காக முன்வைக்கும்போது இந்துத்துவா சக்திகள் ஆவேசம் கொள்கின்றன. இந்துக்களின் நம்பிக்கைகளைப் புண்படுத்தாதீர்கள் என்கிறார்கள். இந்துக்கள் எல்லோரும் பிற்போக்கான இந்துத்துவா சிந்தனைகளைக் கொண்ட ஒற்றைச் சிந்தனை உடையவர்கள்தான் என்கிற மோசடி இதில் அடங்கி யிருக்கிறது. இவர்களைப் போன்ற வாதங்களைப் பிறமதங்களிலுள்ள வலதுசாரி பிற்போக்குச் சக்திகளிடமும் காணமுடியும். கட்டுக் கதைகளைக் கட்டுடைத்து மெய்யான வரலாற்றை முன்வைக்கும் போது திணறிப்போகிற பிற்போக்குச் சக்திகள் “மதநம்பிக்கைகளை” கேள்வி கேட்காதே என்கிற இடத்தில் தஞ்சம் புகுகிறார்கள்.

தமிழ் இலக்கியத் தரவுகளின் வழியாகவும் இராமன் பாலம் சார்ந்த கட்டுக் கதைகள் உடைத்தெறியப்படுகின்றன. ராமன் கதை என்பது கி.பி. 5ம் நூற்றாண்டிற்கு முன்னால் தென்னிந்தியாவில் பரவலாக இல்லை என்பதை 5ம் நூற்றாண்டு தல்குண்டா கல்வெட்டு காட்டுகிறது. கி.பி.630ல் உருவாக்கப்பட்ட மாமல்லபுரம் சிற்பத்தில் 10 தலை கொண்ட இராவணன் சிற்பம் உள்ளது. 8ம் நூற்றாண்டில் உருவான மாமல்லபுரம் ஆதிவராகர் குகைக் கோவிலில்தான் விஷ்ணு அவதாரச் சிற்பங்கள் உள்ளன. பின்னர் வந்த சோழ மன்னர்கள் காலத்தில் பல்வேறு ராமர் கோயில்கள் உருவாகின என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கி.மு 300லிருந்து கி.பி.300க்குள் உருவான பாடல்களின் தொகுப்பான சங்க இலக்கியங்களில் ராமேஸ்வரம் குறித்தோ, ராமர் கட்டின பாலம் குறித்தோ ஒரு குறிப்பும் வரவில்லை.

“கடுந்தெறல் இராமன் உடன்புணர்சீதையை

வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை” - (புறநானூறு-378)

என்று சீதையைக் கவர்ந்த இரக்கமில்லா கொடியவன் என்று பொருள்தரும் பாடலில் ராமன் பற்றி உவமை நயத்திற்காகக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர பாலம் குறித்து கூறப்படவில்லை. தமிழ் மண்ணில் பாலம் கட்டப்பட்டிருந்தால் அது மிகவும் குறிப்பிடத்தகுந்த செய்தியாக அல்லவா இலக்கியங்களில் மாறியிருக்கும்.ராமன் ராவணன் யுத்தம் என்பது தற்போதுள்ள இலங்கையில் நடைபெற்றதான சான்றுகள் சங்க இலக்கியத்தின் பழமையான பாடல்களில் காணமுடியவில்லை. ஏனெனில் இலங்கை என்ற பெயர் அப்போது அறியப்படாததுதான்.

“ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்

அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி...”

என்று பட்டினப்பாலை குறிப்பிடுகிறது.

காவிரிப்பூம்பட்டினத்தில் நடைபெற்ற உள்நாட்டு வெளிநாட்டு வணிகச் சிறப்பைக் கூறவந்த உருத்திரங்கண்ணனார், “ஈழத்து உணவும்” என்றுதான் குறிப்பிடுகிறார். ஏனெனில் “லங்கா” என்ற சொல் அப்பொழுது தமிழகத்தில் வழக்கத்தில் இல்லை.

பிரபல வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர் அவர்கள் 29.9.2007ல் இந்து நாளிதழில் கீழ்வருமாறு குறிப்பிட்டார்.

“வால்மீகி ராமாயணம் எழுதப்பட்ட காலத்தில் இன்றைய இலங்கை “தாம்ரபரணி” என்றே அழைக்கப்பட்டது. பின்னர் அது “சிங்களா” என்று அழைக்கப்பட்டது.

7ம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர், சம்பந்தர் காலத்தில் ஒரு கூரையின்கீழ்தான் ராமேஸ்வரம் கோயில் இருந்தது. நாயக்கர்கள் காலத்திலும் சேதுபதிகள் காலத்திலும்தான் ராமேஸ்வரம் கோயில் விரிவாக்கப்பட்டது. வைணவ சைவ சமயங்களின் ஒற்றுûமையை வலியுறுத்துவதாகப் பிரபலப்படுத்தப்பட்டது. அதாவது புத்த சமண வீழ்ச்சிகளின்போது உருவாக்கப்பட்ட கதைகளின் தொடர்புதான் தெரிகிறதே தவிர வேறொன்றுமில்லை. வட இந்தியாவிலிருந்த வைதீகச் சிந்தனைகளை மற்றும் கடவுளர்களை தென்னிந்தியாவிலும் நுழைத்து கடவுளர்களை இணைத்த வரலாறாகத்தான் இராமேஸ்வரம் கோயிலும் சான்றளிக்கிறதே தவிர வேறொன்றுமில்லை.

இராமேஸ்வரத்தை அடையவேண்டுமானால் மண்டபத்தை தாண்டித்தானே செல்ல முடியும்? மண்டபத்திற்கும் இராமேஸ்வரத் திற்கும் இடையில் உள்ள கடல் பகுதிக்கும் இதிகாச ராமனால் பாலம் கட்டப்பட்டதா? அப்படி எதுவும் எந்த ராமாயணத்திலும் இரண்டு பாலங்கள் கட்டப்பட்டதாகச் சொல்லப்படவில்லையே? இக் கேள்வியை எழுப்பியவர் இலக்கிய ஆய்வாளர் அருணன் அவர்கள்.

கி.பி 5ம் நூற்றாண்டில் எழுத்து வடிவம் பெற்றதாகக் கருதப்படும் மகாபாரதத்தில் இந்திய துணைக்கண்டத்தில் தரிசிக்க வேண்டிய புண்ணிய இடங்களில் இராமேஸ்வரம் குறிப்பிடப்படவேயில்லை.

இராமன் தமிழக எல்லையை அடைந்தான் என்றோ - தமிழகத்தில் இருந்த மன்னர்களோடு தோழமை பூண்டு சீதையைத் தேடினான் என்றோ, ஒரு குறிப்பும் சங்க இலக்கியங்களில் இல்லை. இத்தமிழ் மன்னர்களின் அனுமதியோடுதான் பாலம் கட்டினான் என்றோ, இராவணனுடன் போர் புரிந்தான் என்றோ ஒரு வரியும் காணவில்லை. இவ்விடத்தில், ஆரியர்களுக்கு கடலின் குறுக்கே பாலம் கட்டுகிற அறிவு அப்போதெல்லாம் இருந்திருக்கவில்லை என்றே கூறமுடியும். இலங்கைத் தமிழ் அறிஞராக இருந்த டாக்டர்.ஆனந்த குமாரசுவாமி அவர்களின் கூற்று சிந்திக்கத்தக்கது.ஆரியர்கள் கடற்கரையில் வாழ்ந்தவர்கள் அல்லர்.கப்பல் நிர்மாண அறிவு, கடல் வழிவாணிபம் யாவும் திராவிடர்களுடையதே என்கிறார் அவர்.

சால் மற்றும் அசோக மரங்களைக் கொண்டு பாலம் கட்டினான் என்று வால்மீகி கூறுவதைச் சுட்டிக்காட்டி, தமிழகத்தில் இப்படிப்பட்ட மரங்கள், அதுவும் கடற்கரைப் பகுதிகளில் காணமுடியாதே என்கிற விவரத்தை பேராசிரியர் ஏ.ஈ.சங்காலியா எழுதியுள்ளார்.

எளிதான இன்னொரு கேள்வியும் இருக்கிறது. தமிழகத்தில் இருந்த மன்னர்களின் உதவியின்றி, அனுமதியின்றி ராமன் உள்ளே நுழைந்து பாலம் கட்ட முடியுமா? அப்படியெனில் எந்தத் தமிழ் மன்னனோடு அவன் தோழமை பூண்டிருந்தான்? வால்மீகி மற்றும் கம்பன் கூறுவதை நோக்க தெரியவருவது என்னவென்றால் அது, தான் சென்ற பகுதியிலிருந்த குடித் தலைவர்களோடு தோழமை கொண்டு அவர்களின் உதவியோடுதான் அப்பகுதிகளை ராமனால் கடக்க முடிந்திருந்திருக்கிறது என்பதுதான்.

“குகனோடும் ஐவர் ஆனேம்

முன்பு பின் குன்று சூழ்வான்

மகனோடும் அறுவர் ஆனேம்

எம்முழை அன்பின் வந்த

அகனமர் காதல் ஐய நின்னொடு

எழுவர் ஆனேம்”

என்று வீடணனிடம் ராமன் கூறுகிறான். குகனை, சுக்ரீவனை வீடணனைக் குறிப்பிட்ட ராமன், அன்று தமிழ்மண்ணில் வாழ்ந்திருந்த எந்தவொரு குடித்தலைவரையும் குறிப்பிடவில்லை. ஏனெனில் ராமன் தென்னிந்தியாவில் நுழைந்திருந்தால் அல்லவா அப்படி இணைத்துப் பேசியிருக்க முடியும்.

ராமேஸ்வரத்திற்கும் இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கும் இடைப்பட்ட தூரம் 36 மைல்கள். அது கிழக்கு மேற்காக உள்ளது. ஆனால் வால்மீகி ராமாயணத்திலோ இராமன் கட்டிய பாலம் வடக்கு தெற்காக உள்ளது. எது உண்மை? இக்கேள்விக்கான பதிலைத் தேடுகையில் ராமன் தென்னிந்தியாவில் நுழையவில்லை என்பது தெரியவரும்.கோவேறு கழுதைகள் பூட்டிய தேரில் வந்துதான் இராவணன் சீதையைக் கவர்ந்து போனான் என்று வால்மீகி குறிப்பிடுகிறார். மூக்கறுபட்ட நிலையிலும் சூர்ப்பனகை லங்காவில் இருக்கும் தன் அண்ணன் இராவணனைப் போய்ப் பார்த்தாள் என்றால் இராமன் தங்கியிருந்த பஞ்சவடி என்னும் இடமானது லங்காவுக்கு அருகில் தானே இருக்க முடியும்; இராமேஸ்வரமாக இருக்க முடியாதே? இராமனுக்கு வழிகாட்டிய அகஸ்திய முனிவரின் கூற்று இதற்கான தெளிவைத் தருகிறது. அவர் கூறுகிறார்:”ராமஙு இங்கிருந்து இரண்டு யோஜனை தூரத்தில் பஞ்சவடி உள்ளது. அங்கு பழங்களும் கிழங்குகளும் வேண்டியவாறு கிடைக்கும். கோதாவரிக்கு மிகவும் சமீபம்”.

அதாவது இராமன் இருந்த பஞ்சவடி என்னுமிடம் ராவணனின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிக்கு மிக அருகில் இருந்த இடம் என்பது தெரியவருகிறது. மத்தியப்பிரதேசம் ஜபல்பூர் மாவட்டத்தில் சுவேலா என்ற சிறுகுன்றும் அதனருகே லங்கா என்ற மற்றொரு குன்றும் உள்ளன. ஒரு காலத்தில் நீரால் சூழப்பட்டிருந்தது இந்த இடம். இங்குதான் இராவணனின் ஆளுகைப் பகுதி இருந்தது என்று “ராமாயணமும் இலங்கையும்” என்கிற நூலை எழுதிய டி.பரமசிவ அய்யர் அறுதியிட்டுக் கூறுகிறார். இதனை ஆய்வாளர் எச்.டி.சங்காலியா உறுதிப்படுத்துகிறார்.

மேற்படி அலசல்களில் தெரியவருவது என்னவென்றால் இதிகாச ராமன் விந்திய மலைக்கு தெற்கே வரவில்லை என்பதும், இராமேஸ்வரமோ அல்லது இன்றுள்ள இலங்கையோ ராமனுக்குத் தெரியாத புவியியல் பகுதி ஆகும் என்பதுதான்.

ஆரியர், திராவிடர் கருத்துருவாக்கங்களில் இராவணன் தமிழன் என்பதாக கற்பித்துக் கொண்டது மிகப் பெரிய தவறு என மேற்கண்ட அலசல்கள் காட்டுகின்றன. பௌத்த, சமண சமயங்களை எதிர்த்த காலகட்டத்தில் வைணவ சமய ஆதரவாளர்கள் பரப்பிய ராம வழிபாடும், வடக்கையும் தெற்கையும் தங்களுக்கான கடவுளர்களால் இணைத்த முயற்சியும்தான் பின்னர் எழுதிய ராமாயணக் கதைகளில் தெரியவருகிறது. விஷ்ணுவை முல்லை நிலத்து திருமாலோடும், குறிஞ்சி நிலத்து முருகனை சரவணனோடும், தெய்வானையோடும் இணைத்த முறைகளைக் கொண்டு இதை அறிந்து கொள்ளலாம். ஈழத்தின் மீது பகைமை பாராட்டிய தமிழ் மன்னர்களின் அரசியல் தேவையையும் இது பூர்த்தி செய்திருக்கிறது.

விண்வெளியில் பிறநாடுகளை உளவு பார்க்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தாசானுதாசர்களாக விளங்கும் இந்துத்துவா சக்திகள், அமெரிக்காவின் “நாசா” நிறுவனம் வெளியிட்ட ஆதம் பாலத்தின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு வெறித்தனமாக கட்டுக்கதைகளைப் பிரச்சாரம் செய்தனர். இதிகாச ராமன் வாழ்ந்ததற்கான ஆதாரம் கிடைத்தது போன்றும், அவன் பிறந்த இடம் பாபர் மசூதியில்தான் என்றும் இந்திய நாட்டில் ஆட்டம் போட்டதை நினைவு கூறுவது நல்லது.

ஆனால் நாசா நிறுவன அறிவியலாளர்கள் ஆதாம் பாலம் என்பது மணல் திட்டுதான் என்றும், அது மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல என்றும் விளக்கினார்கள். இந்திய தொல்லியல் துறையும் (அநஐ) இதே கருத்தினை உச்ச நீதிமன்றத்தில் தெளிவாகக் கூறியது. மழைக் காலங் களில் ஏற்படும் கடல் நீரோட்டத்தால் உருவானவையே இத்திட்டுகள் என்று நாசா நிறுவனம் மேலும் விளக்கியது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு ராமேஸ்வரம் பகுதி மக்களின் கருத்தைக் கேட்டபோது ராமர் பாலம் குறித்து பலருக்கும் தெரியவில்லை. அவர்கள் “தீடை” என்றுதான் மேட்டுப் பகுதிகளைக் குறிப்பிடுகின்றனர் என எழுதியது.

இவ்வளவு விளக்கங்கள் பெற்ற போதும் இந்துத்துவா சக்திகள் தங்கள் குரலை முன்னினும் உயர்த்தி இது நம்பிக்கை சார்ந்த பிரச்சனை. 80 கோடி இந்துக்களின் மனதைப் புண்படுத்தாதீர்கள் என்று கூறியது. ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத், போன்ற அமைப்புகளும், இவைகளின் அரசியல் அமைப்பான பாரதிய ஜனதா கட்சியும் தொடர்ந்து இதே குரலை ஒலித்து வருகின்றன.

தொல்லியல் ஆய்வு முடிவுகளும், வரலாற்று ஆய்வு முடிவுகளும், இலக்கிய ஆய்வு முடிவுகளும் மற்றும் புவியியல் ஆய்வு முடிவுகளும் தங்களது கருத்துக்களுக்கு எதிராக இருப்பதைப் பற்றி இந்துத்துவா சக்திகள் கவலைப்படவேயில்லை. காரணம், மதம் தொடர்பான விஷயங்களை எந்த ஒன்றோடும் இணைத்துவிட்டால் அதனை அறிவு பூர்வமாக விளக்க வேண்டிய கடமை ஒழிந்து போய் விடுகிறது என்று அவர்கள் கருதுவதுதான்.

அறிவுபூர்வமான வாதங்களை எவரேனும் முன்வைத்தால் உடனே, “இது நாத்திகர்களின் குதர்க்கம்” என்று தயார் நிலையிலுள்ள பதிலைக் கூறி விடுவார்கள். இதில் அடிபடுவது உண்மையைக் கண்டறியும் தேடல் என்பதைப் பலரும் புரிந்து கொள்ள வேண்டும். தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நாக்கை அறுத்து வர பட்வா விதித்தவர் பிராமணீய வெறி கொண்ட வேதாந்தி என்பவராவார். பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இவரின் பேச்சுக்கான அடிப்படை என்பது மநுதர்ம சாஸ்திரமே. வேத நம்பிக்கையைத் தர்க்கத்திற்கு உட்படுத்தக் கூடாது என்ற ஆதி சங்கரரின் சிந்தனை மரபைத்தான் இன்றுள்ள இந்துத்துவா சக்திகள் உயர்த்திப் பிடிக்கின்றன. இத்தகைய சிந்தனை முறையை சற்று சுருக்கமாகவேணும் அலசிப் பார்ப்பது உதவிகரமாக இருக்கும். ஏனெனில் சேது கால்வாய் திட்டத்தில் இந்துத்துவா சக்திகள் நடத்தும் போராட்டம் என்பது அரசியல் தளத்தில் மட்டுமல்ல தங்களது பிற்போக்குச் சிந்தனை தளத்தை வலுப்படுத்தவும்தான்.

சேது கால்வாய் திட்டத்தில் ராமன் பெயரை இணைக்கிற முயற்சியில் இந்துத்துவா சக்திகள் ஓரளவு வெற்றி அடைந்துள்ளன என்கிற ஆபத்தையும் கவனிக்க வேண்டி உள்ளது. நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள், தெரிந்தோ தெரியாமலோ ஆதம் பாலத்தை ராமர் பாலம் என்றே குறிப்பிடத் தொடங்கியுள்ளன. தங்களுக்குரிய பண்பாட்டுக் குறியீடுகளை சமூகத்தில் ஆழப்பதிப்பதன் மூலம் இந்துத்துவா சிந்தனை எளிதாக வலுப்பெறும் என்று கருதுகிறார்கள்.

பாபர் மசூதியை ராம ஜென்ம பூமி என்று பதிவாக்கினர். மராட்டிய சிவாஜியை இஸ்லாமியர்களுக்கெதிரான குறியீடாக முன் வைக்கின்றனர். விவேகானந்தரை தங்களது சொந்தப் பிரதிநிதியைப் போல் சித்தரிக்கின்றனர். இன்று ஆதம் பாலத்தை ராமர் பாலமாக பதிவாக்க முயல்கின்றனர். இவை போன்ற பலஎடுத்துக்காட்டுகளை சடங்குகளிலும், வழிபாட்டுத் தளங்களிலும், சமஸ்கிருதத் திணிப்பிலும் காணமுடியும்.

நம்பிக்கையைக் கேள்வி கேட்கக் கூடாதென்பதன் நேரடியான பொருள் என்னவெனில் யாரொருவருக்கும் சுதந்திர சிந்தனை கூடாது என்பதாகும். மன்னர்களைக் கேள்வி கேட்க முடியாது என்பதைப் போலத்தான் இதுவும். இதைத்தான் மநு கூறினான். இதனைத்தான் இந்துத்துவா சக்திகள் வலுப்படுத்த விரும்புகின்றன. அதாவது ஜனநாயகத்திற்கு ஒவ்வாத சிந்தனை முறை இதுவாகும். இந்த சிந்தனையின் விளைவான “பயபக்தி” என்ற கருத்தியல்தான் மூட நம்பிக்கைகளை வலுப்படுத்தும் காரணியாகவும் செயல்படுகிறது. பச்சை சேலை விவகாரம் தொட்டு திருப்பதி அலமேலு மங்கையின் தாலி அறுந்து விழுந்த வதந்தி வரை இன்றளவும் எதையும் கேள்வி கேட்காமல் பயத்தினால் எல்லாச் சடங்குகளையும் செய்து முடிக்கிறார்களே பெரும்பான்மையான மக்கள் - இவர்களைக் குறிவைத்து மேலும் வெறி ஊட்டி அதில் சிலரைத் தங்களது படை வீரராக மாற்றுகிற முயற்சியைத்தான் இந்துத்துவா சக்திகள் சமூக சிந்தனைத் தளத்தில் செய்து வருகின்றன.

“சுருதி என்பது வேதம். ஸ்மிருதி என்பது சட்ட விதிகள். இவை இரண்டும் தர்மத்திற்கும் சட்டத்திற்கும் ஆதாரங்கள். இவற்றிற் கெதிரான வாதங்களால் இதைப்பற்றி தீர்ப்பு கூற யாரொருவரும் முயலக்கூடாது. ஒருவன் தர்க்கத்தின் மேல் அதிகமாக நம்பிக்கை கொண்டு இவற்றை அலட்சியம் செய்தால் அவனை நாத்திகன் என்றே கருத வேண்டும். அப்படிச் செய்பவன் ஒரு பார்ப்பனனே ஆனாலும் அவனை சமுதாயத்தில் இருந்தே நீக்க வேண்டும்” என்று மநு ஸ்மிருதி கூறுகிறது. (மநு தன்னுடைய சொந்த பார்ப்பன சாதிக்காரரை தண்டிக்க விரும்புகிற ஒரே ஒரு விஷயம் எதுவென்றால் மேலே குறிப்பிட்ட பகுத்தறிவு கொண்ட பார்ப்பனன் என்பதற்காகவே.) மாறுபட்ட சிந்தனையோ ஆய்வு முறையோ தர்க்கமோ எதுவுமே கூடாது என்கிறான் மநு.

வசிஷ்ட தர்ம சூத்திரம் இன்னும் வெளிப்படையாக இக்கருத்தைக் கூறுகிறது. வேதங்கள் ஆதாரச் சான்றுகள் பெற்றவையல்ல என்ற கொள்கையும், ரிஷிகளின் வாக்குகளை குறைகூறி விமர்சிப்பதும், எதையும் சந்தேகத்துடன் பார்ப்பதும் ஒருவனை அழித்து விடுவன”

ஆதிசங்கரரோ நம்பிக்கையை ஏற்காமல் பகுத்தறிவை ஏற்பது முட்டாள்தனம் என்கிறார். புனிதமான வேதம் போன்ற நூல்களை அலட்சியம் செய்யும் பகுத்தறிவு ஒரு தனி மனிதனின் கருத்தை மட்டுமே பற்றி நிற்கிறது என்றும், ஒரு தகுதியான நல்ல அடித்தளம் பகுத்தறிவுக்கு இல்லை என்றும் வாதிடுகிறார். மேற்கண்ட சிந்தனை முறை எந்த வகையில் ஜனநாயக சிந்தனை முறையாக இருக்க முடியும். பகுத்தறிவையே தடை செய்கிற மநு, ஆதிசங்கரர், வசிஷ்டர் போன்றவர்கள் முன்வைக்கிற அதே சிந்தனையைத்தான் இன்றுள்ள இந்துத்துவா கும்பல் சேது கால்வாய் திட்டத்தில் முன்வைக்கின்றன.

எனினும் இத்தகைய பிற்போக்குச் சிந்தனை முறைக்கு எதிரான, பகுத்தறிவுக்கு ஆதரவான தத்துவப் போராட்டங்கள் காலந்தோறும் இருந்து வருகின்றன.

கபிலருடைய சாத்திரம் வேதத்தையும் மநுவின் கொள்கையையும் மறுத்துப் பேசுகிறது என்று ஆதிசங்கரர் கூறும்போது இந்த உண்மை தெரிய வருகிறது. பூதவாதிகள், சார்வாகர்கள் மட்டுமல்ல கபிலர் போன்ற சாங்கிய தத்துவவாதிகளும், கணாதர் போன்ற காரணவாத பகுத்தறிவுச் சிந்தனையாளர்களும் வைசேஷிக தத்துவவாதிகளான கௌதமரும், வாத்ஸ்யாயனரும் கருத்துக்களின் மோதல்களை ஆதரித்து நின்றார்கள். சூத்திரன் சுடுகாட்டுக்குச் சமம் என்று கூறிய ஆதிசங்கரரோ “தத்துவவாதத்தால் அறியப்படும் பொருள் நிரந்தரமல்ல” என்று தத்துவமற்ற முறையை வாதமாக முன்வைத்தவர். எனினும் இப்படிப்பட்ட சிந்தனைக்கெதிரான போராட்டம் மற்ற பகுதிகளைப் போலவே தமிழ் மண்ணிலும் தொடர்ந்து நடந்து வருவது வரலாற்று உண்மையாகும்.

2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட புறநானூற்றுப் பாடல் ஒன்றில் (புறம் - 183) இதனைக் காணமுடியும். “அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்” என்கிற வரி கற்பதால் பெறுகிற அறிவை முன்னிலைப் படுத்தியது. “ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர்” என்று இன்னொரு புறநானூற்றுப் பாடல் (புறம் - 191) அறிவுடைச் சான்றோர் குறித்து பெருமிதம் கொள்கிறது.

திருக்குறளோ தெட்டத் தெளிவாக இத்தகைய போராட்ட நிலைப் பாட்டிற்கு ராஜபாட்டை போட்டது. “எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்று எதையும் ஆராய்ந்து பகுத்துப் பார்த்தலே அறிவு என்றது. மநுவின் சிந்தனை முறையை மண்ணோடு பெயர்த்தெடுத்து வீசி எறிந்தது.

“இட்ட குண்டம் ஏதடா? இருக்கு வேதம் ஏதடா? சுட்ட மண் கலத்திலே சுற்று நூல்கள் ஏதடா?” என்று வேதங்களே உண்மை எனக் கூறப்படுவதை கேள்விக்கு’ உட்படுத்தியது சித்தர் பாடல்கள். “காலை மாலை நீரிலே முழுகும் மந்த மூடர்காள்ஙு காலை மாலை நீரிலே கிடந்த தேரை என்பெறும்” என்று சம்மட்டி அடியாக அடித்துக் கேட்டனர்.

சித்தர்களின் தொடர்ச்சியாக ராமலிங்க வள்ளலாரும் “பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடுமோர் பவனெறி இதுவரை பரவியதனால் சென்னெறி அறிந்திலர்” என்று பாடி துருப்பிடித்த தலைகளின் மீது ஒரு போடு போட்டார். பாரதியும் “கடலினைத் தாவும் குரங்கும்” என்று குறிப்பிட்டு “கற்பனை என்பது கண்டோம்” என்று துணிச்சலோடு கூறினான். பின்னர் வந்த பாரதிதாசனோடு இன்றுள்ள ஜனநாயக மற்றும் முற்போக்கு இயக்கத்தினரும், மநுவின் சிந்தனை முறைக்கு எதிரான தத்துவத் தளத்திலே இயங்கி வருகின்றனர்.

சமூக சீர்திருத்தம் என்பதே வழிவழியாக வந்த, மற்றும் காலத்திற்கு ஒவ்வாத நம்பிக்கைகளை கேள்விக்கு உட்படுத்தி சமூக நடப்புகளை ஓரளவு மாற்ற முயல்வதுதான். அயோத்திதாசர், நாராயண குரு, வைகுந்தசாமி, ஜோதிபா பூலே, பெரியார், அம்பேத்கர் போன்றோரின் செயல்பாட்டிற்கு அடித்தளமாக இருந்ததே மநுவாத எதிர்ப்புதான்.சிவனடியார் ஆறுமுக சாமி அவர்கள் தற்போது சிதம்பரம் நடராசர் கோவிலில் பாட முடிகிறது என்றால் வைதீகப் பழமைவாதத்தை எதிர்த்துத் திரண்ட சக்திகள்தான் காரணம். எல்லோரும் அர்ச்சகராகலாம் என்கிற சட்டமும் எதைக் காட்டுகிறது என்றால் பார்ப்பனிய மரபுவழிச் சிந்தனைக்கு எதிரான ஆற்றல்களின் ஒருங்கிணைப்பைத்தான். பெரும்பான்மையினரின் மதநம்பிக்கையைக் கேள்வி கேட்காதே என்பதன் மூலம் பிற்போக்கு வைதீகச் சிந்தனையை ஆதிக்கம் புரியும் சக்தியாக நிலைநிறுத்துகிற ஏற்பாடும்,ஏற்றத்தாழ்வுள்ள சமூகத்தைக் கட்டிக் காக்கிற முயற்சியும்தான் நடக்கிறது. வளர்ச்சி பெறாத ஒரு தேக்க சமூகத்தை இச்சிந்தனைமுறை உருவாக்கிவிடும். இதன் மூலம் மத அரசியல் நடத்திட வாய்ப்பு பெருகும் என்பதைத்தான் இந்துத்துவா சக்திகள் கருதுகின்றன. சேது கால்வாய் திட்டத்திலும் இத்தகைய சிந்தனை முறையை நுழைப்பதன் மூலம் சிவில் சமூகத்தை தங்களால் கட்டுப்படுத்த முடியும் என இந்தப் பிற்போக்குச் சக்திகள் திட்டமிடு கின்றன. இதற்கெதிரான போராட்டம் ஒரு இம்மியளவேனும் பின்னடையாது, சமரசமற்று நடக்கும் போது மட்டுந்தான் தமிழகத்திலும் சுதந்திர சிந்தனை மரபின் இழை அறுந்துபோகாமல் முன்னெடுத்துச் செல்ல முடியும்.

சேது கால்வாய் திட்டத்தில் இதிகாச ராமனை நுழைப்பது மத அரசியல் மட்டுமல்ல மநுவாத சிந்தனை மரபை ஆழ ஊன்றும் தத்துவ நோக்கும் கூட என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.எனவேதான் சமத்துவ சிந்தனைக்கான பகுத்தறிவுப் போராட்டமானது சேது கால்வாய் திட்டத்திற்கு ஆதரவான போராட்டத்தோடு இணைத்து முன்னிலும் வீச்சாக நடத்தப்படும் தேவை இருக்கிறது.

- சுந்தா([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com