கட்டுரை
சுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 2
இளநம்பி
சு.ரா.வின் இறுதி நாட்களில் அவரைச் சந்தித்துப் பேசிய மற்றொரு எழுத்தாளரான பி.ஏ. கிருஷ்ணனும் கோகுல் ரேஞ்சிற்கு அஞ்சலிக் கட்டுரையை எழுதியிருக்கிறார். இவர் சான்ஃபிரான்சிஸ்கோவில் கோதுமைத் தோசை போன்ற ஒன்றைச் சாப்பிட்ட கதையை சு.ரா. ஆர்வமுடன் கேட்டாராம். அன்று இரவு சு.ரா. மகள் வீட்டில் மெக்சிகன் டைப் உணவு விருந்தாம். அதற்காக ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்குச் சென்றார்களாம். சு.ரா.தான் ட்ராலியைத் தள்ளிக் கொண்டு வந்தாராம். இரவில் மூளைக்கு அதிகம் வேலை கொடுக்காத இரண்டு படங்களைப் பார்த்தார்களாம். இடையில் கிருஷ்ணன் ஒரு விசயத்திற்காகக் குற்றஉணர்வு அடைகிறார். அது என்னவென்றால், அவர் சு.ரா.வின் மனைவி கமலா மாமிக்கு ஸூடோகு புதிர் புத்தகம் ஒன்றை வழங்கினாராம்.
இதனால் ஒவ்வொரு நாள் காலையிலும் சு.ரா.வின் மகள், மருமகன், பேரன் பேத்திகள் வெளியே சென்று வீடே வெறிச்சோடிவிட, அப்போது கமலா மாமி ஸூடோகு புதிரை மணிக்கணக்கில் போட்டுக் கொண்டிருக்க, சு.ரா. வேறு வழியின்றி மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு பரிதாபமாய் அமர்ந்திருப்பாராம். இப்படி வயோதிகத் தம்பதியினரைப் பேசவிடாமல் செய்துவிட்டோமே என்பதுதான் கிருஷ்ணனின் குற்ற உணர்ச்சி. ஒருவேளை இதனால்தான் பெரிசு நோய் முற்றி மண்டையைப் போட்டதோ, யார் கண்டது? அது எப்படியோ போகட்டும், மறுநாள் காலையில் கிருஷ்ணன் விடை பெறும்போது சு.ரா. நெஞ்சாரத் தழுவி விடை கொடுத்தாராம், கண்கள் கலங்கியிருந்ததாம். வீடு திரும்பும்போதுதான் சு.ரா. கமலா தம்பதிகளிடம் காலில் விழுந்து சேவிக்க மறந்து போனது அவருக்கு ஞாபகம் வந்ததாம்!
தமிழ்நாட்டுச் சிறு பத்திரிக்கை எழுத்தாளர்களின் உலகம்தான் எவ்வளவு குட்டியாக இருக்கிறது. சாதாரணமாக உண்டு, பேசி, களித்த கதைகள்தான் அவர்களது வாழ்க்கையின் கவித்துவத் தெறிப்புக்களாக இருக்கிறதென்றால் இவர்களது எழுத்தில் வரும் வாழ்க்கை என்கிற தெருவோரக் குட்டையின் ஆழம் கணுக்கால் அளவைக்கூடத் தாண்டாதே. சாதாரணங்களையே அசாதாரணங்களாக ரசித்து, உருகி, அசை போடும் வாழ்க்கை திண்ணையோர வேதாந்திகளது பல நூற்றாண்டு மரபு. அமெரிக்கா போயும் காலில் விழும் வைபவம் யாருடைய பழக்கம்? இதே கிருஷ்ணன் தமிழ்நாட்டுக்கு வரும் போது ஏதாவது ஒரு வயதான தலித் எழுத்தாளரின் காலில் விழுவாரா? எழுத்தாளன் என்பதால் கோதுமைத் தோசை சாப்பிட்டது, அதைக் காது கொடுத்துக் கேட்டதெல்லாம் இலக்கியமாகுமென்றால் அது என்னய்யா இலக்கியம்? அல்லது இதுதான் பின்நவீனத்துவம் விளிக்கும் சின்னச் சின்னக் கொண்டாட்டங்களா? உண்மையில், சு.ரா. இத்தகைய அற்ப விசயங்களைக் கொண்டாடித்தான் வாழ்ந்து முடித்தார். இடையில் சில கதைகளையும் எழுதினார். இதனால்தான் அவர் இலக்கியச் சிகரமென்றால் சாலையோரப் பள்ளங்களை இனி நாம் பள்ளத்தாக்குகள் என்று அழைக்க வேண்டியிருக்கும்.
சு.ரா. இறந்தவுடன் அவருடன் பேசிப் பழகிய அனைவரும், குறிப்பாக, தமிழகத்தின் சிறு பத்திரிக்கை எழுத்தாளர்கள் சு.ரா. மறைவின் அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் தங்களது இரங்கற்பாக்களை இப்படித்தான் பல்வேறு சிறு பத்திரிக்கைகளில் தீட்டியிருக்கின்றனர். அந்தப் பாக்களில் எழுத்தாளர் ஜெயமோகன் வடித்திருக்கும் நினைவின் நதியில் எனும் காவியம் மகத்தானது. ஒரு வகையில் சு.ரா.வைப் பற்றியும், ஏன் ஜெயமோகனைப் பற்றியும் அதீத மனத்தாவல் ஏதுமின்றிப் புரிந்து கொள்வதற்கு அது ஒரு ஆவணம் அல்லது உபநிடதம் போன்றது.
அதில் சு.ரா. பார்த்துப் பறித்த, கேட்டுக் கலந்த, ரசித்து உருகிய, ஆசைப்பட்டுக் கோட்டைவிட்ட சமாச்சாரங்கள் அத்தனையும் ஒன்றுவிடாமல் செதுக்கப்பட்டுள்ளன. அவையெல்லாம் உண்மைதானென்று சு.ரா. உயிர்த்தெழுந்து வந்து சாட்சியம் சொல்ல முடியாது என்றாலும் ஏனைய எழுத்தாளர்களின் பதிவுகளும் ஏறத்தாழ ஜெயமோகனை வழிமொழியத்தான் செய்கின்றன.
இவற்றையெல்லாம் பிழிந்து பார்த்தால், சு.ரா. தனது ஆளுமையின் வளர்ச்சிற்கேற்பப் பேரழகனாய் மிளிர்ந்தார், அவரது கருத்து தோற்றம் எழுத்து பேசும் முறையின் மீது மூன்று தலைமுறை எழுத்தாளர்கள் மோகம் கொண்டனர். சு.ரா. தோள்களைத் தூக்கி நெஞ்சை நிமிர்த்தி நடப்பார், ஆரம்பத்தில் தூய கதர்ச்சட்டையும் தும்பைப்பூ எட்டு முழ வேட்டியும் கட்டியவர் பின்னர் ஜீன்ஸ் பேண்ட் டீ ஷர்ட்டுக்கு மாறினார். சாக்கடையில் வீசப்பட்ட உபயோகமற்ற பொருட்களை விரும்பி வேடிக்கை பர்ப்பார், சினிமா சுவரொட்டிகளை உறைந்து ரசிப்பார், மலையாள நடிகை பார்வதியும் நடிகர் கோபியும் அவருக்குப் பிடித்த நடிகர்கள், கட்டிலில் படுத்தபடி பேசுவது அவருக்குப் பிடிக்கும் (இந்த முக்கியமான விசயத்தை பலரும் பதிவு செய்திருக்கின்றனர்), பாத்டப்பில் படுத்தபடி குளிப்பது மிகவும் பிடிக்கும் (ஜெயமோகன் அறிந்த இந்திய நண்பர்களிலேயே பாத்டப்பில் குளிப்பது சு.ரா. மட்டும்தானாம். நாம் அறிந்த வரை பாத்டப் இருப்பது பங்களாக்களிலும் 5 ஸ்டார் ஓட்டல்களிலும்தான். என்ன செய்வது, இலக்கிய மனம்தான் வர்க்க பேதம் அறியாததாயிற்றே!)
வெளிநாட்டு லோஷன் பூசுவது பிடிக்கும், சில நேரங்களில் ‘செண்பகமே செண்பகமே’ பாடுவது பிடிக்கும், தினசரி ஷேவிங் செய்வது பிடிக்கும், அவரது வீடு பிடிக்கும் அறை வளைந்த நாற்காலி சாப்பாட்டு மேசை மொட்டை மாடி நிரம்பப் பிடிக்கும், அளவோடு ஆனால் ருசித்துச் சாப்பிடுவது பிடிக்கும், தோசையும் தொட்டுக் கொள்ள கீரைமசியலும் கெட்டித்தயிரும் தினசரி பிடிக்கும், தோல் சீவிய பழங்களைத் துண்டுகளாக்கிக் குத்திச் சாப்பிடுவது பிடிக்கும், புத்தம் புதிதாக வரும் புத்தகங்களின் புத்தக மணத்தை மோந்து பார்ப்பது சலிக்காமல் பிடிக்கும், கர்நாடக சங்கீதம் செவி குளிரக் கேட்பது பிடிக்கும், ஹிந்து பேப்பரை படித்து முடித்ததும் கச்சிதமாக மடித்து வைப்பது பிடிக்கும், (சு.ரா.வை எழுத்தில் விஞ்சியதாக சுயப் பிரகடனம் செய்யும் ஜெயமோகனுக்கு இந்தக் கலை மட்டும் இன்னும் கை வரவில்லையாம். இது போன்ற கலைத்தவங்களில் மட்டும்தான் இலக்கியவாதிகளுக்குத் தன்னடக்கம் வரும் போலும் கற்றோரின் பணிவு!),
சற்றுப் பூசினால் போன்ற உடல்வாகுடன் உள்ள மலையாளப் பெண்கள் குளித்து விட்டு ஈரத்தலையைக் கோதிவிடுவது பிடிக்கும், பேசிக்கொண்டோ பேசாமலோ இருக்கும் பெண்களின் கழுத்தசைவு பிடிக்கும், எஸ்.எல்.பி. பள்ளி மைதானத்தில் காலாற நடப்பது பிடிக்கும், கூடைக்காரக் கிழவிகளின் சண்டை போடும் வீரம் பிடிக்கும், ஓடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை எப்போதும் பிடிக்கும், திருவனந்தபுர இரயில்வே நிலைய உணவகத்தின் தோசை பிடிக்கும், திருவனந்தபுர மாடி ஓட்டலின் ஐந்தாவது தள உணவறையின் கண்ணாடித் தடுப்புக்கு வெளியே பரந்து விரிந்திருக்கும் கடற்பரப்பையும் கட்டிடப்பரப்பையும் பார்த்துக் கொண்டு சாப்பிடுவது பிடிக்கும், பெண்கள் கண்ணாடி வளையல்கள் போடுவது பிடிக்காது, வளைந்து நெளிந்த தங்க வளையல்கள் போடுவது பிடிக்கும்...
அப்புறம் நாலணா பாளையங்கோடன் பழத்திற்காகப் பெட்டிக்கடைக்காரரிடம் பேரம் பேசிய சு.ரா., கார் பார்க்கிங் பிரச்சினையில் போலீசுக்காரருடன் சாமர்த்தியமாக வாதம் செய்த சு.ரா., நண்பருக்கு முன் பதிவு செய்த இருக்கையில் வேறு யாரோ அமர சின்ன உரிமையைக் கூட விட்டுத்தர முடியாது என்று சண்டை போட்டு இடம்பிடித்த சு.ரா., ஒரு நண்பர் சு.ரா.வைப் பார்த்தவுடன் உடன் வந்த தன் மருமகளிடம் விடைபெற மறந்த போது ‘மறதி என்பது எவ்வளவு அருமையான விசயம்’ என்று தத்துவம் உதிர்த்த சு.ரா., சாப்பாட்டு மேசையின் அடியில் புகுந்து வெளியே ஓடிய குழந்தையைப் பார்த்து “குழந்தைகள் வாழ்க்கையை எவ்வளவு எளிதாக எதிர் கொள்ளுகிறார்கள்” என்று அதிசயித்த சு.ரா. என்று இந்த ‘வரலாற்றுப் பதிவுகள்’ முடிவில்லாமல் நீளுவதால் நாம் இந்த மட்டும் நிறுத்திக் கொள்வோம்.
ஜெயமோகன் மற்றும் அவரது சக எழுத்தாளர்களால் இவை மட்டும்தான் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பதல்ல. நண்பர்களை வரவேற்று உபசரிக்கும் சு.ரா.வின் விருந்தோம்பல், நண்பர்கள் சிலருக்கு நிதியுதவி அளித்த பெருந்தன்மை, அப்புறம் தத்துவ இலக்கிய ஆராய்ச்சி எல்லாம்தான் பதிவாகியிருக்கின்றன. ஆனால் இவையெல்லாம் மேற்கண்ட அழகியல் ரசனைகளுக்குப் பொருத்தமான ஒத்திசைவோடு சேர்ந்தேதான் வருகின்றன. சு.ரா. என்ற எழுத்தாளுமை மேற்கண்ட ‘பிடிக்கும்’களில் இருந்துதான் உருவாகி எழுந்து வர முடியும். அவையன்றி சு.ரா. இல்லை. இத்தகைய அற்ப விசயங்கள் ஒரு எழுத்தாளனுக்கும், அவனைப் பகிர்ந்து கொள்ளும் எழுத்தாளர்களுக்கும் ஏன் முக்கிய விசயங்களாகப் படுகின்றன?
பொது வாழ்வில் இருப்பவர்கள் இறந்து போனால் அவர்களைப் பற்றிப் பகிர்ந்து கொள்வதிலும், பதிவு செய்வதிலும் இத்தகைய அற்பமான, பொருளற்ற, நகைப்புக்கிடமான நினைவுகூறும் முறை வேறு எந்தத் துறையிலும் இல்லை என்பதை மட்டும் நிச்சயமாகச் சொல்லலாம். காரணம் சரியோ, தவறோ அவர்கள் பொதுவாழ்வில் இயங்குகிறார்கள். எவ்வளவு அற்பமானவர்களாக இருந்தாலும் அவர்களது ஆளுமை குறித்த மதிப்பீடு முன்னுதாரணமாகவோ அல்லது முன்னுதாரணமற்றதாகவோ இருப்பினும் அவை அநேகமாகப் பொது வாழ்வு குறித்துத்தான் இருக்கும். பொது வாழ்வு குறித்த நீர்த்துப்போன சிந்தனை அல்லது மக்கள் விரோதச் சிந்தனை அல்லது மக்களுக்கு மேலாகத் தன்னைக் கருதிக் கொண்டு புகழ் அதிகாரம் பெற நினைப்பவர்கள் மட்டும்தான் தமது தனிப்பட்ட நடவடிக்கைகளை உன்னதமானவையாகக் கருதிக் கொண்டு முன்வைக்கவும் முடியும்.
பாசிஸ்டுகள் தங்களது பிம்பத்தைக்கூட பொதுமக்கள் நலனுக்காக என்று பொய்யாகவேனும் கட்டி எழுப்புகிறார்கள். எந்தக் கட்சியையும் மதிக்காத அகங்காரத்தைக் கொண்டுள்ள ஜெயலலிதா, தமிழ்நாட்டு மக்களுடன் கூட்டணி வைத்திருப்பதாகக் கூறுவதும், கருப்புப் பணத்தையும் காலேஜையும் காப்பாற்ற கட்சி ஆரம்பித்திருக்கும் விஜயகாந்த் “வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்று மேடைதோறும் முழங்குவதும் இப்படித்தான். ஆனால் தமிழ்நாட்டு இலக்கியவாதிகளின் கதை வேறு.
அவர்கள் பொதுவில் கதை எழுதுகிறார்களேயொழிய பொதுவாழ்வில் அவர்கள் இல்லை. மாறத் துடிக்கும் மனித வாழ்க்கை குறித்த அக்கறையும், மனித குலத்தின் மீதான நேசமும் அவர்களிடம் இல்லை. இந்நிலையில் ஒரு சில கதைகள் எழுதியதும் புகழ், பரிசு, விருது முதலியனவற்றை எதிர்பார்ப்பதிலும், அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போவதால் வருகின்ற பிரச்சினைகள், குழுச்சண்டைகள், பொறாமைகள், சாகித்ய அகாடமி ஞானபீடம் மீதான மனத்தாங்கல்கள், எழுத்தாளனை மதிக்காத அரசு சமூகத்தின் மீதான வெறுப்பிலும்தான் பொதுவாழ்வு குறித்த ‘அக்கறை’ அவர்களிடம் வெளிப்படுகிறது.
கடந்த ஐம்பதாண்டுச் சிறு பத்திரிகைகளை எடுத்துப் பாருங்கள். ஆயிரக்கணக்கான பக்கங்களில் அவர்கள் எழுதியிருப்பது இந்த அற்பமான சமாச்சாரங்கள் குறித்துத்தான். இப்படிப் பச்சையான சுயநலத்தையும், சமூக விரோதத்தையும் இயல்பிலேயே வரித்துக் கொண்டிருக்கும் சிறு பத்திரிக்கை எழுத்தாளர்கள் தங்களது இறந்த காலத்தில் தற்செயலாகச் சிக்கித் தவித்த சில தருணங்களை அசை போட்டு அசை போட்டு சில கதைகளை முக்கி முக்கி எழுதி, உடனே எழுத்தாளர்களும் ஆகிவிடுகிறார்கள். செயற்கையாகக் கட்டியமைக்கப்படும் மிகச் சிறுபான்மையான வாசிப்பின் சந்தைக்கேற்பத் தங்களைப் புதுப்பிக்கவும் ஏற்கெனவே தேங்கிவிட்ட எழுத்துத் திறனைச் செயற்கையாக மாற்றிக் கொள்ளவும் முயலுகிறார்கள். அப்புறம் அந்த எழுத்திற்காக அதே சண்டை, சச்சரவுகள்!
மிகச் சாதாரணமாக வாழ்ந்து கொண்டு தங்களைத் தாங்களே அசாதாரணமான பிறவிகளாக சிலாகித்துக் கொள்வதாக இவர்களது வாழ்க்கையே மாறிவிடுகிறது. இதிலிருந்து தங்கள் சலிப்பூட்டும் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளை ரசிப்பது என்ற நார்சிச நோய் வலுவாக இவர்களைத் தொற்றிக் கொள்கிறது. அப்புறம் இவர்கள் மண்டையைப் போட்ட பிறகு, இவர்களது எழுத்து தவம் மோனம் கலை குறித்த அக்கப்போர்களையெல்லாம் ஏற்கெனவே எழுதிவிட்ட நிலையில் இவர்களது அஞ்சலிக் குறிப்பாக எதை எழுத முடியும்? வந்தார், போனார், சட்டை போட்டார், பேண்ட் போட்டார், ஜிப் போடவில்லை என்றுதானே எழுத முடியும்?
நன்றி: புதிய கலாச்சாரம்
இப்புத்தகம் வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
16, முல்லை நகர் வணிக வளாகம் 2வது நிழற்சாலை,
அசோக் நகர்,
சென்னை - 83,
விலை: ரூ.60
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|