Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

நாற்சந்தியில் வைகோ

- மு. சுந்தரமூர்த்தி

இன்னும் சில மாதங்களில் தமிழகம் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான ஆயத்தங்களைத் தொடங்கிவிட்டன. எல்லா தேர்தல்களிலும் ஏதாவது ஒரு சிறு பிரச்சினை ஊடகங்களால் பூதாகரமாக்கப்பட்டு தேவைக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளில் ரஜினிகாந்த் தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார். ஒருவழியாக கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அரசியலில் அவருடைய இடம் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. இத்தேர்தலில் விஜய்காந்துக்கு அத்தகைய வாய்ப்பு கிடைக்குமென்று நினைத்திருந்தேன். திடீரென்று மதிமுக தலைவர் தலைப்புச் செய்திகளை ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே அவருடைய இடம் தமிழக அரசியலில் ஓரளவு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதென்றாலும் வரப்போகிற தேர்தலில் அது இன்னும் தெளிவாகக்கூடும் என்பது என் எண்ணம். இது அவருக்கு கிடைத்துள்ள முக்கியத்துவம் என்பதைவிட அவருடைய இறங்குமுகத்திற்கான ஆரம்பம் என்றே கருதுகிறேன்.
Vaiko
அவர் திமுகவில் இருந்தவரை கருணாநிதிக்கு அடுத்தபடி மக்களிடம் செல்வாக்கு பெற்ற தலைவர் என்று கருதப்பட்டார். இதனால் கருணாநிதிக்கு பிறகு திமுகவின் தலைமையை ஏற்கக்கூடும் என்று பரவலாக கருதப்பட்டது. இது மு.க. ஸ்டாலினுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்ற காரணத்தால் ஒரு நம்பவியலாத காரணத்தைக் காட்டி 1994 கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். அப்போது திமுகவில் தோன்றிய கொந்தளிப்பு, அதற்குமுன் இன்னொரு மூத்த தலைவரான இரா. நெடுஞ்செழியன் வெளியேறியபோது இருந்ததை விடக் கூடுதலாக இருந்ததால் இன்னொரு எம்.ஜி.ஆர். உருவாகி திமுக மீண்டும் உடையும் என்ற அளவுக்கு பேசப்பட்டது. ஆனால் அப்படி பெரிதாக எதுவும் நடக்கவில்லை. சில இரண்டாம் நிலைத் தலைவர்களைத் தவிர எதிர்பார்த்த அளவு யாரும் அவரோடு செல்லவில்லை. தொண்டர்களையும் பெருமளவில் இழுக்க முடியவில்லை. அதற்கு அவருக்கிருந்த நற்பெயர் மட்டுமே போதவில்லை. எம்ஜிஆருக்கு இருந்ததைப் போன்று ரசிகர் மன்றம் என்ற இணை அமைப்பு, சினிமா என்ற பிரச்சார சாதனம், பணம் போன்றவை வைகோவுக்கு இல்லை என்பது முக்கிய காரணங்கள். அடுத்து வந்த 1996 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியுடன் மட்டும் கூட்டு வைத்து தேர்தலில் போட்டியிட்டதில் ஒரு தொகுதியிலும் வெற்றி கிட்டவில்லை. அப்போதிருந்த அரசியல் சூழ்நிலையில் அந்த தோல்விகூட பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பது மட்டுமின்றி கொள்கையில் சமரசம் செய்யாதவர், ஊழல் கறைப் படியாதவர், சிறந்த பேச்சாளர் என்பவனற்றின் அடிப்படையில் இருந்த நற்பெயரை தக்க வைத்துக் கொண்டிருந்தார்.

ஊருக்கு செல்லும்போது ஊரிலிருந்த சில திமுக நண்பர்களிடமும், இங்கு (அமெரிக்காவில் உள்ள) திராவிட அரசியல் சார்புடைய நண்பர்களிடமும் பேசும்போதும் அவர்களுக்கு வைகோவின் மீது மதிப்பு இருந்ததாகவே தெரிந்தது. "கலைஞர் இருக்கும் வரை அவரைத் தான் தலைவராக ஏற்போம். அவருக்குப் பிறகு திமுகவும், மதிமுகவும் இணைந்து வைகோ தலைமைத் தாங்குவார்" என்ற ஒரு இக்கட்டான மனநிலையில் பேசினர். இப்படிப்பட்ட நம்பிக்கை பரவலாக இருந்த மாதிரியே தெரிந்தது. ஆக வைகோ "a leader in waiting" (திண்ணை காலியாகக் காத்திருந்த தம்பி) மாதிரித் தான் தெரிந்தார். ஆனால் இந்தக் காத்திருப்பு பல வருடங்களாக நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் முதலில் இருந்த நம்பிக்கை இப்போது கணிசமாக குறைந்திருக்கும். கால நீட்சி மட்டுமல்ல, இதற்கிடையே தேர்தல் அரசியலில் தாக்குப்பிடிக்க அவர் செய்துகொண்ட - கொள்ளப்போகும் சில சமரசங்கள் ஒரு பக்கமும், திமுகவில் கருணாநிதி குடும்பத்தின் பிடிப்பு மேன்மேலும் இறுகுவது இன்னொரு பக்கமும் திமுகவை அவர் கைப்பற்றுவதற்கான நிகழ்தகவை பெருமளவு குறைத்துவிட்டது. இந்த நிலையில் மதிமுகவின் தேவை என்ன என்பதை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

1996ல் தேர்தலில் தோல்வியைக் கண்ட பிறகு மதிமுக 1998 ஆம் ஆண்டு ஜெயலலிதா-பா.ஜ.க.வோடு கூட்டு சேர்ந்து பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. இத்தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்தார் என்பதால் திமுகவினர் சிலர் அவர் மீது கொண்டிருந்த பரிவு குறைந்திருக்கும் என்ற அளவில் அக்கூட்டு வைகோவுக்கு ஒரு பின்னடைவே. இருந்தாலும் ஜெயலலிதாவுக்குக் கட்டுப்படாமல் வாஜ்பேயியை ஆதரவு தெரிவித்தது அவருடைய நற்பெயரை ஓரளவு கட்டிக் காத்தது. அடுத்து 1999ல் திமுகவுடன் கூட்டு சேர்ந்து வெற்றியும் பெற்றபோது கூடவே திமுக தொண்டர்களின் பரிவும் கிடைத்திருக்கும். ஆனால் 2001 ல் சட்டமன்றத் தேர்தலின்போது "மதிமுகவோடு சேர்ந்தால் கருணாநிதிக்குக் கோட்டை; சேராவிட்டால் பாளையங்கோட்டை" என்ற ரீதியில் மதிமுகவினர் சுவரொட்டிகள் ஒட்டி எரிச்சலூட்டியதும், கேட்ட சில தொகுதிகள் கிடைக்கவில்லை என்பதற்காக கூட்டணியை விட்டு வெளியேறிதும், அத்தேர்தலில் திமுக தோல்வியடைந்ததும், தொடர்ந்து ஜெயலலிதா கருணாநிதியை சிறையிலடைத்ததும் திமுகவினருக்கு மதிமுக மீதும் ஓரளவு கசப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும். பின்னர் வைகோவே பொடாவில் கைது செய்யப்பட்டு, 'ஜாமீனில் வெளியே வரமாட்டேன்’ என்று பிடிவாதமாக இருந்தவர் கருணாநிதி உள்பட பலர் ஆலோசனையின் பேரில் ஜாமீனில் வெளிவந்தார். 2004 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் போது திமுகவுடன் கூட்டும் சேர்ந்தது திமுக தொண்டர்களுக்கு மீண்டும் வைகோ மீது நம்பிக்கையை அளித்திருக்கும். அண்மைவரை வலுவாக இருப்பதாகத் தெரிந்த அவ்வுறவில் விரிசல் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

"ஓ பாசிடிவ் ரத்தத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்க முடியும்" என்று வீறாப்போடு பேசினாலும் யதார்த்தம் என்னவென்றால் இழப்பு தானம் கொடுப்பவருக்கே. பெரிதாக ஆதாயம் எதிர்பார்க்க முடியாது. ரத்த தானம் கொடுத்ததற்காக கொஞ்சம் பணமும், சில பழங்களும் கிடைக்கலாம். தனக்கு தேவைப்படும்போது ரத்தம் கிடைக்காது (ஓ பாசிடிவ் ரத்தம் உள்ளவர் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் அவருக்கு பொருந்துவது அல்லது கொடுக்கக்கூடியது இன்னொரு ஓ பாசிடிவ் ரத்தம் உள்ளவர் மட்டுமே). வலுவான நிலையிலிருந்து பேசுகிறார் என்பதைவிட வைகோ குழப்ப நிலையிலிருந்தே பேசுகிறார் என்று நினைக்கிறேன். உறவை திமுகவோடு தொடர்வதா அல்லது அதிமுகவுடன் செல்வதா என்ற குழப்பத்தில் இருக்கிறார். கடைசியில் எங்கு போவார் என்பதை யார் அதிக இடங்களைக் கொடுக்கப் போகிறார்கள் என்பது மட்டுமே நிர்ணயிக்கும். இதில் கொள்கை, விருப்பு-வெறுப்பு என்ற பேச்சுக்கெல்லாம் இடமில்லை.

தங்களை திமுக மரியாதையுடன் நடத்தவில்லை என்ற காரணத்தைச் சொல்லி 'மரியாதையுடன் நடத்தும்' அதிமுகவுடன் செல்லலாம் என்று ஒரு சாராரும், வைகோவையும், வேறு சில தலைவர்களை சிறையில் தள்ளிய கோபத்தில் அதிமுகவுடன் சேராமல் திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்பது இன்னொரு சாராரும் நினைப்பதாகத் தெரிகிறது. இதில் 'மரியாதை' என்றெல்லாம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. வழக்கமான தேர்தல் அரசியலின் எந்த பக்கம் போனால் யாருக்கு லாபம் என்கிற கணக்கின் அடிப்படையிலேயே கட்சியில் இருசாரார்கள் வைகோவை நெருக்குவதாகத் தெரிகிறது. ஆகவே அவரும் தொண்டர்களின் நலன்களை மனதில் வைத்து சரியான முடிவெடுக்கப் போவதாக கூறிவருகிறார். இன்னொரு முறை ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்தால் "கலைஞர் தான் என் தலைவர். அவருக்குப் பிறகு வைகோ தான் என் தலைவர்" என்று எந்த கலைஞர் பக்தனும் சபதம் செய்யப்போவதில்லை.

அதிக ஓட்டுக்கள் பெறும் கட்சியே ஆட்சியைப் பிடிக்கும் என்ற நமது ஜனநாயக முறையில் இரண்டு கூட்டணிகள் அல்லது கட்சிகளுக்கே முக்கியத்துவம் உண்டு. மூன்றாவது அணி அல்லது பிற கட்சிகள் சில இடங்களில் வெற்றி தோல்வியையோ அல்லது ஓட்டு வித்தியாசத்தையோ மாற்றி அமைக்குமேயன்றி பொதுவாக ஆட்சியை நிர்ணயிக்கக்கூடிய இறுதி முடிவை மாற்றப் போவதில்லை. அந்த வகையில் தமிழகத்தைப் பொறுத்தவரையில் திமுக - அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அதிகம். அந்தந்த நேரங்களில் இவ்விரு கட்சிகளின் மீதுள்ள விருப்பு வெறுப்பைப் பொறுத்து மக்கள் ஏதாவது ஒன்றை தெரிவு செய்வார்கள். இவற்றோடு கூட்டு வைத்துள்ள சிறுகட்சிகள் சில தொகுதிகளில் வெற்றி வாய்ப்பையும், சில தொகுதிகளில் ஓட்டு வித்தியாசத்தையும் நிர்ணயிக்கும். சில தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் பாமக, தலித் சிறுத்தைகள், புதிய தமிழகம், முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளுக்கு பங்கு இருக்கும். வாக்கு வித்தியாசத்தை நிர்ணயிப்பதில் காங்கிரஸ், இடது-வலது கம்யூனிஸ்ட், மதிமுக போன்ற கட்சிகளுக்கு வெவ்வேறு அளவுகளில் முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இறுதியாக வெற்றி பெறப்போவது பெரும்பான்மை மக்கள் எந்த கட்சி ஆளவேண்டும் என்று நினைக்கிறார்களோ அதைப் பொறுத்து தான் இருக்குமேயன்றி எந்த கட்சிகள் ஆதரிக்கின்றன என்பதைப் பொறுத்து இருக்காது.

Karunanidhi பலகட்சிகளுடன் கூட்டு வைத்துள்ள கட்சி வெற்றி பெறுவதற்குக் காரணம் அக்கட்சிகளுக்கு உள்ள ஆதரவு காரணமல்ல, வெற்றி பெறக்கூடிய கட்சியின் பின்னால் தான் சிறிய கட்சிகள் செல்லும் என்கிற காரணத்தால் மட்டுமே. மற்றபடி கட்சிவாரியாக ஓட்டு பிரித்து அவற்றின் கூட்டல்-கழித்தல் அடிப்படையில் வெற்றி தோல்விகளை கணிப்பது வெறும் கற்பனை சார்ந்த மாயையே என்பது என் கருத்து. அப்படியானால் இக்கட்சிகளுக்கென்று உறுதியான ஆதரவு தளம் இல்லையா என்ற கேள்வியெழலாம். பாமக, விசி, புத, முலீ போன்ற குறிப்பிட்ட சமூகப் பிரிவினரின் ஆதரவை அடிப்படையாக கொண்ட கட்சிகளுக்கு சில பகுதிகளில் கணிசமாகவும், கொள்கை, பரப்பு சார்ந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஓரளவு பரவலாகவும் இருக்கலாம். மதிமுக இந்த இரண்டு வகையிலும் வராததால் மதிமுக என்ற பெயருக்காக அவர்களுக்கோ அல்லது அவர்கள் ஆதரிப்பவர்களுக்கோ கணிசமாக வாக்குகள் விழப்போவதில்லை. குறிப்பிட்ட மக்கட் பிரிவினர்களின் அரசியல் அதிகாரத்துக்காக, சமூக வளர்ச்சிக்காக போராடுபவர்கள் என்ற வகையில் பாமக, விசி, புதிய தமிழகம், முலீ போன்ற கட்சிகளுக்கு அந்தந்த மக்கட்பிரிவின் கணிசமான ஆதரவும் இருக்கும். தொழிலாளர்களின், உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக போராடுகிறார்கள் என்பதற்காக என்று கம்யூனிஸ்ட் கட்சிகளின் பின்னால் செல்லக்கூடியவர்கள் ஓரளவு இருப்பார்கள். தேசியக் கட்சி, மத்தியில் அதிகாரத்தை கைப்பற்றக்கூடிய கட்சி என்ற அளவில் இந்திய தேசியக் கருத்தியலில் நம்பிக்கை வைத்தவர்கள் காங்கிரஸை ஆதரிப்பார்கள். மதிமுகவுக்கு இப்படி தனித்துவம் வாய்ந்த எந்த குறிப்பிட்ட ஆதரவு தளமும் கிடையாது.

அப்படியென்றால் மதிமுகவின் ஆதரவாளர்கள் தாம் யார்? மதிமுகவின் நோக்கம் தான் என்ன? ஒட்டுமொத்தமாக தமிழர்களின் நலன்களுக்கு, உணர்வுகளுக்கு, உரிமைகளுக்கு பாடுபடுகிறோம் என்று சொல்லலாம். ஆனால் அப்படிச் சொல்ல ஏற்கனவே திமுக, அதிமுக என்ற இரண்டு வலுவான கட்சிகள் இருக்கும் நிலையில் மதிமுகவுக்கான தேவை என்ன? இவ்விரு கட்சிகளையும் பிடிக்காதவர்களே மதிமுக என்ற மூன்றாவது மாற்றைத் தேடிப்போவார்கள். ஆனால் மதிமுக மூன்றாவது மாற்றைக் கொடுக்காமல் திமுகவுடனோ அதிமுகவுடனோ கூட்டு சேர்வதால் அந்த வாதமும் அடிபட்டுப்போகிறது. ஆகவே இந்த இரண்டு கட்சிகளும் வலுவாக இருக்கும் வரை மதிமுகவுக்கு தேவை இருக்காது. இவற்றோடு மாறி மாறி கூட்டு சேர்வதால் வளரவும் முடியாது. இச்சூழ்நிலையிலேயே மதிமுகவில் சிலர் தனிப்பட்ட நலன்கள், விருப்பு வெறுப்புகளைப் பொறுத்து திமுகவுடனோ அதிமுகவுடனோ சேரவேண்டுமென்று சொல்கிறார்கள். இதில் எந்த முடிவு எடுத்தாலுமே, அதனால் பலன் பெற முடியாதவர்கள் அல்லது விரும்பாதவர்கள் விலகி அடுத்த பக்கம் போக நேரிடும். இரண்டு பக்கமும் சேராமல் தனியே செல்லலாம் என்றால் இன்னும் கணிசமானோர் விலகி இரண்டு கட்சிகளிலும் சேர்ந்துவிடலாம்.

வைகோவைத் தவிர பிற மூத்த தலைவர்களுக்கு, பெரிதாக கொள்கைப் பிடிப்பு (ஈழப்பிரச்சினை போன்றவற்றில்) இருப்பது போல் தெரியவில்லை. எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளே முக்கியம். அதற்காக யாரோடு கூட்டுவைத்தாலும் பரவாயில்லை. வைகோவின் மீது மதிப்பு வைத்திருந்தவர்கள் முதல் கட்டத்திலேயே அவருடன் வந்துவிட்டார்கள். தொடர்ந்து அவரால் திமுகவிலிருந்தோ, வேறு கட்சிகளிலிருந்தோ புதிதாக தொண்டர்களைக் கவரமுடியவில்லை. சில தேர்தல்களில் கூட்டணியை வைத்து சில வெற்றிகளை பெறமுடிந்திருந்தாலும் கட்சியின் வளர்ச்சியைப் பொறுத்தமட்டில் பத்தாண்டுகளாக தேக்க நிலையே நீடிக்கிறது. இப்படி ஒரு தேக்கநிலையில் வைகோவின், மதிமுகவின், எதிர்காலம் ஒரு பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது என்று நினைக்கிறேன். இச்சூழ்நிலையில் வைகோ தன்னுடைய நோக்கத்தை தெளிவாக்கிக்கொள்ள வேண்டும். தனக்கு பதவி தேவையில்லை, கொள்கைகளும், உலகளாவிய தமிழர்களின் நலன்களுமே முக்கியம் என்று நினைத்தால் தேர்தல் அரசியலுக்கு முழுக்குபோட்டு விட்டு திராவிடர் கழகம், தமிழர் தேசியக் கட்சி போன்ற ஏதாவதொன்றில் இணைந்து தன் இதயப்பூர்வமான கொள்கைகளுக்காக போராடலாம்.

பதவி முக்கியமென்றால் திமுக அல்லது அதிமுக என்று ஏதாவது ஒரு பெரிய கட்சியுடன் இணைந்து இரண்டாம் கட்ட பதவியை அனுபவிக்கலாம். கூட்டு வைத்துக்கொள்பவருக்கு கட்சியை இணைப்பது என்பது அவ்வளவு கடினமல்ல. முதலமைச்சர் பதவிதான் குறி என்றால் பத்தாண்டுகளாக வராத திமுக, அதிமுக தொண்டர்கள் இனிமேல் வந்து வைகோவை முதலமைச்சராக்கப் போவதில்லை. திமுகவின் பரம எதிரியான அதிமுகவோடு கூட்டு வைத்துக் கொள்ளத் தயாராக இருக்கும் வைகோவை திமுக தொண்டர்கள் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு திமுகவின் தலைவராக்கி அழகு பார்க்கப்போவதில்லை. அதற்கான காலக்கெடு முடிந்துவிட்டது என்றே நினைக்கிறேன். அதற்குள்ள ஒரே வழி கருணாநிதி, வைகோ இருவருமே கடந்த காலத்தை மறந்து, கட்சிகளை இணைத்து வைகோவுக்கு கட்சித் தலைவர் பதவி, ஸ்டாலினுக்கு ஆட்சி அதிகாரம் என்று வேலைப்பிரிவினை செய்துக்கொள்வதே. அதற்கு வைகோவும் சரி, கருணாநிதியும் (ஸ்டாலினும்) சரி தயாராக இல்லை என்பதே யதார்த்தம்.

- மு. சுந்தரமூர்த்தி ([email protected])




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com