Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
வடகிழக்கு மாநிலங்களின் வாழ்வுரிமைப் போராட்டம்

சுபவீ

‘ராணுவக் கிடங்குகளில்
இரைந்து கிடக்கின்றன
மலையினப் பெண்களின்
தசைத் துணுக்குகள்’

- யாழன் ஆதியின் கவிதை நம் நெஞ்சைச் சுடுகிறது. இந்தியாவின் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்கள் கடந்த பல ஆண்டுகளாய்ப் போராடிக் கொண்டுள்ளன.அங்கு வாழும் நான்கு கோடி மக்களின் கோபமும், குமுறலும் இன்று வரை சரியாய்ப் புரிந்து கொள்ளப்படவில்லை. அது ஒரு சமூகப் பொருளியல் சிக்கல் என்ற அடிப்படையில் அல்லாமல், வெறும் சட்டச் சிக்கலாக மட்டுமே நோக்கப்படுவதால், துப்பாக்கி முனையில் தீர்வைக் கொண்டுவந்துவிடலாம் என்று அரசுகள் கருதுகின்றன.

மூன்று மாதங்களுக்கு முன்பு மணிப்பூரில் வெடித்த மக்கள் போர், மீண்டும் அரசுகளைப் பேச்சு நடத்த அழைத்து வந்துள்ளன. தங்ஜம் மனோரமா தேவி என்னும் 32 வயதுப் பெண், இந்திய இராணுவத்தினரால், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலையும் செய்யப்பட்டு, பிணமாக நடுத்தெருவில் தூக்கியெறியப்பட்ட, 2004 சூலை 11இல் அங்கு நெருப்புப் பற்றியது.

கடந்த 40 ஆண்டுகளாக, அடக்கப்பட்ட விடுதலை உணர்வின் வெளிப்பாடாக அது அமைந்தது. சூலை 15ஆம் தேதி, இராணுவத் தலைமையகத்திற்கு முன்னால், ஏறத்தாழ 40 பெண்கள், தங்கள் ஆடைகள் அனைத்தையும் களைந்துவிட்டு, நிர்வாணமாய் நின்று, இந்திய இராணுவமே வா, எங்களையும் புணர், எங்கள் சதைகளைத் தின்று துப்பு, எங்களையும் கொலை செய்து நடுத்தெருவில் தூக்கி எறி என்று ஆவேச முழக்கமிட்டபோது, அதிர்ந்தது இராணுவம், அதிர்ந்தது இந்தியா!

இனிப் பொறுப்பதில்லை என்று மணிப்பூர் மக்கள் அனைவரையும் களத்திற்குக் கொண்டு வந்தது, அந்த நிகழ்வுதான். பெண்கள் களம் வந்தால்தான், போராட்டங்கள் உயிர்ப்படையும் என்பதற்கு மற்றுமொரு சான்றாய் நிற்கிறது மணிப்பூர்.
.....

மங்கோலிய இனச்சாயலையும், பல்வேறு மொழிகளையும், வேத, வைதீக, ஆரியப் பழக்க வழக்கங்களுக்கு முற்றிலும் மாறான பண்பாட்டையும் கொண்ட வடகிழக்கு மாநிலங்கள், 1948 தொடங்கி, ஒவ்வொன்றாய் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. அப்போதிருந்தே அங்கு தனிநாட்டுக் கோரிக்கையும், அதற்கான இயக்கங்களும் தொடங்கிவிட்டன.

அம்மக்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக, 1942ஆம் ஆண்டு வெள்ளையர்கள் கொண்டுவந்த கொடுங்கோன்மைச் சட்டத்திற்கு இணையாகப் பல சட்டங்களை இந்திய அரசு அறிவித்தது. 1955ஆம் ஆண்டின், அசாம் கலவரப்பகுதிகள் சட்டம், 1958ஆம் ஆண்டின், ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் முதலான பல ஒடுக்குமுறைச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. 1970ஆம் ஆண்டு, அச்சட்டத்தில் மேலும் பல கொடிய திருத்தங்கள் சேர்க்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, அச்சட்டங்களின் ஓரிரு பிரிவுகளைப் பார்க்கலாம்.

அசாம் கலவரப் பகுதிகள் சட்டத்தின், 4ஆம் பிரிவு, உதவி ஆய்வாளர் தரத்தில் உள்ளவரே துப்பாக்கிச் சூடு நடத்த ஆணையிடலாம் என்று அனுமதி அளிக்கிறது. அதனால் சாவு நிகழுமெனினும் சுடலாம் என்கிறது. எந்தக் குற்றத்திற்காகத் தெரியுமா? ஒருவர் தன் கையில் ஒரு ஆயுதத்தையோ, ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடிய ஒரு பொருளையோ எடுத்துச் செல்கையில் அவர் மீது சந்தேகம் எழுமானால் அவரைச் சுட்டுவிடலாம் என்று கூறுகிறது அந்தச் சட்டப் பிரிவு.

பொதுவாக, மாவட்ட ஆட்சியர், காவல்துறைக் கண்காணிப்பாளர் நிலையில் உள்ளவர்கள்தாம், சுடுவதற்கான ஆணையை இங்கு வழங்க முடியும். அது அங்கே உதவி ஆய்வாளர் நிலைக்கு இறக்கப்பட்டுள்ளது. ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடிய பொருள் என்னும் தொடர் எவ்வளவு பொத்தாம் பொதுவானது. கல்லைக் கூட ஒருவன் ஆயுதமாகப் பயன்படுத்த முடியுமே. அதற்காகக் கையில் கல்லை வைத்துள்ளவனைக் கூடச் சுட்டுவிடலாமா? என்ன நியாயம் அது?

இதைக் காட்டிலும் கொடுமையானது யாதெனில், அதுபோல் தவறாக நடவடிக்கை எடுத்த காவல் அதிகாரியின் மீது, மத்திய அரசிடம் முன் அனுமதி பெறாமல், ஒரு சாதாரண வழக்குக் கூடத் தொடுக்க இயலாது. இவையெல்லாம் சட்டப் புத்தகத்தில்தானே உள்ளன என்று எவரும் கருதிவிடக்கூடாது. பல நிகழ்வுகள் இக் கொடிய சட்டங்களை நடைமுறைப்படுத்தியமைக்குச் சான்றாக உள்ளன. இச்சட்டங்களை எதிர்த்தும், தன்னுரிமை கோரியும், பல்வேறு விதமான போராட்டங்கள் அங்கு நிகழ்ந்து வருகின்றன.

2000 நவம்பர் முதல் ஐரோம் சர்மிளா என்னும் பெண் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருகின்றார். காவல்துறையினர் அவரைக் கைது செய்த பின்பும், அவர் தன் போராட்டத்தைக் கைவிடவில்லை. இன்றுவரை குழாய் மூலம் கட்டாயமாகவே அவருக்கு உணவு புகட்டப்படுகின்றது.

2004 ஆகஸ்ட் 15 - கடந்த விடுதலை நாளன்று பேபம் சித்தார்த்தன் என்னும் கல்லூரி மாணவர் இம்பாலில் தீக்குளித்து இறந்தே போனார். இப்போது 32 அமைப்புகள் இணைந்து, அபும்பா லுப் என்னும் போராட்டக் கூட்டமைப்பு ஒன்றை அங்கு உருவாக்கியுள்ளனர். அக்கூட்டமைப்புடன் 06.09.2004 அன்று, இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல் நடத்திய பேச்சு, தோல்வியில் முடிந்தது. ஏனெனில், இராணுவத்தில் உள்ளவர்கள், எந்தக் கட்டுக்குள்ளும் வருவதில்லை.

அவர்களால் கொன்று எறியப்பட்ட தங்ஜம் மனோரமாதேவியின் கொலை பற்றி உண்மை அறிய, நீதிபதி உபேந்திரா தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. ஆனால் அந்த ஆணையத்தின் அழைப்பாணையை, இந்திய இராணுவத்தினர் மதிக்கவே இல்லை. ஒரு முறை அன்று, மூன்று முறை அழைப்பு அனுப்பியும், அந்தக் குழுவின் முன் சென்று அவர்கள் நிற்கவே இல்லை. அரசும் இதுவரை அதற்காக நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

மாறாக, நிர்வாண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட, 32 பேரைக் கைது செய்து, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்ச் சிறையில் அடைத்துள்ளனர். அபும்பா லுப் அமைப்பின் மீது தடைச்சட்டம் கொண்டு வரவேண்டும் என்ற கருத்தையும் உளவுத்துறை அரசுக்கு வழங்கிக் கொண்டுள்ளது. அங்கு நிலைமை பாழடைந்ததற்கு, இந்திய உளவுத் துறையும் ஒரு முகாமையான காரணம், அசாமிகளுக்கு எதிராக நாகர்களை, நாகர்களுக்கு எதிராக மணிப்பூரிகளைத் தூண்டி விடுவதில் அவை கவனமாக இருந்தன. சில வேளைகளில், அதில் வெற்றியும் பெற்றன.

தாய்லாந்தில் இருந்த, நாகாலாந்து தேசிய சோசலிசச் சங்கத்தின் தலைவரான ஐசக் மூயிவாவை, மத்திய அரசின் சார்பில் கே. பத்மநாபய்யா பத்துக்கும் கூடுதலான முறை நேரில் சென்று சந்தித்துப் பேசினார். பிறகு, அன்று தலைமை அமைச்சராக இருந்த வாஜ்பேயியே அவரைச் சந்தித்தார். போர் நிறுத்தம் உடன்பாடாகியது. மணிப்பூருக்கும் சேர்த்து அவர்கள் உடன்பாடு பேசியதால், மணிப்பூர் மக்கள் வெகுண்டு எழுந்தனர். 2000 சூன் 18இல் 50,000க்கும் மேற்பட்ட மக்கள் ஊர்வலமாகச் சென்றனர். மணிப்பூர் சட்டசபை எரியூட்டப்பட்டது.

காவல்துறை துப்பாக்கியால் சுட்டபோது, 18 பேர் உயிரிழந்தனர். இறுதியாக, சூலை மாத இறுதியில், ஒப்பந்தம் நாகாலாந்துக்கு மட்டும்தான் என்று வாஜ்பேயி அறிவித்த பிறகு, போராட்டம் ஓய்ந்தது. முதலில் நாகர், மணிப்பூரிகள் மோதலாக அது எழுந்தாலும், பிறகு அது அடங்கி விட்டது. அண்மையில் மணிப்பூர் மாணவர் சங்கமும், நாகா தேசிய மாணவர் இயக்கமும் இணைந்தே பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. அவற்றுள் முகாமையான ஒன்று, செப்டம்பர் 21 முதல் எல்லாவிதமான இந்திப் பாடப் புத்தகங்களுக்கும் தடை என்பதாகும்.

1965இல் தமிழக மாணவர்கள் இந்தி எதிர்ப்புப் போரில் இறங்கினர். இன்று அதனை வடகிழக்கு மாநில மாணவர்கள் கையில் எடுத்துள்ளனர். அசாமைப் பொறுத்தவரை உல்பா ஒரு தீர்ந்து போன சக்தி என்று கூறிக் கொண்டிருந்தனர். ஆனால் உல்பா இயக்கத்தினரும், போடோ தேசிய விடுதலை இயக்கத்தினரும் இணைந்து அண்மையில் நடத்திய ஒரு நடவடிக்கையில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன. 72 மணி நேரத்திற்குள், அடுத்தடுத்து நடந்த வெடிவிபத்துகளில் 70 பேர் மாண்டு போயினர். இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

எனினும் திமாப்பூர் பகுதியில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குத் தாங்கள் பொறுப்பில்லை என்று இரு அமைப்புகளும் அறிவித்துள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் - போராட்டம் தொடர்கதையாய் உள்ளது. தீர்வு தொடுவானமாய் நீள்கிறது. மீண்டும் சொல்கிறோம். அங்கு நடப்பவைகளைச் சட்ட ஒழுங்குச் சிக்கலாகப் பார்க்காமல், சமூகப் பொருளியல் சிக்கலாய்ப் பார்க்கும் வரை, தீர்வு ஏற்பட வாய்ப்பில்லை.

(இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்)



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com