Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
ஒரு புத்தகமும் ஒரு திரைப்படமும்
சுபவீ

உயிரி மருத்துவப் பொறியியல் துறைப் பேராசிரியரான ராம் புனியானி, மதவாதம் பற்றிய ஓர் ஆங்கில நூலை அண்மையில் வெளியிட்டுள்ளார். வங்காளத்தைச் சார்ந்த சக்ரவர்த்தி ‘கோத்ரா வரை' என்னும் விவரணப் படத்தை உருவாக்கியுள்ளார். இரண்டின் மையப்பொருளும் ஒன்றாக உள்ளது என்பது மட்டுமல்லாமல் அவை வெளியிடும் உண்மைகளும் ஒன்றாகவே உள்ளன.

கோத்ரா தொடர்வண்டி நிலையத்தில் என்ன நடந்தது என்பதைப் பல்வேறு சான்றுகளுடன், கோத்ரா வரை திரைப்படம் நமக்கு விளக்கிச் சொல்கிறது. 2002 பிப்ரவரி 7ஆம் தேதி கோத்ரா வந்த சேர்ந்த சபர்மதி விரைவு வண்டியின் எஸ் 6 பெட்டி கொளுத்தப்பட்டதும், அதனைத் தொடர்ந்து குசராத் எங்கும் இசுலாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டதும் நாம் அறிந்த செய்திகள். அயோத்தியில் ராமர் பூசை செய்து முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த கரசேவகர்கள் அந்தப் பெட்டியில் இருந்ததாகவும், அவர்களை இசுலாமியர்கள் தீ வைத்துக் கொளுத்தியதாலேயே குசராத்தில் கலவரம் மூண்டதாகவும் சங்பரிவாரங்கள் நாடெங்கும் செய்தி பரப்பின. அதனை ஊடகங்களும் ஊதிப்பெருக்கின. பழிக்குப் பழி வாங்கியது போன்ற கருத்து பரப்பப்பட்டது.

சில நாள்களிலேயே உண்மை கசியத் தொடங்கிற்று. அதன் வேர்களைக் கண்டறிந்து முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவதில் சக்ரவர்த்தியின் திரைப்படம் பெரும்பணி ஆற்றி உள்ளது. அயோத்தியில் புறப்பட்டதிலிருந்து ஒவ்வொரு தொடர்வண்டி நிலையத்திலும் கரசேவகர்கள் நடத்திய அடாவடித்தனங்களையும், இறுதியாக கோத்ராவில் நடைபெற்ற கொடூரத்தையும் சக்ரவர்த்தி நமக்கு விளக்கி உள்ளார்.

கோத்ரா நிலையத்தில் ஒரு சிறு கடை வைத்திருந்த இசுலாமியர் ஒருவரிடமும், அவர் மகளிடமும் இந்துத்துவா வெறியர்கள் தகாத முறையில் நடந்து கொண்டு கலவரத்தைத் தொடக்கி வைத்துள்ளனர். பிறகு எஸ்-6 பெட்டிக்குள் இருந்த கரசேவகர்கள் அப்பெட்டிக்கு உள்ளிருந்தே தீ வைத்து விட்டு வேறுபெட்டிகளுக்கு ஓடியுள்ளனர். அப்பெட்டிக்குள் இருந்த விவரமறியாத பொதுமக்கள் பலர் செத்துமடிய, கரசேவகர்கள் இசுலாமியர்களால் கொல்லப்பட்டு விட்டதாகப் பொய்ச்செய்தியைத் திட்டமிட்டே பரப்பி உள்ளனர். அந்த வதந்தீ காட்டுத்தீப்போல் பரவி குசராத் எங்கும் கலவரம் மூண்டுள்ளது.

மேலே உள்ள செய்திகளை எல்லாம் ஆதாரங்களோடு படம் விளக்குகிறது. வெளியிலிருந்து இசுலாமியர்கள் வண்டிக்குத் தீ வைத்தனர் என்று சங்பரிவாரங்கள் கூறுகின்றன. ஆனால், படத்தில் பேட்டியளித்திருக்கும் தடயவியல் துறை இயக்குநர், இரண்டு பெட்டிகளை இணைக்கும் (வெஸ்ட் புல்) துணிப்பகுதி உட்பக்கமே கூடுதலாக எரிந்து போயிருப்பதை விளக்குகின்றார். உள்ளிருந்து தான் நெருப்பு வைக்கப்பட்டுள்ளது என்பது இதன்மூலம் உறுதியாகின்றது. மேலும் சாதாரணக் கன்னெய்க்குப் (பெட்ரோல்) பதிலாக, வேதியியல் பொருட்கள் கலந்த, தனியாகத் தயாரிக்கப்பட்ட எரிபொருள் திரவம் ஒன்று பயன்படுத்தப்பட்டிருப்பதையும் இயக்குநர் விளக்குகின்றார். எனவே கோத்ரா தொடர்வண்டி எரிப்பு, ஒரு திட்டமிட்ட சதி நாடகம் என்பது நமக்குப் புலனாகிறது.

இத்திரைப்படத்தை வெளியிடுவதற்காக காந்தி நகர் சென்றிருந்தபோது, குசராத்தின் மதவெறியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, படத்தைத் திரையிடவும் விடாமல் கலகம் செய்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சி செய்யும் கேரளாவிலும் இப் படத்தைத் திரையிட இயலவில்லை. தில்லியிலும், சென்னையிலும்தான் படத்தை மக்கள் பார்க்க முடிந்தது.

ராம் புனியானி எழுதியிருக்கும் மதவாதம் நூல், பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகளை விளக்குகிறது. கோத்ரா தொடர்வண்டி எரிப்புப் பற்றியும் நூலின் ஓர் இயல் பேசுகின்றது. சக்ரவர்த்தியும், ராம் புனியானியும் கோத்ராவைப் பொறுத்த வரையில் ஒரே முடிவுக்குத்தான் வந்துள்ளனர். புனியானியின் புத்தகம், இசுலாமிய மத அடிப்படைவாதத்தையும் சேர்த்தே விமர்சிக்கிறது. எனினும் இந்துத்துவ மத அடிப்படைவாதமே பல கலவரங்களுக்கு அடித்தளமாக இருப்பதைச் சுட்டிக்காட்ட தவறவில்லை. பாரதிய சனதா கட்சியின் இரட்டை முகத்தையும் இந்நூல் தோலுரித்துக் காட்டுகின்றது.

பா.ச.க. தலைவர்களில் ‘மிகவும் நல்லவர்' என்று கூறப்படும் வாஜ்பாய், அயோத்தி மசூதி இடிப்பில் எத்தனை முகம் காட்டினார் என்பதை அவர் சொற்களின் மூலமே இந்நூல் நிறுவுகின்றது. 1992 டிசம்பர் 7ஆம் தேதியன்று, நடந்த நிகழ்ச்சிக்காக நாங்கள் தேசமக்களிடம் வருத்தம் தெரிவிக்கிறோம் என்று கூறிய வாஜ்பாய், அடுத்த வாரமே, அந்த நிகழ்ச்சி கடவுளின் சித்தம் என்று தன் கருத்தை மாற்றிக் கொண்டார். ஒரு மாதத்திற்குப் பிறகு, பெரும்பான்மை மதத்தவரின் உணர்வுகள் மதிக்கப்படவில்லை என்றால், இது போன்ற நிகழ்வுகள்தான் நடைபெறும் என்று அவரே கூறியபோது, அந்த நல்லவரின் முகம் நாட்டுக்குப் புலப்பட்டது. இச்செய்திகள் அனைத்தையும் இந்நூல் தெளிவாக விளக்கி உள்ளது.

காந்தியாரின் படுகொலை, அதில் சாவர்க்கரின் பங்கு போன்றவையும் நூலில் விளக்கப்பட்டுள்ளது. 1925 மே 9ஆம் நாளிட்டு, பம்பாய் அரசின் உள்துறை அமைச்சகத் துணைச் செயலாளர் டி.ஓ. பிளின் என்பவருக்குச் சாவர்க்கர் எழுதியுள்ள சரணாகதிக் கடிதத்தின் உண்மை நகலையும் இந்நூலில் ராம் புனியானி வெளியிட்டுள்ளார்.

இன்றைக்குத் தங்களின் முன்னோடியாக இந்துத்துவவாதிகள் காட்டும் வீரசிவாஜியின் மதச்சார்பற்ற போக்கிற்கு சில எடுத்துக்காட்டுகளையும் இந்நூல் தருகின்றது. சிவாஜி படையணியின் தலைமைத் தளபதியாக இருந்தவர்கள் தெளலத்கான், சித்திமிஸ்ரி என்னும் இரு இசுலாமியர்களே என்பதையும், சிவாஜியின் மிகுந்த நம்பிக்கைக்குரிய தனிச்செயலராக இருந்தவர் முல்லாஹைதர் என்னும் இசுலாமியர் என்பதையும் நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். மேலும், தன் அரண்மனைக்கு எதிராக இருந்த, தான் வணங்கும் செகதீஸ்வரர் ஆலயத்திற்கு வலதுபுறமாக, இசுலாமியர்கள் வழங்குவதற்குரிய சிறப்பு மசூதி ஒன்றினையும் சிவாஜி கட்டியெழுப்பியதை நூல் நினைவு கூர்கிறது.

ஆரியர்களே இந்தியாவின் தொல்குடி மக்கள், கத்தி முனையில்தான் இசுலாம் பரப்பப்பட்டது, தீண்டாமை என்பது கூட இசுலாத்தின் உருவாக்கம், இசுலாமிய அரசர்கள் இந்துக் கோயில்களை இடித்து நாசமாக்கினார்கள் என்பன போன்ற பல மாயைகளுக்கு இந்நூல் சரியான விளக்கங்களைத் தருகிறது. இந்து மதத்தின் கடுமையான எதிரியாகக் காட்டப்படும் ஒளரங்கசீப், இந்து மதம் உள்ளிட்ட பல்வேறு மதங்களுக்கும் கோயில்களுக்கும் என்னென்ன உதவிகளைச் செய்துள்ளார் என்னும் புள்ளி விவரங்களும் இந்நூலில் உள்ளன. இடையிடையே நல்ல கவிதைகள், சிரிக்கவைத்துச் சிந்திக்கத் தூண்டும் கேலிப்படங்கள் என நூல் நேர்த்தியாகத் தொகுக்கப்பட்டுள்ளது. சனநாயக சக்திகளாக விளங்கும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது, பார்க்க வேண்டிய படம் அது.

(இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்)



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com