Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
இந்தியாவில் 96 ஆயிரம் கோடி வாராக் கடன்
அய்யோ பாவம்... கடன் கட்டமுடியாத ஏழைகள்
சுபவீ

"கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்பார் கம்பர். இப்போதும் ஏழை மக்களும், நடுத்தட்டு மக்களும் கலங்கத்தான் செய்கின்றனர். ஆனால் மிகப்பெரிய தொழிலதிபர்களும், அவர்களின் தொழில் நிறுவனங்களும் வாங்கிய கடனைக் கட்டுவதும் இல்லை, அதுகுறித்துக் கவலை கொள்வதும் இல்லை.

அரசு வங்கிகளில் குவிந்து கிடக்கும் பணம் என்பது, பொது மக்களின் பணம். சிட்டுக்குருவிகளாய்ச் சேமித்து, சீட்டுக் கம்பெனிகளில் தொலைத்துவிடும் அவர்கள், வட்டி குறைவாக இருந்தாலும் தாழ்வில்லை எனக் கருதி அரசு வங்கிகளில் தங்கள் பணத்தைச் செலுத்துகின்றனர். பாதுகாப்பும், பத்திரமுமே அவர்களின் நோக்கமாக உள்ளது. ஆனால் பணம் பெறும் வங்கிகளோ, அப்பணத்தைக் கடனாகக் கொடுக்கின்றன. அவற்றை ஒழுங்காக திரும்பவும் மீட்பதில் கவனம் செலுத்துவதில்லை. சட்டப் புத்தகத்தின் சந்துபொந்துகளுக்குள் புகுந்து கொண்டு, வாங்கிய கடனைத் திரும்பக் கட்டாமல் இருப்பதற்கு வழிவகை செய்துகொள்கிறது பணக்காரக் கூட்டம்.

கடன் பெற்றுத் திரும்பச் செலுத்தாதவர்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட வேண்டும் என்று அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கம் வேண்டுகோள் வைத்துள்ளது. ஆனால் ரிசர்வ் வங்கி அவ்வாறு செய்வதில்லை. பணக்காரர்களின் கேடயமாகவே அது செயல்படுகின்றது. இப்போது ஊழியர் சங்கமே அப்பட்டியலை வெளியிட்டுள்ளது. அதனைக் கண்ணுற்ற எவரும் அதிர்ச்சியடையாமல் இருக்க முடியாது.

இந்தியா முழுவதிலும் வங்கிகளுக்கு வாராக்கடனாக உள்ள தொகை 2003 - 2004 ஆம் ஆண்டில் மட்டும் ரூபாய் 96,084 கோடியாகும். 96ஆயிரம் கோடிக்கு எத்தனை சுழிகள் (சைபர்) உண்டென்பது கூடத் தெரியாத மக்கள் கோடிக்கணக்கில் வாழும் நாட்டில் இத்தனை பெரிய ஊழலை எப்படி மன்னிப்பது?

96 ஆயிரம் கோடியில் 10,755 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் மட்டும் வாராக்கடனாகும். இத்தனை ஆயிரம் கோடி ரூபாயும், விரல் விட்டு எண்ணக்கூடிய சில பணக்காரர்களிடமே சென்று சேர்ந்துள்ளது என்பது மிகப்பெரும் கொடுமையாகும். எடுத்துக்காட்டாக சில புள்ளிவிவரங்களை நாம் பார்க்கலாம். பிபிஎல் நிறுவனம் கட்ட வேண்டிய கடன் பாக்கி 105 கோடி ரூபாய். தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் 117 கோடி ரூபாய் கடன் வைத்துள்ளார். மிகவும் ஏழைப்பட்டவர்களான பொள்ளாச்சி மகாலிங்கத்தின் சர்க்கரை ஆலை 37 கோடி ரூபாயும், ஏ.சி.முத்தையாவின் கெமிக்கல் நிறுவனம் 151 கோடி ரூபாயும் கடனாக வைத்துள்ளன. இவர்களைப் போன்ற ஏழைகள் சிலரைத் துன்பப்படுத்த வேண்டாம் என்ற நோக்கில் வங்கிகள் ஏற்கனவே 11,074 கோடியைத் தள்ளுபடி செய்துவிட்டன.

எண்ணிப்பாருங்கள் பொதுமக்களே... நம்மைப் போன்றவர்கள் 100 ரூபாய், 200 ரூபாய் மின்சாரக் கட்டணத்தைக் கட்டவில்லை என்றால், இருளில் தவிக்கவிடுகின்றன நம் அரசுகள். தொலைபேசிக் கட்டணம் கட்டாவிட்டால், தொடர்பு உடனே துண்டிக்கப்பபடுகிறது. ஆனால் ஆயிரம் கோடிகளில் கடன் பாக்கி வைத்திருப்போர் அரசாங்கத்தின் செல்லப் பிள்ளைகளாக உல்லாசக் கார்களில் உலா வருகின்றனர். வாராக்கடன்களை வரவைத்துவிட்டாலே, ஏழை மக்கள் மீது ஏறி ஆடுகிற வரித்தொகையில் பெரும்பங்கைக் கட்டுப்படுத்தி விடலாம். மேலும் நாட்டின் மேம்பாட்டிற்கும் பல செயல்களைச் செய்து முடிக்கலாம்.

கடனைத் திருப்பாத நிறுவனங்களின் சொத்துகளை முடக்கி விடலாம் என்று சட்டம் உள்ளது. நடைமுறையில் அந்தச் சட்டம் எப்போவதுதான் பயன்படுத்தப்படுகிறது. அதனைச் சரியாகவும், உடனுக்குடனும் பயன்படுத்த அரசுகள் முன்வரவேண்டும். அதுமட்டுமல்லாமல் அத்தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்குத் தொடுக்கவும் வழி செய்யப்படவேண்டும். வங்கிக்கடன்களைக் கட்டாதவர்களின் பட்டியலை ரிசர்வ் வங்கி உடனே வெளியிட வேண்டும். அவர்கள் தேர்தலில் போட்டியிடவோ, கவுரவப் பதவிகளை வகிக்கவோ தடை செய்ய வேண்டும். எல்லாவற்றைக் காட்டிலும், சொரணை உள்ள மக்கள் கூட்டம் கொதித்தெழுந்து நியாயம் கேட்க வேண்டும்.

-சூலை 16, 2005

(இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்)



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com