Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
‘ஜெய் பரசுராம்' - மாயாவதியின் திடீர்க் கூச்சல்
சுபவீ

உத்தரபிரதேசத்தில், கன்சிராமால் தொடங்கப்பட்ட கட்சியைப் பரசுராமிடம் கொண்டு போய்ச் சேர்த்துள்ளார் மாயாவதி. சாதிகளும், மதங்களுமே உ.பி. அரசியலைத் தீர்மானிக்கின்றன என்னும் நிலை இப்போது அங்கு உறுதிப்பட்டுள்ளது.

பார்ப்பனர்களின் வாக்குகள் பாரதிய சனதாவிற்கும், ஒடுக்கப்பட்டோர் மற்றும் இசுலாமியர்களின் வாக்குகள் காங்கிரசிற்கும், பிற்படுத்தப்பட்டோரின் வாக்குகள் முலாயம் சிங் யாதவிற்கும் என்று முடிவாகியிருந்த உ.பி. அரசியலில், கன்சிராம் நுழைவிற்குப் பிறகு மாற்றங்கள் நிகழ்ந்தன. ஒடுக்கப்பட்டோரைத் தன்வசம் ஈர்த்துக் கொண்ட கன்சிராமின் பகுசன் சமாஜ் கட்சி ஒரு பெரிய சக்தியாக உருவெடுத்தது. உ.பி. எல்லைகளைத் தாண்டி பிற மாநிலங்களிலும் அது மெல்ல மெல்லச் செல்வாக்குப் பெறத் தொடங்கியது.

மாயாவதியும் ஒடுக்கப்பட்டோரின் அரசியல் தலைவியாகவே அரங்கில் நுழைந்தார். பார்ப்பன - பனியா கும்பல்களைச் செருப்பால் அடித்து விரட்டுவோம் என்னும் அளவிற்கு ஆவேசமான முழக்கங்களை முன்வைத்தார். அவர் முதலமைச்சராக இருந்த போதுதான் தந்தை பெரியாருக்கு அங்கே விழா எடுக்கப்பட்டது. எழுச்சி மிக்க இந்தியத் தலைவியாக அவர் உருவெடுப்பார் என்று முற்போக்குச் சிந்தனையாளர்கள் கருதினர். எல்லோருடைய எதிர்பார்ப்புகளையும் இடித்துத் தகர்த்துவிட்டு இன்று அவர் பார்ப்பனர்களோடு கைகோத்துக் கொண்டிருக்கிறார்.

ஒடுக்கப்பட்டோர், இசுலாமியர், பார்ப்பனர் என மூன்று தரப்பாரையும் ஓரணிக்குள் கொண்டு வந்தால்தான் தான் மீண்டும் முதலமைச்சர் பதவியில் அமர முடியும் என்பது அவருடைய அரசியல் கணக்காகத் தெரிகிறது. அதற்காகவே பார்ப்பனர் ஒருவரைத் தன் கட்சியின் பொதுச் செயலாளராக ஆக்கியிருக்கும் மாயாவதி, பரசுராம் ஜெயந்தி விழா ஒன்றையும் நடத்தியிருக்கிறார்.

சத்திரியர்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் இடையே நடைபெற்ற அதிகாரப் போட்டியில், ஆயுதமேந்திய பார்ப்பனனாகப் பரசுராமன் வடிவமைக்கப்படுகிறான். சத்திரியர்களைப் போர் நடத்தி வீழ்த்திக் காட்டியவனாக பரசுராமன் பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. அவனுக்குப் பிறந்த நாள் விழா எடுத்து, ஜெய் பரசுராம் என்று முழக்கமிட்டுள்ளார் மாயாவதி. அண்ணல் அம்பேத்கரை இதைக் காட்டிலும் கூடுதலாக வேறு எவரும் அவமதித்துவிட முடியாது. எந்த நோக்கத்திற்காக ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று அம்பேத்கர் ஆசைப்பட்டாரோ, அந்த நோக்கத்தை அதே மக்களைக் கொண்டு வெட்டிச் சாய்த்து விட விரைந்து புறப்பட்டிருக்கிறார் மாயாவதி.

உ.பி.யின் பல்வேறு பகுதிகளிலும் பரசுராம் ஜெயந்தி கொண்டாடப்பட்டுள்ளது. 50 ஆவது விழாவாக உ.பி.யின் தலைநகரத்தில் ஒரு பெரும் விழாவை அவர் முன்னெடுத்திருக்கிறார். அந்த விழாவிற்கு மாயாவதி வரும்போது, பார்ப்பனர்கள் வரிசையாக நின்று அவரை வரவேற்றிருக்கிறார்கள். தங்கள் வலையில் விழுந்துவிட்ட மானை அந்தப் பார்ப்பனர்கள் ஆரவாரத்தோடு அள்ளிச் செரித்திருக்கிறார்கள்.

என்றைக்கு மாயாவதி வாக்கு அரசியலுக்காகப் பாரதிய சனதா கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தாரோ அன்றைக்கே அவருடைய வீழ்ச்சி தொடங்கிவிட்டது. மாயாவதிக்கு மட்டுமல்ல, பா.ச.க. வுடன் கூட்டுச்சேர்ந்த பல கட்சிகளின் நிலையும் அவ்வாறுதான் உள்ளது. மேற்கு வங்கத்தில் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த திரிணாமுல் காங்கிரஸ், பா.ச.க. கூட்டணிக்கு வந்ததற்குப் பிறகு நாளொரு மேனியாய்த் தேய்ந்து கொண்டிருக்கிறது. பஞ்சாப்பில் அகலிதளம், அரியானாவில் செளதாலா கட்சி, காஷ்மீரத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி, அசாமில் அசாம் கண பரிசத் என்று பல கட்சிகள் தங்கள் வாழ்வையும் வலிவையும் இழந்து கொண்டிருக்கின்றன. ஒரிசாவில் பிசுபட் நாயக்கின் நிலையும் இன்று மோசமாகிக் கொண்டு இருக்கிறது.

இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்ற எண்ணத்தில்தான் ஆந்திராவின் தெலுங்கு தேசம் மெதுவாக வெளியே வந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் பா.ச.க.வோடு ஏற்பட்ட கூட்டை விட்டு வெளியேறி விட்டன என்றாலும், அவர்களின் அரசியல் வரலாற்றிலும் அது அழிக்க முடியாத கறையாகவே உள்ளது.

அந்தக் கட்சியோடு கூட்டுச் சேருவதைக் காட்டிலும் இழிவானது அவர்களின் கொள்கையோடு கூட்டுச் சேருவது. அதைத் தான் மாயாவதி இப்போது செய்திருக்கிறார். பரசுராமனுக்கு விழா எடுக்கும் மாயாவதி, பா.ச.க.வினர் அம்பேத்கருக்கு விழா எடுப்பார்களா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அது மட்டுமல்லாமல், பரசுராமனை அரவணைத்துக் கொண்ட காரணத்திற்காகவே பார்ப்பனர்கள் தங்களுக்கு வாக்களித்து விடுவார்கள் என்று மாயாவதி எண்ணுவதும் அவருடைய அரசியல் முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது. பரசுராமனால் மாயாவதிக்கு வாக்குகள் வரப்போவதில்லை. இழிவும், ஏளனமும், எடுத்தெறிந்து போடப்படுகின்ற நிலையும்தான் வரப்போகின்றன.

-சூலை 1, 2005

(இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்)



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com