Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
தமிழ்ப்படம் - ஆங்கிலப் பெயர்: அண்ணாவின் கொள்கையா?
சுபவீ

தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆங்கிலப் பெயர் சூட்டுவது தொடர்பான வாதங்கள் கொதிநிலையை எட்டியுள்ளது. தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கைக்குப் பிறகு, அது இன்னொரு புதிய இடத்தைத் தொட்டுள்ளது. முதலமைச்சரின் அறிக்கை, ஆங்கிலத்தில் பெயர் வைப்பது அண்ணாவின் இரு மொழிக் கொள்கைக்கு ஏற்றதே என்று கூறுகிறது.

அண்ணாவின் பெயரால் கட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஜெயலலிதா, அண்ணாவின் மொழிக் கொள்கையை இவ்வளவு மலினப்படுத்தலாமா, இப்படிக் கொச்சைப்படுத்தலாமா என்று கேட்க வேண்டியுள்ளது. அண்ணாவின் மொழிக் கொள்கை என்ன என்பதை, "தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்'', "தமிழரின் மறுமலர்ச்சி'', "மாணவருக்கு அண்ணா'', "அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்'' முதலான அவருடைய பல நூல்கள் நமக்கு விளக்குகின்றன. முன்னாள் துணைவேந்தர் அ.இராமசாமியின் "அண்ணாவின் மொழிக் கொள்கை'', முனைவர் சக்கரவர்த்தியின் "அண்ணாவின் விடுதலைச் சிந்தனைகள்'' ஆகிய ஆய்வேடுகளில், அவரது மொழிக் கொள்கை மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

எந்த நூலிலும், எந்த ஆய்வேட்டிலும், தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆங்கிலப் பெயர் வைப்பதற்கு அண்ணாவின் கொள்கை ஆதரவு தெரிவிப்பதாக நம் சிற்றறிவுக்கு எட்டவில்லை. ஆனால், அண்ணா உறுப்பினராக இருந்த அதே நாடாளுமன்ற மேலவையில் இன்று உறுப்பினராக இருக்கும், ‘பன்மொழிப் புலவரான' எஸ்.எஸ். சந்திரன், ‘சைக்கிள்' என்னும் ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் சொல்லே இல்லை என்பது போல அறிக்கை விட்டிருக்கிறார்.

இதே ‘சைக்கிள்' குறித்த அண்ணா எழுதியுள்ள வரிகள் இப்போது நம் நினைவுக்கு வருகின்றன. "பிறமொழியில் இருக்கும் எந்தச் சொல்லையும் தமிழாக்கி, அதாவது ஆங்கிலச் சொல்லையோ, சமசுகிருதச் சொல்லையோ அப்படியே தமிழில் உச்சரிக்காமல், அச்சொற்களை எல்லாம் தமிழில் ஆக்கிக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, ‘சைக்கிள்' என்னும் ஆங்கிலச் சொல்லை ‘ஈருருளி' என்றும், ‘பிரத்யட்சம்' என்ற சமசுகிருதச் சொல்லை ‘கண்கூடு' என்றும் வழங்கலாம்'' என்கின்றார் அண்ணா (‘மாணவர்க்கு அண்ணா')

அண்ணாவிற்கு முன்பு ‘துவிச் சக்கர வண்டி' என்றும், அவர் காலத்தில் ‘ஈருருளி' என்றும் அறியப்பட்ட ‘சைக்கிள்', இன்று மிக எளிமையாய் ‘மிதிவண்டி' ஆகி உள்ளதை நாம் அறிவோம். அதை அறிந்து கொள்ள எஸ்.எஸ்.சந்திரன் போன்றவர்களுக்கு நேரமோ, ‘நிதானமோ' இல்லாமல் போயிருக்கலாம். அது குறித்து நாம் கவலைப்படவில்லை. ஆனால் தமிழகத்தின் முதலமைச்சராக உள்ள ஜெயலலிதாவிற்கும் நேரம் இல்லாமல் போகலாமா?

அறிஞர் அண்ணாவின் மொழிக்கொள்கை பற்றி அறிய, ஆயிரம் புத்தகங்களைப் படிக்க வேண்டியதில்லை. 1963 மே 2ஆம் நாள், இந்திய நாடாளுமன்ற மேலவையிலும், 1968 சனவரி 23ஆம் நாள், தமிழகச் சட்டமன்றத்திலும் அவர் ஆற்றியுள்ள இரண்டு உரைகளை மட்டுமே படித்தால் போதுமானது. அதிலும் குறிப்பாக, 23.01.68 அன்று, இருமொழிக் கொள்கையை முன் மொழிந்து, ஒருநாள் முழுவதும், சட்டமன்றத்தில் அவர் நிகழ்த்தியுள்ள உரைகளும், வாதங்களும் மொழி பற்றிய அவருடைய உள்ளக் கிடக்கையை நமக்குத் தெளிவாக விளக்கிக் காட்டும்.

மும்மொழித் திட்டத்திற்கு மாற்றாக, இரு மொழிக் கொள்கையை அன்று அவர் முன்மொழிந்தார். இரண்டே இரண்டு நோக்கங்களுக்காகத்தான், தமிழுடன் ஆங்கிலம் சேர்ந்த இரு மொழிக் கொள்கையை அவர் கொண்டு வருகின்றார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் புதிய தகவல்களை அறிந்து கொள்வதற்கும், இந்தியாவின் பிற மாநிலங்களோடும், மத்திய அரசோடும், உலக நாடுகளோடும் தொடர்பு கொள்வதற்கும் ஆங்கிலம் தேவை என்பதே அண்ணாவின் கருத்து.

மற்றபடி, "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்'' என்பதே அண்ணாவின் மொழிக்கொள்கை என்பதை ஜெயலலிதா மட்டுமல்லாமல், சரத்குமார், நெப்போலியன் போன்ற தி.மு.க. நடிகர்களும் தெரிந்து கொள்வது நல்லது. ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்னும் கொள்கை இன்று, ‘எங்கே தமிழ், எதிலே தமிழ்?' என்று கேட்கும் நிலைக்கு ஆளாகி விட்டது உண்மைதான். தமிழ்வழிக் கல்வியை அண்ணா ஆதரித்தார். ஆனால் இன்று ஆங்கிலப் பள்ளிகளே கள்ளிச் செடிகளாய் மண்டிக் கிடக்கின்றன. வெள்ளைக்காரரின் ஆட்சிக் காலத்தைக் காட்டிலும் கூடுதலாகத் திராவிட இயக்கங்களின் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலம் கொடிகட்டிப் பறக்கின்றது. ஆனால் இதற்கெல்லாம் அண்ணாவைப் பொறுப்பாக்க முடியாது. ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்பதே அவரது மொழிக் கொள்கை என்பதற்கு ஆயிரம் சான்றுகள் உள்ளன.

"நானும், தி.மு.கழகமும் ஆங்கிலத்திடம் பெரும்பற்றுக் கொண்டிருப்பதாக எண்ண வேண்டாம்'' என்று கூறும் அண்ணா, "நான் ஆங்கிலத்திற்காக வாதாடுகிறேன், ஆங்கிலத்திற்காகப் பேசுகிறேன் என்றால், என்னுடைய தாய்மொழியை விட, ஆங்கிலத்திற்கு உயர்ந்த இடம் கொடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல: அது மிகவும் வசதியான கருவி என்பதாலும், உள்நாட்டில் மட்டுமல்லாமல், உலக நாடுகளோடும் தொடர்பு கொள்வதற்கு அது உதவும் என்பதாலும்தான்'' என்று, எந்தக் குழப்பத்திற்கும் இடமில்லாமல் தன் மொழிக் கொள்கையை விளக்குகின்றார்.

கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, நீதிமன்ற மொழியாக எல்லா இடங்களிலும் தமிழே இருக்க வேண்டும் என்று பலமுறை அவர் வலியுறுத்தி இருக்கின்றார். இருமொழிக் கொள்கையை முன்மொழிந்த அதே நாள், சட்டமன்றத்தில், "தமிழகத்தில் தமிழ் பயிற்சி மொழியாகவும், பாட மொழியாகவும் எல்லாக் கல்லூரிகளிலும், நிர்வாக மொழியாகப் பல்வேறு துறைகளிலும் ஐந்தாண்டுக் காலத்துக்குள் நடைமுறைக்கு வருவதற்கான துரிதமான நடவடிக்கையை மேற்கொள்வது'' என்ற தீர்மானத்தை அவர் முன்வைக்கின்றார். நீதிமன்றங்களில் தமிழில் வாதாட முடியுமா என்று வினா எழுந்தபோது, "தமிழில்தானே வாதாடினாள் கண்ணகி, அவள் கூறிய வாதங்களை ஆங்கில மொழியால் அல்ல, வேறு எந்த மொழியாலும் அளிக்க முடியாது'' என்று உறுதிபடக் கூறியவர் அண்ணா.

தமிழக மக்களின் அன்றாட வாழ்வில் தமிழ் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற வினானவுக்கு, "நம்முடைய ஊனோடும் உயிரோடும் இரண்டறக் கலந்துவிட்ட தமிழ்மொழிக்கு உரிய ஏற்றத்தைத் தருவோம். தமிழ்மொழி அதற்குரிய இடத்தை அடையும் வரை ஓயமாட்டோம்'' என்பதே ("அண்ணாவும் அழகு தமிழும்'') அண்ணாவின் விடையாக இருந்தது. இந்திக்கு மாற்றாக ஆங்கிலம் என்பதுதான் அண்ணாவின் கோரிக்கையே அன்றி, தமிழுக்கு மாற்றாக ஆங்கிலம் என்பது ஒரு நாளும் இல்லை.

எனவே, திரைப்படத் துறையினரின் ஆங்கில மோகத்துக்கும், ஜெயலலிதாவின் ஆங்கில ஆதரவுக்கும், தமிழின உணர்வை இம் மண்ணில் விதைத்த தலைவர்களுள் ஒருவரான அண்ணாவைப் பலியாக்கிட வேண்டா என்பதே நம் வேண்டுகோள்.

"தமிழ்ப் படங்களுக்குத் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று சொல்வதற்கு இவர்கள் யார்?'' என்று கேட்கும் குஷ்பு போன்ற ‘சுத்தத் தமிழச்சிகள்', நாளை ‘தமிழை உயர்த்திப் பிடிக்க அண்ணா யார்?' என்றும் கேட்கக் கூடும். அதனை ஆதரித்து ஜெயலலிதாவும், நன்றி தெரிவித்து சரத்குமாரும் அறிக்கை விடவும் கூடும். அண்ணாவின் தொடர்தான் நம் நினைவுக்கு வருகின்றது... "ஏ... தாழ்ந்த தமிழகமே!''

- பிப்ரவரி 16, 2005

(இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்)



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com