Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் 65 ஆண்டுகள் - ஒரு மீள்பார்வை
நூறு பூக்கள் வெளியீடு

1

இவ்வருடம் ஜூலை 03ம் திகதியுடன் இலங்கையின் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு 65 வயதாகின்றது. 1943 இலங்கையில் கம்யூனிஸ்ட் இயக்கம் ஜூலை 03ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முன்னர் இலங்கையைச் சார்ந்த கம்யூனிஸ்ட்டுகள் 1935ல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியில் அங்கம் வகித்தனர். இக்கட்சியின் பிரதான இலக்குகள் இரண்டாக இருந்தன. ஒன்று, அப்போது இலங்கையை தனது காலனித்துவப்பிடியில் வைத்திருந்த பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்திடமிருந்து நாட்டை விடுவித்து, இலங்கையை ஒரு சுதந்திர நாடாக்குவது. இரண்டாவது, சுதந்திர இலங்கையில் சோசலிச அரசொன்றை நிறுவுவது. இந்த இரண்டு நோக்கங்களையும் அடைவதற்காக, பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் அடக்குமுறைகளின் கீழ் லங்கா சமசமாஜக் கட்சி கடுமையாகப் போராடியது.

தேசப்பற்றுள்ள படித்த இளைஞர்களும், தொழிலாள - விவசாய உழைப்பாளி மக்களும் கட்சியின் இந்த நோக்கங்களைச் சுற்றி அணி திரண்டனர். அதேவேளையில் இந்தக் காலகட்டத்தில் சர்வதேச அரங்கில் ஏகாதிபத்திய சக்திகளுக்கும் உலகின் முதலாவதும் ஒரேயொரு சோசலிச நாடுமான சோவியத் யூனியனுக்கும் இடையில் கடுமையான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சோவியத் யூனியனில் மாபெரும் தோழர் லெனின் அவர்களால் உருவாக்கப்பட்ட தொழிலாளிவர்க்க அரசை என்னவிதப்பட்டாவது கவிழ்த்துவிட உலக முதலாளித்துவ சக்திகள் பகீரதப்பிரயத்தனம் செய்து கொண்டிருந்தன. அவர்களது நோக்கங்களை மாபெரும் புரட்சியாளரும், லெனினின் நெருங்கிய போராட்டத் தோழருமான ஸ்டாலின் தலைமை தாங்கிய சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும் அரசும் தவிடுபொடியாக்கிக் கொண்டிருந்தனர்.

அதேநேரத்தில் 1917ல் மகத்தான அக்டோபர் சோசலிசப் புரட்சிக்கு லெனினுடனும் ஸ்டாலினுடனும் சேர்ந்து தலைமை தாங்கியவர்களில் ஒருவரான லியோன் ரொட்ஸ்க்கி, 1924ல் லெனின் மரணமடைந்த பின்னர், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையைக் கைப்பற்ற முயன்று ஸ்டாலினிடம் தோல்வியடைந்தார். அதன்பின்னர் அவர் சோவியத் கட்சி - அரசு என்பனவற்றுக்கு எதிராக உள்நாட்டு - வெளிநாட்டு எதிர்ப்புரட்சிகர சக்திகளின் உதவியுடன் பல சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். ‘தனியொரு நாட்டில் சோசலிசம் வெற்றிபெற முடியாது’ என்ற தனது லெனினிச விரோத கருத்தை நிலைநாட்டுவதற்காக, சோவியத் யூனியனின் சோசலிச அரசை கவிழ்க்கும் முயற்சியில் ரொட்ஸ்க்கி அனைத்துவிதமான சோவியத் எதிர்ப்பு சக்திகளுடனும் கூட்டுச்சேர்ந்து செயல்பட்டார்.

ரொட்ஸ்க்கி முன்வைத்த இந்தத் தவறான தத்துவத்தை உள்வாங்கிக்கொண்ட இலங்கையின் லங்கா சமசமாஜக் கட்சி தலைமை, சோவியத் எதிர்ப்பிலும் ஸ்டாலின் எதிர்ப்பிலும் தீவிரமாக இறங்கியது. இதன் காரணமாக லங்கா சமசமாஜக் கட்சிக்குள் ரொட்ஸ்க்கியவாதிகளுக்கும் மார்க்சிச - லெனினிசத்தைப் பின்பற்றிய கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இடையில் கடுமையான சித்தாந்தப் போராட்டம் ஆரம்பமாகியது. சமரசம் எதுவும் எட்டப்படாத நிலையில் இறுதியில் லங்கா சமசமாஜக்கட்சி பிளவுபட்டு, கம்யூனிஸ்ட்டுகள் அக்கட்சியை விட்டு வெளியேறினர். லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து வெளியேறிச்சென்ற கம்யூனிஸ்ட்டுகள், 1941ம் ஆண்டு ஜக்கிய சோசலிசக்கட்சி என்ற பெயரில் செயற்பட ஆரம்பித்தனர். இவர்களில் டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்க, ஆரியவன்ச குணசேகர, பீட்டர் கெனமன், எம்.ஜி.மெண்டிஸ், அ.வைத்திலிங்கம், பொன்.கந்தையா, மு.கார்த்திகேசன், கே.இராமநாதன் ஆகியோர் முக்கியமானவர்களாகும். இவர்கள் சிறிது காலத்தின் பின்னர், 1943 ஜூலை 03ம் திகதி அக்கட்சியை உத்தியோகபூர்வமான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியாக மாற்றம் செய்து செயல்பட ஆரம்பித்தனர்.

இலங்கையில் சோசலிச அரசொன்றை ஸ்தாபிப்பது சம்பந்தமாக லங்கா சமசமாஜக்கட்சி முன்வைத்திருந்த ரொட்ஸ்க்கியவாத அடிப்படையிலான கருத்துகளை நிராகரித்து, இலங்கைப் புரட்சியின் படிமுறையான காலகட்டங்கள் சம்பந்தமாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தெளிவான கருத்துகளை முன்வைத்தது. அதன்படி இலங்கைப் புரட்சியின் உடனடிக்கடமை பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிடமிருந்து பூரண சுதந்திரத்தைப் பெறுவதாகும். அதன்பின்னர் புரட்சியின் முதலாவது கட்டமாக, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் அனைத்து உழைப்பாளி மக்களையும் ஜனநாயக – முற்போக்கு சக்திகளையும் கொண்ட மக்கள் ஜனநாயக அரசொன்றை நிறுவுவதாகும். அதைச் செய்யாமல் சோசலிசத்தை நோக்கி ஒரு அடியைத்தன்னும் எடுத்துவைக்க முடியாது என்பதை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தெளிவுபடுத்தியது.

சோசலிசத்தை ஒரே எட்டில் அடைவதென்ற லங்கா சமசமாஜக்கட்சியின் ரொட்ஸ்க்கியவாத அடிப்படையிலான கருத்து, இலங்கை போன்ற அரை - நிலப்பிரபுத்துவ, அரை - காலனித்துவ (பிரிட்டிஸ் ஏகாதிபத்தியம் வெளியேறிய நிலையில்) நாட்டுக்கு பொருத்தப்படானதல்ல என்பதை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி சித்தாந்தரீதியாக தெளிவுபடுத்தியது. ஆனால் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி சித்தாந்த அடிப்படையில் இலங்கைப் புரட்சிக்கான பாதையை வகுத்திருந்தபோதிலும், நடைமுறையில் அதற்கான அடிப்படையில் அரசியல் - ஸ்தாபன வேலைகளை முன்னெடுக்கவில்லை. இலங்கை முழுக்க முழுக்க ஒரு விவசாய நாடென்ற வகையில், விவசாயிகளை அது அணிதிரட்டத் தவறியது. பிரித்தானிய காலனித்துவ முதலாளி வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட தொழிற்துறைகளான அரசசேவை, துறைமுகம், போக்குவரத்து, வர்த்தக நிறுவனங்கள், பெருந்தோட்டத்துறை, தேயிலை - ரப்பர் தொழில்துறை போன்றவற்றில் வேலைசெய்த அரச ஊழியர்களையும், தொழிலாளர்களையும் அணிதிரட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்தியது.

இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, நகரங்களில் தொழிலாளி வர்க்கத்தை அடிப்படையாக கொண்டு சோவியத் புரட்சி நடைபெற்றபடியால், யாந்திரீகரீதியில் இலங்கைப் புரட்சியையும் அவ்வாறு நோக்கியது. இரண்டாவது, லங்கா சமசமாஜக்கட்சியைப் போன்றே இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் பெரும்பாலானவர்களும் பிரித்தானியாவில் உயர்கல்வி கற்றதனாலும், அங்கு பிரித்தானிய கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கால் அரசியலுக்கு வந்தவர்களாகையாலும், அக்கட்சி பின்பற்றிய பாராளுமன்றவாத தொழிற்சங்கவாத சீர்திருத்தவாத போக்கை உள்வாங்கியிருந்தமையாகும்.

எனவே ஆரம்பகாலங்களில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மூன்று பிரதான வேலைகளையே முன்னெடுத்து வந்தது. ஒன்று, தொழிற்சங்கங்களை அமைத்து தொழிலாளர்களின் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகப் போராடியது. இரண்டாவது, சோசலிச சோவியத் யூனியனுக்கு ஆதரவான பிரச்சாரங்களை மேற்கொண்டது. மூன்றாவது, ரொட்ஸ்க்கியவாதத்திற்கு எதிரான சித்தாந்தப் போராட்டத்தை கொண்டு நடாத்தியது. இடதுசாரிகள் என்ற வகையில், லங்கா சமசமாஜக்கட்சியும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து, 1947ல் அப்போதைய பிரிட்டிஸ் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக மாபெரும் பொது வேலை நிறுத்தமொன்றை ஆரம்பித்து நடாத்தினர். ஆனால் அது பிரிட்டிஸ் காலனித்துவ ஆட்சியினால் மோசமாக அடக்கியொடுக்கப்பட்டு தோல்வியடைந்தது.

காலனித்துவ ஆட்சியின் பொலிஸ்படை கந்தசாமி என்ற அரச ஊழியரை எவ்வித தயக்கமுமின்றி சுட்டுக்கொன்றது. காலனித்துவ அரசின் இச்செய்கை தொழிலாளிவர்க்கம் புரட்சிகர வழியில் தனது போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய பெறுமதிமிக்க பாடமொன்றை வழங்கியபோதிலும், இடதுசாரிகள் தமது எதிர்கால வேலைகளை அதன் அடிப்படையில் முன்னெடுக்கவில்லை. அத்துடன் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான அந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக, விவசாயிகளையோ ஏனைய உழைக்கும் மக்களையோ அணிதிரட்டுவதற்கும் இடதுசாரிகள் தவறினர்.

2

பிரித்தானிய காலனித்துவவாதிகள் 1948ல் இலங்கைக்கு சுதந்திரம் என்ற போர்வையில், தமது உள்நாட்டு அடிவருடிகளான டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சியிடம் ஆட்சியதிகாரத்தை கையளித்துவிட்டுச் சென்றனர். 1947ல் நடைபெற்ற சுதந்திர இலங்கைக்கான முதலாவது பொதுத்தேர்தலை எடுத்துப்பார்க்கையில் ஐக்கிய தேசியக்கட்சி எதிர்ப்புச் சக்திகளும் கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளதை அவதானிக்க முடியும். ரொட்ஸ்க்கியவாத கொள்கையை உள்வாங்கியதின் மூலம் லங்கா சமசமாஜக்கட்சி பிளவுபடாமல் இருந்திருந்தால், சிலவேளைகளில் அத்தேர்தலில் அக்கட்சி (பிரிட்டிஸ் காலனித்துவ அரசு அனுமதித்திருந்தால்) வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கக்கூடும். சுதந்திர இலங்கையின் முதலாவது அரசை அமைத்த ஐக்கிய தேசியக்கட்சி, ஏகாதிபத்தியத்திற்கு சார்பான உள்நாட்டு பெரும் முதலாளிகளையும், நிலப்பிரபுத்துவ சக்திகளையும் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சியாக இருந்தபடியால், அது மக்கள் - விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு விரைவிலேயே மக்களிடமிருந்து தனிமைப்பட்டுப்போனது.

ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வில் புடம்போடப்பட்டிருந்த இலங்கை மக்கள் ஐக்கிய தேசியக்கட்சி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கெதிராக போராடுவதற்கு தயாராக இருந்தனர். அதற்கான வாய்ப்பும் உருவானது. டட்லி சேனநாயக்க தலைமையிலான ஜக்கிய தேசியக்கட்சியின் இரண்டாவது அரசில் நிதி அமைச்சராக பதவி வகித்த தீவிர ஏகாதிபத்திய பாதந்தாங்கியான ஜே.ஆர்.ஜெயவர்த்தன உலகவங்கியின் ஆணையை ஏற்று, மக்களுக்கு வழங்கிவந்த இலவச அரிசி மானியத்தை வெட்டி பாடசாலைப் பிள்ளைகளுக்கு வழங்கிவந்த இலவச மதிய உணவை நிறுத்தி, தபால், தந்தி மற்றும் பஸ், ரயில் கட்டணங்களை அதிகரித்து மக்களின் வயிற்றில் அடிக்க முற்பட்டார். இந்த முயற்சிக்கு எதிராக இடதுசாரி கட்சிகள் இரண்டும் தொழிலாளி வர்க்கத்தையும் மக்களையும் அணிதிரட்டி 1953 ஆகஸ்ட் 12ம் திகதி மாபெரும் ஹர்த்தால் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்தன.

இலங்கையின் வரலாற்றில் இந்த ‘ஆகஸ்ட் ஹர்த்தால்’ ஒரு மாபெரும் நிகழ்வாக இன்றும் கருதப்படுகின்றது. இந்த ஹர்த்தால் இடதுசாரிக் கட்சிகளால் ஒழுங்கு செய்யப்பட்டாலும், சிங்கள - தமிழ் மக்கள் மத்தியில் அன்று வெகுஜன செல்வாக்குப் பெற்றிருந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் இறுதி நேரத்தில் தமது ஆதரவைத் தெரிவித்து கலந்து கொண்டன. அதன் காரணமாக ஹர்த்தால் முழுமையாக வெற்றிபெற்றது. அரச காரியாலயங்கள், பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள், போக்குவரத்து சேவைகள், தகவல் சேவைகள், துறைமுகம், விமானநிலையம் என எதுவுமே செயற்படவில்லை. பொலிஸ் மற்றும் ஆயுதப்படைகள் யாவும் செயலற்ற நிலைக்குத்தள்ளப்பட்டன. அரசாங்கத்தின் மந்திரிசபைக் கூட்டத்தை நாட்டுக்குள் நடாத்தமுடியாத டட்லி சேனநாயக்கவின் அரசாங்கம், கொழும்பு துறைமுகத்தில் தரித்துநின்ற பிரிட்டிஸ் யுத்தக்கப்பல் ஒன்றில் தனது மந்திரிசபைக் கூட்டத்தை நடாத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

மக்களின் எழுச்சி முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு இருந்ததால் டட்லி சேனநாயக்க பாராளுமன்றத்தில் பேசும்போது மயங்கி விழுந்ததுடன், பின்னர் பிரதமர் பதவியையும் ராஜினாமா செய்ததுடன், அரசியலில் இருந்து விலகி புத்தகாயாவிற்கு செல்லப்போவதாக அறிவித்தார். மக்கள் வீடுகளைவிட்டு வெளியேவந்து தெருக்களில் கூடியதுடன், வீதிகளிலேயே சமைத்து உண்டனர். இலங்கையில் கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சியைப் பிடித்துவிட்டனர் என்ற பிரச்சாரம் உலகெங்கும் பரவியது. இறுதியில் அரசாங்கம் மேற்கொள்ளவிருந்த அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளையும் கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனாலும் ஜக்கிய தேசியக்கட்சி அரசே தொடர்ந்தும் ஆட்சியில் நீடித்தது.

ஏகாதிபத்தியத்திற்கெதிராகவும், அதன் ஏவல்நாயான ஜக்கிய தேசியக்கட்சிக்கு எதிராகவும் மக்கள் வீரதீரத்துடன் போராடியபோதும், அந்தப் போராட்டத்தை பயன்படுத்தி பிற்போக்கு ஆட்சியைத் தூக்கியெறிந்து, மக்கள் ஆட்சியொன்றை நிறுவுவதற்கான வாய்ப்பாக அதைப் பயன்படுத்திச் செயல்பட இடதுசாரிக் கட்சிகள் தயார் நிலையில் இருக்கவில்லை. அதனால் அப்போராட்டத்தின் வெற்றிக்கனியை மக்கள் சுவைக்க முடியவில்லை. ஆனால் இந்த மாபெரும் போராட்டத்தின் பலாபலன்களை 1956 தேர்தலில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க நன்கு பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டார். பண்டாரநாயக்க தீவிர தேசியவாதியாக இருந்த அதேநேரத்தில், எகாதிபத்திய எதிர்ப்பாளராவும் இருந்த காரணத்தால், சாதாரண மக்கள் அவரைச்சுற்றி அணிதிரண்டதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இலங்கை இடதுசாரிகள் வரலாற்றில் தமக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பை நழுவவிட்டமை, பின்னர் அவர்களுக்கு தொடர்ச்சியான பின்னடைவை கொண்டு வருவதற்கு கால்கோள் இட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

பண்டாரநாயக்க ஆட்சியின் வருகையின் பின்னர், இடதுசாரிகள் அவரது தேசிய முதலாளித்துவக் கட்சியான சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் வாலாக இழுபட ஆரம்பித்தனர். பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர அரசியலைக் கைகழுவிவிட்ட இடதுசாரிகள், பாராளுமன்றவாத சேற்றில் முற்றுமுழுதாக மூழ்க ஆரம்பித்தனர். அதன்காரணமாக தேசியமுதலாளித்துவக் கட்சியுடன் அரசியல் கூட்டணியையும் போட்டிபோட்டுக் கொண்டு அமைத்தனர். முதலில் பண்டாரநாயக்கவின் மனைவி சிறீமாவோவின் அரசில் லங்கா சமசமாஜக்கட்சி 1964ல் இணைந்துகொண்டு, அதன் தலைவர்கள் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொணடனர். அதற்கு முன்னர் லங்கா சமசமாஜக்கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, பிலிப் குணவர்த்தனவின் மக்கள் ஜக்கிய முன்னணி (எம்.ஈ.பி.) என்பன இணைந்து அமைத்த ‘இடதுசாரி ஜக்கிய முன்னணி’ ஒரு மாபெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்திருந்தது. அது தொழிலாளி வர்க்கத்தின் சார்பாக பிரசித்திபெற்ற 21 கோரிக்கைகளை முன்வைத்து போராடிவந்தது.

இடதுசாரி ஜக்கிய முன்னணியின் பலம் சிறீமாவோவின் அரசுக்கு பெரும் சவாலாக இருந்தது. மறுபுறத்தில் சிறீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் வலதுசாரிகளின் பலமும் அதிகரித்துவந்தது. இந்த நிலைமையில் சிறீமாவோ இடதுசாரிகளின் உதவியை நாடினார். அப்பொழுது லங்கா சமசமாஜக்கட்சி அரசாங்கத்துடன் இணைந்து கொண்டது. இதுவொருபுறமிருக்க, சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பல்வேறு விடயங்களில் பெரும்வாதப்பிரதிவாதங்கள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தது. 1954ல் தோழர் ஸ்டாலின் மறைந்தபின் சோவியத் கட்சியினதும், அரசினதும் தலைமையைக் கைப்பற்றிக் கொண்ட நிகிட்டா குருஸ்சேவும் அவரது ஆதரவாளர்களும் ஸ்டாலினை அவதூறு செய்து அவரை நிராகரித்துடன், ஏகாதிபத்தியத்துடன் சமாதானம், சகவாழ்வு, பாராளுமன்றப்பாதையின் மூலம் சோசலிசத்தை அடைவது போன்ற பல திரிபுவாதக் கொள்கைகளை முன்வைத்து மார்க்சிச - லெனினிசப் பாதையிலிருந்து விலகிச் சென்றனர்.

அவர்களுடைய நவீன திரிபுவாதப் போக்கிற்கு எதிராக தோழர் மாஓசேதுங் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் உலகம் முழுவதிலுமிருந்த மார்க்சிச - லெனினிச கட்சிகளும் பெரும் சித்தாந்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. அதன் காரணமாக சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கம் 1964ல் பிளவுபட்டது. சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட அப்பிளவு இலங்கையிலும் எதிரொலித்தது. டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்க, பீட்டர் கெனமன், அ.வைத்திலிங்கம் தலைமையிலான குழுவினர் சோவியத் கட்சி நிலைப்பாட்டை ஆதரித்தனர். பிரேம்லால் குமாரசிறி, ஆரியவன்ச குணசேகர, என்.சண்முகதாசன் தலைமையிலான குழுவினர் சீனக்கட்சியின் நிலைப்பாட்டை ஆதரித்தனர். இதன் காரணமாக இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி - சோவியத்சார்பு, கம்யூனிஸ்ட் கட்சி - சீனசார்பு என இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இயங்க ஆரம்பித்தன.

3

1964ல் சிறீலங்கா - லங்கா சமசமாஜ கூட்டரசாங்கம் கொண்டுவந்த லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தை தேசியமயமாக்கும் பத்திரிகை மசோதா, அரசாங்கத்தில் இருந்த வலதுசாரி சக்திகளின் கழுத்தறுப்பால் தோல்வியுற்றதையடுத்து, அந்த அரசாங்கம் கவிழ்ந்து. அதைத் தொடர்ந்து 1965ல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி தோல்வியடைந்தது. ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஏழுகட்சி கூட்டணி ஆட்சி பதவிக்கு வந்தது. இதனால் இ.ந்த ஏழுகட்சி கூட்டணி ஆட்சிக்கு வெளியேயிருந்த எதிர்க்கட்சிகளான சிறீலங்கா - சமசமாஜ - கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையில் பாராளுமன்றவாத அடிப்படையிலான ஜக்கியமுன்னணி ஒன்று ஏற்பட்டது.

இம்முன்னணி ஐக்கிய தேசியக்கட்சி அரசுக்கெதிராக பல போராட்டங்களை முன்னெடுத்தது. அதில் முக்கியமானது தமிழரசு - தமிழ்காங்கிரஸ் கட்சிகளையும் உள்ளடக்கியிருந்த ஐக்கிய தேசியக்கட்சியின் ஏழுகட்சிக் கூட்டரசாங்கம் கொண்டுவந்த ‘தமிழ்மொழி விசேட மசோதா’வுக்கு எதிராக 1966 ஜனவரி 08ம் திகதி மேற்கொண்ட பொதுவேலைநிறுத்தமாகும். இந்த வேலைநிறுத்தம் முழுக்க முழுக்க இனவாத அடிப்படையிலான ஒரு வேலைநிறுத்தமாகும். இந்த வேலைநிறுத்தத்தில் இலங்கையின் இடதுசாரிக்கட்சிகள் இரண்டும் பங்குபற்றியதின் மூலம் மாபெரும் வரலாற்றுத்தவறை இழைத்தன. அவர்களது செயல் தொழிலாளி வர்க்கத்தை இனஅடிப்படையில் கூறுபோட்டதுடன், அவர்கள் மேல் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தவும் வழிவகுத்தது.

ஆனால் ஐக்கிய தேசியக்கட்சியின் ஏழுகூட்டாட்சி பலமக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதின் காரணமாக, 1970 பொதுத்தேர்தலில் சிறீலங்கா - சமசமாஜ – கம்யூனிஸ்ட் கூட்டணி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சிபீடம் ஏறியது. இருந்தபோதிலும், கூட்டணி அரசு மேற்கொண்ட திட்டமிடாத பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக மக்கள் ஆதரவை வேகமாக இழந்தது. இந்த நிலைமையில், பொருட்கள் தட்டுப்பாடு, விலைவாசியுயர்வு, சிங்கள இளைஞர்கள் மத்தியில் நிலவிய வேலையில்லாத் திண்டாட்டம் என்பனவற்றைப் பயன்படுத்திய மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), இளைஞர்களை அணிதிரட்டி 1971 ஏப்ரலில் ஆயுதக்கிளர்ச்சி ஒன்றை நடாத்தி பெரும் அழிவுகளைச் சந்தித்ததுடன், எதிர்மறையாக அரசுயந்திரத்தை இராணுவரீதியாக பலப்படுத்துவதற்கும் வழிசமைத்தது.

மறுபக்கத்தில் 1972ல் ஜக்கியமுன்னணி அரசு (சிறீலங்கா – சமசமாஜ – கம்யூனிஸ்ட் கூட்டணி) உருவாக்கிய புதிய குடியரசு அரசியல் சாசனத்தில் தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த தவறியதன் மூலமும், இனரீதியான தரப்படுத்தல் மூலம் தமிழ்மாணவர்கள் ஒருபகுதியினரின் உயர்கல்வி வாய்ப்புக்கள் பாதிக்கப்பட்டதன் காரணமாகவும் தமிழ்மக்களை பிரிவினைவாத சக்திகள் தவறான வழியில் இட்டுச்செல்வதற்கான சூழலை அரசு ஏற்படுத்தியது. அரசு எதிர்நோக்கிய இத்தகைய சூழ்நிலைகளின் மத்தியில் சிறீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் சமசமாஜ – கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குமிடையே முரண்பாடு உருவாகி, அவை அரசிலிருந்து வெளியேறும் நிலை உருவானது. இந்தப்பிளவு 1977 பொதுத்தேர்தலில் பாரதூரமான பாதிப்பை உண்டாக்கியது. இத்தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி 8 ஆசனங்களை மட்டுமே பெற்று படுதோல்வியடைந்ததுடன், இடதுசாரிக்கட்சிகள் (சமசமாஜக்கட்சி, கம்யூனிஸ்ட்கட்சி) இரண்டும் வரலாற்றில் முதல்தடவையாக பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தைத்தன்னும் பெறமுடியாமல் மக்களால் ஒதுக்கப்பட்டன. அதேவேளையில் ஐக்கிய தேசியக்கட்சி ஆறில் ஜந்து பெரும்பான்மை பெற்று வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது.

இலங்கை இடதுசாரிகளின் மோசமான வீழ்ச்சிக்குக் காரணம் அவர்கள் மக்களின் பிரச்சினைகளுக்கான வெகுஜனப் போராட்டங்களைக் கைவிட்டு பாராளுமன்றவாதத்தில் மூழ்கியதும், தேசியமுதலாளித்துவக் கட்சியுடன் நிபந்தனையற்ற முறையில் கூட்டுச்சேர்ந்து அதன் வாலாக இழுபட்டுச் சென்றதுமேயாகும். அதன் பின்னர் இன்றுவரை சிறீலங்கா சுதந்திரக்கட்சியுடன் சமசமாஜ – கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கூட்டு இருந்து வருகின்றபோதிலும், அவ்விருகட்சிகளும் சுயாதீனமான முறையில் தேர்தல்களுக்கு முகம்கொடுக்கக்கூடிய நிலையில் இல்லாது மிகவும் பலவீனமான நிலையிலேயே உள்ளன. அவைகளால் இன்று குறைந்தபட்சம் ஒரு மாதாந்தப் பத்திரிகையைக் கூட நடாத்த முடியாத நிலை உள்ளது. அவ்வாறு ஒரு பத்திரிகையை வெளியிட்டாலும் தமது கொள்கையாக மக்களுக்கு என்ன கருத்தை சொல்வது என்ற இக்கட்டில் இருக்கின்றன. புதிய சந்ததியைச் சேர்ந்த இளம்சக்திகள் எதுவும் அக்கட்சிகளால் இப்பொழுது உள்வாங்கப்படுவதுமில்லை.

இலங்கை பாராளுமன்றவாத இடதுசாரிக் கட்சிகளின் நிலை இவ்வாறிருக்க, புரட்சிகரப் பாதையைத் தேர்ந்தெடுத்த சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சியும் இன்று வரலாற்று அரங்கிலிருந்து அழிந்துபோயுள்ளது. ஒப்பீட்டுவகையில் அக்கட்சியின் பின்னாலே இலங்கையின் உண்மையான கம்யூனிஸ்ட்டுகளும் தொழிலாளி வர்க்கமும் அணிதிரண்டனர். ஆனால் அக்கட்சி அவர்களுக்கு சரியான புரட்சிகர மார்க்கத்தைக் காட்டத் தவறிவிட்டது. பாராளுமன்றவாதத்தை அக்கட்சி சொல்லளவில் நிராகரித்தாலும், நடைமுறையில் அந்தப்பாணியிலேயே அதன் வேலைமுறைகள் இருந்தன. பாராளுமன்றவாதத்திற்குப் பதிலாக, அக்கட்சி தொழிற்சங்கவாதத்தில் மூழ்கியது. தொழிலாளி வர்க்கம் தனது உடனடிப் பொருளாதாரத் தேவைகளுக்காக பொருளாதாரப் போராட்டங்களில் ஈடுபடுவது தவிர்க்க முடியாதது. ஆனால் அதேநேரத்தில் அப்போராட்டங்களை தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றேடுப்பதற்கான பயிற்சிக்களமாக பயன்படுத்தவும் வேண்டும் என்ற மார்க்சிச - லெனினிசக் கோட்பாட்டை கட்சி கவனத்தில் எடுத்துச் செயல்படவில்லை.

அதேபோல இலங்கைப் புரட்சியில் தொழிலாளி வர்க்கத்தின் பிரதான நேச அணியான விவசாயிகளையும் அணிதிரட்டுவதில் கட்சி எவ்வித அக்கறையும் செலுத்தவில்லை. கட்சியின் ஆதரவு இன்றி தமது சொந்த முயற்சிகளில் விவசவயிகளை அணிதிரட்ட முயன்றவர்களுக்கும் கட்சி இடையூறு விளைவித்தது. கட்சியின் கூட்டுத் தலைமையை மாற்றியமைத்து பொதுச்செயலாளராக தன்னை நிலைநிறுத்திய என்.சண்முகதாசன், கட்சிக்குள் ஜனநாயக மத்தியத்துவத்தையும் உள்கட்சி ஜனநாயகத்தையும் நிலைநாட்டுவதற்குப் பதிலாக, எதேச்சாதிகார நடைமுறைகளை கையாண்டதுடன், தன்னைச்சுற்றி தனிநபர் வழிபாட்டையும் வளர்த்தார். இதனால் காலத்துக்குக்காலம் பல நல்ல சக்திகளும், துடிப்புமிக்க இளைஞர்களும் கட்சியைவிட்டு வெளியேறிச் சென்றனர். அவ்வாறு வெளியேறியவர்களில் ஒருவரான ரோகண விஜேவீரவும் வேறு சிலரும் இணைந்தே பின்னர் ஜே.வி.பியை உருவாக்கி, இன்று இடதுசாரி இயக்கத்திற்கு தவறான வியாக்கியானமாகத் திகழ்கின்றனர்.

சண்முகதாசன் குழுவினரின் எதேச்சாதிகாரப் போக்கிற்கு எதிராகப் போராடிய பல கட்சி உறுப்பினர்கள் ‘சீர்குலைவாளர்கள்’ எனப் பொய்யாக முத்திரை குத்தப்பட்டு வெளியேற்றப்பட்டனர். கட்சி சொல்லில் புரட்சி பற்றி வாய்ச்சவடால் அடித்ததே தவிர, நடைமுறையில் அதனைப் பின்பற்றவில்லை. அதன் காரணமாக, 1971ல் ஜே.வி.பி. தனது முதலாவது ஆயுதக்கிளர்ச்சியை நடாத்தியபோது, கட்சி அங்கத்தினர்களும் ஆதரவாளர்களும் தலைமைமீது முற்றுமுழுதாக நம்பிக்கையை இழந்தனர். இதனால் 1972 ஜூலையில் கூடிய கட்சி மத்திய குழு நிலைமைகளை விரிவாக ஆராய்ந்த பின் சண்முகதாசனை கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்குவது என முடிவு செய்தது. ஆனால் முதலாளித்துவ ஊடகங்களில் தனக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, சண்முகதாசன் கட்சியின் பெயரைத் தொடர்ந்து பாவித்து வந்ததினால், கட்சியின் பெயரை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) என பெயர் மாற்றம் செய்யவேண்டிய நிலையேற்பட்டது. கட்சித் தலைமையின் இந்த முடிவை ஏகப்பெரும்பான்மையான கட்சி உறுப்பினர்களும் கட்சியின் வெகுஜன ஸ்தாபனங்களும் பூரணமாக எற்றுக்கொண்டன.

சண்முகதாசன் தலைமை மேற்கொண்டிருந்த தவறான கொள்கைகளை மார்க்சிச - லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி சீர்செய்ததுடன், கட்சிக்குள் உட்கட்சி ஜனநாயகத்தையும் நிலைநாட்டியது. அரசியல் ரீதியாக முன்னர் கட்சி பின்பற்றிய ஒருமுனைவாத இடதுதீவிர கொள்கைகாரணமாக, முற்போக்கு சக்திகளிடமிருந்து தனிமைப்பட்டிருந்த நிலையை நீக்கியது. முக்கியமாக தேசிய இனப்பிரச்சினையில் கட்சி பின்பற்றி வந்த தவறான அணுகுமுறையை நீக்கியது. ஏனெனில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி 1944ல் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டென்று ஏற்றுக்கொண்டது. பின்னர் 1954ல் கட்சி மேற்கொண்ட ஒரு தீர்மானத்தில் வடக்கு - கிழக்கை தமது பூர்வீக வாழ்விடமாகக் கொண்ட தமிழ் மக்களுக்கு பிராந்திய சுயாட்சி வழங்கப்படவேண்டும் என தீர்மானித்தது. சோசலிச அமைப்பின் கீழ் எல்லா இனங்களும் சமத்துவமானவை என்ற மார்க்சிச - லெனினிச கோட்பாட்டின் அடிப்படையிலேயே இந்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் அடிப்படையில் சுதந்திர இலங்கையின் முதலாவது ஐக்கிய தேசியக்கட்சி அரசு வடக்கு - கிழக்கில் மேற்கொண்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்தது. அதேபோல அவ்வரசு முதலாவது பொதுத்தேர்தலில் மலையகத் தோட்டத்தொழிலாளர்கள் இடதுசாரி சார்பான பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்ததிற்காக, அந்த மக்களின் வாக்குரிமையையும் பிரஜாவுரிமையையும் பறித்தபோது, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி அதையும் வன்மையாக எதிர்த்துப் போராடியது. பின்னர் 1956ல் ஆட்சிக்கு வந்த பண்டாரநாயக்க அரசாங்கம் சிங்களத்தை மட்டும் அரசகருமமொழியாகக் கொண்டுவந்தபோது, அதனையும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக எதிர்த்துப் போராடியது. தமிழ் மக்களின் பிரச்சினையை பிராந்திய சுயாட்சியின் அடிப்படையில் தீர்க்கவேண்டுமென கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தியது.

அதேவேளையில் இனப்பிரச்சினையைப் பொறுத்தவரை தமிழ்மக்கள் மத்தியிலும் சில ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்படும் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி எதிர்பார்த்தது. தமிழர்களின் மூத்த அரசியல் கட்சியான தமிழ்காங்கிரஸ் ஒருபக்கத்தில் தமிழ்மக்கள் மத்தியில் இனவாத அரசியலை முன்னெடுத்துக்கொண்டு, மறுபக்கத்தில் தனது ஏகாதிபத்திய சார்பு மற்றும் வர்க்க ஒற்றுமை காரணமாக ஐக்கிய தேசியக்கட்சி அரசில் இணைந்து செயற்பட்டு வந்தது. அது ஐக்கிய தேசியக்கட்சி அரசின் உழைக்கும் மக்களுக்கு எதிரான நடவடிக்ககைகளுக்கு மாத்திரமின்றி அதன் தமிழ் இன விரோத நடவடிக்கைகளுக்கும் ஆதரவளித்து வந்தது. ஐக்கிய தேசியக்கட்சி அரசு இந்திய வம்சாவழித் தமிழ்மக்களுக்கு எதிராகக் கொண்டுவந்த பிரஜாவுரிமைச் சட்டத்தையும் வடக்கு - கிழக்கில் மேற்கொண்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும் தமிழ்காங்கிரஸ் ஆதரித்தது.

இதன்காரணமாக அக்கட்சியிலிருந்து எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையிலான ஒரு குழுவினர் 1948ல் வெளியேறிச்சென்று தமிழரசுக்கட்சியை அமைத்து செயற்படத் தொடங்கினர். இவர்களது இந்தப்பிளவை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி சாதகமாகப் பார்த்து வரவேற்றது. இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சியின் ஏகாதிபத்தியசார்பு கொள்கை காரணமாக பண்டாரநாயக்க அக்கட்சியிலிருந்து வெளியேறி சிறீலங்கா சுதந்திரக்கட்சியை உருவாக்கியதற்கு ஒப்பானதாகவே, தமிழரசுக்கட்சியின் உருவாக்கத்தை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி பார்த்தது. அதன்காரணமாக தமிழரசுக்கட்சியின் ஆரம்பகால நடவடிக்கைகளுக்கு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவும் பாதுகாப்பும் அளித்தது.

கு.வன்னியசிங்கம் தலைமையிலான ஆரம்பகால தமிழரசுக்கட்சி ஓரளவு தமிழ் மக்கள் சார்பாகவே செயல்பட்டது. அது தமிழ் மத்தியதர வர்க்கத்தினதும் சாதாரண தமிழ் மக்களினதும் கட்சியாகச் செயல்பட்டது. 1953ல் இடதுசாரிகளால் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் ஹர்த்தால் போராட்டத்துக்கு தமிழரசுக்கட்சி ஆதரவு வழங்கியது. ஆனால் கு:வன்னியசிங்கத்தின் எதிர்பாராத மரணத்திற்குப் பின்னர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் - அ.அமிர்தலிங்கம் குழுவினர் தலைமைக்கு வந்தபின்னர் அக்கட்சி தீவிர தமிழ் இனவாதக் கட்சியாக மாறியதுடன், ஏகாதிபத்திய சார்பாகவும் ஐக்கிய தேசியக்கட்சி. சார்பாகவும் மாற ஆரம்பித்தது.

சிங்கள எழுத்துக்களுக்கு தார்பூசும் இயக்கம், திருமலை பாதயாத்திரை, 1961 சத்தியாக்கிரகம் போன்ற சட்டவிரோத - இனவாத செயற்பாடுகளில் தமிழரசுக்கட்சி ஈடுபட்டது. பண்டாரநாயக்காவும் அவரது மனைவி சிறிமாவோவும் இடதுசாரிகளின் தூண்டுதல் போராட்டங்களினால் மேற்கொண்ட ஏகாதிபத்திய விரோத முதலாளித்துவ விரோத நிலப்பிரபுத்துவ விரோத நடவடிக்கைகளை, தமிழரசுக்கட்சி ஐக்கிய தேசியக்கட்சியுடன் சேர்ந்து எதிர்த்தது. திருகோணமலை, கட்டுநாயக்க போன்ற இடங்களிலிருந்த பிரிட்டிஸ் கடற்படை, விமானப்படை தளங்களை அகற்றியமை, பாடசாலைகளை தேசியமயமாக்கியமை, அந்நிய எண்ணெய் கம்பனிகளை தேசியமயமாக்கியமை இன்சூரன்ஸ் கம்பனிகள் தேசியமயம், வங்கிகள் தேசியமயம், துறைமுகங்கள் தேசியமயம், பஸ் கம்பனிகள் தேசியமயம், பெருந்தோட்டங்கள் தேசியமயம், நெற்காணி மசோதா காணி உச்சவரம்பு சட்டம், சுயமொழிக்கல்வித்திட்டம் என பண்டாரநாயக்க அரசுகளின் அனைத்து மக்கள்சார்பு நடவடிக்கைகளையும் தமிழரசுக்கட்சி ஐக்கிய தேசியக்கட்சியுடன் சேர்ந்து எதிர்த்தது.

அதன்மூலம் அக்கட்சி ஒரு தேசவிரோதக்கட்சி என்ற அபிப்பிராயத்தை சிங்களமக்கள் மத்தியில் ஏற்பட வழிவகுத்தது. தமிழ் தலைமைகளின் அந்தப்போக்கு இன்றைய புலித்தலைமை வரை நீடிப்பதால், தமிழர் அரசியல் தலைமைகள் பற்றிய சிங்களமக்களின் சந்தேகங்களும் இன்றுவரை நீடிக்கின்றது. ஆனால் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை இனப்பிரச்சினை பற்றிய தனது கொள்கையில் வெளிப்படையாகவும் உறுதியாகவும் இருந்துவந்தது. அது தமிழரசுக்கட்சியின் பிற்போக்கு - இனவாத செயற்பாடுகளை இனம் கண்டுகொண்டதுடன், அவற்றை வன்மையாகவும் எதிர்த்தது. அதேவேளையில் பண்டாரநாயக்க அரசுகள் மேற்கொண்ட முற்போக்கு நடவடிக்கைகளை ஆதரித்தாலும், அவை மேற்கொண்ட குறுகிய இனவாத நடவடிக்கைகளையும் எதிர்க்கத் தவறவில்லை. ஆனால் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த நிலைப்பாடுகள் அனைத்துமே கட்சி ஒன்றுபட்ட கட்சியாக இருந்தபோதே உறுதியாகப் பின்பற்றப்பட்டன. கட்சிக்குள் சித்தாந்த - அரசியல் முரண்பாடுகள் ஏற்பட்டு கட்சி 1964ல் இரண்டாகப் பிளவுபட்ட பின்னர், இரண்டு பிரிவுகளுமே தவறான நிலைப்பாட்டுக்கு செல்ல ஆரம்பித்தன.

குறிப்பாக சோவியத்சார்பு கட்சி பாராளுமன்றவாதத்தில் மூழ்கியதுடன், சிங்கள பேரினவாத நிலைப்பாட்டில் சென்று வாக்குகள் பெறமுயன்றது. அதில் ஒன்றுதான் 1966 ஜனவரி 08 வேலைநிறுத்தத்தில் அக்கட்சி பங்குபற்றியமையாகும். அத்தவறினை அக்கட்சி பின்னர் திருத்திக்கொண்ட போதும், அந்தத் தவறு கட்சியின் வரலாற்றில் ஒரு கறையாகவே இன்றுவரை நீடிக்கின்றது. மறுபக்கத்தில் இனப்பிரச்சினை விடயத்தில் கட்சி வேலைசெய்வது இனவாதமாகும் என்ற கருத்தை சீனசார்பு கட்சிக் கொண்டிருந்தது. குறிப்பாக கட்சியின் பொதுச்செயலாளர் சண்முகதாசன் தேசிய இனப்பிரச்சினைக்காக கட்சி வேலைசெய்வது தவறு என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது மட்டுமின்றி, தேசிய இனங்கள் பற்றி ஸ்டாலின் செய்திருந்த வரையறைகளை தவறாக வியாக்கியானம் செய்து கொண்டு, இலங்கைத் தமிழினம் ஒரு தேசிய இனம் இல்லையென்று வாதிட்டுவந்தார்.

4

1970 பொதுத்தேர்தலில் மிகவும் மோசமான தோல்வியைத் தழுவிய தமிழரசு - தமிழ்காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள், தமது ஏமாற்று அரசியல் இனிமேலும் தமிழ்மக்கள் மத்தியில் எடுபடாது என்பதைக் கண்டுகொண்டனர். எனவே ஏனைய பிற்போக்கு தமிழ் அரசியல் சக்திகளையும் சேர்த்துக் கொண்டு ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’ என்ற புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்கி, பிரிவினைவாத அரசியலை முன்னெடுக்க ஆரம்பித்தனர். அவர்களது இந்த முயற்சிக்கு ஐக்கிய தேசியக்கட்சியும் சர்வதேச ஏகாதிபத்திய சக்திகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவளித்தன. அவ்வாறு ஆதரவளித்தமைக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, 1970 பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று இடதுசாரிக்கட்சிகளையும் உள்ளடக்கிய ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசாங்கம் ஒன்று ஆட்சியில் இருந்ததால், அதனை எப்படியும் அகற்றிவிட வேண்டும் என்ற எண்ணமாகும்.

மற்றது, வடபகுதியில் 1965-70 காலகட்டத்தில் சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சி தலைமைதாங்கி நடாத்திய தீண்டாமைக்கு எதிரான போராட்டம் காரணமாக, அக்கட்சி தமிழ் மக்களில் மூன்றிலொரு பகுதியினரான தாழ்த்தப்பட்ட மக்களின் முழுமையான ஆதரவைப் பெற்றிருந்ததுடன், ஏனைய மக்களிலும் ஒரு கணிசமான பகுதியினரின் ஆதரவைப் பெற ஆரம்பித்திருந்தனர். மேலும அக்கட்சி (சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சி) பிரிவினைவாத சக்திகள் தலைதூக்கிய ஒரு சூழலில் தேசிய இனப்பிரச்சினையில் தீவிர அக்கறை செலுத்த ஆரம்பித்திருந்தது. எனவே தமிழ்மக்களின் தலைமைத்துவத்தை சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சி பெற்றுவிடுமோ என்ற அச்சம் பிற்போக்கு சக்திகளுக்கு ஏற்பட்டிருந்தது.

உண்மையில் தேசிய இனப்பிரச்சினையில் வேலைசெய்வதற்கு சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சிக்கு நல்ல ஒருவாய்ப்பு ஏற்பட்டிருந்தது. ஜக்கிய முன்னணி அரசாங்கம் 1972ல் கொண்டுவந்த புதிய குடியரசு அரசியல் சாசனத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்கனவே இருந்த சோல்பரி அரசியல் சாசனம் பாதுகாப்பளித்த 29வது சரத்து நீக்கப்பட்டிருந்தது. இது 1971ல் பங்களாதேஸ் பிரிவினையால் உற்சாகமடைந்திருந்த தமிழ் பிரிவினைவாதிகள் மேலும் பிரிவினைவாதப் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு வாய்ப்பாக அமைந்தது. இந்த சூழ்நிலைகளை கவனத்தில் எடுத்த சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் வடபிரதேசக்கமிட்டி 1972ல் “தேசிய ஒடுக்குமுறைக்கும் பிரிவினைக்கும் எதிராக தமிழ் மக்களே ஒன்றுபடுவீர்!” என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தேசிய இனப்பிரச்சினையில் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியது.

ஆனால் சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சண்முகதாசன் குழுவினர் இந்த அறிக்கையை நிராகரித்துவிட்டு, தொழிற்சங்க வேலையே கட்சியின் பிரதான வேலை என வாதிட்டனர். யாழ்ப்பாணத்தில் இருந்த சண்முகதாசனின் ஆதரவாளர்கள் சிலர், தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமாக உருவாகிவந்த புதிய அரசியல் சூழ்நிலையை கவனத்தில் எடுக்காமல், தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதே கட்சியின் பிரதான கடமை என வாதிட்டனர். இவ்வாறு தேசிய இனப்பிரச்சினையில் சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சி வேலைசெய்வதற்குக் கிடைத்த அரியவாய்ப்பை அவர்கள் நிராகரித்து விட்டனர்.

சண்முகதாசன் குழுவினர் மேற்கொண்ட தவறான முடிவால், ஏற்கனவே கட்சிக்குள் அவருக்கு எதிராக கட்சிக்குள் நடைபெற்றுவந்த உட்கட்சிப் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. சண்முகதாசனின் ‘இடதுசந்தர்ப்பவாத’ அரசியல் போக்கும், உட்கட்சி ஜனநாயகத்தை மீறிய செயல்பாடுகளும் அவரை கட்சியிலிருந்து நீக்கவேண்டிய ஒரு நிலைமைக்கு தலைமையை இட்டுச்சென்றது. 1972ல் அவரை நீக்கியபின்னர் புனரமைக்கப்பட்ட மார்க்சிச -லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய இனப்பிரச்சினை குறித்து ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுத்தது. தமிழ்மக்களின் பிரச்சினையை நியாயமான முறையில் தீர்த்துவைக்கும்படி கோரி ஒரு வெகுஜன இயக்கத்தை ஆரம்பிப்பது என மார்க்சிச -லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்து செயல்பட ஆரப்பித்தது. அதன்படி சகல தமிழ் ஜனநாயக சக்திகளையும் ஓரணியில் கொண்டுவரும் பொருட்டு ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’ என்ற பெயரில் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. அதன்சார்பாக ஜந்து அம்ச கோரிக்கை திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டு, நாடுபரந்தரீதியில் சுவரொட்டிப் பிரச்சாரமும், பொதுக்கூட்டங்கள்; கருத்தரங்குகள் என்பனவும் நடாத்தப்பட்டன. இதன்மூலம் கட்சி தமிழ்மக்கள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கையை ஊட்டியது.

மார்க்சிச - லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த செயல்பாட்டை சண்முகதாசன் குழுவினரும் சோவியத்சார்பு கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக்கட்சி என்பனவும் இனவாதரீதியானது என தவறாக வியாக்கியானம் செய்த போதிலும், தமிழ் பிற்போக்கு சக்திகள் கட்சியின் இச்செயல்பாட்டைக் கண்டு அச்சமடைந்தனர். மார்க்சிச – லெனினிச கட்சியின் செயற்பாடு தமது இனவாத செயற்பாடுகளுக்கும் பாராளுமன்ற பதவி வேட்டைக்கும் ஆப்பு வைத்துவிடும் என அவர்கள் அஞ்சினர். எனவே அவர்கள் சகல தமிழ் பிற்போக்கு சக்திகளையும் ஓரணியில் திரட்டியது மட்டுமின்றி, அதுவரைகாலமும் தாம்பின்பற்றி வந்த ‘சமஸ்டி கொள்கை’யைக் கைவிட்டு ‘தனித்தமிழ் ஈழம்’ என்ற தனிநாட்டுக் கொள்கையையும் பிரகடனம் செய்தனர். ஏனெனில் கம்யூனிஸ்ட்டுகள் முன்வைத்துவந்த ‘பிராந்திய சுயாட்சி’ கொள்கையும் சமஸ்டி கொள்கையும் ஏறத்தாழ ஒரேவகையான சராம்சத்தைக் கொண்டிருந்தபடியால், அதற்குக் கூடுதலான ஒன்றை முன்வைப்பதின் மூலம், கம்யூனிஸ்ட்டுகளை தமிழர் தேசிய இனப்பிரச்சினையிலிருந்து ஓரம் கட்டிவிடுவதே அவர்கள் போட்ட திட்டமாகும்.

ஜக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு - கிழக்கு பிரதேசங்களுக்கு சுயாட்சி என்பதே மார்க்சிச - லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையாக இருந்தது. இதனால் தாம் முன்வைக்கும் தனிநாட்டுக் கொள்கையை ஏற்கமுடியாமல் மார்க்சிச - லெனினிச கம்யூனிஸ்ட் தமிழ்மக்களிடமிருந்து தனிமைப்பட்டு விடுவார்கள் என்பதே தமிழ் பிற்போக்கு சக்திகளின் தந்திரோபாயமாக இருந்தது. தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தின் போது தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டும் தனித்துப்போராடி வெற்றி பெறமுடியாது எனக் கண்ட மார்க்சிச - லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி, ‘தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்’ என்ற அமைப்பை உருவாக்கி, நல்லெண்ணம் படைத்த உயர் சமூகங்களைச் சேர்ந்த மக்களையும் அணிதிரட்டிப் போராடி வெற்றி பெற்றதைப்போல, தமிழ்மக்களின் பிரச்சினைக்கான போராட்டத்தின் போதும், நியாயத்தை ஏற்கும் சிங்கள மக்களின் ஆதரவையும் திரட்டிப் போராடுவதின் மூலமே வெற்றிபெறமுடியும் என்பதே மார்க்சிச - லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தாக இருந்தது.

ஆனால் தமிழர் பிரச்சினைக்கு தனிநாடு அமைப்பதைத் தீர்வாக முன்வைத்துவிட்டால், மார்க்சிச - லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியால் அதற்கு சிங்கள மக்களின் ஆதரவைத் திரட்டமுடியாது என்பது தமிழ் பிற்போக்கு சக்திகள் போட்ட இன்னொரு திட்டமாக இருந்தது. இருந்தும் மார்க்சிச - லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்மக்கள் பிரச்சினைக்கு பாட்டாளிவர்க்க சர்வதேசியத்தின் அடிப்படையிலான தலைமை கொடுக்க வேண்டிய தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்காது செயற்பட்டு வந்தது. ஆனால் இம்முறை பிரச்சினை கட்சிக்கு வேறொரு வடிவத்தில் கிளம்பியது. சண்முகதாசனின் இடது சந்தர்ப்பவாத தவறுகளுக்கு எதிரான போராட்டத்தில் கட்சியுடன் இணைந்து நின்று, பின்னர் மார்க்சிச - லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவில் இடம் பெற்றிருந்த ஒரு சிறுகுழுவினர், கட்சியை சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பின்னால் இழுத்துச் சென்று அதன் வாலாக மாற்ற முயன்றனர். பலமுறை முயன்றும் திருத்தமுடியாத அவர்களது ‘வலது சந்தர்ப்பவாத’ நிலைப்பாடு காரணமாக 1978ல் அவர்களை மார்க்சிச – லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டிய நிலையேற்பட்டது.

அதன்பின்னர் 1979ல் கட்சி தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமாக கொழும்பில் இரண்டுநாள் விசேட மாநாடு ஒன்றை நடாத்தி தேசிய இனப்பிரச்சினையில் மேலும் தனது அக்கறையையும் கொள்கைகளையும் வெளிப்படுத்தியது. மார்க்சிச - லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியினால் ஆரம்பிக்கப்பட்ட ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’யின் வேலைகளை மேலும் விசாலமான முறையில் முன்னெடுக்கும் முகமாக விசேட செயலணிக்குழு ஒன்றையும் கட்சி நியமித்தது.

5

1977 ஆண்டுத் தேர்தலில் இலங்கையின் படுபிற்போக்கான அரசியல்வாதியும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விசுவாசமிக்க ஏவல்நாயுமான ஜே.ஆர்.ஜெயவர்தனவின் தலைமையில் ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் அமைத்தது. அதனைத் தொடர்ந்து அவ்வரசு இனப்பிரச்சினையை இராணுவரீதியாக கையாள ஆரம்பித்தது அதன் காரணமாக நாட்டின் அரசியல் சூழல் வெகுவேகமாக மாற்றமடையத் தொடங்கியது. அந்த நேரத்தில் நாட்டின் அரசியல் எதிர்காலத்தைச் சரியாக மதிப்பிடத் தவறிய ஏனைய அனைத்தும் செய்வதறியாது குழம்பிய நிலைக்குச் சென்றன. ஆனால் மார்க்சிச - லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான் ஏற்கெனவே வகுத்திருந்த சரியான கொள்கையில் நிலைத்து நிற்க முடிந்தது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கம் இனப்பிரச்சினையை இராணுவரீதியில் கையாள ஆரம்பித்த பின்னர், தமிழ் இளைஞர்கள் மத்தியில் பல்வேறு ஆயுதப்போராட்டக்குழுக்கள் உருவாகத் தொடங்கின. அவை பெரும்பாலும் தமிழ் பிற்போக்கு சக்திகளின் தலைமைக் கேந்திரமான தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிராகவே இருந்தன. இதற்குக் காரணம் இலங்கை கம்யூனிஸ்ட்டுகள் பிற்போக்குத் தமிழ் தலைமைக்கு எதிராக விடாப்பிடியாக செய்து வந்த அரசியல் அம்பலப்படுத்தல் பிரச்சாரமாகும். தமிழ் இளைஞர்கள் மத்தியில் உருவான போராட்டக்குழுக்களை ஒரு ஐக்கிய முன்னணியின் கீழ் கொண்டுவரும் முயற்சியிலும் மார்க்சிச - லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி தீவிரமாக ஈடுபட்டிருந்தது. இதனால் பிற்போக்குத் தமிழ் தலைமைகள் மீண்டும் பெரும் அச்சத்துக்குள்ளாகினர். ஆனால் மார்க்சிச - லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் இளைஞர் இயக்கங்களை ஐக்கியப்படுத்தும் நோக்கம் இரண்டு பகுதிகளிலிருந்து இடையூறுக்குள்ளானது.

ஒரு பக்கத்தில் பிற்போக்குத் தமிழ் தலைமைகள் இளைஞர்களின் இயக்கங்களை சீர்குலைக்கவும் பிளவுபடுத்தவும் முயற்சி செய்தன. மறுபக்கத்தில் தமிழ் இளைஞர் இயக்கங்களை தன்வசப்படுத்தும் வேலையை பிராந்திய வல்லரசான இந்தியா மேற்கொண்டது. ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த பெரும்பாலான தமிழ் இளைஞர் இயக்கங்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்தனர். இதனால் தமிழ் பிற்போக்கு சக்திகளும் பிராந்திய ஆதிக்க சக்திகளும் ஏகாதிபத்திய சக்திகளும் அவற்றினை அழிக்க அல்லது திசை திருப்ப முயன்றன. அதற்கு ஏற்ற வகையில் புலிகள் இயக்கத்தின் கொள்கைகளும் செயல்பாடுகளும் இருந்ததால், அவை புலிகள் இயக்கத்தினை திட்டமிட்ட முறையில் வளர்க்க ஆரம்பித்தனர். மேற்குலக ஏகாதிபத்திய சக்திகள் புலிகளை வளர்க்க ஆரம்பித்ததும், அன்று இருந்த அமெரிக்க - சோவியத் பனிப்போரில் சோவியத்தின் பக்கம் நின்ற இந்தியா, புலிகளுக்கெதிரான இயக்கங்களை தனது கைக்குள் போட்டுக் கொண்டது. அதன் காரணமாக தமிழ் மக்களின் தேசிய - ஜனநாயகப் போராட்டம் சர்வதேச ஆதிக்க சக்திகளின் சதுரங்கக்களமாக மாற்றப்பட்டது.

தமிழ் பிற்போக்கு சக்திகளும் ஏகாதிபத்திய சக்திகளும் மட்டுமின்றி, சிங்கள பிற்போக்கு சக்திகளும் அவர்களுடன் இணைந்து திட்டமிட்ட முறையில் புலிகள் இயக்கத்தின் கையைத் தூக்கிவிட்டு, ஏனைய தமிழ் போராட்ட சக்திகளை அழித்துவிட்டன. அவர்கள் புலிகள் இயக்கத்தைத் திட்டமிட்டு ஒரு பாசிச இயக்கமாக வளர்த்தெடுத்ததின் மூலம், தமிழ் மக்கள் மத்தியிலிருந்த முதலாளித்துவ ஜனநாயக சக்திகள், இடதுசாரி சக்திகள் உட்பட அனைத்து ஜனநாயக சக்திகளையும் அழித்தொழித்து, தமிழர்களை அரசியல் பாலைவனத்தில் கொண்டுசென்று நிறுத்தியுள்ளனர். அதன் காரணமாக இன்று தமிழ்மக்கள் தமது தேசிய இன உரிமைகளுக்காகப் போராடுவதற்கு முன்னதாக தமது ஜனநாயக - மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்காக புலிகளுக்கெதிரான போராட்டத்தை முதலில் நடாத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இன்னொருபக்கத்தில் தமிழ்மக்கள் மத்தியில் பாசிச இயக்கம் வேர்விட்டதன் காரணமாக, இலங்கையின் அரசு இயந்திரம் முன்னொருபோதும் இல்லாதவகையில் இராணுவமயப்பட்டுள்ளது. இது இலங்கையின் அனைத்து இனமக்களுக்கும் இன்னொரு பாறாங்கல்லாக தலையை அழுத்துகின்றது. இந்த நிலைமையில் இலங்கையின் கம்யூனிஸ்ட் இயக்கமும் சரி, ஒட்டுமொத்த இடதுசாரி இயக்கமும் சரி முழுமையான ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளன. அவர்கள் சரியான கொள்கைகளில்லாத, வேலைத்திட்டங்களில்லாத, ஸ்தாபன பலமற்ற, மக்கள் ஆதரவற்ற சிறுசிறு குழுக்களாகவே காட்சியளிக்கின்றனர். ஒருபக்கத்தில் ஒடுக்கப்படும் தேசிய இனமான தமிழ் மக்கள், புலிகளின் பாசிசப்பிடியில் சிக்கியிருக்க, மறுபக்கத்தில் தென்னிலங்கையின் ஸ்தாபனமயப்பட்ட தொழிலாளிவர்க்கமும் உழைக்கும் மக்களும் இடதுசாரிப் போர்வையில் உலாவரும் சிறுமுதலாளித்துவ - இனவாதக் கட்சியான ஜே.வி.பியினால் தவறாக வழிநடாத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பாரம்பரிய இடதுசாரிக்கட்சிகளான பாராளுமன்றவாதக் கம்யூனிஸ்ட் கட்சியும் ரொட்ஸ்க்கியவாத லங்கா சமசமாஜக் கட்சியும் அரசாங்கக் கூட்டணியில் இணைந்து கொண்டு, இலங்கையின் பற்றியெரியும் பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினையின் தீர்வுக்கு சரியான வழிகாட்டலைக் கொடுக்க முடியாது நிற்கின்றன. மறுபக்கத்தில் தமிழ்மக்களை தேசிய இனமல்லவென்று வாதிட்ட சண்முகதாசனின் இன்றைய வாரிசுகளான புதிய ஜனநாயகக் கட்சி என்ற தமிழ் இடதுசாரிக் குழுவினர், புலிகளே உண்மையான தேசிய விடுதலைச் சக்திகள் என்று கூறிக்கொண்டு அவர்களின் பின்னால் இழுபட்டுச் செல்கின்றனர். தன்னை மார்க்சிசக் கட்சியென்று சொல்லிக் கொண்டு செயல்படும் இன்னொரு கட்சியான ஜே.வி.பி. முற்றுமுழுதாக ஒரு சிங்கள இனவாதக் கட்சியாகவே செயல்படுகின்றது.

பொதுவாக இலங்கை இடதுசாரி இயக்கம் என்றாலும் சரி, இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கம் என்றாலும் சரி அவற்றின் இன்றைய மோசமான வீழ்ச்சிக்கு சில பிரதான காரணங்கள் உண்டு. முதலாவது காரணம், இலங்கையின் முதலாவது இடதுசாரிக் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியில் ஏற்பட்ட பிளவு. ரொட்ஸ்க்கியவாதத்தை கட்சிக்குள் புகுத்திய சமசமாஜத் தலைவர்களே இதற்கு பிரதான காரணகர்த்தாக்கள். இரண்டாவது காரணம், கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவாகும். குருஸ்சேவின் நவீன திரிபுவாதக் கொள்கைகளை இலங்கைக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் புகுத்த முயன்ற கட்சியின் திரிபுவாதத் தலைவர்களே இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும். புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியில் பின்னர் ஏற்பட்ட பிளவுக்கு பிரதானமானவர், அக்கட்சியில் இடதுசந்தர்ப்பவாத பாதையை முன்தள்ளிய என்.சண்முகதாசன் ஆகும்.

இலங்கையின் இடதுசாரி இயக்கம் இன்று பல சிறுகுழுக்களாக சிதறிச் சீரழிந்துபோயுள்ளமைக்கு, மேற்கூறிப்பிட்டவாறு அடுத்தடுத்து நிகழ்ந்த பிரதான பிளவுகளே பிரதான காரணமாகும். இதைத்தவிர இலங்கையில் இடதுசாரி இயக்கம் பலவீனப்பட்டுப் போயுள்ளமைக்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. அதாவது இடதுசாரிக்கட்சிகள் ஆளும் முதலாளித்துவக் கட்சிகளில் ஒன்றான சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டரசாங்களில் பங்குபற்றியமையாகும். ஓப்பீட்டளவில் ஐக்கிய தேசியக்கட்சியை விட சிறீலங்கா சுதந்திரக் கட்சி முற்போக்கானதாகவும் ஏகாதிபத்திய எதிர்ப்புத்தன்மை வாய்ந்ததாகவும் இருந்த போதிலும், அதுவும் ஒரு முதலாளித்துவ கட்சி என்ற வகையில் மறுபக்கத்தில் அது மக்கள் விரோத தன்மையையும் கொண்டதாகும். சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் விரோத தன்மைகள் பல தடவைகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

எனவே இத்தகைய அரசுகளில் இடதுசாரிக் கட்சிகள் பங்குபற்றுவதின் மூலம் அவற்றின் மக்கள் விரோத நடவடிக்கைகளிலும் பங்கேற்க வேண்டிய சூழல் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். இதனால் அக்கட்சிகள் மக்கள் ஆதரவை இழக்கவேண்டிவரும். அதுதான் இன்று நடந்துகொண்டிருக்கிறது. மக்களின் பிரதான விரோதியான ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்கு வருவதைத் தடுக்க வேண்டுமானால், சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசில் இணையாமல் வெளியிலிருந்துகொண்டு முக்கியமான பிரச்சினைகளில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசுகளுக்கு ஆதரவளித்திருக்க முடியும். இதுவே தேசிய முதலாளித்துவக் கட்சியொன்றுடனான ‘ஜக்கியமும் போராட்டமும்’ என்ற கொள்கையின் சாராம்சமாகும்.

பாட்டாளிவர்க்க கட்சியொன்று தனது சொந்த அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காகவே அனைத்துவித தந்திரோபாயங்களையும் கையாள வேண்டும் என்பதே, மார்க்சிச ஆசான்களும் புரட்சி வெற்றிபெற்ற நாடுகளின் அனுபவங்களும் வழங்கும் பாடமாகும். இன்று எமது இலங்கை நாட்டின் அரசியல் சூழலை நோக்குகையில், ஒருபக்கத்தில் சிங்கள முதலாளித்துவ வர்க்கத்தின் பேரினவாத அடிப்படையிலான ஆட்சியும், மறுபக்கத்தில் தமிழ்த் தேசிய பாசிசவாத அதிகாரமும் இலங்கையின் அனைத்து இனமக்களினதும் வாழ்வை சூறையாடி வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இந்த இரண்டு சக்திகளின் பின்னாலும் சர்வதேச ஏகாதிபத்தியம் செயல்படுகின்றது. இந்த மூன்று சக்திகளுமே இலங்கையின் அனைத்து மக்களினதும் பொதுவிரோதிகளாகும். எனவே இலங்கை மக்களின் இன்றைய தேவை, சிங்கள - தமிழ் முதலாளித்துவ சக்திகளையும் அவற்றுக்கு முண்டு கொடுத்துவரும் எகாதிபத்திய சக்திகளையும் தோற்கடித்து, இலங்கையை ஒரு இனச்சார்பற்ற, ஒரு மதச்சார்பற்ற, ஒரு மொழிச்சார்பற்ற, உண்மையான ஒரு ஜனநாயக நாடாக மாற்றியபைப்பதே.

அதன் பின்னரே சோசலிசத்தை நோக்கி நாடு முன்னேற முடியும். இந்தப்பணி ஒரு உண்மையான தொழிலாளிவர்க்க கட்சியால் மட்டுமே நிறைவேற்றப்பட முடியும். ஆனால் யதார்த்தத்தில் அவ்வாறான கட்சியொன்று இன்று இலங்கையில் இல்லையென்பதே உண்மையாகும். எனவே அவ்வாறான கட்சியொன்றைக் கட்டியமைப்பதே எமது இன்றைய தலையாய பணியாகும். இன்றைய சூழலில் அவ்வாறான கட்சியொன்றை எவ்வாறு கட்டியமைப்பது என்ற கேள்வி எமக்கு முன்னால் எழுந்து நிற்கின்றது. இலங்கையில் தற்போது பெயரளவில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இடதுசாரிக் கட்சிகளை ஜக்கியப்படுத்தி, அந்த நோக்கத்தை அடைவதென்பது நடைமுறைச் சாத்தியமில்லாதது என்பதை கடந்தகால அனுபவங்கள் நிருபித்துள்ளன. ஆனாலும் அவைகளை தொடர்ந்தும் இடதுசாரி அணியில் பேணுவதென்பது மிகவும் அவசியமானது.

அதேவேளையில் புதிய, புரட்சிகரமான, உண்மையான மார்க்சிச - லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியொன்றை உருவாக்குவதே இலங்கைப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான இன்றைய தேவையாகும். சர்வதேச அனுபவங்களும் அதையே எமக்குப் புகட்டுகின்றன. ஏறத்தாழ எம்மைப் போன்ற சமூக அமைப்புகளைக் கொண்ட ஆசிய நாடுகளான பிலிப்பைன்ஸ், நேபாளம் போன்ற நாடுகளில், பழைய வகையான கம்யூனிஸ்ட் கட்சிகள் சீரழிந்துபோன நிலையில், அவற்றின் தலைமைகளைக் கடந்து சென்று உருவாக்கப்பட்ட புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சிகளே, இன்று அந்நாடுகளின் புரட்சிகளை வெற்றியை நோக்கி இட்டுச் செல்கின்றன. அவற்றின் அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்டு, இலங்கைக்கான சொந்த பாதையையும் வழிமுறைகளையும் வகுத்துக்கொண்டு முன்னேறுவதே எமக்கு முன்னாலுள்ள ஒரேயொரு பாதையாகும். இலங்கையின் உண்மையான புரட்சியாளர்கள் அனைவரும் அதற்காக தம்மை அர்ப்பணித்து வேலைசெய்ய முன்வரவேண்டும்.

இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கம் நீடுழி வாழ்க!
மார்க்சிசம் - லெனினிசம் ஓங்கி வாழ்க!
ஒட்டுமொத்த இலங்கைப் புரட்சி வெல்லுக!

மார்க்சிச - லெனினிச ஆய்வு மையம்
இலங்கை
மூலப்பிரதி: 15 - 07 - 2008 வெளியீடு: 03 - 09 - 2008
உங்கள் கருத்துகளை அனுப்பி வைப்பதற்கும் மார்க்சிச - லெனினிச ஆய்வு மையத்தின் முன்னைய வெளியீடுகளை பெற்றுக்கொள்வதற்கும் தொடர்பு கொள்ளவேண்டிய எமது மின்னஞ்சல் முகவரி: [email protected]


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com