Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

தமிழீழத்தின் தன்னாட்சி உரிமை சாகாவரம் பெற்றது!
செல்வவேந்தன்

இலங்கை இந்தியநாட்டின் தென்கீழ்கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடல் கிட்டத்தட்ட இருபது மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு. இலங்கையின் வரலாறு மகாவம்சத்தின்படி கி.மு.6 ஆம் நூற்றாண்டு அளவில் இந்தியாவின் கங்க நாட்டிலிருந்து துரத்திவிடப்பட்ட அந்நாட்டு இளவரசனான விஜயன், தனது ஆட்களுடன் இலங்கையில் வந்து இறங்கியதுடன் ஆரம்பமாகின்றது. எனினும் இதற்கு முன்னரே எல்லாளன் என்ற தமிழ் அரசனது ஆட்சியின் கீழ் இலங்கை இருந்ததை அதே மகாவம்சம் நூல் தெரிவிக்கிறது. பின்னர் இந்தியாவை போலவே ஆங்கிலேயரின் ஆட்சியில் 133 வருடங்கள் கழித்த இலங்கை, 1948 ல் சுதந்திரம் பெற்றது. ஆட்சி அதிகாரம் சிங்களர் கைக்கு மாறியது.

Prabakaran ஆங்கிலேயர் காலத்தில் சுமூகநிலையில் இருந்து வந்த தமிழ் சிங்கள இனங்களுக்கிடையேயான தொடர்புகள், சிறிது சிறிதாக சீர்கெடத் தொடங்கின. இனமுரண்பாடுகளின் வெளிபாடுகள் அரசியல், பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, குடியேற்றம் போன்ற பலதரப்பட்ட துறைகளிலும் காணப்பட்டன. தனி சிங்களச்சட்டம்-1956, பௌத்தம் அரசு சமயமாக்கப்படல், இலங்கை குடியுரிமைச் சட்டம் -1948 (இதன் மூலம் இலட்சக்கணக்கான மலையக தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது), கல்வி தரப்படுத்துதல் சட்டங்கள், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் (தமிழர்களின் மரபு வழித் தாயகப் பகுதிகளில்) போன்ற சட்டத்திட்டங்களை கொண்டுவந்தது இலங்கை அரசு.

அதோடு அரசே திட்டமிட்டு தமிழர்களுக்கு எதிராக கலவரங்களை ஏற்படுத்தியது. 1958 இல் ஆரம்பித்து தமிழர்களுக்கெதிரான இன கலவரங்கள் அடிக்கடி நிகழத் தொடங்கின. 1958, 1977, 1983 (கறுப்பு ஜூலை), பிந்துனுவேவா படுகொலைகள் போன்றவை திட்டமிட்டு நடத்தப்பட்டன. இவற்றில் இலட்சக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். பல ஆயிரம் பேர் பலியாகினர். சட்டத்துக்குப் புறம்பாக தமிழர்கள் சித்ரவதை செய்யப்பட்டனர். பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். சிங்களமயமாக்கம் மூலம் இலங்கை தமிழர்கள், பழங்குடிகள், முஸ்லீம்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டனர். உலகமே இந்த படுகொலைகளை கண்டனம் செய்தன.

இந்த தமிழின அழிப்பை எதிர்த்து தமிழ்மக்கள் போராட்டம் நடத்தினர். அதில் முக்கியமாக ஈழத்தந்தை எனப்படும் செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுகட்சி அறவழி போராட்டங்களை மேற்கொண்டது. அவரை தொடர்ந்து அமிர்தலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள் அறப்போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனால் இலங்கை அரசு மீண்டும் மீண்டும் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டது. சிங்கள ராணுவத்தைக் கொண்டு தமிழர்களுக்கெதிரான வன்முறைகளை ஏவிவிட்டது. அதற்கேற்ப சிங்கள ராணுவத்தினரும் தமிழர்களுக்கெதிராக வெறித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர்.

அப்போதுதான் சிங்கள அரசின் வன்முறைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டங்களை முன்னெடுத்தனர். பல போராளி குழுக்கள் உருவாகின. அவற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டும்தான் உறுதியுடன் நின்று, அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் கடந்த முப்பது வருடங்களாக தமிழீழ மக்களின் தன்னாட்சிக்காக போராடி வருகின்றது. ஈழத்தமிழர்கள் கேட்கும் தன்னாட்சி அதிகாரம் எந்த அளவுக்கு சரியானது என்பதை புரிந்துகொள்ள தன்னாட்சியை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

தன்னாட்சி உரிமை என்பது "மக்கள் திரள் ஒன்று அதன் அரசு விசுவாசத்தை அல்லது ஆட்சி முறையைத் தீர்மானிக்கும் சுதந்திரம்” எனப்படுகிறது. இத்தன்னாட்சியை கோருபவர்கள் முதலில் ஒரு தேசிய இனமாக இருக்க வேண்டும். ஒரு தேசிய இனத்தினால்தான் தன்னாட்சி உரிமைக்காக போராடமுடியும். இதனை வி.இ. லெனின் தனது "தேசிய இனங்களின் பிரச்சினை குறித்து” என்ற நூலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்:

"ஒரு மொழி, ஓர் ஆள்புலம், மூலவளம், உளப்பாங்கு, பண்பாடு, திண்மை கொண்டு மலர்ந்த வரலாற்று படைத்த ஒரு சமூகமே ஒரு தேசிய இனம் ஆகும். தன்னாட்சியுடன் வாழும் உரிமை ஒரு தேசிய இனத்துக்கு உண்டு. ஏனைய தேசிய இனங்களுடன் கூட்டாட்சி அடிப்படையில் கூடி வாழும் உரிமையும் அதற்குண்டு. அத்துடன் முற்றிலும் பிரிந்து செல்லும் உரிமையும் அதற்குண்டு. தேசிய இனங்கள் இறைமை படைத்தவை, ஒன்றுக்கொன்று சரிநிகரானவை. தேசிய இனங்களுக்குப் பரந்தஅளவில் தன்னாட்சி அளிக்கப்பட வேண்டும். மத்திய அரசின் தலையீடு ஒழிக்கப்பட வேண்டும். ஒரு மொழி கட்டாய ஆட்சி மொழியாக விளங்கக் கூடாது. உள்ளூர் மக்களே தத்தம் சமூக, பொருளாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு தமது ஆள்புல எல்லைகளை வரையறுக்க வேண்டும்’ என்கிறார் வி.இ.லெனின். இந்த கோட்பாடுகளை கொண்டு பார்க்கும்போது தமிழ் இனம் ஒரு தேசிய இனத்திற்கான அனைத்து தகுதிகளும் முழுமையாக பெற்றுள்ளது. இதனை உலக அறிஞர்கள் பலரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஐ.நா. பொது அவை 1960 ல் "மக்கள் திரள்கள் அனைத்துக்கும் தன்னாட்சி உரிமையுண்டு” என்பதை ஏற்றுக்கொண்டது. அதேபோல உலக மனித உரிமைப் பிரகடனம் 1948 இல் வெளியிடப்பட்டது. அதில் இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் கருத்து மற்றும் பிற கருத்துகள் தாயகம் அல்லது தாய்ச்சமூகம், உடமை, பிறப்பு மற்றும் பிற வேறுபாடுகளின்றி சரிநிகரான உரிமைகளை அனுபவிக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு” என பிரகடனப்படுத்தியது.

உலக அளவில் தேசிய இனங்களின் சுய நிர்ணயம் பற்றிய கருத்துகள் மேலோங்கியதனால்தான் இங்கிலாந்திலிருந்து அயர்லாந்தும், ரஷ்யாவிலிருந்து போலாந்தும் பின்லாந்தும், சுவீடனிலிருந்து நார்வேயும் விடுதலைப் பெற்றன. அதன்பின் யுகோசிலோவியாவுக்குள் ஒடுக்கப்பட்ட குரோசியா, போஸ்னியா கெசகோவினா, மெந்தெனிகிறோ ஆகிய தேசங்கள் தனி நாடுகள் ஆகின. அதேபோல 1971 ல் வங்காள தேசமும், 1993 ல் எரித்திரியாவும், 2002 ல் கிழக்கு தைமூரும், 2008 ல் கொசொவோவும் தனிநாடுகளாக மலர்ந்தன.

ஆக, தமிழ் இனம் ஒரு முழுமையான தேசிய இனம். அதற்கு தன்னாட்சி அதிகாரம் உண்டு என்பதன் அடிப்படையில்தான் 1976 ம் ஆண்டு இலங்கையின் முக்கிய தமிழ்கட்சிகள் உள்ளடக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக் கோட்டையில் மாநாடு ஒன்றை நடத்தியது. அந்த மாநாட்டில் "வட்டுக் கோட்டை தீர்மானம்” என்ற புகழ்பெற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவை. 1. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும். 2. அதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி உரிமை வேண்டும். 3. அதற்காக முழு மூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப்பணிப்புகளோடு நாம் முன்னெடுக்க வேண்டும் என பிரகடனப்படுத்தியது. இத்தீர்மானம் இலங்கையில் தமிழ் தேசத்தின் இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சுதந்திர, இறைமையுள்ள, மதச்சார்பற்ற, சோசலிசத் தமிழீழநாட்டை அமைக்க வேண்டுமென கோரியது.

Eelam Flag 1977 பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி தமிழர் பிரதேசங்களில் பெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றி தமிழரின் கனவு சுயநிர்ணய உரிமையே என்பதை பறைசாற்றியது. மக்கள் தீர்ப்பை உள்வாங்காத இலங்கை அரசு தமிழரின் உரிமை போராட்டத்தை நசுக்கியது. இதனை எதிர்த்து தமிழரின் தன்னாட்சி அதிகாரத்திற்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை விடுதலைபுலிகள் இயக்கம் நடத்திவருகிறது. இதில் இந்தியாவின் பங்கு முக்கியமானதாகும். ஈழ மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட இந்திய அரசு 1987 க்கு முன்புவரை விடுதலைப்புலிகள் உள்ளிட்ட பல்வேறு ஈழப் போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து வந்தது. இந்திராகாந்தி மறைவுக்கு பின்னர் இந்திய இலங்கையின் வெளியுறவு கொள்கையில் பெருமளவு மாற்றம் ஏற்பட்டன.

1998 ஆம் ஆண்டில் இந்திய இலங்கை அரசுகளுக்குமிடையே வர்த்தகம் மற்றும் ராணுவ நெருக்கம் உருவானது. 2002 ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே தடையற்ற வர்த்தகம் ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைக்கு வந்தது. இந்த பொருளாதார நெருக்கத்திற்கு இணையாக ராணுவப் பிணைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கத்தின் அடிப்படையில் வாஜ்பாய் ரணில் விக்கிரமசிங்கே கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதன்பின் இலங்கையில் ராஜபக்சே கூட்டணி 2005 இல் பதவியேற்றபோது “சிறீலங்காவின் தேசப்பாதுகாப்பிற்கு இந்தியா பொறுப்பேற்று கொண்டிருக்கிறது. சிறீலங்காவின் இறையாண்மையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்கு இந்தியா தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும்’’ என இலங்கைக்கான இந்திய தூதர் நிரூபமா ராவ் தெரிவித்தார். இதன் மூலம் இந்திய அரசு, இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடும் உரிமையும், தெற்காசியப் பகுதியில் தனது மேலாண்மையை உறுதி செய்து கொள்ளும் உரிமையும் தனக்கு உண்டு என கூறிவருகின்றது. இந்த பின்னணியில்தான் நான்காவது ஈழப்போரில் தமிழீழ விடுதலைப்புலிகள் பின்னடைவை சந்தித்தனர்.

நடந்து ‘முடிந்த’ இந்த போரில் இலங்கை ராணுவத்தால் அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழின மக்கள் கொல்லப்பட்டனர். பல ஆயிரக்கணக்கானவர்கள் நடைபிணமாகினர். உயிர்காக்கும் மருந்துகள் கூட தடுத்து நிறுத்தப்பட்டன. சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் மற்றும் இரசாயன குண்டுகளை சொந்த நாட்டு மக்கள் மீது ஈவு இரக்கமின்றி வீசி ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழீழ மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஐ.நா. சபை உட்பட மேற்கத்திய நாடுகள் போர்நிறுத்தம் செய்யும்படி இலங்கை அரசை கேட்டும் தமிழின மக்கள் மீது கனரக ஆயுதங்களை பயன்படுத்தி கொன்று குவித்தது ராஜபக்சே அரசு. வரலாறு கண்டிராத போர் குற்றங்களை செய்துள்ள சிங்கள ராணுவம் தெற்காசிய நாடுகளில் சீனா உட்பட, இலங்கை இனப் பிரச்சினைக்கு ராணுவ தாக்குதல் தீர்வாகாது என ஒருபுறம் பேசிக்கொண்டே இன்னொரு புறம் ஆயுதங்களை வழங்கிவருகின்றன. எது எவ்வாறாயினும் சர்வதேச தமிழினம் ஏற்றுக் கொண்டுள்ள விடுதலைபுலிகளும், அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் தற்சமயம் பின்னடைவை சந்தித்திருப்பினும், தமிழீழத்தின் தன்னாட்சி கோரும் உரிமை சாகாவரம் பெற்றவை என நிரூபிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை!

- செல்வவேந்தன் ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com