Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

இன்றைய சமூகச் சூழலில் சமச்சீர் சட்டக் கல்வி
ஜி.செல்வா


இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து, அந்த மக்களின் விடுதலைக்காக மட்டுமின்றி, இந்திய நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்காக பல தளங்களில் பெருமைப்படத்தக்க பங்களிப்பு செய்துள்ள மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயரை சாதிய நோக்கோடு இருட்டடிப்பு செய்தது, சட்டக்கல்லூரி மாணவர்களிடையே மோதலாக வெளிப்பட்டு, நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

'டாக்டர் அம்பேத்கர்' அரசு சட்டக் கல்லூரி மாணவர்களிடையேயான மோதலுக்கு அடிப்படையான காரணங்களில் ஒன்று, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் சுயமரியாதையை ஏற்காத 'சாதிய ஆதிக்க உணர்வு' இரண்டு, சாதிய அடையாளத்தோடு, ஆதிக்க சாதி உணர்வோடு இருக்கும் மாணவர்களின் சிந்தனையை, கருத்தோட்டத்தைக் கேள்விக்குள்ளாக்கி, பகுத்தறிவு சிந்தனையை, அறிவியல் கருத்தோட்டத்தை வளர்க்காத 'கல்விமுறை - கல்வி நிலையம்'.

law college ஆனால், சட்டக்கல்வி நிலைய மாணவர் வன்முறை குறித்து, கருத்துத் தெரிவித்த பல பத்திரிகைகள், அறிஞர் பெருமக்கள், தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் பேசிய அரசு வழக்கறிஞர், உயர் நீதிமன்ற தீர்ப்பு ஆகியன, பிரச்சனையின் உண்மை முகத்தை மறைத்து, கருத்துக்களையும், தீர்ப்புகளையும் வெளியிட்டு வருகின்றன. இப்பிரச்சனை குறித்து அரசு தரப்பில் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் முன் வைத்த கருத்துக்களின் அடிப்படையில் நீதிமன்றத் தீர்ப்பும் வெளிவந்துள்ளது.

அதில், கல்வி வளாகத்தில் அரசியல், சாதி ரீதியிலான நடவடிக்கைகளுக்குத் தடை. போஸ்டர்கள், நோட்டீஸ்கள் போன்றவற்றை கல்லூரி வளாகத்திலோ அல்லது அருகிலோ ஒட்டுவதற்குத் தடை - இதை மீறும் மாணவர்கள் சஸ்பெண்ட் - ஒழுங்கு நடவடிக்கை.

மாணவர் சேர்க்கையை ஒழுங்கு படுத்த சட்டக் கல்லூரிகளுக்கு மீண்டும் நுழைவுத் தேர்வு.

தற்போதுள்ள விடுதியை மூடவேண்டும் - புதிய விடுதியை வேறு இடத்தில் கட்ட வேண்டும்.

தனியார் சட்டக் கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும்.

உள்ளிட்ட பல கருத்துக்களை நீதி மன்றம் வெளியிட்டுள்ளது. இதில் ஒரு சில வரவேற்கத்தக்க கருத்துக்கள் இருந்த போதிலும், பல்வேறு கேள்விகளும் எழுகின்றன.

தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிக்கு அனுமதி கிடையாது, மாவட்டம் தோறும் அரசு சட்டக் கல்லூரி துவங்குவது என்பது தமிழக அரசின் கொள்கை நிலைப்பாடு. ஆனால், இந்த நிலைப்பாட்டுக்கு மாறாக நீதிமன்றத்தில் தனியார் சட்டக் கல்லூரிகள் திறக்கப்பட வேண்டுமென அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டது ஏன்?

தமிழகத்தில் தொழிற்கல்விக்கு நுழைவுத் தேர்வு நடத்தினால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி நுழைவுத் தேர்வு நடத்துவதை தடுக்க சட்டம் இயற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்ற தமிழக அரசு, தற்போது மாணவர் சேர்க்கையை 'ஒழுங்கு படுத்த' நுழைவுத் தேர்வு என்று கூறினால், யாரை 'ஒழுங்குபடுத்த'?

அரசியலமைப்புச் சட்டம் நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. அதுபோல, அந்த உரிமையைப் பாதுகாக்க வேண்டிய வழக்கறிஞர்களை உருவாக்கக் கூடிய சட்டக் கல்வியைக் கொடுப்பதும் அரசின் கடமை. எனவேதான் பார் கவுன்சில், ஒவ்வொரு சட்டக் கல்லூரியும் எந்தெந்த அடிப்படை வசதிகளோடு செயல்பட வேண்டு மென்று சட்டரீதியாகவே சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த பார் கவுன்சில் விதிமுறைப்படி தமிழகத்தில் சட்டக் கல்லூரிகள் செயல்படுகிறதா? அவ்வாறு செயல்படவில்லையெனில், செயல்படவைக்க உத்தரவிடவேண்டிய நீதிமன்றம், அதற்கு மாறாக மேம்போக்கான ஆலோசனைகளை வழங்குவது சட்டக் கல்லூரியின் தரத்தை உயர்த்துவதற்கு உதவுமா?

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட, லிங்டோ குழு, கல்வி வளாகங்களில் மாணவர்களிடையே ஜனநாயகக் கருத்தோட்டத்தை வளர்த்தெடுக்க, மாணவர் பேரவைத் தேர்தல் உள்ளிட்டு, பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கியுள்ளது. இவ்வழிகாட்டுதல்களை அமல்படுத்தப்பட வேண்டுமென உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. ஆனால், சென்னை உயர்நீதிமன்றமோ சட்டக் கல்லூரியில் கல்லூரி வளாகத்தின் அருகில் கூட அரசியல் ரீதியான நோட்டீஸ், சுவரொட்டி வெளியிட தடைவிதித்திருப்பது, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானதுதானே?

கடந்த பத்தாண்டுகளாக, அரசு தரப்பும், சில அதிகார வர்க்கத்தினரும், தங்கள் அரசியல் கருத்தோட்டத்துடனான சுயலாபத்திற்காகச் சென்னை மாநகரின் மையப்பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மற்றும் மாணவர் விடுதியை அங்கிருந்து அகற்ற திட்டமிட்டு சதிவலைகளை பின்னி வருகின்றனர். சட்ட மாணவர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தால் பல முறை இந்த சதி முயற்சிகள் தகர்க்கப்பட்டுள்ளன. தற்போது மாணவர்களுக்கிடையேயான மோதலை காரணம் காட்டி, தற்போதுள்ள அரசு விடுதியை மூட உத்தரவிட்டதன் நோக்கம் என்ன? இதுபோன்ற பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.

பிரச்சனையின் மூலவேரும் - தேவைப்படும் மாற்றங்களும்

சட்டக்கல்லூரியில் மட்டும் மாணவர்கள் பலர் சாதி அடையாளத்தோடு பிளவுபட்டு நிற்பது ஏன்? என பலர் அப்பாவித்தனமாகக் கேள்வி எழுப்புகின்றனர். இன்றைய அரசு சட்டக் கல்லூரிகள் தமிழ் சமுதாயத்தின் அடையாளங்களை பிரதிபலிப்பனவாகவே உள்ளன. சமீபத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, 22 மாவட்டங்களில் 400 கிராமங்களில் எடுத்த ஆய்வின் படி, 173 வடிவங்களில் தீண்டாமை கொடுமைகள் நிலவுவதாக சுட்டிக்காட்டியுள்ளது. இத்தீண்டாமை கொடுமைகளை எதிர்த்த உரிமைக் குரல்களும், சாதி ஆதிக்க உணர்வோடு எதிர்ப்புக் குரல்களும் தமிழகத்தில் மோதிக் கொண்டிருக்கின்றன.

மத்திய, மாநில அரசுகளின் கொள்கையினால், பாதிக்கப்படும் உழைக்கும் மக்கள், இக்கொள்கைகளுக்கு எதிராக ஒற்றுமையுடன் போர்க்குரல் எழுப்பாமல் தடுக்க ஆளும் வர்க்கம் திட்டமிட்டு சாதிய அடையாளத்தைப் பாதுகாத்து வருகிறது. இது கிராமப்புற மாணவர்கள் தொழிற்கல்வி படிக்க வாய்ப்பாக இருக்கும் அரசு சட்டக் கல்லூரியில் பிரதிபலிக்கச் செய்கிறது. எப்படி சமூகத்தின் பிரதிபலிப்பு கல்வி நிலையத்தில் எதிரொலிக்கிறதோ, அவ்வாறே கல்வி நிலையத்தின் பிரதிபலிப்பும் சமூகத்தின் சமூக வளர்ச்சிக்கும் எதிரொலிக்க வேண்டும். இதற்கேற்றவாறு கல்வி முறையும், கல்வி நிலையமும் இருக்க வேண்டும்.

பல்வேறு அடையாளங்களோடும், பின்புலத்தோடும் வரும் மாணவர்களிடம் ஒற்றுமையையும், ஜனநாயக கருத்தோட்டத்தையும் வளர்க்க வேண்டியது கல்வி முறையின் கடமை என குறிப்பிட்ட கோத்தாரி கல்விக் குழு, அவ்வாறு செயல்படுவதற்கு சமச்சீர் கல்வி அவசியம் என மிகச் சரியாகவே சுட்டிக்காட்டியது. சட்டக் கல்லூரியின் பிரச்சனை குறித்து, மிகச் சரியாகவே கண்டுபிடித்த அன்றைய தமிழக அரசு, அதற்காக முன் மொழிந்த தீர்வுதான் கோத்தாரி கல்விக் குழு முன்மொழிந்த சமச்சீர் கல்விக்கு எதிராக இருந்தது.

சென்னையில் செயல்படும் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை மூடிவிட்டு, அதற்கு பதிலாக சட்டக் கல்வியின் தரத்தைப் பாதுகாக்க ஹானர்ஸ் படிப்பை துவக்கியது. பள்ளி (அ) கல்லூரி இறுதித் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களின் படி சட்டக் கல்லூரியில் சேர இருந்த வாய்ப்பை, வருடத்திற்கு 400 ரூபாய் கல்விக் கட்டணம் என்று இருந்த நிலையை மாற்றி பள்ளி இறுதித் தேர்வில் 70 சதம் மதிப்பெண்ணும், வருடத்திற்கு 80 ஆயிரம் ரூபாய் கட்டணமும் செலுத்தக் கூடியவர்கள்தான் பி.எல். (ஹானர்ஸ்) படிக்க முடியும் என்ற விதிமுறைகளை உருவாக்கி தரத்தைப் பாதுகாக்க வழி வகைகளை உருவாக்கினார்கள்.

மாணவர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தினால், டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் ஒரு கண்ணில் வெண்ணெய், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு என்பது போல வாய்ப்பு, வசதி உள்ளவர்களுக்கென, அனைத்து வசதிகளும் உள்ள 'ஒரு கல்லூரி ஒரு படிப்பு', வாய்ப்பு வசதியற்ற மாணவர்களுக்கு 'ஒரு கல்லூரி ஒரு படிப்பு' என்ற சூழல் தமிழகத்தில் உருவாக்கப்பட்டு விட்டது. இதன் காரணமாகத்தான் ஒரு நாளைக்குக் குறைந்தது நான்கு வகுப்புகளாவது அரசு கல்லூரியில் நடத்த வேண்டும் என்று நீதிமன்றமே உத்தரவிட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

சமத்துவம், சமூக நீதி போன்றவை கல்வியில் பிரதிபலிக்க வேண்டுமெனில், கோத்தாரி கல்விக்குழு பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது போல, சமச்சீர் கல்வி, அதாவது இங்கு 'சமச்சீர் சட்டக் கல்வி' தேவை. அப்போதுதான் பல்வேறு கருத்துக்கள் மோதி புதிய கருத்துக்களும், சிந்தனைகளும் செழித்தோங்கும் இடமாக சட்டக் கல்லூரி வளாகங்கள் மலரும்.

சட்டக் கல்லூரிகளில், ஜனநாயக சிந்தனைகள், கருத்தோட்டங்கள் வளர்வதற்கான சூழலை உருவாக்க வேண்டியது முதல் தேவையாக உள்ளது. அவ்வாறு உருவாவதற்கு ஜனநாயக ரீதியாகச் செயல்படும் மாணவர் அமைப்புகள் கல்வி வளாகத்தில் இயங்குவது இன்றைய சூழலுக்கு மிக முக்கியமாகும். சமச்சீர் சட்டக்கல்வி மற்றும் கல்வி நிலைய ஜனநாயகமும் இவற்றிற்கான போராட்டமும், அதற்கு மக்கள் இயக்கங்களின் ஆதரவும் இன்றைய தேவை.

கட்டுரையாளர் : அகில இந்திய இணைச்செயலாளர்- இந்திய மாணவர் சங்கம்

- ஜி.செல்வா ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com