Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

ஏழை நாடுகளுக்கு outsource ஆகும் விவசாயம்
சதுக்கபூதம்

அவுட் சோர்ஸிங் என்பது உற்பத்தி, சேவை என அனைத்து துறைகளிலும் கொடி கட்டி பறக்கும் காலமிது. விவசாயம் மட்டும் இதற்கு விதி விலக்கா என்ன? விவசாயமும் தற்போது ஆப்ரிக்க மற்றும் ஆசிய நாடுகளுக்கு அவுட் சோர்ஸ் ஆக தொடங்கி உள்ளது. மற்ற துறைகளில் அவுட் சோர்ஸிங் என்றால் வளரும் நாடுகளுக்கு புதிய வேலை வாய்ப்பு, அன்னிய முதலீடு என்று ஒரு சில பயன்கள் கிடைக்கும். ஆனால் விவசாயம் அவுட் சோர்ஸ் செய்யப்படுவதால் ஏழை நாடுகள் மிகப் பெரிய பட்டினி சாவிற்கு அழைத்து செல்லப்பட இருக்கின்றனர்.

Paddy land சோமாலியா, சூடான் போன்ற நாடுகள் பற்றி கேள்விப்பட்டாலே நம் அனைவரின் கண் முன்னாலும் நிற்பது அந்நாட்டு மக்கள் பட்டினியில் வதைபடுவது பற்றி நாம் பார்த்த புகைப்படங்களாகத் தான் இருக்கும். அவ்வாறு பஞ்சத்தில் வாழும் நாடுகள் உணவுப் பொருட்களை சீனா மற்றும் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய போகிறார்கள் என்றால் ஆச்சிரியமாக இருக்கிறதா? அது தான் உண்மை!

உலக மக்கள் தொகை இன்று இருப்பதைவிட 2050ல் ஐந்து பில்லியன் உயரக்கூடும். ஆனால் விவசாய நிலமோ அதற்கேற்ப உயர சாத்தியம் இல்லை. தற்போது பெட்ரோலியப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு நாளை உணவுப் பொருளுக்கும் வரக் கூடிய சாத்தியக் கூறு அதிகம் உள்ளது. இன்று அரபு நாடுகளிடம் பெட்ரோடாலர் பணம் அதிகம் குவிந்துள்ளது. சீனா, கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிடம் ஏற்றுமதி மூலம் அதிக அன்னிய செலவாணி குவிந்துள்ளது. இந்த இரண்டு வகை நாடுகளும் வருங்காலத்தில் தனது மக்களின் உணவுப் பொருட்களுக்கான தேவைக்கு வெளிநாடுகளை சார்ந்திருக்கும் கட்டாயத்தில் உள்ளன. இது ஒருபுறம் இருக்க மறுபுறமோ முதலீடுகளுக்கு வழி இல்லாமல், நல்ல இயற்கை வளங்கள், ஊழல் எதேச்சதிகார ஆட்சியாளர்களைக் கொண்டு, அவ்வப்போது பஞ்சத்தில் வாடும் ஏழை ஆப்ரிக்க நாடுகளும், ஒரு சில ஆசிய நாடுகளும் உள்ளன.

இவ்வகை நாடுகளிடம் அன்னிய முதலீட்டு கையிருப்பும் மிக குறைவு. அதன் விளைவு

1. உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் அரபு மற்றும் ஆசிய நாடுகள் ஏழை ஆப்ரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் பணத்தை முதலீடு செய்கின்றனர். மிக அதிக அளவில் நிலங்களை வாங்கிக் குவித்து அல்லது நீண்ட கால குத்தகைக்கு எடுத்து, சிறு மற்றும் குறு ஏழை விவசாயிகளின் நிலங்களைப் பிடுங்கி தங்கள் நாடுகளுக்குத் தேவையான உணவை நவீன விவசாயம் செய்து இறக்குமதி செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

2.தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் நிதித் துறையில் பெரும் லாபம் குறைவதாலும், உணவு பொருளின் விலை ஏற்றத்தாலும் தனியார் முதலீட்டு நிறுவனங்களும், மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்களும் ஏழை நாடுகளின் விவசாயத்தில் அதிக முதலீடு செய்து பெரும் லாபம் பார்க்க முனைகின்றனர். இதனால் பெரும்பாலான ஏழை விவசாயிகள் தங்கள் நிலத்தை இழந்து வறுமையின் பிடிக்கு செல்ல வாய்ப்பு உள்ளது

விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பிடுங்குவது வரலாற்றில் புதிது அல்ல. அமெரிக்கா செவ்விந்திய மக்களிடமும், ஆப்ரிக்க, ஆஸ்திரேலிய பழங்குடி மக்களிடமும் ஐரோப்பியர்கள் நிலத்தைப் பிடுங்கியது வரலாற்று செய்தி. ஆனால் இன்று ஏழை நாடுகளிடம் மீண்டும் நிலத்தைப் பிடுங்கும் அவல நில உலகெங்கும் நடக்க ஆரம்பித்துள்ளது. ஆனால் பத்திரிக்கைகளில் பெரிய அளவு இந்தச் செய்தி வெளியாவது இல்லை.

சமீபத்தில் தென் கொரிய நிறுவனம் மடகாஸ்கர் நாட்டின் பாதி விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து தென் கொரிய நாட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் இட்டது. அந்நாட்டு மக்கள் புரட்சிக்குப் பின் இத்திட்டம் கை விடப்பட்டது. இது போன்ற செயல்களில் முக்கியமாக இறங்கியிருக்கும் நாடுகள் சீனா, கொரியா, ஜப்பான், அரபு நாடுகள் மற்றும் சில மேலை நாடுகள். இந்தியாவைச் சேர்ந்த கம்பெனிகளும் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளன. இந்தியக் கம்பெனிகள் மடகாஸ்கரில் நெல், கோதுமை மற்றும் பயிறு வகைகள், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் எண்ணெய் வித்து மற்றும் பயிறு வகைகள் போன்றவற்றை உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இவ்வகை வியாபரத்தில் சீனாவின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்து வருகிறது. சீனாவின் மக்கள் தொகை வளர்ச்சியாலும், தொழிற்மயமாதலாலும் விவசாய நிலம் குறைந்து வருகிறது. சீனா தன் வருங்கால விவசாயத் தேவையை பூர்த்தி செய்ய ஆப்ரிக்க (காங்கோ, சாம்பியா, சூடான், சோமாலியா என பல நாடுகள்), தென் அமெரிக்க, ரஷ்யா, பாக்கிஸ்தான் என பல நாடுகளில் பெருமளவு நிலத்தை வாங்கி குவித்து வருகிறது. இனி வரும் காலங்களில் சீனா சுமார் ஒரு மில்லியன் சீன விவசாயிகளை ஆப்ரிக்க நாடுகளில் விவசாயத்துக்காக குடி அமர்த்தப் போவதாக செய்திகள் வந்து கொண்டுள்ளன.

அது போல் அரபு நாடுகள் தங்கள் நாடுகளில் விவசாயம் செய்ய அதிக செலவு ஆவதாலும், தண்ணீர்ப் பற்றாக்குறையாலும் தங்கள் வருங்கால உணவுத் தேவையை சரி செய்ய பாக்கிஸ்தான், கம்போடியா, பிலிபைன்ஸ் போன்ற ஆசிய நாடுகளிலும், தென் அமெரிக்க நாடுகள் மற்றும் ஆப்ரிக்க நாடுகளிலும் பெருமளவில் நிலங்களை வாங்கி குவிக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் கம்போடியா நாட்டில் குவைத், கத்தார் போன்ற நாடுகள் சுமார் 125,000 ஏக்கர் நிலங்களை குத்தகைக்கு வாங்கி உள்ளது.

தற்போதய நிதி நெருக்கடியால் மற்ற துறைகளில் லாபம் குறைவதாலும், விவசாயப் பொருட்களின் விலை ஏற்றத்தாலும் பெரும்பாலான மேலை நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் இது போல் பெரிய அளவு ஏழை நாடுகளில் விவசாய நிலங்களில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளனர்

இதனால் ஏழை நாடுகளுக்கு ஏற்படும் நன்மைகளாக கூறப்படுபவை

1. ஏழை நாடுகளிடம் விவசாயத்தில் முதலீடு செய்ய அதிக பணம் இல்லாததால் புதிய தொழில் நுட்பம் பயன்படுத்தி தேவையான இடு பொருட்களை இட்டு அதிக உற்பத்தியைப் பெருக்க வாய்ப்பு இல்லாமல் உள்ளது. இவ்வகை முதலீடுகளால் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அதிக அளவு உற்பத்தியை ஏற்படுத்த முடியும்.

2. பல நாடுகளில் அதிக அளவு விவசாயம் செய்யும் நிலங்கள் இருந்தாலும் முதலீடு இல்லாததால் அவற்றை அந்நாட்டு மக்கள் விவசாயம் செய்வதில்லை. இது போன்ற வெளிநாட்டு முதலீடு மூலம் அந்த நிலங்களில் விவசாயம் செய்து உற்பத்தி பெருக்கம் செய்யலாம்

3. வெளிநாட்டினர் முதலீடு செய்யும்போது அவர்கள் நல்ல சாலை, சேமிப்புக் கிடங்கு, துறைமுகம் போன்ற உள் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவர். அதைப் பயன்படுத்தி ஒட்டு மொத்த நாடே வளர்ச்சி அடையும்.

4.பெரும்பாலான நாடுகள் ஏழை நாடுகளிடம் நிலத்தை குத்தகைக்கு எடுக்கும் போது அந்நாடுகளில் நல்ல மருத்துவமனை கட்டி தருவது, கல்வி நிறுவனங்கள் அமைப்பது போன்ற வளர்ச்சிப் பணியில் அதிக கவனம் செலுத்த உறுதி அளித்துள்ளனர்.

5.ஏழை நாடுகளில் இது அதிக வேலை வாய்ப்பை உருவாக்கும்.

இந்த நில பிடுங்கல் ஏழை நாட்டு மக்களுக்கு தீமையை ஏற்படுத்தும் காரணங்கள்

1. நிலத்தை விற்கும் ஏழை நாடுகள் இது போன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது அவர்களுடைய நன்மையை ஒப்பந்தத்தில் சேர்க்கும் அளவு பேசுவதற்கு ஏற்ற உயர்ந்த நிலையில் (bargaining power) இல்லை. அதாவது அவர்களது பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது. அந்நிய செலாவணி மற்றும் முதலீட்டைக் கவர எதற்கும் அவர்கள் ஒத்து கொள்ளும் நிலையில் உள்ளனர். மேலும் இது போன்ற நாடுகளின் உயர்மட்டத்தில் ஊழல் அதிக அளவு இருப்பதால் விவசாயிகளின் நன்மைக்கான சரத்துகளை ஒப்பந்தத்தில் சேர்ப்பது கேள்விக்குறியே.

2. லாப நோக்கில் பெரிய அளவில் இந்த ஒப்பந்தம் செய்யப்படுவதால், சிறு மற்றும் குறு விவசாயிகளின் நிலங்கள் பிடுங்கப்பட்டு பெரிய அளவில் இயந்திரங்கள் கொண்டு விவசாயம் செய்யப்படும்.

3. சிறு மற்றும் குறு விவசாயிகள் நிலம் இழந்து விடுவர். அதே நேரம் இயந்திரமயமான விவசாயம் செய்யப் போவதால் நிலம் இழந்த அனைவருக்கும் வேலை கிடைப்பது கடினம்.

4. ஏற்கனவே இந்த நாடுகளில் அவ்வப்போது பஞ்சமும் பட்டினியும் காணப்படுகிறது. இனி பெரும்பாலான உணவு பொருட்களை விளைவித்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதால் இது போன்ற பஞ்சத்தின் பாதிப்பு மேலும் அதிகரிக்கக் கூடும்.

5. ஒப்பந்தத்தால் பயிரிடப்படும் பயிர்கள் பெரும்பாலான நாடுகளில் அந்த நாட்டினரால் விரும்பி உண்ணபடுவது இல்லை. அதனால் இந்தப் பயிரினால் உள்நாட்டு மக்களுக்கு எந்த உபயோகமும் இருக்காது.

6, அந்நாடுகளில் பாரம்பரிய வகையில் செய்யப்படும் விவசாயமும், பாரம்பரிய பயிர் வகைகளின் பன்முகமும் (crop diversity) அழிக்கப்படும்.

7. நவீன விவசாயத்தால் சுற்றுப்புற சூழ்நிலை பாதிப்படைவதுடன், காடுகள் போன்ற இயற்கை வளங்கள் அதிக அளவு அழிக்கப்பட வாய்ப்புள்ளது

8. வேளாண் இடு பொருட்களான விதை, உரம், பூச்சி மருந்து போன்றவற்றை அதிக அளவு இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலையை உருவாக்கும்.

ஏழை நாடுகளுக்கு முதலீடு அதிகம் கிடைத்தாலும் அதனால் பயனடையப் போவது அங்கு பெரும்பான்மையாக இருக்கும் ஏழை விவசாயிகளாக இருப்பது சந்தேகமே.

தற்போது உள்ள சூழ்நிலையில் இந்திய சிறு மற்றும் குறு விவசாயிகள் சற்று ஜாக்கிரதையாக இருப்பது நல்லது தான். அரசு அந்நிய செலவாணி கிடைக்கும் என்பதால் நம்ப ஊர் நிலங்களையும் பெரிய பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

- சதுக்கபூதம், ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com