Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

டாலர் அரசியலும் இந்திய பொருளாதாரமும்
சதுக்கபூதம்


சென்ற பதிவில் டாலரின் முக்கியத்துவம் எவ்வாறு சர்வதேச சந்தையில் நிலை நிறுத்தப்படுகிறது என்று பார்த்தோம். இந்த பதிவில் இந்திய பொருளாதாரத்தை உலகின் முன்னனியில் நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்று பார்போம்.

பத்திரிக்கைகள் மற்றும் தொலை தொடர்பு சாதனங்கள் மூலமாக தகவல் தொழில் நுட்பம் மற்றும் உற்பத்தி துறையில் இந்தியா படைத்து வரும் சாதனைகளை எண்ணி பூரிப்படைகிறோம். இந்தியாவின் ஏற்றுமதி பல மடங்கு உயர்ந்து வருவதை கண்டு பெருமை கொள்கிறோம். இன்னும் சிறிது காலத்தில் இந்தியா பொருளாதார வல்லரசாக மாறிவிடும் என்று கனவு காண்கிறோம். இத்தனை நல்ல செய்திகள் வரும் பத்திரிக்கையில் வரும் ஒரு சிறு செய்தியை பெரும்பாலானோர் கண்டு கொள்வதே இல்லை. இன்றைய இந்திய பொருளாதாரத்தின் நிதர்சனத்தை காட்டும் அந்த செய்திதான் என்ன?

இந்தியாவின் எற்றுமதி இறக்குமதி பற்றாக்குறை கடந்த ஆண்டு மட்டும் 40சதவிகிதம் உயர்ந்து 57 பில்லியன் டாலர்களாக உள்ளது. அதாவது கடந்த ஆண்டு எற்றுமதி 125 பில்லியன் டாலர்களாக இருந்தது. இது 2005ஆம் ஆண்டை விட 21 சதவிகிதம் அதிகம். ஆனால் இறக்குமதி 26 சதவிகிதம் அதிகமாகி 181 பில்லியன் டாலர்களாக உள்ளது. நாம் 181 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை வாங்கி 125 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை விற்கிறோம். தகவல் தொழில் நுட்பம் மற்றும் உற்பத்தி துறையில் பெரு வளர்ச்சி அடைந்து உலக பொருளாதார வல்லரசு நாடாக இந்தியா முன்னேருவதாக நினைத்தாலும் நிகர கணக்கு நமக்கு நட்டம் தான். இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், நமது இறக்குமதியில் பெரும்பான்மையாக இருப்பது பெட்ரோல் தான். அதாவது நாம் மிகவும் கஷ்டபட்டு தகவல் தொழில் நுட்பம் மற்றும் உற்பத்தி துறையில் ஏற்றுமதி செய்து வாங்கிய டாலரை பெட்ரோல் வாங்கவே செலவிடுகிறோம். பெட்ரோல், அனைவரின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத முக்கியமான பொருள். இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருமே தவிர குறைய போவதில்லை.

இந்த பெட்ரோல் இறக்குமதியை குறைக்க என்னதான் வழி உள்ளது? இதற்கு தீர்வு காண நமக்கு கிடைத்துள்ள ஆயுதம் தான் எத்தனால். எத்தனாலை தாவரத்திருந்து பிரித்து எடுக்கலாம். இவ்வளவு நாட்களாக எத்தனால் உற்பத்தி செலவு அதிகம் என்பதால் கவனிப்பாரற்று இருந்தது. இன்று பெட்ரோல் விலை பேரலுக்கு $70 தாண்டி விட்டதால், உலகமே எத்தனாலின் மீது அதன் பார்வையை செலுத்த தொடங்கி உள்ளது.

எத்தனாலை முழுமையாக பெட்ரோலுக்கு மாற்றாக கொண்டுவருவது கடினம். ஆனால் இறக்குமதி செய்யும் பெட்ரோலின் ஒரு பகுதியை எத்தனாலை கொண்டு சமாளிக்கலாம். ஏற்கனவே பிரேசில் போன்ற நாடுகள் எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து உபயோக படுத்தி பெரும் சாதனை படைத்துள்ளனர். எத்தனாலின் விலையை மட்டும் பெட்ரோலுடன் சம்மந்த படுத்தி பார்க்க கூடாது. எத்தனாலை உபயோக படுத்துவதனால் எற்படும் பிற நன்மைகளையும் கணக்கில் கொள்ளவேண்டும். எத்தனாலை கரும்பு சக்கை, நெய்வேலி காட்டாமணக்கு, மக்காசோளம் மற்றும் பல பயிர்களிருந்தும் தயாரிக்கலாம். இவற்றில் சில பயிர்கள் வறண்ட பூமியில் வளர கூடியது. இத்தகைய பகுதிகளில் விவசாயத்தை நம்பி இருப்பவர்கள் மிகவும் பின் தங்கி உள்ளனர். எத்தனால் உற்பத்தி செய்வதன் மூலம் இந்த விவசாயிகள் மற்றும் தொழிளாளர்களுக்கு சிறிதலவு நிலையான வருமானம் கிடைக்கும்.

ஒரு கார் தொழிற்சாலை வந்தால், அதன் மூலம் சில ஆயிரம் நபர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இந்த எத்தனால் திட்டம் அமல் படுத்தப்பட்டால் பல கோடி பேருக்கு மேல் வருமானமும், வேலைவாய்ப்பும் கிடைக்கும். கரும்பு சக்கையிலிருந்து எத்தனால் எடுத்தால் கரும்பு விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். நம் அரசாங்கம் ஒரு புறம் தனக்கு கிடைக்கும் டாலர் பணத்தையெல்லாம் பெட்ரோல் வாங்க செலவு செய்து வருகிறது, இதனால் மிகபெரிய டாலர் பற்றாக்குறை ஏற்படுகிறது. மறுபக்கம் கிராமத்தில் வாடும் மக்களின் வழ்க்கை தரம் உயர பல கோடி டாலரை உலக வங்கியில் கடன் வாங்கி, அதில் பெரும் பகுதியை அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் லஞ்சமாக கொடுத்து சிறு பகுதியை கிரமத்து மக்கள் நல திட்டங்களுக்கு கொடுக்கிறது. இதனால் இரு புறமும் டாலரின் தேவை அதிகரிக்கிறது.

அதற்கு பதில் அரசாங்கம் எத்தனாலுக்கு வரி விலக்கு அளித்து, மானியம் கொடுத்து இந்த தொழிலை ஊக்கப்படுத்தினால் இறக்குமதிக்கு செலவு செய்யும் டாலரின் செலவை குறைக்கலாம். உலக வங்கியிடம் வாங்கும் டாலர் கடனையும் குறைக்கலாம். வறுமை ஒழிப்பையும் எளிதில் அமல்படுத்தலாம். கிராம புற மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதால் அவர்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும். அதனால் ஒட்டு மொத்த பொருளாதாரமுமே வளரும். இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக போராடும் அரசியல்வாதிகள் எவருமே இல்லாததால் இந்த திட்டத்தை கனவு திட்டமாக எடுத்து முழுமையாக நிறைவேற்ற எந்த அரசியல்வாதியும் முன் வரவில்லை.

அடுத்து நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது மக்கள் தொகை பெருக்கம். இந்தியா மற்றும் சீனாவில் மக்கள் தொகைதான் இன்றைய வளர்சிக்கு முக்கிய காரணம் என்று நினைக்க தோன்றும். உலக அரங்கில் இரண்டாம் உலகபோரிலிருந்து கடந்த நூற்றாண்டின் முடிவு வரை அலசி பார்த்தோமானால் ஒரு உண்மை புரியும்.உலகில் எந்த தொழில் துறையும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வொரு துறையிலும் நூற்றுகணக்கான நிறுவனங்கள் வருடம் தோறும் தொடங்கபட்டு வளர்ச்சி அடைந்துள்ளன.

ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம் அந்த நாடுகளின் வளர்ச்சி விகிதத்தை விட குறைந்து விட்டது. எனவே அந்த நாடுகளில் மிகப்பெரிய தொழிலாளர் பற்றாக்குறை எற்பட்டுள்ளது, இதன் விலைவாக தங்களுக்கு தேவையான பொருள்களை வெளிநாடுகளில் உற்பத்தி செய்து தங்கள் நாடுகளுக்கு இறக்குமதி செய்ய தொடங்கினர் அல்லது தொழிலாளர்களை வெளி நாடுகளிருந்து தங்கள் நாடுகளுக்கு வரவழைத்து கொண்டனர். கல்வி மற்றும் தொழிற்துறையில் நன்கு கவனம் செலுத்தி முன்னேற துடித்த இந்திய மற்றும் சீனா போன்ற நாடுகள் இதை நன்கு பயன் படுத்தி கொண்டனர்.

ஆனால் இந்த நூற்றாண்டில் நிலமை அடியோடு மாற தொடங்குகிறது. Meger மற்றும் Acquisition மூலமாக பெரிய நிறுவனங்கள் ஒன்று சேர ஆரம்பித்துள்ளன. இந்த நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களை வாங்க தொடங்கி விட்டன. எனவே ஒவ்வொரு துறையிலும் oligopoly அல்லது monopoly என்ற நிலை வர தொடங்கியுள்ளது. WTO இந்த மாற்றத்தை துரிதபடுத்தியுள்ளது. இதன் விளைவு தொழிலாளர்களின் தேவை இந்த நிறுவனங்களுக்கு குறைய தொடங்கியுள்ளது. மேலும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும், கணிணி மயமாக்கலாலும் மற்றும் இயந்திர மயமாக்களாலும் தொழிலாளர்களின் தேவை பெருமளவு குறைய ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் மக்கள் தொகை இதே வேகத்தில் வளர்ந்தால் அவர்களுக்கு உள்நாட்டு வேலை கிடைப்பதும் அரிதாகிவிடும், வெளி நாட்டு வேலை வாய்ப்புகளும் குறைந்துவிடும். உதாரணமாக Retail துறையில் பெரு நிறுவனங்கள் இந்தியாவில் நுழைந்துள்ளதுதான். இந்த நிறுவனங்களால் லட்சகணக்கானோர் வேலை இழக்க போவதை கண்கூடாக காண்கிறோம். இந்த நிலை நாளை அனைத்து துறைகளிலும் உலகளவில் வரத்தான் போகிறது. இதையெல்லாம் எதிர்கொள்ள நாம் என்ன ஏற்பாடு செய்துள்ளோம் என்பது கேள்விக்குறியே. எனவே அரசாங்கம் உடனடியாக கவனிக்க வேண்டிய விசயம், இந்த மக்கள் தொகை பெருக்கம்.

பொருளின் மதிப்பும் உற்பத்தி செலவும்:

கடந்த நூற்றாண்டில் ஒரு பொருளின் மதிப்பு அதன் தேவை மற்றும் உற்பத்தி (Demand and supply) பொருத்தும், உற்பத்தி செலவு பொருத்தும் தான் இருந்தது. எந்த ஒரு புதிய பொருளை மக்கள் அதிகமாக விரும்புகின்றனரோ அந்த பொருளையே பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு உற்பத்தி செய்து விற்க்கும். எனவே பொருளின் விலை பெரும்பாலும் உற்பத்தி செலவை பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையை முதலில் மாற்றியது Branding கலாச்சாரமே. அதாவது ஒரு பொருளை முதலில் தரமாக மார்க்கெட்டில் வெளியிட்டு தங்கள் நிறுவனத்தின் பெயரை மக்கள் மனதில் பதியவைத்து நுகர்வோர் மதிப்பை பெறுவதன் மூலம், அந்த பொருள் சந்தையில் அதிக விலைக்கு விற்க்கப்படும்.

அதிக அளவு விளம்பரம் மூலம் தங்களது கம்பெனியின் பெயரை நிலை நாட்டிய பின், அவர்கள் விற்பனைக்கு கொண்டுவரும் அத்தனை பொருட்களையும் அதிக விலைக்கு விற்பார்கள். இதன் மூலம் உயர் மற்றும் மேல் நடுத்தர வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்வார்கள். WTO வந்தபின்பு நிலைமையே மாற தொடங்கின. WTO சட்டங்கள் முழுமையாக நடைமுறைபடுத்தப்பட்டால், எந்த ஒரு பொருளையும் கண்டுபிடிக்கும் கம்பெனிக்கு மட்டுமே குறிப்பிட்ட காலம் வறை உற்பத்தி செய்யும் உரிமம் வழங்கப்படும். இதன் விளைவாக வேறு எந்த கம்பெனிகளும் இந்த பொருளை தயாரிக்க முடியாது.

ஆகையால் அந்த பொருளின் விலை அந்த பொருளுக்கு மக்களிடையே உள்ள அவசியத்தையோ அல்லது விளம்பரம் மூலமாக அது மக்களிடம் எற்படும் தாக்கத்தையோ கொண்டு மட்டும் நிர்ணயிக்கப்படும், உதாரணமாக IPhone 4GB ஒன்றின் விலை $500 என்றால் அதை உற்ப்த்தி செய்யும் ஆசிய கம்பெனிக்கு $230 விலை மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆனால் அதை Apple நிறுவனம் விளம்பரம் மற்றும் இதர செலவுகளை மட்டும் செய்து ஒரு IPhoneக்கு 270 டாலர்கள் லாபம் அடைகிறது. அந்நிறுவனம் அதனுடைய முதல் IPhone தயாரிப்புக்கு பல மில்லியன் டாலர்கள் செலவு செய்திருக்கும். பிறகு அதற்கு உரிமம் வாங்கி அதில் சில மாறுதல்களை செய்து அடுத்தடுத்து version வெளியிட்டு பலமடங்கு லாபம் அடைகிறது. அதில் கிடைக்கும் லாபத்தை கொண்டு அடுத்த கண்டுபிடிப்பை தொடர்கிறது. இதை எதற்கு கூறுகிறேன் என்றால் மூல பொருட்களை வாங்கி அதிக ஊழியர்களை வேலைக்கு வைத்து உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சிறிய அளவே லாபம் பெறுகிறது. ஆனால் ஆராய்ச்சிக்கு செலவிட்டு புதியவற்றை கண்டுபிடிக்கும் நிறுவனம் பெரிய அளவில் லாபம் அடைகிறது.

இன்று இந்தியாவின் உற்பத்திதுறை பெருமளவில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உற்பத்தி மட்டும் செய்து கொடுத்து புதியன கண்டு பிடிப்பில் அதிக கவனம் செலுத்துவது இல்லை. மேலும் சர்வதேச அளவில் Brand பெயர் உருவாக்கவும் பெரிதாக முயற்ச்சி செய்வது இல்லை. உலக சந்தையில் இந்திய கம்பெனிகள் நிலைபெற வேண்டுமானால் இதுபோல் கண்டுபிடிப்பு மற்றும் Brandingல் கவனம் செலுத்த வேண்டும். இதற்கான சில முயற்சிகள் இன்றும் நடந்து வருகின்றன. டாடா நிறுவனம் Tetley என்ற இங்கிலாந்து டீ Brand ஐ விலைக்கு வங்கியுள்ளது.

விஜய்மால்யாவின் நிறுவனம் Whyte & Mackay Brand ஐ விலைக்கு வங்கியுள்ளது. இத்தகைய முயற்ச்சி ஒவ்வொரு துறையிலும் தொடர வேண்டும். ஆராய்ச்சிக்கு அதிகம் செலவு செய்து மக்கள் விரும்பும் புதிய பொருட்களை கண்டுபிடித்து உரிமம் பெற வேண்டும். அத்தகைய வளர்ச்சிதான் உண்மையாக அதிக நாட்கள் நிலை பெறும் வளர்ச்சியாக இருக்கும். மேலை நாடுகளில் பெரும்பாலான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த இடம் எது என்று பார்த்தால் அது பல்கலை கழகங்களாக தான் இருக்கும். ஆனால் இந்தியாவில் பல்கலைகழகங்கள் அந்த அளவிற்கு முதிர்ச்சி பெறவில்லை. பல்கலைகழகங்களில் நடக்கும் ஆராய்ச்சியின் தரம் பல மடங்கு உயர வேண்டும்.

இந்திய மருந்து கம்பெனிகள் தற்போது Generic Drug எனப்படும் உரிமம் பெறாத அல்லது உரிமம் (patent) காலாவதியான மருந்துகளை உற்பத்தி செய்து அதிக லாபம் அடைகிறனர். அந்த கம்பெனிகள் இந்தியாவில் மலிவாக கிடைக்கும் தொழில்நுட்ப வல்லுனர்கள், கல்லூரி மற்றும் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகள் ஆகியவற்றை கொண்டு புதிய மருந்து பொருட்களை கண்டு பிடிக்கும் வேலையிலும் ஈடுபட வேண்டும்

இந்திய IT கம்பெனிகள், இந்தியாவில் ஆங்கிலம் பேச தெரிந்த மற்றும் மலிவான தொழில் நுட்ப வல்லுனர்களை கொண்டு பெரு வளர்ச்சி அடைகின்றன. நாளை இதே ஆங்கிலம் பேச தெரிந்த தொழில் நுட்ப வல்லுனர்களை, மிகவும் மலிவாக சீனா போன்ற நாடுகள் உருவாக்கினால் பன்னாட்டு நிறுவனங்கள் அவர்களை நோக்கி சென்றுவிடுவர். அது மட்டுமன்றி இந்திய நிறுவனங்களும் பிறநாட்டு வல்லுனர்களை கொண்டு வளர்ச்சியடைய தொடங்கிவிடும். இதனால் இந்தியா ஒரு பெரும் சரிவை சந்திக்கும். இந்த நிலை மாற வேண்டும் என்றால் இந்திய நிறுவனங்கள் Services தொழிலில் மட்டும் கவனம் கொள்ளாமல் IT Product செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

நல்ல தரமான Productகளை தயார் செய்வதன் மூலம் நிலையான சந்தையை பெற முடியும். இந்தியாவில் உலகதரத்துடன் Product செய்த ஒரே கம்பெனியான iFlex நிறுவனத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமான Oracle நிறுவனம் முழுமையாக வாங்க அமெரிக்க அரசே இந்திய அரசை நிர்பந்தித்ததாக செய்திகள் வந்தது. இதிலிருந்து Product தொழிலின் முக்கியத்துவத்தை நீங்கள் அறிந்து கொள்ளலாம். இந்தியாவில் உள்ள மிகபெரும் IT நிறுவனங்கள் அனைத்தும் தரமான Product செய்ய முன்வர வேண்டும்.

அரசாங்கம் உள்கட்டமைப்பு வசதி பெருக்கத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்து தொழில் தொடங்குவோருக்கு உதவியாக இருக்க வேண்டும். நல்ல சாலை, விமான நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் போக்குவரத்து வசதிகள், நவீன துறைமுகம், தகவல் தொடர்புதுறை, கல்வி, சுகாதாரம், போன்ற துறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

மேலே கண்ட நிகழ்வுகளுக்கான தொடக்கத்தை நாம் இன்று செய்தால்தான் இந்தியா கி.பி. 2020ல் வல்லரசாகும் என்ற கனவை நாம் காண தொடங்கலாம்.

இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள விவசயம், சிறு தொழில் போன்றவற்றின் நிலை பற்றி அடுத்த பதிவில் காண்போம்.

- சதுக்கபூதம், ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com