Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

ஈழக் கனவு, நனவாக

சர்வசித்தன்

சென்ற ‘மே’ மாத ஆரம்பம் முதல், ஈழத்தின் ‘வன்னி’க் களமுனையிலிருந்து கிடைத்துவந்த செய்திகள் யாவும் தமிழுணர்வு கொண்டவர்களுக்கு மகிழ்ச்சிதருவதாய் அமைந்திருக்கவில்லை. மாறாக மிகுந்த துயரையும், உலக நாடுகளின் செயற்பாடுகள்மீது நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியிருந்தன. வாய்ப்பும், வசதியும் இருந்தும் தம்மால் முடிந்ததைக்கூடச் செய்யாது அரசியல் லாபத்துக்காக அடங்கிக் கிடந்த தமிழகத்தலைமைமீது சீற்றத்தையும் உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கிறது.

Eelam இவை யாவற்றுக்கும் மேலாக, இந்தியப் பொதுத்தேர்தலின் வாக்கெடுப்பு முடிந்த நிலையில், ஈழத்தின் வன்னிப் பகுதியில் சுமார் ஐந்து சதுர கி.மீ க்குள் முடக்கப்பட்ட ஒரு லட்சத்துக்கும் மேலான தமிழர்கள்மீது, சிங்கள அரசின் முப்படைகளும் ஆரம்பித்திருந்த மூர்க்கத்தனமான வான் ;தரை மற்றும் கடல் வழித்தாக்குதல்கள் இரண்டு நாட்களுக்குள் இருபதாயிரம் தமிழர்களது உயிர்களைக் குடித்ததும் தொடர்ந்து, இந்திய நடுவண் அரசின் ஆட்சி அதிகாரம் மீண்டும் ‘சோனியா’காங்கிரஸின் கைகளில் கிடைத்துவிடும் என்னும் நிலை உருவான சமயத்தில் விடுதலைப் புலிகளின் தலைவரும் அவரது தளபதிகளும் போர்முனையில் கொல்லப்பட்டதாக வெளியான தகவல்களும், ஈழப்போரின் போக்கினைத் தலைகீழாக மாற்றிவிட்டிருக்கிறது.

புலித்தலைவரது இறப்பு பற்றிய செய்திகளில் நிலவும் குளறுபடிகள் இன்னும் தொடர்ந்தவண்ணம் இருப்பினும், அந் நாட்டில் கடந்த கால் நூற்றாண்டாகத் தொடர்ந்துவந்த ஆயுதப் போர் தற்காலிகமாகவேனும் முடிவுக்கு வந்துள்ளதை ஒப்புக் கொண்டேயாகவேண்டும்! இந் நிலையில் அங்குள்ள தமிழர்களுக்கு எஞ்சியிருப்பது, 1) அடிமைகளாக வாழ்வது 2) அரசியல்ரீதியாக சம உரிமைக்கான தீர்வை எட்ட முயல்வது 3) மீண்டும் பழையபடி சிறுகச் சிறுகத் தமது ஆயுதப்போரினை வலுப்படுத்தி உலகின் கவனத்தை ஈர்ப்பது ஆகிய இம் மூன்றில் ஏதாவதொன்றினைத் தெரிவு செய்வதுவேயாகும்.

அடிமைகளாகத் தொடர்ந்தும் வாழ்வது என்பது தமிழர்களது வரலாற்றில் காணப்படவில்லை என்றாலும் குறிப்பிட்ட காலம் வரை ஆக்கிரமிப்பாளர்களது அடக்குமுறைகளால் நசுக்கப்பட்டு அடங்கிக் கிடக்க நேரிடலாம்.ஆனால், இது நீண்ட காலம் தொடர வாய்ப்பில்லை. இரண்டாவதாகக் குறிப்பிட்ட ‘அரசியல் ரீதியிலான நல்ல தீர்வு’ என்பது முற்று முழுதாகச் சிங்கள அரசின் கைகளிலும், சர்வதேச நாடுகளின் நீதியான அணுகுமுறைகளிலுமே தங்கியுள்ளது.

இதில், சிங்கள அரசு தானாகவே முன்வந்து தமிழர்களுக்கு உரிய உரிமைகளை அளிக்கும் என்பது,கடந்த அறுபதுஆண்டுகாலச் சுதந்திர இலங்கையின் வரலாற்றில் காணப்படாத ஒன்று! ஏதோ ஒப்புக்காக சில உரிமைகளை வழங்குவதாக ‘ஒப்பந்தங்களை’ உருவக்கிவிட்டுப் பின்னர் அவற்றைக் குப்பைக்கூடைக்குத் தீனியாக்குவதைச் சிங்களத் தலைவர்களுக்குச் சொல்லித்தர வேண்டியதில்லை. இதற்கு 1956 ஆம் ஆண்டிலிருந்தே சாட்சியங்கள் உண்டு.

பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம் எனத்தொடங்கி ‘ராஜீவ்-ஜெயவர்த்தனா’ ஒப்பந்தம் வரை, சிங்கள ஆளும் வர்க்கத்தின் அரசியல் நேர்மை உலகப் பிரசித்தம்! ஆனால், சிங்கள அரசுக்கு முண்டுகொடுத்து, ஓர் இன விடுதலைப் போரை நசுக்குவதற்குத் துணைபோயிருக்கிறது இந்திய நடுவண் அரசு!

அதேசமயம் சுயநலனுக்காகவும், குடும்ப அரசியலின் காரணமாகவும் இனநலன்களை விட்டுக்கொடுத்து பதவிகளுக்காகப் பேரம் பேசும் தலைமை, இந்தியாவின் தென் மாநிலமான தமிழகத்தில் ஆட்சியிலிருந்தது, ஈழத்தமிழன் செய்த தவறல்ல! தெய்வப் புலவன் ஐயன் வள்ளுவன் கூறியது போல் இதனை ” ஊழிற் பெருவலி” என்றுதான் சொல்லவேண்டும்.

இத்தகைய தமிழக அரசோ அல்லது சிங்களத்துக்கு உதவிய நடுவண் அரசோ, ஸ்ரீலங்காவின் தலைமையிடம் ஈழத்தமிழரது அரசியல்-பொருளாதார-சமூக உரிமைகளுக்காக வலியுறுத்தும் என நம்பினால், அதைவிட முட்டாள்த்தனம் வேறில்லை. உலக நாடுகளோவெனில், அவை தங்கள் மேலாண்மைக்காகவும், பொருளாதார நலன்களின் பொருட்டும் சந்தர்ப்பத்துக்கு ஏற்ற வகையில் செயல்படுவதைத் தொழிலாகக் கொண்டவை. வெளியே மனித உரிமைகள், மனிதாபிமானம் என்று பேசினாலும், தங்கள் அரசியல்-பொருளாதார நடைமுறைகளைப் பாதிக்கும் எனில் அவற்றைக் கைவிடுவதற்குப் பின்னிற்பதில்லை.வன்னிப் பெருநிலத்தில் இறுதிக்கட்டப் போரின் போது இந்நாடுகள் காட்டிய மனிதாபிமானம்(?) உலகறிந்த ஒன்று.

எனவேதான் தங்கள் பொருட்களை வாங்கவும், விற்கவும் அதே சமயம் மலிவான உடலுழைப்பு மற்றும் மூளை உழைப்பினைப் பெறக்கூடிய இந்தியா போன்ற மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நாட்டினது விருப்பத்துக்கு எதிராக எதனையும் செய்யாமல் வாளாவிருந்தன.மீறிச் செயல்படின் தங்களது பொருளாதார வளங்கள் வறட்சி கண்டுவிடும் என்பது இவற்றின் எண்ணம். இந் நாடுகள் உண்மையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டிருப்பின், ஏற்கனவே 1990 களில் அங்கு நிகழ்ந்த இன நெருக்கடிகளின்போது தலையிட்டு ஏதாவது ஓர் தீர்வினை எட்டியிருக்கலாம். இவை வாய்ப்பேச்சில் காட்டும் அக்கறையைச் செயலில் காட்டுவதில்லை.

உலகின் மிகப் பெரும் ஆயுத வியாபாரியான அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் போன்றவை சிறிய இனங்களின் நியாயமான உரிமைகளுக்காகத் தங்கள் வர்த்தக வாய்ப்புகளை விட்டுக்கொடுக்க முன்வருவதில்லை. அவை சிறிய நாடுகளின் பேரில் காட்டுகின்ற ‘கரிசனம்’, ‘கசாப்புக்கடைக்காரர் ஆடுகளின்பால் காட்டுகிற அன்புக்கும்,அக்கறைக்கும் ஒப்பானதாகும். எனவே, இந் நாடுகள் ஈழத்தமிழர்களது உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தரும் என்பது நிச்சயமற்ற ஒன்று.

மற்றொருபுறம், சிங்கள அரசுக்கு விசுவாசமாகச் செயற்பட்டுவரும் முன்னாள் போராட்டக் குழுக்கள்- இன நலன்களைக் காட்டிலும் தங்கள் நலன்களிலேயே அதிக சிரத்தையுடன் இயங்குபவர்கள். அவர்களுக்கிடையே நிலவும் போட்டி மனப்பான்மையையும், உட்பகையையும் வைத்தே அவர்களைத் தமது கையில் ”பெட்டிப் பாம்புகளாக” ஆட்டிவைக்கும் திறன் சிங்களத்திடம் உள்ளது. அண்மையில் நடைபெற்ற மாபெரும் இன அழிப்பின்போது வாய்மூடிக் கிடந்த இவர்களிடம் - ஒருவகையில், இன உணர்வு மரத்துப் போய்விட்ட இவர்களிடம், தமிழரது “சுயாட்சி” வேட்கைக்கு ஈடான தீர்வினை சிங்கள அரசிடமிருந்து பெற்றுத்தரும் வல்லமை கிடையாது.

ஒரு வகையில் இவர்கள் அனைவரும் “காயடிக்கப்பட்ட காளைகள்” தாம். அப்படியாயின், இனி ஈழத்தமிழனுக்காகப் பரிந்து பேசவும் போராடவும் யாரிருக்கிறார்கள்? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, உலகப் பந்தின் பல பகுதிகளில் நாடற்றவர்களாய் சிதறிக் கிடந்த யூத மக்களுக்கு ”இஸ்ரேல்” என்றொரு நாட்டினைப் பெற்றுத்தந்ததில் கொடுங்கோலன் ‘ஹிட்லரு’க்குப் பெரும் பங்குண்டு!

அவனது ‘யூத இன அழிப்பின் உச்சந்தான்’ அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வியாபரி நாடுகளைக்கூட அவ்வினத்துக்கு என ஓர் நாட்டினை உருவாக்கித்தரும் எண்ணத்தை விதைத்தது. ஒரு புறம் ‘ஹிட்ல’ரது யூத இன அழிப்புக்கு எதிராக உலக யூதர்கள் ஒன்றிணைந்தார்கள். குறிப்பாக அமெரிக்காவிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் ‘நாஜி’க்கொடுமைக்கு அஞ்சி அடைக்கலம் புகுந்த யூதர்கள் ;இஸ்ரேல்’ நாட்டினை உருவாக்கியதில் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள் என்பது வரலாறு தரும் படிப்பினை.

அவர்களது போராட்டங்களும் பொருளாதார வளங்களுமே யூத நாட்டினை உலக வரைபடத்தில் இடம்பெறவைத்தது. இன்று, ஈழத்தில் நடந்து முடிந்த தமிழின அழிப்புக்கும், அன்று ‘ஹிட்லர்’ நிகழ்த்திய யூத அழிப்பிற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அன்று ‘ஹிட்லருக்குத் துணை நின்றவன் இத்தாலிய ‘முசேலினி’. இன்றும் ‘ராஜபக்ஷே’க்குத் துணை நின்றது இந்தியா. (இங்கும் ஒரு இத்தாலிய சம்பந்தம்! என்ன ஒற்றுமை பாருங்கள்?) இந்தியாவோடு சேர்ந்து மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் சீனா, பாகிஸ்தான் போன்றவையும் இந்த ‘மனிதாபிமான’ச் செயலில் சிங்களத்துக்கு உதவின என்பதும், ஏனைய மேற்குலக நாடுகள் சில ‘வாயால் கூச்சலிட்டவாறு’ வேடிக்கை பார்த்தன என்பதுந்தான் இதிலுள்ள சிறிய மாறுதல். அவ்வளவே!

நிலமை இப்படியிருக்க, இன்று சிலர் ‘பிரபாகரன் இன்னும் உயிரோடு இருக்கிறாரா ? இல்லையா ? ‘என்னும் தேவையற்ற விவாதங்களில் தங்கள் நேரத்தையும், ஆற்றலையும் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். அகப் பக்கங்களெங்கும் இந்த விவாதம் நிறைந்து வழிகிறது. வன்னியில் முட்கம்பி வேலிகளுக்குள்ளே விடிவுக்காக ஏங்கும் அப்பாவித் தமிழர்களுக்கு எவ்வாறு நாம் உதவமுடியும் என்பதில் எமது சிந்தையைச் செலுத்துவோம். எஞ்சியிருக்கும் ஈழத்தமிழரையாவது காப்பாற்றினால் மட்டுமே தமிழ்மண்ணில் வாழவும் அதனை ஒரு நாள் ஆளவும் எமது சந்ததிக்கு வாய்ப்புக்கிட்டும். அதனையும் அழிய விட்டுவிட்டு வெளிநாட்டில் ”தமிழ் ஈழம்” அமைத்து. அதை எவர்கையில் கொடுப்பதாம்.?

நாளைப் பொழுது நல்ல பொழுதாய் விடியட்டும், நாளை மறு நாள் தானாகவே நல்ல நாளாக விடியும்.

- சர்வசித்தன் ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com