Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

நிமிர்த்தப்பட வேண்டிய நாய் வால்!
இரா.சரவணன்

என்னதான் நடு வீட்டில் வைத்து, பன்னீரில் குளிப்பாட்டி, சந்தனமும் சவ்வாதும் கலந்து பூசி, சீவி சிங்காரித்து வைத்திருந்தாலும் அசிங்கத்தைக் கண்டால் ஆசையாய்ப் பறக்கும் மிருகங்களைப் போல, எங்கெல்லாம் மக்கள் போராட்டம் நடக்கிறதோ அங்கெல்லாம் பாய்ந்தோடிச் சென்று தங்கள் கைத்தடிகளைச் சுழற்றி போராட்டக்காரர்களின் மண்டைகளை உடைத்து மண்ணில் பீய்ச்சியடிக்கும் ரத்தத்தை நக்கிச் சுவைத்தப் பின்தான் ஆசை அடங்குகிறது நமது காவல்துறைக்கு.

Police attack கடந்த ஜூலை 14ம் தேதி சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரியும் தமிழகத் தனியார் பள்ளிக் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை தடுத்து நிறுத்தக்கோரியும் கோட்டை முன் ஊர்வலம் நடத்தச் சென்ற இந்திய மாணவர் சங்கத் தலைவர்களையும் கலந்துகொண்டவர்களையும் கலைஞரின் கைத்தடிகளான காவல்துறை தடியடி நடத்தி, பெண்களென்றும் பாராமல் காலித்தனமாக, ஆடைகளை பிடித்து இழுத்து, அடித்து, மண்டைகளை உடைத்தனர். இதில் 17 மாணவர்கள் படுகாயமுற்றனர். இந்திய மாணவர் சங்க அகில இந்திய செயலாளர் ஜி.செல்வா, மாநில தலைவர் ரெஜிஸ்குமார் உள்ளிட்ட தலைவர்கள் பலத்த காயமுற்றனர். ரத்தம் சொட்டச்சொட்ட அடித்த மாணவர்களை மருத்துவமனைக்குக் கூட கொண்டு செல்லாமல் ஒன்றரை மணிநேரம் காவல் வேனிலேயே வைத்து ஊர் சுற்றிக்கொண்டிருந்தது, காவல்துறை.

சமீப காலங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், வாலிபர்கள், பெண்கள், முறைசாரா-அமைப்புசாரா தொழிலாளர்கள், மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை கிடைக்காத நோயாளிகள், வழக்குரைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், டாஸ்மாக் ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள், ஊனமுற்றோர், தண்ணீர், சாலை, கால்வாய் கேட்ட மக்கள், ஆசிரியர்கள் பற்றாக்குறையினால் அல்லல்படும் பள்ளிச்சிறுவர்கள் என தமிழக அரசு இயந்திரத்தில் துவங்கி அனைத்துப் பிரிவு மக்களும் பல்வேறு அமைப்புகளும் அதித் தீவிரமாக போராடவேண்டிய அவலநிலையை தமிழகத்தில் கலைஞர் அரசு உருவாக்கியுள்ளது.

யாரும், எந்த அமைப்பினரும் திடீரென போராட்டத்தில் இறங்குவதில்லை. பேச்சுவார்த்தை நடத்தி, அடையாள இயக்கம் நடத்தி, எந்த முன்னேற்றமும் இல்லாத பட்சத்தில், ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் தனது அதிகார திமிர்த்தனத்தைக் காட்டி, கோரிக்கைகளை நிராகரிக்கும் போதுதான் வீதியில் இறங்கி போராட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

போராட்டம் என்ற வார்த்தையைக் கேட்டாலே கலைஞர் கருணாநிதி மிளகாயைக் கடித்தது போன்று எரிச்சலடைகிறார். டில்லிக்குச் சென்று தன் குடும்பத்திற்குத் தேவையான மத்திய மந்திரி பதவிகளை குட்டிக்கரணம் போட்டாவது வாங்கி சாதித்துக்கொள்கிற கலைஞருக்கு, மாணவர்கள் மக்களுக்கு தேவையானதைக் கேட்டு போராட்டம் நடத்தினால் அதை பரிசீலிக்கக்கூட மனமில்லாமல் காவல்துறையை வைத்து மாணவர்களின் தலைகளை உடைத்துக் கொண்டிருக்கிறார். கலைஞர் என்ற முகமூடி கிழிந்து லோக்கல் ரவுடி கவுன்சிலர் முகம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கை ஓரிடம், கால் ஓரிடம், இடுப்பு ஓரிடம், தலை கிடைப்பதே இல்லை என தமிழகத்தில் நாள்தோறும் நடைபெறும் பட்டப்பகல் படுகொலைகள், திருட்டு, வழிபறி, கொலையோடு கூடிய கொள்ளை, வெடிகுண்டு கலாச்சாரம், போலீஸ் வேடமிட்டு திருடுதல், போன்ற நவீன திருட்டுவகைகளிலும் கொலைகளிலும் காட்ட வேண்டிய வீரத்தை கல்விக்காக நிராயுதபாணிகளாக போராடும் மாணவ மாணவியர்களிடத்தில் காட்டிக்கொண்டிருக்க காவல்துறைக்கு வெட்கமாக இல்லையா என்று தெரியவில்லை?

கடந்த 2006ஆம் ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்தி விடுவோம் என்று வெற்று வாய்ச்சவடால் விட்ட தமிழக அரசு 2009ம் ஆண்டில் பாதிக்கும் மேல் கடந்தும் அமல்படுத்த வக்கற்று கிடக்கிறது. சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதை காலம் கடத்த கமிஷன் மேல் கமிஷனாக போட்டு வருகிறது.

இப்படிப்பட்ட கமிஷன்களுக்கு உதாரணம் தான் அயோத்தியில் இந்து மதவெறியார்களால் இடிக்கப்பட்ட பாபர் மசூதி கலவரத்தை ஆராய அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் 17 ஆண்டுகாலம் கழித்து, 8 கோடி செலவு செய்து அறிக்கை அளித்துள்ளது என்பதை மனதில் பதிய வைக்கவேண்டும். இன்னும் இதுபோன்ற எத்தனையோ கமிஷன்கள் ஆட்சியாளர்களின் ஆசியுடன் தூங்கிக் கொண்டிருக்கின்றன.

யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் சமச்சீர் கல்வியை அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவிக்கிறது. சமச்சீர் கல்வியை அமல்படுத்தினால் கல்வியை விற்றுக் காசாக்கும் கொள்ளைக்கும்பலுக்குத்தான் பாதிப்பு. அவர்கள் பாதிக்கப்படுவதில் கலைஞருக்கு என்ன கரிசனை வேண்டியுள்ளது.

எந்த ஒரு திட்டம், தனியார் முதலாளிகளுக்கும், நாடாளுமன்ற, சட்டமன்ற பினாமிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமோ அத்திட்டத்தின் மீது ஒரு கமிஷனைப் போட்டு அந்தக் கமிஷனின் தலையில் தீயை வைத்து அதை சாம்பலாக்கி, காலம் தாழ்த்தி அதை முடக்குவது கலைஞர் அரசு உட்பட ஆட்சியாளர்களின் வாடிக்கை.

பள்ளிகள் அனைத்தும் துவக்கப்பட்டு, அனுமதியெல்லாம் முடிந்து, பாடங்கள் ஆரம்பித்த நிலையில் அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளி முதலாளிகளுக்கு 7 ஆண்டு சிறை என்ற அற்ப சட்டத்தைப் போட்டு கல்வி முதலாளிகளைக் காப்பாற்றிய பெருமை கலைஞருக்குத் தான். தன்னுடைய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் கல்வி நிறுவனத்தின் அவல நிலை ஆங்கில தொலைக்காட்சி முதல் அனைத்து தொலைக்காட்சிகளிலும் சந்தி சிரித்த போது அமைதி காத்து அருள்புரிந்தார்.

அனுமதியின்றி கோட்டை நோக்கி யாராவது போராட்டமோ ஊர்வலமோ நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கிறார். திடீரென சகல வசதிகளுடனும் மெரினா கடற்கரையில் கலைஞர் நடத்திய உண்ணாவிரதத்திற்கு யாரிடம், எங்கே பெற்றார் அனுமதி? ஆங்கிலேய ஆட்சி முதலும், அதற்கு முன்பும் அடக்குமுறையையும் ஒடுக்குமுறையையும் சந்தித்து திமிர்ந்தெழுந்ததுதான் மக்கள் போராட்டம். அவர்கள் தங்கள் தேவைக்கான போராட்டத்தை கோட்டைச் சுவரல்ல, டில்லி செங்கோட்டைச் சுவராக இருந்தாலும் உடைத்துக் கொண்டு போராடுவார்கள். எனவே, எப்படியாவது நாய்வாலை நிமிர்த்திவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அப்படி நிமிர்த்த முடியவில்லயென்றால் நாய்வாலை நறுக்கவும் மக்களுக்கு தெரியும் என்பதை கலைஞரும் காவல்துறையும் புரிந்துகொண்டாலும் சரி அல்லது அனுபவித்து தெரிந்துகொண்டாலும் சரி!

- இரா.சரவணன்([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com