Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

சாதீய வட்டத்திற்குள் சிக்கிய சட்டம்!
இரா.சரவணன்


மனித உயிர்களை நேசிக்கும் எவரும் நியாயப்படுத்திவிட முடியாது இந்த சம்பவத்தை. இதற்காக இந்த மாணவர்களை எத்தனை முறை கண்டித்தாலும் தகும். சட்டக் கல்லூரிகளில் சாதீயத்தின் ஆணிவேர் ஊடுருவி இருப்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்துள்ளது.

Law வேலை கேட்டு, கல்வி கேட்டு, தீண்டாமையை ஒழிக்கக் கேட்டு, செய்த வேலைக்கு நியாமான கூலி கேட்டு, தொழிற்சங்கம் அமைக்க உரிமைகேட்டு, நிராயுதபாணிகளாக மக்கள் போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது லத்தியை விட்டு சுழற்றிச் சுழற்றி காட்டுமிராண்டித்தனமாக அடிப்பதும், துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தி, சமயத்தில் உயிரையும் குடித்துவரும் தமிழக காவல்துறை, இப்படிப்பட்ட தாக்குதல் தன் கண் எதிரிலேயே நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது கைக்கட்டி வேடிக்கை பார்த்துகொண்டிருக்கின்ற செயல், தாக்கிக் கொண்டிருக்கின்ற காட்டுமிராண்டிகளின் செயலை விட கொடூரமான கொலைபாதக செயலாக மக்கள் மனதில் பதிந்துள்ளது.

சாதீயத்தையும் மதவாதத்தையும் எதிர்த்து ஒன்றிணைந்து போரிட வேண்டிய மாணவர்கள், எதிர்கால இந்தியாவை செதுக்கி, இந்திய அரசியல் சட்டத்தைப் பாதுகாத்து, சமூகத்தில் கறைபடிந்த வரலாற்றுப் பக்கங்களின் தீர்ப்புகளை மாற்றி எழுதுவார்கள் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கின்ற சட்டக்கல்லூரி மாணவர்கள், நீதிமன்றங்களில் நீதிமான்களாக, வழக்குரைஞர்களாக, நீதி வழுவா வேந்தர்களாக வரவேண்டிய சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்களுக்குள்ளான தாக்குதலில் ஈடுபட்டுக்கொண்டதை பார்க்கும் போது இந்தியாவின் எதிர்காலம் அபாயத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றதோ என நம்மை அச்சப்பட வைக்கிறது. அனைவருக்கும் சமநீதி கிடைப்பதற்காக போராடவேண்டிய மாணவர்கள், அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து முழக்கமிட வேண்டிய மாணவர்கள், கல்வி என்ற பெயரால் ஏழை எளிய மக்களின் ரத்ததை உறிஞ்சும் தனியார் கல்வி நிலையங்களை எதிர்த்து நீதி கேட்கவேண்டிய மாணவர்கள், கல்வியை பணக்காரர்களுக்கான கல்வியாகவே மாற்றிய அரசின் கொள்கையை எதிர்த்து வீரச்சமர் புரியவேண்டிய மாணவர்கள் சாதீய, மதவாத அரசியல் கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்பட்டிருக்கக்கூடாது.

மதத்தை வைத்து அரசியல் நடத்துபவர்களும் சாதியை வைத்து அரசியல் நடத்துபவர்களும் சட்டக்கல்லூரியில் நடைபெற்றதைப் போன்ற விபரீத சம்பவங்களை எப்போதும் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்கள்தான் என்பதை மாணவர்கள் உணரவேண்டும். மதவாதிகளும் சாதியவாதிகளும் மக்களாக இருந்தாலும் மாணவர்களாக இருந்தாலும் ஆடு, மாடு ஏன் நாயைக்கூட சாதிவாரியாக, மதவாரியாக, மொழிவாரியாக, இனவாரியாக பிரித்து வைத்து வேடிக்கை பார்ப்பார்கள்.

ஒரு சில வருடங்களுக்கு முன்பு அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டக்கல்லூரி விடுதியில் நடைபெற்ற வன்முறை குறித்து விசாரித்த மூத்த வழக்கறிஞர் ஆர்.வைகை அவர்கள் அரசிற்கு அளித்திருந்த பரிந்துரைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டிய அரசு அலட்சியமாக இருந்துவிட்டது.

இந்திய மாணவர் சங்கம், மாணவர்களுக்குள் நடைபெற்றுக்கொண்டிருந்த பனிப் போரை பலமுறை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது. ஆனால், தலையிட்டு எங்கு தவறு நடந்துள்ளது என்பதைக் கண்டறிந்து அவற்றை சரிசெய்ய வேண்டிய நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருந்த மெத்தனப்போக்கும் இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணம். ஒவ்வொரு பிரச்சனைகளிலும் காவல்துறை ஆணையர்களை இடமாற்றல் செய்வதும் ஒரு சில காவலர்களை தற்காலிக பணி நீக்கம் செய்வதும், இல்லாத ஊருக்கு போகாத வழியாகவே இருக்குமே தவிர, பிரச்சனைக்கு தீர்வாகாது.

இதையே சாக்காக வைத்து மாணவர்களுக்கு அரசியலே கூடாதெனவும், மாணவர்களுக்கென அமைப்பு கூடாதெனவும், கல்லூரி தேர்தல் தேவையில்லையெனவும் கூறத் துவங்கிவிட்டார்கள் கடைந்தெடுத்த அறிவிலிகள். பொதுவாக அரசியல் என்றால் ஜாதி, மதம், மொழி, இனம், ஊழல் இவையனைத்தும் கலந்தது தான் அரசியல் என்று ஒரு பொதுவான கண்ணோட்டம் மக்களிடையே ஊன்றப்பட்டுவிட்டது. ஆனால், ஜாதி, மதம், மொழி, இனம் இவையனைத்திற்கும் அப்பாற்பட்டு அடித்தட்டு மக்களை, ஏழையெளிய மக்களை காத்து நிற்கவேண்டுமென்பதற்காக உருவாக்கப்பட்டது தான் அரசியலும் அரசும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இப்போதாவது அரசும் நிர்வாகமும் தங்களுக்குள்ள பொறுப்பை உணர்ந்து செயல்பட்டு இருதரப்பு மாணவர்களையும் அழைத்து விசாரித்து சுமூக நிலையை உருவாக்கி காலவரையற்ற கல்லூரி மூடலை திறந்து வைக்க வேண்டும். மாணவர்கள் இந்தியாவின் எதிர்காலத் தூண்கள் என்பதை கருத்தில் கொண்டு, சாதிவாரியாகவும் மதவாரியாகவும் பிரியாமல் அந்த சாதீய, மதவாத சக்திகளை அறுத்தெறியப் போரிட வேண்டும்!

- இரா.சரவணன்([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com