Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

மயானத்தை எதிர்நோக்கும் மழலையர்
இரா.சரவணன்


நானோ எனது உறவினரோ பதவிக்கு வந்தால் சாட்டையால் அடியுங்கள் என்று வசனம் பேசி, தான் விடுகின்ற அறிக்கைகளே நாட்டு மக்களைக் காப்பற்றிவிடும் என்று மக்களை நம்பவைத்துக் கொண்டிருக்கும் கட்சித் தலைவரின் மகன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ், குன்னூர், கிண்டி மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய இடங்களில் உள்ள பொதுத்துறை தடுப்பூசி மையங்களுக்கு மூடுவிழா காண புறப்பட்டுள்ளார்.

Anbumani தமிழகத்தில் மணல் குவாரிகளை (தனக்கு காண்ட்ராக்ட் கிடைக்காது என்று தெரிந்ததாலோ என்னவோ) அரசே ஏற்று நடத்தவேண்டும் என வலியுறுத்துகின்ற பாமக தலைவர், அரசு பொதுத்துறை நிறுவனத்தை மூடிவிட்டு, செங்கல்பட்டில் தனியார் பங்களிப்போடு கூடிய தடுப்பூசி உற்பத்தி மையத்தை புதிதாகக் கட்டுமானம் செய்து தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்யப்படும் என்ற தனது மகனின் உத்தரவு குறித்து வாய்திறக்கவில்லை.

தனியார் பங்களிப்போடு கூடிய எந்த நிறுவனம் தனது உற்பத்தியை இலவசமாகக் கொடுக்கும் என்பதை அன்புமணி ராமதாஸ்தான் கூறவேண்டும். அப்படியென்றால் இந்த புதிய தடுப்பூசி உற்பத்தி மையம் ஏன்? எதற்காக? யாருக்காக? என்ற கேள்வி எழுகிறது. இந்த நிலையில் திருவள்ளூரில் அரசு பொதுத்துறை நிறுவனத்திலிருந்து வாங்கிய தட்டம்மை ஊசி போட்ட நான்கு பிஞ்சு மழலைகளின் உயிர் பிரிந்தது. பொதுத்துறையின் பெயரை சீர்குலைப்பதற்காக நடைபெற்ற சதிச் செயலாக இருக்குமோ என்ற கேள்வியும் எழுகிறது.

வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கேற்ப ஒவ்வொரு மாவட்டங்களிலும் அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு பொதுமருத்துவமனை உருவாக்க வேண்டிய சூழ்நிலையில், மக்களின் சேவைக்காக உருவாக்கப்பட்ட அரசு பொதுமருத்துவமனைகளில் இலவச மருத்துவத்தை சிறிதுசிறிதாக சிதைத்து, குறைந்த கட்டணம் என்ற பெயரில் கட்டண சேவையை அறிமுகப்படுத்தி மக்களின் ரத்தத்தை உறிஞ்ச துவங்கியிருக்கிறார். மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப அரசு பொது மருத்துவமனைகளின் கட்டமைப்போ தரமோ உயர்த்தப்படவில்லை.

உலக சுகாதார நிறுவனத்தின் நிர்பந்தத்தின் பேரில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக செம்மையாக செயல்பட்டு வந்த அரசு பொதுத்துறை நிறுவனங்களான குன்னூர் பாஸ்டியர் நிறுவனம், கிண்டி காசநோய் தடுப்பு ஆய்வுக்கூடம் மற்றும் இமாச்சல பிரதேசம் காசோலியில் உள்ள மத்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி மருந்துகளின் உற்பத்தியை ஜனவரி 15, 2008லிருந்து நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த தடுப்பூசி மையங்களில் பிரசவகால தடுப்பூசி முதல் போலியோ உள்ளிட்ட குழந்தையின் 5 வயது வளர்ச்சி வரை தேவைப்படும் தடுப்பூசிகள் இந்த மையங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ரணஜன்னி, நாய்க்கடி, விஷக்கடி இவற்றிற்கும் மருந்துகள் இங்கே உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவின் 90 சத தடுப்பூசித் தேவையை இந்த மையங்கள் பூர்த்தி செய்கின்றன.

இந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கு செலவுகள் அதிகம், மருந்துகள் உலகத் தரத்துடன் இல்லை, பராமரிப்பு மற்றும் நெறிமுறைகள் பின்பற்றவில்லை, தடுப்பூசி தயாரிப்பதற்கு பணம் ஒதுக்குவதிலும் அனுமதி பெறுவதிலும் சிரமம் எனவே இந்த பொதுத்துறை நிறுவனங்களை மூடுகிறோம் என்ற மத்திய சுகாதார துறையின் வாதம் ஏற்புடையதல்ல.

100 ஆண்டுகளாக இயங்கும் தடுப்பூசிகளை தயாரிக்கும் அரசுத்துறை நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்பது இப்போதுதான் தெரிகிறதா? பலநோய்கள் வராமல் தடுப்பதற்கு இந்த நிறுவனங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகள் தான் இதுநாள்வரை பயன்படுத்தப்பட்டன. இந்த காலங்களில் மக்களுக்கோ குழந்தைகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்பட்டதாக எந்த வரலாறும் இல்லை. இந்த நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்திய 4 மாதங்களுக்குள் மருந்துகளின் விலை கடுமையாக உயரத் துவங்கிவிட்டன.

தனியார் மற்றும் பன்னாட்டு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு லாபத்தை உருவாக்கித் தரவேண்டும் என்ற ஆசை சுகாதாரத் துறையின் அமைச்சருக்கு வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், அதற்காக தனது ஒரு நாளைய பொழுதைக் கழிப்பதற்கே அல்லலுறும் ஏழை எளிய மக்களின் உயிரோடு ஏன் விளையாடவேண்டும் என்பதே கேள்வி!

பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு தன்னாட்சி அதிகாரம் என்று துவக்கிய உலகமய சிந்தனைச் சிற்பிதான் தடுப்பூசி மையங்களை மூட உத்தரவிட்டுள்ளார். அது மக்கள் போராட்டமாக மாறியபிறகு ஜிப்மர் மருத்துவமனை தன்னாட்சி திட்டம் கைவிடப்பட்டது. உலகமயம் தனது செல்வாக்கை மருத்துவத் துறையில் செலுத்த ஆரம்பித்திருக்கிறது. இந்திய அரசு ஏழை எளிய மக்கள் சுகாதரத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை மெல்ல மெல்ல தளர்த்திக்கொண்டிருக்கிறது.

தேசீய தடுப்பூசித் திட்டத்தினால் இந்தியாவில் இன்று பல நோய்கள் ஒழிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்குத் தேவையான தடுப்பூசி மருந்துகளை மிகக்குறைந்த விலையில் தயாரித்து கொடுத்தது மேற்கண்ட மூன்று நிறுவனங்கள்தான். தடுப்பூசி தயாரிக்கும் இந்தப்பணி தனியாரிடம் செல்லுமானால் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மையங்களில் இலவசத் தடுப்பூசி இல்லாத நிலை வரும். பணம் கொடுத்தால்தான் தடுப்பூசி என்ற அபாய நிலை ஏற்படும்.


நாசகர புதிய பொருளாதார கொள்கைகளையும், மக்கள் விரோத நடவடிக்கைகளையும், பொதுத்துறையை ஒழிப்பதற்கு அமைச்சரை நியமனம் செய்து வேகமாக அமல்படுத்தி இவற்றின் கூடவே மதவாதம் என்ற பெயரில் அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் தேசவிரோத செயல்களோடு சேர்ந்து நாட்டுமக்களை நரக வேதனைக்குள்ளாக்கிய பாஜகவும், மதத்தீவிர வாதத்தை ஆதரிக்கவில்லையென்றாலும் கூட பொருளாதாரக் கொள்கைகளில் அதே பாதையில் ஒரு அங்குலம் கூட விலகாமல் சென்று கொண்டிருக்கும் காங்கிரஸ் அரசின் சுகாதாரத்துறை அமைச்சரான அன்புமணியின் கொள்கைகளும் வேறல்ல!

ஆட்சி மாற்றம் என்பது கோட்டைகளில் பறக்கின்ற கொடிகளின் மாற்றமல்ல மக்கள் நலனை உள்ளடக்கிய கொள்கைகளின் மாற்றமாகதான் இருக்கவேண்டும். இந்திய மக்கள் இதை உணரும் வரை நமது பயணம் ஓய்வில்லாத பயணமாக தொடரவேண்டும். மக்களுக்கான மாற்றுக் கொள்கைகளோடு பயணிக்கின்ற இடதுசாரிகளின் பயணத்தை வெற்றிபெறச் செய்வோம்!

- இரா.சரவணன்([email protected])


இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com