Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

என்ன சொல்லி அழைப்பது?
இரா.சரவணன்


குஜராத் இனப்படுகொலை, தானாக உருவானதல்ல, திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது என்பதை தெகல்கா சாட்சிகளுடன் அம்பலப்படுத்தி குஜராத் முதலமைச்சர் நரவேட்டை மோடி உட்பட பலர் குற்றவாளிகளாக அடையாளம் காட்டப்பட்டும் அந்த மதவெறிக்கூட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்கத் துணிவற்ற அரசை,

Bush and Manmohan Singh அமர்நாத் கோயில் நில விவகாரத்தில் காஷ்மீரைக் கலவர பூமியாக மாற்றியதற்குப் பிறகு ஒரிசா மாநிலத்தில் இந்து ஆசிரமம் மீது நடைபெற்ற நக்சலைட் தாக்குதலைக் கண்டித்து நடைபெற்ற முழு அடைப்பில் கலவரத்தை உருவாக்கி கிருஸ்துவ தேவாலயங்கள் மற்றும் கிருஸ்துவ அமைப்புகள் நடத்தி வந்த அனாதை இல்லங்களைக் கொளுத்தியும் தாக்கியும் இருபதுக்கும் மேற்பட்ட உயிர்களைக் கொலை செய்தும் குஜராத்தின் இரண்டாவது பகுதியாக மாற்றிக் கொண்டிருக்கும் மதவெறி அமைப்புகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் மத்திய அரசை,

மதவெறிக் கூட்டமான பாஜக அதிகாரத்திற்கு வந்தால் சிறுபான்மையினர் எந்த அளவிற்கு பாதிக்கப்படுவார்கள் என்பதை கர்னாடகாவில் கிருஸ்தவர்களும், அவர்களின் தேவாலயங்களும் ஒவ்வொரு நாளும் தாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை காணும்போது புரியும். அணுசக்தி உடன்பாட்டைத் தவிர மற்ற பிரச்சனைகளைப் பற்றி பேசும்போது பொறுமையாக இருக்கின்ற பிரதமர் மன்மோகன் சிங்கிற்கே கோபம் வரும் அளவிற்கு கர்னாடகத்தில் வெறியாட்டத்தை நடத்தி வரும் மதவெறி ஆட்சி மீது 356வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெற்று மிரட்டல் மட்டுமே விடும் அரசை,

விலைவாசி பலமடங்கு உயர்ந்து ஏழை மக்கள் விழி பிதுங்கி நின்றுக் கொண்டிருக்கும் போது ரோம் நகர் பற்றியெறிந்த நேரத்தில் பிடில் வாசித்த நீரோ மன்னனைப் போல் இருக்கும் மன்மோகன் அரசை, விலைவாசி உயர்ந்து ஏழை மக்களின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கிறது தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறும்போது சர்வதேச அளவில் விலைவாசி உயர்கிறது இந்தியாவில் மட்டுமல்ல என்று கைவிரிக்கின்ற அரசை, அந்த விலைவாசி உயர்வுக்குக் காரணமான முன்பேர வர்த்தகத்தை, ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வக்கில்லாத ஒரு அரசை,

பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு சர்வதேச சந்தையில் கச்சாப் பொருட்களின் விலை உயர்வைக் காரணம் காட்டிய அரசு, கச்சாப் பொருட்களின் விலை குறையும்போது பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைக்கமாட்டேன் என்று கூறும் திமிர்ப்பிடித்த அரசை,

பணவீக்கம் வரலாறு காணாத அளவில் 12.63 என உயர்ந்து கொண்டிருக்கும் போது எலும்புத் துண்டுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும்......... போல அமெரிக்க வெள்ளை மாளிகையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் அரசை,

எரிசக்தித் தேவைக்காக உள்நாட்டு சுரங்கம், அனல், புனல், காற்றாலை, கிடைக்கக்கூடிய தோரியத்தை வைத்து தொழில்நுட்பங்களை உருவாக்கி, மேம்படுத்தி எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்துகொள்ள வழி இருக்கின்றபோது, 10 ஆண்டுகளுக்கும் மேல் விற்பவனது நாட்டிலேயே (அமெரிக்கா) நிறுவாத அணு உலைகளை இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையிலான பல லட்சக்கணக்கான ரூபாயை கொடுத்து வாங்கத் துடிக்கும் அரசை, அணுசக்தி உடன்பாடு என்ற பெயரில் இந்திய இறையாண்மையை, சுயேச்சையான வெளியுறவுக் கொள்கையை கேள்விக்குறியாக்கிய மானமுள்ள (?) அரசை,

15 கோடிக்கும் மேல் வேலையில்லாத இளைஞர்கள் இருக்கின்ற நிலையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்காத அரசை, லட்சக்கணக்கில் இருக்கக்கூடிய அரசு காலிப்பணியிடங்களை நிரப்பாத அரசை, பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் கொடுக்க தூக்கிக்கொண்டு கைவலிக்கக் காத்துக் கொண்டிருக்கின்ற தனியார்மய அரசை,

இந்திய உழைப்பாளிகள் தன் வியர்வையைச் சிந்தி உழைக்கின்ற பணத்தின் ஒரு பகுதியான பி.எப். பணத்தை தனியாரிடம் கொடுக்கின்ற மனிதானபிமானமற்ற அரசை, சமூகப் பாதுகாப்பிற்காக போராடிப்பெற்ற உரிமையான பென்ஷன் பணத்தை சூதாட்டத்தில் போட முடிவெடுக்கின்ற ஒரு அரசை,

பொருட்களின் விலையேற்றத்தை தடுப்பதற்காக அரசின் இந்திய உணவுக்கழகத்தின் மூலமாக பொதுவிநியோக திட்டத்தின் கீழ் (ரேஷன் கடை) பொருட்களை கொடுக்காமல் வெளிமார்க்கெட்டில் விற்பதற்கு முடிவெடுத்திருக்கின்ற முதலாளி அரசை, பொதுவிநியோகத்தை சீர்குலைக்கும் நோக்குடன் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கவேண்டிய அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் அளவினை குறைத்துத் தருகின்ற மத்திய அரசை, சில்லரை வியாபாரத்தை வால்மார்ட், ரிலையன்ஸ் போன்ற பன்னாட்டு, உள்நாட்டு அம்பானிகள் போன்ற பகாசுர முதலைகளுக்கு திறந்துவிட்டுள்ள அரசை,

ஏறியிருக்கின்ற விலைவாசியில் 70 சதத்திற்கும் மேலான மக்கள் இருபது ரூபாயில் குடித்தனம் நடத்த வைத்த கொடுமைக்கார அரசை, அந்த 70 சத மக்களுக்குக் கிடைக்கும் குறைந்தபட்ச மருத்துவ வசதிகளையும் தகர்த்து, தடுப்பூசி மருந்து உற்பத்தி நிறுவனங்களை தனியாரின் லாபவேட்டைக்கு விடும் தனியார்தாச அரசை,

ஈரானிலிருந்து குறைந்தவிலையில் குழாய் மூலம் எரிவாயு தருகின்ற திட்டத்தை அமெரிக்காவின் அதட்டலுக்கு பயந்து கைவிட்ட தைரியசாலி அரசை,

தமிழக கடலோர மாவட்டங்களில் உள்ள வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்து தமிழக பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகின்ற சேதுசமுத்திர வழக்கில் மதவெறிக்கூட்டங்களுக்குப் பணிந்து கோட்டைவிட்ட அரசை,

ஏற்கனவே பல மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து தற்போது இருந்த இடம் தெரியாமல் நீர்த்துபோய்க் கொண்டிருக்கின்ற காங்கிரஸ் அரசை, கோஷ்டிப் பூசல் என்றாலே நினைவுக்கு வரும் கட்சியாக, தங்கள் தலைமை அலுவலத்திற்குள்ளேயே ரவுடிகளை வைத்து பழிவாங்கிக் கொள்கின்ற போக்கை களைய வக்கற்ற காங்கிரஸ் கட்சியை,

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக நாடாளுமன்றத்தில் தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள நடைபெற்ற குதிரை பேரத்தின் விளைவாக நாடாளுமன்றத்தின் மைய அவைக்குள்ளேயே கட்டுக்கட்டாய் ரூபாய் நோட்டுக்களை தூக்கிக் காட்டி இந்தியத் திருநாட்டின் மானத்தையே குழிதோண்டி புதைக்கக் காரணமாக இருந்த மத்திய அரசை, அதனை வழிநடத்தும் காங்கிரஸ் கட்சியை மூழ்கும் கப்பல் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்லி அழைப்பது!

தடியடித் திருவிழா நடத்தும் தமிழக அரசு!

சமீப காலமாக 2010க்குள் தகவல் தொழில் நுட்பம் படித்தவர்களுக்கு 3 லட்சம் பேருக்கு வேலை, 5 லட்சம் பேருக்கு வேலை என்று விளம்பரம் கொடுக்கும் ஆளும்கட்சி மற்றும் ஆதரவு தொலைகாட்சி செய்திகள், குறைந்தபட்ச கல்வித்தகுதியான 8ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு படித்துவிட்டு மேலும் படிப்பைத் தொடர முடியாமல் போன இளைஞர்களில் எத்தனை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தரப்போகிறோம் என்று கூறுவதில்லை.

பன்னாட்டு நிறுவனங்களில் கிடைக்கும் வேலைவாய்ப்பிற்கு பிரதிபலனாக, தமிழகத்தில் தொழிற்சாலை நிறுவுவதற்கு நிலம் கொடுத்து, அந்த நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம் சலுகை விலையில் கொடுத்து, இவற்றையெல்லாம் விடவும் இந்திய தொழிலாளர் நலச்சட்டங்களை காவுகொடுத்து, ஹுண்டாய் போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் கடவுள்களேயேனாலும் காலில் போட்டு மிதிப்பதற்கு அனுமதி கொடுத்து, தொழிலாளர்களை நாயைப் போல் கேவலமாக சித்தரித்து சித்திரம் வரைந்துகொள்வதற்கு அனுமதித்து, தொழிலாளர் உரிமைகளுக்காகப் போராடும்போது காவல்துறையை முதலாளிகளுக்கு காவலாக நிற்கவைத்து தொழிலாளர்கள் மீது காட்டு தர்பார் நடத்தி, தடியடி படுவதற்கெல்லாம் ஒத்துக்கொண்டால்தான் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை கிடைக்கும் என்ற நிலையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.

தமிழர்களின் மானத்தை விலைபேசி விற்கின்ற மேற்கண்ட கொடுமைகளை இடதுசாரிகளைத் தவிர மற்ற திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், பாஜக, அரசியலுக்கு வந்தபின்னரும் காஷ்மீர் எல்லையில் நின்று பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராகப் பேசிக் கொண்டிருப்பதைப் போலவே உள்ளூரிலும் பேசிக்கொண்டிருக்கின்ற தேமுதிக தலைவரும், விடுதலை சிறுத்தைகள், மதிமுக போன்ற கட்சிகள், உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று வசனம் பேசிக்கொண்டிருக்கின்ற கட்சிகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றதே ஏன்?

தமிழக தொழிலாளர்கள் தங்களின் உரிமைக் குரல் நெரிக்கப்படுவதைக் கண்டித்து ஜனநாயகமுறைப்படி தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தால், அரசு உதவிபெறும் கல்லூரிகளை நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாற்றுவதைக் கண்டித்து மாணவர்கள் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தால், வேலையற்ற இளைஞர்கள், எங்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக்கொடு, காலியிடங்களை பூர்த்தி செய் என்று கோஷமிட்டால், விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் போது கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்தினால், சுகாதாரமான குடிநீர் கேட்டு மறியல் செய்தால், மின்வெட்டைக் கண்டித்து இயக்கங்களை நடத்தினால், ஆக்கிரமிப்பு என்ற பெயரில் 10லிருந்து 20 ஆண்டுகளாக குடியிருக்கும் பகுதிகளை இடித்துத் தள்ளுவதைக் கண்டித்து போராட்டம் நடத்தினால், இடதுசாரிகளின் ஆதரவினால் உருவாக்கப்பட்ட கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதிச்சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நியாயமான கூலியை கேட்டு போராட்டத்தில் இறங்கினால், காவல்துறை கைத்தடிகளை வைத்து போராட்டத்தைக் கொடூரமான முறையில் ஒடுக்குவதும் அவர்கள் மீது பொய்வழக்கு புனைந்து சிறையிலடைப்பதும், விழுப்புரம் மாவட்டம் ரெட்டனை கிராமத்தில் நடத்திய துப்பாக்கிச்சூடு போன்ற குரூரங்களையும் நடத்துவதும் தமிழக அரசுக்கு வாடிக்கையாக இருக்கிறது.

மக்களின் அனைத்து போராட்டங்களையும் தடியடி நடத்தி ஒடுக்கிவிடலாம் என்று தமிழக அரசு கனவு காணக்கூடாது. கட்டிவைத்துள்ள வெறும் மேம்பாலங்கள் வந்து ஓட்டுப் போடாது, திமுக அரசால் தடியடிப்பட்ட மாணவர்களும், துப்பாக்கிச் சூடுபட்ட கூலித் தொழிலாளர்களும், நியாயம் கிடைக்காத விவசாயிகளும், வேலையில்லாத் திண்டாட்டத்தினால் அவதியுறும் வாலிபர்களும், கடுமையான விலைவாசி உயர்வினால் அன்றாடம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டத் திரளும்தான் வந்து ஓட்டுப்போடவேண்டும் என்பதை கலைஞர் அரசு புரிந்துகொள்ளட்டும்!

- இரா.சரவணன்([email protected])


இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com