Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

மனிதனின் நீர் சார்ந்த வாழ்வியல் கோலங்களும், ஊடகங்களும், வந்து சென்ற சுனாமியும் !
எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

சூழப்பல தேசங்களிலும் என் தேசத்திலும் மழை விடாமல் பொழிவதாயும், வீடுகள்,வீதிகள், மரங்கள் அனைத்துமென வெள்ளம் வழிவதாயும் செய்தித்தாள் சொல்லிற்று. தடவிப் பார்த்தேன். ஈரத்தின் சுவடுகள் விரல்களில் பொசிந்தன. காலம் காலமாக என் வானில் பெய்த மழை இன்று நான் வாழும் இப் பாலைவன தேசத்தில் பொய்த்தது. சூழலை இருட்டாக்கி, தேகங்களை வெம்பச் செய்து, மேகக் கூட்டங்கள் கருக்கட்டி, வான நடை போட்டுப் பார்த்துப் பல காலமாயிற்று.

மழையின் துளிகளை முகத்தில் வாங்கி , அன்னை கூப்பிட்டலுத்து அன்பால் திட்டித் திட்டித் தலை துவட்டி விடும் சிறுபராயம் நினைவுகளில் இடறுகிறது. தலையின் பின்புறம் கட்டாயம் துடைக்கவேண்டும். ஈரத்தின் சாயல் கண்டு தடிமன் வரும். பின்னர் காய்ச்சல் வரும். நீர் தேங்கி நிற்கும் குட்டைகள் தோறும் விஷக்கிருமிகள் பெருகித்தொற்றி விதவிதமான நோய்கள் வரும் என்றெல்லாம் தந்தை மடியிலிருத்தி மழை குறித்த கதைகள் சொன்னதும் ஞாபக அடுக்குகளிலிருந்து மீளெழும்பிக் கிளர்த்துகிறது.

பல காலமாக மழையற்ற எனது சிறுவயதின் காலமொன்று நினைவுக்கு வருகிறது. ஊரின் குறுக்கே ஓடும் பேராற்றில் நீர் வரண்டு நிறைந்திருந்த மணல்மேட்டில் ஊரின் இளைஞர்கள் கிரிக்கெட்டும் கால்பந்தும் விளையாடினர். சிறுவர்கள் பட்டம் விட்டனர். மரங்கள், செடி கொடிகள் வாடிய அக்காலத்தில் பட்டாம்பூச்சிகளும், மழைக்குருவிகளும் கூட வேறெங்கோ பறந்திருக்கவேண்டும். தண்ணீருக்குக் கடும்பஞ்சம். எங்கும் கடும்வெயில். சொன்னது கேட்காப்பிள்ளையை பிசாசுகளை நினைவுருத்தி வெருட்டுவது போலச் சூடும் வெயிலும் எல்லாவற்றையும், எல்லோரையும் மிரட்டியபடி அலைந்தது.

அக் கோடையில் அத்தியவசியத் தேவைகளுக்கே நீரற்றுப் போனதனால் விவசாயங்கள் பொய்த்துப் போயிற்று. வளர்ப்புப் பிராணிகள் மெலிந்து கொண்டு வந்தன. நீரோடி வற்றிய ஆற்றில் ஆழக்குழி தோண்டி உள்ளே ஊறித் தெரிந்த நீரை அகப்பையிலள்ளிக் குடங்களுக்கு சேலைத் திரையிட்டு அதனூடாக வடிகட்டி நீரைச் சேகரித்ததையும் கண்டிருக்கிறேன். தெளிந்த நீர்க் கிணறு உள்ளதென அறிந்து வெகுதூரம் நடந்தும், சைக்கிள்களிலும் தேடிப் போய்த் தண்ணீர் காவி வந்தனர் ஊரார். நாடு முழுதும் இதே நிலைமை. எல்லா நீர்த் தேக்கங்களிலும் தண்ணீரின் மட்டம் குறைந்ததனால் மின்சாரம் வழங்குவது கூட அரசுக்குச் சிக்கலாயிற்று. நாளொன்றின் பெரும்பகுதிகள் மின்சாரமற்றுப் போக விதிக்கப்பட்டன. நாட்டின் பெரும் பாகங்கள் இருளுக்குள் மூழ்கின.

கடல் எங்களூரிலிருந்து மிகத் தொலைவில் அலையடித்தபடி இருக்கிறது. நேரில் கண்டதில்லை. கடல் பற்றிய பிம்பங்களை போத்தலில் அடைக்கப்பட்ட பூதமொன்று அலையில் மிதந்து வந்து சிறுவனொருவனுக்கு எட்டிய கதையூடாக சிறுவயதில் அறிந்திருக்கிறேன். ஆழக் கடலெனில் அது நிறைய என்றும் வற்றா நீரிருக்கும் என்ற தந்தையிடம் நீர் எப்படி வற்றுமெனக் கேட்டுத் தெரிந்த பின்னர் , கடல் பிரதேசங்களில் சூரியன் அலையாதா எனக் கேட்டுத் திண்டாடச் செய்திருக்கிறேன்.

பள்ளிக்கூடச் சுற்றுலா போய் கடல் பார்த்து வந்த பின்னர், வெயில் வராத தெருக்களோடு, எல்லா ஊர்களிலும் என்றுமே வற்றாத கடல்கள் இருப்பின் எவ்வளவு நன்றாக இருந்திருக்குமெனக் கூட்டாளிகளுடன் கூடிக் கதைத்த கதைகளும், கடற்கரை இரவுகளின் மணல் நடையும் நிலாச் சோறுண்ணும் ஆசையும் சில வருடங்களுக்கு முன் வந்து சென்ற சுனாமியுடனும், பின் வந்த அடைமழையுடனும், அது கொண்டு வந்த வெள்ளத்துடனும் வடிந்து போயிற்று.

இலங்கையில் விடிந்தும் விடியாப்பொழுதுகளிலிருந்து புதுத்திரையிசைப் பாடல்களோடு கும்மாளமிடும், மொழிக் கொலையுடன் அரட்டையடிக்கும் பல வானொலிகள் 26-12-2004 அன்று சுனாமி குறித்தான நேரடி அறிவிப்பினைத் தொடர்ந்தும் தந்துகொண்டிருந்தன. வீட்டுக்குத் தேவையான சில பொருட்களை வாங்க கடைவீதிக்குச் சென்றிருந்த எனக்குள்ளும், பலரிடமும் ஆழிப்பேரலை குறித்து வானொலிகள் அலறியது பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது. வழமையாகக் காலைவேளையில் மகளிருக்கான நிகழ்ச்சிகளை அள்ளிவழங்கும் தொலைக்காட்சி அலைவரிசைகள் கூட அன்று பேரலைத்தாக்கத்தை நேரடியாகக் காட்சிப்படுத்தின. இந்நேரத்தில் நேரடிக்காட்சிப்பதிவுக்காக கடற்கரை சென்ற ஒரு தொலைக்காட்சி ஊடகவியலாளரையும் படப்பிடிப்பாளரையும் அலைவிழுங்கியதை வருத்தத்துடனும், இன்னும் இலங்கையின் மற்ற ஊடகங்களை நன்றியுடனும் நினைவுகூறுகிறேன்.

அந்த ஞாயிறன்று பல தொலைக்காட்சிகளும் கடலனர்த்தம் குறித்துச் சொல்லிக் கொண்டிருக்கையில்தான் அப் பாய் வியாபாரி வந்தார். இவ் அசம்பாவிதங்கள் குறித்து ஏதும் அறியா அவரிடம் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காட்டி ஊரை விசாரித்ததில் கடலுக்கு அண்மையிலுள்ள 'காத்தான்குடி' என்றார். சமையலறைக் கழிவு நீரைக் கடலுக்குள் வீசியெறியும் தூரத்தில்தான் அவர் வீடிருப்பதாகச் சொல்லி இரு கைகளையும் தலையில் வைத்துக் கொண்டு செய்வதறியாது நிலத்தில் அமர்ந்து விசித்து விசித்தழத் தொடங்கினார். வாழ்வில் முதல்முறையாக கடலலைகளின் சீற்றம் குறித்து அறியக்கிடைத்தது அவருக்கும் எங்களுக்கும். எப்பாடுபட்டாவது இப்பொழுது ஊருக்குப் புறப்படவேண்டும். கர்ப்பிணி மனைவியும், இரு சிறுகுழந்தைகளும், பாரிசவாத நோய் தாக்கிப் பாயோடு முடங்கிய வயோதிபத்தாயும் குடிசையில் தனித்திருப்பதாகச் சொல்லி அவர் உடனே ஊருக்குப் புறப்பட்டார். வானம் இருட்டியிருந்தது. சூரியன் வெட்கி எங்கோ ஒளிந்திருந்தது.

ஊடகங்களின் தொடர்ந்த அறிவிப்புக்கள் எனது ஊர்மக்களின் மனதினை பெருமளவில் இளகச் செய்திருந்தன. ஊர்ப் பள்ளிவாயிலிலிருந்து அறிவிப்புக்களோடு பல வாகனங்கள் ஊர்த்தெரு முழுதும் உலா வந்தது. வீடுகளிலிருந்த அரிசி, பருப்பு, கோதுமை மா முதல் கடைகளிலிருந்த பால் மா, சீனி,பாண், நூடுல்ஸ்,பிஸ்கட்டுகள் எனப் பல உணவுப் பொருட்களையும் மக்கள் தாமாகவே அள்ளியள்ளிக் கொடுத்துதவினர். பல தாய்மார்கள் ஒன்று கூடி கோதுமை மாவை , ரொட்டிகளாக சுட்டுத்தந்தனர். இப்படியாக உணவுப்பொருட்களாலும் சடலங்களைப் போர்த்தவென வெள்ளைத்துணிகளாலும் பாண்டங்களாலும் இரு பஸ்கள் நிறைந்தன. மாலைத்தொழுகை வரை சேர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்கள் நோக்கி நகர்ந்த பஸ்ஸொன்றுக்குள் நானும் இருந்தேன்.

வெகுநேரம் பயணித்து , விடிகாலையில் அம்பாறை எனும் நகரத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். சாய்ந்தமருது, சம்மாந்துறை, நிந்தவூர் எனப் பல பிரதேசங்களுக்கும் நிவாரணப்பணிக்கென வந்திருந்த நாம் மனம் முழுதும் வியாபித்திருந்த துயரச் சலனத்தோடு பிரித்தனுப்பப்பட்டோம். பள்ளிவாயல்களுக்கு இரவிரவாகத் தட்டுவண்டிகள் சடலங்களை அள்ளிக்கொண்டு வந்துசேர்ந்தன. ஒவ்வொன்றாகத் திண்ணையில் கிடத்தி (அனேகமான சடலங்களில் ஆடையிருக்கவில்லையாதலால் ) துணியால் போர்த்திப் பின்னர் தூய நீரால் குளிப்பாட்டினோம். குளிப்பாட்டி , வெண்துணியால் போர்த்தப்பட்டவைகளை ஏற்றியபடி தட்டு வண்டிகள் மயானம் நோக்கிச் சென்றன.

ஒரு கட்டத்தில் சடலங்களின் மீட்பும் , வருகையும் அதிகரிக்க எல்லாவற்றையும் திண்ணையில் வரிசையில் கிடத்தி அவசரமாகக் குளிப்பாட்டி, அவசரமாக எடுத்துச் சென்று ஒரு பெரிய குழியில் பிரார்த்தனைகளோடு ஒன்றாகப் புதைக்கவேண்டியேற்பட்டது. அவ்வளவு சடலங்கள். நீர் குடித்து, ஊதிப் பெருத்த சடலங்கள். தலைமயிர்களில் கடல்வேர்கள் சிக்குண்டிருந்தன. ஹஜ் பெருநாளும், கிறிஸ்மஸும் அண்மித்த தினமாகையில் அனேகமான பெண் சடலங்களின் கரங்களில் மருதாணி விரல்கள். சிறு குழந்தைகள் பொம்மைகளைப் போலத் துயில் கொண்டிருந்தன.

விடிந்து பார்க்கையில் எல்லா இடங்களிலும் அழுது சோர்ந்த விழிகளுடன், எல்லா மதத்தவர்களுமான ஊர் மக்கள் பரவிக்கிடந்தனர். நிந்தவூரின் கடற்கரைப்பள்ளிக்கூடம் அலையால் மூழ்கடிக்கப்பட்டதில் அதில் கல்விக்காகச் சென்றிருந்த ஊர்ச் சிறுவர், சிறுமியர்கள் அருகிலிருந்த மயானத்தில் தாமாகவே சடலங்களாக மூடப்பட்டிருந்தனர். கொண்டு போயிருந்த உணவும் , மற்றையவும் பள்ளிவாயில் தலைமைப் பொறுப்பிடம் ஒப்படைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட எல்லா மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. இலங்கையில் மாவனல்லை மக்கள் சேர்த்தளித்த பொருட்கள்தான் முதன்முதலாக பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போய்ச்சேர்ந்தனவென்று ஊடகங்கள் செய்தியறிக்கைகளில் சொன்னதும் பல ஊர்களிலிருந்தும் நிவாரணப்பொருட்கள் குவியத் தொடங்கின.

இந் நிலையில் ஆழிப் பேரலையின் கோரத்தாண்டவத்தில் சிக்கிய சில பிரதேசங்களில் திருட்டுக்களும் நிகழ்ந்திருக்கின்றன. கடற்கரையோரமாகப் பயணித்த ஒரு ரயில் வண்டியும் அதன் தண்டவாளங்களும் காட்டேறியொன்றின் கோர நகங்களையொத்த வளைவு நெளிவுகளுக்காளாகியிருந்தபோது அதில் பயணித்தவர்கள் அனைவரும் மரணித்துப் போயினர். உலா வந்த கொள்ளையர்கள் ஊதிப் பருத்திருந்த அச் சடலங்களின் காதுச் சோனைகளை வெட்டித் தோடுகளையும், விரல்களை வெட்டி மோதிரங்களையும், கைகளை வெட்டி வளையல்களையும் சங்கிலிகளையும் திருடிப் போயிருந்தனர். நகைகளின் பிரகாசம், அனர்த்தம் குறித்தான அவர்களது அனுதாபங்களை முழுவதுமாக மனதிலிருந்து அகற்றியிருக்க வேண்டும்.

இலங்கை, காலியில் நடந்த சம்பவமொன்று இன்னும் நினைவிலிருந்து அகற்ற முடியாதுள்ளது. சுனாமி தினத்தன்று தற்செயலாகத் தொலைக்காட்சிச் செய்தியில் காட்சிப்படுத்தப்பட்ட சில நிமிடக் காட்சிகளைக் கூர்ந்து கவனித்த ஒருவர் , அதிலொரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து வழக்குப் பதிவு செய்தார். சில மாதங்கள் கழித்து வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது அவ் வீடியோக் காட்சிகள் பெரும் சாட்சியொன்றை அளித்தன. காலி நகரத்தை முழுதாக பேரலை தாக்கிய பொழுதில் தப்பி நீந்திவந்த ஒரு இளம்பெண்ணின் கழுத்துச் சங்கிலியைக் கழட்டியெடுத்து அவரைத் தண்ணீருக்குள் மூழ்கடித்து கொல்கிறான் ஒருவன். அக் கொலைகாரனைக் கண்டுபிடித்து மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது நீதிமன்றம்.

இது போலப் பல கோரங்கள் சுனாமியினால் இலங்கை, இந்தியா, இந்தோனேஷியா இன்னும் சில நாடுகளில் கடலலை அனர்த்தத்தோடு நிகழ்ந்து கொண்டேயிருந்தன. வைத்தியசாலைகளும், பிரதேச சபைகளும் அடையாளம் தெரியாச் சடலங்களால் நிறைந்தன. இந் நிகழ்வுகளின் போதும் நிவாரணப் பணிகளின் போதும் ஊடகங்கள் பெரிதும் உதவின. பல நாடுகளும் தம் உதவிக்கரங்களை நீட்டின. இருப்பிடங்களை இழந்தவர்களுக்கு வீடுகளும், தொழில் இழந்தவர்களுக்கு தொழிலும் மற்றும் இழப்புகளுக்கும் தாம் உதவுவதாகச் சொல்லின. சில நிறைவேறின.

அப்போதைய இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குச் சென்று அவர்களுக்குக் கைகொடுத்து உரையாடி வந்ததை உலகின் பேரதிசயம் போல ஊடகங்கள் எண்ணிப்பலவாறாக விளம்பரப்படுத்தி வந்தன. பிறகு வந்த காலங்களில் ஊடகங்களுக்கு எழுதத்தெரிந்த அனேகர் ஆழிப்பேரலை குறித்துக் கவிதை, கட்டுரை, கதைகளெனக் கிறுக்கத் தொடங்கினர். அது சுனாமியை விடவும் மோசமாக இருந்தது.

"சுனாமியை விடக் கொடுமையானவை அதையொட்டி எழுதப்பட்ட பல கவிதைகள். இவற்றை எழுதிய கவிஞர்கள் பலரையும் டிசம்பர் 26, 2004 காலை 8.20 மணிக்கு மீன் வாங்கி வரும்படி கடற்கரைக்கு அனுப்பாதது நாம் விட்ட மகா வரலாற்றுப்பிழை. 'ஆடை களவாடும் சுனாமி நீதானோ?' எனக் காதலியின் விரகக்குரலுக்குப் பாடல்வரிகள் எழுதிய வைரமுத்துவையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்" எனத் தன் பத்தியொன்றில் கூறும் எழுத்தாளர் திரு.உமா வரதராஜனின் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளும்படியாகப் பல கவிதைகள் அலைகளின்றி ஆர்ப்பாட்டமின்றி ஆட்களைக் கொன்றன.

அது போலவே அக் காலத்தில் மிகைத்திருந்த ஆழிப்பேரலை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் செய்துதருவதாகச் சொன்ன அரசியல்வாதிகளின், நடிகர்களின் வாக்குறுதிகள் அனேகமானவை நிறைவேற்றப்படாமல் போன இடம் குறித்துத்தகவல்கள் இல்லை. இலட்சக்கணக்கான மக்களைக் காவுகொண்ட சுனாமியைப் போலவே தான் பேய்மழைகள் பெரும் இடர்களைக் கொண்டுவருவனவென்றும் அவை மரணத்தின் தூதுவனுக்கு உதவுபவையென்றுமான எண்ணங்கள் எல்லோர் மனதிலும் வலுப்பெற்று நிற்கும்படி பின் வந்த மழைநாட்கள் நாட்டின் பெரும்பாகங்களை வெள்ளத்துக்குள் மூழ்கடித்தன. எங்கு பார்க்கிலும் வெள்ள நீர் மட்டம். அனேக குடியிருப்புக்களின் கூரைகள் மட்டும் தமதிருப்பை உணர்த்தியபடி நீருக்குள் மிதந்தன. ஆட்களேற்றிய வள்ளங்கள் இடமற்ற காரணத்தால் விட்டுச் சென்ற செல்லப்பிராணிகள் சடலங்களாக மிதந்து காகங்களினதும் ,அனைத்துமுண்ணிப் பறவைகளினதும் வயிற்றினை நிரப்பின.

பல இடங்களில் மண்சரிவினாலும், மழை, வெள்ளத்தாலும் மனிதர்களும் கூடத் தமது இருப்பிடங்களோடு மீளப்பெற முடியாச் சடலங்களாக மண்ணுக்குள் புதையுண்டனர். பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வெள்ளத்துக்காக விட்டுச் சென்ற வீடுகளில் கொள்ளையர்கள் புகுந்து திரவியங்களைத் தேடினர். எல்லாம் பார்த்திருந்த மழை, தொடர்ந்தும் வருடங்கள் தோறும் சில காலங்களுக்கொரு முறை அமோகமாக வந்து மேலும் மேலும் இன்னல்களைத்தான் சேகரித்துத் தந்துவிட்டுச் செல்கின்றது.

காலநிலை மாற்றங்கள், யாராலும் நிறுத்த முடியா மழை, புயலின் பாதிப்புக்கள், திசைகள் நோக்கி நகரும் சூறாவளியின் தாக்கங்கள் எனப் பல சொல்லும் வானிலை அறிக்கைகளைக் கூடச் சில சமயங்களில் மழை ஏமாற்றிவிடுகிறது. எதிர்பாராத் தருணங்களில் ஒரு திருட்டுப் பூனையைப் போல வந்துவிடுகிறது. அடைமழை வரலாம் என அறிவிக்கப்பட்ட நாட்களில் தபால்காரனின் கரத்திலிருந்து தொலைந்து போன கடிதமாய் மழை வராமலே போய்விடுகிறது.

கடந்த இருமாதங்களாக இலங்கையின் பல பிரதேசங்களிலும், இந்தியாவின் தமிழ்நாடு, இன்னும் சில பிரதேசங்களிலும் புயலுடனான மழை கோரத்தாண்டவமாடிச் சென்று நகரங்கள் ஈரலித்துக் கிடந்தமையையும், மனிதர்கள் ஏற்றத்தாழ்வு பாராமல் வெள்ளம் தீண்டாத ஊர்ப்பொது இடங்களில் கூடிக் கதைத்தபடியிருந்ததையும் காணும் வாய்ப்புக்கள் புகைப்படங்கள் மூலம் கிட்டியது. நகரங்களில் நேர காலமற்ற பணி நெருக்கடி, அயலவரைக் கூட அறிமுகமற்றவர்களாக ஆக்கியிருக்கிறது. பெற்ற பிள்ளைகளிடம் பல விடயங்களை பேசுதல், அவர்களது கல்வி, வாழ்வியல் முறைகள், நடவடிக்கைகள் எனக் கலந்தாலோசித்தல் போன்றவைக்கும் துணைகளிடம் மனம் விட்டுப் பேசுவதற்கும் நேரம் இடமளிக்கா வீடுகளில் உள்ளவர்களையெல்லாம் கூட வெள்ளம் ஒன்றாக்கி ஓரிடத்துக்குக் கூட்டி வந்து கலந்துரையாட விட்டது.

வெள்ளங்களும், பல இயற்கை அனர்த்தங்களும் சமூகத்தின் கீழ்நிலை மற்றும் நடுத்தர மக்களையே அதிகம் பாதிக்கிறது. அன்றாட வாழ்க்கைக்காக அன்றாடம் உழைப்பவர்களும், மாத வருவாய் போதா மக்களுமே அதிகளவில் இன்னல்களுக்குள்ளாகின்றனர். வசதிப்பட்டவர்களின் மாளிகைகளுக்கு வெள்ளம் வராது. வரினும் அவர்கள் மாடிகளிலிருந்து வேடிக்கை பார்ப்பர். அவர்களுக்கான உணவுகள் குளிரூட்டப்பட்ட இயந்திரங்களுக்குள்ளும் சூடான சமையல் உபகரணங்களுக்குள்ளும் அடைபட்டுக்கிடக்க, மாடிகளிலிருந்து வெள்ளநீரையும், மழையையும் வேடிக்கை பார்ப்பர். சினிமா நாயகிகள் நீரில் அழியா முக ஒப்பனைகளுடன் மழையில் குதித்தாடுவதை தொலைக்காட்சிகளில் வேடிக்கை பார்த்தும் பொழுதைக் கடத்தலாம் அவர்கள்.

இன்னும், இலேசான மழை தூறும் நாட்களில் கூட சுகமான போர்வைக்குள் பலத்த நித்திரையிலிருக்கும் பலர் நனைந்த தரையில், குளிரெடுக்கும் இரவில் வீதியோரங்களிலும், வெளிப்புறக்கடைத் திண்ணைகளிலும், புனிதஸ்தல வாயில்களிலும் ஒண்டிக் கிடக்கும் யாசக மனிதர்கள் குறித்து சிந்திப்பதேயில்லை. மழை நாட்களில் அவர்களது பண வரவுகள், ஊண், உறையுள், உறக்கம் எதுபற்றியும் யோசித்துப்பார்ப்பதில்லை. மேற்கூறிய இடங்களில் அடைக்கலமாகி இரவுறக்கம் பெறும் சகமனிதர்களின் நிலை குறித்தும், மழை வந்தால் அவர்களது போக்கிடம், இருப்பு குறித்தும் உரையாடுவதுவும், நினைவுபடுத்துவதும் இங்கு அவசியமாகிறது.

இன்றைய காலகட்டத்தில் அரசு வழிநடத்தும் ஊடகங்கள் மற்றும் தனியார் ஊடகங்கள் பலவும் இது போன்ற அனர்த்தங்களுக்காக, அதற்கான நிவாரணங்களுக்காக ஒன்றுகூடுவதென்பது குறைவாகவே உள்ளது. குடும்பமே கூடிப் பார்த்துக் களிக்கும் தொலைக்காட்சித் திரைகள் கூடத் திரைநாயகிகளின் அங்க அசைவுகளையும், அதி பல சூரக் கதாநாயகர்களின் அடிதடிகளையும் , பொய் சொல்லும் விளம்பரங்களையும் காட்சிப்படுத்திக் காட்சிப்படுத்தியே மக்களின் நேரங்களை வீணடிப்பதோடு அவர்கள் மனதில் வக்கிரத்தையும் வன்முறைகளையும் விதைத்தபடியிருக்கிறது.

எழுத்து ஊடகங்கள் கூட அனேகமாக நடிகைகளின் நாய்க்குட்டிகளுக்கும், நடிகர்களின் புதுப்படங்கள், அரசியல் பொய் வாக்குறுதிகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் கூட இதுபோன்ற அனர்த்தங்கள் பற்றிய செய்திகளுக்கும், அதற்கான நிவாரணத்துக்காக ஒன்றுதிரள ஊக்கப்படுத்துவதற்கும் கொடுப்பதாயில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், இயலாதவர்களுக்காகவும் எவ்வளவோ செய்யமுடியுமானவை மக்களுடன் நேரடித் தொடர்பிலிருக்கும் ஊடகங்கள்தான். சில ஊடகங்கள் உள்ளனதான். மறுப்பதற்கில்லை. எனினும் அவையும் காலத்தின் இடர்நிலைக்குச் சிலகாலம் தம்மைக்கொடுத்துவிட்டுப் பின்னர் திரும்பவும் தமது இன்னிசைகளிலும், ஆட்டம்பாட்டங்களிலும், நடிகைகளின் இடைகளிலும், அரசியல் வீரப்பிரதாபங்களுக்குள்ளும் தம்மை ஒளித்துக்கொள்கின்றன.

காலநிலை மாற்றங்களால் இது போன்ற இயற்கை அழிவுகள் தொடரும் சாத்தியக்கூறுகள் அனேகமிருப்பதால் பாதிக்கப்படும் மக்களின் அரசினை இது போன்ற இன்னல்கள் ஏற்படுமிடத்து உடனடியாகச் செய்யவேண்டியவை குறித்துப் பல நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்த வேண்டிய கடமையில் நாம் இருக்கிறோம். ஆறுகளில் நீர் நிரம்பி ஊருக்குள் திரும்பும் வெள்ளங்களைக் கட்டுப்படுத்த தேவையான அணைகளைக் கட்டி, வேற்று வழிகளினால் நீர் வழிந்தோடச் செய்யவேண்டும். அழுக்குகளும், கழிவுகளும் தேங்கி, நீர் வழிந்து நிரம்பும் வாய்க்கால்கள் அடைக்கப்பட்டு, குப்பைகளால் நகர வீடுகள் நீருள் மூழ்குவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு அதைத் தடுக்கத் தேவையான வழிவகைகளையும் செய்யவேண்டும்.

இவையெல்லாவற்றுக்கும் ஊடகங்கள் தான் பேருதவி செய்யவேண்டும். மக்களின் காலடிக்கு தினமும் போய்வருகின்றன ஊடக அலைகள். உலகில் சுனாமி எச்சரிக்கை விடுக்கும் நல்ல சேவை செய்யும் ஆராய்ச்சி மையங்கள் பல இப்பொழுது தோன்றிவிட்டன. அது போலவே இயற்கை அனர்த்தங்கள் குறித்தும், அதன் போதான முதலுதவிகள் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கல்விகள், பிரச்சாரங்கள் போன்றவற்றை ஊடகங்கள் தினமும் முன்னின்று செய்துவரின் பல பேரிழப்புக்கள் தடுக்கப்படலாம். அறிந்த மக்கள், அறியாதவர்களிடமும், பாமரர்களிடமும் எடுத்துச் சொல்லாவிடின், சுனாமிக் கொள்ளையருக்கும் நமக்குமென்ன வித்தியாசம் இருக்கப் போகிறது ? நீருக்குத் தாகமெடுத்து உயிர்களைப் பருகித் துப்பவிடுவது இன்னும் எத்தனை நாளைக்கு ?

- எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com