Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

"அக்கர்மஷி"யின் அடையாளங்களைத் தேடி
புதியமாதவி., மும்பை

நான் சபிக்கிறேன்
உன்னை
உன் எழுத்துக்களை
உன் கலாச்சாரத்தை
உன் வேஷத்தை..

(நாம்தேவ் தசள் - கோல்ப்பிதா கவிதைகளிருந்து)

மராட்டிய மாநிலத்தில் ஒரு புதிய அலை இதுவரை எழுதப்பட்டிருந்த இலக்கியத்தின் பக்கங்களைப் புரட்டி, இதுவரை நிறுவப்பட்டிருந்த சமூகத்தின் அடையாளங்களை வீசி எறிந்து ஒரு கோட்டோவியத்தை வரைந்தது. 1960களில் ஏற்பட்ட சிறுபத்திரிகைகளின் வளர்ச்சி, மும்பையில் தொழில்மயம், அந்தத் தொழில் மயத்தில் எழுந்த புதிய தொழிலாளர் வர்க்கம், தொழிற்சங்கங்கள், அதுசார்ந்த மார்க்சிய சிந்தனைகள் இந்தப் பின்புலத்தில் 1972ல் தலித் பைந்தர் அமைப்பு .. என்று தொடர் அலையாக எழுந்த ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்.

அந்தக் குரலைப் பதிவு செய்திருக்கும் தலித் இலக்கியங்கள். அதிலும் குறிப்பாக 1980களில் தலித் எழுத்தாளர்களின் ‘தன் வரலாற்று’ பாணியிலான தலித் வரலாறு மார்க்சிய சிந்தனைகளையும் சேர்த்தே புரட்டிப் போட்டது.

தலித் எழுதாளர் தயாப்வாரின் "பலுட்டா " -சமூக உரிமை (1978), லஷ்மண் மானேயின் "யுபரா"- அந்நியன் (1980), லஷ்மண் கெய்க்க்வாட்டின் "யுசல்ய” -அற்பத்திருடன் (1987), பெண் தலித் எழுத்தாளர் பேபி காம்ப்ளேயின் 'ஜின் அமுச்" (இப்படியாக எங்கள் வாழ்க்கை) இவை அனைத்தும் தலித் தன் வரலாற்று பதிவுகளில் குறிப்பிடத்தக்கன.

இக்காலக்கட்டத்தில் வெளிவந்த சரண்குமார் லிம்பாளேயின் ‘அக்கர்மஷி’ வெளிவந்தவுடன் மிகவும் பேசப்பட்ட ஒரு பதிவு. அக்கர்மஷி என்றால் ஜாதிபிரஷ்டம் செய்யப்பட்டவன் - THE OUTCASTE என்று பொருள். ஜாதிகளால் விலக்கிவைக்கப்பட்டவன் என்றும் பொருள் கொள்ளலாம்.

கதையோட்டமும் சில கேள்விகளும்

சரண்குமாரின் தாய் மகாமயி மகர் இனத்தைச் சேர்ந்த தலித் பெண். அவனோ படில் (Patil) இனத்தைச் சார்ந்த ஆதிக்கச்சாதி ஆணுக்குப் பிறந்தவன். படில்களின் பண்ணைவீடுகளை காவல்காக்கும் மகர் ஆண்கள் படில்களின் மனைவிமார்களைத் தூங்கும்போது கூட பார்த்ததில்லை. பார்க்க முனைந்ததும் இல்லை. ஆனால் அவர்களின் தாய்களை, தாரங்களை, மகள்களை, சகோதரிகளை பண்ணையாரின் சதைப் பசி எப்போதும் தின்று எச்சிலாக்கி தெருவில் வீசுகிறது வயிற்றுப்பிள்ளையுடன்.

மகமாயி வீடு நிறைய குழந்தைகள். வெவ்வேறு ஆதிக்கச்சாதியின் அடையாளத்தைச் சுமக்கும் அடையாளமற்றுதுகள். மகர்களின் வீடுகள் இந்தக் குழந்தைகளை மகர்களின் இரத்தத்தைக் கறைப்படுத்திய களங்கமாக கண்டு விலக்கி வைக்கிறார்கள். அவர்கள் பிறப்புக்கு வித்திட்ட ஆதிக்கச்சாதிகளோ எந்த வகையிலும் தங்கள் அடையாளங்கள் தங்கள் விதைகளில் முளைத்த மரங்களில் இருக்காமல் பார்த்துக் கொள்ளும் இயற்கை முரணை இயல்பாக்கி வெற்றி காணுகிறார்கள்.

மகர்களின் குடும்பத்திலேயே சரண்குமாருக்குப் பெண் கொடுக்க மறுக்கிறார்கள். ஓர் இசுலாமியரைத் தன் உறவுக்காரர் என்று சொல்ல சரண்குமாரைச் சுற்றியிருக்கும் தலித் சிந்தனையாளர் கூட்டம் தன் புருவம் உயர்த்துகிறது. அவன் அப்படிச் சொன்னதால் தலித் பைந்தர் அமைப்பில் கவுரவமான பொறுப்பில் இருக்கும் தன் மகனுக்கு அவமானம் என்று சரண்குமாரின் மாமனார் அவனிடம் சண்டை போடுகிறார்!

தலித்தியம் என்பது என்ன? தலித்துகளின் கூட்டமைப்பு மட்டும்தானா? இக்கேள்வி எழுகிறது. தலித்தியம் என்பது தலித்துகளின் கூட்டமைப்பும் தான். ஆனால் அதுமட்டுமல்ல. தலித்துகளின் கூட்டமைப்பில் சாதியொழிப்பை முன்னெடுத்துச் செல்லும் நடவடிக்கை எளிதாகிறது. அந்தச் செயல்பாட்டின் வழி சமத்துவம் சமுதாயத்தை கட்டமைப்பது என்ற குறிக்கோள் சாத்தியப்படும். ஆனால் நடைமுறையில் தலித்துகளின் கூட்டமைப்பு என்ற முதல் கட்டத்திலேயே நின்று கொண்டிருப்பதற்கு யார் காரணம்? தலித்துகள் மட்டும் காரணமா?

அடுத்தக் கட்ட நகர்வுக்கு வாய்ப்பின்றி இச்சமுதாயம் கட்டமைக்கப்பட்டிருப்பது காரணமா? இங்கு நிலவும் அரசு, அரசியல், தலைவர்கள் காரணமா? தலித்திய மக்களை அந்த நிலையிலையே வைத்து தன் பீடத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் தலித், தலித் அல்லாதோர் எல்லோருமே காரணமா? யார்க் காரணம்?

என்னை மதிக்காதவர்களையும் மதிப்புடன் பயத்துடன் அழைக்கும் என் நாக்கு "என் நாக்கு மனுவின் சட்டத்திட்டங்களைச் சுற்றியே புரள்கிறது" 1978ல் மகர்களில் அந்த ஊரில் படித்தப் பட்டதாரிகள் இருவர்தான் என்ற உண்மையைப் பதிவுச் செய்யும் போது இட ஒதுக்கீடு வேண்டுமா வேண்டாமா என்று பேசுவதற்கு முன் சேரிக்குள் நுழைந்து அவர்களுடன் வாழ்ந்து பாருங்கள் என்று எல்லோரையும் அழைக்கும் குரலில் சத்தியம் இருக்கிறது. சத்தியமேவ ஜெயதே!

பாலுறவு

கற்பு, கற்பொழுக்கம், பெண் தெய்வங்கள் என்று அதீதமாக பேசப்படும் இந்திய-இந்துச் சமுதாயத்தில் அவர்களின் பேச்சும் எழுத்தும் கற்பித்திருக்கும் ஒழுக்கப் பண்பாட்டு விழுமியங்களும் அவர்களாலேயே சேரிகளில் மிதித்து நசுக்கிச் சிதைக்கப்படுவதையும் இவர்களின் தன் வரலாறுகள் பதிவு செய்திருக்கின்றன. ஆதிக்கச் சீதாராமன்களின் வேடமணிந்த, அகலிகைகளுக்குப் புணர்வாழ்வு கொடுத்த புண்ணியபாதங்களால் சிதைந்துக் கிடக்கும் தலித் பெண்களின் யோனிகள் நம்மைப் பயமுறுத்துகின்றன.

மார்புக்கச்சையோ, ப்ளவுசோ அணியாமல் தொங்கும் முலைகளைத் தன் சேலை முந்தானையால் மார்பைச் சுற்றித் தூக்கிக்கட்டி அலைந்த நம் பாட்டிகளை பார்த்திருக்கிறோம். ஆனால் சரண்குமாரின் அம்மாவும் சகோதரிகளும் நிர்வாணமாக வெளியிடத்தில், அவன் முன்னாலேயே குளிக்கிறார்கள். தன்னவ்வா (Dhanavva) என்ற தலித் பெண்ணை அவள் தகப்பன் சங்கர் பெண்டாளுகிறான். கேட்டால் சொல்கிறான். "நான் போட்ட விதை முளைத்து வளர்ந்து மரமாகிவிட்டது. இந்த மரத்தின் கனிகளை நான் ஏன் பறிக்கவோ சுவைக்கவோ கூடாது?" என்று!

சந்தமாயி புருஷன் செத்துப் போனதால் நெற்றியில் பெரிதாக வைக்கும் குங்குமப் பொட்டை, கழுத்தில் அணியும் கறுப்பு மணி தாலியை விலக்கி வைக்கிறாள். அவள் அளவில் அவளுக்கான விதவைக்கோலமும். மனைவியின் கடமையுமாக இதுவே அமைந்து விடுகிறது. ஆனால் அவள் தான் பஸ் ஸ்டாண்ட்டில் காக்கா (kaka) வுடன் திறந்தவெளியில் குடித்தனம் நடத்துகிறாள்.

வீடில்லாத , கதவுகள் இல்லாத பஸ் ஸ்டாண்டின் திறந்தவெளியில் வாழ்க்கை நடத்துவது அவலம்தான். இந்த அவலத்தின் ஊடாகத்தான் அவள் இந்து-முஸ்லீம் என்ற மத அடையாளத்தை மத துவேஷத்தை தன்னளவில் வெற்றிக்கொண்டு ஒரு பெண் அவளுக்கு ஓர் ஆண் என்ற உன்னதத்தை, வாழ்க்கைக்கும் வாழ்க்கையின் நம்பிக்கைக்கும் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகிறாள்.

எது அடையாளம்?

ஒரு மனிதனின் அடையாளம் என்பது என்ன? நான் யார்? என்று யோசிக்கும் போது நாம் நம்மை யாராக அடையாளப்படுத்திக் கொள்கிறோம் என்பதைவிட நம்மை இந்தச் சமுதாயம் யாராக அடையாளம் காணுகிறது என்பது தான் முன்னிலை வகிக்கிறது. பல நேரங்களில் நாம் நம்மைக் காட்டும், காட்ட முனையும் அடையாளத்தை அழித்து இந்தச் சமுதாயம் காட்டும் அடையாளம் நிலை நிறுத்தப்படுகிறது.

இந்தியாவின் தலைச்சிறந்த சிந்தனையாளர், தலைவர் என்ற தகுதிகளை உடைய பாபாசாகிப் அம்பேத்கரின் உண்மையான அடையாளத்தை மங்கவைத்து அவர் தலித்துகளின் தலைவர் என்ற அடையாளத்தை நிலைநிறுத்தி விட்டது இச்சமுதாயம்.

"அவருக்கிணையாகக் கற்றவரும் அறிவின் விளிம்பைத் தொட்டுத் தளும்பியவரும் இனி பிறந்தால்தான் உண்டு என்பது பூரிப்புக்குரிய விஷயம். அந்தக் கனவானின் உருவப்படம் இந்தியா முழுவதும் குடிசைகள், குப்பங்கள், நடைபாதைகள், தெருவோரங்கள், பொதுப் பயன்பாட்டிலிருந்து விலக்கப்பட்ட நலிந்த குடியிருப்புகள் என முற்றும் புறக்கணிக்கப்பட்டோர் நடுவில் மட்டுமே கம்பீரமாகத் தொங்கிக் கொண்டிருப்பதைக் காண்பது கண்ணீருக்குரிய அவலம்.

ஆனால் இன்னொரு கோணத்தில் பார்த்தால் அவருக்கும் சமூகத்துக்குமான நம்பகத்தன்மையின் சின்னமும் அதுவே" என்று கவிதாசரண் சொன்னதும் நினைவில் வருகிறது. (ஆக 07-பிப் 08 இதழ்).

சரண்குமாருக்கு லிம்பாளே என்ற பெயர்- குடும்பப்பெயராக (குடும்பப்பெயரென்ன குடும்பப்பெயர் ஒரு மண்ணாங்கட்டியுமில்லை! சாதி அடையாளப்பெயர்) எப்படியோ வந்து ஒட்டிக்கொள்கிறது. சாதிக்கலவரத்தின் போது அவன் தலித்திய அடையாளத்தை மறைத்துக் கொண்டு பத்திரமாக வாழும் கவசமாக, அகமதாபாத்திலும் லாத்தூரிலும் எளிதாக வீடு வாடகைக்கு கிடைக்க வாய்த்திருக்கும் வரப்பிரசாதமாக அமைந்துவிடுகிறது.

வசதிகள் கூட கூட அவனும் அவன் வாழ்ந்த மகர்களின் கூட்டத்துடன் மீண்டும் இணைய முடியாதவனாக தன்னை விலக்கிக் கொள்கிறான். தூய்மை என்ற பெயரில், அந்தஸ்து என்ற அடையாளத்தில், சமூக மதிப்பு என்ற அடையாளத்தை நிலைநிறுத்த. சரண்குமாரைச் சுற்றி இருக்கும் அவனுடன் சம்மந்தப்பட்ட இரத்த உறவுகள், சமுதாய உறவுகள், அவனை அவர்களில் ஒருவனாக ஏற்காமல் அந்நியப்படுத்துகிறது.

உண்மையில் இந்த அந்நியப்படுத்துதல்- அவனைச் சாதிக்கெட்டவனாக, சாதியற்றவனாக காட்டும் அடையாளம். இந்த அடையாளம் வரவேற்கப்பட வேண்டிய அடையாளம். ஆனால் வசுவுகளிலேயே கீழ்த்தரமான மோசமான வசவாக கையாளப்படும் வார்த்தை "சாதிக்கெட்ட பயலே!" என்பதுதான். சமுதாயத்தில் ஒருவன் அப்பன் இல்லாமல், ஆத்தா இல்லாமல் இருக்கலாம். ஆனால் சாதி இல்லாதவனாக இருக்கக்கூடாது, இருக்கவே முடியாது என்பது தான் அடிமுதல் முடிவரை கம்பீரமாக எழுந்து நிற்கும் சாதியின் இறையாண்மை!

இந்த இறையாண்மையே இந்தியாவின் இறையாண்மையாக இருப்பதுதான் அடையாளம் அற்றவர்களும் தேடி அலையும் தனக்கான தன் அடையாளம்.

- புதியமாதவி, மும்பை ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com