Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

காந்தியிலிருந்து கயர்லாஞ்சிவரை
புதியமாதவி, மும்பை


இந்த நாட்டின் தேசப்பிதா மகாத்மா காந்தியிலிருந்து இன்றைக்கு எங்கள் ஊர் பத்திரிகைகளில் அதிகம்
பேசப்படும் ஷில்பா ஷெட்டி வரை எல்லோருக்கும் அடிபடும் போதுதான் வலிக்கிறது.

அதுவரை அடிப்பவர்கள் பற்றியும் அடியின் வலி பற்றியும் வலி தீர்க்கும் வழி பற்றியும் யார் யாரை
ஏன் அடிக்கிறார்கள் என்பது பற்றியும் எப்போதும் கவலை இருந்ததில்லை.

தென்னாப்பிரிக்காவில் ஓடுகின்ற வண்டியில் வெள்ளைக்காரன் இறக்கிவிட்டதும் முடிதிருத்தும் தொழிலாளி
காந்திக்கு முடிவெட்ட மறுக்கும் போதும் நம் மகாத்மாக்களுக்கு ஞானோதயம் பிறக்கிறது.

நிறவெறி, இனவெறியின் கொடுமையை உணர்கிறார்கள். பாடப்புத்தகத்தில் படித்தது தான். அப்போதும்
சரி, இப்போதும் சரி ஓரு கேள்வி மனசைக் குடையும்! மோகன் தாஸ் கரம்சந்த் காந்திக்கு மனித
இனத்தில் இப்படிப்பட்ட வேற்றுமைகள் எல்லாம் இருப்பது என்ன தெரியாதா? அல்லது அப்படி
எந்த வேற்றுமைகளும் இல்லாத ராமராஜ்யத்திலிருந்து அவர் தென்னாப்பிரிக்கா போனதால் அவருக்கு
அதெல்லாம் அதிர்ச்சியாக இருந்ததா? பிறப்பால் வரும் சாதியும் சாதி சார்ந்த வர்ணாசிரம தர்மமும்
நிலவும் மண்ணிலிருந்து போனவருக்கு இந்த வேறுபாடுகளையும் அதன் வலியையும் உணர
தென்னாப்பிரிக்கா மண்ணுக்கு அல்லவா போக வேண்டியிருக்கிறது. அவருக்கு மட்டும் தென்னாப்பிரிக்காவில்
இந்த மாதிரி எல்லாம் அனுபவங்கள் ஏற்பட்டிருக்காவிட்டால் இதைப் பற்றிய சிந்தனைகள் அவருக்கு
இருந்திருக்குமா? சரி இதைப்பற்றி எல்லாம் சிந்தித்துதான் காந்தியடிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு என்னதான்
பெரிதாக சாதித்துவிட்டார்? ஹரிஜன்கள் என்று அந்த மக்களே விரும்பாத ஒரு பெயரைக் கொடுத்ததைத்
தவிர.

இந்தியா சுதந்திரம் அடைந்து 59 வருடங்கள் கழித்து இன்றைக்கு திரைநட்சத்திரம் ஷில்பா ஷெட்டிக்கு
சேனல் 4 ல் நடக்கும் BIG BROTHER நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சியில் நடந்த நிறவெறிக்கு எதிராக
ஒட்டுமொத்த இலண்டன் வாழ் இந்தியர்களும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சரும் கொதித்து
எழுந்தார்கள். big brother மன்னிப்பு கேட்டதும் நிகழ்ச்சிக்கு விளம்பரம் தந்து கொண்டிருந்த
பிரபல நிறுவனங்கள் விளம்பரத்தை நிறுத்திக்கொண்டதும் சேனல் 4ல் இந்தத் தொடர் நிறுத்தப்படலாம்
என்ற வதந்தி உலவுவதும் சந்தோஷமாகத் தானிருக்கிறது. பத்திரிகை உலக ஜாம்பாவான்கள் எல்லாம்
இதைப் பற்றியும் ஆங்கிலேயருக்கு இருக்கும் நிறவெறி குறித்தும் எழுதிய வண்ணம் இருக்கிறார்கள்.

பிரபலங்களின் கருத்துகள் வந்த வண்ணமாக இருக்கின்றன. நடிகர் நானாபடேகர் கூட இது குறித்து சொல்லும்போது 'ஷில்பா அப்படி கேட்டவள் கன்னத்தில் ப்பளார் என்று ஒன்று விட்டிருக்க வேண்டும். வருவது வரட்டும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று. இந்த கேம் ஷோவிலிருந்து
உடனடியாக விலகியிருக்க வேண்டு. நானாக இருந்தால் அதைத் தான் செய்திருப்பேன்' என்று
சொன்னதைக் காட்டினார்கள். இப்படி நிறவெறிக்கு எதிராக இந்தியாவிலிருந்து ஒலிக்கும் குரல்களைக்
கேட்கும் போது அப்படியே புல்லரித்து விட்டது. தென்னாப்பிரிக்காவில் காந்தி அடைந்த அனுபவம்
நினவுக்கு வந்தது. இந்த உணர்ச்சி மிகு எழுத்துகளும் குரல்களும் நம்ம காந்திக்கு கிடைத்த
வெற்றியாகவே நினைக்க நினைக்க முன்னாபாய் ரேஞ்சுக்கு காந்திகிரிக்கு ஜே போட ஆசையாகத்தான்
இருக்கிறது.

என்ன செய்யட்டும்.. இப்படி எதுவுமே என் போன்றவர்களாம் செய்ய முடியவில்லை. ஷில்பா ஷெட்டி
பற்றி எழுதும் பேசும் எவருக்கும் கயர்லாஞ்சியில் நடந்தது எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.!!!????
கயர்லாஞ்சி இந்தியாவில் அதுவும் இந்த விஷயங்களை அதிகம் பேசும் மராத்திய மாநிலத்தில், நாக்பூர்
அருகே

உள்ள பண்டாரா மாவட்டத்திலிருக்கும் ஒரு கிராமம். ஆண்களும் பெண்களுமாய் 150 பேர்
கூடிநிற்க நடுத்தெருவில் தாயும் மகளும் நிர்வாணமாக்கப்பட்டு ஊரிலிருக்கு ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். அதை ஆதிக்கச் சாதியைச் சார்ந்த பெண்களும் அமைதியாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்தப் பெண்கள் இருவரும் இறந்த பின்னும் புணர்ந்த மிருகங்கள் உண்டு.
அதுமட்டுமல்ல.. அவர்களின் பெண் உறுப்பில் இரும்பு கம்பி, மாடு விரட்டும் குச்சியை திணித்து
வதை செய்திருக்கிறார்கள். அந்தப் பெண்கள் அப்படி செய்த மிகப்பெரிய தப்பு என்ன?

தாய் சுரேகாவும் மகள் ப்ரியங்காவும் தலித்தாகப் பிறந்ததைத் தவிர.

நடந்தது என்ன?( Ref: http://blog.360.yahoo.com/blog-uFePYfE_eqGXSZAsp0A-?cq=1&p=73)
(M.R.நாகராஜனின் வலைத்தளத்திலிருந்து)

பய்யாலாலுக்கு 5 ஏக்கர் நிலமிருந்தது. ஒரு தலித்துக்கு நிலவுரிமை இருக்கலாமா? ஆதிக்க சாதிகளுக்கு
பயணம் செய்ய சாலை அமைப்பதற்கு பய்யாலால் காவு கொடுத்தது 2 ஏக்கர் நிலம். பவுத்தம் தழுவிய
பய்யாலால்-சுரேகா தம்பதியருக்கு மூன்று குழந்தைகள். மூத்தவன் ரோஷன் - 23 வயது. இளையவன் சுதிர் - 21 வயது. ரோஷனுக்கு கண்பார்வை கிடையாது. இளையவன் சுதிர் ஒரு பட்டாதாரி.

கடைக்குட்டி ப்ரியங்கா - 19வயது. 12 ஆம் வகுப்பு. படிப்பில் படு சுட்டி. NCC யில் இருந்தாள்.

இந்திய இராணுவத்தில் சேரும் கனவுகளுடன் தாய் அப்போதுதான் வாங்கிக்கொடுத்திருந்த சைக்கிளில்
ஊரில் வலம் வந்து கொண்டிருந்தாள்.

பய்யாலால் வீட்டுக்கு அவர் உறவினர் சித்தார்த் கஜ்பிய் அடிக்கடி வருவார். காங்கிரசு கட்சியுடன்
தொடர்புடையவர். ஓரளவு விஷயம் தெரிந்தவர். ஆதிக்க சாதிகள் பய்யாலாம் நிலத்தை ஆக்கிரமிக்க
முயற்சிக்கும் போதெல்லாம் பய்யாலால் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தவர்.

எனவே செப்டம்பர் 03, 2006ல் ஒரு கும்பல் சித்தார்த்தை அடித்தார்கள். அவர்கள் சொன்ன காரணம்
சித்தார்த்திற்கு பய்யாலாலின் மனைவிக்கும் கள்ளக்காதல்! கற்பு, ஒழுக்கம் பற்றி யார் யாரை
குற்றம் சொல்லியிருக்கிறார்கள் பாருங்கள், கொலை செய்த பிறகும் யோனி தேடி புணர்ந்த இரண்டு கால் மிருகங்கள் அடுத்தவன் பொண்டாட்டியின் கள்ளக்காதலுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார்களாம்!!

சித்தார்த் காவல்துறையில் தன்னை அடித்தவர்களைப் பற்றி FIR கொடுக்க சாட்சியாக இருந்தவர்
சுரேகா. 26 நாட்கள் கழித்து செப்டம்பர் 29ல் சிறையிலிருந்து வெளிவந்த 12 பேர் டிராக்டருடன்
பய்யாலால் வீட்டுக்குள் மாலை 5.40க்கு நுழைந்தார்கள் அதன் பின் தான் இந்தக் கொடுமை
அரங்கேறியது.அண்ணனும் தம்பியும் அடித்துக் கொல்லப்பட்டார்கள். இந்தக் காட்சிகளை மறைவாக
இருந்து பார்த்துக் கொண்டிருந்த பய்யாலாலின் மனநிலையை எண்ணிப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

நிகழ்ச்சியைக் கேள்விப்பட்டு BBC-இலண்டன் கயர்லாஞ்சி வந்தார்கள். முதலில் அவர்களுடன் எதையும்
பேச மறுத்தார் பய்யாலால்.

'உங்கள் உணர்வை, மனநிலையைப் புரிந்து கொள்கிறொம். உலகத்தின் மனிதநேயமிக்கவர்கள்
அனைவரும் உங்களுடன் இருக்கிறார்கள். இதுதான் சரியான நேரம்..என்ன நடந்தது என்பதை
உலகத்திற்கு சொல்லுங்கள்.." என்று கேட்க அவர் அனைத்தையும் சொன்னார்.

இதைப் பற்றி எல்லாம் நம் தொலைக்காட்சிகளோ பத்திரிகைகளோ கவலைப்பட்டிருக்க மாட்டார்கள்.
கர்சீப் நனைய நனைய பிழிந்து பிழிந்து மூக்கை ஸ்டைலாக துடைத்துக் கொண்டு ஷில்பா ஷெட்டி
அழுவதையும் அவருக்கு நேர்ந்த நிறவெறிக் கொடுமையையும் விலாவாரியாக காட்டினால் லைவ்
ஷோவுக்கும் விளம்பரம். ஷில்பா ஷெட்டிக்கும் விளம்பரம். நிறவெறியை எதிர்த்து போராடிய
காந்திகிரிக்கு வெற்றிதான். கயர்லாஞ்சிகளைப் பற்றி கவலைப்பட முன்னாபாய்களுக்கு எங்கே
நேரமிருக்கிறது?


- புதியமாதவி, மும்பை ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com