Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

வெளிச்சத்திற்கு வராத வேதனைக் காட்சிகள்
புதியமாதவி, மும்பை


பெண்ணியம் என்பது ஆணை வெற்றி கொள்வது அல்ல. பெண் விடுதலை என்பதும் ஒரு போர்க்களம் தீர்மானிக்கும் வெற்றி தோல்வியும் அல்ல. மனித உடலின் வலப்பக்கம், இடப்பக்கம்..எந்தப் பகுதிப் பாதிக்கப்பட்டாலும் அதை அந்த உடலின் ஊனம் என்றே கருதுகிறோம். அதுபோலவே சமுதாயத்தில் ஆணும் பெண்ணும். இருவரின் செயல்பாடுகள் இணைந்து நடக்கும்போது தான் ஊனமில்லாத சமுதாயம் மண்ணில் மலரும். ஆணில்லாமல் பெண்ணும் பெண்ணில்லாமல் ஆணும் வாழவே முடியாது என்பதல்ல. ஆனால் அப்படி வாழும் வாழ்க்கை எப்போதும் விதிவிலக்கானது மட்டும்தான். விதிவிலக்குகள் எப்போதும் சமுதாயம் ஆக முடியாது.

பெண் பலகீனமானவள் என்றால், ஆணும் பலகீனமானவன்தான். பெண் தவறுகள் செய்கிறாள் என்றால் ஆணும் தவறுகளுக்கு அப்பாற்பட்டவன் அல்லன். எனவே பலகீனமானப் பெண்ணைப் பாதுகாப்பவன் ஆண் என்பதும், தவறுகள் செய்யும் பெண்ணை அடித்து திருத்துபவன் ஆண் என்பதுமான நம்பிக்கைகள் காலம் காலமாய் நம் சிந்தனைகளில் திணிக்கப்பட்டிருக்கும் அர்த்தமில்லாத நினைவுகளின் சாயல்கள்தான். இன்ப நுகர்வுப் பொருளாய் அடிமைப்படவும், வேட்டையாடவும், கடத்தப்படவும், எதிரி நாடுகளிலிருந்து அபகரிக்கப்படவும் அரசுப் பரிசாகவும் சூதாட்டக் காய்களாகவும் மலிந்து கிடக்கிறது வரலாற்றில் பெண்ணுக்கான இடம்.

'பெண் எதையும் தானாகச் செய்து கொள்ள உரிமையற்றவள்- பெண் சபல புத்தியுடையவள் - ஒரு ஆண்மகனைப் பெற்றெடுப்பதற்காக எந்த ஆணும் இன்னொருத்தன் மனைவியைப் பயன்படுத்தலாம்-' இப்படி பெண்ணுக்கு எதிராக தீவிரமாக எழுதி வைத்திருக்கிறது இந்திய மண்ணின் மனுநீதி. வர்ணாசிரமக் கொள்கையை நிலைநிறுத்த எழுதப்பட்ட மனுநீதி வர்ணாசிரமக் கொள்கையான சாதிப்பிரிவை செயலாக்க, நிலைநிறுத்த பெண்ணை அடிமைப் படுத்தி வைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருந்தது. ஏனெனில் இனவிருத்தியின் கருவியாக, முகாமையாக சாதி எல்லைகளையும் தீண்டாமைக் கோட்பாடுகளையும் அடித்து நொறுக்கும் வல்லமை பெண் விடுதலைக்கு மட்டுமே உண்டு என்பதால்தான். மனுநீதியின் நேரடித்தாக்குதல்கள் குழந்தைத் திருமணம், கைம்மை நோன்பு, உடன்கட்டை ஏறுதல் எல்லாம் இன்று மிகவும் குறைந்துவிட்டது. எங்கோ ஒரு மூலையில் குறிப்பிட்ட சில இனத்தவர்களிடம் குழந்தைத் திருமணங்கள், உடன்கட்டை ஏறுதல் நடப்பது எப்போதாவது செய்திகளாவது தவிர அவை இன்று நடைமுறை வாழ்வில் மறைந்துவிட்டது. ஆனால் வெளியில் தெரிந்தக் காயங்கள் மறைந்து இன்று உள்ளிருந்து அரித்தெடுக்கும் நச்சுக்கிருமிகளாக பெண்ணின் வாழ்வை சில சமுதாய சட்டங்களும் நம்பிக்கைகளும் தின்றுகொண்டிருக்கின்றன. பாதிப்புகளை பாதிக்கப்பட்ட பெண்ணே உணர்வதற்கும் கூட காலதாமதமாகி விடுகிறது.

உணவு:

பசி பட்டினிச் சாவுகள், தற்கொலைகள், விபத்துக்குப் பலியானவர்கள்.. இந்தப் பட்டியலில் 73% க்கு மேலிருப்பது பெண்களின் எண்ணிக்கைதான். பெண் சமுதாயத்தின் பல்வேறு தளங்களில், பல்வேறு ஆயுதங்களால் தாக்கப்படுகிறாள். உணவு, உடை, உறைவிடம் இந்த மூன்றும்தான் ஒவ்வொரு மனிதனின் அடிப்படைத் தேவைகள். இதில் முதல் தேவையான உணவு, அந்த உணவுக்கு அடித்தளமான உழைப்பு இரண்டிலும் பெண் காலம் காலமாய் வஞ்சிக்கப்பட்டு வருகிறாள்.

'உலகில் தெற்காசிய நாடுகளில் சத்துணவு இன்மையால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகம்' என்கிறது ஐக்கிய நாடுகளின் அறிக்கை. (The Asian Enigma, Pub. by UNICEF 1996) தாய்ப்பால் ஊட்டுவதிலும் பெண் குழந்தையை விட ஆண்குழந்தைக்கு அதிக நேரம் தாய்ப்பாலூட்டும் அவலம் இன்றும் பல இனத்தவர்களிடம் காணப்படுகிறது. குழந்தைகள் சாவில் 5 வயதுக்கும் குறைவான வயதில் இறந்து போகும் குழந்தைகள் பெரும்பாலும் பெண் குழந்தைகளாகவே இருக்கிறார்கள். பெண் குழந்தைகளின் சுகாதார நிலையில் இந்தியாவின் மாநகரங்களில் காட்சி அறிவுலகைத் தலைகுனியச் செய்கிறது. கல்கத்தாவில் 95% ஹைதராபாத் - 67% நியுடெல்லி - 73% சென்னை 18% என்கிற கணக்கில் பெண் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியற்றவர்களாக இருக்கிறார்கள்.

ஊதியமில்லாத உடல் உழைப்பு, வீட்டுவேலை, சரியான நேரத்தில் உணவருந்தாமை, குழந்தைப்பேறு, கருக்கலைப்பு, குழந்தை வளர்ப்பு, விவசாயக்கூலி வேலைகள், படித்தப் பெண்கள் அலுவலகத்து வேலையுடன் சேர்த்து சுமக்கும் வீட்டு வேலைகள், இதனால் ஏற்படும் மன உளைச்சல்கள்..இவை அனைத்தும் சேர்ந்து பெண்ணை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் பாதிக்கின்றன. உடல் நலம் பேணுவதில் எப்போதும் பெண் கடைநிலைக்குத் தள்ளப்படுகிறாள். கல்வி வாய்ப்புகளில் சமுதாயத்தின் சாதி, மத, வர்க்க வேறுபாடுகள் இன்றி முன்னுரிமை எப்போதும் ஆணுக்கே அளிக்கபடுகிறது.

உழைப்பு

Indian Lady 2005, பிப்ரவரி மாதம் பெண்ணுரிமைப் பேசும் பெண்களுக்கான கருத்தரங்கில் ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. 'யாருடைய பாட்டிமார்கள் எல்லாம் வேலைப் பார்த்தார்கள்?' என்பதுதான் அந்தக் கேள்வி. அங்கு குழுமியிருந்தவர்களில் ஒன்றிரண்டு பேர்கள் மட்டுமே கைகளைத் தூக்கினார்கள். 'என் அப்பா வழி பாட்டி ஆரம்பப்பள்ளி ஆசிரியையாக இருந்தார்' 'என் தாய் வழி பாட்டி மருத்துவமனையில் ஆயாவாக இருந்தார்' 'என் பாட்டியின் தமக்கையார் - சின்னபாட்டி இட்லி வியாபாரம் செய்தார்' என்று ஒருவர் பின் ஒருவராகச் சொன்னார்கள். அப்படியானால் கைகளைத் தூக்காத மற்றவர்களின் பாட்டிமார்கள் அனைவரும் எந்த வேலையும் செய்யாமல் உண்டு, உறங்கி, பிரசவித்து வாழ்ந்து மடிந்தார்களா? என்ற அடுத்தக் கேள்வி முன்வைக்கப்பட்டது. வீட்டு வேலை, வயல்வேலை என்று ஊதியமில்லாமல் பெண்கள் செய்த, செய்கிற எல்லா வேலைகளையும் உழைப்பு, அவர்களின் உடல் உழைப்பு என்று எண்ணிப்பார்க்கும் சிந்தனை வளர்ச்சி இன்றும் கூட ஏற்படவில்லை என்பதுதானே உண்மை. இந்திய ஹிமாசல பகுதியில் நடாத்திய ஆய்வில் ' ஒரு ஏக்கர் விளைநிலத்தில் ஓராண்டுக்கு ஒரு ஜோடி காளை மாடுகள் 1064 மணிநேரமும் ஓர் ஆண்மகன் 1212 மணிநேரமும் உழைக்கிறார்கள். ஆனால் ஒரு பெண் இவர்கள் இருவரின் ஒட்டுமொத்த உழைப்பைவிட அதிகமாக் உழைக்கிறாள். அதாவது அவள் 3485 மணிநேரம் உழைக்கிறாள்'

'ஆந்திர பிரதேசத்தில் ஓர் ஆண் ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் உழைக்கிறான். ஆனால் பெண் ஒரு நாளைக்கு 15 மணிநேரம் உழைக்கிறாள்' ( Mier 1986)

உறைவிடமும் உரிமையும்

அறிவியலின் தாக்கங்களினால் எந்திரங்களின் பயன்பாட்டால் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக கிராமங்களில் பெண் அனுபவித்த சில உரிமைகளும் பொருளாதர வசதிகளும் பறிக்கப்பட்டுவிட்டன. பெண்களுக்கான உரிமைகள் சட்டப் புத்தகங்களின் எழுத்துகளில் மட்டுமே வாசிக்கப்படுகிறது.

உலகத்தின் மனித உழைப்பில் பெண்ணின் பங்கு : மூன்றில் இரண்டு - 2/3
பெண்ணின் ஊதியம் பத்தில் ஒரு பங்கு - 1/10
உலகத்தின் ஒட்டு மொத்த சொத்தில் பெண்ணின் பெயரில் உள்ள சொத்துகளில் மதிப்பு நூற்றில் ஒரு பங்கு - 1/100
ஆனால் இந்தப் பெண்தான் மனித இனத்தின் சரிபாதி.

மனையாள், மனைமாட்சி என்றெல்லாம் மனையுடன் சொல் அளவில் மட்டுமே தொடர்கிறது பெண்ணிற்கான உரிமை. இந்தியாவில் மராத்திய மாநிலத்தின் லாத்தூர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வீடிழந்தவர்களுக்கு மாநில அரசு இலவசமாக வீடு கட்டிக்கொடுத்தப்போது அந்த வீட்டுக்கான உரிமை - பட்டா - கணவனின் பெயருக்கு மட்டுமே வழங்கப்பட்டது. கணவனை இழந்த கைம்பெண்களுக்கும் சட்டப்படி வயதுக்கு வராத (minor) மகனின் பெயரில் வழங்கப்பட்டு அந்தப் பெண்ணுக்கு சட்டப்படியான பாதுகாவல் உரிமையை மட்டுமே வழங்கியது அரசு. அந்தச் செயலை பல மகளிர் அமைப்புகளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கண்டனம் செய்தன. அதன் பின் சில வருடங்களுக்குள் லாத்தூர் பகுதியில் புதுவீடு, புதுமனைவி என்று ஆணுக்கு புதுவாழ்வு ஆரம்பிக்க, பல பெண்கள் அனாதைகளாக்கப்பட்டார்கள். பெண்ணுக்கு வீட்டுரிமை இல்லாததால்தான் 60000 வயதான பெண்கள் மராத்திய மாநிலத்தில் நடந்த கும்பமேளாவுக்கு அழைத்துவரப்பட்டு அவர்களுடைய உறவுகளே அவர்களை அனாதைகளாக விட்டுவிட்டுச் சென்ற நிகழ்வு பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மனையில், வீட்டுரிமையில் பெண்ணுக்கும் சம பங்கு, சம உரிமை வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை மக்கள் உணர்ந்தார்கள். இந்துக் குடும்பங்களின் கர்த்தா (karthaa), குடும்பத்தலைவன் என்ற மாயைத் தோற்றத்தை உடைப்பதன் மூலமே இந்த மாதிரி குடும்பங்களில் பெண்கள் அனாதைகளாக வீசி எறியப்படும் அவலம் மறையும் என்பதை அரசும் மக்களும் உணர ஆரம்பித்து இருக்கிறார்கள்.

பாதுகாப்பு

சமீப காலங்களில் தொடர்ந்து செய்தித்தாள்களில் வரும் செய்திகள் பெண்ணின் பாதுகாப்பான வாழ்விற்கு வீட்டிலும் சரி, வெளியுலகிலும் சரி, உத்திரவாதமில்லை என்பதையே உணர்த்துகின்றன. சமூகத்தில் நடக்கும் அரசியல், மத வன்முறைகளில் பலிகாடாவது எப்போதும் பெண்களாகவே இருப்பது உலக நாடுகளின் பொதுவிதியாக அமைந்துள்ளது. சட்டம், ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறை முதல் ஞானபோதனைச் செய்யும் சாமியார்களின் மடங்கள் வரை.. பெண்ணைத் துரத்தி துரத்தி கடித்து குதறுவதையே காண்கிறோம். இவை அனைத்தையும் விட மிகப்பெரிய அவலம் .. பெண் அவளுடைய இல்லத்திலேயே அவளுக்கு பாதுகாப்பு என்று உணரப்படும் உறவுகளாலேயே வல்லாங்குச் செய்யப்படும் செய்திகள் அதிர்ச்சியைத் தருகின்றன.

ஜூலை 12, 2005, மும்பை மிரர் (Mumbai Mirror) நாளிதழில் ஒரே நாளில் வெளியான பாலியல் ரீதியான பலாத்காரம் பற்றிய செய்திகள்:

- உத்திரபிரதேசத்தில் முஷபர் நகரில் வாழும் இம்ரானா - 5 குழந்தைகளின் தாய். அவளுடைய கணவனின் தந்தையால்- மாமனாரால் வல்லாங்குச் செய்யப்பட்டாள்.

- அசாமிலும் ஒரு கிராமத்தில் இதே கதை.

- குஜராத்தில் ஓர் இந்துமதப் பெண் அவளுடைய மாமியார், கொழுந்தனார்கள் முன்னிலையில் மாமனாரால் பலாத்காரம் செய்யப்பட்டாள். அவர்கள் கேட்ட வரதட்சனை கொண்டுவரவில்லை என்பதால்.

- ராஜஸ்தானில் ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகவில்லை என்பதால் குடும்பத்தினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள். அதன் பின்னும் அவள் கருவுறவில்லை என்பதால் அவளை வீட்டை விட்டு துரத்துகிறது அந்த உறவுகள். கிராமப் பஞ்சாயத்து கூடி அந்த அபலைப் பெண்ணை மீண்டும் கணவன் வழி உறவுகளுடன் சேர்ந்து வாழ வற்புறுத்துகின்றன..

இதோ பெண்களின் கடிகாரம்...

" 7 நிமிடத்திற்கு ஒரு குற்றம் பெண்ணுக்கு எதிராகப் பதிவுச் செய்யப்படுகிறது.
12 நிமிடத்திற்கு ஒரு பெண் வன்கொடுமைக்கு உள்ளாகிறாள்
32 நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள்
102 நிமிடத்திற்கு ஒரு பெண் வரதட்சனைக் கொடுமைக்குப் பலியாகி செத்து மடிகிறாள்."

கருக்கலைப்பு

அவள் பெண் என்பதால் கருவிலேயே மரணத்தை அனுபவிக்கிறாள். இந்த மண்ணையும் விண்ணையும் பார்க்க அவள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆண்-பெண் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள விகிதாச்சார வேறுபாடு எதிர்காலத்தில் பெண்களின் நிலையை மிகவும் பாதிக்கும் என்று சமூகவியலார் அச்சம் தெரிவிக்கின்றனர். மும்பையின் புகழ்பெற்ற பம்பாய் மருத்துவமனையில் (Bombay Hospital) ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் கருக்கலைப்பில் 95.5% பெண் குழந்தைகள் தான். அண்மையில் மராத்திய மாநிலத்தில் ஒரு புள்ளிவிவரம் 8000 கருக்கலைப்பில் 7999 கருக்கலைப்பு .. கருவில் இருப்பது பெண் குழந்தை என்ற காரணத்தால் மட்டுமே. கால் நூற்றாண்டுகளாக பெண் குழந்தை தாலாட்டே கேட்காத ஊர்கள் பல இன்றும் மத்திய பிரதேசம், ஹரியானா, உத்திர பிரதேசம், பீகார் மாநிலங்களில் இருக்கின்றன.

இந்தப் பெண் கருவின் கருக்கலைப்பு பஞ்சாப் மாநிலத்தில் மன்சா மாவட்டத்திலும், மால்வா பகுதிகளிலும் நவயுக பாஞ்சாலிகளை உருவாக்கிவிட்டது. விளைநிலமின்மை, திருமணம் செய்ய பெண்கள் கிடைக்காத நிலைமை இரண்டும் சேர்ந்து அசாம், வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து பெண்களை இறக்குமதிச் செய்யும் அவலத்திற்கு கொண்டுபோய் விட்டது. அதுவும் இந்த இறக்குமதி வியாபாரத்தில் ஒரு பெண்ணுக்கான விலை ரூபாய் இரண்டாயிரத்திலிருந்து ரூபாய் 20,000 வரை. அதன் பின் அவள் பஞ்சாப் மாநிலத்திற்க்கு அழைத்துவரப் படுகிறாள். இதற்கெல்லாம் தனியாக தரகர்களே இருப்பதாக தெரிகிறது. குடும்பத்திற்கு இருக்கின்ற 5 ஏக்கர் நிலம் அண்ணன் தம்பிகள் திருமணம் செய்து கொண்டால் பாகப்பிரிவினையில் குறைந்துவிடும் என்பதாலும் பஞ்சாபில் 5 ஏக்கர் நிலத்திற்கு குறைவாக இருப்பவர்களுக்கு எந்தப் பெற்றோரும் திருமணம் செய்ய பெண் கொடுப்பதில்லை என்பதாலும் இறக்குமதி செய்யப்பட்டு விலைக்கு வாங்கப்பட்ட பெண் அண்ணன் தம்பிகள் அனைவருக்கும் ஒரே மனைவியாக வாழ்ந்து அவரவர்களுக்கு குழந்தைகளைப் பெற்று கொடுத்து ....(நவயுகப் பாஞ்சாலிகள்!) வெளியில் தெரியாத அவர்களின் கதை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பஞ்சாப் மொழியின் மிகச் சிறந்த எழுத்தாளரான ஞானபீட விருதுபெற்ற பேராசிரியர் குர்தியல் சிங் (Gurdial Singh) தன்னுடைய புதினங்களில், நாடகங்களில் பெண்ணுக்கு இழைக்கப்படும் இக்கொடுமைகளைப் பற்றி நிறையவே எழுதியிருக்கிறார். ஆனாலும் இந்தியச் சட்டம் ஊமையாகவே இந்த நாடகக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. மன்சா மாவட்டத்தின் துணை கமிஷனர் ராஜ்குமார் சவுத்திரி அவர்கள் "இந்த மாதிரி திருமணங்கள் முறைப்படி நடக்கும் திருமணங்களாக இருப்பதில்லை, அந்தக் குடும்பத்தின், வீட்டின் நான்கு சுவர்களுக்கு நடுவில் நடக்கும் உடன்படிக்கை. இதைச் சட்டப்படி தண்டிக்க இந்தியச் சட்டத்தில் வழியில்லை. மேலும் இந்தப் பெண்களோ அவர்களைச் சார்பாக வேறு யாருமோ இந்தக் கொடுமைகளை எழுத்துமூலமாகப் பதிவு செய்வதில்லை" என்கிறார்.

rape இந்தச் சம்பவங்கள் எல்லாம் ஒரு நாட்டுக்கோ ஓர் இனத்திற்கோ மட்டும் உரியவை அல்ல. அரபு மொழியில் திடீரென்று நிலவும் அமைதியைக் குறிக்க "என்ன பெண் குழந்தைப் பிறந்தது போல மவுனம்' என்று கேட்கும் சொல்வழக்கு நிலவுகிறது. கொரியாவில் 'பெண்ணைப் பெற்றவன் இரண்டு முறை தலை குனிகிறான். அவள் பிறந்த போதும், அவள் திருமணத்தின் போதும்..' என்று சொல்லும் வழக்கம் உண்டு.

இன்னும் சில

கல்வியறிவு பெண்ணுக்கு விடுதலையைத் தரும் என்றே நம்புகிறோம். அப்படியானால் இந்தியாவிலேயே அதிக அளவு கல்வி அறிவு பெற்ற கேரள மாநிலத்தில்தான் பெண்களின் தற்கொலைச் சாவுகளும் அதிகம். ஏன்?

பாபர் மசூதி இடிந்தப்பின் நடந்த கலவரத்தில் (Dec 7, 1991) மும்பை பாந்திரா பகுதி கேர்வாடியிலும் மகிம் பகுதியிலும் பெண்களே இசுலாமியப் பெண்களின் பாலியல் பலாத்காரத்திற்கு உடந்தையாக இருந்தது அதிர்ச்சி தருகிறது. 9 மாத நிறைமாதக் கர்ப்பினிப் பெண் இசுலாமிய மதத்தவள் என்பதால் சில பெண்களாலேயே கத்தியால் குத்தப்பட்டு கம்பால் அடிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டாள். "Generally women do not applaud rape. But during and after the carnage, Many Hindu women were openly justifying the rape of Muslim women" என்று மிகத் தெளிவாக ஓர் ஆய்வறிக்கை அதிர்ச்சி தரும் உண்மையைப் பதிவு செய்துள்ளது. (Bangles of Fire: Research Paper series: sophia college. 2:2 , 2004-05)

மதமும் மதம் சார்ந்த அதீத நம்பிக்கைவெறியும் பெண்ணுக்கு எதிராக பெண்களையே நிறுத்துகின்றன.

இக்கட்டுரையில் சொல்லப்பட்ட பலச் செய்திகள் நகர்புறத்து வாழ் கல்வி அறிவு பெற்ற பெண்களுக்கு எல்லாம் வெறும் செய்திகள், ஆய்வுகளுக்கான புள்ளி விவரங்கள் மட்டும்தான். இந்தக் கொடுமைகளை அனுபவிக்கும் பெண்களுக்கும் இந்த அறிவுஜீவிப் பெண்களுக்கும் நடுவில் இட்டு நிரப்ப முடியாத பெரும் இடைவெளி.. எழுத்தில், பேச்சில், எண்ணங்களில், வாழ்வியலில். இந்த இடைவெளி பெண்ணுலகமே உருவாக்கிக் கொண்ட இடைவெளிதானே. பெண்ணின் வாழ்க்கை என்றால் முகமும் முகவரியும் அனைவரும் அறிந்த ஒரு சிலப் பெண்களின் வாழ்க்கையா? முகமிழந்து, முகவரி இல்லாத பெருவாரியான பெண்களின் சுமைகளையும் அறிவுசால் பெண்ணுலகம் தன் தோள்களில் சுமந்து கை தூக்கி விட்டு அவர்களின் குரலைத் தங்களின் குரலுடன் சேர்த்து பெண் விடுதலையைப் பாடாத வரை பெண்விடுதலை சாத்தியப்படுமா?

உலகின் எந்த நாட்டிலும் பெண்ணுக்கான சம உரிமை இன்னும் நடைமுறைப்படுத்தப் படவில்லை என்பதை ஐக்கிய நாடுகளின் சபை உறுதிச் செய்கிறது. (No country has achieved total equality for women- says UN)

ஐ.நா. அமைப்பின் செயலாளர் ஜெனரல் கோபி அனன் (Gen Kofi Annan) சொல்வது போல 'ஆண்-பெண் சமத்துவம் என்பது ஒரு குறிக்கோள் மட்டுமல்ல. வறுமையை ஒழிக்கவும் வளர்ச்சி அடைந்த சமுதாயத்தை, அரசை நிறுவவும் மனித சமுதாயம் எதிர்கொள்ள வேண்டிய சவால்’ என்கிறார். வாருங்கள் .. பெண்ணினத்தின் பிரச்சனைகளை நேருக்கு நேர் எதிர்கொள்வோம். நம்மால் முடியும்.. நாம் வீழ்வது கூட நாம் எழுவதற்கு மட்டும்தான். நம்முடைய சிறகுகள் நம்முடையவை. விரிப்பதும் பறப்பதும் இனி, நம் கையில்தான்.

---------------------

குறிப்புகள்:

- சங்கமித்ராவின் கட்டுரை - SNDT womens study centre, Mumbai

- sexual harassment - by Joann Bren Guernsey

- Overcoming violence against women and girls By Michael L Reua & Rahel Nardos

- Empowerment of women : Miles to Go By savita singh.

- Bangles of Fire. Research paper series.

- Mumbai Mirror. 12, July 2005

- Times of India, Mumbai edi, aug 7, 2005

- women and Housing right (essay) by Prof. Dr. Vibhuti Patel, SNDT womens Univ. Mumbai.


- புதியமாதவி, மும்பை ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com