Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

முடிவின் தொடக்கம்
பிரவீன்


சித்திரை மாதம். வழிபாடு முடிந்து அனைவரும் அவரவர் வீட்டிற்கு கலைந்து செல்கிறார்கள். அவதார நரசிம்மர் கையில் ப்ளாஸ்டர் ஆஃப் பேரிஸ் பொம்மையுடன் வர, ஊர்ப்பிரதானிகள் ஊர்வலமாக வந்தனர். விருந்துகள் தயார் நிலையில் இருந்தது. இரண்யன் இன்னும் சோர்வாகவே காணப்பட்டான். அவனுக்கு இன்னும் அவமான உணர்ச்சியும், கோபமும் தீர்ந்திருக்கவில்லை. பிரகலாதன் என்னுடன் வந்து பேசிக்கொண்டிருந்தார். நான் ஏதோ தலையசைத்தபடி இருந்தேன். மற்றுமொரு இரண்யன் நரசிம்மருக்கு தண்ணீர் கொண்டுவந்து தந்தார். எமனைக் காணோமே என்று எல்லோரும் தேடிக்கொண்டிருக்க, எமனை அழைக்க ஆள் அனுப்பப்பட்டது. வாட்ச்வார் அறுந்துவிட்டதாக சொன்னபடியே வந்து சேர்ந்தான் எமன். என்னைப் பார்த்தபடியே சென்ற எமனைக் காண தைரியமின்றி நான் வெளிநோக்கி நடக்கத் தொடங்கினேன். தெருவெங்கும் எருமைகள் கூட்டம் கூட்டமாக நின்று கத்தின. ஒரே பந்த்தியில் இரண்யர்களும், நரசிம்மரும், எமராஜனும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது என்னை எதுவோசெய்தது. சித்திரை வெயில் உச்சியில் காய்ந்து கொண்டிருக்க தெருவில் தனியே நடக்கத்துவங்கினேன். பாலைவனமெங்கும் செவ்வந்திப் பூக்கள் சிதறிக்கிடந்தன. வெயிலைப் பொருட்படுத்தாமல் நசுருதீன் சவுண்டு சர்வீஸ்காரர் மட்டும் மல்லார்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்.


*-*-*-*-*

கும்பகோணத்திற்கும் எனக்கும் நிலத்தடி சுணை போல ஒரு உறவு உண்டு. எனக்குப் பிடித்தமான ஊர்களில் அதுவும் ஒன்று என்பதாலா தெரியவில்லை. கடந்த மகாமகம் நடந்த சமயத்தில் அங்கு இரண்டு வாரங்கள் தங்கியிருக்க நேர்ந்தது. எல்லா தெருக்களிலும் விசேஷங்கள், பஜன்கள், கூத்துக்கள் என்று பலதரப்பட்ட கலைஞர்களால் நகரமே நிறைந்திருக்கும். சீரியல் லைட்டுகள், செல்ஃபோன் ஒலிகள் தவிர்த்து, நாம் 21ம் நூற்றாண்டில் தான் இருக்கிறோமா என்பது மறந்து போகும்.

Koothu (லேட்) குன்னக்குடியின் லைவ் ஷோ, 'மஞ்ஞப்பற' மோகன் கிருஷ்ண பஜன் என்று நான் கேட்ட சிறந்த இசை நிகழ்ச்சிகள் அங்கு தான். அப்போது நான் காவல்துறைக்காக பணியாற்றிக் கொண்டிருந்ததால் கேட்காமலே பல 'சலுகைகள்' வழங்கப்படுவதை தவிர்க்க முடியவில்லை. நான் கண்டிப்பாக வருங்காலத்தில் காவல்துறை அதிகாரியாகக் கூடாது என்று முடிவெடுத்தது அப்போதாக இருக்கலாம்.

அப்போது கேள்விப்பட்டிருக்கிறேன், இங்குள்ள சுற்று கிராமங்களில் நரசிம்மர் கூத்து நிகழ்ச்சி நடக்கிறது என்று. சித்திரா பௌர்ணமியன்று இரவில் தொடங்கி விடிய விடிய நடந்தேறுமெனவும், வாய்ப்பு கிடைத்தால் பார்க்கவும் என்று ஒரு மூத்த கான்ஸ்டபிள் சொன்னார். பிற்காலத்தில் நான் முன்பு பார்த்துக்கொண்டிருந்த வேலைக்கு சற்றும் சம்மந்தம் இல்லாத ஒரு பொறியாளரானதும், அந்த கூத்து நடக்கும் கிராமத்துக்காரர் நண்பராக பெற்றதும் 'Coincidence'. Paulo Cohelo சொல்வதைப் போல "And, when you want something, all the universe conspires in helping you to achieve it". இதைத்தான் Favouribility theroy என்கிறார்களோ?.

நண்பர் மற்றும் அவர்கள் கிராமத்தில் பெரும்பான்மையான மக்கள் சௌராஷ்டிரர்கள். சௌராஷ்டிரர்கள் அடிப்படையில் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். வஸ்திர ரீதியான வணிகங்களுக்காக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் குடிபெயர்ந்தவர்கள். பெரும்பாலும் தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை பகுதிகளில் அதிகமாக வசிக்கிறார்கள். முக சாடையிலேயே 'இவர்கள் சௌராஷ்டிரர்கள்' என்று கண்டுகொள்ளும் நுணுக்கம் அறிந்தவராக இருந்தார் நண்பர். பொதுவாகவே சௌராஷ்டிரப் பெண்கள் வனப்புடனும் சௌந்தர்யத்துடனும் இருக்கிறார்கள் இருக்கிறார்கள். வட இந்தியப் பெண்களின் Complexion னும், தென்னிந்தியப் பெண்களின் சாந்தமும் கூடிய விசித்திர கலவையாக இருக்கிறார்கள். அவர்களது மொழி சற்றே ஹிந்தி போல இருந்தாலும் புரிந்துகொள்ள கடிணமாகவே இருந்து வருகிறது.

நண்பருடைய குடும்பம் அந்த கிராமத்திலேயே One Of the 'பெரிய குடும்பம்'. பெரிய என்பது இங்கு பண்பாகுபெயர். அதாவது மரத்தடியில் சொம்பை வைத்துக்கொண்டு பஞ்சாயத்து பண்ணுவது, எதோ டிரைவர் அரைமைல் தள்ளி இருப்பதைப் போல "பசுபதி...உட்ரா வண்டிய..!!" என்று கத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்க வாய்ப்புண்டு. ஆனால் இந்த தலைமுறையில் எல்லோரும் பொறியாளர்களாகவும், ஸ்கூல் வாத்தியாராகவும், LIC ஏஜன்ட்டுகளாகவும் மாறிவிட்டதால் அதெல்லாம் இப்போது கிடையாது. ஆனாலும் அவர்களுக்கான நல்மதிப்பும் மரியாதையும் இன்னும் அவ்வூரில் உண்டு.

நான் சித்ரா பௌரணமிக்கு 2 நாட்கள் முன்பே சென்றுவிட்டிருந்தேன். அவர்கள் வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் நண்பர்கள் எல்லாம் சென்று வந்த வண்ணம் இருந்தார்கள். கோயில் ப்ரகாரத் தெருக்களில் சமைக்கும் நெய் வாசணையும், மலர்கள் தொடுக்கும் பெண்டிரும், ஒத்திகை பார்க்கும் சப்தமுமே நிறைந்திருந்தது. நண்பர் ஒருவரை அழைத்து நான் கூத்து பார்ப்பதற்கு தான் மெட்ராஸிலிருந்து வந்திருப்பதாக அறிமுகம் செய்து வைத்தார். பார்ப்பதற்கு மிகவும் சாந்தமாகவும், எப்போதும் தெய்வ நாமங்களை உச்சரித்தபடியுமே இருந்தார். அவர் "பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க...ஒத்திகைக்கு தான் போறோம்...அந்தப் பக்கமா வந்தா வாங்க" என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அவரது தோணியில் பெருமிதமும், தன்னம்பிக்கையும் புலப்பட்டது. அவர் போன பின்புதான் அவர் தான் ப்ரதான ப்ரகலாதன் வேடத்தில் நடிப்பவர் என்று தெரிந்தது.

இங்கு சிறப்பு என்னவென்றால், வேடம் என்பது வெறும் ஒப்பணை மட்டுமே அல்ல. ப்ரகலாதன் வேடம் என்றால், அவர்கள் அதே நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக, அதே ராசி, ஜாதக அமைப்பு எல்லாம் பொருந்தி இருக்க வேண்டும். விஷ்ணு வேடம் என்றால், அவருக்கும் அதே போல. இரண்யன் வேடமென்றால், அவருக்கும், ப்ரகலாதவேடம் புணைபவருக்கும் ஜாதக பொருத்தம் இருக்க வேண்டும். இப்படியே ஒவ்வொரு சிறிய கதாபாத்திரமும் தேர்வு செய்யப்படுகிறது. கதாபாத்தித்தை தாங்கள் தேர்ந்தெடுப்பது அன்றி, இங்கே கதாபாத்திரமே அவர்களைத் தேர்ந்தெடுக்கிறது. அதனாலேயோ என்னவோ, அதன் மீது மிகுந்த பக்தியும், பற்றுதலும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

மாலை சாய்ந்த உடனேயே நாடகக்காரர்கள் ஒப்பனைக்கு தயாராகிவிட்டார்கள். எல்லோரும் இறைவர் சன்னதிக்குச் சென்று குங்குமம் இட்டுக்கொண்டனர். ஒப்பனை செய்யும் போதே அவரவர் அந்த ரூபங்களாக மாறிக்கொண்டிருந்தனர். இரவு கவியத்தொடங்கிய உடனே ஊரே சற்று புலம்பெயர்ந்து அந்த நாடகத்தெருவில் கூடிவிட்டிருந்தது.

கூத்து தொடங்கும்வரை குழந்தைகளின் கூச்சல் மிகுதியாக இருக்கிறது. நசருதீன் சவுண்டு சர்வீஸ் கடுமையான மைக் டெஸ்டிங்கில், வெவ்வேறு ஸ்தாதியில் பதம் பார்த்துக்கொண்டிருந்தது. அந்த ஊரில் இருக்கக்கூடிய ஒரே சவுண்டு சர்வீஸ்காரர் நசருதீன் மட்டும் தான். நாளை பக்கத்து ஊரில் சித்திரைத் திருவிழா ஆர்கஸ்ட்ரா இருப்பதாகவும். இங்கு முடித்துவிட்டு இதே பொருட்களை அப்படியே எடுத்துசெல்ல வேண்டும் என்றும் சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு பெண்மணி நாடக மேடை முன்பாக அந்த இரவு நேரத்தில், தண்ணீர் தெளித்து கோலமிட்டுக்கொண்டிருந்தாள். இளம் பெண்கள் இருந்த இடங்களில் மல்லிகை வாசனை மிகுதியாக இருந்தது. நாடக மேடை அமைப்பு மிகவும் பிரும்மாண்டமற்றதாக இருந்தது. அது ஒரு அந்நியத்தன்மையையோ, அல்லது ஒரு Night Club Effect-டையோ தவிற்க உதவியது. மாறாக மேடை எங்கும் செவ்வந்தி பூக்களும், ஊதுவத்தி புகையுமாய் ஒரு வழிபாட்டு ஸ்தலம் போலவே புலப்பட்டது.

முதல் பாடல் ஒலிக்கத்தொடங்கியவுடனேயே கூத்து கலைகட்டத் தொடங்கிவிடுகிறது. கூத்தாடிகளும் மிகுந்த உற்சாகத்தனுடன் உச்சஸ்தாதியில் பாடினார்கள். அடுத்த சில நிமிடங்களில் மஹாவிஷ்ணு பார்க்கடலில் படுத்திருக்கும் காட்சி. கூட்டத்திலிருந்த சிலர் கைகூப்பி வணங்கி கண்ணங்களில் போட்டுக்கொண்டனர். மரபெஞ்சில் விஷ்ணு படுத்திருக்க, பெஞ்சின் நடுவில் செங்கல் வைத்து உயரம் அதிகமாக்கப் பட்டிருந்தது. செங்கல் மேலிருந்த பெஞ்ச் போல ஆட, மேடையின் இருபுறமிருந்தும் சிலர் நீலநிற வஸ்த்திரங்களை அசைத்தபடி அலைகள உருவாக்கிக்கொண்டிருக்க...திருப்பார்க்கடல் காட்சி கண்முன்னே மாயமாய் விரிகிறது. கண்களுக்குப் புலப்படாத மெல்லிய கயிற்றால் கட்டப்பட்ட தீபம் விஷ்ணுவைச் சுற்றி வருவதைக் காண அதிசியமாய் இருந்தது.

மிகக்குறைந்த நேரத்திலேயே இரண்யாட்சன் உலகைக் கவர்ந்து சென்றுவிட, போஸ்ட் ஆபீசில் வேலை பார்க்கும் இந்திரன் தலைமையில் தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட மரபெஞ்சிலிருந்து ஒருவழியாக கீழிறங்கி நாராயணன் கூர்மாவதாரம் எடுக்கிறார்.

கூர்மருடைய பாடல்கள் ஒலிக்கத்தொடங்கும் முன்னரே கூர்மமேறிவிட்டிருந்தார் பள்ளி வாத்தியாரான அந்தக் கலைஞர். அவரைக் கட்டுப்படுத்த முடியாமல் 4 பேர் வஸ்த்திரம் கொண்டு இழுக்கிறார்கள். இரண்யாட்சனை வதம் செய்தும் சாந்தி அடையாமல் தன்னிலை மறந்தபடியே இருந்தார் வாத்தியார். அவருக்கு கற்பூறம் காண்பித்து மாலை அணிவிக்கப்பட்டது. பெரியவர் குழந்தைகள் எல்லாம் அவர் காலில் விழுந்து வணங்கினர்.

இந்த சிறு முதல் பகுதி முடிந்தவுடன், சில வயசாளிகளும் வேறு சிலரும் கலைந்து செல்ல அதுவரை நின்றிருந்தவர்களுக்கு இருக்கை கிடைக்கிறது.

மீண்டுவரும் இரண்யனது சபை மிகவும் பிரம்மாண்டம் மிக்கதாக இருக்கிறது. பெண் ஒப்பனையிட்ட ஆண்கள் அழகிகள் போல வந்து இரண்யனது சபையில் நடனமாடுகிறார்கள். இரண்யன் பெரிய மீசையுடனும், பரந்த மார்புடனும், ஆடம்பரமான ஆடைகளுடனும் அலங்காரத்தோடும் காட்சியளிக்கிறார். இரண்யன் வைக்கும் ஒவ்வொரு அடியும் மேடையை ஆட்டம் கொள்ளச்செய்கிறது. அவனது உரத்த குரலெடுத்த சிரிப்பு சவுண்டு சர்வீஸ்காரரைக் கொஞ்சம் பீதியுறச்செய்கிறது.

நீண்ட பாடல்கள் வரும் காட்சிகளில் இரண்டு இரண்யண்கள் மேடையில் வீற்றிருந்து பாடுகிறார்கள். ஒருவர் ஒரு பாடலைப் பாடி முடிக்க, மற்றோருவர் அடுத்த பாடலைத் தொடர்கிறார். உள்ளூர் மக்கள் யாதொரு குழப்பமுமின்றி பார்த்துக்கொண்டிருந்தனர். நான் சற்றே கடைமுற்றத்தில் இருந்தவர்களிடையே போய் அமர்ந்தேன். கரகரத்த..மிக வசீகரமான குரல் கொண்ட ஒருவருடன் பேசத்தொடங்கியிருந்தேன். "அடுத்து என்ன நடக்கும்" என்ற என்னுடைய கேள்வியை என்னால் அடக்க முடிந்தபோதும், அவரால் அதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. நன்றாக குத்த வைத்து அமர்ந்து, கால்களை இரு கைகளாலும் அனைத்து சொல்லத் தொடங்கினார்.

"இதுலபாருங்க...இரண்யனோட கண்பார்வைக்கே ராஜியம் முழுக்க கட்டுப்படும். தன்னையே சாமியா கும்பிடச் சொன்னான்னா பாதுக்கொங்க!. ஆமா..படியளக்கறவனும், நினச்சப்போ உசுரெடுக்கறவனும் அவந்தானுங்களே!. ஆனா பாருங்க, அவன் சொல்றத கேக்காதமாதிரி ஒரு புள்ளைய குடுத்தான் ஆண்டவன். ஆனா சாதாரணமா எல்லார் மாதிரியும் வெட்டிப்போட்டுட முடியுங்களா?..நிக்கிறது யாரு?...பெத்த மகனாச்சே!. இரண்யன் மொத தடவையா வேதனப் பட ஆரம்பிச்சுட்டான். அவனோட நிம்மதியெல்லாம் சரியத்தொடங்குதுங்க. சொல்லப்போனா அவனோட மரணத்தோட தொடக்கம்னு சொல்லலாம். அது தானே...நிம்மதி போயிறுச்சுன்னா மனுஷன் பாதி பொணந்தானப்பா?"

அவரது குரல் என்னை வேறு எதையும் கவனிக்க விடாமல் ஈர்த்துக்கொண்டிருந்தது. அவன் வாய்வழி விரியும் வார்த்தைகளில் நான் கரந்துகொண்டிருந்தேனோ என்று தோன்றியது. அதே சமயம் மேடையில், பிரகலாதன் இரண்யனுக்கு உபதேசம் செய்துகொண்டிருக்கிறான். ஆத்திரம் அடைகிறான் இரண்யன். மனைவியிடம் பிரகலாதனை எண்ணி புலம்புகிறான். தகப்பனுடைய பாசத்துகும், தான் கொண்ட கொள்கைக்கும் இடையில் தவித்தவாறே, எப்போதும் கலவரமடைந்தவாறே இருக்கிறான்.

"விஷ்ணுவ வெறுத்த இரண்யனே, பிரகலாதன் மூலமா கடைசி வரைக்கும் ஹரியை நினைக்க வச்சதுதான் அந்த தெய்வத்தோட விளையாட்டு" என்று தொடர்ந்தார் அந்த மனிதர். மீதி இருந்த கூட்டம் சற்றே கலையத்தொடங்க, பிரகலாதனின் குருகுலத்தில் பஃபூன்கள் வந்து மேடையை சற்று கலைகட்ட வைக்கிறார்கள்.

மணி 1ஐத்தாண்டி சென்றுகொண்டிருந்தது. இரு பிரதான இரண்யன் முழுவதுமாக விடைபெற்று சென்றுவிட மற்றூமோர் இரண்யன் இரவு முழுவதும் தன் கோபத்தையும், ஆதங்கத்தையும் அரற்றிப் பாடிக்கொண்டே இருந்தான். விதவிதமாக பிரகலாதனை மிரட்டியும், கொல்ல முயற்சித்தும் மேடையின் ஏதோ ஒரு மூலையிலிருந்து விஷ்ணு காட்சி தந்து காப்பாறிவிடுகிறார். மீதமிருந்தவர்கள் "கிருஷ்ணா..கிருஷ்ணா " என்று குதூகலிக்கின்றனர். அனைத்தையும் கவனித்தபடி சவுண்டு சர்வீஸ்காரர் தூக்கம் துரத்திக்கொண்டிருந்தார்.

இரண்யனோட தொடர்ந்த கொடுமைகளால் ஆத்திரமடைகிரார் விஷ்ணு. "என்ன தான் இரண்யனோட பிள்ளையா இருந்தாலும் லோக ஜீவன் எல்லாருக்கும் 'அவன்' தாங்க தந்தை. அதெப்படி...பிள்ளைக்கு ஒன்னுன்னா சும்மா இருந்திருவாரா?". "எல்லா அவதாரத்துலயும் சாந்தமாகவும், கொஞ்சம் அமைதியானவனா இருந்த விஷ்ணு, இந்த அவதாரம் மாதிரி ஆக்ரோஷமடஞ்சது கிடையாது. சும்மாவா...'பிள்ளைப் பாசம்'" என்றார் அவர். இந்தக்கதை ஒரே மகனுடைய இரண்டு தந்தைக்கான சண்டையோ என்று தோண்ற வைத்தது அவர் சொன்னது.

அவர் தொடர்ந்தார் "ஆனா கஷ்டகாலம். இரண்யனுக்கு அவனோட மரணம் நெருங்கிடிச்சு. அது அவனுக்கு இன்னும் தெரியாது. ஆனா எனக்குத் தெரியும். அத ஊர்மக்களுக்கும் சொல்லியாகனும். நான் வரேன்!" என்று புறப்படத்தொடங்கினார் அவர். அடுத்தவர் மரணத்தை இப்படி துல்லியமாக குறித்துவிட்டு, அதை அனைவருக்கும் அறிவிக்கவும் செல்லும் இந்த மனிதர் யாரென வியப்போடு கேட்டேன். அவன் என் கண்களை ஒருமுறை உற்று நோக்கி "நான் எமன்" என்றான்.

தெருவிளக்கின் வெளிச்சத்தில் பார்த்தேன். அவன் கரிய வர்ணம் பூசி, எமணுடைய ஒப்பனையில் இருந்தான். அவன் இரண்யனின் மரணச்செய்தியை அறிவிப்பதற்காக...ஊரின் எல்லா தெருக்களிலும் கூச்சலிட்டபடி செல்கிறான். தற்காலிக மரணத்திலிருந்த தெருக்கள் உயிர்த்தெழுகின்றன. உறங்கப் போன இல்லத்தரசிகள், குழந்தைகள் எமணின் கூச்சல் கேட்டு எழுந்துவிடுகிறார்கள். யாருடைய கண்களிலும் படுவதற்கு முன்பாக எமன் தெருவைக் கடந்து விடுகிறான். ஆம்...யாருக்கு தான் எமனை நேரிடப் பார்க்க விருப்பம் இருக்கிறது சொல்லுங்கள்!.

அரை விடியலில் அனைவரும் மேடையை நோக்கிச் செல்கிறார்கள். பெண்கள் குளித்த ஈரத்தலையுடன் பூஜைப் பொருட்களுடன் வந்து சேர்கிறார்கள். ப்ரதான பிரகலாதனும் இரண்யனும் அவரவர் ஒலிவாங்கியின் முன் நின்று பாடுகிறார்கள். நடுவில் அலங்கரிக்கப்பட்ட ஒரு பாய்த்தூண் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. தூணின் பின் ஏற்கனவே மூர்க்கமேறிவிட்ட விஷ்ணு அச்சம் கொள்ளும் வகையில் சப்தங்களை எழுப்பிக்கொண்டிருந்தார். இரண்யனுடைய முகம் கடந்த இரவில் கண்டதற்கு மாறாக இருந்தது. அவனது முகத்தில் இப்போது அச்சமும், கவலையுமே கூடியிருந்தது. அதைக் காட்டிக்கொள்ளாதபடிக்கு உரத்த குரலெடுத்து "எங்க இருக்கிறாண்டா உன்னுடைய விஷ்ணு" என்று கர்ஜித்து நிலத்தைக் காலால் உதைக்கிறான். பாய்த்தூணிலிருந்து உரத்த ஒலி வருகிறது, பாய்த்தூணும் மேடையுமே ஆட்டம் காணும் வண்ணம்.

விஷ்ணு தூணிலும் இருப்பான் துறும்பிலும் இருப்பான் எனும்படியாக பாடுகிறான் பிரகலாதன். இது தான் நாடக உச்சகட்டமென்பது எல்லாருக்கும் தெரிந்திருந்தாலும், பதட்டத்துடனும், அச்சத்துடனும், அமைதியாகவும் எல்லாரும் தூணிற்கு பின்னிருக்கும் சப்த்தத்தால் கட்டுப்பட்டிருந்தனர். "அப்படியானால்...இந்தத்தூணிலும் இருக்கிறானா உன் விஷ்ணு" என்று எள்ளி நகைக்கிறான் இரண்யன். "எங்கே இந்த தூணிலிருந்து வரட்டும்" என்று துணை உடக்க முனைகிறான்.

எந்தநேரத்திலும் விஷ்ணு வெளிப்பட்டு வந்துவிடக்கூடிய அபாயம் அறிந்து இரண்யன் பதட்டத்துடன் காணப்பட்டான். இரண்யனைக் காப்பாற்றுவதற்காக ஊர்மக்கள் சிலர் மேடையின் வாயிலில் தயாராக இருந்தனர். காலை வெயில் மேலேறத்துவங்கி இருந்த சமயம், தூணிலிருந்து ஆக்ரோஷமாக வெளிப்பட்டது நரசிம்ஹம். முகத்தில் கட்டப்பட்டிருந்த நரசிம்மப்பாவையுடன் இரண்யனை நோக்கி துள்ளியது நரசிம்மம். சுமார் 10 பேராவது வஸ்திரங்களைக் கொண்டு நரசிம்மரை இழுக்க வேண்டிதாயிற்று. இரண்யன் சிறு பிள்ளையைப்போல அச்சமுற்று அழத் தொடங்குகிறான். இரண்யனைப் பார்க்கும் தோறும் நரசிம்மம் மூர்க்கம் அடைவதால், இரண்யனை அங்கிருந்து விலக்கிக் கூட்டிச்செல்கிறார்கள்.

எதையும் பார்க முடியாவண்ணம் பிரகலாதன் மயக்கமடைந்து விழுந்துவிட்டார். ரௌத்திரமேறிய நரசிம்மத்தின் கைகளில் சரசரமாக செவ்வந்தி மாலைகள் கொடுக்கப்படுகிறது. அதை இரண்யனுடைய குடலென பிய்த்து வாயிலிட்டு மெல்லத்தொடங்குகிறார். மேலும் மேலும் மாலைகள் கொடுக்கப்படுகிறது. மேடை, தெருக்கள் எங்கும் செவ்வந்தி மாலைகளாக சிதறிக்கிடக்கிறது. ஒரு புராணக்காட்சி கண்முன்னே நடப்பது போல ஊர்மக்கள் வாயடைத்துப் போய் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். சில குழந்தைகள் வ்ரீச்...என்று குரலெடுத்து கத்தத் தொடங்கினார்கள். சிறிதுசிறிதாக விஷ்ணு சாந்தமடையத் தொடங்குகிறார். ஊர்மக்கள் சிலர் சுயம் மறந்து மயங்கி விழுந்தனர்.

மற்றவர்கள் தன்னிலைக்கு வருகிறார்கள். சாந்தமடைந்த நரசிம்மத்திற்கு ஆராதனை காட்டப்படுகிறது. தெருவெங்கும் சிதறிக்கிடந்த பூக்களைப் பெண்களும் பெரியவர்களும் சேகரித்து எடுத்து முடிந்து கொள்கிறார்கள். அது தங்களைக் துன்பங்களில் இருந்து காப்பாற்றும் என்று நம்புகிறார்கள். மிகவும் வயது முதிர்ந்த சிலர், 'அடுத்த வருஷம் கூத்துக்கு நான் இருக்க மாட்டேன்' என்று முணுமுணுத்த படி உருக்கமாக ப்ராத்திப்பதைக் கண்டேன்.

அனிச்சையாக எல்லோரும் சென்று அவர்காலில் விழுந்து ஆசி வாங்குகிறார்கள். இரண்யன் அழைத்துவரப் படுகிறான். அவன் இப்போது கிரீடம் இல்லாதவனக காட்சியளிக்கிறான். நரசிம்மம் காலில் வெகுநேரம் முகம் புதைத்து அழுகிறான். இரண்யன் மேல் எல்லோருக்கும் மிகுந்த பாசம் கூடிவிட்டிருந்தது. நரசிம்மர் அவன் தலையைப் பிடித்து ஒரு தந்தை போல ஆசி தருகிறார். அவன் நெற்றியில் செந்நிற திலகமிடுகிறார். அந்தக் காட்சி மனதை மிகவும் நெகிழ வைப்பதாக இருந்தது. ஊர் ஜனங்கள் கூடி அருகில் உள்ள ஒரு ஆலயத்துக்கு சென்று 'நரசிம்ம பாவை'யை வைத்து வழிபட்டு, கூத்தை நிறைவு செய்கின்றனர்.

*-*-*-*-*

தொடக்கத்தின் முடிவு


சித்திரை மாதம். அனைவரும் வழிபாடு முடிந்து அவரவர் வீட்டிற்கு கலைந்து செல்கிறார்கள். நரசிம்மப்பாவையுடன் ஊர் ப்ராதானிகள் ஊர்வலமாக வந்தார்கள். நாடகக் குழுவிற்கு நண்பரது வீட்டில் விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாடக குழுவினர் எல்லோரும் வந்து சேர்ந்தனர்.

இரண்யன் இன்னும் சோர்வாகவே காணப்பட்டார். கொடுத்த காப்பியைக்கூட வேண்டமென மறுத்துவிட்டார். பிரகலாதன் என்னிடம் வந்து கூத்து எப்படி இருந்தது என்று கேட்டார். நான் சொல்வதறியாது மிகுந்த கூச்சத்துடன் தலையசைத்தேன். நரமிம்மரும் மற்றுமொரு இரண்யனும் வெகுசாதாரணமாக பேசிக்கொண்டிருந்தனர். எங்கே எமனைக் கானோம் என்று எல்லாரும் தேடிக்கொண்டிருக்க, எமனை அழைக்க ஆள் அனுப்பப்பட்டது. பந்தி தொடங்கும் நேரத்தில் வந்து சேர்ந்த எமன், என்னைப் பார்த்தவாறே சென்றார். நான் எமணது பார்வையை புறக்கணித்தவனாக வெளிநோக்கி நடந்துகொண்டு வந்தேன். தெருவெங்கும் எருமைகள் கூட்டம் கூட்டமாக நின்று கத்தின. ஒரே பந்த்தியில் இரண்யர்களும், நரசிம்மரும், எமராஜனும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது என்னை எதுவோசெய்தது. சித்திரை வெயில் உச்சியில் காய்ந்து கொண்டிருக்க தெருவில் தனியே நடக்கத் தொடங்கினேன்.

மேடை அமைந்த இடம் ஒரு பாலைவனம் போல ஆளரவமற்று இருந்தது. வழியெங்கும் செவ்வந்திப் பூக்கள் சிதறிக்கிடந்தன. நடந்தவை எல்லாம் ஒரு கனவுபோல இருந்தது. இரவு ஆர்கஸ்ட்ராவிற்கு கண்விழிக்க வேண்டி மேடையருகே வெயிலையும் பொருட்படுத்தாமல் நசுருதீன் சவுண்டு சர்வீஸ்காரர் மட்டும் மல்லார்ந்து உறங்கிக்கொண்டிருந்தார். பாவமோ புண்ணியமோ யாதுமறியாது அவன் அவனது அடுத்த கருமத்திற்காக தன்னைத் தயார் படுத்திக்கொண்டிருந்தான். மற்றுமொரு சிறுவன் வயர்களைச் சுருட்டிய வண்ணம் இருந்தான். ஐஸ் வண்டிக்காரர்கள் சப்தமும் டீக்கடை பாடலோசையும் வழக்கம் போல ஒலிக்கத்துக்கொண்டிருந்தன. நான் ஊருக்கான அடுத்த வண்டி எப்போது என்று விசாரிக்கத் தொடங்கியிருந்தேன்.

- பிரவீன்([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com