Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

மரண தண்டனை: குடியரசு தலைவரின் மனித நேயம்

பூங்குழலி


குடியரசு தலைவர் அப்துல் கலாம் கடந்த அக்டோபர் 17ஆம் நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். மத்திய அரசிடம் நிலுவையில் இருந்த மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்களை நிராகரிக்கப் பரிந்துரைத்து மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசு தலைவருக்குக் கோப்பு அனுப்பியது. குடியரசு தலைவர் அம்மனுக்களை மறுபரிசீலனை செய்யுமாறு உள்துறை அமைச்சகத்துக்குக் குறிப்பு எழுதி அம்மனுக்களைத் திருப்பி அனுப்பினார். மீண்டும் உள்துறை அமைச்சகம் தனது முடிவை மாற்றிக் கொள்ளாமல் குடியரசு தலைவர் அம்மனுக்களை நிராகரிக்கத்தான் வேண்டுமென அவரிடம் அனுப்பியது. வரலாற்றிலே இல்லாத வகையில் இரண்டாவது முறையும் குடியரசு தலைவர் அக்கோப்பில் கையெழுத்திட மறுத்ததோடு,

Abdul Kalam "இந்த மனுக்கள் யாவும் நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ளன. மரண தண்டனைக் கைதிகளைக் கருணை அடிப்படையில் பரிசீலனை செய்து அவர்களை வாழ வழி செய்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். அவர்களுக்குக் கவுன்சிலிங் நடத்தி ஆன்மீக வழிகாட்டு நெறிகளைப் போதிக்க வேண்டும். இது போன்ற கைதிகளைச் சுமையாகக் கருதாமல் மனித சொத்தாக பாவித்து நல்வழிப்படுத்த அரசு முயல வேண்டும். இது போன்ற கைதிகள் இனி இந்த உலகில் வாழும் எஞ்சிய நாள்களைத் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும்''. என்று மனித நேயத்தோடு குறிப்பிட்டுள்ளார்.

1962-67ஆம் ஆண்டுகளில் குடியரசு தலைவராக இருந்த சர்வபள்ளி இராதாகிருட்டிணனும் மரண தண்டனைக்கு எதிராகவே இருந்தார். அவரின் பதவிக் காலத்தில் அவரிடம் அளிக்கப்பட்ட கருணை மனுக்களை மத்திய அரசின் பரிந்துரைக்காக அனுப்பாமல் நிறுத்தி வைத்தார். ஆனால் தற்போதைய குடியரசு தலைவர் அப்துல் கலாம் இராதா கிருட்டிணனை விட ஒரு படி மேலே சென்று மரண தண்டனை கூடாதென வெளிப்படையாகத் தனதுக் கருத்தை கூறியிருக்கிறார். அதோடு இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பொது விவாதம் நடத்தி முடிவெடுக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார்.

குடியரசு தலைவரைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நவம்பர் 1ஆம் நாள் பொறுப்பேற்க இருக்கும் நீதிபதி ஒய். கே. சபார்வால், இந்து நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் மரண தண்டனைக்கு எதிரான கருத்தை அழுத்தமாக வெளியிட்டிருக்கிறார்.

"சட்டத்தைக் காக்கும் பொறுப்பில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக, எனக்கு முன் சட்டத்தின்படி மரண தண்டனை விதிப்பதற்குத் தகுந்த வழக்குகள் வரும் தருணங்களில் நான் எனது தனிப்பட்ட கருத்துகளை அங்கு புகுத்த முடியாது. மரண தண்டனை, சட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் வரையில் நான் மரண தண்டனை விதிக்க முடியாது எனக் கூற முடியாது. ஆனால் தனிப்பட்ட முறையில், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இல்லாமல், ஒரு சாதாரணக் குடிமகனாக, நம் நாட்டில் மரண தண்டனையே இருக்கக் கூடாது என்றே நான் கருதுகிறேன். அதற்கு மாற்றாக, முழு வாழ்நாளும் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனக் கூறலாம். ஏனெனில், சரி செய்ய முடியாத ஒன்றை (தண்டனையை) யாருக்கும் அளிக்கக் கூடாது. அய்ரோப்பா முழுவதிலும் மரண தண்டனை கிடையாது. அமெரிக்காவின் பல மாகாணங்களில் மரண தண்டனை கிடையாது. இன்னும் வேறு பல நாடுகளிலும் மரண தண்டனை கிடையாது. இது ஒரு சமூக அரசியல் சிக்கலாகும்.'' என்று மிகச் சரியாகவே குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மரண தண்டனை குறித்த விவாதம் மீண்டும் எழுந்திருக்கிறது. பல்வேறு தரப்பினரும், குறிப்பாக மனித உரிமை ஆர்வலர்கள், குடியரசு தலைவருக்கு நன்றி கூறியும், இந்தியாவிலிருந்து முற்றிலுமாக மரண தண்டனையை ஒழிக்க வற்புறுத்தியும் அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர். மரண தண்டனை குறித்த எதிர்ச் சிந்தனைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே வெளிப்படத் தொடங்கிவிட்டன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மரண தண்டனைக்கு எதிரான கருத்துகள் மேற்கத்திய நாடுகளில் மிகப் பரவலாக வெளிப்பட்டன. குறிப்பாக பிரெஞ்சு எழுத்தாளர் ஆல்பர்ட் காம்யூ மரண தண்டனையை எதிர்த்து எழுதிய “தி கில்லடின்” எனும் சிறுநூல் இன்றளவும் மரண தண்டனைக்கு எதிரான ஒரு முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது.

இந்தியாவிலும் மனித உரிமை ஆர்வலர்களும், அரசியல் தலைவர்களும் கூட அவ்வப்போது மரண தண்டனைக்கு எதிரான கருத்துகளை கூறி வந்துள்ளனர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பகத்சிங், சுகதேவ், இராசகுரு ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட பொழுது, மரண தண்டனை குறித்த பரவலான விவாதம் எழுந்தது. மிதவாதிகளான காங்கிரஸ் தலைவர்கள் கூட, பகத்சிங்கின் பாதையை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அவரது நோக்கம், நமது நோக்கம் ஒன்றே என்ற அடிப்படையில் அவரது மரண தண்டனைக்கு எதிராகக் குரல் எழுப்பினர். 1942ஆம் ஆண்டு நடைபெற்ற ஆகஸ்டு புரட்சிப் போராட்டத்தில் குலசேகரப் பட்டினத்தில் வெள்ளைக்கார சார்ஜண்ட்டை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இராசகோபலன், காசிராஜன் ஆகிய இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1946ஆம் ஆண்டு சென்னை மாகாண பிரதமராகப் பதவி ஏற்ற பிரகாசம், அப்போதைய ஆளுநரிடம் வாதாடி அவர்களை விடுதலை செய்தார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போசின் இந்திய தேசிய இராணுவத்தைச் சேர்ந்த கேப்டன் நவாஸ் கான், காப்டன் தில்லான் மற்றுமொருவர் ஆகியோருக்கு பிட்டிஷ் இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதற்கு எதிராக இந்தியா முழுவதும் காங்கிரசு மற்றும் பல கட்சிகள் போராட்டம் நடத்தின. போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து அப்போதைய இந்திய வைசிராய் வேவல், தனக்குள்ள சிறப்பதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை விடுதலை செய்தார். இப்படி மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஒட்டுமொத்தமாக விடுதலை செய்யப்பட்ட சம்பவங்களும் உள்ளன.

குறிப்பிட்ட வழக்குகளில் மரண தண்டனைக்கு எதிரான குரல்கள் எழுந்த அதே நேரத்தில் இந்தியாவிலிருந்து ஒட்டுமொத்தமாக மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற குரலும் எழுந்த வண்ணம் இருந்தது. ஆங்காங்கே இருக்கும் மனித உரிமை அமைப்புகள் தங்கள் மாநாடுகளில் தீர்மானங்கள் மூலம் அக்கருத்தை வலியுறுத்தி வந்தன. ஆனால் பரந்துபட்ட அளவில் ஒரு விவாதமாக அது எழவில்லை.

1998ஆம் ஆண்டு பூந்தமல்லி தடா சிறப்பு நீதிமன்றம் இராசீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்த போது இந்தியா மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரையும் அது உலுக்கிவிட்டது. யாராலும் கற்பனை செய்துகூட பார்க்க இயலாத இக்கொடூரத் தீர்ப்பு மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரத்திற்கு வலு சேர்த்தது. இத்தீர்ப்பைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட 26 தமிழர் உயிர்காப்புக் குழு இவ்வழக்கினை உச்ச நீதிமன்றத்தில் நடத்துவதோடு தங்கள் பணி முடிந்துவிடவில்லை எனக் கருதியது. அதன் விளைவாக இந்தியாவெங்கும் மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரப் பணியை வெகு வேகமாக எடுத்துச் சென்றது. இந்தியா மட்டுமல்லாது, உலகளாவிய அளவில் செயல்படும் பொது மன்னிப்பு அவை (அம்னஸ்டி இண்டர்நேசனல்) போன்ற மனித உரிமை அமைப்புகளுக்கு எழுதி அவர்களது கருத்தைப் பெற்று வெளியிட்டது.

மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரம் மிக வலுவாக பரவத் தொடங்கியது. சாதாரண மக்கள் மத்தியில் இது பெரும் விவாதமாகவே எழுந்தது. அரசியல் தலைவர்கள் மரண தண்டனை குறித்த தங்கள் கருத்தைச் சொல்லியே ஆக வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர். இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு தரப்பினரும் மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக வெளியிட்டனர். அப்படிக் கூறியவர்களில் உச்ச நீதிமன்ற, பல்வேறு மாநிலங்களின் உயர் நீதிமன்ற நீதிபதிகளும், மூத்த வழக்கறிஞர்களும் அடங்குவர். சென்னையில் மரண தண்டனைக்கு எதிரான வழக்கறிஞர் மாநாடு நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் சட்டக் கல்லூரி மாணவர்கள் மரண தண்டனைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.

சமூகத்தின் மனசாட்சியாகச் செயல்படும் எழுத்தாளர்களும் மரண தண்டனைக்கு எதிராக அணி திரண்டனர். சென்னையில், மரண தண்டனைக்கு எதிரான எழுத்தாளர் மாநாடு நடைபெற்றது. பல்வேறு புகழ் பெற்ற எழுத்தாளர்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர். திரையுலகக் கலைஞர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் என சமூகத்தின் மதிப்பு மிக்கவர்கள் பலரும் மரண தண்டனைக்கு எதிரான இயக்கத்தில் இணைந்து செயல்பட்டனர்.

Hanging மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரப் பயணம் ஒன்று சென்னையில் தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் சென்றது. அப்பயணத்தில் இராசீவ் கொலை வழக்கில் பூந்தமல்லி நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்கள் துயரங்களை எடுத்துக் கூறினர். இப்பிரச்சாரப் பணிகளின் உச்சக்கட்டமாக 1999ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் நாள் சென்னையில் மரண தண்டனைக்கு எதிரான பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மாபெரும் பேரணி ஒன்று நடைபெற்றது. பேரணியின் முடிவில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியிடம் மரண தண்டனைக்கு எதிராக இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்ட மனு அளிக்கப்பட்டது.

2004ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தனஞ்செய் சாட்டர்ஜியின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு அவருக்கு மரண தண்டனை உறுதியான போது மீண்டும் மரண தண்டனைக்கு எதிரான விவாதம் இந்தியாவெங்கும் எழுந்தது. அவரது மரண தண்டனையை நிறுத்தக் கோரி இந்தியாவெங்கிலும் உள்ள மனித உரிமை அமைப்புகள் பல்வேறு வகையிலும் முயற்சி செய்தன. ஆனால் மிக வேதனையூட்டும் வகையில் அவரது மரண தண்டனையை நிறுத்த முடியவில்லை. தனஞ்செய் சாட்டர்ஜி தூக்கிலிடப்பட்டார்.

அதுவே இந்தியாவில் நிறைவேற்றப்படும் கடைசி மரண தண்டனையாக இருக்க வேண்டும் என்பதே இந்தியாவெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இன்று குடியரசு தலைவர் மரண தண்டனைக்கு எதிராக வெளியிட்டிருக்கும் கருத்தினைத் தொடர்ந்து மீண்டும் ஒரு விவாதம் எழுந்துள்ளது.

தனஞ்செய் சாட்டர்ஜிக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய ஊழியரின் வயது எழுபத்தி இரண்டு. ஓய்வு பெறும் வயதைத் தாண்டி பல ஆண்டுகள் ஆகியும் அவர் இன்னும் பணியில் இருப்பதற்கு ஒரே காரணம் அப்பணியை மேற்கொள்ள வேறு யாரும் முன்வராததே. மரண தண்டனை விதித்த நீதிபதி கூட அத்தண்டனையை நிறைவேற்றும் பணியைச் செய்ய முன் வரமாட்டார். இதிலிருந்தே மரண தண்டனையின் கொடூரத் தன்மை புரியும்.

மரண தண்டனையின் நோக்கம் அச்சுறுத்துவதற்கே என்றால் இத்தனை ஆண்டுகளில் குற்றங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்திருக்க வேண்டும். ஆனால் உண்மையில் திட்டமிட்ட கொலைகளின் எண்ணிக்கை பெருகியுள்ளது என்பதற்குக் காவல் துறையினரின் ஆவணங்கள் பெரும் சாட்சியாக இருக்கின்றன. உண்மையில், தங்கள் வழக்கை திறமையான வகையில் எடுத்து நடத்த வாய்ப்பும் வசதியும் இல்லாத, ஒடுக்கப்பட்ட, ஏழை மக்களே மரண தண்டனைக்குப் பெருமளவு பலியாகின்றனர்.

உலகச் சூழலில் இன்று கிட்டத்தட்ட 111 நாடுகளில் மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. 27 நாடுகளில் சட்டத்தில் இருந்த போதும் நடைமுறையில் மரண தண்டனை விதிக்கப்படுவது இல்லை. ஏகாதிபத்திய, சர்வாதிகார நாடுகளில் கூட மரண தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில், அகிம்சையின் பிறப்பிடமாக, காந்தியடிகளின் தேசமாகத் திகழும் இந்தியாவில் மட்டும் இந்தக் கொடூரத் தண்டனை இன்றளவிலும் நீடித்து வருவது வேதனைக்குரியது மட்டுமல்ல, வெட்கக்கேடானதும் கூட.

உலகின் மிகப் பெரிய சனநாயக நாடான இந்தியாவில், சனநாயக விரோத தண்டனையான மரண தண்டனையை ஒழிப்பதில் மனித உரிமைகளை மதிக்கும், மனித நேயம் கொண்ட ஒவ்வொருவருக்கும் பெரும் பொறுப்பு உள்ளது. குடியரசு தலைவர், உச்ச நீதீமன்றத் தலைமை நீதிபதி உள்ளிட்ட நாட்டின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களே மரண தண்டனைக்கு எதிராக மிக அழுத்தமாகக் கருத்து வெளியிட்டிருக்கும் இத்தருணமே, இந்தியாவிலிருந்து மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிக்க மிகச் சிறந்த தருணமாகும். இந்த வாய்ப்பை தவறவிட்டால் இனி இதை விட நல்ல வாய்ப்புக் கிடைப்பது அரிது. எனவே, உலகெங்கிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் இத்தருணத்தில் ஒன்றிணைந்து இந்திய அரசிற்கு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்.

முன் எப்போதும் இல்லாத வகையில், மரண தண்டனைக்கு எதிரான குரல்கள் அரசியல், அதிகார வர்க்கங்களிலிருந்தும் எழுந்திருக்கும் இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி இந்திய அரசும் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதே மனித நேயம் கொண்ட அனைவரின் எதிர்ப்பார்ப்பாகவும் இருக்கிறது.

(தென்செய்தி நவம்பர் 1-15 இதழில் வெளியான கட்டுரை)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com