Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

ஈழத்தமிழர்களை மறந்த கருணாநிதியின் பல்லக்கு தூக்கிகள்
பொன்னிலா

“இந்தாக்கா எனக்கு கட்டுப் போடுக்கா”” என்று ரத்தம் சொட்டும் தன் கரங்களில் பேண்டேஜ் துணியை எடுத்து நீட்டுகிறது ஒரு ஈழத்துக் குழந்தை. கதறுகிற தம்பிக்கு கட்டுப் போடுவதா அல்லது கொஞ்சம் கொஞ்சமாக கண்கள் சொருகி தோளில் துவண்டு விழுகிற தன் தங்கையைக் காப்பாற்றுவதா என்று பித்துப் பிடித்து, சிதறி சிதைந்து நிற்கிற அந்த ஈழத்துக் குழந்தை நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறாள். பாதுகாப்பு வலையம் முழுக்க பிணங்கள். அடப்பாவிகளா? இது மனித குலத்தில் எங்கேயும் நடந்ததேயில்லையே! உங்களுக்கு இரக்கமே இல்லையா? அவர்கள் தமிழர்கள் என்பதால் ஏன் இபப்டி அநியாயமாக விஷக் குண்டுகளை வீசிக் கொல்கிறாய். ஓ இந்தியாவே! இரக்கமில்லாத நாய்களே! ஒருத்தனுக்கு இழவு எடுத்ததற்காக இத்தனையாயிரம் தமிழ் மக்களையா காவு கேட்பீர்கள்? ஒரு இந்திராவின் உயிருக்கு மூவாயிரம் சீக்கியர்கள் என்றால் ஒரு ராஜீவ்காந்தியின் உயிருக்கு பத்தாயிரம் தமிழ் மக்களா?

Karunanidhi family இன்று உலகெங்கிலும் தமிழினத்திற்கு இருப்பது ஒரே வழிதான் அது தற்கொலை செய்து கொள்வது. நாம் ஏன் தற்கொலை செய்ய வேண்டும்? ஆமாம் தற்கொலைதான் செய்ய வேண்டும். என்னைக் கைது செய்தாலும் பரவாயில்லை. ஆமாம் ஒட்டு மொத்தமாக நாம் வங்கக் கடலில் குதித்து நம்மை நாமே மூழ்கடித்துக் கொள்வோம். வேறு என்ன செய்ய? கருணாநிதி மாதிரி ஒரு பதவி வெறியனும், ஜெயலலிதா மாதிரி ஒரு பாசிஸ்டும் நம் தலைவர்களாக இருக்கும் போது நாம் என்னதான் செய்வது? வேறு போக்கிடம் தான் ஏது?

குழந்தைகள், பெண்கள், எல்லாம் கொன்றொழிக்கப்பட்டு விட்டார்கள். நிற்க ஒரு நிழல் இல்லை, உண்ண உணவில்லை, தாயகத்தில் தங்களின் சொந்தங்கள் செத்து மடிவதைப் பார்த்து புலத்திலும் நிம்மதியில்லை. ஆனால் நாம் மட்டும் நிம்மதியாக இருக்கிறோம். புலத்தில் காப்பிக் கோப்பை கழுவி, கார்பெட் துடைத்து சம்பாதித்த பணத்தில் ஈழத் தமிழர்கள் யார் யாரையெல்லாம் வெளிநாடுகளுக்கு அழைத்து விருந்து வைத்தார்களோ அவர்களில் சிலர் இன்று கருணாநிதியின் பெயர் ஈழ விவகாரத்தில் கெடுகிறதே என்று வருத்தப்படுகிறார்கள். ஆகவே கருணாநிதியின் மடியில் அமர்ந்து கொண்டு ஜெயலலிதா என்கிற பாசிஸ்டை மையப்படுத்தி ஈழப் பிரச்சனையை அணுகிறார்கள். பதவிக்காக, குடும்ப ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள கருணாநிதி ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்தார். பிரபாகரனின் கடைசி முடிவின் மீதான தன் ஆசையை வெளிப்படுத்தி வக்கிரத்தை வெளிப்படுத்துகிறார். ஆனால் புலம்பெயர் தமிழர்களால் வளம் பெற்ற சிலரோ கருணாநிதிக்கு ஏதும் பாதிப்பு வந்து விடக்கூடாது, தேர்தலில் பாதிப்பு வந்து விடக் கூடாது என்று ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி செய்து கிழித்த சாதனைகள் குறித்து வாய்கிழியப் பேசுகிறார்கள். ஒற்றுமையாக ஒன்று பட்டு போராட வேண்டும் என்கிறார்கள்.

முதலில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போராடும் யாரும் கருணாநிதிக்கு எதிராக போராடவில்லை. காங்கிரஸ் கட்சிக்கும் அதன் தலைமைக்கும் எதிராகத்தான் போராடினார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியையும் வெள்ளைக்காரி சோனியாவையும் திருப்திப்படுத்த போராட்டங்களை ஒடுக்கினார் கருணாநிதி. கைதுகள், தாக்குதல்கள், இழிவு படுத்தல்கள் என ஒரு கடைந்தெடுத்த பதவிப் பித்துப் பிடித்த ஒரு மனிதராக கருணாநிதி மாறியதோடு. ஈழப் போரைக் கொச்சைபப்டுத்தியும் புலிகளின் தலைவரும், உலகத் தமிழகளின் ஒப்பற்ற தலைவரருமான வேலுப்பிள்ளை பிரபாகரனை மிக கீழ்த்தரமான முறையிலும் கொச்சைப்படுத்தி, காட்டியும் கொடுத்தார். அதன் பிறகுதான் இந்தப் போருக்கு துணைப்போவது காங்கிரஸ் மட்டுமல்ல கருணாநிதியும்தான் என்று கருணாநிதி காங்கிரஸ் கும்பல் மீதான வெறுப்பு வளர்ந்தது.

ஒரு பக்கம் முழு பதவிக்காலத்தையும் அனுபவித்துவிட்டு அனுபவித்த காலத்தில் காங்கிரஸ் கட்சியைப் பற்றி வாயே திறக்காமல் இன்று தேர்தல் வந்தவுடன் பேசுகிற - கருணாநிதிக்கு சற்றும் குறைவில்லாத சந்தர்ப்பவாதி டாக்டர் ராமதாசைப் போல, போர் என்றால் மக்கள் மடியத்தான் செய்வார்கள் என்று சொன்ன ஜெவைப் போலவோ அல்ல நாங்கள். கருணாநிதி கும்பலுக்கோ பதவி பறிபோய் விடக் கூடாது என்கிற கவலை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் யாருக்குக் கேடு - தமிழ் மக்களுக்கா? கருணாநிதி குடும்பத்துக்கா? கருணாநிதியின் இந்தக் குடும்ப ஆட்சி, சொத்து, ஊடக சர்வாதிகாரம், ஆட்சியதிகாரம் என எல்லாம் பார்ப்பன ஜெவின் கைக்குள் சென்று விடும் என்ற கவலை கருணாநிதி கும்பலுக்கு. ஜெவுக்கோ கருணாநிதி மீது எழுந்துள்ள இந்தக் கசப்பை எப்படியாவது பயன்படுத்தி ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்ற ஆசை. இதில் கருணாவோ ஜெ.வோ - தமிழனுக்கு என்ன நட்டம், லாபம்? ஒரு மண்ணும் கிடையாது.

தோற்றாலும் ஜெயித்தாலும் இன்னும் சில மாதங்களில் கருணாநிதியின் காலை காங்கிரஸ்காரன் வாரி விடப் போகிறான். கருணாநிதியோ ஈழ மக்களுக்காக மூன்றாவது முறையாக தியாகம் செய்து விட்டேன் என்று லிஸ்ட் போடுவார். தியாகம் செய்ய வாய்ப்பு வருகிறபோது காலை வாரிவிட்டு ஓலம் இடும் கருணாநிதி தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு! சூழலை மாசுபடுத்துகிற ஒரு நச்சுக் கிருமி. அவரும் சரி அவரது ஆர்வலர்களும் சரி உண்மையிலேயே ஈழ மக்களை நேசிக்கவில்லை. மாறாக கிடைக்கிற வரை ஈழ மக்களால் கிடைக்கும் அனுகூலங்களை அனுபத்த்து விட்டு அவர்களுக்கு துரோகம் செய்து விட்டு கருணாநிதிக்கு பல்லக்குத்தூக்கும் கைத்தடிகள் இவர்கள். உண்மையிலேயே இவர்கள் ஈழ மக்களை, அந்தப் பிஞ்சுக் குழந்தைகளை, போரில் சாகும் தாய்மார்களை, புலிகளை, பிரபாகரனை நேசித்திருந்தால். இப்படி ஒரு துரோகிக்கு பல்லக்குத் தூக்கியிருக்கமாட்டார்கள்.

அதன் விளைவுதான் இன்று கருணாநிதி சொல்கிறார்,’’ ‘அழுது புலம்புவதைத் தவிற வேறு வழி தெரியவில்லை’.” வழி எங்களுக்குத் தெரியும். பதவி வெறி கண்ணை மூடுகிற உனக்கு எப்படி வழி தெரியும்? ஈழத்தில் விழுகிற பிணங்களைப் பார்த்து உனக்கு கண்ணீர் கூட வராது. ஏனென்றால் நீ அந்த மக்களைப் பார்த்து எரிச்சல் அடைக்கிறாய். சர்வாதிகாரிகளின் கடைசி நாட்களை உனக்கு நினைவூட்ட விரும்புகிறோம். மக்கள் புரட்சியின் கடைசி மணித்துளிகளில் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் நீ வீசப்படுவாய். உனக்கு மட்டுமல்ல, ஜெயலலிதாவுக்கும் அதே கதிதான்.

- பொன்னிலா ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com