Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle

வேட்டைச் சமூகம் - காட்டுமிராண்டி நிலையும் அநாகரிக நிலையும்
வெ.பெருமாள் சாமி


குரங்கில் இருந்து மனிதனாகப் பரிணாமரீதியில் வளர்ச்சி பெற்ற மக்கள் தொடக்கத்தில் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தனர். பின்னர் படிப்படியாக வளர்ந்து முன்னேறி நாகரிக நிலையினை அடைந்தனர். காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலகட்டத்தில் உணவுக்காக வேட்டைத் தொழிலையே பெரிதும் சார்ந்திருந்தனர். அத்துடன் இயற்கையாகக் கிடைத்த காய்கள், கனிகள், கிழங்குகள், கொட்டைகள் முதலியவற்றை உண்டு உயிர்வாழ்ந்தனர். வறட்சி மற்றும் இயற்கைச் சீற்றம் முதலிய உற்பாதங்களால் தாவரங்களுக்கு அழிவு நேரிட்ட காலங்களிலும் வேட்டை மற்றும் நோய் முதலிய காரணங்களால் விலங்குகள் அழிய நேரிட்ட காலங்களிலும் மனிதர்கள் உணவுக்காக வேறு மூலாதாரங்களை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால் மனிதனைத் தின்னும் பழக்கமும் உண்டாகியது. மனிதர்கள் காட்டு மிராண்டிகளாக வாழ்ந்த காலகட்டத்தில் இந்தப் பழக்கம் அவர்களிடையே நிலவியது.

man தமிழில் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை நூலும் நரமாமிசம் உண்ணும் பழக்கம் உடையவராயிருந்த காட்டுமிராண்டிகளைப் பற்றிக் கூறுகிறது. கீழைக்கடல் தீவுகளில் ஒன்றான நாகத்தீவில் வாழ்;ந்தவர்களான நாகர்களைப் பற்றி அந்நூலில் சாத்தனர் விரிவாகக் கூறுகிறார்.

சாதுவன் கதை

புகார் நகரத்து வணிகனான சாதுவன் என்பான் வாணிகம் செய்து பொருளீட்டுவதற்காகக் கப்பல் ஏறிக்கடல் கடந்து வெளிநாடு சென்றான். அவன் சென்ற கப்பல் நடுக்கடலில் புயலால் தாக்குண்டு நீரில் மூழ்கியது. உடன் சென்றார் அனைவரும் மாண்டாராக சாதுவன் மட்டும் கப்பலின் சிதைந்த மரத்துண்டு ஒன்றைப் பற்றிக் கொண்டு கடலில் மிதந்தான், தீவு ஒன்றின் கரையில் அலைகளால் ஒதுக்கப்பட்டு உயிர் பிழைத்தான். அது நாகர் என்பார் வாழ்ந்த தீவு. நாகர்கள் ஆடை எதுவும் அணியாமல் நிர்வாணமாகத் திரிந்தனர். அவர்களை நக்க சாரணர் என்று சாத்தனார் குறிப்பிடுகிறார். அவர்கள் மனித வரலாற்றின் ஆரம்பக் கட்டத்தைச் சேர்ந்த காட்டுமிராண்டிகள் ஆவர். நரமாமிசம் உண்ணும் பழக்கம் உடையவர்கள்.

தீவில் கரையொதுங்கிக் கிடந்த சாதுவனை அத்தீவினரான நாகர் சிலர் கண்டனர். அயலான் ஒருவன் தம் தீவில் கரையொதுங்கிக் கிடந்ததைக்கண்ட அவர்கள் தானே தமியன் வந்தனன் அளியன் ஊனுடை இவ்வுடம்பு உணவாம்” எனக்கூறி, அவனைக்கொன்று தின்னும் கருத்துடன் எழுப்பினர். ஆனால் அவர்கள் தாம் நினைத்தது போல உடனே அவனைக் கொல்ல முயலவில்லை. தம் கூட்டத்தார் இருந்த இடத்துக்கு அவனைக் கொண்டுபோக முயன்றனர். சாதுவன் கடல் வாணிகன் ஆனதால் நாகர் மொழியையும் நன்கு அறிந்திருந்தான். பசியாலும் களைப்பாலும் மயங்கிக்கிடந்த அவன் அந்நிலையிலும் அவர்கள் பேசியதைப் புரிந்து கொண்டான். தனக்கு நிகழ இருக்கும் ஆபத்தை உணர்ந்தவனாய் எழுந்து அவர்களுடன் சென்றான்.

அக்கூட்டத்தினர் “கள்ளடு குழிசியும் கழிமுடை நாற்றமும் வெள்ளென்பு உணங்கலும் விரவிய” இடத்தில் கூடியிருந்தனர். அவர்களின் தலைவன் “எண்கு தன் பிணவோடு இருந்தது போல” ஒரு பெண்ணுடன் இருந்தான். சாதுவன் அவர்கள் மொழியில் உரையாடி, கடலில் தனக்கு நேர்ந்த இன்னல்களை உணர்த்தினான். சாதுவனின் துயரத்தை உணர்ந்து கொண்ட அத்தலைவன் அவனைக் கொல்லாமல் அவன் மேல் இரக்கம் கொண்டான். அவனைத் தன் விருந்தினனாக ஏற்றதுடன். “நம்பிக்கு இளையள் ஓர் நங்கையைக் கொடுத்து வெங்கள்ளும் ஊனும் வேண்டுவ கொடுமின்” என்று தன் கூட்டத்தார்க்குக் கூறினான்.

கடற்கரையில் மயங்கிக் கிடந்த சாதுவனைக் கண்ட நாகர்கள் நினைத்திருந்தால் அப்போதே அவனைக் கொன்றிருக்கலாம், தின்றும் இருக்கலாம். அவ்வாறு செய்யாமல் அவர்கள் அவனைத் தம் கூட்டத்தார் இருக்கும் இடத்துக் கொண்டு சென்றனர். கூட்டத்தாரிடம் அவனைச் சேர்த்தபின், அவனைக் கொன்று அனைவருடனும் பங்கிட்டு உண்ண நினைத்தனர். ஏனெனில் அவர்கள் ஆதிபொதுவுடைமைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கிடைத்த உணவைத் தமக்குள் வேறுபாடின்றிச் சமமாகப் பங்கிட்டு உண்பதே அச்சமூகத்தின் இயல்பு. எனவே தான் அவர்கள் தமக்கு உணவாகக் கிடைத்த சாதுவனைக் கண்டவுடன் கொல்லாமல் தம் கூட்டத்தாரிடம் கொண்டு போய்ச் சேர்த்தனர்.

நாகர் தலைவன் சாதுவனிடம் “பண்டும் பண்டும் கலங்கவிழ் மாக்களை உண்டோம்” என்று கூறியது, அவர்கள் நர மாமிசம் உண்ணும் வழக்கமுடையவர்கள் என்பதைப் புலப்படுத்துகிறது. காட்டுமிராண்டி நிலையில் வாழ்ந்த மனிதன் நரமாமிசம் உண்டது பற்றி எங்கல்ஸ் கூறுவதாவது. ‘வேட்டைத்தொழில் ஒன்றை மட்டுமே கொண்டு உயிர்வாழ்கின்ற மக்கள் சமூகங்கள் என்று புத்தகங்களில் குறிக்கப்படுகின்றனவே அவை என்றைக்குமே இருந்ததில்லை. வேட்டையில் பலன்கள் கிடைக்கும் என்பது மிகவும் நிச்சயம் அற்றது. எனவே அது சாத்தியமில்லை. உணவுப் பொருள்களுக்குரிய மூலாதரங்கள் தொடர்ந்து நிச்சயமற்று இருந்ததன் விளைவாக இந்தக் கட்டத்தில் மனிதனைத் தின்னும் பழக்கம் உண்டாகி, அது ரொம்ப காலத்துக்கு நீடித்தது” ( நூல்: குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்) நாகர்களைப் பற்றிச் சாத்தனார் கூறும் செய்தியானது,

அவர்கள் வாழ்ந்த ஆதி பொதுவுடைமைச் சமூகம் பற்றிய உண்மைகளை நமக்கு உணர்த்துகிறது. அவை:1. நரமாமிசம் உண்டு காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த மக்களிடையே ஆதி பொதுவுடைமைச் சமூகம் நிலவியது. அவர்கள் கிடைத்த உணவைத் தமக்குள் சமமாகப் பங்கிட்டு உண்டனர். 2. அவர்கள் தீயின் உபயோகத்தை அறிந்திருந்தார்கள். 3. அம்மக்கள் மண்பாண்டம் செய்யவும் அறிந்திருந்தார்கள். 4. உணவை வேகவைத்து உண்ணவும் மதுவைக் காய்ச்சி அருந்தவும் தெரிந்திருந்தார்கள்.

கல்லைக் கருவியாகப் பயன்படுத்தி மிருகங்களை வேட்டையாடிக் கொன்று ஊனைப் பச்சையாகத் தின்று பசியாறிய மனிதன், கற்கருவிகளைத் தொடர்ந்து, செய்யத் தொடங்கிய தொழில் மண்பாண்டத் தொழிலேயாகும் என்பது ஆய்வாளர் கருத்தாகும். இத்தொழிலில் இரும்பின் பயன்பாடு மிகக் குறைவேயாகும். அது இன்றியும் இவற்றைச் செய்திட முடியும். மனிதன் தற்காப்புக்காகவும் உணவுத் தேவைக்காகவும் விலங்குகளை வேட்டையாடுவதற்காகவும் செய்து பயன்படுத்திய முதற்கருவிகள் கற்கருவிகளே எனில், விலங்குகளின் ஊனைவேகவைப்பதற்குச் செய்து கொண்ட முதற்கலங்கள் மட்கலங்களேயாகும் எனலாம். “காட்டு மிராண்டி நிலையில் இருந்த மனிதன் அநாகரிக நிலைக்கு மாறிச் சென்ற காலகட்டத்தில் மண்பாண்டங்கள் செய்யும் கலையை அறிந்து கொண்டிருக்கலாம்” என்று எங்கல்ஸ் அவர்கள் குறிப்பிடுவது இங்கு நோக்கத்தக்கது.

இது குறித்து அவர் மேலும் அவர் கூறுவதாவது மண்பாண்டங்கள் புகுந்த காலத்தில் இருந்து அநாகரிக நிலையின் கடைக்கட்டம் தொடங்குகிறது. கூடைகளும் மரக்கலயங்களும் நெருப்பு படுவதால் எரிந்து போகாமல் இருப்பதற்கு அவற்றின் மீது களிமண்ணைப் பூசியதில் இருந்து இந்தக்கலை தோன்றியிருக்கிறது. இதைப் பல இடங்களிலும் கண்கூடாகக் காட்டலாம். அநேகமாக, எல்லா இடங்களிலும் இப்படித்தான் நடந்திருக்கும். அப்படிக் களிமண்ணைப் பூசப்போய் உள்ளே கலயம் இல்லாமலே உருவமைந்த களிமண்ணே பாண்டமாகப் பயன்பட முடியும் என்பது சீக்கிரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது” (நூல்; : குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்)

காட்டுமிராண்டி நிலையில் நரமாமிசம் உண்ணும் பழக்கம் உடையவனாய் இருந்த மனிதன் படிப்படியாக வளர்ந்து முன்னேறி அநாகரிக நிலையை எட்டினான். அநாகரிக நிலையின் இடைக்கட்டம் வரையிலும் நரமாமிசம் உண்ணும் பழக்கம் மனிதனிடம் நீடித்து இருந்தது. எங்கல்ஸின் கூற்றுப்படி, காட்டுமிராண்டி நிலையில் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த மனிதன், மேய்ச்சல் சமூகமாக அநாகரிக நிலையை அடைந்த போதுதான் நரமாமிசம் உண்ணும் பழக்கத்தைக் கைவிட்டான். காலப் போக்கில் உற்பத்தியிலும் உற்பத்திக் கருவிகளிலும் வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட்டது. காட்டு மிராண்டி நிலையில் இருந்த ஆதி பொதுவுடைமைச் சமூகம், படிப்படியாக வளர்ந்து அநாகரிக நிலையை அடைந்தது. நரமாமிசம் உண்ணும் பழக்கமும் மறைந்தது. அந்நிலையில் மனிதன் உணவுக்காகத் தொடர்ந்து விலங்குகளை வேட்டையாடி வந்தான், அத்துடன் பழங்கள் முதலியவற்றையும் உண்டு உயிர் வாழ்ந்தான்.

‘கலையுணக் கிழித்த முழவுமருள் பெரும்பழம்
சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசை வாகும்” புறநானூறு. 236
(முசுக்கலை (ஆண்குரங்கு) கிழித்துண்டலாற்பீறிய முழவுபோலும் பெரிய பலாப்பழம் வில்லையுடைய குறவர்க்கு அதன் பெருமையால் சில நாட்களுக்கு இட்டு வைத்துண்ணும் உணவாம்) என்று சங்க இலக்கியங்கள் இது குறித்துக் கூறுகின்றன.

மனிதன் தொடர்ந்து விலங்குகளை வேட்டையாடியதாலும் தொற்றுநோய் முதலிய காரணங்களாலும் விலங்குகளின் எண்ணிக்கை குறைந்திருக்கக்கூடும். மேலும் வறட்சி மற்றும் மழையின்மை முதலிய காரணங்களால் தாவர உணவுகளான பழங்கள் முதலியவை கிடைப்பதும் அரிதாகியிருக்கலாம் நரமாமிசம் உண்ணும் வழக்கத்தை கைவிட்ட நிலையில் மனிதன் உணவுக்குரிய தாவரங்களையும் பயிர்களையும் சாகுபடி செய்யவும் தானியங்களைச் சேமித்து வைக்கவும் முயன்றான்.

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com