Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

எனது சர்வாதிகாரம் எதற்குப் பயன்படுகிறது?
தந்தை பெரியார்


நான் ஏறக்குறைய சுமார் 50 ஆண்டு காலமாகவே பார்ப்பனரல்லாத "கீழ்மக்கள்" பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்குக் கேடாகப் பயன்படுத்தப்படும் எல்லா சாதன வாய்ப்புகளையும் ஒழிக்க வேண்டுமென்று பாடுபட்டு வருகிறேன். என்னுடைய பிரதான ஒரே தொண்டு இது தான். இனியும் என் வாழ்நாள் வரையிலும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற தொண்டும் இதுதான். பார்ப்பனரால் ஏற்பட்டு வருகிற கொடுமைகள், அநீதிகள் குறிப்பிடத் தகுந்த அளவுக்காவது குறைந்திருக்கிற அளவுக்குச் செய்திருந்த போதிலும் அவை நிலைத்திருக்குமா என்று அய்யப்படுகிறேன்.

இவ்வளவு எடுத்துக் காட்டுவதற்கும் வெட்கப்படுகிறேன். தறுதலைகளும், பொறாமைக்காரர்களும், சொந்த எதிரிகளும், ஒரு பொது மனிதன் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமோ, அதை விட்டு குற்றம் குறைகூற வழி காணத் துடிக்கிறார்கள். இருந்தாலும் நான் இதை இவ்வளவு எடுத்துக்காட்டுகிறேன் என்றால், துரோகம் செய்து அயோக்கியனாய் வாழ வேண்டிய அவசியம் எனக்கு எந்தக் கட்டத்திலும் வந்ததில்லை என்பதை எடுத்துக் காட்டவே ஆகும். எல்லாத் துறைகளிலும் குறையாத அனுபவமும், திறமையும் உண்டு என்பதைக் கூறவுமேயாகும். எனது கருத்து மாறுதல்கள் எல்லாம் எனது கண்ணியமான அனுபவம் ஆராய்ச்சிக் கொண்டே இருக்குமே, தவிர பணம் சேர்க்கவோ, பதவி பெறவோ, பெரிய ஆள் ஆகவோ, இழிவை மறைத்துக் கொள்ளவோ, கடுகளவு கூடக் காரணம் கொண்டதாய் இருக்காது. இப்படிப்பட்ட என்னை இந்நாட்டு விடுதலைக்குக் குறுக்கேயிருந்தவன், துரோகம் செய்தவன் என்று சொல்லும் போது எவ்வளவு மன உரம் இருந்தாலும் நிதானம் தவறவும் தூண்டுவதாகிறது. என் அபிப்பிராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் என் அபிப்பிராயத்தை வெளியிட எனக்கு உரிமை உண்டு.

என்னைப் பொறுத்த வரையில் என்னைப் பின்பற்றி நடந்து வருபவர்கள் புத்திசாலிகளாய் இருக்க வேண்டுமென்ற கவலை எனக்குக் கிடையாது. தங்கள் அறிவை, ஆற்றலை மறந்து என் இலட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்கக் கூடிய ஆட்கள் தான் எனக்குத் தேவையே ஒழிய, அவர்கள் புத்திசாலிகளா? முட்டாள்களா? பைத்தியக்காரர்களா? கெட்டிக்காரர்களா?என்பது பற்றி எனக்குக் கவலையில்லை.என் நண்பர் பா.வே. மாணிக்க நாயக்கர் ஈரோட்டில் எக்சிகியூடிவ் எஞ்சினியராக இருந்த போது தனக்கு இரு கொல்லர்கள் வேண்டுமென்றுக் கேட்கையில், அவர் சொன்னார். "கெட்டிக்காரர்களாயிருந்தால் இருவருக்குள்ளும் கெட்டிக்காரத்தனத்தனப் போட்டியால் வேலை கெட்டு விடும். அவர்களே எனக்கு யோசனை சொல்ல முந்தி என் திட்டம் ஆட்டங் கொடுத்து வேலை நடவாது. ஆகவே, நான் சொல்வதைப் புரிந்து அதன்படி வேலை செய்யக்கூடிய சுத்தி, சம்மட்டி பிடித்துப் பழகிய படிமானமுள்ள முட்டாளாயிருந்தால் போதும்" என்றார்.

ஆகவே தான் நான் நீடாமங்கலம் மாநாட்டிலும் தெளிவாகக் கூறினேன். என்னைப் பின்பற்றுபவர்கள் தங்கள் சொந்த பகுத்தறிவைக் கூட கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டுமென்று கூறினேன். யாராவது ஒருவன் (தலைமை ஏற்று) நடத்தக் கூடியவனாக இருக்க முடியுமே தவிர எல்லோரும் தலைவர்களாக முடியாது. மற்றவர்கள் தலைவர் இட்ட கட்டளைப்படி நடக்க வேண்டியவர்கள் தான்.தோழர்களே! நான் இப்போது ஒருபடி மேலாகவே சொல்லுகிறேன். நீங்கள் இந்த இயக்கத்தில் உள்ளவரை உங்கள் சொந்த பகுத்தறிவை மட்டுமல்ல; உங்கள் மனசாட்சி என்பதைக் கூட நீங்கள் மூட்டைக் கட்டி வைத்து விட வேண்டியது தான். கழகத்தில் சேரும் முன்பு நீங்கள் உங்கள் பகுத்தறிவு கொண்டு கழகக் கோட்பாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்க்கலாம்! என்னுடன் வாதாடலாம். ஆர அமர இருந்து யோசித்துப் பார்க்கலாம். ஆனால் உங்கள் மனசாட்சியும், பகுத்தறிவும் இடங்கொடுத்து கழகத்தில் சேர்ந்துவிட்டீர்களோ அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனசாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்து விட்டுக் கழகக் கோட்பாடுகளை கண்மூடிப் பின்பற்ற வேண்டியது தான் முறை.

மனசாட்சியோ, சொந்த பகுத்தறிவோ, கழகக் கொள்கையை ஒப்புக் கொள்ள மறுக்குமானால் உடனே விலகிக் கொள்வது தான் முறையே ஒழிய, உள்ளிருந்துக் கொண்டே குதர்க்கம் பேசித் திரிவது என்பது விஷத்தனமே ஆகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். சிலருக்கு நான் ஏதோ சர்வாதிகாரம் நடத்த முற்படுகிறேன் என்று தோன்றலாம். இது ஓரளவுக்கு சர்வாதிகாரம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் தோழர்களே! நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். "இந்தச் சர்வாதிகாரம் எதற்குப் பயன்படுகிறதென்று?" என்னுடைய சர்வாதிகாரத்தைக் கழக இலட்சியத்தின் வெற்றிக்காக பொது நன்மைக்காகப் பயன்படுகிறதே ஒழிய, எந்தச் சிறு அளவுக்கும், எனது சொந்தப் பெருமைக்காகவோ, ஒரு கடுகளவாவது எனது சொந்த நன்மைக்காகவோ பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

(10-02-1963- அன்று பெரியார் தூத்துக்குடி மாநாட்டிலும் மற்றும் பல சமயங்களில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.- "விடுதலை"-10-02-1963)


- தகவல்:- தமிழ் ஓவியா ([email protected])

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com