Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

முதல்வர் கருணாநிதிக்கு பேரறிவாளனின் கடிதம்

ராஜீவ் காந்தி படுகொலையில் கைதுசெய்யப்பட்டு மரண தண்டனைக் கைதியாக வேலூர் தனிமைச் சிறையில் இருக்கும் பேரறிவாளன், சில கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழக முதல்வருக்கு ஒரு நீண்ட கடிதத்தை எழுதியிருக்கிறார். பேரறிவாளனின் மனநிலை மட்டுமின்றி, சிறை வாழ்க்கை பற்றிய சில கண்ணோட்டங்களும் நம்மை கவனிக்க வைக்கின்றன இதில்!

'முதல்வருக்கு வணக்கம்.

Perarivalan 'நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை' என்ற நிலையற்ற இவ்வுலகில் தன்னுடைய இருத்தலுக்காக, உண்மையின் உயிர்த்தலுக்காகப் போராடும் மனிதனின் விண்ணப்பம். மீண்டும் மீண்டும் என்னுடைய பின்னணி குறித்துக் கூறுவது, தங்களுக்கு சலிப்பூட்டுவன. என்றாலும், தேவையின் பொருட்டுக் கூறுகிறேன், பொருத்தருள்க. அய்யா, நான் பெரியாரின் கொள்கைவழிப் பெயரன். பகுத்தறிவு என் பாதை; அதுவே என்னுடைய இன்றைய நிலைக்கு முதல் காரணமும்கூட. அடுத்து... நான் மொழி, இனப்பற்றாளன். தொப்பூள் கொடி உறவாம் தமிழக மக்கள் படும் இன்னல் கண்டு, இதயம் நொந்தவன். உலகத் தமிழரைப் போல் என்னால் இயன்றதை அவர்களுக்கு இயல்பாகச் செய்தவன். என்னைக் கொலைக் களத்தில் நிறுத்த இந்த காரணங்கள் போதுமானதாக இருந்தது. அடிப்படையில் நான் ஒரு கொள்கையாளன்... கொலையாளன் அல்ல. இதனை என்னுடைய 'தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்' என்ற நூல் வடிவிலான வாதுரை தெளிவுபடுத்தும் என நம்புகிறேன்.

'தடா' சட்டம் என்ற கொடுங்கருவி குறித்துத் தாங்கள் மிக நன்றாகவே அறிவீர்கள். அந்த ஆட்தூக்கிச் சட்டம், குற்றமற்ற பலரையும் விலங்கினைப் பூட்டி சிறைக் கொட்டடியில் தள்ளிய வரலாற்றினை உணர்ந்தவர் தாங்கள்! அதற்கு சற்றும் குறைவில்லாமல் அதே அளவில் அச்சட்டத்தின் குரூரத்தால் பாதிக்கப்பட்டவன் நான். கைவிரித்து வந்த கயவர்கள், பொய்விரித்துப் புலன்கள் மறைத்து, எம்மைக் கொலையாளியாக்கிய உண்மை உணராதவர் அல்ல தாங்கள்!

மற்றபடி, பிற 'தடா'வினருக்கும் எனக்குமுள்ள பெருத்த வேறுபாடெல்லாம், அவர்கள் மீது நல்வாய்ப்பாக முன்னாள் தலைமை அமைச்சர் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்படவில்லை. மாறாக, அதனினும் சிறிய அளவிலான கொலைக் குற்றங்களில் தொடர்புபடுத்தப்பட்டார்கள். அடுத்து, எனக்குக் கொள்கைப் பின்னணி இருந்ததே தவிர அரசியல் பின்னணி, செல்வாக்கு எதுவும் இல்லை. இவையே நான் இழைத்த பெரும்பிழைகள்.

அய்யா... கட்சி நம்பிக்கை துளியும் அற்றுப்போன மனிதனாக மெள்ள மெள்ள சாவை நேசிக்கவும் பழகிவிட்ட, பழக கட்டாயப்படுத்தப்பட்ட மனிதனாக இம்முறையீட்டு மனுவினை எழுதுகிறேன். ஏனெனில் இனத்தின்பால், மொழியின்பால் பற்றுகொண்ட ஓர் இளைஞன், தன்னுடைய கடுமையான உழைப்பால், அர்ப்பணிப்பு உணர்வால் தமிழர் தம் தலைமையேற்ற வரலாற்றைப் பதிவு செய்துள்ள 'நெஞ்சுக்கு நீதி' அதற்கான விடை பகிர்கிறது. அதன் நாற்பத்தெட்டாம் அத்தியாயத்தில் தாங்கள் கூறியவற்றைத் தங்களுக்கு மீண்டும் நினைவூட்டுவதற்குப் பொருத்தருள்க.

'இருபது ஆண்டு சாதாரணமானதா? இளைஞனாக இருந்தால் வனப்பும் வசீகரமும் நிறைந்த வாலிபம் சிறைச்சாலையிலேயே முடிந்து விடுகிறது. நாற்பது வயதுக்கு மேற்பட்ட மனிதனாகத்தான் அவனை வெளியே பிரசவிக்கிறது சிறைச்சாலை. வாலிபத்தை கடந்த நிலையிலே உள்ளவன் ஆயுள் தண்டனை பெற்றால், வாழ்வின் சுகத்தை இனிமேல் அனுபவிக்க முடியாது என்ற பருவத்தில் சக்கை மனிதனாக அவனை சிறைச்சாலை வெளியே உமிழுகிறது. ஆயுள் தண்டனையைவிட மரண தண்டனை எவ்வளவோ மேல்தான்!'

ஆம், அய்யா..! பதினெட்டு ஆண்டு சிறைவாசம்... அதிலும் தனிமைச் சிறைச்சாலை. இதனினும் கொடியதாக எவ்வித பரோல் விடுப்பும் இல்லாத நீண்ட நெடிய சிறைவாசம்... இவையெல்லாம் சிறிய துன்பங்களே எனக்கூறும் அளவிற்கு சாவின் நிழலில்தான் வாழ்வே நகர்த்தவேண்டும். அய்யா, கற்பனை செய்ய முடிகிறதா தங்களால்? கற்பனை எல்லைகளுக்கு அப்பாற்பட்டது எம்முடைய துன்பம். அதன் பின்னரும் இம்மனுவினை நல்ல மனநிலையோடு என்னால் எழுத முடிகிறதென்றால், நீதியின்பால் எனக்குள்ள அசைக்க முடியாத நம்பிக்கையும், கொள்கை எனக்களித்த மன உறுதியுமே காரணங்கள்.

அய்யா, அன்றாடம் எத்தனையோ மனுக்கள் தங்கள் மேசையில் வந்து விழும். எதனையோ எதிர்பார்த்து ஏக்கத்தோடு, நம்பிக்கையோடு பல கோரிக்கைகளை முன்வைக்கும் அதுபோன்ற மற்றுமொரு மனுவல்ல இது.

உள்ளபடியே எவ்வித குற்றமும் புரியாமல், செய்யாத குற்றத்துக்காகப் பிழைபட்டுப் போன நீதியின் விளைவால் வாழ்வின் பதினெட்டு ஆண்டு கால வசந்தத்தை இழந்துவிட்ட மனிதனாக இம்மனுவினை எழுதுகிறேன்.

'யாருக்கும் தூக்கு தண்டனை வேண்டாம்' என்றீர்கள். மகிழ்ந்து போனேன். சதாம் தூக்கிலிடப்பட்டபோது 'ஒரு மனிதனின் இறுதி அத்தியாயங்களை கிழித்து விடாதீர்கள்' எனச் சொன்னீர்கள். பேருவகை கொண்டேன். 'மாற்றுக் கட்சியினராக இருந்தாலும் தூக்கு கூடாது' என்றீர்கள். வியந்திருக்கிறேன். அண்மையில், 'பாகிஸ்தான் சிறையில் வாடும் சரப்ஜித்சிங் தூக்கினைக் குறைக்க உலக நாடுகள் குரல் எழுப்பவேண்டும்' என வேண்டுகோள் விடுத்தீர்கள். தங்களுடைய உள்ளக்கிடக்கையை புரிந்து, பெருமை கொண்டேன்.

ஆனால் அய்யா... வேதனையோடு தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புவதெல்லாம்- பிறகேன் எம்முடைய தூக்கினை மாற்றத் தயங்குறீர்கள்? எம்முடைய வழக்கில், 'நால்வரையும் தூக்கிலிடுவதில் தனக்கோ தன்னுடைய புதல்வர்களுக்கோ விருப்பமில்லை' என திருமதி சோனியா அம்மையார் கூறிய பின்னரும் ஏன் என்னுடைய தூக்கினைக் குறைக்க முடியவில்லை? திருமதி நளினி அவர்களின் தூக்கினைக் குறைத்து ஆணையிட்டீர்கள், மகிழ்ச்சி. அவருக்குத் தூக்கினைக் குறைக்க இருந்த அதே நியாயமான காரணங்கள், இன்னும் சொல்லப்போனால் அதைவிடக் கூடுதலான நியாயங்கள் ஏனைய மூவருக்கும் உள்ளது என்பதைத் தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அய்யா, இனியும் நான் தூக்கினைக் குறைக்கும் வேண்டுதலோடு என்னுடைய முறையீட்டைத் தங்கள் முன் வைக்கத் தயாரில்லை. எனக்கு விடுதலை வேண்டும். ஒரு ஆயுள் சிறைவாசியைக் காட்டிலும் கூடுதலான துன்பத்தினைக் கண்டுவிட்டேன். எனவே எனக்கொரு முடிவு, என்னுடைய நிலைக்கோர் முற்றுப்புள்ளி விழவேண்டும்.

'காந்தியடிகள் நூற்றாண்டை ஒட்டி 12.11.68-க்கு முன்பு மரண தண்டனை பெற்றவர்கள் அனைவருக்கும் தண்டனை குறைக்கப்பட்டதன் விளைவால் 111 கைதிகள் தூக்கிலிருந்து தப்பினர்' என்ற வரலாற்று நிகழ்வைத் தாங்கள் நெஞ்சுக்கு நீதியில் பதிவு செய்துள்ளீர்கள். பேரறிஞர் அண்ணா நூற்றாண்டினையொட்டி மீண்டும் அவ்வரலாற்று நிகழ்வு புதுப்பிக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

ஏனெனில், கடந்த 18 ஆண்டுகளாக 'தம்முடைய வாழ்வே என்னை மீட்பதுதான்' என சலிக்காது போராடிவரும் என்னுடைய பெற்றோரின் முதுமை தரும் அச்சம் என் மனதைப் பிழிகிறது. அவர்களுக்கு ஒரு புதல்வனாக என்னுடைய கடமையை செய்யத் தவறியிருந்தாலும், குறைந்தளவு, என்னுடைய நிலையால் அவர்கள் இழந்திருக்கும் அமைதிக்குத் தீர்வுகாணவே ஆசை கொள்கிறேன்.

அய்யா, 18 ஆண்டுகளுக்கு முன்னர் எனக்குத் தூக்கு நிறைவேற்றப்பட்டிருக்குமானால், இன்று என்னுடைய பெற்றோர் தம்முடைய மற்ற பேரப்பிள்ளைகளோடு தன்னுடைய இனிமையைக் கண்டிருப்பர். குறைந்தளவு, தாங்கள் என்னுடைய கருணை மனுவினை தள்ளுபடி செய்த 25-04-2000 அன்று என்னைத் தூக்கிலிட்டிருந்தாலும் இன்று என்னைப் பற்றிய துன்பம் என்னுடைய பெற்றோரையும் உற்றார் உறவினர்களையும் ஆட்கொண்டிருக்காது. கெட்ட வாய்ப்பாக அவை நிகழவுமில்லை; என்னுடைய பெற்றோருக்கு அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படவுமில்லை. இரண்டுமற்ற இந்த நிலை ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

திருமதி பிரியங்கா, திருமதி நளினி ஆகியோர் சந்திப்பு அதற்கான வாய்ப்பைத் தந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் திரு.தமிழருவி மணியன் போன்றோரின் கருத்துக்களெல்லாம் எம்முடைய துன்பத்தை எதிரொலிப்பதாக உள்ளது. இந்நிலைக்குப் பின்னரும் எமக்கு விடிவு கிட்டவில்லையானால், விடுதலை பிறக்கவில்லையானால்... இனி எப்போதுமே அது நிகழப்போவதில்லை.

வாழ்வோ சாவோ, ஒளியோ இருளோ, இன்பமோ துன்பமோ... தற்போதே இறுதிசெய்யப்பட்டாக வேண்டும். பேரறிஞர் அண்ணா நூற்றாண்டில் பெரியாரின் பேரப்பிள்ளையொன்று நீதிபெற்றது என்ற வரலாறு எழுதப்படட்டும் அல்லது இனமொழி பற்றுக்காகக் குற்றமற்ற ஓர் இளைஞன் கொல்லப்பட்டான் என வரலாறு குறிக்கட்டும்.

வேதனை மிகுந்த இந்த நீண்ட நெடிய 18 ஆண்டு சிறைவாசம் முற்றுப் பெற துணை புரியுங்கள். ஓர் உண்மை மனிதனின் உயிர்ப் போராட்டத்துக்குக் கொள்கையாளனின் மனக்குமுறலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள், முடிவுரை எழுதுங்கள்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com