Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

பிரபாகரனின் இராசத்தந்திரம்
பெ.மணியரசன்


"துப்பாக்கியின் மீது அரசியல் ஆணை செலுத்த வேண்டுமே தவிர, அரசியல் மீது துப்பாக்கி ஆணை செலுத்தக்கூடாது" என்றார் மாசேதுங். பிரபாகரனின் அண்மைக்கால அரசியல் நகர்வுகளும் எதிர்த்தாக்குதல் சமரும் மாவோவின் புரட்சி உத்தியை நினைவுபடுத்துகின்றன. சுருக்கமாகச் சொன்னால், அரசியல் களத்தில் தாக்குதல் தந்திரத்தையும் படைநகர்வில் எதிர்த்தாக்குதல் தந்திரத்தையும் அவர் கடைபிடிக்கிறார். அரசியல் களத்தில் எதிரியை முன்னேறித் தாக்குகிறார். போர் களத்தில் எதிரியின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கிறார்.

Prabhakaran அண்மையில் நடந்த சார்க் மாநாட்டின் பாதுகாப்பு கருதி, தாமாக முன்வந்து பத்து நாள் போர் நிறுத்தத்தை விடுதலைப்புலிகள் அறிவித்தனர். ஆனால் சிங்களக் குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபட்ச இந்தப் போர் நிறுத்தத்தை ஏற்கவில்லை. சார்க் மாநாடு நடந்த போதே வன்னிப் பகுதிக்குள் விமானக்குண்டு வீச்சுகள் நடத்தினார்.

இந்தப் போர் நிறுத்தம் ஓர் அரசியல் தாக்கதலாகவே அமைந்தது. அதன்மூலம் சார்க் நாடுகளுக்கும் பன்னாட்டுச் சமூகத்திற்கும் பிரபாகரன் முகாமையான சில செய்திகளை விடுத்தார்.

1. விடுதலைப் புலிகள் ஆய்த வெறியர்கள் அல்லர். அரசியல் தீர்வையே அலாவி நிற்கின்றனர்.

2. சார்க் நாடுகளையம் பன்னாட்டு சமூகத்தையும் புலிகள் மதிக்கிறார்கள்: அவர்களுடன் நட்பு பாராட்டவே விரும்புகிறார்கள்.

2. தமிழீழம் அமைந்தால் தெற்காசிய ஒற்றுமைக்கும் அமைதிக்கும் முன்னுரிமை கொடுத்து, சார்க் அமைப்பில் அது இணைந்து கொள்ளும்.

இராஜபட்சவுக்கு இரண்டு குணங்கள் இருக்கின்றன. ஒன்று பயங்கரவாத முரட்டுத்தனம், மற்றொன்று கோமாளித்தனம். அண்மையில் பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளை வன்னிப்பகுதியிலிருந்து வெளியேற ஆணையிட்டது அவரது முரட்டுத்தனத்திற்கு எடுத்துக்காட்டு. ஐ.நா.மனித உரிமை அமைப்பு, பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் போன்றவை ராஜபட்சயின் இந்த நடவடிக்கையை மனித உரிமைக்கெதிரானது என்று கண்டித்தன.

அவரது கோமாளித்தனத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு வேண்டுமென்றால், பிரபாகரனைச் சிறைப்பிடித்துத் தில்லிக்கு அனுப்பி வைப்பேன் என்று சில நாட்களுக்கு முன் அவர் கூறியதைச் சுட்டலாம். இந்திய அரசு அவ்வாறான ஒரு கோரிக்கையை ஏற்கெனவே எழுப்பி வைத்துள்ளது. ஆனால் அதை அண்மைக் காலங்களில் வலியுறுத்தியதாகத் தெரியவில்லை. சிங்களத்திற்கு ஆய்தங்கள் வழங்கினாலும் விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தும்படிதான் அரசியல் அரங்கில் இந்தியா வலியுறுத்திவருகிறது. இவ்வாறான காலச்சூழலில் பிரபாகரனைப் பிடித்து ஒப்படைப்பது பற்றி பேசுவது பிதற்றலாக அன்றி வேறென்னவாக இருக்க முடியும்?

முரட்டுத்தனமும் கோமாளித்தனமும் இணைந்த கலவை மனிதராக ராஜபட்ச இருப்பதால், புலிகளுடன் செய்து கொண்ட அமைதி உடன்படிக்கையை ஒருதலைச் சார்பாக முறித்துக் கொண்டார். ஆனால், விடுதலைப் புலிகளோ பேச்சுவார்த்தை மேசையிலிருந்து தான் வெளிநடப்பு செய்தோம்; உடன்படிக்கையை இன்றுவரை நாங்கள் முறிக்கவில்லை. அந்த உடன்படிக்கைக்கு உயிர் கொடுக்கவே விரும்பகின்றோம் என்றனர். இந்த அரசியல் உத்தி, விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு என்ற சிங்கள அரசின் பன்னாட்டுப் பரப்பரையை முனைமழுங்கச் செய்துள்ளது. வட அமெரிக்கத் தலைவர்களில் ஒருவரான ஹிலாரி கிளிண்டன், புலிகள் பயங்கரவாத அமைப்பினர் அல்லர் என்று கூறியுள்ளதைக் கவனிக்க வேண்டும். அமெரிக்க வல்லரசு, புலிகள் அமைப்பைத் தடை செய்திருந்தாலும் புலிகளுடன் பேசும்படி ராஜபட்சயை வலியுறுத்துகிறது.

உடன்படிக்கையை ஒருதலைச் சார்பாக முறித்துக் கொண்டதுடன் புலிகளுடன் பேச முடியாது என்று ராஜபட்ச கூறுகிறார். அத்துடன் அவா நின்றாரா? இருதரப்பையும் இணைக்கப்படுத்தி, உடன்படிக்கைக்கு வழி செய்த நார்வேயையும் குற்றம் சாட்டி, அந்நாட்டுத் தலைவர்கள் வெளியேறும்படிச் செய்தார். இன்றைக்கு ஐரோப்பிய நாடுகளும் ஐ.நா.மன்றமும் பல நேரங்களில் இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் சம தட்டில் வைத்துப் பேசுகின்றன. இருதரப்பும் அமைதிப் பேச்சுக்குத் திரும்ப வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றன. ஓர் அரசையும் அதை எதிர்க்கும் விடுலை அமைப்பையும் சம தட்டில் வைத்து, பேச்சு நடத்த உலகநாடுகள் வலியுறுத்தும் போக்கு அவ்வளவு எளிதாக வந்துவிட்டதா?

இந்த நிலை வர, பன்னாட்டு ஏற்பிசைவு வர விடுதலைப்புலிகள் தலைமை என்ன பாடுபட்டிருக்கும்? எவ்வளவு மூளை உழைப்பும் பொறுமையும் விட்டுக்கொடுப்பும் இழப்பும், தொலைநோக்கும் தேவைப்பட்டிருக்கும். இவ்வாறான அரசியல் உத்தி எதுவும் ராஜபட்சவுக்குக் கிடையாது. போர் நடவடிக்கைகளில் ஊதாரித் தனமாக செலவிட்டு நாட்டைத் திவாலாகிவட்டார். சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகளிடமிருந்து மேலும் மேலும் ஆய்தங்கள் வாங்கிப் போர் நடத்தி, சிங்கள மக்களுக்கும் வறுமை மற்றும் வேலை இன்மையைப் பரிசாகத் தந்துள்ளார். ஈழத்தமிழர்களின் உயிர்களைப் பறிக்கிறார்.

மூன்று லட்சம் ஈழத்தமிழர்களைக் காட்டு மரங்களின் கீழும் புதர்களின் மறைவிலும்வசிக்கும்படி விரட்டியுள்ளார். ராஜபட்ச வகுத்த அரசியல் உத்தி, இந்தியவை விடுதலைப்புலிகளுக்கு எதிராக நேரடிப் போரில் இறக்கி விடுவதுதான். அதுபலிக்கவில்லை. ஆய்தங்களும் பயிற்சியும் கொடுப்பதடன் இந்தியா நிற்கிறது. இந்தியா, விடுதலைப் புலிகள் தோற்பதையே விரும்புகிறது. இருந்தும் நேரடிப் போரில் ஏன் இறங்கவில்லை?

ஒன்று தமிழ்நாட்டுத் தமிழர்களின் எதிர்ப்பு; தமிழ்நாட்டு கட்சிகள் சிலவற்றின் எதிர்ப்பு. இன்னொன்று, விடுதலைப் புலிகள் இந்தியா குறித்துக் கையாண்டு வரும் அரசியல் உத்தி. பன்னாட்டுச் சட்டங்களுக்கு முரணாக இந்தியா, பன்னாட்டுக் கடல்பரப்பில் விடுதலைப் புலிகளின் படகுகளையும் கப்பல்களையும் வழி மறித்தாலும், பல வகையான ஆத்திர மூட்டல்களை விடுதலைப்புலிகளுக்கு எதிராகச் செய்தாலும், படைக்கருவிகளையும் படையாட்கள் சிலரையும் சிங்களப்படைக்கு ஆதரவாக அனுப்பி வைத்தாலும், இந்தியாவை ஆத்திர மூட்டும் எந்த நடவடிக்கையிலும் விடுதலைப் புலிகள் இறங்கவில்லை.

இந்தியாவை நோக்கி நீட்டிய நேசக்கரத்தை பிரபாகரன் இன்னும் மடக்கவில்லை. பொறுமையும், சகிப்புத்தன்மையும் மிக்க இந்த அணுகுமுறை சிறந்த அரசியல் உத்தியாக உள்ளது. இந்தியாவிற்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. விடுதலைப்புலிகள் மீது விரல் நீட்டிக் குற்றம் சுமத்த முடியாத நெருக்கடி இந்திய உளவுத்துறைக்கு உள்ளது. இவ்வளவு கனபரிமானம் கொண்ட விடுதலைப் புலிகளின் இராசத்தந்திரத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ராஜபட்ச திணறுகிறார். அவருக்கே உரிய கோமாளித்தனத்துடன் செப்டம்பர் 25-இல் சிறிது நேரம் தமிழில் பேசி, தமிழர்களைச் சமமாக நடத்துவது போல் நாடகம் நடத்தியிருக்கிறார். இது ஒரு கோமாளித்தனம் தவிர, இராசத்தந்திரம் அல்ல.

விடுதலைப்புலிகள் ஆய்தங்களை ஒப்படைத்துச் சரணடைய வேண்டும் என்று வலியுறுத்தி ஐ.நா.வில் அவர் தமிழி்ல் பேசினால் என்ன? சிங்களத்தில் பேசினால் என்ன? விடுதலைப் புலிகளுக்கு ஏற்பிசைவு வழங்குகிறேன், சமநிலையில் பிரபாகரனுடன் பேசத் தயார் என்று அவர் சிங்களத்தில் பேசியிருந்தால் தமிழர் நெஞ்சமெல்லாம் குளிர்ந்திருக்கும். உலக அரங்கிலும் அவர்க்கொரு மதிப்பு ஏற்பட்டிருக்கும். சின்னத்தனம் தவிர வேறு சிந்தியாத ராஜபட்சயால் அவ்வாறு அரசியல் காய் நகர்த்த முடியாது.

பிரபாகரன் ஏன் முழுப்போர் நடத்தாமல், எதிர்த்தாக்குதல் மட்டும் நடத்துகிறார்? அவரது இந்த அணுகுமுறையில் பலவகையான, அரசியல் மற்றும் படைத்துறை உத்திகள் பொதிந்து கிடக்கின்றன. முதலில் பன்னாட்டு அரசியல் குறித்த ஒரு தொலை நோக்கு இதில் அடங்கியுள்ளது. பன்னாட்டு அரசியலில் நிலையற்ற தன்மை அதிகரித்துப் பரவி வருகிறது. இது இன்னும் அதிகரிப்பது விடுதலை இயக்கங்களுக்கு வாய்ப்பானது. அமெரிக்க வல்லரசின் ஒரு கால் ஈராக்கில் மாட்டியிருக்கும்போதே இன்னொரு காலை அது ஈரானில் விடப்பார்க்கிறது. ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்புப் போரைத் தீவிரப்படுத்தியுள்ளது. அடுத்துள்ள பாகிஸ்தான் இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்கி, அதன் எல்லைக்குள் புகுந்து, அல்கொய்தாவினரையும் தலிபான்களையும் எதிர்த்துக் குண்டு வீசுகிறது; சுடுகிறது. தேடுதல் வேட்டை நடத்துகிறது.

இந்த அத்துமீறல்கள் அமெரிக்க பாகிஸ்தான் உறவில் விரிசல் உண்டாக்கியுள்ளது. இந்த விரிசலை இந்தியா பயன்படுத்த விரும்புகிறது. பாகிஸ்தான் மற்றும் காசுமீர் சிக்கல்களில் இந்தியாவுக்கு உதவிட வேண்டுமெனில், ஆப்கான் ஆக்கிரமிப்புப் போரிலும், பின்னர் நடத்தக் கருதியுள்ள ஈரான் போரிலும் அமெரிக்காவுக்கு இந்தியா உதவிட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படும்.

ஜார்ஜியாவில் அமெரிக்கப் படைத்தளம் இருப்பதை ரசியா எதிர்க்கிறது. அமெரிக்க வல்லரசுடன் காகசஸ் மலைப்பகுதியில் போர் மூண்டாலும் சங்திக்கத் தயார் என்று ரசியக் குடியரசுத் தலைவர் மெத்வதேவ் அறைகூவல் விட்டுள்ளார். ஆக, ஈராக், ஈரான், ஜார்ஜியா, ஆப்கான், பாகிஸ்தான் வரை அமெரிக்க வல்லரசு 2009இல் போர் நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வாய்ப்புண்டு. குடியரசுக் கட்சி வேட்பாளர் மெக்கைன் வெற்றி பெற்றாலும், அல்லது சனநாயகக் கட்சி வேட்பாளர் ஒபாமா வெற்றி பெற்றாலும் நெருக்கடி இவ்வாறுதான் இருக்கும். ஆப்கான் பொரைத் தீவிரப் படுத்துவதிலும் ஈரான் மீது போர் தொடுப்பதிலும் ஒபாமா ஆர்வமாக உள்ளார்.

அமெரிக்க - இந்திய அணு ஆற்றல் ஒப்பந்தம், அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்களுக்க இந்தியா துணை புரிய வேண்டும் என்ற விதிகளைக் கொண்டுள்ளது. எனவே ஈராக்கிலிருந்து - பாகிஸ்தான் வரை பரவி நடைபெறவுள்ள ஆக்கிரமிப்புப் போரில் அமெரிக்காவும், அதற்குத் துணையாக இந்தியாவும் ஈடுபட்டிருக்கும் பொது இலங்கை அரசுக்குப் படைவகை ஆதரவு தருவது கடினம். மெலும் இக்காலத்தில் காசுமீர் விடுதலைப் போர் தீவிரமடையும். வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் விடுதலைப் போர்களும தீவிரப்படும் சூழல்கள் உருவாகியுள்ளன.

எனவே ஈழ விடுதலைப் போருக்கு எதிரான இந்திய நடவடிக்கைகளில் ஒருவகை பலவீனம் ஏற்படலாம். மேற்கண்ட வாய்ப்பு பற்றி ஊகிக்கும் போதே, ஒரு வேளை இதற்கு மாறாக நிகழ்வுகள் நடக்கவும் வாய்ப்புண்டு. தெந்காசிய மண்டலத்தில் இந்திய அரசு ஆதிக்கம் செய்துகொள்ள அமெரிக்க வல்லரசு துணைபுரியவும் கூடும். அவ்வாறான சூழலில் அதை எதிர்கொள்ளும் ஆற்றல் புலிகளுக்க உண்டு.

ஆக்கிரமிப்புப் போர்களுக்கப்பால் உலகமயத்தால் அமெரிக்க வல்லரசின் பொருளியல் வேகமாக சரிந்து வருவதைக் கவனிக்க வேண்டும். உள்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளியல் சரிவைச் சரி செய்ய அமெரிக்கா படாதபாடு படவேண்டி வரும். தொற்று நோயாளித் தோளில் கைப்போட்டு அந்நோய் தொற்ற வாய்ப்பளித்தவரைப் போல், அமெரிக்கப் பொருளியலுடன் இணைக்கப்பட்டுள்ள இந்தியப் பொருளியலும் சரிவைச் சந்தித்து வருகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது. மிகவும் தொளதொளப்பான ஏறுக்கு மாறான கூட்டணி ஆட்சி தான் ஆட்சி நடத்தும்.

இவ்வாறு அரசியல் நிலையற்ற தன்மை பன்னாட்டரசில் ஏற்படும்போது, இலங்கைப் பொருளியலும் அரசியலும் எப்படி இருக்கும்! ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்போது இலவம் பஞ்சு என்னவாகும்! இலங்கைப் பொருளியல் ஏற்கெனவே திவாலாகிவிட்டது. அது மேலும் சீரழியும். அரசுக்கெதிரான சிங்கள மக்கள் கடுமையாகப் போராடும் அளவிற்கு நெருக்கடி முற்றும் வாய்ப்புண்டு. இது ஒருபுறம் இருக்க, ராஜபட்சவின் குடும்ப ஆட்சி, ஆளும் இலங்கை சுதந்திரக்கட்சிக்குள்ளேயே புழுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மகிந்த ராஜபட்சவின் தம்பி கோத்த பாய ராஜபட்ச இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர்; அவரின் இன்னொரு தம்பி, பசில் ராஜபட்ச அமைச்சர் பொறுப்பில்!

இந்தப் புழுக்கத்தை எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பயன்படுத்திக் கொள்ளும். சிங்கள அரசியல் மேலும் உறுதியற்ற நிலை தோன்றும். முழுப்போரில் இறங்காமல் தக்க நேரத்திற்காகப் பிரபாகரன் காத்திருப்பதற்கான முகாமையான காரணங்களில் இவையும் அடங்கும். அதே வேளை எதிர்த்தாக்குதல் கடுமையாக நடக்கிறது.

2007 ஏப்ரல் 6 ஆம் பக்கல்(தேதி) சிங்கள அரசின் பலாலி கூட்டுப்படைத்தளத்தின் மீது புலிகள் நடத்திய விமானத் தாக்குதல் ஒரு பதிலடிச் சமர்தான். அடுத்து அக்டோபர் மாதம் அனுராதபுரம் வான்படைத்தளத்தின் மீது புலிகளின் விமானப் படையும் தரைப்படையின் சிறப்பு அணிகளும் பெருந்தாக்குதல் நடத்தின. அது மிகப்பெரிய இழப்புகளை சிங்களப் படைக்கு உண்டாக்கியது. கிட்டத்தட்ட 22 போர் விமானங்கள் தகர்ந்தன. பெருமளவு ஆய்தங்களைப் புலிகள் கைப்பற்றி மீண்டனர். புலிகளின் விமானங்கள் தாக்குதலை நடத்தி விட்டு பாதுகாப்பாகத் திரும்பின.

2008 செப்டம்பர் 1 மற்றும் 2ஆம் பககல்களில், நாச்சிகுடா, வன்னேரிக்குளம் மற்றும் அக்கராயன் குளம் பகுதிகளில் சிஙகளப் படையினரின் முன்னேற்றத்தை மறித்துப் புலிகள் தாக்கியதில் 75 சிங்களப் படையாட்கள் கொல்லப்பட்டனர். 20 உடல்களை கிளிநொச்சியில் வைத்துப் பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கத்திடம் புலிகள் ஒப்படைத்தனர்.
நாச்சிகுடா, வன்னேரிக்குளம் சமரில் சிங்கள அரசு சீனத்திடமிருந்து வாங்கிய இலேசுரக டாங்கு எதிர்ப்பு ஏவுகணையைக் களமிறக்கி இருந்தது. சிங்களப் படையினரால் முதல் தடவையாகப் பயன்படுத்தப்பட்ட இந்த சீன ஏவுகணை அவர்கள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. புலிகளின் எதிர்த்தாக்கதலில் அவர்கள் பின் வாங்கும்படி ஆனது. அந்த ஏவுகணை பயன்படுத்தப்பட்ட பகுதியில் மட்டும் 20 படையாட்கள் கொல்லப்பபட்டனர். பத்து சடலங்களைப் புலிகள் கைப்பற்றினர்.

இந்தத் தோல்வி சிங்களப் படையின் மனஉறுதியைத் தகர்த்திருக்கும். ஏனெனில் நவீன ஏவுகணையின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்து அவர்கள் களமிறங்கினர். அந்நம்பிக்கை தகர்ந்தது. வன்னிமண்டலத்தில் மன்னார்-பூநகரி நெடுஞ்சாலை ஏ32-ஐக் கைப்பற்றும் நோக்குடன் சிங்களப்படை போர் புரிகிறது. அத்திசையிலான முன்நகர்வைத் தடுத்து வருகிறார்கள் புலிகள். பெருமெடுப்பில், ஆள் இழப்புகளையம் ஆய்த இழப்புகளையம் சிங்களப்படை சந்திக்கிறது. ஏ32 நெடுஞ்சாலையை கைப்பற்றியபின் ஏ9, நெடுஞ்சாலையை முழு அளவில் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது தான் சிங்களப் படைநகர்வின் திட்டம்.

கடந்த செப்டம்பர் 9 -ஆம் பக்கல் அதிகாலை, சிங்கள அரசின் வவுனியா படைத்தலைமையகத்தின் மீது புலிகளின் வான்படை, தரைப்படையின் சிறப்பு அணிகள், கர்னல் கிட்டு பீரங்கிப் படை அணிகள், துணைத்தளபதி மதியழகி தலைமையிலான கரும்புலிப்படை ஆகிய இவை அனைத்தும் ஒருங்கிணைந்து தாக்கின. இது கூட பதிலடித் தாக்குதல் தான். அப்பகுதியை விடுவிக்கும் போர் அல்ல.

சிங்கள அரசின் வவுனியா ஜோசப் படைத்தளம், வன்னிப்படை நடவடிக்கையின் ஒருங்கிணைப்பு நடுவமாகவும், வான்புலிகளைக் கண்காணிக்கும் ராடார் மையமாகவும் செயல்படுகிறது. இந்திய அரசு கொடுத்த ராடார்கள் இந்திரா ஐ.ஐ. இங்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தியா வழங்கியுள்ள எல் 70 விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் இங்கு நிறுவப்பட்டிருந்தன. இவை எல்லாவற்றையும் தாக்கித் தகர்த்தனர் புலிகள். கரும்புலிகள் பத்து பேர் வீரச்சாவெய்தினர். புலிகளின் 11 சடலங்களைக் கைப்பற்றியதாக சிங்களப்படை கூறியது. புலிகளின் இரு போர் விமானங்கள் பாதுகாப்பாக நிலைக்குத் திரும்பின.

அன்று அதிகாலை 3.05 மணியளவில் புலிகளின் இருவிமானங்களும் 25 கிலோ எடையுள்ள நான்கு குண்டுகளை வீசின. ஒரு குண்டு இந்திரா ராடாரை முற்றிலும் சேதப்படுத்தியது புலிகளின் விமானமொன்றைச் சுட்டு வீழ்த்தியதாக சிங்களப்படை கூறிக்கொண்டது. ஆனால் அது உண்மைச் செய்தி அல்ல என்று பின்னர் தெரியவந்தது.

சிங்களப் படைக்குக் கமுக்கமாக படைக்கருவிகள் வழங்கி வரும் இந்திய அரசு 40 மி.மீ. எல் 70 தன்னியிக்க எதிர்ப்புத் துப்பாக்கிகள், நிசாந் வகை ஆளில்லாத உளவு விமானங்கள், ஒளிக்கதிர்(லேசர்) மூலம் வழி நடத்தப்படும் குறிதவறாத குண்டு வழி நடத்திகள்(Laser Designators for PGMs) போன்ற ஆய்தங்களை வழங்கியுள்ளது. அவை மட்டுமின்றி படைத்துறை ஆட்களையும் இந்தியா அனுப்பியுள்ள கமுக்கம், புலிகளின் வவுனியாத் தளத்தாக்குதலில் அம்பலமானது. அங்கு பணியிலிருந்த இந்தியப் பாதுகாப்புத் துறையைச் சார்ந்த ராடார் பொறியாளர்களான ஏ.கே.தாக்குர், சிந்தாமணி ரவுத் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

புலிகளின் இவ்வகை எதிர்த்தாக்குதல்கள் எதைக் காட்டுகின்றன? அவர்களின் போர்த்திறன் கூடியுள்ளதே தவிர குறையவில்லை என்பதையே காட்டுகின்றன. சந்திரிகா குமாரதுங்கா 'வெற்றி உறுதி' (ஜெயசிக்குறு) என்ற பெயரில் வன்னிக்குள் புகுந்து போர் நடத்தியபோதுதான் அவரது தோல்வி உறுதியானது. வன்னிப்பகுதி விடுதலைப்புலிகளின் இதயம் போன்றது. போர் நடத்த புலிகளுக்கு வாய்ப்பான பகுதி. அதிலும் வன்னியின் மேற்குப் பகுதியைவிடக் கிழக்குப் பகுதி அடர்ந்த காடுகளைக் கொண்டது. மணலாற்றுக் காடு, நெடுங்கேணிக்காடு, இரணைமடுக்காடு என கதிரொளி நுழைய முடியாக்காடுகள் இருக்கின்றன. இங்கதான் கிளிநொச்சி உள்ளது.

Prabhakaran இப்பொழுது பிரபாகரன் இருவகையான சமர் உத்திகளைக் கடைபிடிக்கிறார் என நாம் ஊகிக்கலாம். ஒன்று போரை நீடித்து, சிங்களப்படையினரைக் களைப்படையச் செய்வது, இரண்டு, வன்னிக்காட்டுக்குள் எதிரியை இழுத்து, சுற்றி வளைத்துத் தாக்குவது. எனவே, இப்பொழுது முழுப்படைவலிவையும், போர்க் கருவிகளையும் சமரில் இறக்கிவிட அவர் விரும்பவில்லை.

கடற்புலிகள் இன்னும் சமரில் இறக்கப்படவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். பன்னாட்டு அரசியலில் விரைவாகப் பரவிவரும் நிலையற்ற தன்மை, 1929இல் ஏற்பட்டது போன்ற முதலாளிய பொருளியல் மந்தநிலை, அமெரிக்க வல்லரசின் ஈராக்-ஈரான்-காகஸ்-ஆப்கன்-பாகிஸ்தான் வரையிலான போர் நடவடிக்கைகள் - இதில் இந்தியாவும் துணைச் சக்தி ஆதல் - இந்தியாவில் காசுமீர் மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் தீவிரமடையும் விடுதலைப் போர்கள், இலங்கையின் பொருளியல் சீரழிவு, இராஜபட்சயின் குடும்ப அரசியல் - பதிவ ஆசை இவை எல்லாம் வருங்காலத்தில் புலிகளுக்கு அரசியல் கதவை அகலமாகத் திறந்து விடும்.

நீண்டு கொண்டே போகும் போர் சிங்களப் படைகளைக் களைப்படையச் செய்யும். அவர்களுடைய படைத் தொகையில் 40 ஆயிரம் பேர் யாழ்ப்பாணத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இவ்வளவு எண்ணிக்கையுள்ள ஒரு பெரும் படை ஆற்றல், செயல்படாமல் அங்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளது. பிரபாகரன் இப்பொழுது யாழ்ப்பாணத்தை நோக்கப்போவதில்லை.அதற்குரிய காலம் வரும்.

கிழக்கு மாநிலத்தைக் கைப்பற்றி விட்டதாக இராசபட்ச தம்பட்டம் அடிக்கிறார். ஆனால் அம்மாநிலம் முழுமையாக அவர் கையில் இல்லை. அதன் பல்வேறு பகுதிகள் புலிகள் வசம் இருக்கின்றன. விடுதலைப்புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல் பிரிவு 10.08.2008 அன்று விடுத்துள்ள அறிக்கை இணையதளத்தில் வந்துள்ளது.

"அரச பயங்கரவாதத்தின் உச்சமாகத் திகழும் மகிந்த ராஜபட்ச அரசாங்கம் கிழக்கு மாகாணத்தை மீட்டுவிட்டதாக வெற்றிவிழா நடத்திய நாள்தொட்டு இன்றுவரை சிறிலங்கா படையினருக்கு எதிராகத் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் அதிகாரிகள் உட்பட 92 படையாட்கள் கொல்லப்பட்டார்கள். 208 பேர் படுகாயமடைந்தார்கள். யால படைமுகாம் தீயிட்டு எரிக்கப்பட்டது. உலங்கு வானூர்தி உட்பட மூன்று பவல் கவச வாகனங்கள், இரண்டு ஜீப்புகள், எட்டுக்கும் மேற்பட்ட இதர வாகனங்கள் அழிக்கப்பட்டன."

அம்பாறை மாவட்டம், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்புக்கும் தெற்கே சிங்களப் பகுதியை ஒட்டி உள்ளது. அங்கேயே சிங்களப்படைக்கு இவ்வளவு சேதங்களைப் புலிகள் ஏற்படுத்துகிறார்கள் எனில் மற்ற பகுதிகளில் எண்ணிப் பார்த்துக் கொள்ளலாம். சிங்களப் படை வெற்றிமேல் வெற்றி குவிப்பது போலவும், புலிப்படை பின்வாங்கிச் செல்வது போலவும், ஒரு போலித் தோற்றம் ஏடுகளால், இதர ஊடகங்களால் இங்கு பரப்பப்பட்டு வருகிறது. சிங்களப் படை தரும் செய்தியை சிந்தாமல் சிதறாமல் அப்படியே தரும் செய்தி ஊடகங்கள், விடுதலைப்புலிகள் தரும் செய்திகளை விடுதல்கள் பல செய்தே வெளியிடுகின்றன. சில செய்திகளை வெளியிடவே மறுக்கின்றன.

தமிழ் இன உணர்வாளர்கள் சரியான செய்திகள் தெரியாமல் கவலுறுகின்றனர். கவலைப்படத் தேவை இல்லை. களநிலைமைகள் வலுவாக இருக்கின்றன. அதே வேளை தமிழ்நாட்டில் நாம் செய்ய வேண்டிய சனநாயகக் கடமைகளை, மனித உரிமைக் கடமைகளைச் செய்ய வேண்டும். இந்திய அரசு, ஈழத்தமிழர்களைக் கொல்ல, சிங்கள அரசுக்குப் படைக்கருவிகளை வழங்குவதுடன் பயிற்சியும் தருகிறது. படையாட்களையும் அனுப்பி வைக்கிறது. ஈழத்தமிழர்களைக் கொல்ல மட்டுமல்ல, தமிழக மீனவர்களைக் கொல்லவும் துணை புரிகிறது.

தமிழ் உணர்வாளர்கள், சனநாயகர்கள், மனச்சான்ற பிளவுபடாத மனித உரிமையாளர்கள் உள்ளிட்ட முற்போக்காளர்களைத் திரட்டி இந்திய அரசின் தமிழ் இன எதிர்ப்பு நடவடிக்கைகளை எதிர்ப்போம்.

இந்திய அரசே,

இலங்கை அரசுக்குப் படைக்கருவிகள் தராதே

சிங்களப் படையினர்க்குப் பயிற்சி தராதே

இந்தியப் படையாட்களை இலங்கைக்கு அனுப்பாதே

தமிழக மீனவர்களைச் சுடும் சிங்களப் படையினரைச் சுட்டு வீழ்த்து

என முழங்குவோம் !

குறிப்பு : தரவுகள், புதினம், பதிவு இணையத்தளங்கள்

- பெ.மணியரசன்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com