Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

ஒரு மனிதன் ஒரு மொழி ஒரு நாடு
செ.ப பன்னீர்செல்வம், சிங்கப்பூர்

மொழி மனிதனின் விழி என்பதை மறவாதே என்று என் மொழி ஆசிரியர்கள் சொல்லித் தந்தார்கள். எனக்கு வாய்த்த தமிழ் ஆசான்கள் மொழியின்பால் மிருந்த நாட்டம் கொண்டவர்கள். அதனால்தான், எனக்கும் மொழியின்பால் ஒரு ஈர்ப்பு என்றுமே இருந்து வந்திருக்கிறது எனலாம். இன்று பல்வேறு நாடுகளில் தமிழ் பேசுவோர் இருக்கின்றார்கள். ஆனால், அவர்களில் பெரும்பாலோர், மொழியை மறந்துவிடும் நிலைதான் அதிகரித்து வருகின்றது. எனக்குத் தமிழ் தெரியாது, எனக்குத் தமிழ் அவ்வளவாக வராது என்பவர்களை என்ன என்று சொல்வது? அதை விட வேதனைக்குரியது, சில பெற்றோர்களின் அறியாமைக் கூற்று. தமிழ் படிக்காவிட்டால் என்ன? அதை வீட்டில் படித்துக் கொள்ளலாம், ஆங்கிலம் மட்டுமே போதும். அதுதான் சோறுபோடும், என்று இந்தக் காலக்கட்டத்திலும் கூறுகிறார்களே!

Languages தமிழ் சோறுபோடுமா என்கிறார்கள், சிலர். என்னையும் ஒருவர் அவ்வாறுதான் கேட்டார். ஏன் ஜெர்மன் சோறு போடுமா என்றேன் நான். எந்த மொழியும் கண்டிப்பாகச் சோறு போட முடியாது. சமைக்கும் கரங்களும் பரிமாறும் கரங்களும் மட்டுமே எப்போதும் சோறு போடமுடியும். எனக்கு ஆங்கிலம் தெரிவதாலோ, பிரெஞ்சு தெரிவதாலோ கொரிய மொழி தெரிவதாலோ சோறு போடப்படும் என்றால், மொழிக்காகவே சொறு போடப்படுவதாக ஒரு தப்பெண்ணம் எப்படியோ வந்திருக்க வேண்டும்.! சோறு சாப்பிடாத நாடுகளில் என்ன போடப்படும்? ஐயா, எந்த மொழியும் சோறு போட முடியாது. ஒரு தொழிலைப் படிக்க வேண்டும், ஒரு துறையைப் படிக்க வேண்டும். அந்தத் துறையை நாம் எந்த மொழியில் படிக்கிறோம் என்பது முக்கியமில்லை. படித்தபின், அந்தத் தொழிலை எப்படித் திறமையாக நடத்துகின்றோம் என்பதைப் பொறுத்தே வருமானம் கிடைக்கின்றது. வருமானத்தை வைத்துத்தான் நாம் விரும்பும் சோற்றையோ இட்டலியையோ வாங்கிச் சாப்பிட முடியும்.

மொழியால்தான் சோறு போடப்படும் என்பது அறியாமை. நாம் கற்கும் ஒரு மொழியைக் கொண்டு அந்த மொழியை வைத்துக்கொண்டு, பல ஆற்றல்களை வளர்த்துக்கொண்டு, அதன் வழியாக அந்த தொழிலை மேம்படுத்தி, ஒவ்வொருவரும் முன்னேற வேண்டும், தொழில் நடத்த வேண்டும். ஆங்கிலம் தெரிந்தால் மட்டுமே சோறு கிடைக்கும் என்னும் அறியாமை. வெள்ளைக்காரன் ரொட்டிதான் போடுவான். நீங்கள் ஆங்கிலம் தெரிந்தவர் என்பதால் வயலில் இறங்கி உழமாட்டான், அறுவடை செய்ய மாட்டான், உங்களைப் பார்த்துப் பல்லிளித்து உங்களுக்குச் சோறு போட மாட்டான். எந்த மொழியைப் படித்தாலும் அந்தப் படிப்பின் வழி உருவாக்கிக்கொள்ளும் திறமையாலும் அதன் வழி நாம் மெற்கொள்ளும் தொழிலாலும் மட்டுமே சம்பாதிக்க முடியும்.

இன்று ஆங்கிலம் தெரிந்த எத்தனையோ பேர் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் வேலை இன்றி இருக்கிறார்களே ஏன்? அவர்களில் சோறு சாப்பிடாதவர்களே அதிகம் என்பதால்தான், அதைப் பற்றி யாரும் பேசுவதில்லையோ? அந்நியர்களை மனிதர்கள் என்னும் வகையில் மதிக்கத்தான் வேண்டும், ஆனால் அதற்காக இப்படியா? வெள்ளைக்காரர்கள் அப்பா என்றும் அம்மா என்றும் கூப்பிடவில்லை நம் மக்களில் சிலர்தான் அவர்களின் மொழியில் பொருள் தெரிந்தோ தெரியாமலோ டாடி என்றும் மம்மி என்றும் கூப்பிட்டுக் குதூகலிக்கிறார்கள். சொந்த மொழி பேசாதவர்களைச் சொந்தக்காரர்கள் என்று எப்படி அழைப்பது? நாட்டில் மற்றவர்களுடன் பேசும் போது ஆங்கிலத்தில் பேசுவதில் ஒரு தவறும் இல்லை.

அவர்களின் மொழி தெரிந்தால் அதில் பேசுவதிலும் தவறில்லை. ஆனால் சொந்த மக்களிடமே தமிழில் பேசக் கூசுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? தென்கிழக்காசிய மலாய் மக்கள் சில ஆண்டுகளுக்கு முன்வரை திடீரென்று நான் என்பதை என்றும் நீ என்பதை You என்றும் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார்கள். மலாய் மொழியில் அவற்றுக்கு, Saya என்றும் Awak என்றும் சொற்கள் உண்டு. தாயார் பிள்ளையை ஆமாட் என்று பெயர் சொல்லி அழைக்கும்போது, Saya அம்மா என்று பதில் கூறும் அழகு அந்த மொழியில் இருக்கின்றது. அதாவது “என்ன” என்று கேட்காமால், “இருக்கிறேன் அம்மா” என்பது போலப் பொருள்தரும் வகையில் பதில் தருவது அந்த மொழிக்கே உரிய அழகு. இந்தியாவின் தனியார் தொலைக்காட்சியில் அறிவிப்புப் பணிகளில் ஏற்பட்டுள்ள அசிங்கங்களை யாராவது மாற்றினால் ஒழிய, அங்கு நல்ல தமிழ் வளர்வதையும் ஊக்கிவிக்கப்படுவதையும் வேண்டுமென்றே யாரோ அல்லது எதுவோ தடுக்கின்றது என்றுதான் பொருள் கொள்ள வேண்டியிருக்கும்.

ஆங்கிலம் கலந்துபேசும் மொழியை எப்படித் தமிழ் என்று ஏற்றுக்கொள்ள போகிறீர்கள்? கண்டிப்பாக அந்தக் கலவை மொழியை தமிழ் என்று ஏற்றுக்கொள்ள முடியாது. நகைச்சுவை என்னும் பேரில் மொழிபெயர் தேய காரணங்களாலோ என்னவோ பல அசிங்கங்கள் வந்துகொண்டிருப்பதை எப்படிச் சகித்து கொள்ள முடியும்? தோசையைத் தமிழ்நாட்டில் உள்ளவர்களே தோசா என்று துணிந்து பேச ஆரம்பித்து விட்டால், இளையர்கள் எல்லாரும் தங்கள் மீசையைக் கூட இன்னும் கொஞ்ச நாளில் மீசா என்று அழைக்கத் தொடங்கி விடுவார்கள்.

சோதிடம் பார்ப்பவர்களோ இதுதான் தருணமென்று அதில் சற்று தோசம் இருப்பதாகக் கூற ஆரம்பித்து விடுவார்கள். “ஷூகர் சரியாக இருக்கிறதா அப்பா” என்னும் இனிப்புக் காட்டி ஏமாற்றும் விளம்பரம் வந்ததிலிருந்து சால்ட்டும் வந்துவிட்டதே! உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்க வேண்டிவரும் என்பதால்தான் அப்படி நேர்ந்து விட்டதோ? அசால்ட்டா இருந்திடாதே என்று ஆங்கில அரிச்சுவடி படிக்காத கிராமத்து மூதாட்டி கூட இப்போது துணிந்து சொல்லாடல் செய்கிறாரே? ஆங்கிலச் சொற்களை அங்குமிங்குமாகத் தூவிவிட்டால் அது ஆங்கிலத்தில் பேசியது ஆகிவிடுமா? ரென் அண்ட் மார்ட்டின், பிரைட்டர் கிரேமர் எல்லாம் தேவைப்படாதா?

யாரேனும் இதற்கெல்லாம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடாதா? மீண்டும் தமிழ் என்னும் இயக்கம் தொடங்கப்பட்டால்தான் தமிழ்நாட்டின் தமிழ்த்தெருவில் அன்னைத் தமிழைக் கேட்க முடியுமோ என்னவோ? அல்லது குமரேச சதகம் சொல்வதுபோல “விருதா மகத்துவ பேயது சவுக்கடி விழும்போதுதான் தீருமென்று” முடிவெடுப்பதா? மொழி நம் மொழி, நாடு நம் நாடு, மக்கள் நம் மக்கள் தோசை நம் தோசை. ஆனால் அதற்குத் தேவைப்படுவது அடுத்த வீட்டு சட்டுவமா? புரியவில்லையே!!!

- செ.ப பன்னீர்செல்வம், சிங்கப்பூர் ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com