Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

தமிழ் எங்கள் உயிர்
செ.ப பன்னீர்செல்வம், சிங்கப்பூர்

இந்திய துணைக் கண்டத்தில், அந்நியர் ஆட்சி அகல வேண்டுமென்று ஆயிரமாயிரம் பேர் பாடுபட்டனர், உயிர்த்தியாகம் செய்தனர். எதற்காக? தங்கள் வருங்கால சந்ததியினர், யாருக்கும் அடிமை ஆகாமல், சுதந்திரமாக மகிழ்வோடு வாழ வேண்டும் என்பதற்குத் தானே? இந்தியாவின் முதல் பிரதமர் மதிப்பிற்குரிய ஜவகர்லால் நேருவிடம், மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்படுவதற்கான காரணத்தை அவரின் மகள் இந்திராகாந்தி கேட்டபோது, மொழிவழி மாநிலங்களின் வழிதான், அந்தந்த வட்டார மக்கள், தங்கள் ஆற்றலை, மொழியை, பண்பாட்டை நன்றாக வளர்த்துக்கொள்ள, சிறப்பாகத் தேர்ச்சி பெற அதிக வாய்ப்புகள் உருவாகமுடியுமென்று கூறினார். அவரின் அந்தக் குறிக்கோள் இன்று நிறைவேறியுள்ளதா என்று எண்ணிப்பார்த்தால்தான் பல உண்மைகள் வெளியாகும். அந்தச் சிந்தனையில் தோன்றிய சில எண்ணங்களைக் கீற்று வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

tamilnadu தமிழர்கள், உலகிலேயே பொறுமைசாலிகள் என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். பல வெளிநாட்டுத் தொலைக்காட்சி ஊடகங்களின் வழியாகப் பரப்பப்படும் தகவல்களைக் காணும்போதும் அவற்றில் பயன்படுத்தப்படும் மொழியைக் கேட்கும்போதும் மிக வியப்பாக இருக்கின்றது. குறிப்பாக அண்மையில் கூத்துக் கும்மாளத்துக்கு மிக அதிகமான முக்கியத்துவம், அந்தச் சில தொலைக்காட்சிகளில் வழங்கப்படுவதை உணர முடிந்தது. இவ்வாறு எழுதுவதால், பாட்டுப் போட்டி, நடனப்போட்டி ஆகியவற்றுக்கு இடம்கொடுக்கக்கூடாது என்று சொல்லவரவில்லை, நான்.

ஆனால், அதில் தெரிந்தோ தெரியாமலோ நடைபெறும் சில அறியாமைகளையும் ஒவ்வாமைகளையும்தான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். நடைபெறுவது தமிழ்ப்பாட்டுப் போட்டி, ஆனால் அதற்கு நடுவர்களாக அமர்வோர், குறிப்பிட்ட மாநிலத்தைச் சேர்ந்த, சாதிகளைச் சேர்ந்தவர்களாக மட்டும் கூட்டுச் சேர்ந்திருப்பது அண்மைக்காலத்தில் இரவுநேரக் காளான்போல் திடீரென்று அதிகரித்து வருவது ஏன்? ஒரு விடுதலை பெற்ற நாட்டில், இது எதைக் காட்டுகிறது?

அந்தக் குறிப்பிட்ட வகையைச் சேர்ந்தவர்களை விட்டால் இசைக்கும் நடனத்துக்கும் நாட்டில் வேறு யாருமே உருவாகவில்லை என்று நினைப்பதா? அல்லது இவர்களைத் தவிர மற்றவர்களை அழைக்க ஏற்பாட்டாளர்களுக்கு மனம் இல்லையா? அந்தத் துறைகளில் திறன் பெற்ற மற்றவர்களுக்கு வாய்ப்பே தரக்கூடாதா? இவர்களை மட்டும் கூப்பிட்டுக் கொண்டிருந்தால், திறன் பெற்றுள்ள மற்றவர்கள் எப்போது மேடைக்கு வருவது? அவர்களின் திறன்களை நாட்டு மக்கள் என்றுதான் அறிந்துகொள்வது? அல்லது இவர்களை மட்டும்தான் கூப்பிட வேண்டும் என்று ஏதேனும் கட்டாயம் உள்ளதா? அப்படியே செய்துகொண்டிருந்தால் அது வளர்ச்சியின் அறிகுறியா, வறட்சியின் குறிநெறியா? சூழ்ச்சியின் நடைமுறையா?
அல்லது ஏமாற்றுத் தெளிபுனலா? இல்லை, அரிதார குதூகலமா?

ஐயா, அது ஒரு புறமிருக்க, பாடுவதெல்லாம் தமிழாக இருக்க நடுவர்களாக வரும் ஒரு சில கூம்பு வகைக் கோட்டான்களின் முகங்களில் முரட்டுக்காளான் முகப்புகள் படர்ந்து இருந்தாலும், தமிழில் பாடப்படும் போட்டிக்கு ஆங்கிலத்தில் கருத்துரையும், தீர்ப்பும் வழங்கப்படுவது ஏன் என்று கேட்கத் தமிழ் உலகில் இன்று நாதியில்லையா? ஒரு வேளை ஆங்கில நாடுகளில் இப்போது ஆங்கிலேயர்கள் தங்கள் தீர்ப்புகளைத் தமிழில் வழங்கத் தொடங்கி விட்டார்களோ என்னவோ? அதனால்தான் நாமும் ஆங்கிலத்தில் நம் மொழி நிகழ்வுகளில் தீர்ப்புகளை வழங்க வேண்டிய ஆர்வம் முளைத்து வருகின்றதோ? அல்லது ஆங்கிலப்போட்டிகளில் பங்கேற்க இந்த நடுவர்களை வெள்ளையர்கள் அழைப்பார்கள் என்னும் நப்பாசையில் இவர்கள் அவ்வாறு பேசுகிறார்களா? அல்லது அவ்வாறு பயிற்சி பெற்று வருகிறார்களா? இத்தனைக்கும் இவர்களெல்லாம் தமிழில் பாடிப் புகழ் பெற்ற பிறகுதானே புகழ் வானில் முதன்மை பெற்றார்கள்? அப்படிப்பட்ட இவர்கள், தமிழ்ப் பாட்டுப் போட்டிகளுக்கு நடுவர்களாக வந்துவிட்டு ஆங்கிலத்தில் கருத்துரை வழங்குவதைப் போலக் கோமாளித்தனம் வேறெங்கும் இருக்க முடியாது என்றே நினைக்கின்றேன்.

இது தொடர்ந்தால், குறிப்பிட்ட ஒரு சிலருக்குத்தான் இந்த நிகழ்ச்சிகள் என்றும், இப்படிப்பேசினால்தான் தரம் என்றும் ஒரு மண்டல மாயை உருவாக்கப்படாதா? வளர்ந்து வரும் இளையர் சமுதாயத்துக்கு இது ஒரு நல்ல முன்மாதிரியாக முடியுமா? ஆக அண்மையில் தமிழகத் தொலைக்காட்சிக் கோமாளித்தனத்தில் அக்கம்பக்கத்து மாநிலப் பைங்கிளிகள் பேசும் தமிழ் அறிவிப்புகள், தமிழர் மரபுக்கு மாறானதாக இருப்பதை எத்துணை பேர் உணர்ந்தார்களோ தெரியவில்லை. மிகப் பிரமாண்டமான என்னும் தொடர், சுவாரஸ்யம் என்னும் சொல் பிரயோகம் இவற்றைத் தவிர வேறு எதுவும் இயல்பாக வந்திடாதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அறிவிப்பாளர்கள், அனைவருக்கும் தெரிந்த தமிழில் சரளமாகப் பேசுவது என்ன அவ்வளவு கடினமானதா? இன்னொன்றும் கூறுவேன். தயவு செய்து அடுத்த மாநிலப் பைங்கிளிகளைப் பேசவிடும்போது ஆண்கள், பெண்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லச் சொல்லுங்கள். ஆம்பிளை பொம்பிளை என்று பள்ளிக்குப்போகாதவன் கூறும் மொழியை உச்சரிக்க வேண்டாம்.

அதுவும் “மொழிபெயர் தேயத்தினர்” ஆம்பள பொம்பள என்னும் போது என்னவோ போல் இருக்கிறது. “எங்க வீட்டுக் கல்யாணத்தில் பேசும் போது அப்படியெல்லாம் பேச வேண்டுமா? ஒரு வேளை, பேச்சுத் தமிழுக்கு முக்கியத்துவம் தர வேண்டுமென்று அண்மைக்கால புலம்பல்கள் பெருகி இருப்பது இப்படிப்பட்ட ஓட்டை மொழிவகைகளைக் கேட்டு மகிழத்தானோ? பக்கத்து மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டு நிகழ்வுகளில் பங்கெடுக்கட்டும், இலங்கிய ஈடுபாடுகளில் மிளிரட்டும், பரிசுகள் பெறட்டும், மொழி மேம்பாட்டுக்கு இளையபாரதி போல உதவட்டும். ஆனால் தமிழைப் படித்துக்கொண்டு புரிந்துகொண்டு பங்கெடுக்கட்டும்.

அது எல்லாருக்கும் உகந்த பயனைத் தர முடியும். மொழி உணர்வில்லா மண்டைக் கழுவிகள் பெருகி வரும் இந்தப் பொருளாதார மந்த நிலையில், மொழி நிலையிலும் மந்த நிலை இருக்க வேண்டுமா என்ன? எதற்காகத் தமிழ் என்று இருப்பதைத் தமில் என்று பலுக்கவேண்டும்? ஆங்கிலத்தைத் தப்பும் தவறுமாகப் பேசினால் என்ன ஆகும் தெரியுமா? அவ்வாறு பேசினால், நகைச்சுவை செய்கிறார்கள், பகடி பண்ணுகிறார்கள் என்றுதான் நினைப்பார்கள். தமிழையும் அப்படி ஆக்கிவிட வேண்டாம். அது செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள காலம் இது. நகைச்சுவையைக் கூட காமெடி என்றுதான் ஆணும் பெண்ணும் இப்போது பேசி வருகிறார்கள். இரவு நேரத்தில் அவர்கள் நைட்டீஸ் போடுவதாலோ என்னவோ, நைட்டு நைட்டு என்கிறார்கள். ஆனால் அன்புகூர்ந்து மொழித்துறையை இருளடையைச் செய்ய வேண்டாம், அன்பர்களே! மொழி நம் விழி அல்லவோ?

தென்னகத்தில் தமிழைத் தவிர உள்ள மற்ற மாநிலத் தொலைக்காட்சிகளில், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் எத்தனை பேர் நிகழ்ச்சிகளுக்கு அறிவிப்பாளர்களாக, செய்தி வாசிப்பவர்களாக, திரைப்பட நடிகர்களாக உள்ளார்கள்? அப்படியே இருந்தாலும், அவற்றில் அந்தந்த வட்டார மொழியைப் பிழையாக அல்லது அறைகுறையாக அறிவிக்க அவர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்று தமிழ் உடன்பிறப்புகள் எண்ணிப்பார்க்கட்டும். ஒரு சுதந்திர தேசத்தில் மொழிப் பயனீட்டில் கொடுக்கல் வாங்கல் இருப்பது இயல்புதான்,
இயற்கைதான். ஆனாலும் அந்தப் பயனீடும் முறையாக இருக்க வேண்டாமா?

சொந்தச் சகோதரர் என்கின்றோம், ஆனால் நாட்டுக்கே சொந்தமான தண்ணீரை, இன்னொரு சகோதரனுக்குக் கொடுக்கத் தயங்கும் காலம் இது. பொதுச் சொத்தைச் சிலர் தங்களுக்கு மட்டுமே உரியது என்று எண்ணுகிறார்கள் போலும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குத் தலைப்புகள் கூட இப்போது வினோதமான வகைகளில் வந்துகொண்டிருக்கின்றன. மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு என்று இருப்பதால்தானே தமிழ்ப்பயன்பாடு பற்றியும் தமிழ்ப் பயனீடு பற்றியும் சிந்திக்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம்? மொழி வழி மாநிலம் என்று பிரிக்கப்பட்டிருப்பதால், அந்தந்த மாநிலத்துக்கு உரிய மொழிகளில் அவை, தங்கள் மொழியையும் பண்பாட்டையும் வளர்க்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொருவரின் கடமையாக இருக்க வேண்டும். அதில் யாரும் குறுக்கீடு செய்ய முடியாது, செய்யக்கூடாது.

பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் ஆங்கில நிகழ்ச்சிகளுக்கு ஏன் தமிழில் தலைப்பு வைக்கவில்லை என்று நாம் கேட்கமுடியாது. அப்படிக் கேட்டால் நம்மைத் தெனாலி விசிரன் என்று முத்திரை குத்தி விடுவார்கள். ஆகவே, மொத்தத்தில் ஒரு மாநிலத்தின் பெருமையைக் கட்டிக்காப்பவர்களின் எண்ணிக்கை குறைவது நல்லதல்ல. அது எந்த மாநிலமாகவும் இருக்கலாம். தமிழர்கள் என்று சொல்வோர், தங்கள் மொழி, மாநிலம் ஆகிய இரு கண்களுக்கான உரிமைகளை உணராவிட்டால், கொண்டாடாவிட்டால், கட்டிக்காக்காவிட்டால், மற்றவர் முன் எப்படி அவர்கள் வீறுநடை போடமுடியும்? நெஞ்சம் நினைத்தது, சொல்லத் துடித்தது, சொல்லிவிட்டேன்.

- செ.ப பன்னீர்செல்வம், சிங்கப்பூர் ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com