Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

ஈழப்பிரச்சனை: கருணாநிதியின் கருத்து என்ன?
பாமரன்


பாவம் யாருக்குமே இந்த சிக்கல் வரக்கூடாது.

உலகத்தில் எத்தனை எத்தனையோ சிக்கல்கள்..

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு எல்லைச் சிக்கல்.

ஐரோப்பிய நாடுகளுக்கு யூரோ சிக்கல்.

இந்தோனேசியாவுக்கு மதச் சிக்கல்.

இப்படி எல்லைச் சிக்கல், மொழிச் சிக்கல், மதச் சிக்கல், மலச் சிக்கல் என அனேகருக்கு அனேகம் சிக்கல்கள் இருந்தாலும் தமிழக அரசுக்கு வந்துள்ள சிக்கல் யாருக்கும் வராத சிக்கல், வரக்கூடாத சிக்கல்.

அதுதான் ‘ஏழைகள்’ யாரென்று கண்டுபிடிப்பதில் வந்துள்ள சிக்கல். அடித்துப் பிடித்து முப்பது ரூபாய்க்கு போட்டோ வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தால்...

உங்க ‘சுறுசுறுப்பைக்’ கண்டு, ‘பயந்து’ போயி அரசாங்கமே ரேஷன் கார்டு குடுக்கறத நிறுத்திடுச்சுங்கிறா பொண்டாட்டி.. வறுமைக் கோட்டை விஞ்ஞானிகள் உட்டு ஆராஞ்சு ஏழைக யாரு... கோழைக யாரு..ன்னெல்லாம் கண்டுபுடிச்சப்பறந்தான் ரேஷன் கார்டாம்.

இதை முதலிலேயே சொல்லிருந்தா அந்த முப்பது ரூபாயுக்கு ரெண்டு மினி குவாட்டராவது அடிச்சிருக்கலாம்.

நம்மளுக்கு ரேஷன் கார்டு கெடைக்குமா கெடைக்காதான்னு ஒரே பயம்மா இருக்குது. இந்த டி.வி.எஸ்., மகாலிங்கம், ஏ.வி..எம்., கலாநிதி மாறன், சிதம்பரம் குடும்பத்துக்கெல்லாம் குடுத்தது போக நம்மளுக்கு குடுக்க அட்டை இருக்குமோ என்னவோ தெரியல.

யப்பா சாமீகளா! நம்மகிட்ட மூணு நாலு ஓட்டச் சட்டியும் ஒரு திருவோடும்தான் மிச்சம். ஒண்ணத் தொவச்சுக் காயப்போட்டா கட்டிக்கறதுக்குன்னு இன்னொரு ஒட்டுக்கோவணம் வெச்சுருக்கேன். இதையும் ஆடம்பரம்ன்னு சொல்லி இருக்கறதையும் உருவீராதீங்க. அப்புறம் அதைப் பார்த்துட்டு நம்மளையும் டாக்டர் பிரகாசோடா இன்னொரு மாடல்ன்னு எவனாவது, எழுதீரப் போறான்.

**********************

‘மூன்றெழுத்துக் கெட்ட வார்த்தை எந்த வார்த்தை சிஷ்யா?’ என்று கேட்டிருந்தார்கள் ஒரு படத்தில். படத்தை ‘ஓட’ வைத்த மக்கள் பார்த்துவிட்டு கடுப்பாகிச் சொன்ன ‘அந்த’ வார்த்தையைத் திருப்பிச் சொன்னால் மீண்டும் பெட்டிசன் கொடுக்க ‘படையெடுத்து’ வந்து விடுவார்கள். எதுக்கு வீண் வம்பு?

**********************

கூடங்குளத்தில் கட்டப்படவுள்ள அணு உலைகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாதாம். அவ்வளவு பாதுகாப்பாம். 50 டன் எடையுள்ள விமானம் மோதினாலும்கூட எதுவும் பிரச்சனை இல்லையாம். சொன்னதுதான் சொன்னார்கள். அப்படியே 51 டன் எடையுள்ள விமானம் மோதினால் என்னவாகும் என்றும் சொல்லியிருக்கலாம்.

**********************

‘சட்டம் ஒழுங்கைத் தனி நபரே கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது’ என்கிற வஜனமெல்லாம் நம்மைப் போன்ற சாதாரண கேணையனுகளுக்குத்தான். அமெரிக்கா மீது தாக்கலா? யாரிடமும் கேட்க வேண்டாம். நேராகப் போடலாம் குண்டு.

Kofi Annan இந்தியா மீது தாக்குதலா? புகார் வழக்கு எதுவும் வேண்டாம். உடனடியாகத் தாக்கலாம். பாகிஸ்தான் மீதா? அதுவும் அப்படியே.

ஆமாம் இந்த ஐ.நா...ஐ.நா... என்ற ஒரு ஜந்து இருக்கிறதே அது எதற்குத்தான் இருக்கிறதாம்?

எந்த நாடும் ஐ.நாவிடம் முறையிடுவதோ...அது விசாரித்து முடிவெடுப்பதோ.. எல்லாம் மலையேறி பல காலம் ஆகிவிட்டது.

அமெரிக்கா எதைச் சொல்கிறதோ அதை நிறைவேற்றுவதுதான் இன்றைக்கு தலையாய கடமையாக இருக்கிறது அதற்கு.

கோபி அன்னணைப் பார்த்தால் ஐ.நா.சபைத் தலைவராகவே தெரியவில்லை. புஷ்ஷின்மீது அந்தரங்கச் செயலாளராகத்தான் காட்சி தருகிறார். நேர்மையாகச் சொல்ல வேண்டும் என்றால் ஐ.நா.வுக்கு என்று ஒரு கடமை இப்போதும் இருக்கத்தான் செய்கிறது. அது: ஐக்கிய நாடுகள் சபை என்கிற அதன் பெயரை சத்தம் போடாமல் அமெரிக்க நாடுகள் அவை என்று மாற்றி விடுவதுதான்.

**********************

Karunanidhi ‘3, 96,78, 943வது தடவையாக...’ஜெயலலிதா விடுதலைப் புலிகளை ஆதரித்து ஆங்கில, நாளிதழுக்கு பேட்டி அளித்தார்’ என்று கருணாநிதி தனது கீறல் விழுந்த கிராமபோன் பிளேட்டை மறுபடியும் போட்டிருக்கிறார். அவர் ஆதரித்து பேட்டி கொடுத்தார்... சரி, அதை இவர் ஆதரிக்கிறாரா இல்லையா? பதில் கிடையாது. ஒருவேளை ஜெ. முழுமையாக பெரியாரை ஆதரித்தால் இவர் எதிர்ப்பார் போலிருக்கிறது. தமிழீழம்தான் தீர்வு என்றால் சந்திரிகாவே சரி என்பார் போலிருக்கிறது.

ஈழம் குறித்து இவர் கருத்தென்ன? அதில் இவர் பங்கென்ன? மெளனம் தான் பதில். (ஒருவேளை உலகத் தமிழினத் தலைவர் பதவியை தம்பி தட்டிக்கொண்டு போய்விட்டாரே என்கிற ஆதங்கமாகக்கூட இருக்கலாம்). ஒரு இயக்கம் தனது கருத்துக்கு ஏற்றபடியெல்லாம் நடந்தது கொள்ளவில்லை என்பதற்காகவே அரைக்கோடித் தமிழரது உயிர் வாழ்தலுக்கான போரையே உதாசீனப்படுத்துபவர் எப்படித் தமிழ் இனத்துக்கே தலைவராவார் என்பதுதான் புரிபடவில்லை. ஈழப்பிரச்சனை குறித்து வலியுறுத்திக் கேட்டால் “மத்திய அரசின் கருத்து தான் கழகத்தின் கருத்தும்” என்கிறார். மத்திய அரசின் கருத்து இந்தியை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறது. சமஸ்கிருதம்தான் சரி என்கிறது. ‘சோ’திடக் கல்வியே போதும் என்கிறது. புத்தகங்கள் வேண்டாம் கிளிப்பெட்டிதான் சரி என்கிறது. அப்படியானால் கழகத்தின் கருத்தும் அதுதானோ?

- பாமரன் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com