Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

ஹரிவாலயங்களும் அறிவாலயங்களும்
பாமரன்


தனது எள்ளலான எழுத்துகளால் சமூகத்தைச் சிந்திக்கத் தூண்டிய குத்தூசி குருசாமிகு இது நூற்றாண்டு. இன்றைய சூழலில் இருந்திருந்தால் எவ்விதம் அவர் எதிர்கொண்டிருப்பார் எனக் கற்பனை செய்ததின் விளைவே இக்கட்டுரை.

Karunanidhi கலைஞர் இப்பொழுது புரிந்துகொண்டாரே... அதை நினைத்தால் மனதுக்கு மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நமக்கே இப்படி என்றால் ‘லோககுரு’ ஜெயேந்திரருக்கு எப்படி இருக்கும்.

மு.க.வும், தி.மு.க.வும் அவரிடம் காட்டிவந்த கோபங்களும், தாபங்களும், அதைப் போலவே ஜெயேந்திரர் மு.க. விடம் காட்டி வந்த அதிருப்திகளும், அசூயைகளும் ஒரே நொடியில் பகலவனைக் கண்ட பனித்துளி போல கரைந்து போயிற்று.

கலைஞர்தான் கடைசி வரை கொள்கைப் பிடிப்போடு இருந்தார் எனினும் சரத்குமார் போன்ற கொள்கை மறவர்கள் ஜெயேந்திரரை என்றுமே சந்திக்கத் தவறியதுமில்லை. இத்தகைய கொள்கைப் பிடிப்புக்கு, வாயுப்பிடிப்புகளுக்கு தைலம் தடவி விட்டது மாதிரி ஒரு சில கொள்கை மறவர்கள் ரகசியமாகவும், அ-ரகசியமாகவும் ‘லோககுருவை’ச் சந்தித்ததை பிரச்சனை ஆக்கியோ... செயற்குழு, பொதுக்குழு, உயர் மட்டப் பொதுக்குழு, சொத்துப் பரமாரிப்புக் குழு உட்பட இத்தியாதி குழுக்களில் விமர்சனம் செய்தோ... புரட்சி நடிகர் எம்.ஜி.ஆருக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் விட்டோ... சிவாஜி திருப்பதிக்குப் போன காரணத்துக்கோ... ‘திருப்பதி கணேசா! திரும்பிப் பார்’ என்பதைப் போன்ற சுவரொட்டிகள் அடித்தோ... அல்லது முரசொலியில் ‘கழகக் கட்டுப்பாட்டை மீறியவர்’ என்று கட்டம் கட்டிப்போட்டோ... தனது கொள்கைப் பிடிப்பைத் தானே பறைசாற்றிக் கொள்பவர் அல்ல கலைஞர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

அப்படிப்பட்ட மூர்க்கத்தனமான கொள்கைப்பிடிப்புகள் கொண்டவரல்ல அவர் என்பதற்கு ஒன்றல்ல ஒரு கோடி ஆதாரங்களை நாம் அள்ளி வீசமுடியும் என்றாலும் ஓரிரண்டே போதும். கழகப் பாசறையின் கொள்கைகளைப் பரப்புவதற்கு ஆஞ்சநேயரின் அனுக்கிரஹத்தைப் பெற்றிருந்த டி. ராஜேந்திரரை கொ.ப.செ. வாக ஆக்கினார் கலைஞர் என்றால் அவருக்கு ஜனநாயகத்தின் மீது இருக்கும் அளப்பரிய மரியாதையையும், மதிப்பையும் நாம் புரிந்து கொள்ள முடியும். பழைய டி. ராஜேந்தராய் இருந்து இன்றைக்கு விஜய டி. ராஜேந்தர் ஆக அவதாரம் எடுத்திருக்கும் அவர்தானாகட்டும் தான் ஆஞ்சநேய பக்தராய் ஒருபுறத்தில் இருந்தாலும்... மறுபுறத்தில் கழகத்தின் அறிவியல் கொள்கைகளைத் தமிழகமெங்கும்... இல்லையில்லை இத்தரணியில் தமிழர் தழைத்தோங்கும் இடங்களிலெல்லாம் கண் துஞ்சாது பரப்பி வந்தவர் தானே?

ஒரு புறத்தில் மூடநம்பிக்கை எதிர்ப்பு அணி சுடர் விட்டுப் பிரகாசித்தாலும் மறுபுறத்தில் மூடநம்பிக்கை வளர்ப்பு அணியும் வீரநடைபோட தடைபோடாத ஒரே ஜனநாயக அமைப்பு இந்தியாவிலேயே இதுவொன்றாகத்தானே இருக்க முடியும்?

அண்ணா சொல்லவில்லையா அன்று... ‘நாங்கள் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம்’ என்று. பிள்ளையாருக்குத் தேங்காய் உடைக்கமாட்டீர்கள் சரி. ஆனால் என்ன காரணத்திற்காகப் பெரியார் பிள்ளையார் சிலைகளை உடைத்தார் என்பதாவது தெரியுமா? என்று அவரை யாரும் நோண்டி நொங்கெடுக்காமல்...

‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்று முழங்கியதை.. ஏழைகள் எந்த ‘ஜென்மத்தில்’ சிரிக்கப் போகிறார்கள்? என்கிற அசாத்திய நம்பிக்கையிலும்... நம்மைத் தாண்டி அப்படியே சிரித்தாலும் அதைத் தடுத்து நிறுத்த கழகம் தூக்குக்கயிற்றை முத்தமிடவும் தயங்காது’ என்கிற மன உறுதியில்தான் அப்படிச் சொல்கிறீர்களா? என எவரும் கிண்டிக் கிளறாமல்...

எங்களால் ‘குல்லுகபட்டர்’ என அநேகமுறை அர்ச்சிக்கப்பட்ட... குலக்கல்வித் திட்டம் கொண்டுவந்த மூதறிஞர் ராஜாஜியோடே தேர்தல் உறவு வைத்துக் கொண்டதைப் பேசாமல்... ஏதோ நேற்றைக்கு பா.ஜ.க.வுடன் உடன்பாடு கண்டதை மட்டும் சுட்டுவதும்........ காணும் போது என்னவோ... இன்று மட்டும்தான் கழகம் கொள்கைகளைக் கைவிட்டு விட்டது.... கால் விட்டு விட்டது எனப் பதறும் பதர்கள் மீது கோபம் கொப்பளிக்காது கனிவா கசிய முடியும்?

ஜெயேந்திரர் கழகத்தைத் தவறாகப் பார்த்தார். கழகம் ஜெயேந்திரரைத் தவறாகப் பார்த்தது.

Jeyandrar கழகத்தைத் தவறாகக் கணித்த இந்திராகாந்தி அம்மையார் பின்னர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையா? அன்னை இந்திரா... அதே நேருவின் மகள் நிலையான ஆட்சி நல்கிட கழகம் துணை நிற்கவில்லையா? அதைப் போலத்தான் நாங்கள் மனுதர்மத்தையும் ஏற்க மாட்டோம். அதேவேளையில் மனுதர்மத்தை ஏற்போரையும் எதிர்க்கமாட்டோம் என்கிற எம் அண்ணாவின் வாய்மொழிக்கேற்ப... காஞ்சி மடம் என்கிற கப்பலைக் கரைசேர்க்கும் பொறுப்பை கழகம் மேற்கொண்டது.

ஒரு கட்டத்தில் மாலுமி சரியில்லையோ என்று கூட சிந்தித்ததுண்டு. ‘இந்து’ ராம்கூட கப்பலுக்கான மற்றொரு மாலுமியை இண்டர்வியூவுக்குக் கூட்டி வந்தார். ஆனால் ஏற்கனவே ஒட்டிய மாலுமி பற்றி உயர்மட்டக் குழுவில் ஆலோசித்தபோது... அவரும் நம்மைப் போலத்தான்... விடாப்பிடியான கொள்கைப்பிடிப்பு, வாயுப்பிடிப்பு எதுவும் அவரிடமும் இல்லை என்பது தெரிய வந்தது.

இதில் மற்றவர்கள் மூக்கை நுழைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? ஏனிந்த அக்கறை? அதிலும் யாருக்கும் இல்லாத அக்கறை? இனம் இனத்தோடு சேருகிறது. ‘ஆண்டவன் கிட்ட வேண்டினேன். படுக்கப் போட்டுடுத்து’ என்ற அவர் இன்று பிரசாதம் அனுப்பி வைக்கவில்லையா? இன்று அவர் பிரசாதம் அனுப்பியது மட்டுமில்லை. நாளை அவர் பிரசாரத்திற்கே வருவார். அப்போது எங்கே போய் வைத்துக் கொள்வீர்கள் உங்கள் முகத்தை?

சலசலப்பைக் கண்டு அஞ்சும் பேடிப் பட்டாளமல்ல கழகம். பனங்காட்டு நரி. இது எந்த சலசலப்புக்கும் அஞ்சாது.

மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்ட ஆருயிர் அண்ணன் ஜெயேந்திரரை மட்டுமல்ல… அன்புத் தங்கை திரைவானின் திகட்டாத சித்திரமான.. வைக்கூட ஏற்கத் தயங்காது கழகம் என சூளூரைக்கும் வேளை வந்தே விட்டது.

ஓம் நமோ நாராயணா.

- பாமரன் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com