Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

‘உ’ போடு
பாமரன்


‘suspect everybody’: சேகுவேரா

‘அந்த மனுசன் தன் மனைவியைப் போட்டு இந்த மிதி மிதிச்சாரே... நீங்க தடுக்கவில்லையா?’ என்றேன் நண்பரிடம்.

‘அது அவருடைய நம்பிக்கை. நான் மற்றவர்களது நம்பிக்கைகளில் குறுக்கிடுவதில்லை’ என்றார் வெகு அமைதியாக.

அடப்பாவிகளா.. எது நம்பிக்கை? எது மூட நம்பிக்கை? எது தன்னம்பிக்கை? என்று யோசிக்க ஆரபித்தால் தலை சுற்றுகிறது.

முதலில் ‘தன்னம்பிக்கை’ப் பிரியர்களைப் பார்ப்போம். இந்த ஜீவராசிகள் இங்கு மட்டும் என்றில்லை, உலகம் முழுவதும் உண்டு.

‘மேலதிகாரியைத் திருப்திப்படுத்துவது எப்படி?’, ‘நண்பர்களைக் கண்டுபிடிப்பது எவ்விதம்?’, கொளுந்தியாளைக் கோணாமல் பார்த்துக்கொள்வது எவ்வாறு? என்கிற ரீதியில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் அள்ளி வீசுவார்கள். ‘பல் விளக்குவது எப்படி?’ என்பதைக்கூட புத்தகத்திலோ, விளம்பரத்திலோ பார்த்ததுதான் ‘ஒப்புக்கொள்ளும் மத்திய தர வர்க்கம்தான் இவர்களது இலக்கு.

மனித இனம் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் ‘வாழும் கலை’யைச் சொல்லித் தருவதற்குக் கூட புத்தகம் தான் வேண்டி இருக்கிறது இந்த வர்க்கத்திற்கு.

இந்தத் தன்னம்பிக்கைப் பிரியர்களது மகா ‘கண்டுபிடிப்பு’தான் ‘செய்யும் தொழிலே தெய்வம்’.

புதை சாக்கடைக்குள் இறங்கி மலத்துக்கு நடுவே ‘முத்துக்குளித்து’ அடைப்பு நீக்கி வெளியில் வருபவருக்கும், மின் விசிறிக்குக் கீழே கோப்புகளோடு குறட்டை விட்டுக்கொண்டிருப்பவருக்கும் ஒரே தெய்வம். முன்னவர்களுக்கு மட்டும் துர்நாற்றம் வீசும் தெய்வம். பின்னவர்களுக்கு ‘சுகந்தம்’ வீசும் தெய்வம். ஏனிப்படி..? என்றெல்லாம் கேட்டுத் தொலைக்காதீர்கள். அப்புறம் நீங்களெல்லாம் ‘தன்னம்பிக்கை’க்கு எதிரிகள் ஆகி விடுவீர்கள்.

இந்த தன்னம்பிக்கைப் பிரியர்களது தாரக மந்திரம்: ‘உ’ போடு. அதென்ன ‘ஓ’வுக்குப் பதிலாக ‘உ’. அதுதான்: உண்மை - உழைப்பு - உயர்வு. இந்த மூன்று ‘உ’வையும் தூக்கிக்கொண்டு உள்ளூரின் பெரிய முதலாளிகளைத் தேடி ஓடுவார்கள் இவர்கள்.

மக்கள் எவரும் போராட்டம், புரட்சி, போர் என்று போய்விடாமல் பார்த்துக் கொள்ளும் வேலையை இவர்கள் செய்கிறார்களே என்கிற மகிழ்ச்சித் திளைப்பில் அவர்களும் அவிழ்த்து விடுவார்கள், தமது ‘வெற்றிக்கான படிக்கட்டுகளை’. ‘நான் பேப்பர் பொறுக்கிக் கஷ்டப் பட்டு இந்த நிலைக்கு உயர்ந்தேன்’ என்கிற ரகத்தில் நீளும் அவர்களது வியாக்கினங்கள்.

இது போதும் நமது தன்னம்பிக்கைப் பிரியர்களுக்கு அவர்கள் வாந்தி எடுத்ததை வாரிக்கொண்டு வந்து மறுபடியும் மூன்று ‘உ’க்களோடு ஒரு தலைப்பைப் போட்டு அச்சடிக்க வேண்டியதுதான்: உழைப்பால் உயர்ந்த உத்தமர்.

சரி இதுகள் இருக்கட்டும் ஒருபுறம்,

இன்று நாம் எதை மூடநம்பிக்கை என்று சொன்னாலும் முண்டியடித்துக்கொண்டு சண்டைக்கு வருவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது. இது வேறு வகை.

‘ஆண்கள் பொட்டு வைப்பது மூடநம்பிக்கை’ என்று கலைஞர் ஒருமுறை எடுத்துவிட...

மதத்தின் மனசு நோகாமல் பார்த்துக் கொள்ளும் காவலர்கள் குமுறி எழ... ‘நான் நாத்திகர்களிலேயே நல்ல நாத்திகன்’ என இவர் சொல்ல...

‘நம்பிக்கையை மூட நம்பிக்கை என்று எப்படிச் சொல்லலாம்?’ என்று மீண்டும் எகிறிக் குதிக்க... அந்த நேரம் பார்த்துத் தானா தேர்தல் வந்து தொலைக்க வேண்டும்?

தான் ‘சீறிய ஆசாமிக்கே மூட நம்பிக்கைக் கோட்டாவில் எம்.பி.சீட்டை ஒதுக்கித் தர... ‘கோட்டா’வுக்கு எதிரானவர்கள் அந்த நல்ல நாத்திகரோடு கூட்டணி வைத்துக்கொண்டு வலம் வர... மொத்தத்தில் அந்த விளையாட்டு அப்போதைக்கு முடிவுக்கு வந்தது.

இரண்டு தரப்பையும் ரசித்தவர்களுக்கு ஒன்று மட்டும் புரிந்தது:

‘இவர்களது நாத்திகமும் பொய், அவர்களது ஆத்திகமும் பொய் என்பதே மெய்’ என்று. மதவாதியோ, பகுத்தறிவுவாதியோ இரு தரப்பும் வசதியாக மறந்துபோன விஷயம் ஒன்று உண்டு. அதுதான்: கருத்துச் சுதந்திரம்.

கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் துணிவற்ற அசடுகளின் கருத்துப் படி.. உலகம் உருண்டை என்கிற விஞ்ஞானத்தைச் சொன்ன கலிலியோ பழம் கிருஸ்தவர்களது நம்பிக்கையில் குறுக்கிட்ட வராகிறார்.

பிராம்மணனும் அப்பிராம்மணனும் சமமே என்ற புத்தர் வர்ணாசிரம் நம்பிக்கையில் குறுக்கிட்டவராகிறார்.

‘நட்ட கல்லும் பேசுமோ’ என்று கேட்ட சிவவாக்கியர் உருவ வழிபாட்டாளர்களின் நம்பிக்கையில் குறுக்கிட்டவராகிறார்.

எந்த மார்க்கமோ, எந்தத் தத்துவமோ, எந்த இயக்கமோ அதற்குத் தேவை கருத்தை கருத்தால் சந்திக்கும் துணிவு. இல்லாவிடில்...

‘கொலை வாளினை எடடா மிகும் கொடியோர் செயல் அறவே’ என்றாராம் பாரதிதாசன். அப்படியாயின்...

கொடியோரைக் கொடியோர் என்று அழைப்பதுகூட ஒருவேளை கொடியோரது நம்பிக்கையில் குறுக்கிடுவதாக ஆகிவிடுமோ என்னவோ?

- பாமரன் [email protected]

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com